ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French National Assembly approves enabling act to rewrite labor law

தொழிற்சட்டத்தை திருத்துவதற்காக பிரெஞ்சு நாடாளுமன்றம் கூடுதல் அதிகார வழிவகை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்குகிறது

By Francis Dubois
18 July 2017

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அரசாங்கத்தால் ஜூலை 10 அன்று முன்வைக்கப்பட்ட ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் (enabling act) சட்ட முன்வரைவுக்கு, ஜூலை 13 அன்று, வெறும் ஒருசில நாள் விவாதங்களுக்குப் பின்னர், பிரெஞ்சு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. இவ்விதத்தில், நாடாளுமன்றத்தின் மேலதிக பரிந்துரைகள் எதுவுமின்றி உத்தரவாணைகள் மூலமாகவே தொழிற்சட்டங்களில் கடுமையான திருத்தம் செய்ய அரசாங்கத்திற்கு நாடாளுமன்றம் அனுமதியளித்துள்ளது. இந்த வாக்குகள், மக்ரோன் பதவிக் காலத்தின் தொடக்கத்தை குறிப்பதாக பத்திரிகைகள் எழுதின.

மக்ரோன் திருத்தம் செய்ய உத்தேசிக்கும் இந்த தொழிற்சட்டமானது, அரசியலமைப்பின் ஷரத்து 49-3 இல் உள்ள அவசரகால நிலை வழிவகைகளைப் பயன்படுத்தி, ஜூலை 2016 இல், நாடாளுமன்ற வாக்கெடுப்பின்றி ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டால் திணிக்கப்பட்டதாகும்.

மக்ரோனின் குடியரசு அணிவகுப்பு இயக்கத்தின் (LRM) வாக்குகளும் மற்றும் வலதுசாரி குடியரசுக் கட்சியினது (LR) மக்ரோன்-ஆதரவு "ஆக்கபூர்வ" பிரிவு என்றழைக்கப்படுவதன் வாக்குகளும் சேர்ந்து 270 வாக்குகளுடன் இந்த கூடுதல் அதிகார வழிவகை சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (France insoumise - FI) மற்றும் ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) உள்ளடங்கலாக 50 வாக்குகள் எதிராக இருந்தன.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, அவரது அரசாங்க வேலைத்திட்டம் சார்ந்த முக்கிய கொள்கைகளில் ஒன்றான தொழிற்சட்டத்தில் மக்ரோன் மாற்றங்கள் செய்திருந்தார். அரசாங்கம் அமைக்கப்பட்டதில் இருந்து, அது அதன் முடிவுகளில் தொழிற்சங்கங்களும் சம்பந்தப்பட்டிருக்குமாறு செய்ய முனைந்துள்ளது. அவை, உத்தரவாணைகள் மூலம் ஆட்சி செலுத்தும் மக்ரோனின் கோட்பாட்டை எதிர்க்கவில்லை.

உத்தரவாணைகளைக் கொண்டு (par ordonnances) ஆட்சி செலுத்துவதன் மூலம், அனைத்திற்கும் மேலாக, மக்ரோன் அவர் கொள்கைகள் குறித்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையிலான பரந்த விவாதத்தைத் தவிர்க்க விரும்புகிறார், ஏனெனில் அது அவர் அரசாங்கத்திற்கு பாரிய அரசியல் எதிர்ப்பைத் தூண்டிவிடக்கூடும். கூடுதல் அதிகார வழிவகை சட்டத்தைக் கொண்டு கட்டளையிடப்படும் உத்தரவாணைகள், தொழிற்சட்டத்தில் மக்ரோன் செய்ய விரும்பும் மாற்றங்களை மிகவும் பரந்தளவில் மட்டுமே எடுத்துரைக்கின்றன. அவற்றின் நிஜமான உள்ளடக்கத்தில் உள்ள நடவடிக்கைகள் இதுவரையில் விவரிக்கப்பட்டதை விட இன்னும் அதிக கடுமையாக இருக்கின்றன என்பதோடு, அவை வரவிருக்கின்ற வாரங்களில் தொழிற்சங்கங்களுடனான விவாதங்களில் தீர்மானிக்கப்பட உள்ளன.

தொழிற்சட்டங்களை மாற்றுவதை நாடாளுமன்றம் பொருத்தமானதாக கருதுவதாலேயே அரசாங்கத்திற்கு அது நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியுள்ளது; இந்த வாக்கெடுப்புகளுக்கு பின்னர், மேற்கொண்டு எந்த அரசியலமைப்பு திருத்தமும் சாத்தியமில்லை. அரசாங்கம் அது எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளை ஆறு மாதங்களுக்குள் குறிப்பிட்டாக வேண்டும்.

மக்ரோன் அரசாங்கத்தின் இந்த முதலும் முக்கியமுமான சட்டங்களை உத்தரவாணைகள் மூலமாக திணிக்க உள்ளது என்ற உண்மையானது, மக்ரோனின் எஞ்சிய பதவி காலத்திற்கு ஒரு முன்னுதாரணத்தை உருவாக்குகிறது. அலன் யூப்பே இன் அரசாங்கம் தான் உத்தரவாணைகளை பயன்படுத்திய இதற்கு முந்தைய பிரெஞ்சு அரசாங்கமாக இருந்தது. யூப்பே கொண்டு வந்த வெட்டுகளுக்கு எதிரான பாரிய வேலைநிறுத்தங்களை தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் முட்டுச்சந்துக்கு இட்டுச் சென்றதும், டிசம்பர் 1995 இல், யூப்பே இதேபோன்ற நடைமுறைகளைக் கொண்டு ஓய்வூதியங்கள் மற்றும் சமூக பாதுகாப்புக்கு எதிராக சில தாக்குதல்களை நிறைவேற்றினார்.

அரசாங்கம் தயாரித்து வரும் நடவடிக்கைகளில், “முறையான வழிமுறைகளை தலைகீழாக்குதல்" (inversion de la hiérarchie des normes) என்றழைக்கப்படுவதும் உள்ளன. அதாவது தொழில்துறை மட்டத்திலான ஒப்பந்தங்கள் மற்றும் தேசிய தொழிலாளர் நல ஷரத்துக்களை மீறும் ஒப்பந்தங்கள் குறித்து, நிறுவனங்கள் தொழிற்சங்கங்களுடன் பேரம்பேச இப்போது அனுமதி கிடைக்கிறது. இது வளைந்து கொடுக்கும் படுமோசமான வேலையிட நிலைமைகளை நடைமுறைப்படுத்தவும், தொழில்துறை மட்டத்தில் மற்றும் தேசிய தொழிலாளர் நலச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலைமைகளை விட மோசமான நிலைமைகளை தொழிலாளர்கள் எதிர்த்தால், அவர்கள் மீது ஆலைமூடல் அச்சுறுத்தலை முன்னிறுத்துவதன் மூலமாக தொழிலாளர்களை தொடர்ந்து மிரட்ட இது முதலாளிமார்களுக்கு முழு அதிகாரம் வழங்கும்.

“திட்ட ஒப்பந்தம்" (contrat de projet ) என்றழைக்கப்படும் மற்றொரு நடவடிக்கையானது, ஒரு குறிப்பிட்ட கட்டிடத்தைக் கட்டுவதற்கு கட்டுமான தொழிலாளர்களுடன் செய்யப்படும் ஒப்பந்தங்களை போன்று, யதார்த்தத்தில் நிறுவனத்தால் வரையறுக்கப்படும் ஒரு குறிப்பிட்ட "திட்டத்தின்" (Mission)  கால அளவு வரைக்கும் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு தற்காலிக ஒப்பந்தமாகும். இதுபோன்ற ஒப்பந்தங்கள் வரையறுக்கப்பட்ட-கால அளவு ஒப்பந்தங்களை (Contrat à durée déterminé - CDD) பிரதியீடு செய்ய நோக்கம் கொண்டுள்ளன, ஏனெனில் முதலாளித்துவ வர்க்கம் வரையறுக்கப்பட்ட-கால அளவு ஒப்பந்தங்களை (Contrat à durée indéterminée - CDD) மிகவும் வளைந்து கொடுக்கும் தன்மையற்றதாக பார்க்கிறது. மேலும் இது, அதிக வேலை பாதுகாப்பு வழங்கக்கூடிய தரமான, காலவரையற்ற ஒப்பந்தங்களையும் (Contrat à durée indéterminée - CDI) தவிர்க்கவியலாமல் பிரதியீடு செய்து, அவ்விதத்தில் அபாயகரமான தொழில் நிலைமைகள் பாரியளவில் அதிகரிப்பதைக் குறிக்கிறது.

கடுமையான வேலைகள் மீதான வகைமுறைகள் பெரிதும் நீக்கப்பட உள்ளன. இது, கடும் உடலுழைப்பு வேலைகள் அல்லது அபாயகரமான வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் ஒரு குறிப்பிட்ட அடுக்குகளை, குறிப்பிட்ட நிலைமைகளின் கீழ் சட்டபூர்வ வயது வரம்புக்கு முன்னரே ஓய்வு பெற அனுமதித்தது —இந்த கொள்கையை முதலாளிமார்கள் திட்டமிட்டு அழிக்கவும், ஒடுக்கவும் முனைந்திருந்தனர். மக்ரோன் அரசாங்கம் இந்த வகைமுறையின் உள்ளடக்கங்களில் பாதியை வெட்டி, அது முன்னர் என்ன விளைவை ஏற்படுத்தி கொண்டிருந்ததோ அதிலிருந்து மேலும் அவற்றை பலவீனப்படுத்தி உள்ளது.

முதலாளிமார்கள் வழக்கில் இழுக்கப்பட்டு, தொழிலாளர் நல நீதிமன்றங்களால் (prud’hommes) "துஷ்பிரயோக வேலைநீக்கங்களுக்கு" குற்றவாளிகளாக காணப்பட்டால், அவர்கள் தொழிலாளர்களுக்கு வழங்க நிர்பந்திக்கப்படும் அபராதங்கள் மீது, மக்ரோன் அரசாங்க உத்தரவாணைகள், வரம்பை நிர்ணயிக்கும். அதிகபட்சம் இழப்பீட்டு உத்திரவாதமானது (indemnités), அவ்வபோது முதலாளிமார்களைக் கட்டுப்படுத்துவதற்குரிய தடுப்பாக இருந்துள்ள நிலையில், இதை 50 சதவீதமாக குறைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. பெரும் தொகை குறைப்பானது, தொழிலாளர் நல நீதிமன்றங்களின் நிஜமான சகல அதிகாரங்களையுமே பறிக்கக்கூடும் என்பதோடு, தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குவதற்கு நடைமுறையளவில் இது முதலாளிமார்களுக்கு பச்சைக்கொடி காட்டுவதாக இருக்கும்.

முதலீட்டு நிதியங்கள் அவற்றின் மூலதனத்தை பிரான்சில் தக்க வைத்திருப்பதற்கான நேரடி ஊக்குவிப்பு என்ற வேஷத்தில், உலகளாவிய அளவில் அல்லாமல் அதற்கு எதிராக தேசியளவிலோ அல்லது ஐரோப்பிய மட்டத்திலோ ஒரு நிறுவனத்தின் இலாபங்களைக் கருத்தில் கொண்டு, அதன் அடிப்படையில் மட்டுமே நிறுவன பொருளாதார நிலை சார்ந்த வேலைநீக்கங்கள் (licenciements économiques) செய்ய அனுமதிப்பதை அரசாங்கம் நோக்கமாக கொண்டுள்ளது. இவ்விதத்தில் ஒரு பன்னாட்டு நிறுவனம் பாரிய வேலைநீக்கங்களை நியாயப்படுத்த, அதன் பிரெஞ்சு துணை நிறுவனங்களில் செயற்கையாக கணக்குவழக்கு பிரச்சினைகளை உருவாக்கும் சுதந்திரத்தைப் பெறும். இந்த வழிவகை, சென்ற ஆண்டு பாரிய போராட்டங்களை முகங்கொடுத்தபோது தொழிற்சட்டத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு சட்டத்தில் ஏற்கனவே தொழிற்சந்தைக்குள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆழமான கட்டுப்பாட்டு தளர்வுகளை உறுதியாக மீண்டும் உள்நுழைப்பதே மக்ரோன் அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது. இது, பிரான்சில் முதலீடு செய்வதற்கு அதிகபட்ச இலாப விகிதங்களைக் கோரி வருகின்ற, பிரான்சிலும் சர்வதேச அளவிலும் உள்ள நிதிய செல்வந்த தன்னலக்குழுக்களின் தனியார் முதலீட்டு நிதியங்கள் மற்றும் நிதி முதலீட்டு நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கான நிலைமைகளை உருவாக்கி, வணிகங்களின் தேவைகளுக்கேற்ப தொழிலாளர்களை முற்றிலும் "வளைந்து கொடுக்க" செய்யும். இது நாட்டில், தொழிலாளர்களை சுரண்டுவதை பாரியளவில் தீவிரப்படுத்துவதற்கு பாதையை திறந்து விடுகிறது.

இந்த நிகழ்ச்சிப்போக்கில், தொழிற்சங்கங்கள் ஒரு முக்கியமான மற்றும் துரோகத்தனமான பாத்திரம் வகிக்கின்றன. இதனால் தான், மக்ரோனால் அடிப்படை சமூக உரிமை அழிப்புகளோடு, உத்தரவாணைகளைக் கொண்டு தனிப்பட்ட நிறுவனங்கள் மட்டத்தில் அவற்றிற்கு இன்னும் அதிக அதிகாரங்கள் மற்றும் பணத்தை வழங்க திட்டமிட முடிகிறது. மக்ரோன் குறிப்பாக "தொழிற்சங்க காசோலைகளை" (chèque syndical) உருவாக்க பரிசீலித்து வருகிறார். அதன் சொந்த வார்த்தைகளில், இந்த முன்மொழிவானது, "தொழிலாளர்கள் அவர்கள் தேர்வுசெய்யும் தொழிற்சங்கங்களை தெரிவித்தால் சாத்தியமான அளவிற்கு தொழில் வழங்குனர்களே பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நிதி ஆதாரங்களை வழங்கிவிடுவார்கள்" என்பதை மீளவலியுறுத்துகிறது. இது முதலாளிமார்கள் மற்றும் முதலாளித்துவ அரசின் அங்கங்களாக தொழிற்சங்கங்கள் மாறுவதை இறுதி செய்யும்.

“தொழிற்சங்க பாரபட்சத்திற்கு" எதிராக போராடுவதற்காக என்ற சற்றும் நம்பமுடியாத சாக்குபோக்கின் கீழ், அரசாங்கம், ஏனைய தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கான தனிச்சலுகை அந்தஸ்தை உத்தியோகபூர்வமாக ஆக்க உத்தேசிக்கிறது. “தொழிற்சங்க பிரதிநிதிகளது பயிற்சியை பலப்படுத்துவது, தொழிற்சங்க பொறுப்புகள் ஏற்றிருக்கும் தொழிலாளர்களின் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதித்துவ அதிகாரியின் தொழில்வாழ்வு மாற்றத்தை [அதாவது ஒரு ஆலை மூடப்பட்ட பின்னர்] ஊக்குவிப்பது, தொழிற்சங்கத்தின் போர்குணம் வெளிப்படுவதற்குரிய நிலைமைகள் பரிணமிப்பதற்கு ஒத்துழைப்பது அல்லது இந்த போர்குணத்தினூடாக பெறப்படும் தொழில்வாழ்வு மற்றும் போட்டித்தன்மைகளை வெளிப்படுத்த முனையும் ஒரு குறிப்பிட்ட அதிகாரியின் முக்கியத்தை அங்கீகரித்தல்,” என்று அது முன்மொழிகிறது.

உத்தரவாணைகளும் ஏனைய நடவடிக்கைகளும் இப்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன என்ற நிலையில், இது தசாப்த கால போராட்டங்களினூடாக தொழிலாள வர்க்கம் வென்றெடுத்த சமூக உரிமைகளை கேள்விக்குட்படுத்துவதுடன், நிதியியல் தன்னலக் குழுக்களுக்கு ஏன் ஒரு அவசரகால நெருக்கடி நிலை அவசியப்பட்டுள்ளது என்பதும், அதை ஒரு சட்டமாக எழுதி அதை ஏன் மக்ரோன் நிரந்தரமாக்க விரும்புகிறார் என்பதும் முன்பினும் அதிகமாக தெளிவாகி வருகிறது.

லிபியா மற்றும் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான போர்களில் மேற்கத்திய உளவுத்துறையால் நிதியுதவி மற்றும் ஆயுதங்கள் வழங்கப்பட்ட இஸ்லாமிய வலையமைப்புகள் பிரான்சில் தாக்குதல்கள் நடத்திய பின்னர், பயங்கரவாத-எதிர்ப்பு என்ற சாக்குபோக்கின் கீழ் திணிக்கப்பட்ட அவசரகால நெருக்கடி நிலையானது, பிரெஞ்சு நிதிய செல்வந்த தன்னலக் குழுக்களின் சமூக தாக்குதல்களுக்கு எழும் எதிர்ப்பை ஒடுக்கும் முயற்சியில் இப்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பாரியளவிலான பொதுமக்கள் (இரண்டாம் சுற்றில் முழுமையாக 57.4 சதவீதத்தினர்) சட்டமன்ற தேர்தல்களில் வாக்களிக்காமல் புறக்கணித்தமை, குடியரசு அணிவகுப்பு இயக்க (LRM) நாடாளுமன்ற பெரும்பான்மையின் பிற்போக்குத்தனமான திட்டநிரல் என்னவாக இருந்தாலும் அதற்கு சட்டபூர்வத்தன்மை எதுவும் இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது. முதல் சுற்றில், அது, பிரெஞ்சு வாக்காளர்களில் வெறும் 16 சதவீதத்தினரின் வாக்குகளை மட்டும்தான் பெற்றிருந்தது.