ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Macron’s En Marche set to win large majority in French legislative elections

பிரெஞ்சு நாடாளுமன்ற தேர்தல்களில் மக்ரோனின் குடியரசை நோக்கி முன்னேறுவோம் இயக்கம் பெரும் பெரும்பான்மை பெறக்கூடும்

By Alex Lantier
6 June 2017

நாடாளுமன்ற தேர்தல்களின் முதல் சுற்றுக்கு வெறும் ஒரு வாரத்திற்கும் குறைந்த நாட்களே உள்ள நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் கட்சியான குடியரசை நோக்கி முன்னேறுவோம் (LREM) இயக்கம் தேசிய நாடாளுமன்றத்தில் ஒரு பெரும் பெரும்பான்மை பெற உள்ளது. சமீபத்திய பல கருத்துக்கணிப்புகளின்படி, LREM 30 சதவீதத்திற்கும் அதிக வாக்குகளைப் பெற்று, 577 நாடாளுமன்ற ஆசனங்களில் 330 முதல் 390 வரையிலான ஆசனங்களுடன் பெரும்பான்மை பெறக்கூடும்.

முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டின் சோசலிஸ்ட் கட்சி (PS) ஒரு வரலாற்று பொறிவை முகங்கொடுக்கிறது. முதல் சுற்று நாடாளுமன்ற தேர்தல்களில் வெறும் 25 இல் இருந்து 35 ஆசனங்களைப் பெற்று, அது சுமார் 8 சதவீத வாக்குகளைப் பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஜோன் லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (France insoumise – FI) மற்றும் ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) ஆகியவை ஒருமித்து சுமார் 30 ஆசனங்களுடன், முறையே சுமார் 12 சதவீதம் மற்றும் 3 சதவீத வாக்குகளை மட்டுமே பெறக்கூடும்.

இந்த பொறிவானது, பிரான்சில் இடதுசாரி அரசியலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சோசலிஸ்ட் கட்சி மேலாளுமையில், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போர் கொள்கைகள் நிறைவேற்றப்பட்ட அண்மித்து ஒரு அரை நூற்றாண்டைப் பற்றிய ஒரு நாசகரமான முடிவுரையாகும். தீவிரமயப்பட்ட பல்வேறு குட்டி-முதலாளித்துவ அமைப்புகளின் மற்றும் சமூக ஜனநாயக அரசியலின் மத்திய அச்சாக விளங்கும் சோசலிஸ்ட் கட்சி, இப்போது, சிதைந்து போகும் அச்சுறுத்தலில் உள்ளது. 1971 இல் அது ஸ்தாபிக்கப்பட்டதற்குப் பிந்தைய மிக மோசமான தோல்வியை அது முகங்கொடுத்து வருகிறது —1993 தேர்தல்களில் பிரான்சின் முதல் சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோனின் கீழ் சோசலிஸ்ட் கட்சி ஆசனங்கள் வெறும் 57 ஆக குறைந்த போது இருந்ததை விட அதன் பொறிவு இப்போது படுமோசமாக உள்ளது.

அரசியல் ஸ்தாபகத்துடன் மக்கள் ஆழ்ந்த அதிருப்தி கொண்டிருப்பதால், வாக்களிக்காமை விகிதம் மிகவும் அதிகமாக, 45 சதவீதமாக, உயரக்கூடும். இந்நிலைமைகளின் கீழ் வலதுசாரி குடியரசு கட்சி (LR) 95-115 ஆசனங்களுடன் சுமார் 22 சதவீத வாக்குகளைப் பெறக்கூடும், அதேவேளை நவ-பாசிசவாத தேசிய முன்னணி (FN) 5-15 ஆசனங்களுடன் 18 சதவீத வாக்குகளைப் பெறக்கூடும்.

வாக்குகளின் எண்ணிக்கைக்கும் கட்சிகள் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கைக்கும் இடையே பரந்த வித்தியாசம் ஏற்படுவதற்குக் காரணம் இரண்டு சுற்று தேர்தல் முறை என்பதனால் ஆகும். வேட்பாளர்கள் இரண்டாம் சுற்றுக்கு முன்னேற, பதிவு செய்த வாக்காளர்களிடம் இருந்து அவர்கள் 12.5 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருக்க வேண்டும், ஆனால் பாதிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிப்பைப் புறக்கணிக்கக் கூடும் என்ற நிலையில், வேட்பாளர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேற அண்மித்து ஒரு கால் பங்கு வாக்குகளையாவது பெற வேண்டியிருக்கும். தேர்தல் மாவட்டங்களில் ஒரு சிறிய எண்ணிக்கையிலான ஆதரவை மட்டுமே கொண்டுள்ள கட்சிகள் குறிப்பிடத்தக்க தோல்விகளை முகங்கொடுக்கும்.

ஊடகங்களில் தற்போது மக்ரோனுக்கான பாரிய பிரச்சாரம் மேலோங்கியுள்ள நிலையில், ஜெயித்துவிடலாமென LREM நம்பிக் கொண்டிருக்கும் வெற்றியானது, அவரது வேலைத்திட்டத்திற்கு மக்களின் ஆதரவைப் பிரதிபலிக்கவில்லை. France Info குறிப்பிடுகையில், தயாரிக்கப்பட்டு வருகின்ற மக்ரோனுக்கான பெரும்பான்மை, “வாக்காளர்களது விருப்பங்களை வெளிப்படுத்துவதாக தெரியவில்லை, அவர்களில் பாதிப்பேர் தான் அரசின் தலைவர் சுமூகமான அரசாங்க பெரும்பான்மை பெற வேண்டுமென விரும்புகிறார்கள். வெறும் 37 சதவீதத்தினர் தான் அவரது கட்சியே ஓர் அரசாங்கம் அமைக்க வேண்டுமென விரும்புகிறார்கள்,” என்பதை ஒப்புக் கொண்டது.

மக்ரோனை நோக்கிய மக்களின் விரோதமும் நவஅம்பிக்கையும் முற்றிலும் நியாயமானதாகும். ஜனாதிபதியின் திட்டங்கள் குறித்து வெளியான விபரங்களின்படி, மக்ரோன் பிரான்சில் சமூக எதிர்புரட்சிக்கு ஒப்புதல் வழங்க சேவையாற்றும் நாடாளுமன்றத்தை அமைக்க விரும்புகிறார்—அத்தகைய ஒரு நாடாளுமன்றம், கடந்த ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதும் மற்றும் சில காலத்திற்கு முன்னர் மட்டுமே அரசியலுக்குள் வந்துள்ளவர்களை பெரும்பான்மையாக கொண்டதுமான அவரது கட்சியின் மேலாளுமையில் இருக்க வேண்டுமென விரும்புகிறார்.

தொழில் சட்டவிதிகளிலும் மற்றும் ஹோலாண்டின் தொழிலாளர் சட்டத்திலும் உத்தரவாணைகள் மூலம் திருத்தம் செய்ய மக்ரோனை அனுமதிக்க உதவும் ஒரு சட்டத்தை நிறைவேற்றுவது அந்த அரசாங்கத்தின் முதல் நடவடிக்கைகளில் உள்ளடங்கி இருக்கும். நியாயமின்றி வேலைநீக்கம் செய்வதன் மீதான அபராதங்களை குறைப்பதும், தொழில்துறை மட்டத்திலான உடன்படிக்கைகள் மற்றும் தொழில் சட்டவிதிகளை மீறி நிறுவனங்கள் அவற்றின் ஒப்பந்தங்களை திணிக்க அனுமதிப்பதும் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் போது பிரான்சில் தொழிலாள வர்க்கம் பெற்ற சமூக பாதுகாப்புகளை மிகப் பரந்தளவில் அழிப்பதுமே அதன் குறிக்கோளாக இருக்கும்.

ஐரோப்பிய ஒன்றியத்தை அமெரிக்காவின் ஓர் இராணுவ போட்டியாளராக மாற்றுவதற்காக பேர்லினுடன் இணைந்து இயங்கும் அவரின் முயற்சியின் பாகமாக, மக்ரோன் கட்டாய இராணுவச் சேவையை மீண்டும் கொண்டு வரவும் பாரியளவில் இராணுவ செலவினங்களை அதிகரிக்கவும் திட்டமிடுவதால், சமூக செலவினத்தில் வெட்டுக்கள் அதிகமாக ஆழப்படுத்தப்படுத்தப்படும்.

ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு அவசரகால அதிகாரங்களை வழங்கும் வகையில், பிரான்சின் இரண்டாண்டு கால அவசரகால நெருக்கடி நிலையின் வகைமுறைகளில் பெரும்பான்மையானதை நிரந்தரமாகவே ஆக்க ஒரு சட்டம் நிறைவேற்றுவதற்கும் தேசிய நாடாளுமன்றம் பணிக்கப்படும். அரசியல் ஸ்தாபகத்தின் பெரும்பாலான பிரிவுகள், மக்ரோனின் திட்டநிரலுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் வெடிப்பார்ந்த எதிர்ப்பை எதிர்ப்பார்க்கின்ற நிலையில், தொழிலாள வர்க்கமே இந்நடவடிக்கையின் பிரதான இலக்கில் வைக்கப்படும்.

ஒரு துளி ஜனநாயக சட்டபூர்வத்தன்மையும் இல்லாமல் மக்ரோன் பிரெஞ்சு மக்கள் மீது நிதியியல் பிரபுத்துவத்தின் கட்டளைகளை திணிக்க முனைந்து வருகிறார். மறுஉருவாக்கம் செய்ய இப்போது அவர் சூளுரைத்து வருகின்ற மிகவும் பிற்போக்குத்தனமான நடவடிக்கைகள் இல்லாத போதே, ஹோலாண்டின் தொழிலாளர் சட்டத்தை மட்டுமே கூட மக்களில் முழுமையாக 70 சதவீதத்தினர் எதிர்த்தனர், பிரெஞ்சு இளைஞர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் அனைவருக்கும் கட்டாய இராணுவ சேவை கொண்டு வருவதை எதிர்க்கின்றனர்.

மக்ரோனின் வேலைத்திட்டத்திற்கு மக்கள் செல்வாக்கு இல்லாத போதும் அவர் ஒரு பெரும்பான்மை பெறக் கூடியவராக இருக்கிறார் என்றால் அதற்கு அனைத்திற்கும் மேலாக மெலோன்சோனும் (FI) மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA) போன்ற சோசலிஸ்ட் கட்சியின் மற்ற கூட்டாளிகளும் அவர்களது அரசியல் பொறுப்பை முழுமையாக கைத்துறந்திருப்பது தான் காரணம். அவர்கள் மே 7 இல் நடந்த இரண்டாம் சுற்று ஜனாதிபதி தேர்தல்களில், மக்ரோனுக்கு பகிரங்கமாக ஒப்புதல் வழங்கவில்லை என்றாலும், சோசலிஸ்ட் கட்சி, குடியரசு கட்சியுடனும் மற்றும்  தேசிய முன்னணி வேட்பாளர் மரீன் லு பென்னுக்கு ஜனநாயக மாற்றீடாக மக்ரோனை முன்னிறுத்திய ஊடகங்களுடனும் அவர்கள் உடன்படுகிறார்கள் என்பதை அவர்கள் தெளிவுபடுத்தி இருந்தார்கள்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste – PES) மட்டுமே, மக்ரோன் லு பென்னுக்கு மாற்றீடு கிடையாது என்பதை தொழிலாள வர்க்கத்திற்கு எச்சரிக்கைப்படுத்த இரண்டாம் சுற்று ஜனாதிபதி தேர்தல்களை செயலூக்கத்துடன் புறக்கணிக்குமாறு அழைப்புவிடுத்தது. இது மெலோன்சோன், புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் சுற்றுவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த குட்டிமுதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சியை பிரிக்கும் இணைக்க முடியாத வர்க்க இடைவெளியை காட்டுகிறது.

சிரியா மீது ட்ரம்பின் ஏப்ரல் 7 தாக்குதல்களை அடுத்து போர்-எதிர்ப்புணர்வு அதிகரித்ததன் அடிப்படையில் முதல் சுற்று ஜனாதிபதி தேர்தலில் மெலோன்சோனுக்கு திடீரென 20 சதவீத வாக்குகள் அதிகரித்த பின்னர், அவர் மக்ரோனுக்கு எதிரான மக்கள் எதிர்ப்புக்கு முறையிடுவதற்கு பதிலாக, மிக பகிரங்கமாக அவருடன் ஒரு கூட்டணி அமைக்க முயன்றதால் கருத்துக்கணிப்புகளில் அவர் வேகமாக வீழ்ச்சி அடைந்துள்ளார்.

அவர் மக்ரோனின் பிரதம மந்திரி ஆவதற்கு முன்வந்த பின்னரும், “மகிழ்ச்சியை எங்கே காணலாம் என்பதை அறிந்துள்ள புத்திசாலிகளின் உறுதியான கரங்களை" அவருக்கு வழங்க முன்வந்த பின்னரும், மக்ரோனின் அமைச்சர்களுடன் இணைந்து இயங்கவும் அவர் முன்மொழிந்தார். பிரெஞ்சு அரசியலை "ஒழுக்கநெறிப்படுத்த" மெலோன்சோனின் ஜனாதிபதி தேர்தல் வேலைத்திட்டத்திலிருந்து மக்ரோனின் சட்டத்திற்கு செயல்முறைகளைச் சேர்ப்பது குறித்து விவாதிக்க, அவர் மக்ரோனின் வலதுசாரி நீதித்துறை அமைச்சர் பிரான்சுவா பேய்ரூ ஐ சந்தித்திருப்பதாக கடந்த வாரம் பெருமையடித்தார்.

புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சியைப் பொறுத்த வரையில், அது குறிப்பிடுகையில் மக்ரோன் "கடந்த 30 ஆண்டுகால சுதந்திர சந்தை கொள்கைகளின் சிறந்த பிரதிநிதி", ஆனால் லு பென்னின் ஒரு சர்வாதிகார ஆட்சி அமைவதைத் தடுக்க எவ்வாறிருப்பினும் தொழிலாளர்கள் மக்ரோனுக்கு வாக்களிக்க வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டது. இந்தவகையில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கங்களால் நடைமுறைப்படுத்தப்பட்டதை விட அதிகமான வலதுசாரி எதிர்ப்புரட்சிகர கொள்கைகளை கொண்ட மக்ரோனின் ஜனநாயக-விரோத வேலைத்திட்டத்திற்கு அரசியல் மூடிமறைப்பை வழங்கியது.

FI, NPA மற்றும் இதுபோன்ற அமைப்புகளின் மறைமுக ஆதரவுடன் மக்ரோன் தேர்வானமை, பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சியின் (PES) தேர்தல்களைப் புறக்கணிப்பதற்கான அழைப்பை சரியென நிரூபித்துள்ளது. அனைத்திற்கும் மேலாக, ஜனாதிபதி தேர்தல்களைப் போலவே, இப்போதும் வாக்களிப்பதன் மூலமாக தொழிலாள வர்க்கத்திற்கு முன்செல்ல பாதை இல்லை என்பது அதிகரித்தளவில் தெளிவாக உள்ளது. சோசலிஸ்ட் கட்சி அல்லது குடியரசு கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதன் மூலமாக மக்ரோனின் தாக்குதல்களை தடுப்பது சாத்தியமில்லை, அவர்களுமே கூட மக்ரோனின் எதிர்ப்புரட்சிகர வேலைத்திட்டத்தை ஆதரிக்கிறார்கள். புரட்சிகர போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது மட்டுமே அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரே வழியாகும்.

மக்ரோன் தொழிலாளர்கள் மீது அவரது கட்டளைகளைத் திணிக்க முயன்று வரும் நிலையில், தொழிலாள வர்க்க போராட்டத்திற்கு ஒரு சுயாதீனமான அரசியல் முன்னோக்கை தெளிவுபடுத்தி, மக்ரோனுக்கு எதிரான போராட்டத்தின் முன்னணிப்படையாக பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டியெழுப்புவதே அதிஅவசிய பணியாக உள்ளது.