ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Number of European working poor doubles in a decade

ஒரு தசாப்தத்தில் ஐரோப்பிய உழைக்கும் ஏழைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது

By Elisabeth Zimmermann
12 July 2017

ஐரோப்பாவில் வேலை செய்யும் பெரும்பாலான மக்கள் வறுமையில் தள்ளப்படுகின்றனர். கடந்த வாரம் வியாழனன்று ஹான்ஸ் போக்லேர் அறக்கட்டளையின் (Hans Böckler Foundation)  ஒரு புதிய ஆய்வு வெளியீட்டின் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. “செயல்பாட்டுக் கொள்கைகளும், வறுமையும்” என்ற தலைப்பிலான இந்த ஆய்வு, ஐரோப்பிய மக்கள் வேலை செய்கின்ற போதும் தொகையில் ஒரு அதிகரித்துவரும் விகிதத்தில், வறுமையில் வாழ்வதாகக் குறிப்பிடுகின்றது.

போக்லேர் அறக்கட்டளையின் பொருளாதார மற்றும் சமூக அறிவியல் நிறுவனத்திலிருந்து (Economic and Social Sciences Institute –WSI) ஆராய்ச்சியாளர்கள், 2004 முதல் 2014 வரை 18 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தொழிலாளர் சந்தை மற்றும் சமூக கொள்கை நடவடிக்கைகளின் விளைவுகளை ஆய்வு செய்தனர். இந்த அனைத்து நடவடிக்கைகளும் வேலையல்லாதிருப்போரை குறைந்த ஊதிய உழைப்பிற்குள் தள்ளுவதையே நோக்கமாக கொண்டிருந்தன.

அவர்களின் ஆராய்ச்சியின்படி, இந்த நாடுகளில் 18 முதல் 64 வயதிற்குட்பட்ட தொழிலாளர் சக்தியில் சராசரியாக 10 சதவிகிதத்தினர் பற்றி ஆய்வு செய்யப்பட்டதில், அவர்கள் “உழைக்கும் ஏழைகளாக” இருந்தனர். அதாவது, அவர்களது நாட்டில் சராசரி வருமானத்தில் 60 சதவிகிதத்திற்கும் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள் என்பதாகும். உழைக்கும் ஏழைகளின் விகிதம் ஸ்பெயினில் 13.2 சதவிகிதமாகவும், கிரீஸில் 13.4 சதவிகிதமாகவும் இருப்பதை அடுத்து, ருமேனியாவில் அதிகளவாக 18.6 சதவிகிதமாக உள்ளது.

ஜேர்மனியில், 2004 இல் இருந்த உழைக்கும் ஏழைகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1.9 மில்லியன் அல்லது 4.8 சதவிகிதத்திலிருந்து, 2014 இல் கிட்டத்தட்ட 4.1 மில்லியன் அல்லது 9.6 சதவிகிதமாக இரட்டிப்பானது. இந்த கால கட்டத்தில், ஜேர்மனியில் வேலை செய்தவர்களின் மொத்த எண்ணிக்கை 39.3 மில்லியனில் இருந்து 42.6 மில்லியனாக அதிகரித்ததனால், இந்த அதிகரிப்பு உண்மையான புள்ளிவிபரங்களிலும் மிக அதிகரித்துள்ளது. ஜேர்மனியில் 2014 இல், மாதத்திற்கு 986 யூரோவுக்கும் (€986) குறைவாக நிகர வருமானம் பெற்ற ஒரு தனி நபர் ஏழையாக கருதப்பட்டார். இரண்டு பெரியவர்கள் மற்றும் 14 வயதிற்குட்பட்ட இரண்டு குழந்தைகளையும் கொண்டிருந்த ஒரு வீட்டின் தொடக்கநிலை வருமானம் 2072 யூரோவாக (€2072) இருந்தது.

யூரோ பகுதியில் நெருக்கடிக்கு முன்னதாகவே, பெரும்பாலான நாடுகளில் வேலை செய்பவர்களுக்கு ஏற்கனவே வறுமை அதிகரிக்கத் தொடங்கியதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இருப்பினும் நெருக்கடியை அடுத்து, பல நாடுகளில் நிலைமை மிகமோசமடைந்தது. “அதிக வேலையின்மைக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தொழிலாளர் சந்தைகளின் இன்னும் கூடுதலான ஒழுங்கின்மையையும், சமூக நலன்களில் குறைப்பையும் கண்டன.”

ஐரோப்பாவில் சமூக எதிர்ப்புரட்சி சிரிசா அரசாங்கத்தின் கீழ் கிரீஸில் அதன் கூர்மையான வெளிப்பாட்டை காண்கிறது. வேலையற்றோருக்கான உதவித்தொகை மற்றும் ஓய்வூதியங்களுக்கான கொடூரமான வெட்டுக்களுடன் இணைந்து, வழமையான ஊதிய வேலைகளும் அழிக்கப்படுவதே அதிக அளவிலான வேலையின்மைக்கு காரணமாகின்றது. ஏற்கனவே இருக்கும் சமூக சரிவு நிலை காரணமாக இருப்பினும், கிரீஸில் உழைக்கும் ஏழைகளின் எண்ணிக்கையில் புள்ளிவிபர அதிகரிப்பு ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.

உதாரணமாக ஜேர்மனியில் வேலை செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததானது “குறிப்பாக குறிப்பிடத்தக்கது” என்று போக்லெர் அறிக்கை முடிவுசெய்கிறது. “ஐயத்திற்கிடமின்றி, வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கும், வறுமைக்கும் இடையிலான தொடர்பு பொதுவாக கருதப்பட்டதைவிட மிகவும் சிக்கலானதாக உள்ளது.” இது கடந்த இரண்டு தசாப்தங்களில் நடந்துள்ள சமூக எதிர்ப்புரட்சி பற்றிய வேண்டுமென்றே  தெளிவற்ற குறைத்து மதிப்படுதலாகும்.

மில்லியன் கணக்கான மக்களுக்கு நிச்சயமற்ற, தற்காலிகமான, குறைந்த ஊதியத்துடனான, பகுதிநேர வேலைவாய்ப்பு அதிகரிப்பானது ஆளும் உயர் அடுக்கினரால் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு சர்வதேச நிகழ்வு ஆகும்.

“பெரும்பாலும் சேவை மற்றும் குறைந்த ஊதிய துறைகளில் இயல்பற்ற வேலைவாய்ப்பு, குறிப்பாக பகுதிநேர வேலைவாய்ப்பு அதிகரிப்பு காரணமாக, ஜேர்மனிய தொழிலாளர் சந்தையில் சாதகமான அபிவிருத்தி அதிக அளவில் இருப்பதாக இந்த ஆய்வு குறிப்பிடுகிறது. தொழிலாளர் சந்தையின் விதிகளை விரிவாக தளர்த்துதல், சலுகைகள் குறைப்பு மற்றும் எந்த மாதிரியான வேலையையாவது ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற தொழிலாளர்கள் மீதான அழுத்த அதிகரிப்பு ஆகியவற்றினால் குறைந்த ஊதியத்துறை வளர்ச்சி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பற்றோர் மீதான இந்த அதிகரிக்கும் அழுத்தம் அவர்களை விரைவில் ஒரு வேலையை தேடிக்கொள்ளும் நிலைக்கு தள்ளுகிறது.

அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிற்சங்கங்கள் இந்த நிகழ்வில் ஒரு முக்கிய பங்கு வகித்தன. 2008/2009 நெருக்கடியில் முதலாளித்துவத்தின் பக்கம் அவர்கள் விரைந்தனர், மேலும் பல தசாப்தங்களாக தொழிலாளர் போராடி வெற்றிபெற்றிருந்த நலன்களை திவாலான வங்கிகள் மற்றும் அவற்றின் சொந்த அரசாங்கங்களுக்கும் புதிய இருப்புக்களாக மாற்றுவதற்கு உதவினர். போக்லேர் அறக்கட்டளை ஜேர்மன் தொழிற்சங்க இயக்கத்தின் (German trade union movement-DGB) உத்தியோகபூர்வ சிந்தனைக் களஞ்சியமாகும், மேலும், இது அவர்களின் அறிக்கையில் WSI ஆய்வாளர்களின் இராஜதந்திர விவகாரத்தை விளக்குகிறது, இருப்பினும் தொழிலாளர்கள் மத்தியிலான வறுமை பற்றிய அவர்களின் புள்ளிவிவரங்கள் அமைப்புமுறை மீதான ஒரு குற்றம்சாட்டாகவே உள்ளது.

ஜேர்மனியில் குறைந்த ஊதியத் துறையின் வெடிப்பு வளர்ச்சி, ஹார்ட்ஸ் IV சமூக விரோத சட்டங்கள் மற்றும் ஹெகார்ட் ஷ்ரோடர் மற்றும் ஜோஷ்கா பிஷ்ஷர் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி-பசுமை கூட்டணி (SPD-Green Coalition) அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட 2010 செயற்பட்டியல் ஆகியவற்றின் மூலம் 2005 இல் தொடங்கப்பட்டது. 2004 இல், ஹார்ட்ஸ் IV சட்டங்களுக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவிக்கும் முயற்சிகளை தொழிற்சங்கங்கள் தீவிரமாக எதிர்த்தன. தொழிற்சங்கங்களின் முன்னுரிமை இந்த புதிய நடவடிக்கைகளைச் செயல்படுத்துவது  குறித்து இருந்தது.

ஜேர்மனியில் முன்னாள் தொழிற்துறை மையத்தில் (ரூஹ்ர் பகுதி) அமைந்துள்ள டுயிஸ்பேர்க் நகரத்தில் உள்ள வேலை மையங்களினால் அதிகரித்தளவில் கடுமையான மற்றும் தொலைநோக்குடைய தடைகளின் உறுதியான விளைவுகள் பயன்படுத்தப்பட்டது தெளிவாக உள்ளது. கிட்டத்தட்ட ஒரு அரை மில்லியன் குடியிருப்பவர்களுடனான மக்கள்தொகையில் டுயிஸ்பேர்க் நகரத்தில் 77,000 பேர் மிகச்சிறியளவில் ஹார்ட்ஸ் IV நலன்களை சார்ந்திருக்கிறார்கள். சமூக பாதுகாப்புடன் கூடிய பணியில் அமர்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2006 இல் இருந்து 2016 க்கு மத்தியில் சுமார் 15,000 இல் இருந்து 166,000 க்கு சற்று கீழாக உயர்ந்தது. ஆயினும், இதே கால கட்டத்தில் முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கை 700 க்கும் குறைந்தது, அதே நேரத்தில் பகுதிநேர ஊழியர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 14,000 அதிகரித்து 38,000 க்கும் கூடுதலானது.

தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை (அவர்களில் பெரும்பாலோர் முழுநேர வேலை செய்கிறார்கள்) கடந்த 10 ஆண்டுகளில் 9,986 ஆக மும்மடங்கு உயர்ந்துள்ளது. டுயிஸ்பேர்க் நகரத்தில் சுமார் 37,000 தொழிலாளர்கள் சிறு வேலைகளை செய்கின்றனர், இதில் 10,000 தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான பணத்தை சம்பாதித்து பிழைப்பதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை செய்கின்றனர். அதாவது, டுயிஸ்பேர்க் நகரத்தில் ஒட்டுமொத்த தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தற்காலிக அடிப்படையில் அல்லது/மற்றும் ஒரு சிறிய வேலையில் பகுதிநேர பணியாளர்களாக உள்ளனர் என்பதாகும்.   

ஜூலை ஆரம்பத்தில் Berliner Zeitung பத்திரிகையால் அறிவிக்கப்பட்ட, DGB மூலம் வடிவமைக்கப்பட்ட ஒரு ஆய்வு, இந்த போக்கு நாடு முழுவதும் நடந்து வருவதாக குறிப்பிடுகின்றது. 2.53 மில்லியன் மக்கள் தற்காலிக பணியாளர்களாக உள்ளபோதும், 1 மில்லியனுக்கு அதிகமானவர்கள் முகவர் மூலம் பணியமர்த்தப்பட்டுள்ளதுடன், 8.5 மில்லியன் மக்கள் பகுதிநேர பணியாளர்களாக உள்ளனர். ஏறக்குறைய 2 மில்லியன் மக்கள் சுய-தொழில் செய்பவர்களாகப் பதிவு செய்துள்ளனர்.

1995 மற்றும் 2015 க்கு மத்தியில் குறைந்த மணிநேர ஊதியங்களுடன் உழைப்புசக்தியில் ஐந்தில் ஒரு பகுதியினர் 7 சதவிகித ஒரு உண்மையான ஊதிய இழப்பை அனுபவித்தனர். அடுத்த ஐந்தில் ஒரு பகுதியினர் 5 சதவிகித ஊதியத்தை இழந்தனர். இது தொழிற்சங்கங்களின் கொள்கையின் ஒரு நேரடி விளைவாகும்.

WSI ஆய்வாளர்கள் பரந்த வறுமைக்கான காரணங்களை மறைக்க முற்படுகையில், வேலை வளர்ச்சிக்கும், வறுமைக்கும் இடையிலான “சிக்கலான தொடர்புகளை” குறிப்பிடுவதால், யார் இலாபம் ஈட்டவேண்டும் என்பது தெளிவாகிறது.

Swiss Bank Credit Suisse (நவம்பர் 2016 ல்) மூலம் வடிவமைக்கப்பட்ட பூகோளமய செல்வந்த அறிக்கை (Global Wealth Report), செல்வந்தர்கள் மற்றும் மாபெரும் செல்வந்தர்களின் செல்வத்தில் காணப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது. ஜேர்மனியில் டாலர் மில்லியனேர்களின் எண்ணிக்கை 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளின் மத்தியில் 44,000 அதிகரித்து கிட்டத்தட்ட 1.6 மில்லியனுக்கு உயர்ந்தது என்று அறிக்கை குறிப்பிடுகிறது. குறைந்தபட்சம் 50 மில்லியன் டாலர் செல்வமதிப்பு கொண்ட மாபெரும் செல்வந்தர்களின் குழு 500 அதிகரித்து மொத்தம் 6,100 ஆக உயர்ந்தது. இது ஜேர்மனியை அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் அடுத்ததாக மூன்றாவது இடத்தில் வைத்துள்ளது. ஃபோர்ப்ஸ் படி, 114 பில்லியனர்கள் ஜேர்மனியில் வாழ்கின்றனர். இந்த மாபெரும் செல்வந்தர்களில் 36 பேர், மொத்த மக்கள் தொகையில் வறுமையில் உள்ள பாதியளவு மக்களிடம் இருப்பதைவிட அதிகளவு (€276 billion) செல்வத்தை கொண்டுள்ளனர்.

இந்த வளர்ந்து வரும் சமூக சமத்துவமின்மையை, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் எதிராகவும்  மற்றும் முக்கிய வங்கிகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும் எதிரான ஒரு கொள்கை மூலம் மட்டுமே தடுத்து நிறுத்தமுடியும்.    

இந்த இலையுதிர்கால கூட்டாட்சித் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில், சோசலிச சமத்துவக் கட்சி பின்வருமாறு அறிவிக்கின்றது:

“பெருவணிகங்களது இலாப நலன்களைக் காட்டிலும் அநேக மக்களது தேவைகளே மேலமைகின்றதான ஒரு சமூகத்திற்காக SGP போராடுகிறது. பெரும்-செல்வந்தர்களும், வங்கிகளும், மற்றும் பெருநிறுவனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு அவை மக்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். அவ்வழியில் மட்டுமே சமூக உரிமைகள் பாதுகாக்கப்பட முடியும். கண்ணியமான ஊதியமளிக்கும் வேலை, முதல்-தர கல்வி, கட்டுப்படியாகும் வீட்டுவசதி, பாதுகாப்பான ஓய்வூதியம், வயதானவர்களுக்கு உயர்தரமான வசதிகள் மற்றும் கலாச்சார வசதிகள் கிடைப்பது ஆகியவற்றுக்கான உரிமைகளும் இதில் உள்ளடங்கும்.”