ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

European Union summit agrees to “historic” military build-up

ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு "வரலாற்றளவிலான" இராணுவ ஆயத்தப்படுத்தலுக்கு உடன்படுகிறது

By Johannes Stern
24 June 2017

கடந்த வார தொடக்கத்தில் பிரிட்டன் வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்ததைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகள் ஒன்றியத்தை ஓர் இராணுவ மற்றும் பாதுகாப்பு ஒன்றியமாக மாற்றுவதற்கு வேகமாக நகர்ந்து வருகின்றன. புரூசெல்ஸில் வியாழன் மற்றும் வெள்ளியன்று நடந்த ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இராணுவமயமாக்கலை நோக்கமாக கொண்ட நீண்டகால நடவடிக்கைகள் மையமாக இடம் பெற்றிருந்தன.

ஐரோப்பிய கவுன்சிலின் உத்தியோகபூர்வ வலைத் தள தகவல்களின்படி, ஏனைய விடயங்களோடு சேர்ந்து, “ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை பலப்படுத்துவதற்கு பரந்த மற்றும் இலட்சியார்த்த நிரந்தர பாதுகாப்பு கூட்டுறவு அமைப்பை (PESCO) ஸ்தாபிக்க" உடன்பாடு எட்டப்பட்டது. மூன்று மாதங்களுக்குள், அரசாங்கங்கள் "உறுதியான சாத்தியத்திறன் கொண்ட திட்டங்களுடன் சேர்ந்து, தகுதிவகைகள் மற்றும் கடமைப்பாடுகளுடன் கூடிய ஒரு கூட்டு பட்டியலை உறுதிச் செய்யும்.” “உயர்மட்ட தேவைகளுக்கேற்ற நடவடிக்கைகளும்" இதில் உள்ளடங்கி இருக்கும், ஐரோப்பிய "போர்ப்படை பிரிவுகளை" கொண்டு இராணுவ தலையீடுகள் என்பதே இதன் அர்த்தமாகும்.

ஏற்கனவே இம்மாத தொடக்கத்தில், ஐரோப்பிய ஒன்றியம் படைத்துறைசாரா மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கான ஒரு கூட்டு கட்டளை மையத்தை நிறுவவும், ஐரோப்பிய ஆணைக்குழுவிற்கு பல பில்லியன் யூரோ பாதுகாப்பு நிதி வழங்கவும் உடன்பட்டது. “பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு மீது ஐரோப்பிய கவுன்சிலின் தீர்மானங்கள்" என்று தலைப்பிட்ட உச்சிமாநாட்டு ஆவணம் ஒன்று இந்த நகர்வை வரவேற்றதுடன், “அதன் விரைவான பயன்பாட்டையும் எதிர்பார்க்கிறது.” “போட்டித்தன்மை கொண்ட, புதிய தொழில்நுட்பங்களுடன் […] ஐரோப்பிய பாதுகாப்பு தொழில்துறையை" கட்டமைப்பதே இதன் நோக்கமாகும்.

நேட்டோ மற்றும் அமெரிக்காவிலிருந்து சுதந்திரமாக, அவசிப்படும் போது, இராணுவரீதியில் தலையீடு செய்வதற்கும் மற்றும் போர் தொடுப்பதற்கும் தகைமை கொண்ட ஒரு பலமான வல்லரசாக ஐரோப்பிய ஒன்றியத்தை அபிவிருத்தி செய்வதே இந்நடவடிக்கைகளின் இலக்காக உள்ளது.

ஜூன் 7 அன்று ஐரோப்பிய ஆணைக்குழு வெளியிட்ட "ஐரோப்பிய பாதுகாப்பின் எதிர்காலம் மீதான பிரதிபலிப்பு ஆவணம்" என்ற ஒன்று குறிப்பிடுகிறது, “ஐரோப்பிய கண்காணிப்பை மேம்படுத்துவதற்கு எல்லாவற்றிற்கும் மேலாக ஐரோப்பியர்களே பொறுப்பாகிறார்கள். சொல்லப்போனால் ஆதாரவளங்கள் இருக்கின்றன: ஒட்டுமொத்தமாக எடுத்துப்பார்த்தால், ஐரோப்பிய சக்திகளின் இராணுவ செலவுகள் உலகிலேயே இரண்டாவது அதிகபட்சமாகும் […] நமது பங்காளிகளுடன் கூட்டுறவும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சாதகமான தீர்வுகளும் வழக்கம் போல் இருக்கும் என்றாலும், அவசியப்படும் போது நாம் தனித்து செயல்பட கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டது.

ஆகவே ஐரோப்பாவின் இராணுவ ஆயத்தப்படுத்தல் அமெரிக்காவின் போரிடும் தகைமைகளுக்கு எதிராக அளவிடப்பட்டு வருகிறது. ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு தலைவர் ஜோன்-குளோட் ஜூங்கர் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் உடன் ஒரு கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறுகையில், “பாதுகாப்பு நிதியம் அவசியம். ஐரோப்பாவில் நம்மிடம் 130 விதமான ஆயுத அமைப்புகள் உள்ளன, அதேவேளையில் அமெரிக்காவிடம் 30 மட்டுமே உள்ளது. ஐரோப்பாவில் நம்மிடம் 17 விதமான டாங்கிகள் உள்ளன, அமெரிக்காவிடம் 1 ரகம் தான் உள்ளது. நாம் அமெரிக்காவின் இராணுவ வரவு-செலவு கணக்கில் பாதியைத் தான் செலவிட்டு வருகிறோம் என்றாலும், நமது திறன் 15 சதவீதமாக உள்ளது… ஆகவே அதை அபிவிருத்தி செய்வதற்கான இடம் உள்ளது, அதைத்தான் இன்று நாம் முடிவெடுத்துள்ளோம்,” என்றார்.

அனைத்திற்கும் மேலாக ஐரோப்பாவின் வேகமான இராணுவமயமாக்கத்திற்கு ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு அரசாங்கங்களால் அழுத்தமளிக்கப்பட்டு வருகின்றன. “இதுதான் நாம் உடன்பட்டுள்ள நிஜமான கூடுதல் மதிப்பு,” என்று புரூசெல்ஸில் எட்டப்பட்ட பாதுகாப்பு திட்டத்திற்கு விடையிறுப்பாக ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் உணர்ச்சி பொங்கி தெரிவித்தார். “ஏனென்றால் சான்றாக, இராணுவ தரப்பில் இருந்து மட்டுமல்ல, மாறாக அரசியல் தீர்வுகள் மற்றும் அபிவிருத்தி கூட்டுறவுகளுக்கான சாத்தியக்கூறுகளையும் நாம் உள்ளடக்கி உள்ள ஆபிரிக்காவில், நமது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கேற்ப இது நம்மை நிலைநிறுத்துகிறது,” என்றார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அத்தீர்மானங்களை "வரலாற்று முக்கியத்துவம் மிக்கதாக" அறிவித்தார். “பல ஆண்டுகளாக அங்கே பாதுகாப்புத்துறையில் எந்த முன்னேற்றமும் இல்லை, இன்று அது ஏற்பட்டுள்ளது,” என்றவர் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார். அதேநேரத்தில் அவர், ஐரோப்பிய ஒன்றியத்தின் மறுஒழுங்கமைப்பிற்கான பாரீஸ்-பேர்லினின் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டார். “நாங்கள் ஜேர்மனியுடன் கைகோர்த்து செயல்படுவோம்,” என்றார்.

அந்த உச்சிமாநாட்டின் முடிவில், மேர்க்கெலும் மக்ரோனும் ஒரு கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்ததன் மூலமாக ஊடகங்களுக்கு முன்னால் ஓர் ஐக்கிய முன்னணியைக் காட்டினார்கள். மேர்க்கெல் அந்த உச்சிமாநாட்டை "உறுதிப்பாடு மற்றும் வலிமையின் கூட்டமாக" வர்ணித்தார். மக்ரோன் அறிவிக்கையில், “உலகளாவிய சவால்களுக்கு இடையே, ஐரோப்பா எங்களின் சிறந்த பாதுகாப்பாக உள்ளது,” என்றார். பிரெஞ்சு ஜனாதிபதி இதன் மூலம் நிச்சயமாக ரஷ்யாவை குறிப்பிடவில்லை, ஐரோப்பிய ஒன்றியம் ஆறு மாதங்களாக ரஷ்யாவிற்கு எதிராக அதன் தடையாணைகளை நீடித்துள்ளது, மாறாக அமெரிக்காவை குறிப்பிட்டார். காலநிலை மாற்ற பாரீஸ் உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா விலகுவதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததன் மீது ஒரு கண் வைத்து, மக்ரோன் குறிப்பிடுகையில் அந்த உடன்படிக்கைக்கு பலமான ஆதரவிருப்பதாக தெரிவித்தார்.

அந்த உச்சிமாநாட்டின் ஒரு பகுதியில் பங்கு வகித்திருந்த பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரேசா மே ஐ சாடுவதற்கு ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் தயங்கப் போவதில்லை. பிரிட்டன் வெளியேறியதற்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களின் உரிமைகள் சம்பந்தமாக மே முன்மொழிந்த கருத்து குறித்து டஸ்க் கூறுகையில், “ஐக்கிய இராஜ்ஜியத்திடம் இருந்து வந்துள்ள முதல் முன்மொழிவு நமது எதிர்பார்ப்புகளுக்கு போதுமானதாக இல்லை என்பதே எனது முதல் கருத்து,” என்றார்.

இலண்டனுக்கான விட்டுக்கொடுப்புகளை பேர்லின் மற்றும் புரூசெல்ஸ் ஏற்றுக்கொள்ளாது ஏனென்றால் அக்கண்டத்தில் அரசியல் மற்றும் பொருளாதார முரண்பாடுகள் ஆழமடைந்து வரும் நிலைமைகளின் கீழ் அவை ஐரோப்பிய ஒன்றியத்தின் உடைவை மட்டுமே தீவிரப்படுத்தும். “ஜேர்மன்-பிரெஞ்சு இன் இரட்டை தலைமை மீது எல்லோரும் திருப்தி அடைந்துவிடவில்லை,” என்று Süddeutsche Zeitung எழுதியது. கிழக்கு ஐரோப்பிய கோட்டை (Vyšehrad) நாடுகள் மீண்டுமொருமுறை எந்தவொரு அகதிகளையும் ஏற்க மறுத்தன, மேலும் அங்கே வர்த்தக கொள்கை மீது "அதிருப்திகரமான" குற்றச்சாட்டுக்களும் உள்ளது. நெதர்லாந்து, அயர்லாந்து மற்றும் ஏனைய நாடுகள் சுதந்திர வர்த்தகத்தை ஆதரிக்கின்ற அதேவேளையில், மக்ரோன் பாதுகாப்புவாத நடவடிக்கைகளுக்கும், “பாதுகாக்கும் ஐரோப்பாவிற்கும்" அழைப்புவிடுத்து வருகிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற்போக்குத்தன்மை முன்பினும் தெளிவாக வெளிப்பட்டு வரும் நிலையில், அதற்கு ஆதரவு திரட்டுவதற்கான ஆளும் வர்க்கத்தின் பிரச்சாரம் மிகவும் அர்த்தமற்றதாக மாறி வருகிறது. அந்த உச்சிமாநாட்டிற்கு முன்னதாக பல முன்னணி ஐரோப்பிய பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட பேட்டி ஒன்றில், மக்ரோன் குறிப்பிடுகையில் "சுதந்திரம்" மற்றும் "ஜனநாயகத்தைப்" பாதுகாப்பதில் ஐரோப்பாவிற்கு ஒரு "சிறப்பு பாத்திரம்" உண்டு என்றார். “ஜனநாயகம் நமது கண்டத்தில் தான் உருவானது,” மக்ரோன் தெரிவித்தார். “நம்மைப் போலவே, அமெரிக்காவும் சுதந்திரத்தை விரும்புகிறது—ஆனால் அது நமது நியாயமான உணர்வை பகிர்ந்து கொள்வதில்லை,” என்றார்.

முதலாளித்துவ ஐரோப்பா "நீதி மற்றும் சமாதானத்தை" உருவாக்கவில்லை, மாறாக, முதலாளித்துவ அமெரிக்காவை போலவே, தேசியவாதம், சமூக எதிர்புரட்சி, பொலிஸ் அரசு நடவடிக்கைகள் மற்றும் போருக்கான களத்தை அமைத்து வருகிறது என்பது மக்ரோனுக்கு நன்றாகவே தெரியும். ஐரோப்பிய ஒன்றியம் கட்டளையிட்ட சிக்கன நடவடிக்கைகள் கிரீஸ் போன்ற ஒட்டுமொத்த நாடுகளையும் தரிசாக்கி உள்ளதுடன், மில்லியன் கணக்கானவர்களை வறுமையில் மூழ்கடித்துள்ளது. புரூசெல்ஸில் பலப்படுத்தப்பட்ட “ஐரோப்பிய கோட்டை" கொள்கையால் அகதிகள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல், மத்திய தரைக்கடலை ஒரு பாரிய சவக்குழியாக மாற்றியுள்ளது. பிரான்சில் வியாழனன்று அவசரகால நிலையை நீடித்துள்ள மக்ரோனின் மந்திரிசபை, தொழிலாள வர்க்கம் மீதான பெரும் தாக்குதல்களுக்கு தயாரிப்பு செய்து வருகிறது.

“சமாதானமான ஐரோப்பிய பலம்" குறித்த பிரச்சாரமானது, அனைத்திற்கும் மேலாக, 20 ஆம் நூற்றாண்டில் இரண்டு முறை அக்கண்டத்தை சீரழித்த ஜேர்மன் இராணுவவாதம் மீண்டுமொருமுறை வளர்ந்து வருவதுடன் அதன்கீழ் ஐரோப்பாவை அணிதிரட்ட முயன்று வருகிறது என்ற உண்மையால் அம்பலப்பட்டுள்ளது. பிரிட்டன் வெளியேறுவது, அதிகரித்து வரும் அட்லாண்டிக் நாடுகளுக்கு இடையிலான பதட்டங்கள் மற்றும் புதிய பிரெஞ்சு அரசாங்கத்துடனான கூட்டுறவு ஆகியவற்றை பேர்லின் அதன் பொருளாதார மற்றும் அரசியல் மேலாளுமையை ஐரோப்பாவில் விரிவாக்கி, அதிகரித்தளவில் இராணுவரீதியில் மேலாதிக்கம் செலுத்துவதற்கான ஒரு சரியான சந்தர்ப்பமாக பார்க்கிறது.

“ஜேர்மனி மட்டுமல்ல, நெதர்லாந்து, செக் குடியரசு அல்லது இத்தாலி என நம்மில் யாருமே நமக்கென சொந்த பிரத்யேக தேசிய பாதையை எடுக்க விரும்பவில்லை,” என்று அந்த உச்சிமாநாட்டிற்கு முன்னதாக ஆயுதப்படைகளுக்கான நாடாளுமன்ற கண்காணிப்புக்குழு தலைவர் ஹன்ஸ்-பீட்டர் பார்டெல்ஸ் (Hans-Peter Bartels) தெரிவித்தார். சிறிய இராணுவ நாடுகளது கொள்கை கைவிடப்பட்டு, நேட்டோவின் பாகமாக ஐரோப்பா ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்றவர் தொடர்ந்து கூறினார். “இறுதியில், அங்கே ஓர் ஐரோப்பிய இராணுவம் இருக்கும்,” என்று பார்டெல்ஸ் அறிவித்தார். இதற்காக, “ஒவ்வொரு அடியும் சரியான திசையில் இருக்க வேண்டியது முக்கியமாகும்,” என்றார்.

நேட்டோவில் உள்ள ஐரோப்பிய அங்கத்துவ நாடுகளது படைகளைப் பலமாக ஆயுதமயப்படுத்தி, ஜேர்மனியின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு வடிவமைப்புகளுக்குள் ஒருங்கிணைத்து, ஜேர்மன் படையை அவற்றிற்கான ஒரு "தலைமை படையாக" ஸ்தாபிக்கும் உறுதியான திட்டங்கள் மீது ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சகம் தொழில்பட்டு வருகிறது. ஜேர்மனி, ருமேனியா மற்றும் செக் குடியரசும் பெப்ரவரியில் அவற்றின் இராணுவப் படைகளுக்கு இடையே நெருக்கமான கூட்டுறவை பேணுவதற்கான கூட்டுறவு உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டன. ஏற்கனவே டச் இராணுவம் அதன் படைப்பிரிவுகளில் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கை ஜேர்மன் இராணுவ கட்டளை வடிவங்களுக்குள் ஒருங்கிணைத்துள்ளது. புதிய நீர்மூழ்கிக்கப்பல்களை கட்டமைப்பதற்காக புதனன்று ஜேர்மன் மந்திரிசபை நோர்வே உடனான ஓர் உடன்படிக்கையை இறுதி செய்தது.