ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

EU sets up joint military command centre and European defence fund

ஐரோப்பிய ஒன்றியம் கூட்டு இராணுவக் கட்டளை மையத்தையும் ஐரோப்பிய பாதுகாப்பு நிதியத்தையும் அமைக்கிறது

By Johannes Stern
9 June 2017

வளர்ந்து வரும் அட்லான்டிக் கடந்த பதட்டங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் நிலைமைகளின் கீழ், எஞ்சிய 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் அரசுகளும் ஒரு சுதந்திரமான இராணுவக் கொள்கையை நிறுவுவதை விரைந்து முன்னெடுக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியமானது, வியாழனன்று லுக்சம்பேர்க்கில் குடிமக்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கான கூட்டு கட்டளை மையம் ஒன்றை நிறுவ முடிவு செய்தது. அது ஆரம்பத்தில் மாலி, சோமாலியா மற்றும் தென்னாபிரிக்காவில் பயிற்சி பணித்திட்டங்கள்  போன்றவற்றில் போல (நிறைவேற்று அதிகாரமின்றி) ஐரோப்பிய ஒன்றிய திட்டப்பணிகளை வழிநடத்த பயன்படுத்தப்படும். சராசரி அர்த்தத்தில், ஐரோப்பிய ஒன்றிய இராணுவ நடவடிக்கைகள் “நிறைவேற்றுகை” பின்வருமாறு பின்பற்றக்கூடும், அதாவது சிரியா, அல்லது ஈராக்கில் போன்ற போர் நடவடிக்கைகளை பின்பற்றக்கூடும். இவை இதுவரைக்கும் உறுப்புநாடுகளில் உள்ள அந்தந்த தலைமையகங்களிலிருந்து வழிநடத்தப்பட்டு வந்தன.

நேற்றைக்கு முதல் நாள் ஐரோப்பிய ஆணையம் ஆண்டுக்கு 5.5 பில்லியன் யூரோ மதிப்புடைய ஒரு ஐரோப்பிய பாதுகாப்பு நிதியத்தை உருவாக்கியது. இந்த ஆண்டில், ஐரோப்பிய ஒன்றியம், “முதல் தடவையாக புதுமையான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் உற்பத்திப்பொருட்களில் ஒரு கூட்டு ஆய்வுக்காக மானியம் வழங்குவதுடன், முழுமையாகவும் நேரடியாகவும் ஐரோப்பிய ஒன்றிய வரவு-செலவுத் திட்டத்தில் இருந்து நிதியளிக்கப்படும்” என உத்தியோகபூர்வ செய்தி வெளியீடு தெரிவிக்கிறது. இந்த ஆணையம் 2018ல், ஐரோப்பிய ஒன்றியத்தை, ஐரோப்பாவில் பெரிய பாதுகாப்பு ஆய்வு முதலீட்டாளர்களுள் ஒன்றாக ஆக்கும், “ஒரு அர்ப்பணிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு ஆய்வுத் திட்டத்தை ஆண்டுக்கு 500 மில்லியன் யூரோக்கள் என்று மதிப்பிடப்படும் ஆண்டு வரவு-செலவு திட்டத்துடன்” முன்மொழியும்.

நிதியத்தின் இரண்டாம் நிலை ”பாதுகாப்பு சாதனம் மற்றும் தொழில்நுட்பத்தை அபிவிருத்தி செய்தல் மற்றும் கையிலெடுத்தல்” பற்றி அக்கறை கொள்கிறது. சுமார் 500 மில்லியன் யூரோக்கள் இந்தப் பகுதியில் நேரடியாக செலவிடப்படும். உதாரணமாக, "ட்ரோன் தொழில்நுட்பம் அல்லது செயற்கைக்கோள் தொடர்பை அபிவிருத்தி செய்வதில், அல்லது செலவுகளைக் குறைக்க மொத்தமாய் ஹெலிகாப்டர்களை வாங்குவதில் கூட்டாக முதலீடு செய்தலாகும்“ எனவே அதனால் 2020க்குப் பின்னர் பாதுகாப்புத் திறன் அபிவிருத்தியில், “ஆண்டுக்கு 5 பில்லியன்கள் யூரோக்கள் மொத்த முதலீட்டைச் செய்ய முடியும்.”

இந்த நடவடிக்கைகளின் நோக்கம், ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு ஆக்கிரோஷமான பெரும் வல்லரசாக அபிவிருத்தி செய்வதுடன், நேட்டோ மற்றும் அமெரிக்காவிலிருந்து சுதந்திரமாக இராணுவ ரீதியாக தலையிட்டு போரை நடத்துவதாகும்.

புதனன்று ஐரோப்பிய ஆணையத்தால் வெளியிடப்பட்ட “ஐரோப்பிய பாதுகாப்பு பற்றிய ஆழ்ந்த கருத்து ஆய்வு அறிக்கை” என்பதிலும் பின்வருமாறு குறிப்பிட்டது: “ஐரோப்பிய பாதுகாப்பை முன்னேற்றுவது அனைத்திற்கும் முதலாக ஐரோப்பியர் கைகளில் இருக்கின்றது. வளங்கள் அங்கு இருக்க வேண்டும்: கூட்டாக உலகரீதியில் ஐரோப்பிய நாடுகள்தான் இரண்டாவது மிகப்பெரிய இராணுவச் செலவினம் செய்வதாகும்……. எமது பங்காளிகளுடன் சேர்ந்து செயல்படுகையில் ஐரோப்பிய ஒன்றிய விதிகளுக்கும் முன்னுரிமைதரலுக்கும் தொடர்ந்து ஆதரவாய் இருக்கும் அதேவேளை, அவசியப்படும்பொழுது தனியாகவும் செயல்பட வேண்டும்.”

ஆணையத்தின் அறிவிக்கப்பட்ட குறியிலக்கு “புதிய போக்குகளுக்கு ஏற்ப ஓட்டத்தில் வைத்திருக்கவும் ஐரோப்பா தனது மூலோபாய சுயாட்சித் தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் அதற்கு தேவைப்படும் தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை திறன்களை உருவாக்கவும் உதவும்” பொருட்டு ,ஐரோப்பாவை பெரிய அளவில் ஆயுதமயமாக்கலாகும். 2016ல் பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டங்கள் ஏற்கனவே அதிகரித்திருந்தது, “ஆனால் முன்னுள்ள பாதை இன்னும் நீளமானது,” என அந்த ஆய்வு அறிக்கை எச்சரித்தது. ”ஐரோப்பாவின் மூலோபாய சுயாட்சியை நோக்கி நகரும் போது, எமது பாதுகாப்பு மீது அதிகம் செலவிடுவதையும், அதேபோல சிறந்த முறையில் செலவு செய்தலையும் மற்றும் சேர்ந்து செலவிடுவதையும் வேண்டிநிற்கிறது.”

அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகியவை இப்பொழுது ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அளவுக்குறிகளாக உள்ளன: “அமெரிக்காவானது, அனைத்து நேட்டோ உறுப்பு நாடுகளும் சேர்ந்து செலவழிப்பதை விடவும் பாதுகாப்பில் இரு மடங்கிற்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது மற்றும் அதன் 2018 வரவு-செலவுத் திட்டத்தில் கிட்டத்தட்ட பத்து சதவீதம் அதிகரிக்கும். சீனா கடந்த பத்தாண்டில் அதன் வரவு-செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்காக 150 சதவீதம் உயர்த்தி இருக்கிறது, 2017ல் அது மேலும் 7 சதவீதம் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, ரஷ்யா கடந்த ஆண்டில் தன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.4 சதவீதத்தை பாதுகாப்பில் முதலீடு செய்துள்ளது.”

இந்தச் செய்தி எந்த தவறுக்கும் இடமில்லாதது. ஐரோப்பா ஏனைய பெரும் வல்லரசுகளுக்கு எதிராக தனது உலக நலன்களை உறுதிப்படுத்தும் பொருட்டு ஆயுதப் போட்டியில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்பதாகும். “2025ல் ஐரோப்பா — பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒன்றியம் என்பதை நோக்கிய நகர்வு”, என்ற பிரிவில், ஐரோப்பிய மக்கட்தொகையின் முதுக்குக்கு பின்னால் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மூன்று மறு-ஆயுதமயமாக்கல் காட்சிகளை முன்கூட்டிக் காட்டுகிறது, அவை உண்மையில் இராணுவ-போலீஸ் அரசைக் கட்டும் நோக்கத்தைக் கொண்டவை.

“இந்தக் காட்சியில், உறுப்பினர் நாடுகள் பொது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பினை நோக்கிய மேலும் கூடிய ஒத்துழைப்பை மற்றும் ஒருமைப்பாட்டை ஆழப்படுத்தும்”, என ஆவணம் கூறுகிறது. அதன் விளைவாக, ஐரோப்பிய ஒன்றியமானது “சாத்தியமான வகையில் பயங்கரவாத குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகள், விரோதமான சூழலில் கடற்படை நடவடிக்கைகள் அல்லது சைபர்-பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்பட, ஐரோப்பாவை சிறப்பாகப் பாதுகாக்க, உயர்நுட்ப நடவடிக்கைகளை இயக்கக்கூடியதாக இருக்கும்.”

இந்த புதிய பாதுகாப்பு நிதியானது, “உடனடி பதில்களை உறுதிப்படுத்தும் பொருட்டு விண்வெளி, வான் மற்றும் கடல்சார் கண்காணிப்பு, தகவல்தொடர்பு, மூலோபாய வான்வழி நகர்வு மற்றும் இணையம்…… போன்ற துறைகளில் திறமைகளை” வழங்கும். அத்துடன்கூட, ஐரோப்பா “சைபர்-தாக்குதல் திறன்கள் மற்றும் அவற்றை கண்டறிதல்” திறன்களைக் கொண்டிருக்கும், மற்றும் ஒரு அர்ப்பணிக்கப்பட்ட ஐரோப்பிய பாதுகாப்பு ஆய்வு முகமை” யானது “பாதுகாப்பில் புதியன கண்டறிவதில் முன்னெடுத்துச்செல்லும் மற்றும் அதனை நாளைய இராணுவத் திறமையுள்ளவைகளாய் மாற்றும்.”

இன்னும் கூடுதல் சுயாதீனமான மற்றும் ஆக்கிரோஷமான ஐரோப்பிய போர்க் கொள்கைக்கு, கண்டத்தின் உள்ளேயும் இராணுவமயமாக்கல் தேவைப்படும் என்பதை ஐரோப்பிய செல்வந்தத்தட்டுக்கள் அறிவர். “பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முறையாகக் கண்காணிப்பதோடு, தேசிய பாதுகாப்பு மற்றும் உளவு துறைகள் இடையேயான நெருக்கமான ஒத்துழைப்பில் படிமுறைரீதியாக கூட்டாக இணைந்தே ஆய்வு செய்யப்படும் மற்றும் மதிப்பிடப்படும்” என ஆணைக்குழு கூறுகிறது. “நிகழும் வாய்ப்புள்ள திட்டமிடல் ஐரோப்பிய மட்டத்தில் மேற்கொள்ளப்படுவதானது, உள்நாட்டு வெளிநாட்டுப் பாதுகாப்பை நெருக்கமாய் ஒன்றாக்கி விடும். தேசிய பாதுகாப்பு நலன்களின் உட்தொடர்பானது உண்மையான ஐரோப்பிய பாதுகாப்பு நலன்களுக்கு வழிவகுக்கும்.”. 

எதிர்பார்த்தவாறே, ஐரோப்பிய குழுவின் திட்டத்திற்கான மிகப்பெரிய வரவேற்பு பேர்லினில் இருந்து வந்தது. ஜேர்மன் அரசாங்கம் பிரெக்ஸிட் மற்றும் அமெரிக்காவிலிருந்து தொடர்பறுதல் தொடர்பாக – ஜேர்மன் தலைமையின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்தை மறு ஒழுங்கு செய்வதற்கான ஒரு வாய்ப்பாகவும் அதன் சொந்த வல்லரசு கொள்கையின் தொடக்கப் புள்ளியாகவும் கருதுகிறது.

ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் உர்சுலா வொன் டெர் லெயன் (CDU), “ஐரோப்பிய பாதுகாப்புக் கொள்கையின் மீதான எதிர்காலம் தொடர்பான குழுவின் முன்மொழிவுகளை நான் வெளிப்படையாக வரவேற்கிறேன். அது ஆர்வமுடையதாக இருக்கிறது, கடந்த பன்னிரண்டு மாதங்களாக பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒன்றியத்தை நோக்கி எவ்வளவுதூரம் நாம் நகர்ந்திருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது” என அறிவித்தார். ஐரோப்பிய பாதுகாப்பு நிதியம் மற்றும் இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் எமது ஐரோப்பிய பங்காளிகளுடன் PESCO [Permanent Structured Cooperation] போன்ற அடுத்த மைல்கற்களை அடைய நாம் கட்டாயமாக இந்த கணத்தை சாதகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.”

குறிப்பாக, ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் “ஐரோப்பிய நேட்டோ அரசுகளுக்கான “நங்கூர சேனை” என்று அழைக்கப்படும் Bundeswehr (ஆயுதப்படைகள்) ஐ நிறுவி, அவற்றை மேம்படுத்தி, படிப்படியாக Bundeswehr இன் கட்டளைக் கட்டமைப்பின் கீழ் கொண்டுவர வேலைசெய்து கொண்டிருக்கிறார். பலவாரங்களுக்கு முன்னர் அவரது மூலோபாயம் பற்றி Frankfurter Allgemeine Zeitung இல் விளக்கிய ஒரு கருத்துரைப்பில் வொன் டெர் லெயன், “மீண்டும் ஒரு பெரிய கூட்டமைப்புக்களில்” ஒருவர் சிந்திக்க வேண்டியிருக்கும் என்று விளக்கினார்.

அவரது புதிய புத்தகமான New Assessments இல் வெளியுறவு அமைச்சர் சிக்மார் காப்பிரியேல் (சமூக ஜனநாயகக் கட்சி - SPD), அரசாங்கமானது ஜேர்மன் தலைமையின் கீழ் ஒரு ஐரோப்பிய படையைக் கட்டுதற்கு முயற்சித்து வருகிறது என உறுதியாய் தெரிவித்தார். “இது ஐரோப்பாவில் ஆயுதத் தளவாட தொழிற்சாலையை மிக நெருக்கமாக ஒருங்கிணைத்தல் மற்றும் படைகள் மீது கவனக்குவிப்புகொள்வது பற்றிய பிரச்சினையாகும். அது பொதுவான ஐரோப்பிய பாதுகாப்பு அடையாளத்தை உருவாக்குதல், அது அதிகரித்த அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டமைப்புக்குள் அதனூடாக ஒரு ஐரோப்பிய இராணுவத்திற்கான வழியைத் திறக்கும்” என அவர், “ட்ரம்ப் தேர்வைத் தொடர்ந்து வெளிவிவகாரக் கொள்கை” என்ற அத்தியாயத்தில் கூறுகிறார்.

SPD போன்றே, குறிப்பாக இடது கட்சியும், டொனால்ட் டர்ம்ப்பின் வலதுசாரி கொள்கைகளுக்கு எதிரான பரந்த அளவிலான அதிருப்தியை, சுதந்திர ஐரோப்பிய மற்றும் ஜேர்மன் வல்லரசு கொள்கைக்கான ஒரு ஆதரவாக மாற்றுவதில் முக்கிய பங்காற்றுகின்றன. வியாழனன்று, இடது கட்சி ஆதரவு செய்தித்தாளான Neues Deutschland (ND), ட்ரம்ப்பால் ஆதரிக்கப்பட்ட, கட்டாருக்கு எதிரான சௌதி அரேபியாவின் தாக்குதல் பற்றிய ஜேர்மன் வெளியுறவு அமைச்சரின் விமர்சனத்தை ஆதரித்து ஒரு கருத்தை வெளியிட்டது. “இதில் அவரது [காப்பிரியேலின்] விடாமுயற்சியானது விரும்பத்தக்கது” என்று ND எழுதியது. “ஜேர்மனிக்கு கொஞ்சமும் தேவையில்லாதது -காப்பிரியல் இது தொடர்பாக முற்றிலும் சரி– அதன் வெளிவிவகாரக் கொள்கையை ட்ரம்ப்மயமாக்கல்” என்றது.

காப்பிரியலும் ஜேர்மன் ஏகாதிபத்தியமும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் டிரம்ப்பிற்கும் ஒரு அமைதிகரமான மாற்று என இடது கட்சியால் சந்தைப்படுத்தும் முயற்சி முற்றிலும் பிரச்சாரமாகும். உண்மையில், ஜேர்மனியில் மற்றும் ஐரோப்பாவில் உள்ள செல்வந்தத்தட்டுக்கள் நீண்டகாலத்திற்கு முன்பிருந்தே வெள்ளை மாளிகையில் உள்ள வலதுசாரிக் கோடீஸ்வரருக்கு பொருத்தமாக இருந்திருக்கின்றனர். அவர்கள் உள்நாட்டில் அரசு அதிகாரத்தை மீள ஆயுதமயப்படுத்தல் மற்றும் முன்னெடுத்தல், ஒரு யுத்தத்திற்காக தயார் செய்து வருதல் ஆகியவற்றைச் செய்து வருகின்றனர்.

சோசலிச சமத்துவக் கட்சியும் (SGP) ஐரோப்பாவில் உள்ள நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) சகோதரக் கட்சிகளும் மட்டுமே இக்கண்டம் இராணுவமயமாக்கப்படுவதை நிராகரிக்கும் அதேவேளை ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் ஒரே கட்சிகளாகும். செப்டம்பரில் நடைபெறவிருக்கும் ஜேர்மன் கூட்டரசுத் தேர்தலுக்கான SGP அறிக்கை விளக்குவதாவது, ”நாம் அனைத்துவகையான ஏகாதிபத்தியக் கூட்டணிகளையும் இராணுவக் கூட்டுகளையும் நிராகரிக்கிறோம். நேட்டோவும் ஐரோப்பிய ஒன்றியமும் கலைக்கப்பட்டு அதற்குப் பதிலாக ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியம் உருவாக்கப்பட நாங்கள் போராடுகிறோம். ஜேர்மன் இராணுவ வாதத்திற்கெதிரான இந்தப் போராட்டத்தில் எங்களது கூட்டாளி ஐரோப்பிய, அமெரிக்க மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கமாகும்.”