ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Palace coup or class struggle: The political crisis in Washington and the strategy of the working class

அரண்மனை சதியா அல்லது வர்க்கப் போராட்டமா: வாஷிங்டனின் அரசியல் நெருக்கடியும் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாயமும்

Joseph Kishore and David North on behalf of the Socialist Equality Party Political Committee

1. டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம் வந்து ஐந்து மாதங்கள் ஆகின்றன, வாஷிங்டனில் நச்சு அரசியல் யுத்தம் ஒரு அதிமுக்கிய கட்டத்தை எட்டியிருக்கிறது. சென்ற வாரத்தில் செனட்டின் உளவுத்துறை கமிட்டியின் முன்பாக FBI இன் முன்னாள் இயக்குநரான ஜேம்ஸ் கோமி அளித்த சாட்சியமானது, ட்ரம்ப்பின் எதிர்ப்பாளர்களால், ஊடகங்களிலும் அரசியல் ஸ்தாபகத்திற்குள்ளாகவும், அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையிட்டதென்றும் ட்ரம்ப் மற்றும் பிற நிர்வாக அதிகாரிகளின் தரப்பில் இருந்து அதற்கு ஒத்துழைப்பும் மூடிமறைப்பும் இருந்ததாகவுமான குற்றச்சாட்டுகளை தீவிரப்படுத்துவதற்காய் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. 

2. ட்ரம்ப்புக்கு எதிரான குற்றச்சாட்டுகள், முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் வைட்வாட்டர் நிலம்-மனை சொத்து முதலீடுகள் தொடர்பாகவும் வெள்ளை மாளிகை ஊழியர் மொனிக்கா லெவின்ஸ்கி உடனான அவரது பாலியல் உறவு தொடர்பாகவும் குடியரசுக் கட்சியின் தலைமையில் நடந்த முறைகேட்டுக் கூச்சல்; 2012 இல் பென்காசியில் நடந்த தாக்குதலில் ஹிலாரி கிளிண்டனின் பாத்திரம் குறித்த விசாரணைகள் மற்றும் ஒரு அந்தரங்க மின்னஞ்சல் சேர்வரை அவர் பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டுகள், மற்றும் பராக் ஒபாமா ஒரு அமெரிக்கக் குடிமகனே அல்ல என்பதான குற்றச்சாட்டுகள் —இதனை ட்ரம்ப்பே ஊக்குவித்திருந்து வந்திருக்கிறார்— ஆகியவற்றை ஒத்த, ஒரு செயற்கையானதும் மோசடியானதுமான தன்மையைக் கொண்டுள்ளன. இந்த அத்தனை சந்தர்ப்பங்களிலுமே, ஆளும் உயரடுக்கிற்குள் பிளவிற்கான உண்மையான மூலங்கள் ஒரு நாற்றமெடுக்கும் குற்றச்சாட்டுகளின் குவியலைக் கொண்டு திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டன.

3. வாஷிங்டனில் நடைபெறுகின்ற அரசியல் யுத்தத்தின் சமீபத்திய வெடிப்பு அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகளாவிய மேலாதிக்கம் மற்றும் தேசிய ஸ்திரத்தன்மையின் அடித்தளங்களை அரித்துக் கொண்டிருக்கின்ற சமாளிக்க இயலாத சமூக, பொருளாதார மற்றும் புவியரசியல் நெருக்கடிகளில் வேரூன்றியிருக்கிறது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு இருபத்தியைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், வரிசையான இஇராணுவ நடவடிக்கைகளின் மூலமாக தனது மேலாதிக்கத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் செய்திருக்கும் முயற்சிகள் வரிசையான படுதோல்விகளுக்கே இட்டுச்சென்றிருக்கின்றன. 2008 இல் உலகப் பொருளாதார முறிவு —இதில் வோல் ஸ்ட்ரீட்டின் பொறுப்பற்ற தன்மை முக்கியமான பாத்திரம் வகித்தது— நடந்து கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், அமெரிக்க நிதியமைப்பு முறையானது தொடர்ந்தும் ஸ்திரமற்ற நிலையில்தான் இருக்கிறது என்பதோடு, கடனின் முடிவற்றதொரு விரிவாக்கத்தின் மூலமாக தாக்குப்பிடித்துக் கொண்டு நிற்கிறது. அமெரிக்க பொருளாதார அமைப்புமுறையின் நோய்வாய்ப்பட்ட தன்மையானது, ஒட்டுண்ணித்தனத்தையும் மலைக்க வைக்கும் சமூக சமத்துவமின்மை மட்டத்தையும் தனது குணாம்சங்களாய் கொண்ட ஒரு சிலர்-அதிகார சமூக அமைப்புமுறையை உருவாக்கி விட்டிருக்கிறது.

4. ட்ரம்ப் தேர்வானது ஒரு தற்செயல் அல்ல. ட்ரம்ப் அமெரிக்காவை ஆட்சி செய்கின்ற ஒரு சிலர்-அதிகாரக் கும்பலின் உருவடிவமே ஆவார். பில்லியனர்களையும் முன்னாள் இராணுவத் தளபதிகளையும் கொண்ட அவரது நிர்வாகமானது சமூக எதிர்ப்புரட்சியின் ஒரு இருகட்சி வேலைத்திட்டத்தையும் சர்வதேச அளவில் பொறுப்பற்ற விதத்தில் இராணுவவாதத்தையும் கூர்மையாக தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், அமெரிக்க முதலாளித்துவம் அதன் தேசிய மற்றும் சர்வதேசப் பிரச்சினைகளுக்கு எப்படி பதிலிறுப்பு செய்ய வேண்டும் என்பதில் ஆளும் வர்க்கத்திற்குள்ளாக கடுமையான பிளவுகள் நிலவுகின்றன. இந்த பிளவுகள், ட்ரம்ப்பின் கீழ், ஒரு அசாதாரணமான தீவிரத்தை பெற்றிருக்கின்றன.

5. தொழிலாள வர்க்கமானது, அதன் ஜனநாயக உரிமைகளை அழிப்பதற்கும் அதன் வாழ்க்கைத் தரங்களை மேலதிகமாய் குறைப்பதற்கும் அர்ப்பணித்துக் கொண்ட ஒரு நச்சுத்தனமான எதிரியை, ட்ரம்ப்பிலும் அவரது நிர்வாகத்திலும் முகம்கொடுத்து நிற்கிறது. “முதலில் அமெரிக்கா” பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சர்வதேச திட்டநிரலை பின்பற்றிக் கொண்டிருக்கும் ஒரு அரசாங்கமாக அது உள்ளது. தொழிலாள வர்க்கம் இந்த அரசாங்கத்தை எதிர்க்க வேண்டும், அதனை அகற்ற முனைய வேண்டும். ஆனால் இந்தப் பணி ஆளும் வர்க்கத்தில் இருக்கின்ற ட்ரம்ப்பின் கன்னை போட்டியாளர்களிடம் ஒப்படைக்கப்பட முடியாது. ட்ரம்புக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையிலான மோதலில் தொழிலாள வர்க்கம் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. மாறாக அது தனது சொந்தப் பதாகையின் கீழ் தனது சொந்த வேலைத்திட்டத்தைக் கொண்டு ட்ரம்ப்புக்கு எதிரான தன் போராட்டத்தை அபிவிருத்தி செய்தாக வேண்டும்.

6. ட்ரம்ப் நிர்வாகத்திற்கான எதிர்ப்பு மூன்று அடிப்படை வடிவங்களாய் இருக்கிறது, அவை வெவ்வேறு சமூக வர்க்கங்களின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன.

்ரம்ப்புக்கான ஆளும் வர்க்க எதிர்ப்பு

7. முதலாவதாய், முதலாளித்துவ வர்க்கத்தின் சக்திவாய்ந்த பிரிவுகளின் எதிர்ப்பு உள்ளது. அரசியல் ஸ்தாபகத்திற்குள்ளாக இருக்கும் ஜனநாயகக் கட்சி குடியரசுக் கட்சி இருகட்சிகளையும் சேர்ந்த ட்ரம்ப்பின் எதிரிகள் பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்கின் ஒரு கன்னைக்காக பேசுகின்றனர். ட்ரம்புக்கு எதிரான பிரச்சாரத்தில் அவர்கள் பயன்படுத்துகின்ற வழிமுறைகள் அடிப்படையாக ஜனநாயக-விரோதமானவையாக இருக்கின்றன, இராணுவ/உளவு ஸ்தாபகம் மற்றும் பெருநிறுவன-நிதி உயரடுக்கிற்குள்ளாக இருக்கின்ற கூறுகளுடன் சேர்ந்து திரைமறைவில் சதி செய்வதும் இதில் இடம்பெற்றிருக்கிறது. இவை ஒரு அரண்மனை சதியின் வழிமுறைகள் ஆகும்.

8. ட்ரம்ப் நிர்வாகத்துடனான அவர்களது பேதங்கள், பிரதானமாக வெளியுறவுக் கொள்கை பிரச்சினைகளை மையமாகக் கொண்டவையாக இருக்கின்றன. அவர்களது உண்மையான கவலை அமெரிக்க ஜனநாயகத்திற்கு எதிராக ரஷ்யா “சதிசெய்ததாக” சொல்லப்படுவது குறித்தல்ல —அமெரிக்க ஜனநாயகத்திற்கு எதிராக அதன் சொந்த ஆளும் வர்க்கம் செய்கின்ற சதியுடன் அதை ஒப்பிடவும் இயலாது— மாறாக சிரியாவில் பஷார் அல்-ஆசாத்தின் அரசாங்கத்தை தூக்கிவீசுவதற்கு அமெரிக்கா செய்த முயற்சிகளை பயனற்றதாக்கி இருக்கின்ற ரஷ்யாவின் நடவடிக்கைகள் குறித்ததாகும். ஒபாமாவின் கீழ் உருவாக்கப்பட்டிருந்த ரஷ்ய-விரோதக் கொள்கையை —ஹிலாரி கிளிண்டனின் பிரச்சாரம் இதனை மேலும் விரிவுபடுத்துவதற்கு அர்ப்பணித்துக் கொண்டதாய் இருந்தது— பலவீனப்படுத்துவதில் இருந்து ட்ரம்ப்பை தடுத்து நிறுத்துவதற்கு அவர்கள் தீர்மானகரமாக உள்ளனர்.

9. ரஷ்யா மீதான இந்த வெறித்தனமான கவனக்குவிப்பு தற்செயலானதல்ல. ட்ரம்ப்பின் வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகள், அனைவரும் அறிந்தவாறாய், சீனாவை எதிர்கொள்வதின் மீது கவனம் குவித்திருக்கின்றன. ரஷ்யாவுடன் ஒரு “உடன்பாட்டுக்கு” அவர் அறிவுறுத்துவதாக சொல்லப்படுவது இராணுவ, உளவு மற்றும் வெளியுறவுத் துறை ஸ்தாபகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்ற பிரிவுகளால் ஆதரிக்கப்படுகின்ற ஒரு மூலோபாய திட்டத்திற்கு இணங்கியதாக இல்லை. அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளை பயனற்றதாக்குகின்ற ரஷ்யாவின் திறனை அழிப்பது யூரோஆசிய நிலப்பகுதியை கட்டுப்பாட்டில் கொண்டிருப்பதற்கு மையமானதாக பார்க்கப்படுகிறது, அது இல்லாமல் சீனாவுடனான ஒரு நீண்ட-கால மோதலில் அமெரிக்க வெற்றி என்பது சாத்தியமில்லாததாய் கருதப்படுகிறது.

10. ட்ரம்ப், “ஆழ் அரசில்” இருக்கக் கூடிய அவரது எதிரிகளாலும் ஜனநாயகக் கட்சியாலும் பதவியில் இருந்து அகற்றப்படுவாராயின், அது ஜனநாயகத்தின் ஒரு வெற்றியைக் குறிக்காது எனும்போது தொழிலாள வர்க்கத்தின் நிலைமைகள் மேம்படுவது குறித்த விடயத்திற்கெல்லாம் போகவும் தேவையில்லை. ஒபாமா நிர்வாகத்தின் கீழ், ஆளும் வர்க்கமானது அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரும் அளவில் கீழிருந்து மேலே செல்வம் இடமாற்றப்படுவதையும், அத்துடன் வெளிநாடுகளில் போர் விரிவாக்கம் செய்யப்படுவதையும் அத்துடன் இராணுவ-உளவு எந்திரத்தின் அதிகாரம் தொடர்ச்சியாக வளர்ச்சி கண்டு செல்வதையும் மேற்பார்வை செய்தது. வோல் ஸ்ட்ரீட்டின் மனதுக்கு பிடித்த வேட்பாளராய் இருந்த ஹிலாரி கிளிண்டன், இந்த அத்தனை கொள்கைகளையும் மேலும் ஆழப்படுத்துவதற்கும் அதேசமயத்தில் சிரியாவில் போரையும் மற்றும் ரஷ்யாவுடன் மோதலையும் தீவிரப்படுத்துவதற்கும் சூளுரைத்தார். சுகாதாரப் பராமரிப்பின் மீதான தாக்குதலுக்காகவோ, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்காகவோ, நிர்வாகத்தில் அதி-வலது தேசியவாத சக்திகள் மேலெழுந்து செல்வதற்காகவோ, அல்லது வட கொரியா, ஈரான் மற்றும் சீனாவுக்கு எதிரான போர்த் திட்டங்களுக்கு எதிராகவோ விவாதிப்பதற்கு ஜனநாயகக் கட்சியினர் அழைப்பது கிடையாது.

11. ஜனநாயகக் கட்சியினர் ஏதோ ஒரு வடிவத்திலான அரசியல் ஆட்சிக்கவிழ்ப்பின் மூலமாக ட்ரம்ப்பை அகற்றும் தமது நோக்கத்தில் வெற்றிகாண்பார்களாயின், துணை ஜனாதிபதி மைக் பென்சை அது வெள்ளை மாளிகையில் அமர்த்தும், அவர் ட்ரம்ப்பை விட மிகவும் நாசூக்கானவர், ஆனால் பிற்போக்குத்தனத்தில் அவருக்கு கொஞ்சமும் சளைத்தவரல்ல.

யர் நடுத்தர-வர்க்கத்தின் எதிர்ப்பு

12. ட்ரம்ப்-எதிர்ப்பு முகாமின் இன்னொரு பாகத்தில், நடுத்தர வர்க்கத்தின் வசதியான பிரிவுகள் வருகின்றன, குடியரசுக் கட்சிக்கான இதன் எதிர்ப்பு, மக்களின் மிக வசதியான 10 சதவீதம் பேருக்குள் இன்னும் கொஞ்சம் சாதகமான விதத்தில் செல்வம் விநியோகிக்க செய்யப்பட வேண்டும் என்பதன் மீது கவனம் குவிந்ததாக இருக்கிறது. வர்க்கப் பிளவுகளை காட்டிலும் நிறரீதியான, பால்ரீதியான மற்றும் பாலியல் ரீதியான அடையாளத்தை முன்னிலைப்படுத்துகின்ற பல்வேறு போலி-இடது அமைப்புகள் (அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள், சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு, சோசலிச மாற்று, பசுமைக் கட்சி) உள்ளிட பிரதானமாக ஜனநாயகக் கட்சியின் சுற்றுவட்டத்தில் இயங்குகின்ற பல்வேறு அரசியல் போக்குகளால் இந்த அடுக்கு பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது.

13. ஆளும் வர்க்கத்திடம் இருந்து சுயாதீனமற்று இருப்பது நடுத்தர வர்க்க அரசியலின் குணாம்சமாகும். ஜனநாயகக் கட்சியின் மீது செல்வாக்கு செலுத்தி, முதலாளித்துவ அமைப்புமுறையில் மேலோட்டமான சீர்திருத்தங்கள் செய்வதற்கு அதன் ஆதரவை வென்றெடுப்பதற்கு இது முனைகிறது. இந்த அரசியல் வெளிக்குள் இருக்கின்ற கூடுதல் இடது-தாராளவாதக் கூறுகள் சமூக சமத்துவமின்மை பற்றிய பிரச்சினைகளை குறிப்பிடுகின்ற அதேநேரத்தில், அரை-சீர்திருத்தவாத விண்ணப்பங்களை, மிகவும் கோட்பாடற்ற விதத்தில், ஜனநாயகக் கட்சிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நோக்கங்களுக்கும் ஆதரவு கோருவதுடன் ஒன்றுகலக்கின்றன. அவர்களது சலுகைமிக்க பொருளாதார நிலையானது பெருநிறுவன இலாபங்களிலும் பங்கு விலைகளிலுமான வரலாறுகாணாத அதிகரிப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்ற உண்மையுடன் இது பிணைந்ததாகும். தொழிலாள வர்க்கத்தின் மீதான ஆளும் வர்க்கத்தின் மேலாதிக்கத்தை தக்கவைத்துக் கொள்வதுதான் அவர்களது பிரதான அரசியல் செயல்பாடாகும். 2016 தேர்தலில், அவர்கள் வேர்மண்ட் செனட்டரான பேர்னி சாண்டர்ஸின் பிரச்சாரத்தை விளம்பரப்படுத்தினர், அவரோ பரந்துபட்ட சமூக எதிர்ப்பை, வோல் ஸ்ட்ரீட் மற்றும் உளவு முகமைகளது வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனது பிரச்சாரத்தின் பின்னால் திருப்பி விட்டார். இப்போது சாண்டர்ஸ் அமெரிக்க செனட்டில் ஜனநாயகக் கட்சி குழுவின் ஒரு முன்னிலை உறுப்பினராய் உள்ளார்.

தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு

14. மூன்றாவதும் முற்றிலும் மாறுபட்டதுமான மோதல் உருவாகிக் கொண்டிருப்பது— ஆளும் வர்க்கத்திற்கும் வெகுஜனங்களின் பரந்த, பல்வேறு வடிவ சமூகத் துன்பங்களால் பாதிக்கப்படுகின்ற மற்றும் அரசியல் வாழ்க்கையில் இருந்து முற்றிலும் அந்நியப்படுத்தப்பட்டிருக்கின்ற தொழிலாள வர்க்கத்துக்கும் இடையிலானதாகும்.

15. அமெரிக்காவில் சமூக நெருக்கடியின் யதார்த்தமானது தொழிலாள வர்க்கத்தில் எண்ணிலட்டங்கா எதிர்ப்பு மற்றும் கிளர்ச்சி வடிவங்களுக்கான புறநிலை அடித்தளமாக இருக்கிறது. ஒபாமா நிர்வாகம் அது அதிகாரத்தை விட்டு அகன்ற சமயத்தில், அமெரிக்காவில் வாழ்க்கை முன்னொருபோதும் இருந்திராத அளவுக்கு மேம்பட்டதாய் இருந்ததாக கூறிக் கொண்டபோதிலும் கூட, உண்மையான வேலைவாய்ப்பின்மை விகிதமோ 8.6 சதவீதமாய் இருக்கிறது, ஊதியங்கள் தேங்கியிருக்கின்றன, தொழிலாளர்கள் கொடூரமான வேலை நிலைமைகளுக்கும் தீவிரமடையும் சுரண்டலுக்கும் முகம்கொடுக்கின்றனர். வருவாயில் பெருநிறுவன இலாபங்களின் பங்கு, வரலாறு கண்டிராத அளவுக்கான உச்சநிலையில் இருக்க, வருவாயில் உழைப்புக்கு செல்லும் பங்கு வரலாறுகண்டிராத பாதாள நிலைகளில் இருக்கிறது.

16. ஆரோக்கிய பராமரிப்பு நெருக்கடி தீவிரமாக இருக்கிறது, மேலும் மோசமடைந்து சென்று கொண்டிருக்கிறது. ஒபாமாகேர் திட்டம் பெருநிறுவனங்கள் சுகாதார பராமரிப்பு செலவை அவற்றின் தொழிலாளர்களுக்கு மாற்றிவிடுகின்ற முனைப்பை மேலும் தீவிரமாக்கியிருக்கிறது. தேசிய சுகாதார பராமரிப்பு தேய்ந்து செல்வதுடன், மருந்து தொற்றுகளின் சுழற்சியும் சேர்ந்து, இறப்பு விகிதங்களின் அதிகரிப்புக்கும் எதிர்பார்ப்பு ஆயுள்காலத்தின் வீழ்ச்சிக்கும் இட்டுச்சென்றிருக்கிறது. வயதான தொழிலாளர்கள் அவர்கள் ஓய்வுபெற்று விட்டால் வருமானம் பற்றாக்குறையாகி விடும் என்பதால் நீண்ட காலத்திற்கு வேலை செய்கின்றனர், இளம் தொழிலாளர்கள் சகிக்க முடியாத அளவுக்கான மாணவர் கடனின் சுமையைப் பெற்றுள்ளனர்.

17. அமெரிக்க மக்களின் ஒரு சிறு அடுக்கின் ஏகபோகமாகியிருக்கும் செல்வம் பெருவாரியான மக்களுக்கு கற்பனைக்கும் எட்டாததாய் இருக்கிறது. பொருளாதார அறிஞர் Branko Milanovic உலகளாவிய சமத்துவமின்மை என்ற தனது சமீபத்தில் வெளியாகியிருக்கும் புத்தகத்தில், அநேகம் பேருக்கு ஒரு பில்லியன் டாலர் என்பதன் அர்த்தம் என்பதும் கூட விளங்கமுடியாதிருக்கிறது என்று குறிப்பிட்டார். அத்தகையதொரு செல்வ அளவின் பரிமாணத்தை விளங்கப்படுத்துவதற்காக, அவர், ஒரு மில்லியன் டாலர் உள்ள ஒரு மனிதர், தினந்தோறும் ஆயிரம் டாலர்களை செலவழித்தால், மூன்று வருடங்களுக்குள்ளாக அவருடைய செல்வம் மறைந்து போகும். ஒரு பில்லியனர், அதே விகிதத்தில் செலவிட்டால், அவருக்கு 2,700 வருடங்கள் வரை செலவிட முடியும்! என்பதை விளக்குகிறார்.

18. இப்போது மேலேயிருக்கின்ற 1 சதவீத குடும்பங்களிடம் இருக்கின்ற அளவுக்கான செல்வம்தான் கிட்டத்தட்ட கீழேயிருக்கின்ற 90 சதவீத குடும்பங்களிடம் இருக்கிறது. கீழிருக்கும் பாதி மக்கள்தொகையிடம் இருக்கும் அளவுக்கான செல்வம் 20 தனிநபர்களிடம் இருக்கிறது. அமெரிக்காவில் 40 சதவீத குடும்பங்களில் செல்வம் பூச்சியமாகவோ அல்லது எதிர்மறையாகவோ —அதாவது சொத்தைக் காட்டிலும் கடன் அதிகமாக இருக்கும் நிலை— இருக்கிறது. செல்வம்படைத்தவர்களில் 0.1 சதவீதம் பேர் மற்றும் மக்கள்தொகையில் 0.01 பேர் தங்களது சொந்த அரசியல் காலநிலை பாதுகாப்பு அமைப்பாக செயல்படுகிறார்கள், தேர்தல்களை வாங்குவதற்கு, அரசியல்வாதிகளுக்கு கையூட்டு அளிப்பதற்கு மற்றும் அரசியல் நிகழ்முறையைக் கட்டுப்படுத்துவதற்கு அவர்களிடம் மிகப்பரந்த அளவுக்கான பணம் இருக்கிறது.

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் மூலோபாயம்

19. வாழ்க்கை நிலைமைகள் சகிக்க முடியாததாக ஆகிக் கொண்டிருக்கின்ற தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகள் இடையே சமூக கோபம் பெருகிச் செல்வதன் பல அறிகுறிகள் தென்படுகின்றன. “வரம்பற்ற வாய்ப்புகளைக் கொண்ட மண்”, “அமெரிக்கக் கனவு” போன்று கடந்த காலத்தில் அமெரிக்காவில் வாழும் வாழ்க்கையை விவரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட சொல்லாடல்கள் எல்லாம் அர்த்தமற்றவையாக ஆகிவிட்டிருக்கின்றன, ஏனென்றால் அவை யதார்த்தத்துக்கு சம்பந்தமற்றவையாக இருக்கின்றன. இருக்கின்ற சமூகமானது ஏற்கனவே பெரும் செல்வச்செழிப்புடன் இருக்கின்றவர்களின் நலன்களுக்காகவே பிரத்யேகமாக சேவைசெய்கிறது என்பது உழைக்கும் பரந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு மேலும் மேலும் வெட்டவெளிச்சமாகி வருகிறது. உயர்-தரக் கல்வி, ஒரு பாதுகாப்பான சுற்றுச்சூழல், கண்ணியமான வீட்டுவசதி, பாதுகாப்பான வேலை, போதுமான ஓய்வு நேரம், கட்டுப்படியாகும் மருத்துவப் பராமரிப்பு போன்ற வாழ்க்கையின் அடிப்படை அத்தியாவசியங்களுக்கான அணுகல் என்பது பிறப்பினால் தீர்மானிக்கப்படுவதாக இருக்கிறது, அதாவது ஒரு மனிதன் எந்தக் குடும்பத்தில் பிறக்கிறானோ அந்தக் குடும்பம் இருக்கின்ற வர்க்கத்தையும் பொருளாதார அந்தஸ்தையும் சார்ந்ததாக இருக்கிறது.

20. அமெரிக்காவிற்குள்ளாக தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகள் இடைவிடாது தேய்ந்து செல்வதும், உலகெங்கிலும் ஆளும் வர்க்கத்தினால் நடத்தப்படுகின்ற முடிவற்ற போர்களது அர்த்தமற்ற வன்முறையும் பரந்த மக்களின் சமூக நனவிலான ஒரு ஆழமான மாற்றத்தில் பிரதிபலிக்கின்றன. அரசியல் தலைவர்களும் ஊடகங்களும் முதலாளித்துவத்தின் பெருமைக்கு எப்போதும் போற்றிப்பாடல்கள் பாடுகின்றதான ஒரு நாட்டில், சோசலிசத்தில் ஆர்வமும் ஆதரவும், குறிப்பாக இளைஞர்களிடையே எழுச்சி காண்பதை கருத்துக்கணிப்புகள் வெளிப்படுத்துகின்றன.

21. அமெரிக்காவிற்குள் மற்றும் சர்வதேச அளவில் இரண்டிலும் பெருகுகின்ற புறநிலை நெருக்கடியின் நிலைமைகளுடன், பரந்த சமூக நனவு தீவிரப்படுவது சந்திப்பதானது வர்க்கப் போராட்டத்தின் வெடிப்பில் வெளிப்பாடு காணும். வர்க்கப் போராட்டமானது பல தசாப்தங்களாக தொழிற்சங்க அதிகாரத்துவத்தாலும், ஜனநாயகக் கட்சியாலும் மற்றும் அடையாள அரசியலின் பல்வேறு வடிவங்களை முன்னெடுக்கின்ற வசதியான பிரிவுகளாலும் ஒடுக்கப்பட்ட நிலையானது முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆளும் உயரடுக்கின் சமூக எதிர்ப்புரட்சியானது அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் ஒரு எழுச்சியை எதிர்கொள்ள இருக்கிறது. வேலையிடங்களிலும், சமூகங்களிலும் மற்றும் ஒட்டுமொத்த நகரங்களிலும் சமூக எதிர்ப்பின் பல்வேறு வேறுபட்ட வடிவங்களும் முன்னெப்போதினும் தனித்துவமான தொழிலாள வர்க்க அடையாளத்தையும், முதலாளித்துவ-எதிர்ப்பு நோக்குநிலையையும் சோசலிசத் தன்மையையும் பெறவிருக்கின்றன. தனித்தனியான வேலையிடங்கள் மற்றும் சமூகங்களில் நடக்கும் போராட்டங்கள் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளது ஐக்கியப்பட்ட போராட்டமாக உருமாறும்.

22. மேலும், அமெரிக்காவிற்குள்ளான வர்க்கப் போராட்டம் சர்வதேச வர்க்கப் போராட்ட வெடிப்புடன் சந்தித்துக் கொள்ளும்போது அது பேரினவாத தேசியவாதத்தின் பலவீனப்படுத்தும் செல்வாக்கைக் குறைக்கும், அமெரிக்க தொழிலாளர்கள் மத்தியில் ஆழமான ஒரு சர்வதேச வர்க்க ஐக்கிய உணர்வு உருவாக உத்வேகமளிக்கும். சொந்த நாட்டில் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம், அமெரிக்காவின் எல்லைகளுக்கு வெளியில் போருக்கு எதிரான போராட்டம் இரண்டும் ஒரே போராட்டத்தின் இரண்டு பிரிக்கமுடியாத தொடர்புடைய அம்சங்களாய் இருப்பதை தொழிலாள வர்க்கம் காணும்.

23. அமெரிக்காவில் பரந்த மக்கள் போராட்டங்கள் திட்டநிரலில் இருக்கின்றன. ஆர்ப்பாட்ட பேரணிகளும், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும், மற்றும் வேலைநிறுத்தங்களும் பொதுவான ஒரு தேசிய-அளவிலான தன்மையை பெறுவதற்கு முனையும். ட்ரம்புக்கும் அவர் பிரதிநிதித்துவம் செய்கின்ற அத்தனைக்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் போராட்டமானது, முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் அதன் அரசுக்கும் எதிரான ஒரு அரசியல்மயமான வெகுஜன இயக்கத்தை, குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி இரண்டிலிருந்தும் சுயாதீனப்பட்டும் மற்றும் அவற்றுக்கு எதிராகவும், கட்டியெழுப்புவதற்கான அவசியத்தை முன்னினும் அவசரமான பணியாக முன்வைக்கும் என்பதே இந்த பகுப்பாய்வில் இருந்து பிறக்கக்கூடிய அரசியல் முடிவாகும். இந்த புறநிலையான சமூகப் போக்கானது தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் ஒரு நனவான மூலோபாயமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். முதலாளித்துவத்தின் கீழான வாழ்க்கையின் பரிதாபத்துக்குரிய சமூக நிலைமைகள் அத்தனைக்கும் எதிரான போராட்டங்களை, ட்ரம்ப்புக்கும் இரண்டு பெருவணிகக் கட்சிகளுக்கும் எதிரான ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையிலான அரசியல் போராட்டத்துடன் இணைக்கின்ற பணியானது தொழிற்சாலைகளிலும், வேலையிடங்களிலும், உழைக்கும் வர்க்க சமூகங்களிலும், மற்றும் நாடெங்கிலும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் எழுப்பப்பட வேண்டும், அங்கு விவாதப் பொருளாக்கப்பட வேண்டும்.

24. பாரிய தொழிலாள வர்க்கப் போராட்டங்களுக்கு தயாரிப்பு செய்வதற்கு, பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகவும் தொழிலாள வர்க்கத்துக்கு எதிராகவும் செயல்படுகின்ற தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனப்பட்டும் அவற்றுக்கு எதிராகவும் இருக்கும் மக்களடர்த்தி மிக்க வேலையிட மற்றும் அண்டைஅருகாமை கமிட்டிகளின் ஒன்றுடன்-ஒன்று இணைந்ததாக இருக்கின்ற ஒரு வலைப்பின்னல் உருவாக்கப்படுவது அவசியமாய் இருக்கிறது. ட்ரம்ப் நிர்வாகத்திற்கு தொழிலாள வர்க்கத்தில் இருக்கின்ற பாரிய எதிர்ப்பானது மக்களின் மிகப் பரந்த எண்ணிக்கையிலானோரின் தேவைகளை நிவர்த்தி செய்யத்தக்க தெளிவான முதலாளித்துவ-எதிர்ப்பு, ஏகாதிபத்திய-எதிர்ப்பு மற்றும் சோசலிசக் கோரிக்கைகளுடன் இணைக்கப்பட வேண்டும்.

25. இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கான மூலோபாயமானது தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள், மற்றும் முதலாளித்துவத்தை எதிர்க்கின்ற மற்றும் சோசலிசத்தின் அவசியத்தை அங்கீகரிக்கின்ற அனைவரது பிரிவுகள் அத்தனையிலும் பரவலாய் விவாதிக்கப்பட வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது. இந்த அறிக்கையை சக-தொழிலாளர்களிடமும் நண்பர்களிடமும் விநியோகியுங்கள். உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் உலக சோசலிச வலைத் தளத்திற்கு அனுப்புங்கள். தொழிலாள வர்க்கத்தின் நலன்களை முன்னேற்றுகின்ற நோக்கத்துடனான அத்தனை சிந்தனை மிகுந்த பங்களிப்புகளையும் நாங்கள் வரவேற்கிறோம்.

26. இந்தப் போராட்டத்தின் பாகமாக விரும்புவோர் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைவதற்கு நாங்கள் அழைக்கிறோம். மாணவர்களும் இளைஞர்களும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் (IYSSE) கிளைகளை உருவாக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். அபிவிருத்தியடைந்து வரும் ஒரு புறநிலை இயக்கத்தை நனவுபூர்வமானதாக்குவதும், தொழிலாள வர்க்கத்திற்கு அதன் இலட்சியங்கள் குறித்த முன்னெப்போதினும் மிகப்பெரும் அளவிலான புரிதலை புகட்டுவதும், அபிவிருத்தி காணுகின்ற இயக்கத்தின் தன்மையைக் குறித்து தெளிவுபடுத்துவதும் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் IYSSE இன் பணியாகும். தொழிற்சாலைக் கமிட்டிகளை அமைப்பதிலும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு அமைப்புகளை உருவாக்குவதிலும் SEP ஆலோசனைகள் வழங்கும், உதவி செய்யும். தொழிலாள வர்க்கத்திலான போராட்டத்தின் வளர்ச்சியை, அரசு அதிகாரத்தைக் கையிலெடுக்கவும் பொருளாதார வாழ்க்கையை தனியார் இலாபத்திற்காய் அல்லாமல் சமூகத் தேவைகளின் அடிப்படையில் மறுஒழுங்கு செய்வதற்குமான ஒரு சோசலிச, சர்வதேசிய மற்றும் ஏகாதிபத்திய-எதிர்ப்பு இயக்கத்துடன் இணைப்பதற்கு அது போராடும்.