ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The working class must intervene with its own program in the political crisis in Washington

வாஷிங்டனில் உள்ள அரசியல் நெருக்கடியில் தொழிலாள வர்க்கம் அதன் சொந்த வேலைத்திட்டத்துடன் கட்டாயம் தலையிட வேண்டும்

Joseph Kishore,
17 May 2017

கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும், வாஷிங்டனை அச்சுறுத்தும் அரசியல் நெருக்கடியானது ஆளும் வர்க்கத்தின் இரண்டு பிற்போக்குப் பிரிவுகளுக்கும் அரச அமைப்பிற்கும் இடையிலான ஒரு மோதலை உள்ளடக்கியது என்பதை அதிகரித்த அளவில் தெளிவாக்குகிறது.

ட்ரம்ப் நிர்வாகம் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்கு ஒரு பெரும் ஆபத்தை முன்வைக்கிறது. செல்வத்தட்டினர் மற்றும் படைத்தளபதிகள் கொண்ட அவரது நிர்வாகம், வரையற்ற அதிகாரங்களுடனான ஒரு ஜனாதிபதி அடிப்படையிலான அரசியல் சர்வாதிகாரத்தின் ஒரு வடிவத்தை நிறுவ எத்தனிக்கின்றது. அதன் சமூக உடற்கூற்றியல் அர்த்தத்தில், ட்ரம்ப் நிர்வாகமானது நேரடியாக அமெரிக்காவை ஆளும் பெருநிறுவன/ நிதிய பிரபுத்துவத்தை குணாதிசயப்படுத்திக்காட்டும் கொள்ளைக்கூட்ட குண்டர்வாதத்தை நேரடியாகவே பொதிந்துள்ளது.

ஜனநாயகக் கட்சியால் தலைமை தாங்கப்படும் ஊடகம் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தில் உள்ள ட்ரம்ப்பின் எதிராளிகள், ஆளும் செல்வந்தத்தட்டின் இன்னொரு கன்னையைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். ட்ரம்ப்பிற்கு எதிரான அவர்களின் பிரச்சாரத்தில் அவர்கள் ஒரு முற்போக்கான அல்லது ஜனநாயகபூர்வமான விஷயத்தை எழுப்பவில்லை. அவர்களின் வேண்டுகோள் தொழிலாள வர்க்கத்திற்கும் அல்ல, மாறாக இராணுவ உளவு நிறுவனங்களுக்கு, குறிப்பாக FBI, NSA மற்றும் CIA க்கு வேண்டுகோள் விடுக்கின்றனர். அது மறைமுகமாக அபிவிருத்தி செய்யப்பட்ட, வெளியேகூறப்படாத நிகழ்ச்சிநிரலைக் கொண்டுள்ளது, மற்றும் அது பெரும்பாலும் வெளிவிவகாரக் கொள்கை மீது மையப்படுத்தி இருந்தது.

ட்ரம்ப்பை ஒரு வழிக்குக் கொண்டு வருவதில் அல்லது பதவியில் இருந்து, அகற்றுவதில் அவர்களது முயற்சிகள் வெற்றிபெற்றால், அது  பெருநிறுவன – நிதியத் தட்டு மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் படைத் தளபதிகளின் “உள்-அரசு” ஐ பலப்படுத்துவதாக மட்டுமே இருக்கும். இதன் பிரதான விளைவு ரஷ்யாவிற்கு எதிரான ஆக்கிரரோஷ வெளியுறவுக் கொள்கையில் உடனடி மாற்றமாக, உலகப் போருக்கு உந்தும் வெடிப்பாக மற்றும் சமூக எதிர்ப்புரட்சியும் அத்துடன் பிணைந்ததாக இருக்கும்.

இந்த மோதல் வாஷிங்டனில் விரிந்து வரும் அதேவேளை, வாஷிங்டனில் கசப்பான போராட்டத்திற்கு எதிர்ப்பாக, அதிலிருந்து தனியாக நாடுமுழுதும் வேறொன்றும் இடம்பெற்றுக்கொண்டிருந்தது. ரஷ்யாவுடனான ஒரு மோதலுக்கான விருப்பத்தை பகிர்ந்துகொள்வதிலிருந்து விலகி மக்கட்திரளினர் போருக்கு எதிராக இருந்தனர். அவர்கள் எண்ணத்தில் இருந்தது “ரஷ்ய இணைய ஊடுருவல்” பற்றியதல்ல, வேலையின்மை, சமத்துவமின்மை, உடல்நலப் பராமரிப்பு, ஓய்வூதிய அழிப்பு, கடன் மற்றும் ஆழமடைந்துவரும் சமூக நெருக்கடியின் பிற வெளிப்பாடுகளாகும்.

அமெரிக்காவில் மக்களில் மிகப் பெரும்பான்மையினர் உண்மையான நிலை என்ன?

ஜனநாயகக் கட்சியினரின் கூற்றுகள் இருந்தபோதிலும், பொருளாதாரம் ஒருபோதும் சிறப்பாக இருக்கவில்லை மற்றும் “அமெரிக்காவை மீண்டும் மகோன்னதம் ஆக்கல்” பற்றிய ட்ரம்ப்பின் வெறித்தனமான பேச்சுக்கள் இருப்பினும், தொழிலாளர்கள் குறைந்த ஊதியங்கள், வீழ்ச்சியடைந்துவரும் வாழ்க்கைத்தரம் மற்றும் நீண்டகால வேலையின்மை ஆகியவற்றையே எதிர்கொள்கின்றனர். 2008 பொருளாதார உருகுதல் நடந்து கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர், வேலை தேடுவதை நிறுத்தி விட்டவரையும்  பகுதி நேர வேலைக்கு நிர்பந்திக்கப்படுபவரையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் உண்மையான 8.6 சதவீத வேலையின்மை வீதமானது, வேலை வெட்டுக்கள் சில்லறைத் துறை மற்றும் உற்பத்தித்துறை இரண்டிலும் (ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இருந்து 81,000) அழிவுகரமானதாக இருக்கின்றது. GM இல் ஆயிரக் கணக்கானோரை வேலைநீக்கியதை அடுத்து, செவ்வாய்க் கிழமை அன்று ஃபோர்ட் தனது உலக பணியாட்களில் பத்து சதவீதத்தை வெட்டியதாக அறிவித்தது.

சம்பளங்கள் தேக்க நிலையில் இருக்க, உத்தியோகபூர்வ பணவீக்கமானது வெளிப்படையாகவே வளர்ந்தது. பொருளாதார ஆய்வின் தேசியக் கழகத்தால் எடுக்கப்பட்ட இந்த மாதம் வெளியான அறிக்கை 2013ல் 27 வயது மனிதனின் ஆண்டு வருமானம், உண்மை அர்த்தத்தில், 1969ல் 27 வயது மனிதன் பெற்றதைக் காட்டிலும் 31 சதவீதம் குறைவு எனக் கண்டது. சராசரி நடுத்தர குடும்பத்தின் வருமானம் 1999ல் இருந்து வீழ்ச்சி அடைந்துள்ளது.

Obamacare என்ற பாதையின் ஏழாண்டுகளுக்குப் பின்னர், சுகாதார பராமரிப்பு நெருக்கடி மிகவும் மோசமானதாகவும் கூட ஆகியிருக்கிறது. சட்டத்தின் தாக்கம், “மிகத் தாராளமான” உடல்நல காப்பீட்டு பயன்களை வெட்டுவதற்கு முதலாளிகளை ஊக்கப்படுத்தும் அதேவேளை, செலவுகளின் சுமையை பெருநிறுவனங்கள் மற்றும் அரசிடமிருந்து தொழிலாளர்களுக்கு மாற்றுவதாக இருக்கிறது, கடந்த மாதம் விமானம் மற்றும் பாதுகாப்பு பெருநிறுவனமான ஹனிவெல் (Honeywell), ஓய்வுபெற்றவர்களுக்கான நலப் பராமரிப்பு பயன்களை அகற்றும் அண்மைத்திய நிறுவனமாக ஆனது.

ரஷ்யாவுடனான ட்ரம்ப்பின் தொடர்பு என்று கூறப்படுவதன் மேல் ஜனநாயகக் கட்சியினர் தங்களின் கவனக்குவிப்பைச் செய்கையில், ட்ரம்ப் நிர்வாகமும் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள காங்கிரசும் ஏழைகளுகக்கான அரசாங்கத்திட்டமான மெடிக்கேர் திட்டத்தை துண்டாடும் மற்றும் மில்லியன் கணக்கான அமெரிக்கர்களுக்கான மருத்துவப்பாதுகாப்பை குறைக்கும் அல்லது துடைத்துக் கட்டும் ஒரு பிற்போக்கு நடவடிக்கையான அமெரிக்க சுகாதார பராமரிப்பு சட்டத்தின் இந்தமாதத் தொடக்கத்தின் பாதையை அடுத்து, தங்களது தாக்குதலுடன் மேலும் முன் செல்கிறது.

நாடு முழுவதிலும் காங்கிரஸ் உறுப்பினர்களுடனான நகரசபை கூட்டங்களில் மக்களின் கோபம் வெடித்திருக்கிறது. உறுதியான வேலைவாய்ப்புடன் உள்ளவர்கள் உட்பட, மில்லியன் கணக்கான மக்கள், அடிப்படைப் பராமரிப்பிற்காக தொண்டுநிறுவனங்களை அல்லது அவசர வழிகளை நம்பியிருக்கின்றனர். மார்ச்சில் ஆயிரக்கணக்கானோர் மேரிலாந்து என்ற இடத்தில் இலவச பல் வைத்தியத்திற்காக, குளிர்நேரத்தில் சூரிய உதயத்திற்கு முன்னரே மருத்துவமனையின் வாசலில் வரிசையில் நின்றனர். இந்த சம்பவம் மீதான வாஷிங்டன் போஸ்ட் கட்டுரை, கிட்டத்தட்ட 65 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்கரில் ஐந்தில் ஒரு பங்கினருக்கு தங்கள் வாயில் ஒற்றை உண்மையான பல் கூட கிடையாது என எழுதியது.

ஓய்வூதியங்கள் தொடர்ந்த தாக்குதலின் கீழ் உள்ளன. வயதான தொழிலாளர்கள் 1962 ல் இருந்து அதிக விகிதத்தில் வேலை செய்கின்றனர், பிரதானமாக ஏனெனில் அவர்களால் ஓய்வு ஊதியத்துடன் வாழ முடியாதிருக்கிறது. 55 வயதிற்கு மேலான தொழிலாளர்களில் கால் பங்கிற்கும் அதிகமானோர் 10,000 டாலருக்கும் குறைவாகவே சேமிப்பில் கொண்டுள்ளனர். டிரக் ஓட்டுநர்கள், நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்களுக்கான பெரிய பன்முக தொழில்வழங்குனர் ஓய்வுஊதியத் திட்ட நிறுவனம் திவாலின் விளிம்பில் உள்ளது.

ஃபைனான்சியல் டைம்ஸில் உள்ள ஒரு கட்டுரையின்படி, நாடு முழுவதும், பொது ஓய்வூதிய நிதிக்கான ஒட்டுமொத்த நிதியிடல் பற்றாக்குறையானது, கடந்த ஆண்டில் 434 பில்லியன் டாலர்களிலிருந்து 3.85 டிரில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. அமெரிக்க எல்லைப்புற போர்ட்டோரிகோ திவாலானது, ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் பொதுத்துறை பணியாளர்கள் வேலைக் குறைப்புடன் ஓய்வூதியத்தில் 10 சதவீதம் வெட்டு செய்வதற்கான சாக்குப்போக்காக பயன்படுத்தப்படுகிறது. ஆளும் வர்க்கத்தால் டிட்ராயிட் பாணியிலான வரிசைக்கிரமமான நலன்களைத் துண்டுதுண்டாக வெட்டல் மற்றும் சமூக சேவைகளை வெட்டிக்குறைத்தல் என்பதற்கான ஒரு முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது.

மேலும் அங்கு அடிப்படை சமூகக் கட்டமைப்பின் அழிவு நடந்து கொண்டிருக்கிறது. ஃபிளிண்ட்டில், 8000 குடியிருப்போர், இரு கட்சிகளின் உள்ளூர் மற்றும் தேசிய அலுவலர்களின் குற்றகரமான நடவடிக்கைகளின் மூலம் நகரம் நச்சுத்தன்மையானது அம்பலமான மூன்றாண்டுகளுக்கும் பின்னர் ஈயம் சேர்ந்த நீருக்கு பணம் செலுத்தத் தவறியதற்காக முன்கூட்டிய மூடலை எதிர்கொண்டுள்ளனர். உண்மையில் நீர் விநியோகத்தில் ஈயம் கலக்கும் பழமையான குழாய் அமைப்பை மாற்றுவதற்கு அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை. நாடுமுழுதும் உள்ள நகரங்களில் அதேபோன்ற சீரழிந்த நீரமைப்பு முறைதான் நிலவுகிறது.

இளைஞர்கள் குறைந்த சம்பள வேலை மற்றும் நிலையான கடன்படலை எதிர்கொள்கின்றனர். தரமான வேலைவாய்ப்புக்கான எந்த முன்னேற்றத்திற்கும் தேவையான – கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களுக்கான கல்விப்பயிற்சி செலவு தொடர்ந்து ராக்கெட்போல, 1985க்குப் பின்னர் இருந்து 500 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து விட்டது. புதிய மத்திய அரசின் கல்விக்கட்டண கடனுக்கான வட்டிவீதம் அடுத்த ஆண்டு உயருமென பட்டியலிடப்பட்டுள்ளது. மொத்த மாணவர் கல்விக் கடன் இப்பொழுது 1.4 டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமாகி உள்ளது, சராசரியாக இளம் பட்டதாரிகள் கல்லூரியை விட்டு கடன் சுமையோடு நீங்குவது 37,000 டாலர்களுக்கும் அதிகமாக உள்ளது.

ட்ரம்ப்பின் கல்விச் செயலர் Betsy DeVos க்கு மாணவர்கள் வெறுப்பொலி காட்டும் கடந்தவார பல்கலைக் கழக நிகழ்ச்சி ஒன்றின்பொழுது, பொதுக் கல்வி மீதான தாக்குதலுக்கு எதிரான பரந்த மக்களின் குரோதம் எடுத்துக்காட்டப்பட்டது, குழந்தை தொழிலாளர் உழைப்புக்கு ஆதரவளித்த அமைப்பொன்றை ஒருமுறை வழிநடத்திய, கோடீசுவர வாரிசான இவர் கல்விச் செயலராக இருப்பது, ஜோர்ஜ் புஷ் மற்றும் பாராக் ஒபாமா ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட பொதுக் கல்வி மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவதாக இருக்கிறது.

இதற்கிடையே, ட்ரம்ப் நிர்வகமானது புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சுற்றி வளைத்து நாடுகடத்தும் வேலையை முன்னெடுத்து வருகிறது. போதை மருந்து தொற்றுநோய் போல் பெருகுவது கட்டுப்பாட்டுக்கு அப்பாற் போய்விட்டது, அட்டர்னி ஜெனரல் ஜெஃப் செசென்ஸ் போதைப்பொருள் தொடர்பான குற்ற வழக்குகளை மிக மென்மையாக நடத்துவதற்கான வழிகாட்டல்களை வாபஸ் பெறுவதற்கு திட்டமிட்டுள்ளார். கொடூரமான பொலீஸ் வன்முறைகள் அன்றாட அடிப்படையில் தொடர்கிறது, உண்மையில் இவை ஊடகங்களில் அறிவிக்கப்படுவதில்லை. இந்த ஆண்டு இதுவரைக்கும் இதனால் 445 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

வாஷிங்டனில் உள்ள அரசியல் நெருக்கடியானது, முழு உலகிற்கும் வெடிப்புமிக்க விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு வரலாற்றுத் தன்மை கொண்டது. உலக முதலாளித்துவ மையத்தில் அரசியற் சட்ட வடிவிலான ஆட்சி முறிவடைந்து வருவதானது, முடிவற்ற யுத்தம் மற்றும் சமூக சமத்துவமின்மையின் வரலாற்று மட்டங்களின் அரசியல் விளைவாகும்.

அத்தகைய நெருக்கடியானது, ஒரு புரட்சிகர சூழலுக்கு முந்தைய நிலைக்கான அடையாளக் குறிகளாகும், ஆனால் புரட்சிகர இயக்கம், மோதிக்கொள்ளும் ஆளும் வர்க்க கன்னைகளுக்குள் வளர்ச்சியடைவதில்லை. மோதலானது மிக வேறுபட்ட அம்சத்தில் அமெரிக்காவில் அவிழ்ந்து வருகிறது. அது மிக அதிகமான பூகோளரீதியான பின்தாக்கங்களைக் கொண்டு தொழிலாள வர்க்கத்திற்கும் முதலாளித்து வர்க்கத்திற்கும் இடையிலான ஒரு மோதலாகிறது.

இந்த முறை தொழிலாள வர்க்கத்திற்குரியதாக இருக்க வேண்டும். தொழிலாள வர்க்கம் அதன் சொந்த உண்மையான தேவைகளைக் கவனிக்கும், அதன் சொந்த தீர்வுடன் இந்த நெருக்கடியில் கட்டாயம் தலையிட வேண்டும், சோசலிச சமத்துவக் கட்சியானது, வெள்ளை, கறுப்பு மற்றும் இலத்தினோ, புலம்பெயர்ந்த மற்றும் சொந்தமாய் பிறப்பிடம் கொண்ட, ஆண்கள், பெண்கள் என அனைத்துத் தொழிலாளர் பகுதிகளின் வளர்ந்து வரும் போராட்டங்களை ஒரு சோசலிச மற்றும் புரட்சிகர வேலைத்திட்டத்தின் மீதாக ஐக்கியப்படுத்தும், ஒரு அரசியல் தலைமையை தொழிலாள வர்க்கத்தில் கட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்களுக்கு அடிப்படை உரிமைகள் — நல்ல சம்பளத்துடனான ஒரு பாதுகாப்பான வேலைக்குரிய உரிமை, சுகாதார பராமரிப்பு மற்றும் வசதியாக ஓய்வு பெறுவதற்குமான உரிமை, இலவச பொதுக் கல்வி பெறுவதற்கான உரிமை, செலவுகளைத் தாங்கக்கூடிய வீடமைப்பு வசதி மற்றும் பொழுதுபோக்கும் உரிமை, பயன்பாடுகளைப் பெறுவதற்கும் ஒரு ஆரோக்கிய சூழலுக்குமான உரிமை, கலையையும் பண்பாட்டையும் துய்க்கும் உரிமைகள் உள்ளதை வலியுறுத்துகிறது. இவ்வுரிமைகளை பெருநிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்களது சிறப்புரிமை மீதான முன்தாக்குதல் மூலம் அல்லாது பாதுகாக்கப்பட முடியாது. ஊக வணிகம் மூலமாகவும் மோசடி மூலமாகவும் திரட்டப்பட்ட முறையற்ற வழிகளில் பெறப்பட்ட இலாபங்கள் உள்பட அனைத்தையும் கைப்பற்றி, செல்வமானது பரந்த அளவில் மறு பங்கீடு செய்யப்பட வேண்டும். பிரதான வங்கிகளும் பெருநிறுவனங்களும், பொது சொத்துடைமையின் கீழ், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ், பொதுப் பயன்பாடுகளுக்கானதாக கட்டாயம் மாற்றப்பட்டாக வேண்டும்.

இந்த உரிமைகளை காப்பதற்காக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுதல் என்பது, ஆளும் செல்வந்தத் தட்டின் வெளிவிவகாரக் கொள்கையின் அச்சாக இருக்கும், முழு புவியையும் அச்சுறுத்தும், ஏகாதிபத்திய யுத்தத்திற்கு எதிரான போராட்டத்திலிருந்து பிரிக்கப்பட முடியாதது. அது, இதே நிலைமைகளை மற்றும் இதே திவாலான சமூகப் பொருளாதார அமைப்பை எதிர் கொள்ளும், ஒவ்வொரு நாட்டிலுமுள்ள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதில்தான் தங்கி இருக்கிறது.

முதலாளித்துவத்தின் இறுதி நெருக்கடிக்கான தீர்வானது, பெருநிறுவன கட்டுப்பாட்டிலுள்ள அரசியல் கட்சிகளுக்கும் முழு முதலாளித்துவ அரசுக்கும் எதிரான எதிர்ப்பில் தொழிலாளர்களை சுயாதீனமாக அணிதிரட்டுவதன் மூலமே காணப்பட முடியும். குறிக்கோள் தனியார் இலாபத்திற்காக அல்லாமல், சமூகத் தேவையை நிறைவேற்ற பொருளாதார வாழ்வை மறுஒழுங்கமைப்பதற்கு, ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை நிறுவுவதாக இருக்க வேண்டும்.

ரஷ்யப் புரட்சியின் நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், மனித குலத்தை முன்னேற்றுவதற்கான ஒரே வழி உலக சோசலிசப் புரட்சி முன்னோக்கு ஆகும். இந்த இயக்கத்தை வளர்த்தெடுக்க ஒரு தலைமையைக் கட்டுவதுதான் மிக அவசரமான அரசியற் தேவையாக உள்ளது.