ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Transatlantic tensions dominate G7 summit

ஜி7 உச்சிமாநாட்டில் அட்லாண்டிக் கடந்த நாடுகளுக்கு இடையிலான பதட்டங்கள் மேலோங்குகின்றன

By Peter Schwarz
27 May 2017

இரண்டாம் உலக போருக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட சர்வதேச கூட்டணி அமைப்புமுறை உடைந்து வருகிறது. இந்த யதார்த்தம், சனிக்கிழமை சிசிலி இன் தார்மினாவில் முடிவடைந்த ஜி7 உச்சிமாநாட்டில் வெளிப்படுகிறது.

அக்கூட்டத்திற்கு முன்னதாக ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டுஸ்க் கூறுகையில், “பல ஆண்டுகளிலே இந்த ஜி7 உச்சிமாநாடு மிகவும் கடினமானதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை,” என்றார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆத்திரமூட்டும் மற்றும் முன்னுக்குப்பின் முரணான நடவடிக்கைகளே இந்நெருக்கடிக்கான காரணமென ஐரோப்பிய ஊடகங்கள் கண்டறிந்துள்ளன. ஆனால் ட்ரம்ப் பல்வேறு நிறைய அடிப்படை போக்குகளின் வெறும் ஒரு வெளிப்பாடு தான். 2008 இல் உலக பொருளாதாரத்தை பொறிவின் விளிம்பிற்குக் கொண்டு வந்த பூகோள நிதி நெருக்கடியின் ஏறத்தாழ ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான எதிர்விரோத நலன்கள், இனியும் பேச்சுவார்த்தைகள் மூலமாகவோ இராஜாங்க அணுகுமுறைகள் மூலமாகவோ சமரசப்படுத்த முடியாத புள்ளியை எட்டியுள்ளன. இது அனைத்திற்கும் மேலாக வர்த்தகம் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் சார்ந்த கொள்கையில் தெளிவாக வெளிப்பட்டது, இவ்விரு பகுதியுமே இந்த உச்சிமாநாட்டில் மிகவும் சச்சரவுக்குரிய பிரச்சினைகளாக இருந்தன.

வியாழனன்று, ட்ரம்ப் ஜேர்மனியின் பொருளாதார கொள்கையை மிகவும் பலமாக விமர்சித்தார். ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜோன்-குளோட் ஜூங்கர் மற்றும் டுஸ்க்கை புரூசெல்ஸில் சந்தித்த போது, அவர் ஜேர்மனியர்களை "மோசமானவர்கள், மிகவும் மோசமானவர்கள்" என்று வர்ணித்ததுடன், அமெரிக்காவில் ஜேர்மன் கார்களை விற்பனை செய்வதை நிறுத்த அச்சுறுத்தினார்.

அதை தொடர்ந்து நடந்த நேட்டோ கூட்டத்தில், ட்ரம்ப் அங்கே கூடியிருந்த அரசாங்க தலைவர்களைக் குறைகூறினார். “28 அங்கத்துவ நாடுகளில் இருபத்தி மூன்று நாடுகள், அவை என்ன செலுத்த வேண்டுமோ அதை செலுத்தாமல் இருக்கின்றன,” என்றவர் குற்றஞ்சாட்டினார். இது "அமெரிக்க மக்கள் மற்றும் வரிசெலுத்துவோருக்கு" செய்யும் அநீதி என்றார்.

இத்தாலி செல்லும் வழியில் விமானத்தில், ட்ரம்பின் பொருளாதார ஆலோசகர் கேரி கோஹ்ன் ட்ரம்பின் அச்சுறுத்தல்களையே மீண்டும் கூறினார். “வர்த்தகம் சம்பந்தமாக எங்களிடையே மிகவும் சச்சரவான விவாதம் இருக்கும், சுதந்திரமான மற்றும் தடையில்லா வழிவகைகள் என்ன என்பதைக் குறித்து நாங்கள் பேசுவோம்,” என்றார். இந்த பிரச்சினை, ஆட்டத்தின் விதிமுறைகளை நியாயமானதாக மாற்றி வருகிறது என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார். “மற்ற நாடுகள் நம்மை கையாள்வதைப் போலவே" அமெரிக்கா "அவர்களைக் கையாளும்,” என்றார்.

சுற்றுச்சூழல் மாற்றம் மீதான பாரீஸ் உடன்படிக்கையானது அமெரிக்க பொருளாதார வளர்ச்சியைத் தடுத்து, “சமநிலையற்ற போட்டி நிலைமைகளை" உருவாக்கி விட்டதால் அதை "நியாயமற்றதாக" கோஹ்ன் குறிப்பிட்டார்.

2015 இன் இறுதியில் முடிவு செய்யப்பட்டு, இதுவரையில் அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய சக்திகள் மற்றும் ஏனைய பல நாடுகள் கையெழுத்திட்டிருக்கும் இந்த சுற்றுச்சூழல் உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறுமென அவரின் தேர்தல் பிரச்சாரத்தின் போது ட்ரம்ப் வாக்குறுதி அளித்தார். ஜேர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, ஜப்பான் மற்றும் கனடா ஆகிய ஏனைய ஜி7 நாடுகள் அமெரிக்கா வெளியேறுவதற்கு எதிராக எச்சரித்து வருகின்றன.

உச்சிமாநாட்டில் விவாதத்தின் முதல் அமர்விலேயே வெள்ளியன்று ஒரு மோதல் உருவானது. இத்தாலிய பிரதிநிதிகள் முன்வைத்த அகதிகள் நெருக்கடியைக் கையாளும் ஒரு முன்மொழிவை அமெரிக்க பிரதிநிதிகள் குழு முடக்கியது.

மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா போர்களில் இருந்து தப்பிவரும் புலம்பெயர்வோரை மத்தியத்தரைக் கடலில் தடுப்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்து வரும் இத்தாலிய அரசாங்கம், குறைந்தபட்சம் வார்த்தையளவிலாவது, அகதிகளின் உரிமைகளை அங்கீகரிக்க உத்தேசித்தது. ஆனால் அமெரிக்கா திட்டவட்டமாக இதை நிராகரித்தது. தகவல் அளித்த ஆதாரங்களின்படி, அமெரிக்க பேச்சுவார்த்தையாளர்கள் அது குறித்து பேசுவதற்கு தயாராக இல்லை என்பதோடு, “அதை ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது நாங்கள் எதையும் செய்யப்போவதில்லை,” என்ற நிலைப்பாட்டில் நின்றனர்.

வரைவு பிரகடனத்தில், அமெரிக்காவின் வலியுறுத்தலின் பேரில், அங்கே அகதிகள் கொள்கை மீது ஒரேயொரு வாக்கியம் மட்டுமே உள்ளது, அதாவது “நாடுகள் அவற்றின் எல்லைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், புலம்பெயர்வு மீது தெளிவான கட்டுப்பாடுகளை அமைப்பதற்குமான அவற்றின் உரிமையை நாம் உறுதிப்படுத்துகிறோம்,” என்று அமைக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஊடகங்களும் அரசியல்வாதிகளும் "டொனால்ட் ட்ரம்பின் தவறான, மூர்க்கமான மற்றும் எக்குத்தப்பான அணுகுமுறைகள்" மீது சீற்றமாக இருந்ததாக பிரெஞ்சு நாளிதழ் Le Monde குறிப்பிட்டது. இந்த சீற்றம் ஜேர்மனியில் இன்னும் உச்சத்தை எட்டியது.

ஐரோப்பிய சக்திகள் அமெரிக்க ஜனாதிபதியை விட மிகவும் பணிவாகவும், அரசியல்ரீதியில் மிகவும் சரியாகவும் நடந்திருக்கலாம், ஆனால் அவை அவற்றின் உலகளாவிய பொருளாதார மற்றும் புவிசார்மூலோபாய நலன்களைப் பின்தொடர அவர் செய்வதைப் போல அதேயளவிற்குப் பழிக்கு அஞ்சாமல் செய்து கொண்டிருக்கின்றன.

ட்ரம்பின் புரூசெல்ஸ் விஜயம் குறித்த ஒரு முக்கிய கட்டுரையில், ஜேர்மன் நாளிதழ் Süddeutsche Zeitung குறிப்பிடுகையில், ஐரோப்பிய ஒன்றியம் கட்டுப்பாடற்ற சந்தைகளின் ஆலோசகர்களாக முன்நிற்பதன் மூலம் தேசியவாத "அமெரிக்கா முதலில்" கொள்கைக்கு எதிர்வினையாற்ற முனைந்து வருகிறது. அது தொடர்ந்து குறிப்பிடுகையில், “உலக வர்த்தகத்தை நிராகரித்து ட்ரம்ப் வெளியேறினால், ஐரோப்பியர்கள் அவ்விடத்தை நிரப்ப தீர்மானகரமாக உள்ளனர். ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் உட்பட உலகெங்களிலும் சுமார் 20 வர்த்தக உடன்படிக்கைகளை, ஐரோப்பிய ஒன்றிய அரசுகளின் சார்பாக, ஐரோப்பிய ஆணைக்குழு தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது,” என்றது குறிப்பிட்டது.

வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதார வளர்ச்சி, நிலையற்ற நிதி சந்தைகள் மற்றும் கூர்மையடைந்து வரும் சமூக பதட்டங்களின் அழுத்தத்தின் கீழ், சந்தைகள், மூலப்பொருட்கள் மற்றும் மூலோபாய செல்வாக்கிற்காக மீண்டுமொருமுறை ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே ஒரு கடுமையான போராட்டம் வெடித்து வருகிறது. 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், ஒவ்வொரு முதலாளித்துவ தேசிய அரசும் அதன் எதிர்பாளர்களுக்கு எதிராக கரம் உயர்ந்திருக்கவும் மற்றும் எதிர்ப்பாளர்களை பின்னுக்குத் தள்ளவும் முயன்று வந்தது.

ஜி7 க்கு முன்பிருந்த, ஆறு நாடுகளது குழு (அப்போது அதில் கனடா இருக்கவில்லை) போருக்குப் பிந்தைய சகாப்தத்தில் முதல் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிக்கு விடையிறுப்பாக 1975 இல் ஸ்தாபிக்கப்பட்டது. அந்த ஆறு மிக பலமான பொருளாதாரங்களின் தலைவர்கள், பிரெட்டன் வூட்ஸ் அமைப்புமுறை உடைவதை தடுக்கவும் மற்றும் முதல் மிகப்பெரும் எண்ணெய் நெருக்கடி வர்த்தக போர் மற்றும் இராணுவ மோதலுக்கு இட்டுச் செல்வதைத் தடுக்கவும் "உடனடியான விவாதங்களுக்காக" ரம்புய்யே (Rambouillet) மாளிகையில் சந்தித்தனர்.

1998 இல், ஜி7 நாடுகள் ரஷ்யாவையும் உள்ளடக்கி ஜி8 நாடுகளாக விரிவாக்கப்பட்டது. ரஷ்யா கிரிமியாவை இணைத்துக் கொண்டதற்காக 2014 இல் அதிலிருந்து வெளியேற்றப்பட்டது. எஞ்சியுள்ள அங்கத்துவ நாடுகளுக்கு இடையிலான மோதல்களும் பதட்டங்களும் இப்போது அதிகரித்து வருகின்றன. இந்த அபிவிருத்திகள் ஜி7 அமைப்பு தொடர்ந்து உயிர்பிழைக்குமா என்பதன் மீது மட்டும் கேள்வியை எழுப்பவில்லை, மாறாக கடந்த 70 ஆண்டுகளாக மிக முக்கிய இராணுவ கூட்டணியாக உள்ள நேட்டோ மீதும் கேள்வி எழுப்புகிறது.

ஒரு நேட்டோ அங்கத்துவ நாடு தாக்குதலின் கீழ் இருக்கையில் அதற்கு உதவ ஏனைய அனைத்து நேட்டோ அங்கத்துவ நாடுகளையும் பொறுப்பாக்கும் நேட்டோவின் ஷரத்து 5 க்கு அவர் கடமைப்பட்டிருப்பதன் மீது, புரூசெல்ஸ் விஜயத்தின் போது, ட்ரம்ப் மறுஉத்தரவாதம் அளிக்க மறுத்ததை பார்வையாளர்கள் கவனத்தில் கொண்டனர்.

பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டது, “அக்கூட்டணியின் பரஸ்பர பாதுகாப்பு விதிமுறையை திரு ட்ரம்ப் ஆமோதிக்க மறுத்தமை அதிர்ச்சியாக இருந்தது. 9/11 இன் போது நேட்டோவிற்கான அமெரிக்க தூதராக இருந்த நிக்கோலஸ் பேர்ன்ஸ் அதை ஒரு 'மிகப்பெரிய தவறாக' சுட்டிக்காட்டியதுடன், 'ட்ரூமனில் இருந்து ஒவ்வொரு அமெரிக்க ஜனாதிபதியும்' அந்த 5 ஆம் ஷரத்திற்கு அவர்களது ஆதரவை சூளுரைத்துள்ளனர். 'இன்று நேட்டோவில் ட்ரம்ப் செய்ததைப் போல செய்ததில்லை' என்று ட்வீட்டரில் குறிப்பிட்டார்.

நேட்டோ எப்போதுமே ஒரு பிற்போக்குத்தனமான இராணுவ கூட்டணியாகும், அது கூட்டணிகளை மாற்றுவதில் முழுமையாகவும் சரி பகுதியாகவும் சரி மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவின் நவ-காலனித்துவ போர்களிலும் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான இராணுவ ஆயத்தப்படுத்தலிலும் ஒரு முக்கிய பாத்திரம் வகித்துள்ளது. ஆனால் அதன் உள்மோதல்களின் அழுத்தத்தின் கீழ் அது இப்போது உடைந்தால், இது மீண்டுமொருமுறை மேற்கத்திய சக்திகளுக்கு இடையே சாத்தியமான மற்றும் நிகழக்கூடிய போர்களில் போய் முடியும்.

1914 மற்றும் 1939 ஐ போலவே, முதலாளித்துவ பூகோள அமைப்புமுறையின் நெருக்கடி மீண்டுமொருமுறை போருக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறது. அதுபோன்றவொரு பேரழிவைத் தடுக்க, தொழிலாள வர்க்கத்தில் வேரூன்றிய மற்றும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடுகின்ற ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவது மட்டுமே ஒரே வழியாக உள்ளது.