ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump pulls plug on CIA’s Syrian “revolution”

ட்ரம்ப், மத்திய உளவுத்துறை முகமையின் சிரிய "புரட்சி" க்கு நிதியளிப்பை நிறுத்துகிறார்

Bill Van Auken
22 July 2017

சிரியாவில் இஸ்லாமிய போராளிகள் குழுக்களுக்குப் பயிற்சியளித்து, ஆயுதங்கள் வழங்கி மற்றும் சம்பளங்களும் கூட வழங்கிய ஐந்தாண்டுகளுக்கு முந்தைய சிஐஏ இன் உத்தியோகப்பூர்வ இரகசிய நடவடிக்கையை ட்ரம்ப் நிர்வாகம் நிறுத்துகிறது என்று ஜூலை 19 அன்று வாஷிங்டன் போஸ்டில் முதலில் வெளியான செய்தி, ட்ரம்ப் மற்றும் மாஸ்கோவிற்கு இடையிலான "உள்கூட்டு" குறித்த குற்றச்சாட்டுகள் மீது வாஷிங்டனில் நடந்து வரும் கடும் அரசியல் மோதலை இன்னும் கூடுதலாக எரியூட்டியுள்ளது.

ஆயுத சேவைகள் குழுவின் குடியரசு கட்சி தலைவர் செனட்டர் ஜோன் மெக்கெயின், மூளை புற்றுநோய் சம்பந்தமான அறுவைசிகிச்சைக்குப் பின்னர் குணமாகி கொண்டிருந்த நிலையில், அரிஜோனாவில் இருந்து ஓர் அறிக்கை வெளியிட்டார், “ரஷ்யாவிற்கு எந்தவொரு விட்டுக்கொடுப்பும், சிரியாவிற்கான ஒரு பரந்த மூலோபாயம் இல்லாமல் இருப்பதும், பொறுப்பற்றத்தன்மை என்பதோடு குறுகிய பார்வையைக் கொண்டது,” என்றார்.

வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளரும், ஜோர்ஜ் டபிள்யு. புஷ் இன் தலைமை உரையாசிரியருமான மைக்கேல் ஜேர்சனிடம் இருந்து மிகவும் விஷமத்தனமான ஒரு கண்டனம் வந்தது, ட்ரம்ப் "சிரியாவில் ரஷ்ய நலன்களுக்கு முழுமையாக அடிபணிந்துவிட்டார்", “கௌரவத்தை இழக்கும் விதத்தில், அமெரிக்க பினாமிகளுக்கான உதவிகளை வெட்டுவதன் மூலம்" “துல்லியமாக ஒரு மூலோபாய போட்டியாளரால் விலைக்கு வாங்கப்பட்டு, விற்கப்பட்டு விட்டதைப் போல" நடந்து கொள்கிறார் என்று ட்ரம்பைக் குற்றஞ்சாட்டினார்.

சிரியாவில் "கிளர்ச்சியாளர்கள்" என்றழைக்கப்படுபவர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் பண வினியோகத்திற்கான பாதையை அடைப்பது, ஏதோவிதத்தில் ரஷ்யாவிடம் மூலோபாயரீதியில் அடிபணிவதைப் பிரதிநிதித்துவம் செய்கிறது என்ற கூற்றுக்கள் அர்த்தமற்றவை. ஹம்பேர்க்கில் நடந்த ஜி20 உச்சிமாநாட்டுக்கு முன்னதாக ட்ரம்ப் அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெனரல் எச். ஆர். மெக்மாஸ்டர் மற்றும் சிஐஏ இயக்குனர் மைக் பொம்பியோ உடன் சேர்ந்து எடுத்ததாக கூறப்படும் இந்த முடிவு, முன்பே தீர்மானிக்கப்பட்டிருந்த ஒரு முடிவு தான்.

“சுதந்திர சிரிய இராணுவம்" சிரியாவில் எந்த முக்கிய பாத்திரம் வகிப்பதிலும் தோல்வியடைந்துள்ளது என்ற கருத்துக்கள் இதற்காக பயன்படுத்தப்பட்டன. ஈரான் தரப்பில் அணிசேர்ந்திருந்த போராளிகள் குழுக்களது ஆதரவு, மற்றும் செப்டம்பர் 2015 இல் இருந்து ரஷ்ய விமானப்படையின் ஆதரவு ஆகியவற்றுடன் சிரிய அரசு படைகள், "கிளர்ச்சியாளர்களை" ஒவ்வொரு முக்கிய நகர்புற மையங்களில் இருந்தும் வெளியேற்றி, அவர்கள் ஒருவரோடு ஒருவர் கடுமையான உட்பூசல்களில் ஈடுபட்டு வந்த இட்லிப் மாகாணத்தின் புறநகர் பகுதிகளுக்குள் விரட்டியடித்துள்ளன.

சிரிய அரசு டிசம்பர் 2016 இல் கிழக்கு அலெப்போவை மீண்டும் கைப்பற்றியதானது, சிஐஏ ஆதரவிலான சுன்னி இஸ்லாமிய போராளிகள் குழுக்களை வாஷிங்டனின் பினாமிகளாக பயன்படுத்தி, ஆட்சி மாற்றத்திற்கான ஒரு போரை நடத்தும் அமெரிக்க மூலோபாயத்தின் இறுதி தோல்வியை எடுத்துரைத்தது.

இந்த குற்றகரமான மூலோபாயம், 2011 இல் லிபிய அரசாங்கத்தைக் கவிழ்த்து, சட்டவிரோத கும்பல்களைக் கொண்டு அதன் தலைவர் மௌம்மர் கடாபியை படுகொலை செய்யப்படுவதில் போய் முடிந்த அந்த ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்க போரை அடுத்து தொடங்கப்பட்டதாகும். இஸ்லாமிய போராளிகளும் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான ஆயுதங்களும் கிழக்கு லிபிய துறைமுக நகரமான பெங்காசியிலிருந்து சிரியாவிற்குள் அனுப்பப்பட்டன.

இது, 2013 வாக்கில், சவூதி அரேபியா மற்றும் ஏனைய வலதுசாரி வளைகுடா எண்ணெய் முடியாட்சிகள், மற்றும் துருக்கியுடனும் சேர்ந்து, சிஐஏ ஆல் சிரியாவிற்குள் பாய்ச்சப்பட்ட, நியூ யோர்க் டைம்ஸ் க்கு ஒரு அமெரிக்க அதிகாரி கூறியவாறு, "ஆயுதங்களின் வெள்ளப்பெருக்கு” என்பதாக மாறியிருந்தது. பத்தாயிரக் கணக்கான வெளிநாட்டு இஸ்லாமிய போராளிகளும் ஓர் இரத்தந்தோய்ந்த வகுப்புவாத உள்நாட்டு போருக்குள் அனுப்பப்பட்டார்கள், இதில் பாதிக்கப்பட்டவர்களின் இப்போதைய எண்ணிக்கை, உயிரிழப்புகளில் நூறாயிரக் கணக்கிலும் அகதிகளாக இடம்பெயர்த்தப்பட்டவர்களில் மில்லியன் கணக்கிலும் உள்ளது. சர்வதேச எல்லைகளைத் தாண்டி வருவதற்கு மேற்கத்திய உளவுத்துறை முகமைகளது உதவிகளைப் பெற்றிருந்த இதே கூறுபாடுகளில் சில, ஐரோப்பாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திரும்பின.

அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் பணத்தைப் பெற தகுதி பெற்றிருந்த சுமார் 40 “மிதவாத கிளர்ச்சி" போராளிகள் குழுக்களுடன் சிஐஏ "நெருக்கமாக" இருந்ததாக கூறப்படுகிறது. யதார்த்தத்தில், இந்த குழுக்களில் பெரும்பான்மை அல்-நுஸ்ரா முன்னணி போன்ற கூறுபாடுகளில் இருந்து பெரிதும் வித்தியாசப்பட்டவை கிடையாது என்பதோடு, இவை இறுதியில் சிரிய அல் கொய்தா துணை அமைப்புகளுடன் கூட்டணி சேர்ந்தன அல்லது அவற்றின் அமெரிக்க ஆயுதங்களை அந்த அமைப்புகளிடம் ஒப்படைத்தன.

சிஐஏ ஆதரவிலான "கிளர்ச்சியாளர்களின்" தோல்வி, வெறுமனே ரஷ்யா மற்றும் ஈரான் வினியோகித்த அதிகரித்த வெடிமருந்துகளால் ஏற்பட்ட ஒரு சம்பவமல்ல, மாறாக சிரிய மக்களின் பரந்த அடுக்குகள் இந்த போராளிகள் குழுக்களுக்கு விரோதமாக இருந்தன. இந்த அடுக்குகள், அசாத் ஆட்சியின் ஒடுக்குமுறை மற்றும் ஊழலுக்கு இடையிலும், அதை குறைந்த தீமையாக கண்டன.

அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் அதற்கு வக்காலத்துவாங்கும் போலி-இடதுகள் முன்வைத்த பிரச்சாரத்திற்கு நேரெதிர் விதமாக, இந்த கிளர்ச்சியாளர்கள் ஜனநாயகத்திற்கான அல்லது "புரட்சிக்கான" ஏதோவொரு வகை போராட்டத்தின் பாதுகாவலர்களாக இருக்கவில்லை, மாறாக இவர்கள் வலதுசாரி வகுப்புவாத கைக்கூலிகளாக இருந்து, அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளைத் திட்டமிட்டு கொள்ளையடித்ததுடன், இவர்களின் தெளிவற்ற சித்தாந்தத்தை எதிர்த்த எவரொருவரையும் தலைதுண்டித்து படுகொலை செய்தனர்.

பெரிதும் அல் கொய்தா இணைப்பு கொண்ட "கிளர்ச்சியாளர்களுக்கு" செலவிடப்பட்ட சிஐஏ இன் நிதியுதவிகள் மற்றும் ஆயுத உதவிகளை நிறுத்துவதென்பது, சிரியாவில் மோதல் முடிவுக்கு வருகிறது என்பதையோ அல்லது மாஸ்கோவுடன் குறிப்பிடத்தக்க எந்த சமரசத்தையோ அர்த்தப்படுத்தவில்லை, மாறாக இது ஒரு பரந்த போருக்கான தயாரிப்புகளின் பாகமாக உள்ளது.

பென்டகன், வடக்கில் பிரதானமாக சிரிய குர்திஷ் YPG போராளிகள் குழுவை உள்ளடக்கிய சிரிய ஜனநாயக படைகள் என்றழைக்கப்படுவதையும், தென்கிழக்கில் ஈராக் மற்றும் ஜோர்டான் எல்லைகள் சந்திக்கும் சிரியாவினது ஒரு மூலோபாய முக்கியத்துவம் மிக்க எல்லையான al-Tanf இல் நிறுவப்பட்டுள்ள அமெரிக்க சிறப்புப்படை தளத்திற்கு அருகில் சுன்னி போராளிகள் குழுக்களையும், இரண்டையும், அதன் சொந்த பினாமி படைகளாக தொடர்ந்து பயிற்சியளித்து, ஆயுதமளித்து வருகிறது.

அமெரிக்க இராணுவத்தால் அமைக்கப்பட்ட பல தளங்களில் ஒன்றான இது, சிரியா மீதான இரகசிய படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்புக்கு ஒப்பானதாகும். சிரிய குர்திஷ்களுடனான அமெரிக்க கூட்டணிக்கு அங்காரா ஆட்சியின் எதிர்ப்பை பிரதிபலித்து, வடக்கு சிரியாவில் உள்ள 10 இரகசிய அமெரிக்க தளங்களின் இடங்களைக் குறிப்பிட்டும், அத்துடன் துருப்புகளின் எண்ணிக்கை மற்றும் அவை ஒவ்வொன்றும் வைத்துள்ள ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களின் ரகங்கள் குறித்த விரிவான தகவல்களுடன் துருக்கிய அரசு செய்தி நிறுவனம் கட்டுரை ஒன்றை பிரசுரித்தது. இம்மாத தொடக்கத்தில், ட்ரம்ப் நிர்வாகம் ஈராக் மற்றும் சிரியா இரண்டு இடங்களிலும் புதிய "தற்காலிக" தளங்களைக் கட்டமைப்பதற்கான ஒப்புதலுக்கு வாக்களிக்குமாறு காங்கிரஸிடம் கோரியிருந்தது.

இதற்கிடையே, சிரிய இலக்குகள் மீது பென்டகன் உயிர் ஆபத்தான விமானத் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி உள்ளது. சுதந்திரமான கண்காணிப்பு குழு Airwars குறிப்பிடுகையில் கடந்த மாதம் மட்டும் அமெரிக்க குண்டுவீச்சு மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் குறைந்தபட்சம் 415 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிடுகிறது. இந்த எண்ணிக்கை ஐயத்திற்கிடமின்றி கொல்லப்பட்ட பலரை கணக்கில் கொண்டிருக்கவில்லை என்பதோடு, ரக்கா மீதான அதன் முற்றுகையை அமெரிக்கா தீவிரப்படுத்தும் போது இந்த எண்ணிக்கை இன்னும் வேகமாக அதிகரிக்கக்கூடும்.

சிஐஏ இன் திட்டத்தை கைவிடுவதானது, ரஷ்யாவுடன் வாஷிங்டன் உறவுகளை மேம்படுத்த விரும்புகிறது என்று ரஷ்யாவிற்கு வழங்கும் ஒரு "சமிக்ஞை" என்று ஓர் அமெரிக்க அதிகாரி கூறியதை ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் மேற்கோளிட்டிருந்தாலும், ஈரானுக்கு எதிராக சிறந்த போர் தயாரிப்பு செய்வதற்காக, மாஸ்கோ மற்றும் ஈரானுக்கு இடையே ஒரு பிளவை உருவாக்குவதே இதன் நிஜமான நோக்கமாகும். இதுதான், சீராக ஈரானிய செல்வாக்கு அதிகரித்து வரும் ஈராக்கிலும் மற்றும் சிரியாவிலும் அமெரிக்க இராணுவ ஆயத்தப்படுத்தலின் மத்திய நோக்கமாக உள்ளது.

ட்ரம்ப் நிர்வாகத்தில் கொள்கை வகுத்து வருபவர்கள், அதாவது பெரிதும் பாதுகாப்புத்துறையில் அனைத்து முக்கிய பதவிகளிலும் அமர்ந்துள்ள தளபதிகள் மற்றும் ஓய்வூபெற்ற தளபதிகளின் கூட்டம், மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா மீதான அதன் மேலாதிக்கத்தை ஸ்தாபிப்பதற்கான இரத்தந்தோய்ந்த மற்றும் நீடித்த அமெரிக்க நடவடிக்கைக்கு ஈரானை ஒரு பிரதான தடையாக பார்க்கின்றது. அமெரிக்க இராணுவ உயரதிகாரிகளின் இந்த கூட்டம், ஈராக்கில் வாஷிங்டனின் ஆக்கிரமிப்பு போர், அப்பிராந்தியத்தில் பெரிதும் ஈரானிய செல்வாக்கை பலப்படுத்த உதவியது என்ற உண்மையால் குறிப்பாக கடுப்பாகி உள்ளது.

“கிளர்ச்சியாளர்களுக்கு" உதவியை நிறுத்துவது குறித்து வாஷிங்டன் போஸ்டில் செய்தி வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான், அமெரிக்கா மற்றும் ஏனைய ஐந்து ஆட்சிகளுடன் பேரம்பேசப்பட்ட அணுசக்தி உடன்படிக்கையை ஈரான் முறையாக பின்பற்றி வருவதாக உத்தியோகபூர்வ சான்றிதழை ட்ரம்ப் நிர்வாகம் வழங்கியது. இந்த நகர்வு வெள்ளைமாளிகையில் ஒருசில மணிநேர உட்பூசல்களுக்குப் பின்னர் வந்தது, தெஹ்ரானுக்கு எதிராக ஒருதலைபட்சமான அமெரிக்காவின் புதிய தடையாணைகளை திணிக்கும் ஒரு முடிவின் அடிப்படையில் மட்டுமே சான்றிதழ் வழங்க ட்ரம்ப் அரைகுறை மனதோடு ஒப்புக் கொண்டார், இதுவே கூட அந்த உடன்படிக்கையை மீறுகிறது என்பதோடு, ஒரு மோதலை தூண்டுவதற்கு வடிவமைக்கப்பட்டிருந்தது.

தெஹ்ரானை நோக்கி தண்டிக்கும் வகையிலான ஒரு கொள்கையை ஏற்பதன் மூலம் அமெரிக்க போக்கை அடியொற்றி நடக்க ஐரோப்பிய சக்திகளுக்கு அழுத்தமளிக்கும் ஒரு பிரச்சாரத்தையும் வாஷிங்டன் மேற்கொண்டு வருவதாக செய்திகள் குறிப்பிட்டன. ஆனால் அந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள ஏனைய நாடுகள் —பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, சீனா மற்றும் ரஷ்யா—அனைத்தும் ஈரானில் பெரும் வர்த்தக மற்றும் முதலீட்டு உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்ள எதிர்நோக்கி வருவதுடன், பிரெஞ்சு எரிசக்தி கூட்டுக்குழுமம் Total எரிவாயு உற்பத்தி செய்வதற்காக 1 பில்லியன் டாலர் உடன்படிக்கையை முன்நகர்த்தி வருகிறது.

ஐரோப்பா உடனான இதுபோன்ற பதட்டங்கள், ஒரு பரந்த போரை நோக்கிய வாஷிங்டனின் உந்துதலை மட்டுமே எரியூட்டும். அதன் உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் மேலாதிக்க வீழ்ச்சியை முகங்கொடுத்துள்ளதும், ட்ரம்பின் ஆளுருவில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளதுமான, ஒட்டுண்ணித்தனமான மற்றும் குற்றகரமான அமெரிக்க ஆளும் வர்க்கம், அதனால் எந்த முற்போக்கு தீர்வும் வழங்க முடியாத பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளில் இருந்து வெளி வருவதற்கு போர் ஒன்றை மட்டுமே ஒரே வழியாக காண்கிறது.

77 மில்லியனுக்கும் அதிகமான சனத்தொகை கொண்ட ஒரு நாடான ஈரான் மீதான ஒரு அமெரிக்க போர், ஓர் அணுஆயுத மூன்றாம் உலக போருக்கான நிஜமான அச்சுறுத்தலை முன்னிறுத்துகின்ற அதேவேளையில், ஈராக் மற்றும் சிரியாவில் சிஐஏ மற்றும் பென்டகன் ஏற்படுத்திய இரத்த ஆற்றைக் கடந்து செல்லக்கூடியதாகும்.