ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Britain’s general election: A new stage in the class struggle

பிரிட்டன் பொது தேர்தல்: வர்க்க போராட்டத்தில் ஒரு புதிய கட்டம்

Chris Marsden and Julie Hyland
10 June 2017

பிரிட்டனின் முன்கூட்டி அழைப்புவிடப்பட்ட பொது தேர்தல் பிரதம மந்திரி தெரேசா மே இன் பழமைவாத கட்சி அரசாங்கத்திற்கு ஒரு மிகப்பெரிய அரசியல் தோல்வியை வழங்கியது. இந்த முடிவானது, முடிவற்ற சிக்கன நடவடிக்கைகள், இடைவிடாத சம்பள வீழ்ச்சிகள், சுகாதார நல செலவுகளில் வெட்டுக்கள் மற்றும் அத்தியாவசிய சமூக சேவைகளின் அழிப்பு என பேரழிவுகரமான விளைவுகள் மீதான மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் கோபம் மற்றும் அலைபோன்ற டோரி எதிர்ப்புணர்வின் விளைவாகும்.

இது ஜெர்மி கோர்பின் தலைமையிலான தொழிற்கட்சிக்கான ஆதரவை உயர்த்தியது. தொழிற்கட்சியின் வாக்கு சதவீதம் 10 சதவீத உயர்வுடன், டோரிக்கள் பெற்ற 42 சதவீத மொத்த வாக்குகளுடன் ஒப்பிடுகையில் இரண்டு சதவீதம் குறைவாக பெற்றிருந்தது. இளம் தலைமுறையினரிடையே, 18-24 வயதுடையவர்களில் மூன்றில் இரண்டு பங்கினரும், 25-34 வயதுடையவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களும் தொழிற்கட்சிக்கு வாக்களித்திருந்தனர்.

ஊடகங்களைப் பொறுத்த வரையில், இந்த முடிவு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது. ஒரு பிரமாண்ட டோரி வெற்றி குறித்த அவர்கள் அனைவரது அனுமானங்களும் பட்டவர்த்தனமான அரசியல் பிரச்சாரமாக இருந்தன எனும் அளவிற்கு, இந்த தேர்தல் முடிவானது எந்தளவிற்கு இந்த செல்வசெழிப்பான, வசதிமிக்க, ஆறு இலக்க சம்பளத்துடன் கூடிய வர்ணனையாளர்கள் பரந்த பெரும்பான்மை மக்கள் மீதான அக்கறைகளில் இருந்தும், அனுபவங்களில் இருந்தும் விலகி இருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டியது.    

இந்த தேர்தல், உலகெங்கிலும் அனைத்து தொழிலாளர்களிடையே ஏற்பட்டு வரும் அரசியல் தீவிரப்படலுக்கு மற்றொரு பிரதான அறிகுறியாக இருந்தது. ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பேர்னி சாண்டர்ஸ் இருந்திருந்தால், டொனால்டு ட்ரம்ப் அல்ல, அவரே வெள்ளை மாளிகையில் இருந்திருப்பார் என்பதை கோர்பினின் வாக்கு அதிகரிப்பு எடுத்துக்காட்டுகிறது.

மே அவமானப்படுத்தப்பட்டதில் அங்கே தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஓரளவிற்கு திருப்தியும், பரவச நிலையும் கூட ஏற்பட்டிருப்பது உண்மை தான். இது புரிந்து கொள்ளத்தக்கது தான் என்றாலும் என்ன அவசியப்படுகிறது என்றால் ஜூன் 8 க்குப் பின்னர் ஒரு தெளிவான மயக்கமயற்ற பகுப்பாய்வும், ஒரு தெளிவான அரசியல் முன்னோக்கும் ஆகும். மொத்தத்தில், டோரிக்கள் தான் இன்னமும் அதிகாரத்தில் உள்ளனர், மேலும் அவர்களது அரசியல் நெருக்கடிக்கு இடையிலும், அவர்களது சிக்கனத் திட்டநிரலைத் திணிப்பதற்கு அவசியமான அரசியல் மாற்றங்களை உருவாக்க வேலை செய்து வருவதுடன், ஈராக் மற்றும் சிரியாவில் தீவிரப்படுத்தப்பட்ட போருக்கும் திட்டமிட்டு வருகின்றனர்.   

பாரிய பெருந்திரளான மக்களின் தீவிரமயப்படலை ஆரம்ப மற்றும் அதற்கு தகுதியற்ற கோர்பின் மற்றும் தொழிற் கட்சி போன்றோரின் அரசியல் ஆதாயமாக அடையாளம் காண்பதிலும் தான் மிகப்பெரிய அரசியல் அபாயம் உள்ளது.  

1967 இல், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் (ICFI) அப்போதைய பிரிட்டிஷ் பிரிவான சோசலிச தொழிலாளர் கழகம் (SLL), அப்போதைய பிரெஞ்சு பிரிவான சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்புக்கு (OCI) விடுத்த எச்சரிக்கையிலிருந்து படிப்பினைகளை பெற்றாக வேண்டும். தொழிலாள வர்க்கத்தில் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கான ஆரம்ப நிலைமைகளின் கீழ், அதுவும் அது விரைவிலேயே புரட்சிகர பரிமாணங்களை எடுக்கவிருந்த நிலையில், OCI அழுத்தந்திருத்தமாக ஒரு மத்தியவாத திசையில் நகர்ந்து கொண்டிருந்தது.

சோசலிச தொழிலாளர் கழகம் (SLL) எச்சரித்தது:

இதுபோன்றவொரு அபிவிருத்தி கட்டத்தில், ஒரு புரட்சிகர கட்சி தொழிலாள வர்க்கத்தின் இந்நிலைமைக்கு ஒரு புரட்சிகர வழியில் விடையிறுக்காமல், மாறாக தவிர்க்கவியலாத ஆரம்ப குழப்பத்திற்கு பழைய தலைமைகளின் கீழ் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த அனுபவத்தால் மட்டுப்படுத்தப்பட்ட போராட்ட மட்டத்திற்கு அடிபணிவது என்பது எப்போதுமே ஒரு அபாயமாகும். சுயாதீனமான கட்சி மற்றும் இடைமருவு வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தில் இதுபோன்ற திருத்தங்கள், வழமையாக தொழிலாள வர்க்கத்திற்கு இன்னும் நெருக்கமாக செல்வது, போராட்டத்தில் இருக்கும் அனைவரையும் ஐக்கியப்படுத்துவது, மாற்றீடுகளை முன்வைக்காது, விமர்சனமற்று ஒரு நிலைப்பாட்டை முன்வைப்பது போன்ற வேஷத்தில் இருக்கும்.

சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு (OCI) இந்த எச்சரிக்கைகளை உதறித் தள்ளியதுடன், ICFI உடன் முறித்துக் கொண்டு, சோசலிஸ்ட் கட்சியை (PS) பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதான அரசாங்க "இடது" கட்சியாக கட்டமைப்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கச் சென்றது.

பிரிட்டிஷ் சோசலிஸ்ட் கட்சி, சோசலிச தொழிலாளர் கட்சி மற்றும் ஏனைய போலி-இடது குழுக்கள் இப்போது கோர்பினை தொழிலாள வர்க்கத்தின் இயல்பான தலைவராக சித்திரப்பதை ஏற்க நகர்பவர்களுக்கு நாங்கள் கூறுவது இதுதான்: அலெக்சிஸ் சிப்ராஸ் மற்றும் சிரிசாவை நினைவில் கொள்ளுங்கள்.

கோர்பின் வெற்றி தொழிற் கட்சியை மாற்றியுள்ளதாக போலி-இடது குழுக்கள் கூறுகின்றன. இதுவொரு பொய்யாகும்.

கோர்பின் அக்கட்சியின் தலைமையை ஏற்றதில் இருந்து ஏறத்தாழ இரண்டாண்டுகளாக, அவர் வலதுசாரிகளை வெளியேற்றுவதற்கான எந்தவொரு போராட்டத்தையும் தடுத்துள்ளார். அதற்கு பதிலாக அவர் நேட்டோவிற்கான ஆதரவுக்கும் மற்றும் முப்படைகளில் அணுஆயுதங்களுக்கும் உத்தரவாதமளிப்பதில் தொடங்கி "வரவு-செலவுத் திட்ட கடமைப்பாடுகளுக்கும்" (fiscal responsibility) மற்றும் ஒரே ஐரோப்பிய சந்தையின் அங்கத்துவத்தில் பிரிட்டனை வைத்திருப்பது வரையில் பிளேயர்வாதிகள் சார்பான இன்றியமையா முறையீடுகள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு தேர்தல் அறிக்கையுடன் தேர்தலில் இறங்கினார்.

இதன் விளைவாக, இப்போது அவர் அவரை நீக்குவதற்கு முயன்ற சதி ஆலோசகர்கள் மற்றும் சதிகாரர்களின் அதே துர்நாற்றமெடுக்கும் குட்டையில் இருந்து விரிவாக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற தொழிற் கட்சிக்கு தலைமை கொடுக்கிறார்.

தேர்தலுக்கு சற்று முன்னதாக கூட, கோர்பின் இன்னும் மேற்கொண்டு வலதிற்கு நகர்ந்து கொண்டிருந்தார். பயங்கரவாத அச்சுறுத்தலை ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் சிரியாவில் இங்கிலாந்தின் ஆட்சி மாற்ற போர்களுடன் தொடர்புபடுத்திய அவரது முந்தைய விமர்சனங்களைக் கைவிட்டமை மற்றும் அதற்கு பதிலாக மே பொலிஸ் எண்ணிக்கைகளைக் குறைத்ததற்காக வேதனைப்பட்டமை, இராணுவம் மற்றும் இரகசிய சேவைகளுக்கு அதிக நிதி வழங்க சூளுரைத்தமை ஆகியவையே மான்செஸ்டர் மற்றும் இலண்டன் பயங்கரவாத அட்டூழியங்கள் மீதான அவரின் விடையிறுப்பாக இருந்தது.

கோர்பினை அரசியல்ரீதியில் மாற்றும் நிகழ்ச்சிப்போக்கு, இந்த முன்கூட்டி அழைப்புவிடப்பட்ட  தேர்தலுக்கு பின்னர் தான் தீவிரப்படுத்தப்படும்.

ஜனநாயக ஒன்றிய கட்சியுடன் (Democratic Unionist Party) சேர்ந்து இயங்குவதற்கு மே முன்மொழிந்த உடன்படிக்கை அவர் முகத்திற்கு முன்னால் சிதறுமா இல்லையா, மொத்தத்தில் அவர் மீண்டும் ஆட்சி அமைப்பாரா மாட்டாரா, புதிய தேர்தலை எவ்வாறு குறிப்பிட்டு அழைப்பது என்பது தான் பொதுவான முன்அனுமானத்தில் உள்ளது. “பிரிட்டனை கடுமையாக வெளியேற்றும்" மே இன் மூலோபாயம் சிதைந்து போயுள்ள நிலையில், பைனான்சியல் டைம்ஸ் “நிச்சயமாக 'கடுமையான' பிரிட்டன் வெளியேற்றம் மீது தற்காலிக நிறுத்தும் பொத்தானை அழுத்துவதற்கான நேரமிது" என்று அறிவித்தும், “ஐரோப்பிய ஒன்றியத்துடன் சாத்தியமான அளவிற்கு நெருக்கமான உறவுகளுக்காக கட்சிகளிடையேயான ஆதரவுக்கு" அழைப்புவிடுத்தும், கோர்பினுக்கு நேரடியாக குரல் கொடுத்தது என்று கூறினால் மிகையாகாது.      

டோரி கட்சி மூலமாக இந்த இலட்சியங்களை எட்டுவது சாத்தியமில்லை என்றானால், பின் நியாயமாக இரண்டாவது பொது தேர்தல் ஒன்று விரைவாக நடத்தப்படலாம். அதுபோன்றவொரு முக்கிய கொள்கை மாற்றத்தை நடத்துவதற்கு அவசியமான இயங்குமுறையை கோர்பின் வழங்குவாரா என்பது குறித்து ஏற்கனவே ஆளும் வட்டாரங்களில் அங்கே விவாதங்கள் நிலவுகின்றன, மக்களின் ஆதரவை கோர்பின் பெற்றிருப்பதற்கு தான் இதற்காக நன்றி கூற வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தை நெறிப்படுத்துவதற்கும், அக்கட்சிக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் உள்ள அதன் கூட்டாளிகளுக்கும் அதை அடிபணிய வைத்திருப்பதை உறுதிப்படுத்துவதற்கும் ஒரு வழிவகையாக தொழிற் கட்சி அதன் "இடது சாரி" வாய்சவடால்களைப் பயன்படுத்துவதில் ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான அனுபவத்தைக் கொண்டுள்ளது.

இன்றோ, பிளேயர்வாதிகளில் சிலர் அதே விடயத்தை கோர்பினைக் கொண்டு செய்ய ஒரு புதிய அரசியல் சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாக உணர்கிறார்கள். வியாழனன்று தேர்தல் முடிவு வருவதற்கு முன்னர், புதிய தொழிற் கட்சியின் துணை-நிர்மாணிப்பாளர் பீட்டர் மாண்டெல்சன் கூறுகையில், கோர்பினை நீக்குவதற்கு அவர் ஒவ்வொரு நாளும் வேலை செய்து வருவதாக தெரிவித்தார். ஆனால் இப்போது அவர், கட்சிக்கு தலைமை கொடுப்பதற்கான உரிமையை கோர்பின் பெற்றுள்ளதாகவும், ஆனால் இன்னும் "அனைத்தையும் உள்ளடக்கிய" மற்றும் பைனான்சியல் டைம்ஸ் வலியுறுத்திய பரந்த கூட்டணி உருவாவதற்கு இருக்கும் தடைகள் நீக்கப்பட்ட கொள்கைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கிறார்.     

கோர்பின், கட்சி ஐக்கியத்திற்கான இந்த சமாதான தூதர், பெரிதாக ஒன்றும் எதிர்ப்பு காட்டமாட்டார் என்பதோடு, போலி-இடது குழுக்களாலும் இவர் ஆதரிக்கப்படுவார். தேர்தலின் போதே, அவை கோர்பினை ஆதரித்ததுடன், வலது சாரிகள் உள்ளடங்கலாக, தொழிற் கட்சி வேட்பாளர்கள் அனைவருக்கும் வாக்களிக்குமாறு அழைப்புவிடுத்தன. “யதார்த்தத்தை உணராமல் ஒருமித்திருக்க ஒத்துவராத கொள்கைகளையும் மற்றும் கோர்பினின் தலைமையையும் முன்னர் ஆதரிக்காத தொழிற் கட்சியின் நாடாளுமன்ற அங்கத்தவர்கள் உள்ளடங்கலாக தொழிற் கட்சியில் உள்ள அனைவரையும்" இடது ஐக்கியம் வலியுறுத்தி வரும் நிலையில், தேர்தல்களுக்குப் பின்னர், இதே நிலைப்பாடு தொடரும். 

எல்லைக்கோடு மீறாமல் இருக்கும்.

கோர்பின் ஒரு கூட்டணியை உருவாக்கும் நிகழ்ச்சிப்போக்கை தொடங்கினாலோ அல்லது தாராளவாத ஜனநாயகவாதிகள், ஸ்காட்டிஷ் தேசிய கட்சி மற்றும் ஏனையவர்களுடன் ஒரு "நம்பிக்கை மற்றும் உடன்படிக்கையை" உருவாக்குவதற்கான நிகழ்ச்சிப்போக்கை தொடங்கினாலோ, இதுவும் கூட தொழிற் கட்சி பதவியேறுவதற்கு அவசியமான "முற்போக்கு கூட்டணி" என்று நியாயப்படுத்தப்படலாம். இது தான் கிரீஸில் நடந்தது, அங்கே வலதுசாரி, புலம்பெயர்வு-விரோத சுதந்திர கிரேக்கர்களுடனான சிரிசாவின் கூட்டணியில் இருந்து சிக்கன திட்ட எதிர்ப்பு போராட்டத்தை சிரிசா காட்டிக்கொடுத்தது வரையில் அனைத்தையும் "இடது" ஆமோதித்தது.

தொழிலாள வர்க்கம் இடதிற்கு, புரட்சியை நோக்கி நகர்ந்து வருகிறது. ஆனால் அதன் நனவு சீர்திருத்தவாதமாய் உள்ளது. சோசலிச சமத்துவக் கட்சியின் பணி, நனவின் இப்போதைய இந்த மட்டத்திற்கு இயைந்துபோவதல்ல, மாறாக தீவிரமடைந்து வரும் பிரிட்டன் மற்றும் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியால் உருவாக்கப்படும் புரட்சிகர பணிகளுடன் அதை ஒரேதிசையில் சேர்த்து கொண்டு வருவதாகும்.

இதன் அர்த்தம், தொழிற் கட்சியின் நாடாளுமன்ற வாய்ப்புகளுக்காக வர்க்க போராட்டத்தின் அபிவிருத்தியை அடிபணிய வைப்பதற்கான சகல முயற்சிகளையும் எதிர்ப்பதாகும். 

ஒரு புதிய மார்க்சிச அரசியல் தலைமையை கட்டமைப்பதன் மூலமாக, சமூக சமத்துவமின்மை மற்றும் போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான போராட்டத்தை அபிவிருத்தி செய்வதே அவசியமாக உள்ளது.