ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Floods in Sri Lanka: Government responsible for another social disaster

இலங்கையில் வெள்ளம்: மற்றொரு சமூக பேரழிவிற்கு அரசாங்கம் பொறுப்பு

By the Socialist Equality Party (Sri Lanka) 
5 June 2017

இலங்கையின் உழைக்கும் மக்கள் கடந்த வாரம் மீண்டும் அழிவுகரமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்ததும், அரை மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்து துன்பப்பட்டதும், இயற்கை பேரழிவின் விளைவு அல்ல. இந்த நெருக்கடி, இலாப நோக்கு அமைப்பு முறையை பாதுகாப்பதற்காக அர்ப்பணித்துக்கொண்ட அடுத்தடுத்து ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள், சாதாரண மக்களின் வாழ்க்கையை அப்பட்டமாக அலட்சியம் செய்ததன் விளைவாகும். இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தற்போதைய அரசாங்கமும் அதில் உள்ளடங்கும்.

தென்மேற்கு பருவ மழை வீழச்சியுடன் சூறாவளியும் சேர்ந்துகொண்டதால் இந்த பேரழிவுகள் நடந்தன. அழிவு மிகப் பெரியது. இறுதியாக மரணித்தவர்களின் எண்ணிக்கை 300 ஆக இருக்கும் என இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன கடந்த வியாழனன்று அறிவித்தார்.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் நேற்று தெரிவித்த படி, 717,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 150,000 பேர் பெண்கள், 7,600 பேர் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் சுமார் 189,000 பேர் சிறுவர்கள். குறைந்தபட்சம் 25,000 மாணவர்கள் தங்கள் புத்தகங்களையும் பாடசாலை உபகரணங்ளையும் இழந்துள்ளனர். 2,300க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டு, 12,500 வீடுகள் பகுதி சேதமடைந்துள்ளன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக, பல பிரதேசங்களை நெருங்க முடியவில்லை. மொத்த சொத்து சேதம் இன்னும் கணக்கிடப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்கள் இப்போது கொசுக்களால் பரவும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி பேதி போன்ற வெள்ளம்-சார்ந்த நோய்களால் பாதிக்கப்படவுள்ளனர்.

2003ல் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை விட இம்முறை ஏற்பட்ட அழிவு மோசமானது. அப்போது 264 பேர் பலியானதுடன் 10,000 வீடுகள் அழிக்கப்பட்டன. பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் தேயிலை மற்றும் இரப்பர் தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சிறு விவசாயிகள். அவர்கள் 1 முதல் 2 அமெரிக்க டாலர் வரையான வறிய–மட்டத்திலான வருமானத்தில் வாழ்கின்றனர். இப்போது அநேகர் அநாதரவாக்கப்பட்டுள்ளனர்.

இந்த பிரமாண்ட பேரழிவுக்கு யார் காரணம்?

தீவை வெள்ளம் தாக்குவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர்தான், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, மெக்ஸிகோவில் உள்ள கான்குன் நகரில் நடந்த "2017 இடர் குறைப்புக்கான உலக மேடை" கூட்டத்தில், எந்தவொரு பேரழிவின் தாக்கத்தையும் குறைக்க தனது அரசாங்கம் தயாராக இருக்கின்றது, என்று பகட்டாகக் கூறினார். தனது அமைச்சு, "இறப்புக்கள், உள்கட்டமைப்பு சேதங்கள் மற்றும் பொருளாதார இழப்புக்களையும் குறைப்பதற்காக" சர்வதேச தரத்திற்கு ஏற்ப, நடுத்தர மற்றும் நீண்டகால பேரழிவு ஆபத்து குறைப்பு திட்டங்களை செயல்படுத்த" திட்டமிட்டுள்ளது என கூறினார்.

"அபாத்துக்களை கையாளும் திட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு அர்ப்பணிக்கப்பட்ட நிதியுடன்" ஒரு "தேசிய செயற்திட்டம்" பற்றி யப்பா பெருமிதம் அடைந்தார். ஆயினும், எந்தவொரு ஆரம்ப எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை, பேரழிவிற்கு முன்னர் அல்லது அதை அடுத்து உடனடியாக மக்களை வெளியேற்றுவதற்கான எந்த திட்டமும் மேற்கொள்ளப்படவில்லை. இடம்பெயர்ந்த மக்களுக்கான அடிப்படை தேவைகள் கிடைக்கவே இல்லை.

பெரும் மழையை பற்றி புலம்பிய பின்னர், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களின் அமைச்சர்கள், மக்கள் மீது தமது தாக்குதலை திருப்பினர். அதிகாரிகளின் முன்கூட்டிய எச்சரிக்கைகளை மக்கள் கவனிக்கவில்லை என்றும், சட்டவிரோத கட்டிட நிர்மாணங்களே வெள்ளத்துக்கு அடிப்படை காரணம் என்றும் அவர்கள் கூறினர்.

 

 

இந்த பிரச்சாரம் வஞ்சக நோக்கம் கொண்டது. சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் திட்டத்தை விரிவாக்கியுள்ளது. கொழும்பை தெற்காசியாவின் ஒரு வர்த்தக மற்றும் நிதி மையமாக மாற்றுவதும், முழு மேல் மாகாணத்தையும் உள்ளடக்கும் ஒரு மாநகர திட்டத்தை முன்னெடுப்பதுமே இந்த திட்டமாகும். அரசாங்கம் முழு நாட்டையும் வணிக நோக்கங்களுக்காக கட்டியெழுப்ப திட்டமிட்டுள்ளதுடன், ஒழுக்கமான மாற்று வீடுகள் அல்லது வாழ்வாதாரங்களை வழங்கப்படாத ஏழைகளை அகற்றுவதன் மூலம் நிலங்களை அபகரிக்க முனைகின்றது.

சட்டவிரோத கட்டிடங்களுக்கு தண்டனைகள் வழங்குவதற்காக 100 ஆண்டுகள் பழமையான வெள்ள முகாமைத்துவ சட்டத்தை அரசாங்கம் மாற்றியமைக்கும் என அமைச்சர் யாப்பா தெரிவித்தார். "தலைநகரில் உள்ள 10,000 உட்பட அனைத்து சட்டவிரோத கட்டிடங்களும் தகர்க்கப்படும்," என்று அவர் கூறினார்.

முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரானது அல்லாத சண்டே டைம்ஸ், நேற்று, அதன் "உரிமைகள் மீது குவிமையப்படுத்தல்" என்ற கட்டுரையில், "எங்களுக்கு மிகவும் தெளிவாக இருப்போம். பிரச்சினை சட்டம் அல்ல. இது அரசியல் தலைமையின் மிகுந்த துன்பகரமான தகுதியற்ற பண்பு மற்றும் மிகவும் குறிப்பாக அனர்த்த முகாமைத்துவத்துக்கு பொறுப்பானவர்களின் அறிவு கோளாறு பற்றிய பிரச்சினை ஆகும்," என அறிவித்துள்ளது.

பிரதானமாக ஏழைகளுக்கு எதிராக, "சட்டவிரோத நிர்மாணங்களை" தகர்க்குமாறு கட்டளையிடும் அதே வேளை, சிறிசேன பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, முதலை கண்ணீர் வடித்ததோடு நிவாரண வேலைகளை துரிதப்படுத்துமாறு அவரது அமைச்சர்களுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் பணித்தார். அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக கூறும் அதேவேளை, இலங்கை மத்திய வங்கியானது கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு மூன்று மாத "சலுகை காலத்தை" அறிவித்துள்ளது.

வெள்ளப் பேரழிவு மக்கள் மத்தியில் பரவலான கோபத்தை அதிகரிக்கும் என்று அரசாங்கம் அஞ்சுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கை திட்டத்தை செயல்படுத்துகையில், உழைக்கும் மக்கள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் ஏற்கனவே தங்கள் வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகளின் மீதான அரசாங்கத்தின் தாக்குதலுக்கு எதிராக போராடி வருகின்றனர்.

இத்தகைய பேரழிவிற்கு பின்னர் நிரந்தரமாக அனாதைகளாகவது பற்றி மக்கள் நியாயமான அச்சங்களை வெளிப்படுத்துகிறார்கள். டிசம்பர் 2004ல் ஆசிய சுனாமியே அவர்கள் சந்தித்த மிக மோசமான "இயற்கைப் பேரழிவு" ஆகும். அதில் சுமார் 40,000 பேர் கொல்லப்பட்டதுடன் ஆயிரக்கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டன. அதிகளவான சிறுவர்கள் அனாதைகளாக்கப்பட்டதுடன் அவர்களுக்கு உதவி கிடைக்கவில்லை.

சமீபத்திய பேரழிவிற்கு ஐந்து வாரங்களுக்கு முன்னர், கொழும்பின் புறநகர் பகுதியில் உள்ள மீத்தொடமுல்லவில் குப்பை மலை சரிந்ததில் 32 பேர் கொல்லப்பட்டதுடன் சுமார் 1,000 பேர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

ஒரு வருடத்துக்கு முன்பு, கொழும்பிற்கு அருகே உள்ள இராணுவ ஆயுதக் களஞ்சிய முகாமில் ஏற்பட்ட வெடிப்பு டசின் கணக்கான குடியிருப்பாளர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியது.

கடந்த சில ஆண்டுகளில், பல நிலச்சரிவு சம்பவங்கள், பெருந்தொகை உயிர்களை பலியெடுத்துள்ளன.

இந்த அனைத்து பேரழிவுகளுக்கும் விதிவிலக்கின்றி முதலாளித்துவமே நேரடிப் பொறுப்பாகும். ஆளும் வர்க்கமும் அதன் அரசாங்கங்களும் இப்பொழுதும் எப்பொழுதும் தொழிலாளர்கள் மற்றும் வறியவர்கள் எதிர்கொண்டுள்ள சமூக மற்றும் ஜனநாயக பிரச்சினைகளில் எதையும் எதிர்கொள்வதற்கு இயலாயக்கற்றவை என்பதை நிரூபித்துள்ளன.

சமீபத்திய பேரழிவு பற்றி எச்சரிக்கை செய்ய அரசாங்கம் ஏன் டொப்ளர் ராடர்களை வாங்கவில்லை? என்ற கேள்வியை கேட்பது நியாயமானது. உண்மை என்னவென்றால், அரசாங்கத்துக்கு மக்கள் மீது எந்த அக்கறையும் கிடையாது.

இலங்கை ஆளும் உயரடுக்கு, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக 30 ஆண்டுகால இனவாத யுத்தத்தை முன்னெடுத்தது. முதலாளித்துவ ஆட்சியை பாதுகாக்க மற்றும் உழைக்கும் மக்களையும் இளைஞர்களையும் நசுக்குவதற்காக இராணுவத்துக்கு ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான ரூபாய்களை செலவு செய்தது. தற்போதைய மட்டுப்படுத்தப்பட்ட சமூக செலவினங்களையும் வெட்டும் அதேவேளை, அது இன்னமும் இராணுவத்திற்கு ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 16 சதவீதத்தை செலவழித்து வருகிறது. இந்த ஆளும் வர்க்கம் இலாப நோக்கு அமைப்பு முறையை பாதுகாப்பதற்காக அர்ப்பணித்துக்கொண்டுள்ளதுடன் சர்வதேச மூலதனத்திற்காக சேவையாற்ற நிற்கிறது.

தீவில் தங்கள் புவிசார் அரசியல் செல்வாக்கை வலுப்படுத்துவதற்கும் ஏனைய சக்திகள் இலங்கையின் துயரத்தை பயன்படுத்தி வருகின்றன. இந்திய அரசாங்கம் உடனடியாக மூன்று கடற்படை கப்பல்களை 300 பணியாளர்களுடனும் சிறிய படகுகளுடனும் "நிவாரண முயற்சிகளுக்காக" உதவ அனுப்பியது. இந்தியாவின் நெருக்கமான பங்காளியும் சீனாவின் ஒரு மூலோபாய போட்டியாளருமான இந்தியா, கொழும்புடன் நெருக்கமான உறவுகளை நாடுகிறது. கொழும்புடன் இராணுவ மற்றும் அரசியல் உறவுகளை ஆழமாக்குகின்ற வாஷிங்டன், 350 மில்லியன் ரூபா என்ற அற்ப உதவித் தொகையாக அறிவித்துள்ளதுடன், துப்புரவாக்குவதற்கு உதவியாளர்களையும் சிப்பாய்களையும் அனுப்பியது. சீனா மூன்று கடற்படை கப்பல்களையும், அதே போல் சிறிய படகுகளையும் மருத்துவ குழுக்களையும் அனுப்பியது.

குறிப்பிடத்தக்க வகையில், ஊடகங்களின் உதவியுடன், அரசாங்கம் மக்களின் மீட்பராக இராணுவத்தை ஊக்குவிக்கிறது. இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையும் ஆயிரக்கணக்கான படையினரை மீட்பு பணிக்காக அனுப்பின. இதற்கு ஒரு திட்டவட்டமான நோக்கம் உண்டு. தீவின் நீண்டகால யுத்தத்தின் போது அதன் போர் குற்றங்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்துகின்றமையினாலும் இராணுவம் அவப்பேறுபெற்றுள்ளது -2013ல் ரதுபஸ்வலவில் நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தின் மீது படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டனர். தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் வருங்கால போராட்டங்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு, அரசாங்கம் ஆயுதப் படைகளுக்கு மனிதாபிமான முகத்தைக் கொடுக்க விரும்புகிறது.

கடும் மழையின் போதும் அதன் பின்னரும், சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவு காட்டி அவர்களை காப்பாற்றி, பாதுகாப்பான இடங்களில் அவர்களை வைத்து நிவாரணமும் வழங்கினர். தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் இந்த துயர சம்பவங்களிலிருந்து படிப்பினைகளைக் கற்க வேண்டும். ஆளும் வர்க்கத்தின், அதன் அரசாங்கங்களின் எந்தவொரு பிரிவினரும் இந்த பிரச்சினைகளை தீர்க்கப் போவதில்லை. உழைக்கும் மக்கள் பிரச்சினைளை தங்கள் சொந்த கையில் எடுக்க வேண்டும். அவர்களின் உண்மையான நண்பர்கள், உலகம் முழுதும் உள்ள வர்க்க சகோதர சகோதரிகளே.

முதலாளித்துவ ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவுடன் தொழிலாள வர்க்கம் ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஆட்சியைக் கைப்பற்றினால் மட்டுமே பெரும்பான்மை மக்களின் நலனுக்காக பொருளாதாரத்தை பகுத்தறிவான, விஞ்ஞானபூர்வமான முறையில் திட்டமிடப்படுவதை உறுதிப்படுத்தப்பட முடியும். சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தில் தொழிலாளர் மற்றும் இளைஞர்களை அணிதிரட்டுவதன் மூலம், தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.

தொழிலாள வர்க்கத்தின் ஒரு வெகுஜனக் கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியை (சோ.ச.க.) கட்டியெழுப்புவதே இந்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கான உடனடித் தேவை ஆகும்.