ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

මිල්ටරිය ශක්තිමත් කිරීමට දිවුරමින් ජනාධිපති සිරිසේන සූදානම් කරන්නේ ආඥාදායක පාලනයක්

ஜனாதிபதி சிறிசேன இராணுவத்தை பலப்படுத்த உறுதியளிப்பதன் மூலம் எதேச்சாதிகார ஆட்சிக்கு திட்டமிடுகின்றார்

By W.A. Sunil
1 June 2017

இலங்கையின் முப்படைகளையும் மேலும் பலப்படுத்துவதாக மே 19 அன்று நடந்த நினைவுவிழா என அழைக்கப்படுவதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தார். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்து, 2009 மே 19 அன்று முடிவடைந்த இனவாதப் போரின் வெற்றி மற்றும் இராணுவத்தின் வெற்றியையும் நினைவு கூருவதற்காக கொழும்பு அரசாங்கம் வருடா வருடம் "இராணுவ வீரர் நினைவுகூரும் " நிகழ்வினை நடத்துகின்றது. வரலாற்றினைத் திரித்து சிறிசேன ஆற்றிய உரையானது, இலங்கை ஆளும் வர்க்கம் இராணுவத்தில் அதிளவில் தங்கியிருப்பதை காட்டுகிறது.

கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக முன்னெடுத்த யுத்தத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டும், மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளதுடன் இடைவிடாமல் தொடரும் சமூக மற்றும் பொருளாதார பேரழிவு தமிழ் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. தென் பகுதி உட்பட தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளை கொடூரமாக ஒடுக்குவதற்காக பயன்பட்ட இந்த போரைக் கொண்டுவதற்கு அவர்களுக்கு எதுவும் இல்லை. இந்த போர் ஆளும் வர்க்கத்தின் போர் ஆகும்.

முன்னாள் ஜனாதிபதி இராஜபக்ஷவின் ஆட்சியினைப் போலவே இப்போது ஆட்சி நடத்தும் சிறிசேன அரசாங்கம் உட்பட ஆளும் வர்க்கத்தின் அனைத்து தட்டினரும் இந்த யுத்தத்தின் அழிவுக்கு பொறுப்பாளிகளாகும். இவர்கள் அனைவரும் தாம் முன்னெடுத்த கொடூரமான போரை நியாயப்படுத்த, புலிகளின் "பயங்கரவாதம்" தான் அனைத்துக்கும் பொறுப்பு என கூறித்திரிகின்றனர்.

இராணுவத்தினரை "தாய்நாட்டை" விடுவித்த "உயர்ந்த வீரர்கள்" என சிறிசேன பாராட்டினார். இராணுவத் தாக்குதலில் நடந்த போர்க்குற்றங்களை மூடி மறைக்கும் சிறிசேன, அதற்கு பொறுப்பு சொல்ல வேண்டிய பாதுகாப்புப் படைகள், அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களைப் பாதுகாக்கின்றார். போர் குற்றங்கள் சம்பந்தமாக எந்வொரு படை அதிகாரியையும் நீதிமன்றத்தில் முற்படுத்த அல்லது சிறைவைக்க தான் அனுமதிக்க மாட்டேன் என கடந்த நாட்களில் அவர் மீண்டும் மீண்டும் கூறினார்.

ஜனாதிபதி சிறிசேன தனது உரையை பின்வருமாறு ஆரம்பித்தார். "1948ல் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுவிக்கப்பட்ட நாடு“ அமைதியான மற்றும் மிகவும் தன்னிறைவான ஆட்சியாக முன்னோக்கி சென்றுகொண்டிருந்தபோது தான், 70 களின் மத்தியில் இந்த நாட்டைப் பிரிப்பதற்கான காட்டுமிராண்டித்தனமான ஈழப்பயங்கரவாதிகள் போரைத் தொடங்கினர். முப்பது ஆண்டுகாலமாக இந்த உள்நாட்டு யுத்தம் இழுபட்டது.” அப்போதிலிருந்து இராணுவம் போரை நடத்தி வீரத்துடன் நாட்டைக் காப்பாற்றியது என்று அவர் கூறினார்.

1948 "சுதந்திரமடைந்த" பின்னர் முதலாளித்துவ வர்க்கம் ஆட்சியைத் தொடங்கிய விதம் மற்றும் போர் தொடங்கிய விதம் பற்றி சிறிசேனவின் கருத்து வரலாற்றை தலைகீழாக நிறுத்தி கூறும் பொய்களாகும். இனவாதப் போருக்கு கொழும்பு ஆளும் வர்க்கமே பிரதான பொறுப்பாளியாகும்.

இலங்கை முதலாளி வர்க்கம் ஒருபோதும் காலனித்துவ ஆட்சியிடம் சுதந்திரத்தை கேட்டு, அதற்காக போராடவில்லை. இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டுத் துன்பப்பட்டுக்கொண்டிருந்த பிரிட்டன் ஆட்சியாளர்கள், போருக்குப் பிந்திய உடன்பாடுகளின் ஒரு பாகமாகவே இலங்கை முதலாளி வர்க்கத்தின் கைகளில் ஆட்சியை மாற்றினர். பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக் காலத்திலோ அல்லது இலங்கை முதலாளிகளின் கைகளில் ஆட்சி மாற்றப்பட்ட பின்னரோ, அல்லது  சுதந்திரத்தின் பின்னரோ "அமைதியான" அல்லது "தன்னிறைவு அரசாக," இலங்கை இருக்கவில்லை.

காலனித்துவ ஆட்சிக்கு எதிரான சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களின் போராட்டங்களால் ஆட்டங்கண்டிருந்த இந்த நாட்டு சிங்கள ஆட்சியாளர்கள், தமது கைக்கு ஆட்சி கிடைத்த பின்னர், பலவீனமான முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியை காத்துக்கொள்வதற்காக தமிழ்–சிங்களம் என்ற இனவாத வழியில் தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்தி ஆளும், பிற்போக்கு ஆட்சியையே முன்னெடுத்தனர்.

குறிப்பாக, ட்ரொட்ஸ்கிச போல்ஷிவிக் லெனினிச கட்சி, ட்ரொட்ஸ்கிசவாதிகளாக தம்மைக் கூறிக்கொண்ட லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க.) என்பவற்றின் செல்வாக்கு நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் பரவியிருந்தது. அந்தச் சூழ்நிலையின் கீழ் கட்டியெழுப்பப்பட்டிருந்த ஐக்கியத்தை பிளவுபடுத்துவதற்காகவே இனவாதத்தை தூண்டும் விஷமத்தனமான அரசியலை, முதலாளித்துவ ஆளும் வர்க்கம் ஒரு ஆயுதமாக பயன்படுத்திக்கொண்டது.

1948 குடியுரிமை சட்டத்தின் கீழ் தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் பிரஜா உரிமையை பறித்தமை அதன் முதல் படியாகும். அப்போதிருந்து, ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) அரசாங்கங்களினுள் நெருக்கடி ஆழமடைந்த அளவுக்கு, தொழிலாள வர்க்கப் போராட்டமும் கூர்மையடைந்தது. அப்போது, 1964ல் ல.ச.ச.க.யின் மாபெரும் காட்டிக்கொடுப்பினைப் பயன்படுத்திக்கொண்டு தமிழர் விரோத இனவெறி மேலும் தூண்டிவிடப்பட்டது.

1977ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்தனவின் ஐ.தே.க. அரசாங்கம், 1983ல் கறுப்பு ஜூலை இனக்கலவரம் உட்பட தமிழர்களுக்கு எதிராக ஒரு தொடர் ஆத்திரமூட்டல்களை நடத்தியதன் மூலம், இனவாத போருக்கு வழிவகுத்தது. திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட இத்தூண்டுதல்களின் நோக்கம், சர்வதேச நாணய நிதியமும், உலக வங்கியும் பரிந்துரை செய்த பொருளாதார சிக்கன நடவடிக்கை மற்றும் திறந்த சந்தைப் பொருளாதார வேலைத்திட்டத்துக்கும் எதிராகத் தோன்றிய வர்க்கப் போராட்டத்தை அடக்குவதேயாகும்.

சிறிசேன, வேண்டுமென்றே மூடி மறைக்கும் போர்த் தொடக்கத்தின் வரலாற்று உண்மை இதுவே ஆகும். தொழிலாளர் மற்றும் ஏழைகளின் எந்தவிதமான சமூகப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு வரலாற்று ரீதியில் இயலுமையற்ற ஏகாதிபத்திய சார்பு இலங்கையின் இழிந்த ஆளும் வர்க்கம், உழைக்கும் மக்களின் இரத்தத்தின் மூலமே தனது ஆட்சியை காத்துக்கொண்டது. ஏகாதிபத்திய சார்பு புலிகள் உட்பட, மற்றைய அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும், தமது பக்கத்தின் பதிலிறுப்பாக தமிழ் இனவாதத்தை தூண்டிவிட்டு, சிங்கள ஆட்சியாளர்களுக்கு முண்டுகொடுத்தன.

யுத்தம் என்பது வெறுமனே தமிழர்களை அடக்கும் தாக்குதல் மட்டும் அல்ல. இதன் அடிப்படை நோக்கம் முழுத்தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்குவதே என்பதை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.)யும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் (பு.க.க.) போரை வரலாற்று ரீதியில் பகுப்பாய்வு செய்து வலியுறுத்தின. தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் மற்றும் ஒடுக்கப்பட் மக்கள், இந்த போரின் வர்க்க உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் போர் "எங்கள் போர்" அல்ல, என்றும் அது எதிர்க்கப்பட வேண்டும் என்றும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியும் மட்டுமே கூறிவந்தன. அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவத்தை வெளியேற்றவும் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களை கொழும்பு முதலாளித்துவ ஆளும் வர்க்கத்துக்கும் மற்றும் தமிழ் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் எதிராக சோசலிச திட்டத்தின் அடிப்படையில் ஐக்கியப்படுத்துவதற்காகவும் போராடின.

சிறிசேன, பொய்களை புலம்புவது தேவையின்றி அல்ல. இராணுவத்தை தூக்கிப்பிடிப்பதும் பூஜிப்பதும் மற்றும் வலுப்படுத்துவதும் அதன் போர்க்குற்றங்களை மூடிமறைப்பதும், அனைத்துமே ஆளும் வர்க்கத்தின் நிச்சயமான தேவைகளில் இருந்தே தலை தூக்குகின்றன. வாழ்க்கைத்தரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக, தொழிலாள-ஒடுக்கப்பட்ட மக்களின் மத்தியில் வளர்ச்சியடைந்துவரும் எதிர்ப்புக்களை நசுக்குவதற்காக சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகரவேண்டிய தேவை ஆளும் வர்க்கத்துக்கு உள்ளது.

கடந்த முப்பது ஆண்டு காலப் போரின் போது, மேலும் மேலும் இராணுவத்தில் தங்கியிருந்த பலவீனமான அரசாங்கங்கள், தேசிய வருமானத்தில் மேலும் மேலும் பெருந்தொகையை அதிகமாக செலவிட்டு, போரைப் பலப்படுத்தி, அரசியல் நிலைமைகளில் அதை ஒரு தீர்க்கமான காரணியாக மாற்றிவிட்டன. தொழிலாளர் போராட்டங்கள் வளர்ந்து வரும் சூழ்நிலையின் கீழ், சிறிசேன, ஏப்ரல் 19 அன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், இரண்டு ஆண்டுகள் "நாட்டை ஒழுங்குபடுத்துவதற்காக நடவடிக்கை எடுப்தற்கு" பொறுப்பெடுக்குமாறு முன்னாள் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் கோரியமை வெளிப்படையானதாகும். சிறிசேன, விக்கிரமசிங்க உட்பட ஆளும் வர்க்கத்தின் பகுதிகள், பழைய முறையில் ஜனநாயக முகத்திரைகளை வைத்துக்கொண்டு இனிமேலும் ஆட்சி செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்துள்ளன.

எதேச்சாதிகார ஆட்சியின் தேவை பற்றி இலங்கை ஆளும் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள், தொழிலாள வர்க்கம் பாரிய போராட்டத்திற்கு வந்த 1964 ஆண்டின் மீது முழு அவதானத்தையும் செலுத்தினர். ஆனால் அந்த நேரத்தில் தொழிலாள வர்க்கத்துடன் மோதலுக்குச் செல்வது அரசியல் ரீதியில் ஆபத்தனதாக இருக்கும் என கணக்கிட்ட பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க, இடதுசாரி தலைவர்களுடன் கூட்டணி ஒன்றுக்கு செல்வதே நல்லது என்று முடிவு செய்தார். அதன்படி ல.ச.ச.க. மற்றும் இலங்கை ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (CP) உடன் கூட்டணிக்கு சென்று தொழிலாள வர்க்கப் போராட்டத்தை நசுக்குவதில் அவர் வெற்றி கண்டார்.

ஆனால் உலக முதலாளித்துவத்தின் ஆழ்ந்த மந்தநிலைமையின கீழ், 1964ல் தீவிர பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்குள் இலங்கை முதலாளித்துவ வர்க்க ஆட்சி இழுக்கட்டிருந்த கட்டத்தில், மேலும் ஜனநயாகப் போர்வையைக் கொண்டு ஆட்சியை நடத்துவதற்கு முதலாளித்துவ வர்க்கத்தினால் முடியாது போனது. பிரதான இரு முதலாளித்துவ கட்சிகள் –ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ.ல.சு.க.- மட்டுமன்றி, முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனமே மக்கள் முன் அபகீர்த்திக்கு உள்ளாகியிருந்தது. ல.ச.ச.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியும் அவற்றின் கட்டுப்பாட்டிலான தொழிற்சங்கங்களும் தொழிலாள வர்க்கத்தின் மீது கொண்டிருந்த செல்வாக்கும் இல்லாமல் போய்விட்டது.

தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை தற்காலிகமாக பின்தள்ளுவதற்கு தொழிற்சங்கங்கள், முன்னிலை சோசலிச கட்சி, ஐக்கிய சோசலிச கட்சி, நவ சம சமாஜக் கட்சி (NSSP) போன்ற போலி இடது கட்சிகள் செயல்படுகின்றன. இந்த அமைப்புக்கள் மீது தொடர்ந்தும் தங்கியிருக்க முடியாத சூழ்நிலைகளின் கீழ், அவற்றின் மூடி மறைப்பின் கீழ், கொடூரமான எந்திரத்தின் தேவை இப்போது முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் முன் தோன்றியுள்ளது.

"நாட்டின் அபிவிருத்தி பணிகளில், சுதந்திரம், ஜனநாயகம், தேசிய பாதுகாப்பு, பிராந்திய பாதுகாப்பு போன்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, எப்போதும் எமது பாதுகாப்புப் படைகளை வலுப்படுத்துவது மிக அத்தியாவசியமான விடயமாக உள்ளது," என சிறிசேன கூறியிருக்கிறார்.

அவர் கூறும் "சுதந்திரம்" மற்றும் "ஜனநாயகமும்", சுரண்டலுக்காக முதலாளிகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு உள்ள சுதந்திரம் மற்றும் ஜனநாயகமும் ஆகும்; "தேசிய பாதுகாப்பு" என்பதன் அர்த்தம் உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கித் தள்ளுவதே ஆகும்.

சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவந்து, முன்னாள் ஜனாதிபதி இராஜபக்ஷ ஆட்சிக்கும் சீனாவுக்கும் இடையில் இருந்த நெருக்கமான உறவை தகர்த்த வாஷிங்டன், பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களைக் பாதுகாக்கும் மூலோபாயத்துக்குள் இலங்கையை முடிச்சுப் போட்டுவிடுவதற்காக, புது தில்லியுடன் ஒரு ஆட்சி மாற்றத்தை நடத்தியது. இந்த மூலோபாய நோக்கம், ஜனாதிபதி தேர்தலில் மாற்றம் என்ற பெயரில் மூடி மறைக்கப்பட்டது. அதன் பின்னர் சிறிசேன அரசாங்கத்தின் கீழ், ஏகாதிபத்திய மூலோபாயத்துடன் நாடு பிணைக்கப்பட்டு வருவதோடு, இராணுவ உறவுகள் பலப்படுத்தப்படுகின்றன. அவர் "பிராந்திய பாதுகாப்பு" என்ற பெயரில் அழைப்பது இந்த வேலைத் திட்டத்தையே.

"அரசியல்வாதிகள் பல்வேறு தேவைகளுக்காவும் வெளிநாட்டு அழுத்தத்தினாலும் இராணுவத்தினரை" மறப்பதற்கு முயற்சிக்கின்றனர் என குற்றம்சாட்டும் இராஜபக்ஷ, ஆனால் தான் ஒரு காலமும் அவர்களை மறக்கவில்லை என்றும் கூறி, "இராணுவத்தை நினைவு கூரும் கொண்டாட்டம்" ஒன்றினை தனியாக நடத்தினார். இலங்கையில் சிறிசேன மற்றும் இராஜபக்ஷ உட்பட ஆளும் வர்க்கத்தின் சகல பகுதியினரும் இராணுவத்தில் தங்கியிருப்பதையே இது காட்டுகிறது.

நிதிய குறுங்குழு ஆட்சியின் பிரதிநிதியாக, அமெரிக்காவிற்குள் பாசிச போக்கு கொண்ட டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதி ஆகி, ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் உலக போருக்குகான தயாரிப்புகளை உக்கிரமாக்கி வருகின்றார். பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிரிட்டன் அரசாங்கங்கள் மற்றும் ஆளும் வர்க்கங்கள் இராணுவத்தை முன்னணிக்கு கொண்டு வந்து, ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் நடத்தி, சர்வதாதிகார ஆட்சியை உருவாக்குவதற்கு தயராகின்றன. ஆளும் வர்க்கங்களின் இந்த திருப்பம், ஏகாதிபத்திய நாடுகள் முதல் பின்தங்கிய இலங்கை போன்ற நாடுகள் வரையாக இடம்பெற்றுவரும் மாற்றங்களாகும். முதலாளித்துவம் உலகளவில் ஆழமடைந்து வரும் நெருக்கடியில் பயணிப்பதே இதற்கு வழிவகுத்துள்ளது.

தொழிலாள வர்க்கம், முதலாளித்துவ வர்க்கம் மற்றும் அவற்றின் கட்சிகள் மற்றும் அவற்றை சூழ உள்ள அனைத்து நிறுவனங்கள் அனைத்தில் இருந்தும் பிரிந்து, கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்களை இணைத்துக் கொண்டு சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் அரசியல் இயக்கம் ஒன்றை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பதன் மூலமே இலங்கையில் ஆளும் வர்க்கத்தின் சர்வாதிகார திட்டங்களை தோற்கடிக்க முடியும். அதன் மூலம் தெற்காசியாவில் சோசலிசத்திற்கான போராட்டத்தின் பாகமாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கம் அதாவது ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை ஆட்சிக்கு கொண்டுவருதற்காகப் போராட முடியும்.