ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

දරුනු කොන්දේසි පනවමින් අත්අඩංගුවට ගත් නැගෙනහිර රැකියා විරහිත උපාධිධාරී සමිති නායකයින්ට ඇප දෙයි

இலங்கை: கைது செய்யப்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர்களுக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டது

By Subash Somachandran
7 June 2017

இலங்கையில் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர்கள் நான்கு பேரை, திருகோணமலை நீதிமன்றம் கடந்த மே 29 அன்று கடுமையான நிபந்தனைகளின் கீழ் விடுதலை செய்தது. அவர்கள், நீதிமன்றத்தினை அவமதித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த மே 23 அன்று கைது செய்யப்பட்டு ஒரு வாரமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். கிழக்கு மாகாணசபைக் காரியாலயத்தின் முன்னால் பட்டதாரிகளினால் நடத்தப்படவிருந்த ஒரு ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது. நீதிமன்றக் கட்டளையை பொலிசார் வழங்கியபோது, மாணவர் தலைவர்கள் அதனைக் கிழித்தெறிந்தார்கள் என குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்றார்கள்.

அவர்களை கடுமையாக எச்சரித்த நீதிவான், தலா 200,000 ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்தார். பட்டதாரிகள், கடந்த மூன்று மாதங்களாக வேலைவாய்ப்புக் கோரி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். கைது செய்ப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படாலும் கூட, நீதிமன்றத்தை அவமதித்தமை, அரசாங்க ஊழியர்களின் கடமைகளைச் செய்யவிடாது தடுத்தமை, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் சட்டவிரோதமாக ஒன்று கூடியமை போன்ற குற்றச்சாட்டுக்களுக்கு முகம் கொடுக்கின்றார்கள். இவை நிரூபிக்கப்பட்டால் சங்கத்தின் தலைவர்கள் சிறையில் தள்ளப்படுவார்கள்.

அவர்களின் போராட்டம் 100 நாட்களைத் தாண்டிக் கொண்டிருக்கும் நிலையில், அரசாங்கத்துக்கு அழுத்தத்தினை அதிகரிக்கும் ஒரு பாகமாக, இந்தப் பட்டதாரிகள் கிழக்கு மாகாண சபைக்கு முன்னால் ஒரு ஆர்ப்பாட்டத்தினை நடத்துவதற்கு தீர்மானித்தார்கள். பொலிஸ் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எதிராக ஒரு நீதிமன்றத் தடை உத்தரவினை பெற்றிருந்தது. பட்டதாரிகளின் போராட்டத்தை நசுக்குவதற்கு இலங்கை அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பாகமாகவே, பொலிஸ் மற்றும் நீதிமன்றத்தின் தலையீடு அமைந்திருந்தது.

திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம், பட்டதாரிகள் நீதிமன்றமத்தினை அவமதித்தார்கள் எனக் கூறிக் கொண்டு அவர்களின் நடவடிக்கைகளை எதிர்த்தார்கள். இந்த நிலைப்பாடு, நீதிமன்றத்தினை அவமதித்தார்கள் என்னும் பொலிசாரின் குற்றச்சாட்டுடன் ஒத்ததாக இருக்கின்றது. எவ்வாறாயினும், மாதக் கணக்காக நடைபெற்றுக் கொண்டிருக்கும், வேலை கோரும் இந்த இளைஞர்களின் சட்டரீதியான பிரச்சாரத்துக்கு, இந்தச் சட்டத்தரணிகள் ஆதரவளிக்கவில்லை. 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (TNA) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தலமையிலான ஒரு சட்டத்தரணிகள் குழு பட்டதாரிகளின் சார்பாக ஆஜரானது. தமிழ்வின் இணயத்தள செய்தியின் படி, நீதிமன்ற அவமதிப்பு நீதவான் நீதிமன்றத்துக்குள் நடந்தால் மட்டுமே, அதனால் அந்த அவமதிப்பை விசாரணை செய்ய முடியும், என சுமந்திரன் நீதிமன்றில் தெரிவித்தார். மாணவ தலைவர்கள் நீதிமன்றத்தில் “மன்னிப்பு கேட்பதற்கு” ஏற்கனவே தயாராக இருக்கிறார்கள், ஏற்கனவே அவர்கள் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்கள், என வேண்டுகோள் விடுத்தார். தமிழ் கூட்டமைப்பானது அரசின் அதிகாரத்தைப் பாதுகாக்கவே விரும்புகிறது. அது ஒருபோதும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்துக்கு ஆதரவளிக்கவில்லை. போராட்டக்காரர்களை கூட்டமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து, அதைக் கரைத்துவிடுவதே சுமந்திரனின் தலையீட்டின் இலக்காகும். கிழக்கு மாகாணசபை, கூட்டமைப்பினதும் மற்றும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசின்தும் இணைத் தலைமைத்துவத்தின் கீழ் செயற்பட்டு வருகின்றது.

எதிர்க்கட்சியாக இருந்தபோதிலும், தமிழ் கூட்டமைப்பு அரசாங்கத்தின் குறைந்த அல்லது கூடிய உத்தியோக பற்றற்ற பங்காளியாக இருந்துகொண்டு, அமெரிக்காவுடனான அதன் புவி-சார் அரசியல் அணிதிரள்வுக்கு ஆதரவளிப்பதுடன் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களையும் ஆதரிக்கின்றது. உண்மையில், அதன் ’விமர்சனங்கள்’ முகஸ்துதி மட்டுமே.

கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்த புள்ளிவிபரத்தின்படி, 4429 வேலையற்ற பட்டதாரிகள் வடக்கிலும் மற்றும் 4500 பேர் கிழக்கிலும் உள்ளார்கள். அவர்கள் பல இடையூறுகளுக்கு மத்தியிலும் தமது வேலைகோரும் போராட்டத்தினை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களுக்குள் ஓர் இணைப்பு இல்லாதபோதிலும், யாழ்ப்பாண வேலையில்லாப் பட்டதாரிகளும் இதே கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றார்கள். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் அமர்ந்து கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் அதேவேளை, அவர்கள் மறியல், மனிதச்சங்கிலி மற்றும் வடக்கு மாகாணசபை அலுவலகத்தினை முடக்குதல் போன்ற போராட்டங்களிலும் ஈடுபட்டார்கள்.

மே 19, தனது யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தின் போது, ஆசிரியர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் வெற்றிடங்களுக்கு 1000 பட்டதாரிகளை அரசாங்கம் நியமிக்க இருப்பதாக விக்ரமசிங்க தெரிவித்தார். ஆனாலும் மீதியான பட்டதாரிகளின் தலைவிதி என்னவாக இருக்கும் என்பதை அவர் கூறவில்லை. விக்ரமசிங்கவின் கருத்தையே வடக்கு மாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரனும் எதிரொலித்தார், இன்னும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவே இல்லை.

வடக்கு மற்றும் கிழக்கு வேலையற்ற பட்டதாரிகள் தங்களின் சொந்தப் போராட்டத்தில் இருந்து படிப்பினையைப் பெற்றுக் கொள்வதற்கான நேரம் இதுவாகும். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் கூட்டமைப்புத் தலைவர்கள் தங்களின் நியாயபூர்வமான கோரிக்கையின் மீது கவனம் செலுத்தவார்கள் என அவர்கள் எதிர்பார்த்திருக்கின்றார்கள். அரசாங்கத்துக்கு அல்லது அதன் பங்காளிகளுக்கு, தமிழ் கூட்டமைப்பு மற்றும் ஏனைய தமிழ் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் பட்டதாரிகளால் கண்ணியமான தொழிலைப் பெற்றுக் கொள்ள முடியாது என்பதே நிரூபிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண பட்டதாரிகள் சங்கத் தலைவர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு மறுபக்கம், பொதுக் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கும் சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கும் எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் பிரச்சாரத்தின் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அவர்கள் அடிக்கடி கொடூர பொலிஸ் தாக்குதல்களுக்கு உட்படுவதோடு, கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்லப்படுகிறார்கள்.

வேலையற்ற பட்டதாரிகளின் தொழில் பிரச்சினையானது ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் வடக்கு மற்றும் கிழக்கில் நடத்திய கொடூர யுத்தத்தினால் கடுமையான மட்டத்தினை அடைந்திருந்தாலும், அது அங்கு மட்டும் நிலவும் தனியான பிரச்சினை அல்ல. தென்பகுதியிலும் ஆயிரக்கணக்கான வேலையில்லாப் பட்டதாரிகள் உள்ளார்கள். மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபீ) மற்றும் அதில் இருந்து பிரிந்த போலி இடது அமைப்பான முன்னிலை சோசலிசக் கட்சியும் (FSP) அவர்கள் மத்தியில் இரண்டு சங்கங்களை அமைத்து, வேலை கோரி அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் பயனற்ற பிரச்சாரத்துக்கு அவர்களை அணிதிரட்டுகின்றனர்.

மீண்டும் மீண்டும் தோன்றும் பட்டதாரிகளின் மற்றும் ஏனைய பிரிவினரின் தொழில் பிரச்சினைகள், முதலாளித்துவ வர்க்கத்தினால் ஒரு முற்போக்கான பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை முன்வைக்க முடியாமையின் ஒரு விளைவேயாகும். இலங்கை உலக முதலாளித்துவ நெருக்கடியில் திண்டாடிக்கொண்டிருக்கின்றது.

பணப்-பற்றாக்குறையான, கடனில் மூழ்கியுள்ள முதலாளித்துவ வர்க்கமும் அதன் அரசாங்கமும் பொருளாதார வளர்ச்சியின் சரிவு மற்றும் ஏற்றுமதி வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளன. சுகாதாரம் மற்றும் கல்வி உட்பட செலவுகளை வெட்டுவது மற்றும் தனியார்மயத்தின் ஊடாக அரசாங்க செலவுகளை குறைப்பது உள்ளடங்கலான சிகிச்சைகளை நாணய நிதியம் பரிந்துரைத்துள்ளது. சிறிசேன – விக்ரமசிங்க அரசாங்கம் ஒழுக்கமான தொழிலை அன்றி, மலிவு கூலி உத்தரவாத்துடனேயே சர்வதேச மூலதனத்தினை வரவேற்கின்றது.

ஆகவே தான், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க ஆர்ப்பாட்டம் செய்வது பயனற்றதாகின்றது. முதலாளித்துவ பொருளாதார அமைப்பு முறைக்குள் பட்டதாரிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாததாலேயே, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பட்டதாரிகள் தெற்கில் உள்ள தமது சக பட்டதாரிகளுடன் இணைந்து சோசலிச தீர்வுக்காகப் போராட வேண்டும். இதுவே இலங்கை, இந்தியா அதேபோல் அமெரிக்கா, ஜேர்மனி, பிரித்தானியா மற்றும் உலகில் உள்ள சகல நாடுகளிலும் வாழும் இளைஞர்கள் முகம் கொடுக்கும் சூழ்நிலையாகும்.

சோசலிச கொள்கைகளுக்காப் போராடும் பொருட்டு, தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்புவது இன்றியமையாததாகும். முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராக ஒரு சோசலிச புரட்சிக்கு தலைமை தாங்கி பொருளாதாரத்தை முற்போக்கான அடித்தளத்தில் மீள ஒழுங்கமைக்கும் இயலுமைகொண்ட ஒரே பொருத்தமான புரட்சிகர சக்தி தொழிலாள வர்க்கமேயாகும்.

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) அதன் இளைஞர் அமைப்பான சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.ஈ.) அமைப்பும் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசு வடிவிலான தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தினை அமைப்பதற்காக போராடிக்கொண்டிருக்கின்றன. நாம், வேலையற்ற பட்டதாரிகள் உட்பட இளைஞர்களை இந்தப் போராட்டத்தில் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.