ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Students and workers in Pittsburgh and western New York support framed-up Maruti Suzuki workers

பிட்ஸ்பேர்க் மற்றும் மேற்கு நியூயோர்க் இன் மாணவர்களும் தொழிலாளர்களும் ஜோடிப்பு வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ள மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்கின்றனர்

By our reporters
8 May 2017

சோசலிச சமத்துவக் கட்சி (Socialist Equality Party-SEP) மற்றும் அதன் இளைஞர் அமைப்பான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (International Youth and Students for Social Equality-IYSSE) ஆகியவற்றின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும், இந்தியாவில் மாருதி சுசூகி நிறுவனத்தில் ஜோடிப்பு வழக்கின் மூலம் சிக்கவைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஆதரவாக அவர்களது சர்வதேச பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்கள். SEP மற்றும் IYSSE யும், பென்சில்வேனியா மற்றும் நியூயோர்க்கில் உள்ள பிட்ஸ்பேர்க் பல்கலைக்கழகம் (University of Pittsburgh), SUNY ஜெனிசியோ (SUNY Geneseo) மற்றும் ரோசெஸ்டரில் உள்ள டெல்பி தொழில்நுட்ப மையம் (Delphi Technical Center Rochester) போன்றவை உட்பட கல்லூரி வளாகங்களுக்கும், வேலைத் தளங்களுக்கும் இந்தப் பிரச்சாரத்தை கொண்டு சென்றுள்ளனர்.

பிட்ஸ்பேர்க் பல்கலைக்கழக வளாகத்திற்குள் IYSSE குழுவின் உறுப்பினர்கள் ஏப்ரல் 5, புதனன்று பிரச்சாரத்தை நடத்தினர். உலகின் முன்னாள் எஃகு தலைநகரமான பிட்ஸ்பேர்க்கின் மேற்கு பென்சில்வேனியா நகரத்தில் 25,000 மாணவர்களைக் கொண்ட ஒரு அரசு-சார்ந்த நிறுவனமாக பிட்ஸ்பேர்க் பல்கலைக்கழகம் இயங்கிவருகிறது.

இந்திய பொலிஸ் மற்றும் அரசாங்கத்தின் கைகளில் அவர்களது நடத்தப்படும் முறை பற்றி சிறையிலிடப்பட்ட கார் தொழிலாளர்களின் நிலைமை குறித்து மாணவர்கள் கோபத்துடன் விடையிறுத்தனர். ஒரு மணி நேரத்திற்குள், IYSSE, சிறையில் அடைக்கப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக விடுவிக்கவும், அவர்களை மீண்டும் பணியில் அமர்த்தவும் கோரிக்கை விடுக்கக்கூடியதான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மூலம் தொடங்கப்பட்ட மனுவிற்காக பதினெட்டு பேரிடம் கையெழுத்து வாங்கினர்.

பிட்ஸ்பேர்க் பல்கலைக்கழகத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.


L.R. சாய்லீ பாட்டீல், ஈஷா மட்காய்கென், நேஹா பிரஜாபதி மற்றும் சித்தி ஸ்ரீவஸ்தவ் ஆகியோர் மனுவில் கையெழுத்திட்டனர்.

IYSSE பிரச்சாரகர்கள், ஜாரெட் என்பவரிடம் மனுவில் கையெழுத்திடுமாறு கேட்டபோது, மாருதி சுசூகி தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் போராட்டமானது இந்தியாவில் உள்ள தொழிலாளர்களுக்கும், இளைஞர்களுக்கும் மட்டுமல்லாமல் உலகம் முழுவதற்கும் முக்கியமானது என்று IYSSE உறுப்பினர்கள் அவரிடம் வாதிட்டபோதே அவர் ஒப்புக்கொண்டார். “அது அவர்களுக்கு மட்டுமானதல்ல” என்றும் கூறினார்.

சில சமயங்களில் குழுவாக இணைந்து IYSSE உறுப்பினர்களிடம் விவாதித்த பின்னரே பல மாணவர்கள் மனுவில் கையெழுத்திட்டனர்.

கொடாக் மற்றும் ஜெராக்ஸின் பிறப்பிடமான நியூயோர்க்கில் உள்ள ரோச்செஸ்டரில் அமைந்துள்ள டெல்ஃபி மோட்டார் வாகனத் தொழிற்சாலையிலும் (Delphi Automotive Factory) SEP உறுப்பினர்கள் பிரச்சாரத்தை நடத்தினர். டெல்ஃபி, 1990 களில் ஜெனரல் மோட்டார்ஸில் இருந்து உருவான கார் பாகங்கள் தயாரிக்கும் ஒரு பெரிய நிறுவனமாகும். இது தற்போது ஐக்கிய இராஜ்யத்தில் அமைந்துள்ளது. ஒரு தசாப்தத்திற்கு முன்னரே டெல்ஃபி திவால் நடவடிக்கைகளை மேற்கொண்டபோது, ஓய்வூதிய கடமைகளை நிறைவேற்றத் தவறியதுடன், வேறுவழியில் தொழிலாளர்கள் மற்றும் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களின் வாழ்க்கைத் தரங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஜோடிப்பு வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ள மாருதி சுசூகி தொழிலாளர்களை பற்றிய அறிக்கை மற்றும் விசாரணை குறித்து தெரிந்துகொண்ட பின்னர் டெல்ஃபி தொழிலாளர்களும் அவர்களுக்கு ஆதரவளித்தனர். “இந்த மாதிரியான சம்பவங்கள் ஏதேனும் ஒரு நாளில் எனக்கும் நிகழலாம், அப்போது என்னுடைய சக பணியாளர் ஒருவர் எனக்காக எழுந்து நிற்கவேண்டுமென நான் விரும்புவேன் என்பதற்காகவே இந்த மனுவில் நான் கையெழுத்திடுகிறேன்” என்று ஒரு டெல்ஃபி தொழிலாளர் மனுவில் கையெழுத்திடும்போது அவருடைய சக பணியாளரிடம் விவரித்தார்.

தொழிலாளர் இயக்கத்தின் நீண்டகால சுலோகமான “ஒருவருக்கு ஏற்படுகின்ற காயம் என்பது அனைவருக்கும் ஏற்படுகின்ற காயமாகும்” என்பதை ஏற்றுக்கொண்டிருந்த டெல்ஃபி தொழிலாளர்கள், நிறுவனம் மற்றும் ஐக்கிய கார் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் (United Auto Workers Union) மூலமாகவும் பாதிப்படையலாம் என்ற பயத்தின் காரணமாக தங்களது பதிவை செய்யத் தயங்கினர்.


Kevin Smallwood

IYSSE Chapter, ஜெனிசியோவில் (SUNY Geneseo) உள்ள நியூயோர்க் கல்லூரியின் தேசிய பல்கலைக்கழக (State University of New York College) மாணவர்களுக்கும் மாருதி சுசூகி குறித்த பிரச்சாரத்தை கொண்டுவந்தது. சுமார் 5,000 மாணவர்களை கொண்ட ஒரு அரச தாராளவாத கலைக் கல்லூரியான SUNY Geneseo வில் புலம்பெயர்ந்தோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் IYSSE பிரச்சாரம் செய்துள்ளது.

சிரியா மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் சட்டவிரோத கடல்மூல ஏவுகணை தாக்குதல் நடந்ததற்கு பின்னர், ஏப்ரல் 13 அன்று நடத்தப்பட்ட அதன் கூட்டத்தில், மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்கவும், போர் உந்துதலை எதிர்க்கவும், மேலும் தொழிலாளர் வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தை கட்டியெழுப்பவும் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்து,  கூட்ட பங்கேற்பாளர்கள் ஏகமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர்.

SUNY ஜெனிசியோவில் IYSSE இன் (IYSSE at Geneseo) இந்த கூட்டத்தின்போது, ஏப்ரல் 6 ஆம் அன்று (சிரிய நேரத்தின்படி ஏப்ரல் 7 அன்று) சிரியா மீது அமெரிக்க அரசாங்கம் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலுக்கும், அத்துடன் சிரியாவுடனோ, அல்லது ரஷ்யாவுடனோ யுத்தம் செய்வது தொடர்பாக அமெரிக்க அரசாங்கத்தின் மூலமாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு எதிர்கால நகர்வுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சிரிய இராணுவத்தின் மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் தாக்குதல்களானது இராணுவத்தின் மூலமாக அமெரிக்க மேலாதிக்கத்திற்கு முட்டுக்கொடுப்பதற்கான ஒரு முயற்சி என்பதுடன், ரஷ்யாவுடனான நேரடி இராணுவ மோதலுக்கான அபாயத்தை அதிகரிக்கச் செய்யும் வாய்ப்பினையே அது கொண்டுள்ளது. அத்தகைய யுத்தம் மில்லியன் கணக்கிலான உயிர்களின் இழப்பிற்கும், அணுஆயுதங்களின் பிரயோகிப்பிற்கும் அச்சுறுத்துகிறது.

இன்னும் கூடுதலாக, ஜெனிசியோவில் நடந்த IYSSE இன் இந்த கூட்டம் இதேபோல் வட கொரியா, சீனா அல்லது இரு நாடுகளுடன் கிழக்கு ஆசியாவில் போரினை வெடிக்கச் செய்யும் வகையிலான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய வட கொரியாவிற்கு எதிரான அமெரிக்க அச்சுறுத்தல்களையும் கண்டனம் செய்கிறது. அத்தகைய போர் வட கொரியா, தென் கொரியா, சீனா, ஜப்பான் மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு பேரழிவுகரமானதாக இருக்கும்.

இறுதியாக, ஜெனிசியோவில் நடந்த IYSSE இன் இந்த கூட்டம் யுத்தத்திற்கும், தொழிலாளர் வர்க்கத்தின் மீதான ஏனைய தாக்குதல்களுக்கும் எதிராக சர்வதேச அளவில் ஐக்கியப்பட தொழிலாளர்களுக்கும், மாணவர்களுக்கும் மற்றும் இளைஞர்களுக்கும் அழைப்புவிடுக்கிறது. இதன் ஒரு முக்கிய அங்கமாக, இந்தியாவில் மாருதி சுசூகி நிறுவனத்தில் ஜோடிப்பு வழக்கில் சிக்கவைக்கப்பட்டு, அதிலும் 13 பேர் மீது அவர்கள் செய்யாத குற்றத்தின் பேரில் ஆயுள் தண்டனை விதித்து சிறையிலிடப்பட்டும் உள்ள அந்த தொழிலாளர்களை விடுவிக்க உலக சோசலிச வலைத் தளம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மூலமாகவும் தொடங்கப்பட்டுள்ள பிரச்சாரத்திற்கும் நாங்கள் ஆதரவளிக்கிறோம். இந்த பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்க தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களை நாங்கள் அழைக்கிறோம். ஒருவருக்கு ஏற்படுகின்ற காயம் என்பது அனைவருக்கும் ஏற்படுகின்ற காயமாகும்!

பல மாணவர்கள் அந்த இடத்திலேயே கையெழுத்திட்டனர், மேலும் ஏனையோர் ஏற்கனவே கையெழுத்திட்டு இருந்தனர். அந்த பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் கையெழுத்திட்டதுடன், “நான் எனது சக தொழிலாளர்களை தனித்து விடப்போவதில்லை” என்றும் கூறினார்.

ஜோடிப்பு வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ள மாருதி சுசூகி தொழிலாளர்களை பாதுகாக்கும் பொருட்டு IYSSE மற்றும் SEP யும் அவர்களது சர்வதேச பிரச்சாரத்தை தொடருவார்கள்.