ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

May Day in France: Trade union calls to support Macron fall flat

பிரான்சில் மே தினம்: மக்ரோனுக்கு ஆதரவளிக்க தொழிற்சங்கங்கள் விடுத்த அழைப்புகளுக்கு வரவேற்பில்லை

By Francis Dubois
2 May 2017

சோசலிஸ்ட் கட்சியின் முன்னாள் பொருளாதார அமைச்சரான இம்மானுவல் மக்ரோனுக்கும் நவ-பாசிச தேசிய முன்னணி வேட்பாளரான மரின் லு பென்னுக்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் சுற்று நடைபெறவிருக்கும் நிலையில், பிரான்ஸ் எங்கிலும் நேற்று 140,000 மக்கள் மே தினப் பேரணி ஆர்ப்பாட்டங்களில் பங்குபெற்றனர்.

பாரிஸில் 50,000 பேர் பேரணி நடத்தினர், தூலுஸில் 10,000 பேர், லியோன், மார்சைய், மற்றும் ரென் இல் 5,000 பேர், போர்தோ மற்றும் நான்ந் 4,000 பேர், ஸ்ட்ராஸ்போர்க்கில் 2,000 பேர் மற்றும் லீல் இல் 1,000 க்கும் அதிகமானோர் பேரணி சென்றனர். பல நடுத்தர அளவுள்ள நகரங்களில் பல்லாயிரம் பேர் பங்குபெற்ற ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பல ஆர்ப்பாட்டங்களில், பேரணி நடத்திய குழுவினர், “மக்ரோனும் வேண்டாம் லு பென்னும் வேண்டாம்” அல்லது ரென்னில் போல, “லு பென், மக்ரோன், அவர்கள் எங்களுக்கு வேண்டாம்” என்பது போன்ற இரண்டு வேட்பாளர்களையும் எதிர்க்கின்ற சுலோகங்களை முழங்கினர்.

முந்தைய முறை FN பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாம் சுற்றை எட்டிய ஆண்டான 2002 இல் ஜோன்-மரி லு பென்னுக்கு எதிராக எழுந்த பாரிய ஆர்ப்பாட்டங்களுடன் ஒப்பிட்டால் இந்த ஆண்டில் மே தின ஆர்ப்பாட்டங்கள் ஒப்பீட்டளவில் சிறியதாக இருப்பது குறித்து பிரெஞ்சு ஊடகங்கள் ஆச்சரியம் வெளியிட்டன. தொழிற்சங்கங்களும் ஒரு பொது ஆர்ப்பாட்ட விடயத்தில் உடன்பாடு காணத் தோற்று தனித்தனியான பேரணிகளையும் கூட்டங்களையும் ஏற்பாடு செய்தன. தனியார் துறையில் மிகப்பெரும் தொழிற்சங்கமான PS உடன் தொடர்புடைய பிரெஞ்சு ஜனநாயகத் தொழிலாளர் கூட்டமைப்பு (CFDT) தனது படைகளில் கிட்டத்தட்ட எதனையுமே அணிதிரட்டவில்லை.

மே தின ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க தொழிற்சங்கங்கள் விடுத்த ஆர்வமற்ற அழைப்புகளுக்கு தொழிலாள வர்க்கத்தில் வரவேற்பு கிட்டாமையானது பிரெஞ்சு அரசியல் அமைப்புமுறை பரந்த அளவில் உருக்குலைந்திருப்பதன் இன்னுமொரு பிரதிபலிப்பாய் இருக்கிறது. சோசலிஸ்ட் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய பிரான்சின் இரண்டு முக்கிய பெரு-வணிகக் கட்சிகளின் வேட்பாளர்கள் வெளியேற்றப்பட்டு விட்ட பின்னர், இப்போது தொழிலாளர்களும் இளைஞர்களும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் தாங்கள் நம்பிக்கை இழந்திருப்பதை எடுத்துக்காட்டி வருகின்றனர்.

ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பு அளவு சிறுத்ததற்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அரசியல் அல்லது சமூக சூழலில் திருப்தி கண்டிருப்பதாக காரணம் கூறவியலாது. அதற்கு நேர்மாறாக, வர்க்கப் பதட்டங்கள் வெடிப்பான நிலையில் இருக்கின்றன. மக்கள்தொகையில் 69 சதவீதம் பேர் இரண்டாம் சுற்றில் இரண்டு வேட்பாளர்களுக்குமே எதிராய் இருப்பதாக ஒரு கருத்துக்கணிப்பு கண்டறிந்தது. அதேபோல, வர்க்கப் போராட்டம் என்பது தங்களுக்கு அன்றாட வாழ்க்கை யதார்த்தமாக ஆகியிருப்பதாக பிரெஞ்சு மக்களில் மூன்றில் இரண்டு பேர் கூறியிருக்கின்றனர்.

ஆயினும், பிரான்சிலும் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் தொழிலாள வர்க்கத்தில் நிலவக் கூடிய சக்திவாய்ந்த எதிர்ப்பு மனோநிலையானது, சுதந்திர சந்தை ஆதரவாளரான முன்னாள் ரோத்ஸ்சைல்டு வங்கியாளர் இம்மானுவல் மக்ரோனின் இராணுவவாத வேட்புக்கு ஆதரவளிக்க பிரான்சின் தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளும் பிற்போக்கான நடவடிக்கைகளில் எந்த வெளிப்பாட்டையும் காணவியலாது. அரசியல் ஸ்தாபகத்தின் கணிசமான பகுதியினர் லு பென்னை “தடுத்துநிறுத்துவதற்கு” விடுத்திருக்கும் அழைப்புகளானவை மக்ரோனுக்கு ஆதரவளிக்கக் கோரும் இலைமறைவுகாய்மறைவு விண்ணப்பங்கள் என்பதையும், லு பென்னுக்கு கொஞ்சமும் சளைக்காத அளவுக்கு அவரும் தொழிலாளர்களது சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் நடத்தவிருக்கிறார் என்பதையும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது பாரிய எண்ணிக்கையிலானோர் உணர்ந்து வருகின்றனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் ஒரு பெரும்பகுதியினரது மத்தியில், இரண்டு வேட்பாளர்களுக்குமான ஒரு பரந்த எதிர்ப்பும், இரண்டு வெளிப்பட்ட பிற்போக்கான வேட்பாளர்கள் மத்தியில் ஒரு தேர்தல் நடைபெறுவது குறித்த கோபமும் நிலவின.

பாரிஸில் சோசலிச சமத்துவக் கட்சியின் (PES) அங்கத்தவர்களும் ஆதரவாளர்களும், இரண்டாம் சுற்றில் ஒரு செயலூக்கமான புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்தும், அந்த அழைப்பை விளக்குவதற்காக பேரணிக்குப் பின்னர் PES ஏற்பாடு செய்திருந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அழைத்தும் துண்டறிக்கைகளை விநியோகித்தனர். அதற்கு மக்ரோனுக்கு ஆதரவான தொழிற்சங்க நிர்வாகிகள் தவிர்த்து பேரணியில் பங்கேற்றவர்களிடம் இருந்து நல்லதொரு வரவேற்பு கிடைத்தது.

தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் பேரணிகளை அரசியலற்றதாக்க முயற்சி செய்தன, “சமூக முன்னேற்றத்தைக் கொண்டுவருவதற்கான” அழைப்புகள் என்பது போன்ற, அடுத்து வரும் ஜனாதிபதி தொழிலாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கவிருக்கும் சமூகத் தாக்குதலுக்கு எதிரான ஒரு போராட்டத்திற்கு ஒரு முன்னோக்கை வழங்காத மட்டத்திற்கு வெறுமையானதாகவும் போலியானதாகவுமே இருக்கக் கூடிய வாய்ச்சவடால் சுலோகங்களை அவை முன்வைத்தன. இல்லையேல், ஜனாதிபதித் தேர்தலுக்கு எந்த உண்மையான முக்கியத்துவமும் இருக்கவில்லை என்பதைப் போல ஒரு “சமூகரீதியான மூன்றாவது சுற்று”க்கு அவை அழைப்பு விடுத்தன.

அவை ஒரு நிலைப்பாட்டை எடுத்த சமயத்தில் எல்லாம், மக்ரோனுக்கு வாக்களிக்கவே அவை ஏதேனும் ஒரு வகையில் அழைப்பு விடுத்தன. பாரிஸில், ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் அவரது பதவிக்காலத்தை தொடங்கிய நாள் முதலாக அவரை ஆதரித்து வந்திருக்கக் கூடிய CGTயின் முக்கிய பதாகையானது அறிவித்தது: “அதிவலதுகளுக்கு ஆதாயமளிக்கக் கூடிய சமூக பின்னடைவுக்கு முடிவுகட்டுங்கள்”.

CFDT பாரிஸில் UNSA (தன்னாட்சி சங்கங்களின் தேசிய சங்கம்) மற்றும் FAGE (மாணவர் பொது சங்கங்களின் கூட்டமைப்பு) உடன் சேர்ந்து ஒரு இணைந்த பேரணியை நடத்தியது. பிரான்சின் நீலம்-வெள்ளை-சிவப்பு மூவண்ணக் கொடி மற்றும் குடியரசின் அடையாளச்சின்னமான மரியானின் உரு ஆகியவை இடம்பெற்றிருந்த அதன் பதாகையானது கூறியது: “மரியானுக்காக, மரின் லு பென்னுக்கு எதிராக வாக்களியுங்கள்”.

CGT, மக்ரோன் பெயரைக் குறிப்பிடாமல் அதேசமயத்தில் லு பென்னுக்கு எதிராய் வாக்களிக்க அழைத்தது, அதன் நோக்கம் CFDTயின் அதே நோக்கமாய் இருந்தது. “எங்களது சுலோகம் தெளிவானது. சமூக முன்னேற்றம் கிட்ட நாம் FN ஐ தோற்கடித்தாக வேண்டும். FN ஒரு இனவாத, வெளிநாட்டினர் வெறுப்பு, பெண்கள்-விரோத மற்றும் சுதந்திர-சந்தை ஆதரவு கட்சியாகும்” என்று CGTயின் பொதுச் செயலரான பிலிப் மார்ட்டினேஸ் அறிவித்தார்.

FO தொழிற்சங்கம் -இதன் அங்கத்தவர்களில் கால்வாசிப் பேர் முதல் சுற்றில் மரின் லு பென்னுக்கு வாக்களித்திருந்தனர் என்று சமீபத்திய கருத்துக்கணிப்பு ஒன்று கண்டறிந்திருந்தது- அது யாரை வழிமொழிகிறது என்பதைக் குறிப்பிடவில்லை.

மார்ட்டினேஸின் அழைப்பு பல போலி-இடது அரசியல் கட்சிகளின் மூலமாக ஆர்ப்பாட்டங்களிலும் எதிரொலிப்பைக் கண்டது. தொழிற்சங்கங்களுடன் இணைந்த ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்த NPAவும் “தேசிய-பால்வாத, ஓர்பால்விருப்ப வெறுப்புமிக்க மற்றும் இனவாதம் கொண்ட கட்சியான தேசிய முன்னணியை எதிர்த்துப் போராடுவோம்!” என்ற அதன் சுலோகத்தின் மூலமாக மக்ரோனுக்கு ஆதரவளிக்க மறைமுகமாக அழைப்பு விடுத்திருந்தது. தொழிலாளர்கள் போராட்டம் (LO) "இனவாதி லு பென்னுக்கும் வங்கியாளர் மக்ரோனுக்கும் எதிராக, தொழிலாளர்களது முகாமின் குரல் செவிமடுக்கப்பட செய்வோம்” என்ற ஒரு அழைப்பை விடுத்திருந்தது, இந்த அழைப்பு, LO தவிர்க்கவியலாது செய்வதைப் போல, மக்ரோனை பகிரங்கமாக ஆதரிக்கின்ற தொழிற்சங்கங்களின் பின்னால் தொழிலாளர்களை அணிவகுக்கச் செய்வதற்கு நோக்கம் கொண்டிருந்தது.

பாரிஸ் ஆர்ப்பாட்டத்தில் லு பென்னும் வேண்டாம் மக்ரோனும் வேண்டாம் என விரும்புகின்ற இளைஞர்கள் மற்றும் அமைப்புசாரா மாணவர்கள் பலரும் பங்கேற்றனர், இவர்கள் பதாகைகள் இன்றி பேரணிக்கு வந்தனர். “முதலாளித்துவமும் வேண்டாம் பாசிசமும் வேண்டாம்” மற்றும், மக்ரோனுக்கு வாக்களிக்காதவர்கள் எல்லோரும் நவ-பாசிச ஆதரவாளர்கள் என்பதாக அரசியல் ஸ்தாபகத்தில் இருந்து வரும் குற்றச்சாட்டுகளுக்கான பதிலிறுப்பாக, “Siamo tutti antifascisti” (இத்தாலிய மொழியில் “நாங்கள் அனைவரும் பாசிச-விரோதிகள்” என்று பொருள்) ஆகிய முழக்கங்கள் அங்கே இருந்தன.

ஆர்ப்பாட்டம் செய்த இளைஞர்களில் பலரும், ஒரு சில நாட்களுக்கு முன்பாக இரண்டாம் சுற்று வேட்பாளர்கள் இருவருக்கும் எதிராக ஒழுங்கமைக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டங்களை -பாரிஸ் எங்கிலும் உயர்நிலைப் பள்ளிகள் முற்றுகையிடப்பட்டதோடு தன்னியல்பான அனுமதிபெறாத ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன- மே தின ஆர்ப்பாட்டங்களின் மூலமாகத் தொடர்ந்து கொண்டிருந்தனர் என்பது கண்கூடாய் இருந்தது.

மே தின ஆர்ப்பாட்டங்களை ஒட்டி PS அரசாங்கம் ஒரு பாரிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நிலைநிறுத்தத்தை அமைத்திருந்தது. போலிஸ் நிர்வாகத்தின் செய்திக் குறிப்பின் படி, மேதினத்திற்காக 9,000க்கும் அதிகமான போலிசார், துணைஇராணுவ போலிஸ், மற்றும் Operation Sentinel (பிரான்சுக்குள்ளாக நடந்தேறிக் கொண்டிருக்கும் இராணுவ நிலைநிறுத்தம்) சிப்பாய்கள் உத்தியோகபூர்வமாய் அணிதிரட்டப்பட்டிருந்தனர்.

பேரணியின் தலைப்பகுதியில் இருந்த முகமூடி அணிந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் ஒரு சில குழுக்கள் கலகத் தடுப்பு போலிசின் மீது பொருட்களை வீசியெறிந்ததை அடுத்து, பெரும் கனரக ஆயுதமேந்திய போலிஸ் பிரிவு ஒட்டுமொத்த ஆர்ப்பாட்டத்தின் மீதும் தாக்குதல் நடத்தியது, மீண்டும் மீண்டும் கண்ணீர்புகை குண்டுகளை வீசியது.

தோல்வி கண்டிருந்த அடிபணியா பிரான்ஸ் இயக்கத்தின் வேட்பாளரான ஜோன்-லுக் மெலன்சோன் -இவர் மக்ரோனுக்கு வாக்களிப்பது இல்லையேல் வாக்களிக்காமல் இருப்பது என்ற ஒரேயொரு முன்னோக்கை மட்டுமே தனது வாக்காளர்களுக்கு விட்டு வைத்திருக்கிறார்- தனது ஆதரவாளர்களுக்கு “சூசகம்” செய்யும் வகையில் PS இன் முன்னாள் அமைச்சரை சந்தித்துப் பேசினார். சென்ற ஆண்டில் பெருவாரியான மக்கள் எதிர்ப்பு மற்றும் வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்கு முகம்கொடுத்த நிலையிலும் PS, மக்கள்வெறுப்புமிக்க சுதந்திர-சந்தை தொழிலாளர் சட்டத்தைத் திணித்தது என்ற பிரச்சினையை அப்போது அவர் எழுப்பினார். அந்த சட்டத்தை திரும்பப் பெறுவதை தான் ஆதரிக்கவில்லை என்று பாரிஸில் நடந்த ஒரு கூட்டத்தில் அறிவித்ததன் மூலம் மக்ரோன் இதற்கான பதிலை வழங்கினார்.