ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India’s boycott of China’s Belt and Road summit highlights deepening tensions

சீனாவின் ஒரே இணைப்பு, ஒரே பாதை அமைத்தல் உச்சிமாநாடு குறித்த இந்திய புறக்கணிப்பு, ஆழமடைந்துவரும் பதட்டங்களை வெளிச்சத்தில் காட்டுகிறது.

By Wasantha Rupasinghe  
29 May 2017

மே 14-15 ல் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒரே இணைப்பு, ஒரே பாதை (One Belt, One Road - OBOR) கருத்தரங்கை புறக்கணிப்பது என்ற இந்தியாவின் தீர்மானம், இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே, அதிகரித்துவரும் பூகோள-அரசியல் அச்சுறுத்தல்களை அடிக்கோடிட்டுக்காட்டுகிறது, அது வாஷிங்டனுடன் புது தில்லியின் வளர்ந்துவரும் உறவுகளுடன் பெரும்பாலும் பிணைக்கப்பட்டுள்ளது. 

2013 ல் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மூலம் ஆரம்பிக்கப்பட்ட OBOR திட்டத்தின் சர்வதேச அளவிலான தொடக்கமாகவே இந்த கருத்தரங்கம் இருந்தது. மத்திய காலத்தின் பட்டுச்சாலை வரலாற்றைத் தூண்டும் வகையில், OBOR, சீனா மற்றும் ஐரோப்பாவின் முக்கிய பொருளாதார மையங்களை இணைக்கக்கூடிய துறைமுகங்கள், இரயில்வே பாதைகள், சாலைகள், குழாய்வழிகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றை கட்டமைக்கவேண்டுமென கருதுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (BJP) அரசாங்கத்தின் கீழ், சீனாவிற்கு எதிரான அமெரிக்க இராணுவ மூலோபாய தாக்குதலுடன் இந்தியாவும் அதிகரித்தளவில் அணிவகுத்து நிற்கின்றது.

கடந்த ஆகஸ்ட் மாதம், அமெரிக்க போர் விமானங்களும், போர் கப்பல்களும் இந்தியாவின் விமான தளங்கள் மற்றும் துறைமுகங்களை பயன்படுத்த ஏதுவாக அவற்றை திறந்துவைத்ததன் மூலம், சீனாவிற்கு எதிரான அமெரிக்க யுத்த தயாரிப்புகளில் இந்தியாவை ஒரு மெய்யான “முன்னணி அரசாக” மோடி ஆட்சி மாற்றியது. இந்த வகையில், சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர் திட்டங்களின் மையமாக இருக்கும் அமெரிக்காவின் ஏழாவது கடற்படை தொகுப்பின் கப்பல்கள், ஒரு இந்திய கப்பல் கட்டும் துறைமுகத்தில் பழுது பார்த்து சேவை செய்யப்படும்.

வாஷிங்டனின் மிக நம்பகமான கூட்டாளிகளுக்கு இணையாக மேம்பட்ட அமெரிக்க ஆயுத அமைப்புக்களை புது தில்லி கொள்முதல் செய்ய அனுமதிக்கும் விதமாக, வாஷிங்டன் இந்தியாவையும் கூட ஒரு பிரதான பாதுகாப்பு பங்காளராக அறிவித்தது.

இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான இந்த நெருக்கமான உறவு, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலும், மற்றும் இந்தியாவுக்கும் அதன் வரலாற்று பரம எதிரியான பாகிஸ்தானுக்கும் இடையிலும் ஆழ்ந்த பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது. புது தில்லிக்கு அமெரிக்கா வழங்கும் “மூலோபாய உதவிகளுக்கு” விடையிறுப்பாக, பெய்ஜிங்கும், இஸ்லாமாபாத்தும் தங்களது சொந்த மூலோபாய உறவுகளை பலப்படுத்தியுள்ளன.

OBOR  முன்முயற்சியின் ஒரு முதன்மையான தொடக்கமாகவே, 50 பில்லியன் அமெரிக்க டாலர் ($US50 billion) மதிப்பிலான சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (China Pakistan Economic Corridor - CPEC) உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள, இரயில்வே, சாலைவழி மற்றும் குழாய்வழி இணைப்புக்கள், மேற்கு சீனாவை, தென்மேற்கு பலுசிஸ்தானில் பாகிஸ்தானின் புதிதாக கட்டமைக்கப்பப்பட்டுள்ள அரபியன் கடல் துறைமுகமான குவதார் உடன் இணைக்கும். “இறையாண்மை பிரச்சனைகள்” குறித்து இந்த திட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது, ஏனெனில், இந்தியாவின் ஒரு பாகமாக புது தில்லி உரிமைகோருகின்ற பாகிஸ்தான் ஆக்கிரமிப்பிலுள்ள இந்திய காஷ்மீர் பகுதியின் ஊடாக இது செல்கிறது.

பெய்ஜிங் கருத்தரங்கம் தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக, இந்திய வெளியுறவு விவகார செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே பின்வருமாறு தெரிவித்தார்: “இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு குறித்த அதன் முக்கிய கவலைகளை புறக்கணிக்கும் ஒரு திட்டத்தை எந்தவொரு நாடும் ஏற்றுக்கொள்வதில்லை.”

இந்தியாவின் நிலைப்பாட்டை நியாயபூர்வமாக்குவதற்கு ஏற்ப, “சர்வதேச விதிமுறைகள், நல்லாட்சி, சட்டத்தின் ஆளுமை, வெளிப்படைத்தன்மை மற்றும் சமத்துவம்” ஆகியவற்றை மீறுவதாகக் கூறி, சீனாவின் பிரமாண்ட திட்டம் குறித்து இந்த அறிக்கை சந்தேகத்தை எழுப்பியது. “சமூகங்களுக்கான ஒரு நீடித்த கடன் சுமையை அது உருவாக்கும்” என்று கூறப்படுவதுடன், “சீரான சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தரநிலைகள்” ஆகியவற்றை தகர்த்தெறியக்கூடியதாகவும், மேலும் “திட்டச் செலவுகள் மீதான வெளிப்படையான மதிப்பீடு” இல்லை எனவும் கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் நலிந்த பொருளாதாரத்தை CPEC பலப்படுத்தும் மற்றும் இந்திய முதலாளித்துவ வர்க்கம் அதன் மேலாதிக்கம் மற்றும் சுரண்டலுக்கான சொந்த பிராந்தியமாகக் கருதுகின்ற தெற்காசியாவில் சீனா அதன் மூலோபாய செல்வாக்கை கணிசமாக ஊக்குவிக்க அனுமதிப்பதாகவும் இருக்கும் என்பதே புது தில்லியின் உண்மையான கவலைகளாக உள்ளன.

அதே நேரத்தில், வாஷிங்டனுக்கு சார்பாக இந்தியா செயல்படுவதுடன், ஒரு போர் அல்லது நெருக்கடியின்போது இந்திய பெருங்கடல் மற்றும் தென் சீனக் கடல் பகுதிகளிலுள்ள “கட்டுப்பாட்டு புள்ளிகளை” கைப்பற்றுவதன் மூலம் சீனப் பொருளாதாரத்தை முற்றுகையிடும் விதமாக வகுக்கப்பட்ட அமெரிக்க திட்டங்களை தந்திரமாக வெல்வதற்கு, CPEC ஐ சீனாவிற்கான ஒரு வழிமுறையாகவும் இந்தியா காண்கிறது.

பெய்ஜிங் கருத்தரங்கில் இந்தியாவை பங்கேற்க செய்வதற்கான சீனாவின் முனைவுகளுக்கு மத்தியில் மே 5 அன்று அமெரிக்க பசிபிக் கடற்படை தளபதி அட்மிரல் ஸ்காட் ஸ்விஃப்ட் இந்தியாவிற்கு விஜயம் செய்தார். இந்திய அதிகாரிகளுடன் இந்த கருத்தரங்கு பற்றிய விவகாரத்தை ஸ்விஃப்ட் விவாதித்திருப்பாரோ என்று ஒரு சிறு சந்தேகம் உள்ளது. இந்திய பெருங்கடலில் சீனாவின் “அதிகரித்துவரும் பிரசன்னத்தை” இரண்டு நாடுகளுமே எதிர்கொள்ள விரும்புவதாக அவர் கூறினார்.

பொதுமக்கள் மற்றும் இராணுவத் தலைவர்களை சந்தித்த பின்னர், OBOR இன் நோக்கம் பற்றி ஸ்விஃப்ட் வெளிப்படையாக வினா எழுப்பினார். பசிபிக் பெருங்கடலில் சீன போர்கப்பல்கள் ஒரு “OBOR சுற்றுப்பயணம்” மேற்கொண்டு வருவதாக கூறியதுடன் அவர், “தற்சமயம் விடைகளை விட வினாக்களே அதிகமாகவுள்ளன” என்றும் அறிவித்தார்.

நான் விஜயம் செய்த ஒவ்வொரு நாட்டிலும், OBOR இலக்குகளின் நிச்சயமற்றத் தன்மை பற்றி கேள்வி எழுப்பப்பட்டுவருவதுடன், சீனாவின் நடவடிக்கைகள் இந்த பிராந்தியத்திற்கு ஒரு “கவலையான” உணர்வையே அதிகரிக்கின்றது என்று ஸ்விஃப்ட் கூறினார். இந்த பிராந்தியத்தில் “ஸ்திரப்பாட்டை” வழங்குவதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் என்ன செய்யக்கூடும் என்பதை இந்திய அதிகாரிகளுடனான அவரது விவாதங்கள் உள்ளடக்கி இருந்ததாக ஸ்விஃப்ட் கூறினார்.

அமெரிக்கா-ஜப்பான்-இந்தியா மலபார் கடற்படை பயிற்சிகள் பற்றி பேசுகையில், “நீர்மூழ்கிக்கப்பல் போர் நடவடிக்கை எதிர்ப்பு குறித்து அந்த தளங்களை எவ்வாறு இயக்கவேண்டும் என்பதைப் பற்றிய நமது புரிதல்கள் ஆழமாக இருக்கவேண்டும்,” என்று குறிப்பிட்டார். நீர்மூழ்கிக்கப்பல் போர் நடவடிக்கை எதிர்ப்பு மீதான இந்த வலியுறுத்தல் இந்திய பெருங்கடலில் சீனாவின் அதிகரிக்கப்பட்ட கடற்படை பிரசன்னத்தை வெளிப்படையாக இலக்குகளாகக் கொண்டுள்ளது.

பாகிஸ்தானில் குவதாரிலும், ஆபிரிக்காவின் கொம்பு முனை பகுதியான திஜிபூதியிலும் நிலைநிறுத்துதலை அனுமதிக்கும் வகையில், சீன மக்கள் விடுதலை இராணுவம் (China’s People’s Liberation Army) அதன் சண்டைப் படையில் 100,000 படைவீரர்களை அதிகரிக்கும் என்று South China Morning Post பத்திரிகை மார்ச் 13 அன்று அறிவித்தது. CPEC ஐ பாதுகாப்பதற்காக பாகிஸ்தான், 15,000 க்கும் அதிகமான துருப்புக்களை ஈடுபடுத்தியிருந்ததுடன், குவதார் துறைமுக பாதுகாப்பிற்காக கடற்படை பிரிவு ஒன்றையும் ஈடுபடுத்தியதாக, சீனாவுக்கான பாகிஸ்தானின் வெளியுறவு தூதரான மசூத் காலித் கூறினார் என்று Hindu பத்திரிகை மார்ச் 16 அன்று அறிவித்தது.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரான லெப்டினண்ட் ஜெனரல் ஹெர்பெர்ட் மெக்மாஸ்டர் பிரதமர் நரேந்திர மோடியை ஏப்ரல் 18 அன்று சந்தித்ததானது, ட்ரம்ப் நிர்வாகத்தின் ஒரு மூத்த உறுப்பினருடனான மோடியின் முதல் சந்திப்பாக இருந்தது. இந்திய மூலோபாய வலைத் தளத்தைப் பொறுத்தவரையில், “ஆப்கானிஸ்தான், மேற்கு ஆசியா மற்றும் வடகொரியா உட்பட, ஆசியா முழுவதிலும், மற்றும் நீட்டிக்கப்பட்ட பிராந்தியத்திலும் உள்ள பாதுகாப்பு நிலைமை” குறித்து மெக்மாஸ்டர்,  மோடியுடன் “அவரது முன்னோக்குகளை பகிர்ந்தார்” என்று அறியப்படுகிறது.

வாஷிங்டனுடனான இந்தியாவின் தீவிரமடையும் ஒருங்கமைவுத் தன்மையை எதிர்கொள்வதில், பல தசாப்தங்களாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கான காவலன் என்றழைக்கப்பட்டுவந்த பாகிஸ்தானின் பிற்போக்குத்தன முதலாளித்துவ உயரடுக்கு, இன்று சீனாவின் கைகளை இறுக்கமாக பற்றிக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில், இரு நாடுகளுமே அணுஆயுதங்களைக் கொண்டுள்ள நிலையில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையிலான எல்லை தாண்டிய துப்பாக்கிசூடுகள் நிகழ்கின்ற நிலையில் இந்திய துணைக் கண்டம் முழுவதுமாக மில்லியன் கணக்கிலான மக்களுக்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு மோதலுக்கான ஆபத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

இந்தியா சீனாவுடன் ஏனைய மூன்று முனைகளில் பூசல்களை கொண்டிருக்கிறது. முதலாவதாக, உலக அணுஆயுத வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் அணுஆயுத விநியோக குழுவில் (Nuclear Suppliers Group - NSG) உறுப்பினர் தகுதியை பாதுகாப்பதற்கான முயற்சியாகும். இந்தியாவின் முயற்சியை அமெரிக்கா ஆதரிக்கின்றபோதும், அணுஆயுத பரவல் தடை உடன்படிக்கையில் (Nuclear Non-Proliferation Treaty) இந்தியா கையெழுத்திடவில்லையென சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

இரண்டாவதாக, இந்திய கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதியில் தீவிரமாக செயல்பட்டுவருகின்ற, பாகிஸ்தானை தளமாக கொண்ட ஒரு இஸ்லாமிய கிளர்ச்சி குழுவான Jaish-e-Mohammed இன் தலைவரான மசூத் அஜ்ஹாரை, ஐ.நா. சர்வதேச பயங்கரவாத “கருப்புப் பட்டியலில்” சேர்க்கும் இந்திய அரசாங்கத்தின் முனைவு குறித்த அதன் எதிர்ப்பை முடிவுக்கு கொண்டுவர சீனாவிடம் இந்தியா கோரிக்கை விடுக்கிறது.

மூன்றாவதாக, சீனாவை பொறுத்தவரையில் ஒரு “அபாயகரமான பிரிவினைவாதியாக” கருதப்படும் நாடுகடத்தப்பட்ட “ஆன்மீக” தலைவரான தலாய் லாமாவை இந்தியா தொடர்ந்து ஊக்குவிக்கிறது. பெய்ஜிங் தெற்கு திபெத் என்று அழைக்கின்ற சர்ச்சைக்குரிய அருணாச்சலப் பிரதேசத்திற்கு விஜயம் செய்ய ஏப்ரலில் இந்தியா அவரை அழைத்தபோது புதிய பதட்டங்கள் எழுந்தன. அவை ஜனநாயகக் கட்சியின் தலைவரான நான்சி பெலோசி தலைமையிலான ஒரு காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு மே 9 அன்று தலாய் லாமாவை சந்தித்தபோது அமெரிக்கா மேலும் மோதலை தூண்டிவிட்டது.   

OBOR ல் பங்கேற்க இந்தியா தவறியது குறித்து இந்திய ஆளும் உயரடுக்கின் ஒரு குறிப்பிடத்தக்க அடுக்கு கவலைப்படுகிறது. பார்வையாளர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் (Observe Research Foundation) ஒரு இந்திய சிந்தனையாளரான ஜெயஸ்ரீ சென்குப்தா மே 20 அன்று “OBOR ஐ தவறவிட்டது ஒரு பெரிய தவறு” என்ற தலைப்பில் ஒரு கருத்துரையை வெளியிட்டார். “இந்தியர்கள் அல்லாமல், சீனர்களின் நிறுவனங்கள் மட்டுமே அண்டையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக மாறும், OBOR இல் இணைவதற்கு அவர்களது அவசியத்தையும், அவசரத்தையும் பயன்படுத்தி கொள்ளும்” என்று அதில் எழுதினார்.

ஆயினும்கூட, புது தில்லி, அமெரிக்காவுடன் கச்சேரி நடத்துவதில், சீனாவின் நடவடிக்கைகளை தடுக்க தீவிரமாக முயன்றுவருவதுடன், அதிகரித்துவரும் பதட்டங்கள் பற்றிய தெளிவான சமிக்ஞைகளையும் அனுப்பிவருகிறது.

மே 22 அன்று, ராய்ட்டர்ஸ் பின்வருமாறு குறிப்பிட்டது: “இந்தியாவை ஆதரவு நிலைக்கு கொண்டுவருவதிலுள்ள சீன முயற்சிகளின் தோல்வியானது, அது பற்றிய விபரங்கள் முன்னரே அறிவிக்கப்படாத நிலையில், பிராந்திய பூசல்கள் மற்றும் பாகிஸ்தானுக்கான பெய்ஜிங்கின் ஆதரவு ஆகியவை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஆழமாக சரிவுகண்டுள்ளதை காட்டுகிறது.”