ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Mélenchon hails French army as he launches movement against Macron’s cuts

மக்ரோனின் வெட்டுக்களுக்கு எதிரான இயக்கத்தை தொடங்கும் மெலோன்சோன், பிரெஞ்சு இராணுவத்தை புகழ்கிறார்

By Alex Lantier
24 July 2017

பிரெஞ்சு ஆயுதப்படைகளின் தலைமை தளபதி பியர் டு வில்லியே இராஜினாமா செய்த பின்னர் வெடித்த நெருக்கடி, அடிபணியா பிரான்ஸ் இயக்கத்தின் (La France insoumise - LFI) வர்க்க குணாம்சத்தை துரிதமாக அம்பலப்படுத்தி உள்ளது. ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் மோசமான சிக்கன கொள்கைகளுக்கு எதிராக LFI இன் இயக்கத்தைத் தொடங்கிய பின்னர், உடனடியாக, LFI இன் தலைவர் ஜோன்-லூக் மெலோன்சோன் டு வில்லியே இராஜினாமா செய்வதற்கு முன்பு அவர் கோரிய நிதி கோரிக்கைகளுடன் அவசரகதியில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

மக்ரோன்-எதிர்ப்பு இயக்க மெலோன்சோன், பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் மூலோபாய நலன்களுக்கு தொழிலாள வர்க்க நலன்களை அடிபணிய செய்யும் ஒரு போர்-ஆதரவு இயக்கத்தைக் கட்டமைக்க விரும்புகிறார் என்ற ஓர் அடிப்படை அரசியல் யதார்த்தத்தை இது எடுத்துக்காட்டுகிறது. ஆனால் தளபதிகளிடம் மண்டியிடுவதன் மூலமாக தொழிலாளர்களின் வாழ்க்கை தரங்களை ஒருவரால் பாதுகாக்க முடியாது என்பதை நீண்ட வரலாற்று அனுபவம் எடுத்துக்காட்டுகிறது. மக்ரோனுக்கு எதிராக வெடித்துச் சிதறக்கூடிய தன்மைகொண்ட வர்க்க போராட்டங்கள் தயாராகி கொண்டிருக்கின்றன, ஆனால் தொழிலாளர்களின் எதிர்ப்பானது மெலோன்சோன் மற்றும் அவர் கூட்டாளிகளிடம் இருந்து சுயாதீனமான போராட்டங்கள் மூலமாக மட்டுமே வெளிப்பாட்டைக் காணும், அவ்விதத்தில் மட்டுமே வெளிப்பாட்டைக் காண முடியும்.

மெலோன்சோன், இராணுவ செலவினங்கள் மற்றும் போருக்கு உறுதியாக வக்காலத்து வாங்குகிறார். அவர் ஊடகங்களிடம் பேசுகையில், பாதுகாப்புத்துறை வரவு-செலவு திட்டக்கணக்கில் 850 மில்லியன் யூரோ வெட்டுக்களை முன்மொழிந்து மக்ரோன் "மிகப்பெரும் தவறிழைத்துவிட்டதாக" கண்டனம் தெரிவித்தார். இந்த வெட்டுக்களை கண்டித்து தேசிய நாடாளுமன்றத்தில் டு வில்லியே ஆத்திரத்துடன் வெளியிட்ட அறிக்கையையும் அவர் பாராட்டினார்: “சேவையாற்றுவது அவர் கடமை என்றால், நிலைமையின் யதார்த்தத்தை எடுத்துரைப்பதும் அவர் கடமை தான். அரசு தலைவர், இராணுவத்திற்கும் தேசத்திற்கும் இடையே முற்றிலும் ஆரோக்கியமற்ற ஒரு சூழலை உருவாக்கியுள்ளார், இதற்காக நான் வருந்துகிறேன்,” என்றார்.

மெலோன்சோன் அவர் வலைப்பதிவில் எழுதுகையில், பிரான்ஸ் நடத்தும் போர்களுக்கு தாராள நிதியுதவிகளைக் கோரினார்: “பாதுகாப்புத்துறை செலவினங்களின் மதிப்பு குறித்து ஒருவர் என்ன நினைத்தாலும், நமது ஆயுதப்படைகள் ஈடுபட்டுள்ள மோதல்கள் குறித்து ஒருவர் என்ன நினைத்தாலும், அந்த முடிவுகளுக்கு கீழ்படிந்து இருப்பது தான் தேசத்தின் கடமை. யார் நிதியளிப்பார்கள் என்று தெரியாமல் நம்மால் நான்கு இராணுவ போர்முனைகளைத் திறந்துவிட முடியாது. ஒட்டுமொத்த அமைப்புமுறையையும் இடம்பெயர்த்துவிட அச்சுறுத்துகின்ற மோதலில் ஆண்களும் பெண்களும் ஈடுபட்டிருக்கையில், நிதியளிக்க மறுப்பதன் மூலமாக, அவர்களின் தலைவர்களே, தாங்கள் எடுத்த முடிவின் மதிப்பில் நம்பிக்கையின்றி இருப்பதை எடுத்துக்காட்டுகிறார்கள்,” என்றார்.

மெலோன்சோனின் வாதங்கள் பிற்போக்குத்தனமானதும், பொய்யானதுமாகும். போர் எதிர்ப்புணர்வை விரும்பாமல், தொடர்ச்சியாக, பிரான்சில் தொழிலாள வர்க்க விரோத அரசாங்கங்களுக்கும் மற்றும் நேட்டோ கூட்டணிக்கும் தலைமை கொடுத்து வரும் ஒரு இரகசிய அரசியல் குழுவால், பிரெஞ்சு மக்களின் முதுகுக்குப் பின்னால் தொடங்கப்பட்ட நவ-காலனித்துவ போர்களுக்கு அடிபணிவது, பிரெஞ்சு மக்களின் "கடமை" அல்ல.

பிரெஞ்சு இராணுவம் அமெரிக்க தலைமையிலான கூட்டணியில் பங்கெடுத்து வரும் மத்திய கிழக்கில் ஆகட்டும், அல்லது அதன் முன்னாள் காலனி சாம்ராஜ்ஜியத்தின் மீது பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தை பேணுவதற்கு அவர்கள் முயற்சிக்கும் ஆபிரிக்காவில் ஆகட்டும், பிரெஞ்சு இராணுவத்தின் இப் போர்கள் ஏகாதிபத்திய சூறையாடல் நடவடிக்கைகளாகும். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் ஆக்கிரமிப்புகளும், சிரியா மற்றும் லிபியா அல்லது மாலி போர்களும் இரத்தந்தோய்ந்த பேரழிவுகளாகும்.

அரசியல்ரீதியில் குற்றகரமான இத்தகைய போர்களுக்கு பாரியளவில் நிதியுதவி வழங்கி கௌரவத்தை பேணுவதன் மூலமாக, இராணுவத்தின் "அமைதி குலைவை" தடுப்பதற்காக அனைத்தும் செய்யப்பட வேண்டுமென்ற மெலோன்சோனின் கூற்றானது, அவர் பிரான்சிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கு எதிராக ஆளும் உயரடுக்கின் தரப்பில் நிற்பதை எடுத்துக்காட்டுகிறது. இந்த அரசியல் உள்ளடக்கத்தில் தான், மக்ரோனின் சமூக எதிர்புரட்சிக்கு எதிராக மெலோன்சோன் முன்மொழியும் இந்த இயக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றியமும் மக்ரோனும் தொழிலாள வர்க்கத்துடன் ஒரு வரலாற்று மோதலுக்கு தயாரிப்பு செய்து வருகின்றனர் என்பதை கடந்த மாதம் பிரெஞ்சு சட்டமன்ற தேர்தல்களுக்குப் பிந்தைய சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன. உத்தரவாணைகள் மூலம் தொழிற்சட்டத்தை திருத்தி எழுதவும், ஒரு தசாப்தத்திற்கு முன்னர் ஜேர்மன் சமூக ஜனநாயகவாதிகள் ஹார்ட்ஸ் சட்டங்களை (Hartz laws) கொண்டு ஜேர்மன் தொழிலாளர்களுக்கு எதிராக தொடங்கிய அதேபோன்ற கொள்கைகளை உள்ளடக்கவும், கூடுதல் அதிகார வழிவகை சட்டம் மக்ரோனை அனுமதிக்கிறது. அவசரகால சட்டத்தின் பெரும்பாலானவற்றை பொதுச்சட்டத்திற்குள் எழுதுவதானது, ஐயத்திற்கிடமின்றி மக்ரோனின் தாக்குதல்கள் தூண்டிவிடும் சமூக எதிர்ப்புக்கு எதிராக அவர் தயாரிப்பு செய்து வரும் பொலிஸ் ஒடுக்குமுறை மீதான சகல நீதித்துறை கண்காணிப்பையும் நீக்கிவிடும்.

பிரான்சில் ஒரு சர்வாதிகாரத்தை நோக்கி மக்ரோன் செய்து கொண்டிருக்கும் பிரமாண்ட முன்னெடுப்பானது, பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல்களில் பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste - PES) முன்னெடுத்த அரசியல் நிலைப்பாட்டின் சரியான தன்மையை ஊர்ஜிதப்படுத்துகிறது. நவ-பாசிசவாத வேட்பாளர் மரீன் லு பென்னுக்கு எதிராக மக்ரோனுக்கு வாக்களிப்பதன் மூலமாக ஒருவரால் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை பாதுகாக்க முடியும் என்ற பிரமைகளை நிராகரித்த சோசலிச சமத்துவக் கட்சி (PES), இரண்டாம் சுற்று தேர்தல்களை செயலூக்கத்துடன் புறக்கணிக்குமாறு அழைப்புவிடுத்தது. மக்ரோன் மற்றும் வெளியேறும் சோசலிஸ்ட் கட்சியுடன் (PS) உடன் இணைந்த ஏனையவர்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் போக்கு மட்டுமே, வரவிருக்கின்ற போராட்டங்களுக்கு தொழிலாளர்களைத் தயார் செய்யுமென அது விளங்கப்படுத்தியது.

இரண்டாம் சுற்று ஜனாதிபதி தேர்தலில் நான்கு மில்லியன் வெற்று வாக்குகள் அல்லது செல்லாத வாக்குகள் இடப்பட்டன, மற்றும் இரண்டாம் சுற்று சட்டமன்ற தேர்தல்களை பாரியளவில் 57 சதவீதத்தினர் புறக்கணித்தனர் என்பது தொழிலாள வர்க்கத்தில் PES இன் நிலைப்பாடுகளுக்கு பரந்த ஆதரவு இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

தனது பங்கிற்கு மெலோன்சோன் ஜனாதிபதி தேர்தலின் போதான தனது கொள்கையையே தொடர்ந்து கொண்டிருக்கிறார்—அதாவது மக்ரோன் மற்றும் லு பென் இருவருக்கும் எதிரான பாரிய எதிர்ப்பை, ஒரு திவாலான நாடாளுமன்ற முன்னோக்கை நோக்கி திசைதிருப்பிவிட முயற்சிக்கிறார். இரண்டாம் சுற்று ஜனாதிபதி தேர்தலில் பெரும்பாலான LFI ஆதரவாளர்கள் அவர்களின் ஆதரவை வெற்று வாக்குகள் அல்லது செல்லா வாக்குகள் மூலமாக சுட்டிக்காட்டிய பின்னரும் கூட, மெலோன்சோன் ஒரு தேர்தல் புறக்கணிப்புக்கு அழைப்புவிடுக்கவில்லை. எந்த நிலைப்பாட்டையும் எடுக்க மறுத்த அவர், பின்னர் மக்ரோனின் பிரதம மந்திரியாவதற்காக, தேசிய நாடாளுமன்றத்தில் LFI (La France insoumise - LFI) ஐ பெரும்பான்மையாக தேர்ந்தெடுக்குமாறு தனது வாக்காளர்களுக்கு அழைப்புவிடுத்தார்.

முதல் சுற்று ஜனாதிபதி தேர்தலில் அவர் பெற்றிருந்த 20 சதவீத ஆதரவுடன் அவருக்கு அளிக்கப்பட்ட பொறுப்புறுதிகளை அதிர்ச்சியூட்டும் வகையில் மெலோன்சோன் உதறிவிட்டதற்குப் பின்னர், LFI, நாடாளுமன்றத்தில் 15 பிரதிநிதிகளை மட்டுமே பெற்றது. ஜூலை 12 இல், பாரீஸ் குடியரசு சதுக்கத்தில் மூவர்ண பட்டியணிந்து LFI பிரதிநிதிகள் சூழ, மெலோன்சோன் ஒரு சமூக இயக்கத்தைத் தொடங்குமாறு அவரது வாக்காளர்களுக்கு அழைப்புவிடுத்தார். மெலோன்சோனை பொறுத்த வரையில், LFI இன் நாடாளுமன்ற சிறுபான்மையினரது செல்வாக்கை அதிகரிப்பதே அதன் நோக்கமாகும். இந்த நாடாளுமன்ற சிறுபான்மையை, பாரிய இயக்கத்திற்கான ஒரே சட்டபூர்வ அரசியல் பிரதிநித்துவமாக மெலோன்சோன் காண்கிறார்.

அவர் கூறுகையில், “ஆகஸ்டில், நாங்கள் ஒரு தேசிய பிரச்சார பயணம் மேற்கொள்ளவிருக்கிறோம். செப்டம்பரில், நிச்சயமாக, தொழிற்சங்கங்கள் உதவி கோரினால் நாம் உதவுவோம். நமது சொந்த பேரணிகளையும் நடத்துவோம் … உங்கள் நாடாளுமன்றவாதிகளுடன் தொடர்பு கொள்ளவும் செயல்படவும் நீங்கள் தயாரிப்பு செய்து கொள்ளுங்கள், இவ்விதத்தில் பாரிய இயக்கத்திற்கும் நாம் கொண்டிருக்கும் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கும் இடையே ஒரு இணைப்புத்தன்மை ஏற்படுகிறது,” என்றார்.

பகிரங்கமாக தேசிய தொழில் விதிமுறைகளை மீறி தொழிற்சங்கங்களும் முதலாளிமார்களும் நிறுவன-மட்டத்திலான ஒப்பந்தங்களைப் பேரம்பேச அனுமதிப்பதை நோக்கமாக கொண்ட, மக்ரோனின் உத்தரவாணைகளை அவர் சுட்டிக்காட்டினார்: “முதலில் தொழிலாளர்களது தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் மற்றும் தொழில் விதிமுறைகள் முதன்முதலில் உருவாக்கப்பட்ட நூற்றாண்டின் தொடக்கத்திலும் மற்றும் பிரான்சில் வர்க்க போராட்டங்களிலும், பின்னர் 1936 இல், பின்னர் சுதந்திரத்தின் போது, பின்னர் மே 1968 இல், பின்னர் மே 1981 இல் … பெற்ற மாபெரும் வெற்றிகளின் சிறப்புத்தன்மைகள் குறித்து உங்களுக்குத் தெரியும், இவை அனைத்தும், பேனா முனையில், நீக்கப்படும் … ஒவ்வொன்றும் சிறிய-உள்ளூர் உடன்படிக்கைகளுக்கு அனுகூலமாக வீசியெறியப்படும்,” என்றார்.

மக்ரோனுக்கு பின்னால், பிரெஞ்சு மற்றும் உலகளாவிய நிதிய மூலதனம் தொழிலாள வர்க்கத்தின் மீது ஒரு வரலாற்று தாக்குதலுக்கு தயாரிப்பு செய்து வருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, இதன் ஒப்புமை அளவு முதலாளித்துவ நெருக்கடியின் அளவை எதிரொலிக்கிறது. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் சோவியத் ஒன்றிய கலைப்புக்குப் பின்னர் ஒருதுருவமுனைப்பட்ட சக்தியாக இருந்த, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கம் பொறிந்து வருகிறது, அதேபோல ஐரோப்பிய ஒன்றியம் அதன் நாசகரமான மற்றும் பகுத்தறிவற்ற சிக்கனக் கொள்கையால் மதிப்பிழந்துள்ளது. பிரான்ஸ், சர்வதேச போட்டித்தன்மையில் இல்லாமல், தொழில்துறை மற்றும் பொருளாதார பொறிவால் பாதிக்கப்பட்டு வருவதுடன், இதற்கு முதலாளித்துவ வர்க்கம் சர்வாதிகார நடவடிக்கைகளை கொண்டு விடையிறுத்து வருகிறது.

மெலோன்சோன் என்ன முன்மொழிகிறார்? இராணுவத்திற்குப் பகிரங்கமாக அனுதாபம் காட்டும் தேசிய நாடாளுமன்றத்தின் ஒரு சிறிய, வலுவற்ற சிறுபான்மைக்கு பக்கபலமாக, ஒரு செயற்கையான இயக்கத்தில் மக்களை அணிதிரட்டி, அவர்களை பயன்படுத்த விரும்புகிறார். அவர் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடனும் ஒருங்கிணைந்து செயல்படுவார், அவை அவற்றின் பங்கிற்கு, “தொழிற்சங்க காசோலைக்காகவும்" மற்றும் மக்ரோன் அவரின் உத்தரவாணைகளின் மூலம் அவற்றிற்கு வழங்க முன்மொழிந்து வரும் ஏனைய போலி-சட்டரீதியிலான கையூட்டுகளுக்காகவும் பேரம்பேசி வரும் நிலையில், தொழிற்சங்கங்கள் எந்த முன்னோக்கும் இல்லாமல் ஒருசில போராட்ட அணிவகுப்புகளை ஏற்பாடு செய்யும்.

இந்த மூலோபாயம் முட்டாள்தனமானது, இது தொழிலாளர்களை குழப்பத்திற்குள்ளாக்குவதற்கு மட்டுமே சேவையாற்றும். இதன் பிரதான குணாம்சம், இராணுவத்திற்கான மெலோன்சோனின் ஆதரவு தெளிவுபடுத்துவதைப் போல, தேசிய மற்றும் நாடாளுமன்ற நோக்குநிலையாகும், அதாவது அது வரவிருக்கும் மாதங்கள் மற்றும் ஆண்டுகளில் தொழிலாள வர்க்கத்தில் எழவிருக்கும் போராட்டங்களின் அபிவிருத்திக்கு ஒரு திசைதிருப்பலாக மட்டுமே இருக்கும், அவ்விதத்தில் மட்டுமே இருக்க முடியும்.

மக்ரோனின் தாக்குதல்கள், ஐரோப்பா எங்கிலும் ஐரோப்பிய ஒன்றியத்தால் நடத்தப்பட்ட சமூக தாக்குதல்களின் பிரெஞ்சு நடைமுறைப்படுத்தலை பிரதிநிதித்துவம் செய்கின்றன. ஜேர்மன் SPD உடன் ஒருங்கிணைந்து தயாரிக்கப்பட்ட தொழிற்சட்டம் மூலமாக, கிரீஸில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன கொள்கை எதை திணித்ததோ, அதாவது 20 ஆம் நூற்றாண்டின் வர்க்க போராட்டங்களின் மூலமாக தொழிலாள வர்க்கம் பெற்ற சகல தேட்டங்களையும் அழித்ததைப் போல, மக்ரோனும், உத்தரவாணைகள் கொண்டு அதை அடைய விரும்புகிறார்.

இத்தகைய தாக்குதல்கள், ஐரோப்பா எங்கிலும் புரட்சிகர தாக்கங்களோடு வெடிப்பார்ந்த வர்க்க போராட்டங்களை தூண்டத் தவறாது. 1936 மற்றும் 1968 இல் பிரெஞ்சு பொது வேலைநிறுத்தங்களை போலவே, அல்லது இரண்டாம் உலக போர் முடிவில் பாசிச ஆட்சியிலிருந்து ஐரோப்பாவிற்கு கிடைத்த சுதந்திரம் போலவே, தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமானமாக வெடித்தெழும் என்பதோடு, அவை எந்தவொரு தனி நாட்டில் தொடங்கினாலும் விரைவில் எல்லைகளை தாண்டி சீறிச்செல்லும். இத்தகைய போராட்டங்களில், ஐரோப்பாவின் ஏனைய இடங்களில் உள்ள தொழிலாளர்களும் மற்றும் உலகெங்கிலுமான தொழிலாளர்களுமே பிரெஞ்சு தொழிலாளர்களின் கூட்டாளிகளாவர்.

மெலோன்சோனின் மூலோபாயம் பிற்போக்குத்தனமானது, ஏனெனில் அது அதிகாரத்திற்கான தொழிலாள வர்க்க போராட்டத்தை முடக்குவதுடன், சர்வதேச அளவில் அவர்களின் வர்க்க சகோதர சகோதரிகளிடம் இருந்து பிரெஞ்சு தொழிலாளர்களைப் பிரிக்கிறது. நாடாளுமன்றத்தில் LFI மிகச் சிறிய சிறுபான்மையாக இருப்பதால், தற்போது அதற்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை. ஆனால் கிரீஸிலேயே கூட, அங்கே மெலோன்சோனின் சிரிசா கூட்டாளிகள் 2015 தேர்தல்களை வென்ற நிலையில், அவர்களது தேசியவாதமும் மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தை ஆதரவிற்கு அழைப்பு விட மறுத்தமையும், சிரிசாவின் எதிர்ப்பை பலவீனமாக கண்டனத்திற்குரியதாக ஆக்கியது. இறுதியில் அது பேர்லின் தலைமையில் வங்கிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அழுத்தத்திற்கு அடிபணிந்தது.

பாரீஸ், அவசியமானால் ஓர் இராணுவ மோதல் உட்பட பேர்லினுடனான மோதலுக்கு தயாரிப்பு செய்தாக வேண்டும் என்பதே மெலோன்சோன் அவரது ஜேர்மன்-விரோத துண்டறிக்கையான Bismarck’s Herring இல் எட்டிய தீர்மானம். அவர் எழுதினார், “நாங்கள் சரியாக உள்ளோம். ஆனால் நமக்கு கேள்வி கேட்கும் உரிமை இருக்கிறது. பாருங்கள், ஒரு நூற்றாண்டுக்கும் குறைந்த காலத்தில் [ஜேர்மனி] நம்மீது மூன்று முறை படையெடுத்தது. இப்போதோ ஜேர்மனி 20 ஆண்டுகளுக்கும் குறைந்த காலத்தில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதியாளராக ஆகியுள்ளது.”

மெலோன்சோன், மக்ரோனுக்கு எதிராக டு வில்லியே ஐ பாதுகாக்கிறார் என்றால், அதுவொரு சிறிய விடயமல்ல, ஏனென்றால் அவர் கடந்த வாரம் மேர்க்கெல் மற்றும் மக்ரோன் முன்மொழிந்த இராணுவ உற்பத்திக்கான பிரான்கோ-ஜேர்மன் தொழில்துறை கூட்டணியை எதிர்க்கிறார். பேர்லினில் இருந்து முற்றிலும் சுதந்திரமான ஒரு பாதுகாப்புத்துறை தொழில்துறையைப் பேணுவதற்காக, ஜேர்மனிக்கு எதிராக தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான பிரான்சின் தகைமைக்கு அத்திட்டம் ஒரு அச்சுறுத்தலாக இருப்பதாக கண்டனம் செய்து, அத்திட்டத்தை டு வில்லியே எதிர்ப்பதற்காக மெலோன்சோன் அவரை பாராட்டுகிறார்.

அவரது வலைப்பதிவில் மெலோன்சோன் எழுதுகிறார்: “ஜனாதிபதி, ஜேர்மனியுடன் இராணுவ சமரசத்திற்கான ஒரு சாத்தியமற்ற திட்டத்தை முன்வைத்த … போது, கசப்புணர்வு வென்றது! … [பிரான்சின்] லுக்கிளேர்க் டாங்கிகள் (Leclerc tanks) ஐ உருவாக்கும் பாதி நிறுவனங்களை நாம் ஏற்கனவே ஜேர்மன் பில்லியனர்களின் குடும்பங்களுக்கு விற்றுவிட்டோம். [சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி பிரான்சுவா] ஹோலாண்டின் பதவி காலத்தை குணாம்சப்படுத்திய நமது பாதுகாப்புத்துறை நலன்களின் மொத்த விற்பனையும் முடிவுக்கு வந்துவிட்டதாக நாம் நினைத்தோம். வெளிப்படையாக விடயம் அவ்விதமாக இல்லை என தெரிகிறது. இப்போது ஆயுதப்படைகள் ஜேர்மன் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதாக இருக்கலாம், நாளை அவர்கள் பறக்கும் விமானங்கள் தேசிய கட்டுப்பாட்டிற்கு வெளியே உற்பத்தியானதாக இருக்கலாம்,” என்றார்.

இத்தகைய பிற்போக்குத்தனமான கருத்துக்கள், 1940 இல் நாஜி படையெடுப்புக்கு வெட்ககேடாக அடிபணிவதற்கு முன்னதாக, 1930 களில் ஹிட்லருக்கு எதிராக போராட்டத்தை தொடங்கிய பிரெஞ்சு முதலாளித்துவ அரசியல்வாதிகளின் தோரணையுடன் தீர்க்கமாக ஒத்தத்தன்மையை கொண்டுள்ளன. இவை, அனைத்திற்கும் மேலாக, ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் மற்றும் கடந்த நூற்றாண்டில் இரண்டு முறை ஐரோப்பாவில் உலக போராக வெடித்த ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான பதட்டங்களை கிளறிவிடவும் நோக்கம் கொண்டுள்ளது.

மெலோன்சோனின் அரசியல் திவால்நிலைமையானது, சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போரின் ஆதரவாளர்களாக மாறியுள்ள ஐரோப்பிய சமூக ஜனநாயகமான சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் பரந்த சுற்றுவட்டத்தில் இருக்கும் கட்சிகளின் பொதுவான பொறிவைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. ஒரு புரட்சிகர வெடிப்பின் பேராபத்து இப்போது ஐரோப்பாவை துரத்திக் கொண்டிருக்கிறது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) ஐரோப்பாவில் உள்ள ஏனைய பிரிவுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தேசிய எல்லைகளுக்கிடையே நடக்கும் இத்தகைய போராட்டங்களை முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கான மற்றும் ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளைக் கட்டமைப்பதற்கான ஒரு புரட்சிகர போராட்டத்திற்குள் ஐக்கியப்படுத்தி அரசியல் தலைமை வழங்குவதையே, PES, அதன் பணியாக ஏற்றுக் கொண்டுள்ளது.