ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Mélenchon-Communist Party alliance for French legislative elections collapses

பிரெஞ்சு நாடாளுமன்ற தேர்தலுக்கான மெலோன்சோன்-கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி நிலைகுலைகிறது

By Alex Lantier
11 May 2017

எதிர்வரவிருக்கும் ஜூன் 11 மற்றும் ஜூன் 18க்கான நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஸ்ராலினிச பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியை (PCF) தவிர்த்து தனியான வேட்பாளர் பட்டியலை வெளியிடவிருப்பதாக ஞாயிறன்று ஜோன் லுக் மெலோன்சோனின் France insoumise (அடிபணியா பிரான்ஸ் - FI) இயக்கம் ஊர்ஜிதம் செய்தது. ஆக ஜனாதிபதி போட்டியில் மெலோன்சோனை ஆதரித்த இரண்டு முக்கிய சக்திகள் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரெதிராய் களமிறங்க இருக்கின்றன.

தேசிய நாடாளுமன்றத்திற்கான 577 தொகுதிகளில் PCF குறைந்தபட்சம் 535 வேட்பாளர்களை நிறுத்துகிறது, FI 410 வேட்பாளர்களை நிறுத்தவிருக்கிறது. PCF இன் செய்தித் தொடர்பாளரான ஒலிவியே டார்டிகோல் பழமைவாத செய்தித்தாளான Le Figaro விடம் தெரிவித்தார்: “விவாதங்கள் இப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன, ஆனால் மிகவும் பதட்டமான சூழலில் நடைபெறுகின்றன. இப்போதைக்கு நாங்கள் தேர்தல் கூட்டணி அமையத்தக்க சுமார் 20 தொகுதிகளின் ஒரு சிறிய பட்டியலில் தான் பேசி வருகிறோம்.”

மெலோன்சோனுக்கும் PCF க்கும் இடையிலான மோதல்கள், ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் சுற்றை செயலூக்கத்துடன் புறக்கணிப்பதற்கு சோசலிச சமத்துவக் கட்சியை (PES) அழைப்பு விடுக்கச் செய்த பரிசீலனைகளின் சரியான தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. மக்ரோன் மற்றும் நவ-பாசிச மரின் லு பென் இரண்டு வேட்பாளர்களுக்குமான தொழிலாளர்களின் எதிர்ப்பை ஊக்குவிப்பதற்காகவும், தொழிலாளர்களுக்கு அத்தனை முதலாளித்துவக் கட்சிகளில் இருந்தும் சுயாதீனமான ஒரு நிலைப்பாட்டை வழங்குவதற்காகவும், மக்ரோனுக்கு எதிராக எழவிருக்கும் போராட்டங்களுக்கு ஒரு புரட்சிகர முன்னோக்கை கோடிட்டுக் காட்டவும் PES போராடியது. நாடாளுமன்ற தந்திரங்களைக் கொண்டு மக்ரோனை எதிர்த்துப் போராடுவதற்கான அழைப்புகளின் திவால்நிலை குறித்தும் அது எச்சரித்தது.

தேர்வானதற்குப் பின்னர் மக்ரோன் ஒரு வன்மையான வலது-சாரிக் கொள்கையை அறிவித்திருப்பதும், மெலோன்சோன் மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி உள்ளிட அவரது உத்தியோகபூர்வ “இடது”விமர்சகர்களுக்கு இடையிலான அற்ப சண்டைகளும், மெலோன்சோன் மற்றும் நாடாளுமன்ற கூட்டுக்களை நோக்கிய நோக்குநிலையின் திவால்நிலைக்கான மேலதிக சான்றாக இருக்கின்றன.

மெலோன்சோன் மற்றும் PCF இருவராலும் கூறப்பட்ட முன்னோக்கு உருக்குலைந்து கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்திற்குள்ளாக மக்ரோனின் கொள்கைகளை உத்தரவிடும் விதத்திலான ஒரு நாடாளுமன்ற பெரும்பான்மையை உருவாக்குவதற்கு இந்தக் கட்சிகள் இரண்டும் ஆலோசனை வைத்தன. FI இன் செய்தித்தொடர்பாளரான மார்ட்டின் பில்லியார் தனது கட்சி “நாடாளுமன்றத்தில் முதனிலை சக்தியாக இருக்கும்” என்று பெருமையடித்துக் கொண்டார். இதுதான் மக்ரோன் தேர்வானதைப் பாராட்டி ஞாயிறன்று இரவு மெலோன்சோன் பேசியபோது ஆலோசனையளித்த மூலோபாயமாகவும் இருந்தது; அவரை சிரத்தையுடன் பாராட்டிய அதேநேரத்தில் அவருக்கு எதிரானதாக கூறப்படும் ஒரு நாடாளுமன்றக் கூட்டணியை உருவாக்குவதற்கும் அவர் ஆலோசனையளித்தார்.

“திரு.ஜனாதிபதி அவர்களே, நமது தாயகத்தின் எதிர்காலம் குறித்த உணர்வு உங்களைச் சூழ்ந்திருக்கட்டும். அத்துடன் உரிமைகளற்று, கூரைகளற்று, அல்லது வேலைகளற்று இருக்கும் ஏழைகள் குறித்த சிந்தனையும் எப்போதும் உங்களுடன் இருக்கட்டும். அதன்மூலம் பிரான்ஸ் பலன் பெறட்டும். ஆயினும் இதை நாமே கண்காணிப்பதே சிறந்தது” என்று அறிவித்த மெலோன்சோன் மேலும் சேர்த்துக் கொண்டார்: “ஒரு புதிய நாடாளுமன்றப் பெரும்பான்மை நம்மைச் சூழ்ந்து உருவாக்கப்பட முடியும். மகிழ்ச்சியின் சுவை தொற்றக் கூடியது. எங்களது அழைப்பின் அடிப்படையில் ஜூன் 18  நாடாளுமன்றத் தேர்தலின் இரண்டாம் சுற்றில் எதிர்ப்பு வெற்றிபெற முடியும்.”

மக்ரோனின் வரவிருக்கும் சிக்கன நடவடிக்கை கொள்கைகளைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்வதற்காக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவது குறித்து PCF இன் தேசியச் செயலரான பியர் லோரோனும் நேற்று ஊகம் செய்தார். மெலோன்சோனுடனான பேச்சுவார்த்தைகள் இப்போது முறிந்திருப்பதன் மூலமாக “தயாரிக்கப்பட்டு வருகின்ற குழப்பம்” குறித்து புலம்பிய அவர் மேலும் தெரிவித்தார்: “ஒரு வெற்றிகரமான இயங்குநிலையை உருவாக்குகின்ற பொறுப்பு எங்களிடம் இருக்கிறது.. தேசிய அளவிலான ஒரு உடன்பாடு இல்லையென்றால், ஐக்கியமாய் தொடர்ந்து இருக்க எங்களுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கும் ஜோன்-லூக் மெலோன்சோனின் வாக்காளர்களை நாங்கள் பிரித்துக் கொண்டிருப்பதாய் இருக்கும்.”

மெலோன்சோன் மற்றும் லோரோனால் சுருங்கக் கூறப்பட்ட மூலோபாயம் பிழையானதும் திவாலானதும் ஆகும். பதவியிலிருந்து வெளியேறும் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தில் நீண்ட காலம் கூட்டாளிகளாய் இருந்து வந்திருக்கும், பல போர்-ஆதரவு, சிக்கன நடவடிக்கை அரசாங்கங்களில் பங்கேற்றிருந்திருந்த முதலாளித்துவ-சார்புக் கட்சிகளை நம்பியிருக்குமாறு தொழிலாளர்களுக்கு இது ஆலோசனை அளிக்கிறது. அதிகபட்சமாய், ஒருவேளை FI-PCF கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் திட்டவட்டமான வெற்றியை பெற்றுவிட்டாலும் கூட, அது ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றுக்கும் இரண்டாம் சுற்றுக்கும் இடையில் மெலோன்சோன் ஆலோசனை அளித்ததான, அவர் மக்ரோனின் பிரதமராவது என்பதை மட்டுமே உருவாக்கப் போகிறது.

பாதுகாப்புத் துறை நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவும், பிரான்சுக்குள்ளாக பாதுகாப்புப் படைகளின் அணிதிரட்டலை அதிகரிக்கவும், கட்டாய இராணுவ சேவையை மறுபடியும் கொண்டுவரவும் அழைப்பு விடுத்து வருகின்ற மக்ரோனின் வெளியுறவு மற்றும் இராணுவக் கொள்கையை ஏற்று, தந்திரங்களுக்கான எந்த நிதிரீதியான இடமும் இல்லாமல், அவரின் உள்நாட்டுக் கொள்கையை முன்னெடுப்பதற்கு மெலோன்சோனை இது தள்ளும்.

ஆயினும் இந்த விடயமும் கூட FI-PCF கூட்டணிக்கு நடக்கப் போவதாய் தெரியவில்லை. முதலாவது கட்டத் தேர்தலில், இந்த கூட்டணி 16 சதவீதம் வாக்குகளைப் பெற்று, இமானுவல் மக்ரோனின் முன்னேறிச் செல்லும் குடியரசு இயக்கம் (La République en Marche - 22 சதவீதம்), நவ பாசிச தேசிய முன்னணி (20 சதவீதம்), மற்றும் வலது-சாரி குடியரசுக் கட்சி (20 சதவீதம்) ஆகியவற்றுக்குப் பிந்தைய நான்காவது இடத்தையே பிடிக்கப் போகிறது. இப்போது FI ம் PCFம் ஒன்றோடொன்று போட்டி போடுகின்ற நிலையில், இக்கட்சிகளுக்கு ஒரு பெரிய வாக்கு சதவீதம் கிடைப்பது முன்னினும் கடிதாகி விடும். இப்போதைக்கு, 577 தொகுதிகள் உடைய நாடாளுமன்றத்தில் இவை ஒரு சில தொகுதிகளை மட்டுமே பகிர்ந்து கொள்ள இருக்கின்றன.

திரைமறைவில், இந்த இரு அமைப்புகளுக்கும் இடையில் கூர்மையான உரசல்கள் நிலவுகின்றன. ஆயினும், இந்தப் பிளவுகள் அடிப்படை அரசியல் பிரச்சினைகள் மீதான கோட்பாடுரீதியான பேதங்களில் இருந்து எழுந்திருக்கவில்லை, மாறாக சோசலிஸ்ட் கட்சியின் மற்றும் மதிப்பிழந்து போன பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் நீண்டகால கூட்டாளிகளாக இருந்து வந்திருக்கும் இரண்டு முதலாளித்துவ-சார்புக் கட்சிகளுக்கு இடையிலான கன்னை மோதல்களில் இருந்து எழுந்திருக்கின்றன.

சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவம் ஸ்ராலினிசத்தால் மீட்சி செய்யப்பட்டதற்குப் பிந்தைய காலத்தில், PCF கம்யூனிஸ்ட் அடையாளமான சுத்தியல் அரிவாள் சின்னத்தை பயன்படுத்துவதை கைவிட்டிருந்தது, இப்போது சின்னங்கள் தொடர்பாகவும் மோதல்கள் எழுகின்றன. “ஜோன்-லூக் மெலோன்சோனின் புகைப்படம் மற்றும் அடிபணியா பிரான்ஸ் (FI) இயக்கத்தின் அனைத்து பிற கிராஃபிக் வடிவமைப்பு கூறுகளை பயன்படுத்துவதை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர” நிர்ப்பந்தம் செய்யும் வகையில் PCFக்கு எதிரான “நீதித்துறை குற்றச்சாட்டுகளையும் தொடங்குவதாக” மே 4 அன்று FI அறிவித்தது.

இன்னும் விரிந்த வகையில் பார்த்தால், PCF மற்றும் அதன் செய்தித்தாளான L'Humanitéக்கான நிதியாதாரமானது தேர்ந்தெடுக்கப்பட்ட PCF நிர்வாகிகளுக்கு அரசிடம் இருந்து கிட்டும் மானியங்கள், மற்றும் Hachette Group and Lagardère ஆகியவை உள்ளிட்ட முக்கிய பெருநிறுவன கூட்டுநிறுவனங்கள் L'Humanité இல் செய்திருக்கும் முதலீடு ஆகியவற்றைச் சார்ந்திருக்கிறது. PS இன் சுற்றுவட்டத்தை FI ஐச் சுற்றியதாக ஒழுங்கமைக்க மெலோன்சோன் செய்துவரும் முயற்சிகள், பல தசாப்தங்களுக்கு முன்பாகவே தொழிலாள வர்க்கத்தில் தனது அடித்தளத்தைத் தொலைத்து தனது நிதியாதாரங்களையும் நெருக்கடியில் காண்கின்ற PCF ஐ மூச்சுத்திணறடிக்க அச்சுறுத்துகிறது.

இப்போது PS ம் கூட ஹாலண்டின் நாசகரமான ஜனாதிபதி பதவிக்காலத்தின் பின்னர் உருக்குலைவினால் அச்சுறுத்தப்படுகின்ற நிலையில், இந்த மோதல்கள் குறிப்பாக நஞ்சுதோய்ந்த மற்றும் கட்டுப்படுத்த முடியாத வடிவத்தை எடுத்து வருகின்றன.

இராணுவவாதம், ஆழமான சிக்கன நடவடிக்கை கொள்கைகள் மற்றும் அவசரகாலநிலை ஆகியவற்றின் ஒரு கொள்கையை அமல்படுத்துகின்ற, ஐரோப்பிய ஒன்றியத்துடன் கூட்டு கொண்ட, மற்றும் லு பென்னுக்கு ஒரு “குடியரசு வணக்க”த்தை கொண்டு போற்றுதல் செய்த ஒரு ஜனாதிபதிக்கு முகம்கொடுத்து நிற்கின்ற நிலையில், இந்த சில்லறை சண்டை பிற்போக்குத்தனமானதாகும். FI ம் அதன் சுற்றுவட்டத்தில் இருக்கும் மற்ற சக்திகளும் மக்ரோனை எதிர்த்துப் போராடுவதற்குரிய ஒரு முன்னோக்கை வழங்குவதற்கு தமக்கிருக்கும் பொறுப்பை முற்றிலும் கைதுறந்திருப்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.

ஆயினும் இந்தக் கைதுறப்பானது வெறுமனே ஒரு தந்திரோபாய பிழையின் வெளிப்பாடு அல்ல, மாறாக தொழிலாளர்களுக்கு ஆழ்ந்த குரோதமான அவர்களது சடரீதியான வர்க்க நலன்களின் வெளிப்பாடே ஆகும். நடுத்தர வர்க்கத்தின் வசதியான பிரிவுகளில் இருந்து வந்திருக்கக் கூடியவர்களான FI, NPA, மற்றும் PCF நிர்வாகிகள் பல தசாப்தங்களாக PS ஐச் சுற்றி வருகின்றனர். தங்களது சலுகைகளையும் பிரான்சில் அரசு அதிகாரத்தின் வெகு மையங்களுக்கான தமது அணுகலையும் பாதுகாத்துக் கொள்வதற்கு அவர்கள் அதனையே சார்ந்துள்ளனர்.

மக்ரோன் நெருக்கித் தள்ள முனைகின்ற வலது-சாரி, சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரே வழியான, மக்ரோனின் சமூக எதிர்ப்புரட்சிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தினுள் ஒரு புரட்சிகரப் போராட்டத்திற்கு வன்மையான குரோதம் கொண்டவர்கள் என்பதை அவர்கள் நிரூபிப்பர். இந்தப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு, அவர்களுடன் தயவுதாட்சண்யமற்று முறித்துக் கொள்வது, தமது போராட்டங்களுக்கு அடித்தளமாய் PES ஆல் முன்வைக்கப்படுகின்ற ட்ரொட்ஸ்கிச முன்னோக்கினை கொள்வது, மற்றும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர முன்னணி படையாக PES ஐக் கட்டியெழுப்புவது ஆகியவற்றை தவிர்த்த வேறெந்த வழியையும் தொழிலாளர்களால் காணவியலாது.