ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

In Paris talks with British prime minister May
French President Macron holds out prospect of canceling Brexit

பிரிட்டிஷ் பிரதம மந்திரி மே உடன் பாரீஸ் பேச்சுவார்த்தைகளில்

பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் பிரிட்டன் வெளியேறுவதை இரத்து செய்வதற்கான சாத்தியக்கூறுகளை வழங்குகிறார்

By Alex Lantier
15 June 2017

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது மீதான நிபந்தனைகள் குறித்து அடுத்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிரிட்டனுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் தொடங்க இருப்பதற்கு முன்னதாக, பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரேசா மே புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனை சந்திக்க செவ்வாயன்று பாரீஸ் விஜயம் செய்தார். உயர்மட்ட ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு அதிகாரிகள் பிரிட்டன் வெளியேறுவதற்கான வாக்குகளை இலண்டன் தலைகீழாக்க அனுமதிப்பார்கள் என்பதற்கும், எஞ்சிய ஐரோப்பிய ஒன்றிய சக்திகளுடன் ஒரு நெருக்கமான கூட்டணியை மீட்டமைப்பார்கள் என்பதற்கும் சமிக்ஞை காட்ட அவர்களுக்கு இதுவொரு சந்தர்ப்பதாக இருந்தது.

அது மாதிரியான முதல் கருத்தை ஜேர்மன் நிதி அமைச்சர் வொல்ஃப்காங் சொய்பிள வெளியிட்டார். மக்ரோன் மே ஐ சந்திக்க தயாரான போது சொய்பிள புளூம்பேர்க் செய்திகளுக்கு கூறுகையில், “பிரிட்டன் வெளியேற்றத்தில் நாங்கள் நிலைத்திருப்போமென பிரிட்டிஷ் அரசாங்கம் தெரிவித்துள்ளது,” என்றார். “நாங்கள் அந்த முடிவை மதிப்பளிக்க வேண்டிய ஒரு விடயமாக எடுத்துக் கொள்கிறோம். ஆனால் அவர்கள் முடிவை மாற்றிக் கொள்ள விரும்பினால், உண்மையில், கதவுகள் திறந்திருப்பதை அவர்கள் காண்பார்கள்,” என்றார்.

மே உடனான கூட்டு பத்திரிகையாளர் கூட்டத்தில், பிரெஞ்சு ஜனாதிபதி கூறுகையில், “ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது என்ற முடிவு பிரிட்டிஷ் மக்களால் எடுக்கப்பட்டது, அம்முடிவை நான் மதிக்கிறேன்,” என்றும் கூறினார். ஆனால் "பிரிட்டன் வெளியேறுவது மீதான பேரம்பேசல்கள் முடிவுறாத வரையிலும் கதவு திறந்தே இருக்கும் … பேச்சுவார்த்தைகள் தொடங்கியதும், பின்வாங்குவது இன்னும் அதிக சிரமமாக இருக்கும் என்பதில் நாம் ஒருசேர நனவுபூர்வமாக இருக்க வேண்டும்,” என்றார்.

கடந்த வாரம் நடந்த முன்கூட்டி அழைப்புவிடுக்கப்பட்ட தேர்தலுக்கு பின்னர் நாடாளுமன்றத்தில் பழமைவாத கட்சியின் முழு பெரும்பான்மையை இழந்து படுமோசமாக பலவீனமடைந்துள்ள மே, “பிரிட்டன் வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை வழிமுறையில் உள்ளன, அடுத்த வாரம் பேச்சுவார்த்தைகள் தொடங்கும்,” என்று மக்ரோனுக்கு உறுதியளித்தார். எவ்வாறிருப்பினும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான உறவுகளைப் பேணும் விதத்தில் ஒரு "மென்மையான பிரிட்டன் வெளியேற்ற" மூலோபாயத்தை ஏற்க, பழமைவாத கட்சிக்குள் இருந்தும், மற்றும் பிரிட்டிஷ் ஆளும் உயரடுக்கில் இருந்தும் வரும் அழைப்புகள் மீது அவர் ஒரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை.

தீவிரமானதாக அல்லது பயங்கரவாத பதிவுகளாக கருதப்படுவதை நீக்க மறுக்கும் சமூக ஊடக பெருநிறுவனங்கள் மீது அபராதம் விதிக்க அச்சுறுத்தி, சமூக ஊடகங்கள் மீது தணிக்கையை அதிகரிப்பதற்கான திட்டங்களையும் மே மற்றும் மக்ரோன் விவாதித்தனர்.

போட்டி ஐரோப்பிய அரசுகள், அதிகரித்து வரும் மக்கள் அதிருப்தியை தணிக்க முயன்று வரும் நிலையில், அதிகரித்தளவிலான அவற்றின் பெரும்பிரயத்தன சூழ்ச்சிகளையே இந்த முன்மொழிவுகள் பிரதிபலிக்கின்றன, அதேவேளையில் ஐரோப்பாவிற்கான ட்ரம்பின் முதல் விஜயத்திற்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வாஷிங்டனுக்கு இடையே ஒரு கடுமையான மோதல் கட்டவிழ்ந்துள்ளது—இதில் பிரிட்டனின் வெளியுறவு கொள்கை நோக்குநிலையும் உள்ளடங்குகிறது.

முன்கூட்டியே அழைக்கப்பட்ட சமீபத்திய தேர்தலில் மே இன் பின்னடைவானது பிரிட்டனில் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் தேசியவாதத்தை மக்கள் அதிகரித்தளவில் நிராகரிப்பதற்கான ஒரு அறிகுறியாக பேர்லின் மற்றும் பாரீஸில் புரிந்து கொள்ளப்பட்டது. அவை ட்ரம்ப் உடனான ஒரு கூட்டணி மீதான அதன் நம்பிக்கை மங்கி வருவதைக் கைவிட்டு, அதற்கு பதிலாக ஏதோவொரு வகையில் மென்மையான பிரிட்டன் வெளியேற்றம் அல்லது ஒட்டுமொத்தமாக பிரிட்டன் வெளியேறுவதையே தவிர்த்துக் கொள்வதைப் பாவித்து ஐரோப்பாவுடன் அணிசேர்வதற்கு இலண்டனை சமாதானப்படுத்துவதற்காக அச்சுறுத்தல்கள் மற்றும் ஊக்குவிப்புகளின் ஒரு கலவையை நம்பிக் கொண்டிருக்கின்றன. அதேநேரத்தில், ஐரோப்பா எங்கிலும் இராணுவவாதம் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கான அவற்றின் சொந்த பிற்போக்குத்தனமான திட்டங்களுக்கு அதிகரித்து வரும் மக்கள் எதிர்ப்பை மட்டுப்படுத்தவும் அவை கருதுகின்றன.

சொய்பிள கூறுகையில் அவர் அவரின் பிரிட்டிஷ் சமபலமான நிதித்துறை சான்சிலர் பிலிப் ஹாம்மாண்ட் உடன் பிரிட்டிஷ் தேர்தல் குறித்து விவாதித்ததாக தெரிவித்தார். அவர் கூறினார், “பிரிட்டன் வெளியேறுவது என்பது பிரிட்டிஷ் வாக்காளர்கள் எடுத்த முடிவு என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதை நாங்கள் முதல் நாளில் இருந்து உடன்பட்டுள்ளோம். ஆனால் சாத்தியமான சேதாரங்களைக் குறைத்து, பரஸ்பர ஆதாயங்களை அதிகரிப்போம்,” என்றார். ஹாம்மாண்ட் உடன் பேசிய பின்னர், சொய்பிள கூறுகையில், தொழிற் கட்சியின் ஜேர்மி கோர்பினை ஆதரித்த இளைஞர்கள் "பிரிட்டன் வெளியேறுவதிலிருந்து அதிகம் விலகி" இருக்கிறார்கள் என்ற உண்மை குறித்து இங்கிலாந்தில் "அவர்கள் யோசித்து வருவதாக" அவர் நிறைவு செய்தார்.

சொய்பிள பிரான்ஸ் நிலைமைகளுடன் குறிப்பிட்டளவிற்கு "சமாந்தரங்களை" பார்த்ததாக புளூம்பேர்க் சேர்த்துக் கொண்டது. அங்கே, அவரது ஆழ்ந்த சிக்கன நடவடிக்கை, பேர்லின் உடனான இராணுவமயப்பட்ட கூட்டணி, மற்றும் ஒரு நிரந்தர அவசரகால நிலைக்கு பரந்த எதிர்ப்பு இருந்த போதினும் மக்கள் மக்ரோனைத் தேர்ந்தெடுத்தனர். அந்த வாக்குகள் பெரிதும் நவ-பாசிசவாத வேட்பாளர் மரீன் லு பென்னுக்கு மற்றும் யூரோவிலிருந்து பிரெஞ்சு வெளியேறுவதற்கான லு பென்னின் தேசிய முன்னணியினது திட்டங்களுக்கு எதிரான எதிர்ப்பாக இருந்தது. இந்த கொள்கைகள் பிரான்சில் தொழிலாள வர்க்கத்திடையே வெடிப்பார்ந்த சமூக எதிர்ப்பைத் தூண்டுமென ஆளும் உயரடுக்கு உட்பட பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் பிரதம மந்திரி டேவிட் கேமரூன் மற்றும் ஜோன் மேஜர் உட்பட பல முன்னணி பிரிட்டிஷ் பழமைவாதிகள் ஒரு "மென்மையான பிரிட்டன் வெளியேற்ற" மூலோபாயத்திற்கு அழுத்தமளித்ததற்குப் பின்னர் சொய்பிள இன் இந்த கருத்துக்கள் வந்தன. ஒரு கடுமையான பிரிட்டன் வெளியேற்றத்திற்கான திட்டங்கள் "அதிகரித்தளவில் நீடித்திருக்க முடியாதென" மேஜர் அறிவித்தார், அதேவேளையில் மே இன் பிரிட்டன் வெளியேற்ற மூலோபாயம் இதுவும் அவர் "ஏனைய கட்சிகளுடன் அதிகமாக பரந்தளவில்" கலந்தாலோசிக்குமாறு கேமரூன் அழைப்புவிடுத்தார்.

சொய்பிள மற்றும் மக்ரோன் இலண்டன் உடன் சேர்ந்திருப்பதற்கான மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புகளை வழங்கிய நிலையில், பிரிட்டன் வெளியேறுவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சுவார்த்தையாளர் மைக்கேல் பார்னெர் உட்பட ஏனைய ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்கள் பிரிட்டன் வெளியேறுவதற்கான வாக்குகளுக்காக கடுமையான பொருளாதார விளைவுகளுடன் இலண்டனை தொடர்ந்து அச்சுறுத்தினர்.

அவரது பிரிட்டன் வெளியேற்ற மூலோபாயம் குறித்து Le Monde உட்பட ஐரோப்பிய பத்திரிகைகளின் கூட்டமைப்பு உடனான ஒரு பேட்டியில், பார்னெர் கூறுகையில், “நாங்கள் அதை ஆக்ரோஷமின்றி, பழிவாங்கும் அல்லது தண்டிக்கும் நோக்கமின்றி, ஆனால் அப்பாவித்தனமாக விட்டுக்கொடுக்கும் தன்மையின்றி நடைமுறைப்படுத்துவோம். இலண்டன் உடனான எங்களின் எதிர்கால உறவுகள் என்னவாக இருக்கும்? பிரிட்டிஷ் அரசியல் தலைவர்கள் வழமையாக குறிப்பிடும் "உடன்பாடு கிடையாது" விருப்புரிமை உட்பட ஒவ்வொரு விருப்புரிமைக்கும் தயாரிப்பு செய்து வருகிறோம்,” என்றார். “உடன்பாடு கிடையாது" விருப்புரிமையானது ஐரோப்பா உடனான பிரிட்டிஷ் வர்த்தகத்திற்கு குறிப்பாக கடுமையாக இருக்கும் என்பதையும் பார்னெர் சேர்த்துக் கொண்டார்.

மென்மையாக பிரிட்டன் வெளியேறுவதற்கான முன்மொழிவுகளை வழங்குவதில் சொய்பிள மற்றும் மக்ரோனின் பாத்திரம், பிரிட்டன் வெளியேறுவதற்கான விவாதத்தில் சகல முதலாளித்துவ கன்னைகளது இன்றியமையாத பிற்போக்குத்தன குணாம்சத்தைக் காட்டுகிறது. கடுமையான பிரிட்டன் வெளியேற்றத்திற்கு சார்பான கன்னைகள் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தவும் மற்றும் நெறிமுறைகளை முறிக்கவும் தீர்மானகரமாக இருப்பதுடன் மிகவும் பகிரங்கமாக தேசியவாதத்துடன் இருந்த நிலையில், மென்மையாக பிரிட்டனை வெளியேற்றுவதை ஆதரிப்பவர்கள் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்திலேயே இருக்கலாம் என்பவர்கள் ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுக்கும் ஓர் ஆக்ரோஷமான இராணுவவாதம் மற்றும் சிக்கன கொள்கையையும் ஆதரித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு பிரிட்டன் வெளியேறுவது மீதான சர்வஜன வாக்கெடுப்பை செயலூக்கத்துடன் புறக்கணிக்குமாறு அழைப்புவிடுத்த பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்தியதைப் போல, சகல முதலாளித்துவ கும்பல்களையும் நிராகரித்து, தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு சுயாதீனமான, புரட்சிகர சோசலிச முன்னோக்கு தான் முக்கிய பிரச்சினையாகும். கால்வாயின் இருதரப்பிலும் உள்ள பிற்போக்குத்தனமான முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு இடையிலான கொள்கை ஒருங்கிணைப்புகள் தெளிவுபடுத்துவதைப் போல, இது ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்கான போராட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் உள்ள தொழிலாளர்களை பிரிட்டிஷ் தொழிலாளர்களுடன் ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு போராட்டம் மூலமாக மட்டுமே நடக்கும்.

மறுபுறம் ஐரோப்பாவின் முதலாளித்துவ வர்க்கங்களிடையே என்ன மேலெழுந்து வருகிறது என்றால், ஈவிரக்கமற்ற புவிசார்அரசியல் மோதல் மற்றும் ஐரோப்பாவில் புதிய போர்களுக்கு அறிகுறியாக இராணுவ செலவுகளை அதிகரிப்பதற்கான உந்துதல். ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளுக்கு எதிராக நெறிப்படுத்தப்பட்ட ஒரு சுதந்திரமான ஐரோப்பிய வெளியுறவு மற்றும் இராணுவ கொள்கைக்கு, சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் வெளியுறவு அமைச்சர் சிக்மார் காப்ரியேல் உட்பட உயர்மட்ட ஜேர்மன் அதிகாரிகளிடம் பகிரங்கமாக அழைப்புகள் வந்துள்ளதால் நிலைமை மொத்தத்தில் அதிக வெடிப்பார்ந்து உள்ளது. 

பிரான்சில் மக்ரோன் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்னர், உலகின் மேலாதிக்க சக்தியாக அமெரிக்காவை பிரதியீடு செய்து ஜேர்மன் மேலாதிக்கத்திலான ஐரோப்பிய ஒன்றியத்தை ஸ்தாபிப்பதற்கான அதன் உந்துதலுடன் நெருக்கமாக அணிசேர்ந்துள்ள ஒரு கூட்டாளியை பேர்லின் பாரீசில் கொண்டுள்ளது.

மக்ரோனின் வெளியுறவு கொள்கையின் அடியிலிருக்கும் கணக்கீடுகளில் சில Institut Montaigne சிந்தனை குழாமின் சிறப்பு புவிசார் அரசியல் ஆலோசகர் டொமினிக் முவாசியால் (Dominique Moisi) Le Point இன் ஒரு சமீபத்திய பேட்டியில் எடுத்துரைக்கப்பட்டது. “ட்ரம்ப் அவர் அதிருஷ்டம் சார்ந்த விடயம்" என்பதால், பேர்லினுடன் வேகமாக மற்றும் நெருக்கமாக இணைந்து இயங்குமாறு மக்ரோனுக்கு அவர் அழைப்புவிடுத்தார். “அமெரிக்கா விடுவித்துக் கொள்கிறது, அமெரிக்க வீழ்ச்சி தீவிரமடைகிறது,” என்றால் "ஒவ்வொன்றும் மிக வேகமாக மாற்றமடையும்,” என்பதை அனுமானித்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் உலகளாவிய மேலாதிக்கத்திற்கான நீண்டகால முயற்சிக்கு முவாசி ஒரு வேலைத்திட்டத்தை விவரித்தார்.

கடந்த மாதம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் உடனான உச்சி மாநாட்டு சந்திப்பை மக்ரோன் கையாண்ட விதத்தை, "முதல்முறையாக ஒருவர் விளாடிமீர் புட்டினுக்கு" “'விளையாட்டு போதும்! இப்போது வேலையில் இறங்குங்கள்.' நாங்கள் அதற்காக காத்திருக்கிறோம்" என்று கூறியதாக முவாசி பாராட்டினார். முன்னாள் பாதுகாப்பு மந்திரி ஜோன்-ஈவ் லு திரியோனை வெளியுறவுத்துறை மந்திரியாக மக்ரோன் நியமித்தமை "சர்வாதிகார அரசாங்கங்கள் மற்றும் எகிப்தில் ஜெனரல் அல்-சிசி மற்றும் சவூதியர்கள் போன்ற குறிப்பிட்ட முக்கிய பங்காளிகளுக்கு" மறுஉத்தரவாதம் அளிக்கும் என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

அவர் அமெரிக்க இழப்பில் சீன-ஐரோப்பிய ஒன்றிய உறவுகளில் வேகமாக அபிவிருத்திகளை மேற்கொள்ளவும் சுட்டிக்காட்டினார்: “ட்ரம்பின் காரணமாக, நாம் எதிர்பல கூட்டணிகளைப் பார்த்து வருகிறோம், இதன் தாக்கங்கள் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை. இது காலநிலை மாற்றம் போன்றதல்ல, அதில் சீனர்கள் முழுமையாக ஐரோப்பியர்களுடன் அணிசேர்ந்துள்ளனர். அமெரிக்கா இன்று அனுமானிக்க இயலாதுள்ள நிலையில், சீனாவிற்கு வேறு வாய்ப்பில்லை ஐரோப்பாவை நோக்கி திரும்பி ஆக வேண்டும். அனைத்திற்கும் மேலாக சீனாவிற்கு ஸ்திரப்பாடு தேவைப்படுகிறது. ஐயத்திற்கிடமின்றி அது அதன் பொறுப்புகளை எடுக்க வேண்டியிருக்கும் மற்றும் அது எதிர்பார்த்திருந்ததை போலவே ஆசியாவின் பொலிஸ்காரராக ஆக வேண்டியிருக்கும்,” என்றார்.