ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Over 150 dead and half a million displaced in Sri Lankan floods

இலங்கை வெள்ளத்தில் 150க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்

By our correspondents 
29 May 2017

கடந்த வாரம் இலங்கையை தாக்கிய பருவ மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக 150 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் 100க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ கணக்குப்படி தீவின் 22 மாவட்டங்களில் 15 மாவட்டங்களில் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இது 2003ன் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட மோசமான வெள்ளமாகும். அப்போது 260 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

மழை வீழ்ச்சி பாரிய அளவிலானது. களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளில் 553 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. களனி கங்கை, கின் கங்கை, நீல்வாலா கங்கை மற்றும் கலு கங்கை போன்ற பெரிய ஆறுகளின் கறைகள் கடந்து வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. பல இடங்களில் தண்ணீர் வீடுகளின் கூரைக்கு மேலே உயர்ந்துள்ளன. வானிலை ஆய்வு திணைக்களமானது கணிசமான மழை மற்றும் வலுவான காற்றும் வரும் நாட்களில் தொடரும் என கணித்துள்ளது.

கடுமையான பருவ மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்கின்றது. எனினும் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் எந்தவொரு தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளை அல்லது அவசர செயற்பாடுகளை உருவாக்க தவறிவிட்டன.

தற்போதைய அரசாங்கம் சமீபத்திய பேரழிவுக்கு முதலைக் கண்ணீரோடு பிரதிபலித்ததுடன் கடற்படை, இராணுவம் மற்றும் விமானப்படை சிப்பாய்களையும் வளங்களையும் அணிதிரட்டியது.

நேற்று கொழும்பை தளமாகக் கொண்ட சண்டே டைம்ஸ் பத்திரிகை, அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஒரு கடிதத்தை மேற்கோளிட்டுள்ளது. இந்த அமைச்சுக்கு போர்வைகள், பாதுகாப்பு ஜாக்கெட்டுகள், குடைகள் மற்றும் டோர்ச்கள் போன்ற ஏராளமான அடிப்படை பொருட்கள் பற்றாக்குறையாக உள்ளது என்று அது ஒப்புக் கொண்டது. சுகாதார அமைச்சின் பேச்சாளர் ராஜித சேனாரட்ன, அமெரிக்காவின் சமீபத்திய வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ள அமெரிக்க அரசாங்கமும் தயாராக இருக்கவில்லை என்று அறிவித்ததன் மூலம், அரசாங்கத்தின் மோசமான பிரதிபலிப்பை நியாயப்படுத்த முயன்றார்.

பேரழிவு நிவாரணத்திற்காக அரசாங்கம் வெறும் 150 மில்லியன் ரூபாவை (சுமார் 1 மில்லியன் அமெரிக்க டொலர்) ஒதுக்கீடு செய்துள்ளதோடு, பின்னர் இறப்புக்கள் மற்றும் சொத்து சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதாக அறிவித்ததுள்ளது. கொழும்பின் அவசரகால நிவாரணமானது, அரசாங்க அமைச்சர்களுக்கு புதிய சொகுசு வாகனங்களுக்கான ஒதுக்கீட்டில் அரைவாசி கூட இல்லை.

தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் பெருகி வரும் அதிருப்தியை பற்றி விழிப்படைந்துள்ள ஜனாதிபதி சிறிசேன மற்றும் பிரதமர் விக்கிரமசிங்கவும் பேரழிவு பற்றி கவலை தெரிவித்தனர். உத்தியோகபூர்வ சுற்றறிக்கைகளை புறக்கணித்துவிட்டு உடனடியாக நிவாரண நடவடிக்கைகளுக்காக நிதிகளை சேகரிக்குமாறு களுத்துறையில் நடந்த உயர் அதிகாரிகளின் கூட்டமொன்றில் சிறிசேன அறிவித்தார்.

எவ்வாறாயினும், இத்தகைய உத்தியோகபூர்வ கவலைகள் பெருமளவில் வழக்கமானதாக ஆகியுள்ளதால், அவை சாதாரண இலங்கையர்கள் மீது மிகக் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளன. 2004 டிசம்பரில் ஆசிய சுனாமியால் இலங்கையில் மட்டும் சுமார் 40,000 பேர் கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் எவ்வித வீடுகளும் இல்லாமல் விடப்பட்டனர். அதேபோல், கேகாலை மாவட்டத்தில் ஆராணக்கல்லில் 2016 மே ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் இன்னமும் தற்காலிக குடிசையில் வாழ்ந்து வருகின்றனர். அந்த பேரழிவில் 120 க்கும் மேற்பட்டவர்கள் உயிருடன் புதைக்கப்பட்டனர்.


தண்ணீரின் கீழே வீடுகள்

உண்மையில், அரசாங்கம் "சட்டவிரோத கட்டிடங்கள்" அகற்றப்பட வேண்டும் என்று நெருக்குவதற்காக கொழும்பில் உள்ள தாழ்வான பகுதிகளில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை பயன்படுத்திக்கொள்கின்றது. மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க, இந்த குடிசை வீடுகள் மற்றும் பிற குடியிருப்புக்களும் கால்வாய்களை மற்றும் நீர்வழிகளை தடுக்கின்றன” என்றார். வீடுகள் சட்ட விரோத கட்டுமானங்களாக இருப்பதால் இழப்பீட்டுத் தொகைகள் ஒரு பிரச்சினை அல்ல என்றும் அவர் கூறினார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ரணவக்கவின் அபிவிருத்தி அமைச்சு, முந்தைய நிர்வாகங்கள் போலவே, கொழும்பை தெற்காசியவின் ஒரு வர்த்தக மையமாக மாற்றுவதற்கான முயற்சியில் முன்னெடுக்கப்படும் மெகாபோலிஸ் திட்டம் என அழைக்கப்படுவதற்காக குறிக்கப்பட்டுள்ள பிரதேசங்களை துப்புரவாக்குவதன் பேரில், தலை நகரில் உள்ள ஏழைகளை விரட்டுவதற்கு இந்தப் பேரழிவைப் பயன்படுத்துகிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அவசர நிவாரண கப்பல்களையும் சிப்பாய்களையும் அனுப்பியுள்ளன. இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமான அரசியல் உறவுகளை எதிர்பார்க்கும் இந்தியா, இரண்டு கப்பல்களை அனுப்பியது. தொலைக்காட்சி செய்திகளின் படி, இந்திய கடற்படை சிப்பாய்கள் மீட்பு நடவடிக்கைகளிலும் நிவாரண பொருள் விநியோகிப்பதிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள், பல இடங்களுக்கு சென்றிருந்தனர், அங்கு மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் சாதாரண மக்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர நிவாரணம் வழங்க முயற்சித்துக்கொண்டிருந்தனர். நிலச்சரிவுகளின் ஆபத்து காரணமாக பல கிராமவாசிகள் பிரதேசங்களை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அவசரகால தங்குமிடத்துக்காக அவர்கள் எங்கு வரவேண்டும் என அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

71 பேர் கொல்லப்பட்ட இரத்தினபுரி மாவட்டம் நிலச்சரிவுகளால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. எஹலியகொட அருகிலுள்ள மாலிகாகந்தையில் பன்னிரண்டு கிராமவாசிகள் உயிருடன் புதைக்கப்பட்டனர்.

மீனியாகம கிராமத்தினர் இரண்டு பள்ளி குழந்தைகளின் உடல்களை புதைக்க உதவுகின்றனர்

மீனியாகம கிராமத்தில், இரண்டு பிள்ளைகள் மண் சரிவில் கொல்லப்பட்டனர். இந்த விபத்து இரவில் ஏற்பட்டது என்று இந்திகா செனவிரத்ன விளக்கினார். முந்தைய கிராமத்தில் இதேபோன்ற நிலச்சரிவால் அச்சுறுத்தப்பட்ட நிலையில், மேலும் 11 பேருடன் இந்திகாவின் குடும்பத்தினரும் இப்பகுதிக்கு வந்து குடிபெயர்ந்துள்ளனர். "கிராம அலுவலர் வந்து, அதிகாரிகள் அந்தப் பகுதி ஒரு பேரழிவு பிரதேசம் என்று அறிவித்துவிட்டனர், என்றார். ஆனால் ஒரு மாற்று இடமில்லாமல், எங்கு செல்ல முடியும்?" என்று இந்திகா கேட்டார்.

செனவிரட்னவும் பிற கிராமவாசிகளும் அருகிலுள்ள ஒரு மலையை காட்டினர். அதில் மரங்கள் சரியும் நிலையில் உள்ளன. "மற்றொரு நிலச்சரிவு ஏற்படும் என்று நாங்கள் பயப்படுகிறோம்," என்று அவர் கூறினார்.

நமது நிருபர்கள் தெற்கில் காலி மாவட்டத்திலிருந்து 18 கிலோமீட்டர் தூரத்தில் பத்தேகமவில் கிறிஸ்துவ தேவாலய ஆண்கள் கல்லூரிக்கு சென்றிருந்தனர். இந்த கல்லூரி இப்போது பல்வேறு கிராமங்களில் இருந்து உயிர் பிழைத்தவர்களுக்கான நிவாரண மையமாக உள்ளது. உனன்விடிய, யத்தலமத, உடுகம மற்றும் நாகியாதெனிய ஆகிய கிராமங்கள் இதில் அடங்கும். மூன்று பிள்ளைகளைக் கொண்ட ஈரான்கா பெரேரா, பெயின்ட் பூசும் தன் கணவர் சம்பாதித்த அனைத்தையும் இழந்து விட்டதாக தெரிவித்தார்.

கே. சரத் மற்றும் அவரது மனைவி மாலினி

1982 முதல் மீகாஹவத்த கிராமத்தில் வாழ்ந்த 58 வயதான கே. சரத் கூறியதாவது: "நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்தை எதிர்கொண்டிருக்கிறோம், ஆனால் எங்கள் வீடு இப்போது மூழ்கிவிட்டது, நாங்கள் இங்கே சிக்கிவிட்டோம்." கிராமவாசிகள் பாடசாலையில் இருந்து உணவையும் தண்ணீரையும் அவர்களுக்கு வழங்கியுள்ளதாக அவரது மனைவி மாலினி தெரிவித்தார். "எந்த அரசியல்வாதியும் எங்களை பார்க்கவேயில்லை," என்று அவர் கூறினார்.

களுத்துறை மாவட்டத்தில் புளத்சிங்களவில் வசிக்கும் ஒருவர் கூறியதாவது: "மே 25 இரவு எங்கள் பகுதியில் கடுமையான மழை பெய்தது. மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் மண் சரிவுகளால் வீதி போக்குவரத்து முற்றிலும் சாத்தியமற்றதாகியது. அந்தப் பகுதியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர், இந்த விஷயத்தை கவனிப்பதாக கூறினாலும், எங்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய எதுவும் செய்யப்படவில்லை.

"மீட்புப் பணிகளுக்கு வள்ளங்கள் வழங்கப்படும் என்று எங்களுக்குக் கூறப்பட்டது, ஆனால் எதுவும் நடக்கவில்லை. உலர் உணவுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் வசதிகள் இல்லாததால் அவற்றை சமைக்க முடியாது." அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களை விட உயிரிழப்புக்கள் அதிகம் என அவர் தெரிவித்தார்.

இதே மாவட்டத்தில் ரெமுன கிராமத்தில் சுமார் 30 வீடுகள் நீருக்கடியில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான அவசர விடுதிகள் கூட இல்லை. ஆண்கள் சாலையில் தூங்கிக்கொண்டிருக்கும்போது அருகிலுள்ள கடைகளில் பெண்கள் தூங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கஸுன் சமீர (21) வெள்ளிக்கிழமை வெள்ளத்தில் அடித்துச் சென்றார். அவரது சடலம் மீட்கப்படவில்லை. அவரது அத்தை, சி. கல்யாணி, குடும்பத்தினர் அவரது மரணத்தை பற்றி பொலிஸ் அதிகாரிகளிடம் கூறியும், அவர்கள் விபரங்களை மட்டுமே பதிவு செய்துகொண்டனர். "நாங்கள் அவர்களிடம் பேசிய ஒவ்வொரு முறையும், அவர்கள் இன்னமும் எந்த படகுகளும் கிடைக்கவில்லை என்றே கூறுகின்றனர். கடற்படையிலிருந்து எங்களுக்கு எந்த பதிலும் இல்லை," என அவர் கூறினார்.

காய்கறி விவசாயி அஜந்த ரோஹனா, தானும் தனது நண்பர்களும் பிரதான அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களாக இருந்ததாகவும், ஆனால் இப்போது தாம் "வெறுப்படைந்துள்ளதாகவும்" கூறினார். "ஒரு அரசியல்வாதி கூட எமக்கு உதவி செய்யவில்லை. அயலவர்கள் மட்டுமே நமக்கு உதவி செய்கிறார்கள். தேர்தல் வந்தால் அனைத்து வகையான அரசியல்வாதிகளும் இங்கே இருப்பர்," என்று அவர் கூறினார்.

மஞ்சுள சமந்திலக்க மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் வீட்டின் முன் உள்ளனர்

மஞ்சுள சமந்திலக்க, 43, ஒரு மத்திய போக்குவரத்து சபை சாரதி ஆவார். பேரழிவில் கிட்டத்தட்ட அனைத்தையும் இழந்துள்ளார். தனது பகுதியில் மக்கள் இது போன்ற பெரும் வெள்ளத்தை கண்டது இது முதல் முறை” என அவர் கூறினார். "அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன," என்று அவர் தொடர்ந்தார். "பெரும்பாலான மக்கள் புதிய அதிவேக நெடுஞ்சாலையே நீர் வெளியேறாதபடி நிறுத்திவிட்டதாக நினைக்கிறார்கள். அரசாங்கம் கால்வாய்களை கூட சுத்தமாக்குவதில்லை, வெற்று வயல்களில் பெரும்பாலானவை மண் நிரப்பப்பட்டுள்ளன. அதாவது, தண்ணீர் வடிவதற்கு இடம் இல்லை."

ஆசிரியர்கள் பரிந்துரைக்கும் கட்டுரைகள்:

Sri Lankan flood and landslide deaths continue to climb
[25 May 2016]

Sri Lankan government seeks to suppress garbage disaster protests
[25 April 2017]