ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian authorities seek to imprison more Maruti Suzuki workers on frame-up charges

ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் மேலும் மாருதி சுசூகி தொழிலாளர்களை சிறையிலிட இந்திய அதிகாரிகள் முனைகின்றனர்

By Shannon Jones
13 June 2017

ஜோடிப்பு வழக்கின் பேரில் கைதுசெய்து சிறையிலிடப்பட்டிருந்த 117 முன்னாள் மாருதி சுசூகி வாகனத் தொழிலாளர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்து அவர்களை விடுவித்து, இந்த ஆண்டுத் தொடக்கத்தில் ஒரு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை வடமேற்கு இந்திய ஹரியானா மாநில அரசாங்கம் சவால் செய்துள்ளது.

ஜூலை 2012 ல் நிர்வாகத்தினால் தூண்டிவிடப்பட்ட ஒரு கைகலப்பு மற்றும் அப்போது அந்நிறுவன மானேசர் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தின் விளைவாக நிறுவன மேலாளர் ஒருவர் மரணமடைந்தது போன்றவை தொடர்பாக இந்த குற்றச்சாட்டுக்கள் எழும்பின. ஜப்பானிய வாகன உற்பத்தியாளர், இந்திய அரசாங்கம் மற்றும் அரசியல் ஸ்தாபகம் அனைவரும் ஜூலை 18, 2012 சம்பவங்களை, இந்திய தலைநகரம் தில்லியின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள மானேசர் குர்கான் தொழில்துறை பகுதியில் நிலவுகின்ற மலிவுகூலி உழைப்பு வேலையிட நிலைமைகளுக்கு ஒரு மைய எதிர்ப்பாக உருவாகிவரும் வாகன ஒருங்கிணைப்பு ஆலைத் தொழிலாளர்கள் மீது ஒரு சட்டபூர்வமான சதிவேட்டையை தொடங்குவதற்கும், அந்த தொழிலாளர் தொகுப்பை வெளியேற்றுதற்குமான ஒரு வாய்ப்பாக பயன்படுத்தினர்.

“கலகத்தில் ஈடுபட்டதாகவும்” மற்றும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய குற்றச்சாட்டுக்களின் பேரிலும் குற்றம்சாட்டப்பட்ட 18 தொழிலாளர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்க முனைவதற்கு திட்டமிடுவதாக பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான மாநில அரசாங்கமும் தெரிவித்துள்ளது. இவர்கள் 3 முதல் 5 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனைகள் விதிக்கப்பட்டு இருந்தனர்.  

இந்த தீர்ப்பை எதிர்த்து மாநிலத்தின் மேல்முறையீடு தயாரிக்கப்பட்டு விரைவில் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கடந்த வியாழனன்று ஹரியானா மாநில அரசுத் தலைமை வழக்கறிஞர் ராஜ் மஹாஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மார்ச் இல், குருகிராமில் (குர்கான்) உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றம் 2012 சம்பவங்களினால் உருவான குற்றச்சாட்டுக்களின் பேரில் 31 முன்னாள் மாருதி சுசூகி தொழிலாளர்களை குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து அவர்களுக்கு தண்டனைகளை விதித்தது. இந்த 31 பேரில் 13 பேர் மீது மேலாளரின் மரணம் குறித்து ஜோடிக்கப்பட்ட கொலை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து இந்தியாவின் மிருகத்தனமான சிறை அமைப்புக்குள் அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு நிறுவன சார்புடைய, அரசாங்க ஆதரவுள்ள தொழிற்சங்கத்திற்கு எதிராக 2011-12 இல் ஒரு தொடர்ச்சியான போர்க்குணமிக்க வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆக்கிரமிப்புக்கள் மூலமாக தொழிலாளர்களால் கட்டியமைக்கப்பட்ட ஒரு சுயாதீன தொழிற்சங்கமான மாருதி சுசூகி தொழிலாளர்கள் சங்கத்தின் (MSWU) ஒட்டுமொத்த தலைமையும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிடப்பட்ட தொழிலாளர்களில் அடங்குவர்.

ஒரு சட்டபூர்வ பழிவாங்கும் நடவடிக்கையினால் இவர்கள் பாதிக்கப்பட்டவர்கள். இந்தியாவின் புதிய மற்றும் உலகளாவிய ரீதியில் இணைந்த தொழில்களில் தொழிலாளர்கள் மீது நாடுகடந்த நிறுவனங்கள் சுமத்தும் மிகமோசமான ஊதியங்கள் மற்றும் மிருகத்தனமான வேலைத்திட்டங்களை எதிர்க்கவேண்டிய நிர்பந்தத்தில் இந்த தொழிலாளர்கள் இருந்தது மட்டுமே அவர்கள் செய்த ஒரே “குற்றமாக” உள்ளது.

பொலிஸூம், வாதித் தரப்பும் மாருதி சுசூகி நிர்வாகத்துடன் இணைந்து ஆதாரங்களை ஜோடித்து, சாட்சிகளை பயிற்றுவித்ததுடன், சட்டவிரோதமாக அவர்களுடன் இரகசியமாக சேர்ந்து வேலைசெய்துள்ளனர் என்பது போன்ற மறுக்கமுடியாத ஆதாரங்களுக்கு முகம்கொடுத்து நீதிமன்றம் 117 தொழிலாளர்களை குற்றங்களிலிருந்து விடுவித்தது.

மானேசர் ஆலையில் பணியில் இல்லாதவரும், மேலும் அந்த கைகலப்பினை நேரடியாக காணாதவருமான மூத்த மாருதி சுசூகி அதிகாரி ஒருவர் மூலம் வழங்கப்பட்ட பெயர்ப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு இந்த 117 பேரில் 87 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர் என்பதை பிரதிவாதித் தரப்பு வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டினர். பின்னர், இது நீதிமன்றத்தில் வெளிவந்துவிடுமென அஞ்சி, 87 பேரும் இதனுடன் சம்பந்தப்பட்டிருப்பதாக சாட்சியம் கூற நான்கு மாருதி சுசூகி தொழிலாளர் ஒப்பந்தக்காரர்களை புனையப்பட்ட ஆதாரங்களாக பொலிஸார் உருவாக்கினர்.

இந்த வழக்கு முழுமையிலும் மாநிலத்தின் நடப்புடன் ஒத்துப்போவதாகவே பொலிஸின் சட்டவிரோத நடவடிக்கைகள் இந்த 87 பேருக்கு எதிராக இருந்தன. முக்கிய சாட்சியங்கள் தொடர்பாக அடிப்படை தடயவியல் சோதனைகள் நடத்துவதற்கு கூட பொலிஸ் தவறிவிட்டது. நிறுவன மேலாளர் மீது அவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டதில், உள்நோக்கத்துடன் தொழிலாளர்கள் எந்தமாதிரியான ஆயுதங்களைப் பயன்படுத்தினார்கள் என்பது உட்பட, வழக்கு விசாரணையின் அடிப்படை குறிப்பைக்கூட வாதித் தரப்பு மாற்றியது. மூச்சுத்திணறல்தான் மேலாளரை மரணத்திற்கு இட்டுச்சென்றது என்ற நிலையில், வாதித் தரப்பு வழக்கின் கடினமான பிரச்சனையாக இந்த நெருப்பிடல் சம்பவம் இருந்தபோதிலும், கைகலப்பிற்கு மத்தியில் மர்மமான முறையில் ஆலையில் வெடித்த தீ விபத்திற்கு ஏதேனும் ஒரு மாருதி சுசூகி தொழிலாளர்தான் காரணமென்று தொடர்புபடுத்தி வாதிடவும் வாதித் தரப்பு தவறிவிட்டது.

ஆயினும், நீதிபதி அனைத்தையும் வேண்டுமென்றே புறக்கணித்து, MSWU தலைவர்கள் உட்பட 31 பேருக்கு எதிரான ஜோடிப்பு வழக்குகளை உறுதிசெய்தார்.

குற்றவாளியென தீர்ப்பு வழங்கப்பட்டு தண்டனையும் விதிக்கப்பட்ட பின்னர், அது குறித்து ஹரியானா மாநில அரசாங்கம் மேல்முறையீடு செய்வது மேலும் பழிவாங்கும் நடவடிக்கையாகவுள்ளது. வாகன ஆலைகள் அல்லது ஏனைய உற்பத்தி வசதிகளில் மலிவு உழைப்பு நிலைமைகள் குறித்து முடுக்கிவிடப்படும் எந்தவொரு எதிர்ப்பையும் அடையாளம் தெரியாமல் ஒடுக்குவதில் அதிகாரிகளையும், அரசியல் ஸ்தாபகத்தையும் கணக்கில் கொள்ளமுடியும் என்ற வகையில், இந்தியா முழுவதிலும் தொழிலாளர்களை அச்சுறுத்தி பெரு வணிகத்தை நிரூபிக்க இது நோக்கம் கொண்டுள்ளது. முதலீட்டாளர்களை உறுதிபடுத்துவதற்கு மாருதி சுசூகி தொழிலாளர்கள் ஒரு உதாரணமாக்கப்பட வேண்டுமென்று அரசாங்கமும், சட்ட அதிகாரிகளும் தங்களுக்குள் மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டனர்.

ஜப்பானை தளமாகக் கொண்ட சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இந்திய இணை நிறுவனமே மாருதி சுசூகி நிறுவனமாகும். ஜப்பானின் நான்காவது மிகப்பெரிய வாகனத் தயாரிப்பு நிறுவனமாக இது இருப்பதுடன், குறைந்த உற்பத்தி செலவினங்களுக்கான வழிவகையை தேடும் முயற்சியில் உலகையே அழிக்க முனையும் நாடுகடந்த பெருநிறுவனங்களில் குறிப்பிடத்தக்க ஒரு நிறுவனமாக இந்த நிறுவனம் உள்ளது. அதன் மலிவு உழைப்பு ஆட்சியின் ஒரு பகுதியாக, மிகுந்தளவில் சுரண்டலுக்கு உட்படுத்தப்படும் ஒப்பந்த தொழிலாளர்களையே ஒரு பெரும் விகிதத்தில் பணியமர்த்துகின்றது. உண்மையில், MSWU இன் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழிப்பதாகும்.

மாருதி சுசூகி தொழிலாளர்களை பழிவாங்குவதன் மூலம், நிர்வாகம் அதன் தொழிலாளர்கள் மீதான சுரண்டலையும், மேலும் வீழ்ச்சியடைந்த முதலீட்டாளர் இலாபங்களையும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த வாகனத் தயாரிப்பு நிறுவனம் தற்போது அதன் இந்திய ஆலைகளில் ஒவ்வொரு 12 விநாடிக்கும் ஒரு கார் வீதம் தயாரிப்பதாக தற்பெருமை பேசுகிறது.

கூடுதல் முதலீட்டிற்கு கோரிக்கைவிடும் பொருட்டு இந்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சமீபத்தில் ஜப்பானுக்கு விஜயம் செய்தார். அங்கு இருந்தபோது, சுசூகி மோட்டார்ஸ் இன் தலைவர் ஒசாமு சுசூகியை அவர் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, இந்திய மாநிலம் குஜராத்தில் 880 மில்லியன் அமெரிக்க டாலர் (US$880 million) மதிப்பிலான தொகையை முதலீடு செய்ய சுசூகி உறுதியளித்தார்.

மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான விசாரணை தொடக்கத்திலிருந்து முடிவு வரையிலும் போலியானதாகவே இருந்தது. நிறுவனத்தின் வழக்கறிஞர் ஒருவரே வாதித் தரப்பின் ஒரு துணை ஆலோசகராக செயல்பட்டார். முரண்பாடான மற்றும் வெளிப்படையாக பயிற்றுவிக்கப்பட்ட சாட்சியத்தை வழங்க மேலாளர்கள் முழுமையாக சுதந்திரமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்களில் எவரும் விசாரணைக்கு சாட்சியமளிக்க அனுமதிக்கப்படவில்லை.

பிரதிவாதித் தரப்பு வழக்கறிஞர் வாதித் தரப்பு சாட்சிகளை மறு விசாரணைக்காக மீண்டும் அழைத்தபோது தலைமை நீதிபதி அனுமதியளிக்க மறுத்துவிட்டார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் குறித்த ஒரு நியாயமான விசாரணை போன்ற அவர்களது உரிமைகள் மறுக்கப்படுவதை ஒரு உயர்நீதிமன்றம் கண்டது. ஆனால் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டை தக்கவைத்துக்கொள்ளவும், உயர் நீதிமன்ற தீர்ப்பை தகர்க்கவும் இந்தியாவின் உயர் நீதிமன்றமான, இந்திய உச்ச நீதிமன்றம் (Indian Supreme Court) தலையீடு செய்தது.

31 பேரை குற்றவாளிகளாக தீர்ப்பளித்தமைக்கு ஒரு போலியான சட்டபூர்வ சாக்குப்போக்கை வழங்க ஏதுவாக, அடிப்படை சட்ட நெறிமுறைகளை மீறுவதன் மூலம் வழக்கு தொடர்பான நிரூபணங்களின் சுமையை முக்கியமாக வாதித் தரப்பினரின் தோள்களிலிருந்து தொழிலாளர்கள் பக்கம் மாற்றிவிடும் விதமாக விசாரணை நீதிபதி ஒரு தொடர்ச்சியான தீர்ப்புக்களை வழங்கினார்.

கொலைக் குற்றம்சாட்டப்பட்ட 13 மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படவேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்ததற்கான காரணத்தை சிறப்பு வழக்கறிஞர் அனுராக் ஹூடா விளக்கியபோது பின்வருமாறு அறிவித்தார்: “நமது தொழில்துறை வளர்ச்சி வீழ்ச்சியடைந்துவிட்டதுடன், வெளிநாட்டு நேரடி முதலீடும் (Foreign Direct Investment-FDI) வரண்டு விட்டது. பிரதம மந்திரி நரேந்திர மோடி “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” திட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், இத்தகைய சம்பவங்கள் நம்மைப் பற்றிய எண்ணம் மீதான ஒரு கறையாக உள்ளது.”

அதேபோல், இந்தியாவிலுள்ள நடைமுறை அரசியல் கட்சிகளும் இந்த ஜோடிப்பு வழக்கு குறித்த தங்களின் ஆதரவை மறைமுகமாக விடுத்துள்ளனர். பிரதம மந்திரி நரேந்திர மோடி தலைமையிலான ஆளும் இந்து மேலாதிக்கவாத பி.ஜே.பி.யும், எதிர்க் கட்சியான காங்கிரஸ் கட்சியும் இதில் அடங்கும்.

மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு எதிராக சட்டரீதியான சதிவேட்டை தொடங்கப்பட்டபோது ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான மாநில அரசாங்கம் இருந்தது. மேலும் தற்போதுள்ள பி.ஜே.பி. மாநில அரசாங்கம் 117 பேரை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்க முறையீடு செய்துவருகின்ற அதேவேளையில், குறைந்த குற்றச்சாட்டுக்களின் பேரில் தண்டனைகளைப் பெற்ற 18 தொழிலாளர்கள் மீது கடுமையான தண்டனைகளை விதிக்கச் செய்வதற்கு முனைந்து வருகிறது.

ஜோடிக்கப்பட்ட வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ள மாருதி சுசூகி தொழிலாளர்களை உடனடியாக விடுவிப்பதிலும், அவர்களுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் இல்லாதொழிப்பதிலும் வெற்றி பெற சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (International Committee of the Fourth International), உலக சோசலிச வலைத் தளமும் (World Socialist Web Site) ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளன. இந்தியா மற்றும் இலங்கையில் மறியல்களும், கூட்டங்களும் நடத்தப்பட்டன, மேலும் இவற்றின் மூலம் நடத்தப்பட்ட ஒரு சர்வதேச அளவிலான மனு பெறும் பிரச்சாரமும் கணிசமான ஆதரவைப் பெற்றது.

பெருநிறுவன கட்டுப்பாட்டு நீதிமன்றங்கள், பெரும் வணிக அரசியல் கட்சிகள் அல்லது நிர்வாக சார்பு கொண்ட உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்கள் போன்றவற்றின் மீது எந்தவித நம்பிக்கையும் வைக்கமுடியாதென ICFI வலியுறுத்துகின்றது. தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன தொழில்துறை மற்றும் அரசியல் அணிதிரள்வின் மூலமாக மட்டும்தான் மாருதி சுசூகி தொழிலாளர்களை பாதுகாக்க முடியும்.

ஸ்தாபக அரசியல்வாதிகளின் தவறான முறையீடுகளுக்குள் தொழிலாளர்களை திசைதிருப்பவும், தங்களது ஆதரவின் பேரில் ஆர்ப்பாட்டங்களை தடுத்து நிறுத்தவும் முனைகின்ற ஸ்ராலினிச கட்டுப்பாட்டிலான உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் பல்வேறு பிடிகளுக்கு மத்தியில், மாருதி சுசூகி தொழிலாளர்களை பாதுகாக்கும் விதமாக ICFI ஆதரவாளர்களின் பிரச்சாரம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மாருதி சுசூகி தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக என்பதன் பேரில், இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது CPM, தொழிலாளர்களுக்கான ஊதியங்களை நிறுத்தி அவர்களது ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதன் மூலமாக, நாட்டிற்குள் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது குறித்த இந்திய அரசாங்கத்தின் உந்துதலுக்கு ஆதரவளிப்பது போன்ற நாசவேலைகளில் ஈடுபட முனைந்துள்ளது. தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான முன்முயற்சியின் எந்தவொரு வெளிப்படுத்துதலுக்கும் நேர் விரோதமானவர்களாக இருக்கின்ற ஸ்ராலினிஸ்டுகள், மாருதி சுசூகி தொழிலாளர்களின் கலகத்தனமான உணர்வைக் கண்டு அஞ்சுகின்றனர்.

மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு எதிராக மேலதிக பழிவாங்கும் நடவடிக்கைகளைத் தொடங்க மாநில அதிகாரிகள் தற்போது உணர்ச்சிவசப்படும் பட்சத்தில், அது இந்த வழக்கை மூடிமறைக்க முயன்றுவரும் இந்திய ஸ்ராலினிஸ்டுகளின் துரோகத்தனமான பாத்திரத்திற்கு ஒரு சாட்சியமாகும். பல வாரங்களாக CPM இன் ஆங்கில மொழி பத்திரிகையான People’s Democracy, 31 மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீது விதிக்கப்பட்ட தண்டனைகள் குறித்தும், அதிலும் இவர்களில் MSWU இன் அனைத்து 12 நிர்வாக உறுப்பினர்களும் உட்பட 13 பேருக்கு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளது குறித்தும் அறிக்கை வெளியிடத் தவறிவிட்டது.

மாருதி சுசூகி தொழிலாளர்களை பாதுகாக்க முன்வருமாறு உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களை ICFI யும், WSWS ம் வலியுறுத்துகின்றன. மலிவுகூலி உழைப்பு நிலைமைகளுக்கு சவாலாக, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் சார்பாக மேற்கொள்ளப்பட்ட ஒரு அடியாக அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவந்தனர். மாறாக, சுசூகி நிறுவனமும், இந்திய ஆளும் உயரடுக்கும் இந்த போர்க்குணமிக்க தொழிலாளர்கள் மீது வெற்றிகரமாக ஜோடிப்பு வழக்குகளை பதிவுசெய்து, அவர்களை சிறையிலிடும் பட்சத்தில், அது நாடுகடந்த நிறுவனங்கள் மற்றும் அவர்களின் அரசியல் கூலிகளை ஊக்கம் கொள்ளச் செய்வதாகவும், வலுவூட்டுவதாகவும் மட்டுமே இருக்கும்.

மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான ஜோடிப்பு வழக்கு குறித்து எதிர்க்கவும், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மத்தியில் இந்த வழக்கு பற்றிய விபரத்தை பரவலாக அறியச்செய்வதற்கும், இணையவழி மனுவில் கையெழுத்திட உலகளவில் அனைத்து தொழிலாளர்களையும் நாங்கள் ஊக்குவிக்கின்றோம்.