ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Official account of London terror attack unravels

இலண்டன் பயங்கரவாத தாக்குதலின் உத்தியோகபூர்வ விளக்கம் தள்ளாடுகிறது

Robert Stevens and Chris Marsden
5 June 2017

சனிக்கிழமை இலண்டன் பாலம் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்து 24 மணி நேரத்திற்குள், பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரேசா மே முன்வைத்த உத்தியோகபூர்வ சொல்லாடல் சிதறத் தொடங்கியுள்ளது.

சனிக்கிழமை காலை டவுனிங் வீதியிலிருந்து பேசுகையில், “அவர்களது திட்டமிடல் மற்றும் செயல்படுத்திய விதம் வைத்து பார்க்கையில்,” இலண்டனில் நடந்த தாக்குதலும் மே 22 அன்று மான்செஸ்டரில் நடந்த தாக்குதலும் "ஒன்றோடொன்று தொடர்புள்ளதாக உள்ளது,” என்றார்.

ஆனால் தாக்குதல்தாரர்களில் ஒருவரது வீட்டை பொலிஸ் சோதனையிட்ட பின்னர், அண்டையில் வசிக்கும் ஒருவர் பிபிசி க்குக் கூறுகையில், அம்மனிதரின் இஸ்லாமிய தீவிரவாத கண்ணோட்டங்கள் குறித்து நான் அதிகாரிகளுக்குக் கூறியிருந்தேன், ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். “என்னால் முடிந்ததை நான் செய்தேன்,” என்றார். “நிறைய பேர் அவர்கள் தரப்பிலிருந்து அவர்களால் முடிந்ததை செய்தார்கள் என்பது எனக்குத் தெரியும், ஆனால் அதிகாரிகள் அவர்கள் தரப்பிலிருந்து ஒன்றும் செய்யவில்லை,” என்றார்.

இலண்டன் பயங்கரவாத தாக்குதலும், மான்செஸ்டர் குண்டுவெடிப்பு மற்றும் ஐரோப்பா எங்கிலுமான ஏனைய எண்ணற்ற உயர்மட்ட பயங்கரவாத சம்பவங்களைப் போலவே அதே வடிவத்தைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறது, இவற்றில் எல்லாம் அத்தாக்குதல்களை நடத்தியவர்களை பொலிஸ் நன்கறிந்திருந்தது. பல சமயங்களில், தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் குறித்து எச்சரிக்கைகள் வழங்கப்பட்டிருந்தன.   

வெறும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான், மான்செஸ்டரில் Ariana Grande இன் இசைநிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த குழந்தைகள் உட்பட 22 பேரை தற்கொலை குண்டுதாரி சல்மான் அபேடி கொன்றார். அச்சம்பவத்திற்குப் பின்னர் உடனேயே, அபேடியும் அவர் குடும்பமும் MI5 உளவுத்துறைக்கும் மற்றும் அரசுக்கும் நன்கறியப்பட்டவர்கள் என்பதும், லிபியா மற்றும் சிரியாவில் ஆட்சி மாற்ற நடவடிக்கைகளில் ஏனைய பல இஸ்லாமியவாதிகளுடன் சேர்ந்து அவர்களை MI5 பயன்படுத்தி இருந்ததும் வெளியானது.  

கடந்த வாரயிறுதியில், நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிடுகையில் 2015 நவம்பர் பாரீஸ் பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பான இஸ்லாமிய அரசு பிரிவு அங்கத்தவர்களைச் சந்திக்க அபேடி லிபியாவிற்குப் பயணித்திருந்ததாக குறிப்பிட்டது. அவர் ஏன் பின்னர் இங்கிலாந்திற்கு திரும்பி வர அனுமதிக்கப்பட்டார் என்பது விளக்கமளிக்கப்படாமலேயே உள்ளது.

ஜூன் 8 இல் பொது தேர்தல் வரவிருக்கின்ற நிலையில், கருத்துக்கணிப்புகளில் அவர் வீழ்ச்சியை மாற்றும் பெரும்பிரயத்தன முயற்சியில் மே இந்த பயங்கரவாத தாக்குதல்களை பற்றிக்கொண்டு உள்ளார். சமீபத்திய கருத்துக்கணிப்புகள் டோரிக்கள் வெறும் ஒரு சதவீத முன்னிலையில் இருப்பதைக் காட்டுகின்ற நிலையில், ஒரு சிறிய பெரும்பான்மையுடன் டோரிகள் திரும்ப வரலாம் அல்லது ஒரு தொங்கு நாடாளுமன்றம் அமையலாம் அல்லது தொழிற் கட்சி கூட வெற்றியடையலாம் என்ற அனுமானங்கள் பரவலாக நிலவுகின்றன. மில்லியன் கணக்கானவர்களால் இந்த அரசாங்கத்தின் சமூக கொள்கைகள் தூற்றப்பட்டுவரும் ஒரு சூழ்நிலையில், பயங்கரவாதத்தின் மீது "மென்மையாக" இருப்பதாக கூறப்படுகின்றவரும் மற்றும் தேசிய பாதுகாப்பு என்று வருகையில் நம்பகத்தன்மை இல்லாதவராக கூறப்படுகின்றவருமான தொழிற்கட்சி தலைவர் ஜெர்மி கோர்பின் மீது தேர்தல் தீர்ப்பை கொண்டு வர இப்போதைய அரசாங்கம் ஆர்வமுடன் உள்ளது.

அரசியல் பிரச்சாரத்தை இடைநிறுத்துவதென தொழிற் கட்சியுடன் ஓர் உடன்பாடு இருக்கின்ற போதினும், மே அவரது ஞாயிற்றுக்கிழமை அறிக்கை மூலம் ஒரு பழமைவாத அரசாங்கம் என்ன செய்யும் என்பதன் மீது பல்வேறு சூளுரைகளை வழங்கினார். பயங்கரவாத தாக்குதல்களை தடுப்பதென்பது "ஈராக் மற்றும் சிரியாவில் ISIS ஐ ஒழிப்பதற்கான இராணுவ நடவடிக்கை மேற்கொள்வதை" அர்த்தப்படுத்துவதாக கூறுகின்ற அவர், அதேவேளையில் "இராணுவ தலையீட்டால் மட்டுமோ", அல்லது "நிரந்த பாதுகாப்பிற்கான பயங்கரவாத-எதிர்ப்பு நடவடிக்கை குழு தலைவர்களும் பயிற்சியாளர்களும் எவ்வளவு தான் திறமைசாலிகளாக இருந்தாலும், அதைப் பேணுவதன் மூலமாகவோ" இஸ்லாமிய பயங்கரவாதத்தை தோற்கடித்துவிட முடியாது என்றும் வலியுறுத்துகிறார்.

அவர் குறிப்பிடும் "தலைவர்களும் பயிற்சியாளர்களும்", அதாவது MI5 மற்றும் MI6, லிபியா மற்றும் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான அவர்களது நடவடிக்கைகளில் இப்போதும் கூட அவர்களது பினாமி படைகளாக பிடியில் வைத்திருக்கும் இஸ்லாமிய குழுக்களுடன் நெருக்கமான உறவுகளில் ஆழமாக சம்பந்தப்பட்டுள்ளனர். பிரிட்டிஷ் உளவுத்துறை முகமைகள், இத்தகைய குழுக்களின் அங்கத்தவர்களை இங்கிலாந்திலேயே பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவற்கேற்ப சுதந்திரமாக நகர அனுமதிக்கின்றன.

பல ஆண்டுகளாக பயங்கரவாத குழுக்களை ஆதரித்து நிதியுதவி வழங்கியுள்ள மத்திய கிழக்கு கொடுங்கோலாட்சிகள் உடனும் பிரிட்டன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளது. மே க்கு முன்பிருந்த டேவிட் கேமரூனால் 18 மாதங்களுக்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்த ஒரு விசாரணையான, ஜிஹாதி குழுக்களுக்கு வெளிநாடுகள் நிதி வழங்குவது மீதான ஒரு விசாரணை விபரங்களை வெளியிடுவதை மே அரசாங்கம் முடக்கி வருகிறது என்பது ஒரு சில நாட்களுக்கு முன்னர் தான் வெளியானது, ஏனென்றால் இங்கிலாந்தின் ஆயுத ஏற்றுமதிகளில் 83 சதவீதத்தைக் கணக்கில் கொண்டுள்ள சவூதி அரேபியா குறித்த "மிகவும் ஊறுவிளைவிக்கத் தக்க" தகவல்களை அது கொண்டுள்ளது என்பதனால் ஆகும். ஏப்ரலில், கூடுதலாக உடன்படிக்கைகளைப் பெற மே ரியாத் விஜயம் செய்திருந்தார்.

“பயங்கரவாதத்திற்கு எதிரான போரை" உள்ளடக்கி இப்போது ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை அதிகரிக்க வேண்டுமென்ற வலியுறுத்தல் மீது மே இன் உரை மையமிட்டிருந்தது. இணையத்தை பயங்கரவாதிகளுக்கான "பாதுகாப்பு இடமாக" வரையறுத்து, அதை தணிக்கை செய்வதன் மீதும் இங்கிலாந்து மக்களின் இணைய நடவடிக்கைகளை ஆழமாக உளவுபார்ப்பதன் மீதும் அவர் திட்டங்களை விவரித்தார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், ஆனால், “தொடர்ந்து நிஜமான உலகில் இருந்து வரும் பாதுகாப்பு இடங்களையும் நாம் மறந்து விடக்கூடாது,” என்றார். என்ன அவசியப்படுகிறதென்றால் "பொது துறை எங்கிலும் மற்றும் சமூகம் எங்கிலும் அதை தடுத்து நிறுத்த வேண்டும்,” என்றார்.

இது பள்ளி மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களைக் கண்காணிப்பது உட்பட முன்கூட்டியே தடுக்கும் மூலோபாயத்துடன் சம்பந்தப்பட்ட ஒடுக்குமுறை நடவடிக்கைகளை ஆழப்படுத்துவதற்கான ஒரு எச்சரிக்கையாகவும் மற்றும் அதிகார பதவிகளில் இருக்கும் அனைவரையும் அரசு உளவாளிகளாக செயல்படுத்துவதற்கான ஒரு குறிப்பாகவும் உள்ளது.

அரசு பாதுகாப்பு சேவைகள் மற்றும் பொலிஸிற்கு வழங்கப்பட்டுள்ள பரந்த பல ஒடுக்குமுறை அதிகாரங்கள் இப்போது போதுமானதாக இல்லை என்று கூறி, மே நிறைவு செய்தார். “பொலிஸ் மற்றும் பாதுகாப்பு சேவைகளுக்கு தேவையான அனைத்து அதிகாரங்களையும் வழங்குவதை உறுதிப்படுத்த" ஒரு "பயங்கரவாத-எதிர்ப்பு மூலோபாயம்" கொண்டு வரப்பட வேண்டும் என்றார்.

அதிகரித்த அரசு ஒடுக்குமுறை மற்றும் போருக்கான மே இன் திட்டநிரலுக்கு ஒரு மாற்றீட்டை தொழிற் கட்சி வழங்குமென தொழிலாள வர்க்கம் எதிர்பார்க்க முடியாது என்பதை நேற்று மாலை விடையிறுப்பில் கோர்பின் தெளிவாக்கினார். முன்நிற்கும் அபாயங்களைக் குறித்து தொழிலாள வர்க்கத்தை எச்சரிக்க அவர் எந்த முயற்சியும் செய்யவில்லை. அதற்கு மாறாக, அவர் மே இன் உத்தியோகபூர்வ சொல்லாடலை ஏறத்தாழ முழுமையாக மீண்டும் ஏற்றுக் கொண்டதுடன், பயங்கரவாதத்திற்கு எதிரான போரை வெற்றிகரமாக நடத்த அரசாங்கம் போதுமானளவிற்கு செயல்படவில்லை என்பதன் மீதான அவர் விமர்சனத்தில் குவிந்திருந்தார்.

கோர்பின், நேட்டோவிற்கான அவர் எதிர்ப்பை கைத்துறந்ததன் மூலமாகவும், முப்படைகளது அணுஆயுத திட்டத்தை ஏற்றுக் கொண்டதன் மூலமாகவும் ஏற்கனவே செய்ததைப் போலவே, அரசுக்கு அவரது விசுவாசமான ஆதரவை மறுஉத்தரவாதம் அளிக்க முயன்றார். “நீங்கள் மக்களை மலிவான விலையில் பாதுகாக்க முடியாது,” என்று கூறிய அவர், “பொலிஸ் மற்றும் பாதுகாப்பு சேவைகளுக்கு தேவையான ஆதாரவளங்கள் கிடைக்கச் செய்ய வேண்டும்,” பழமைவாதிகளின் கீழ் நடந்ததைப் போல “20,000 பொலிஸ் குறைப்புகள் செய்யக்கூடாது,” என்றார்.

ஜூலை 7, 2005 இலண்டன் குண்டுவெடிப்புக்குப் பின்னர் ஜோன் சார்லஸ் டு மெனெஜிஸ் மீது பயங்கர துப்பாக்கிச்சூடு நடந்த பின்னர் முதன்முதலில் வெளியிடப்பட்ட சுட்டுக்கொல்லும் கொள்கை மீதான அவரது முந்தைய எதிர்ப்பைக் கைவிட்டு, கோர்பின் கூறுகையில், “என்ன நடவடிக்கை அவசியமோ, என்ன செய்ய வேண்டுமோ" அதை செய்ய பொலிஸிற்குச் சுதந்திரம் இருக்க வேண்டும் என்று கூறிய அவர், “மார்ச்சில் அவர்கள் வெஸ்ட்மின்ஸ்டரில் செய்ததைப் போல, அவர்கள் நேற்றிரவு செய்ததைப் போல, உயிர்களைக் காப்பாற்றவும் பாதுகாக்கவும் என்ன படை அவசியமோ அதை பிரயோகிக்க பொலிஸிற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பதும் அதில் உள்ளடங்கும்,” என்றார்.