ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The White House and the fascist rampage in Charlottesville

வெள்ளை மாளிகையும், சார்லட்வில்லில் பாசிசவாத அட்டூழியமும்

Eric London
14 August 2017

பொலிஸ் உடனான பல மாதகால ஆழ்ந்த திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்புக்குப் பின்னர், வேர்ஜினியாவின் சார்லட்வில்லில் நாஜி "வலதை ஐக்கியப்படுத்துவோம்" (Unite the Right) அட்டூழியம், சனிக்கிழமை மதியம் அதன் மரணகதியிலான உச்சத்தை எட்டியது, அப்போது ஓஹியோவைச் சேர்ந்த 20 வயதுடைய ஹிட்லர் ஆர்வலர் ஒருவர் எதிர்-ஆர்ப்பாட்டக்காரர்களது ஒரு கூட்டத்திற்குள் அவர் காரை செலுத்தியதில், சாண்டர்ஸின் பேர்ணி ஆதரவாளரான 32 வயதுடைய ஹீத்தர் ஹெயர் கொல்லப்பட்டு, 14 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

இந்த அதிவலதின் வன்முறையை ட்ரம்ப் வார்த்தையளவில் கூட கண்டிக்கத் தவறியதன் மீது பெருநிறுவன ஊடகங்கள் ஒருங்குவிந்துள்ளன. ஆனால் ட்ரம்ப் கருத்துக்கள் குறித்து அமெரிக்க ஊடகங்கள் கையைப் பிசைந்து கொண்டிருப்பது சிறுபிள்ளைத்தனமானது மட்டுமல்ல. அவை, சார்லட்வில்லில் நாஜி அணிதிரட்டலை ஊக்குவிப்பதிலும், தூண்டிவிடுவதிலும் மற்றும் திட்டமிடுவதிலும் கூட வெள்ளை மாளிகை எந்தளவிற்கு சம்பந்தப்பட்டிருந்தது என்பதை வேண்டுமென்றே மூடிமறைக்கின்றன. வெள்ளை மாளிகை, பாசிசவாத செயல்பாட்டாளர்களுடன் சேர்ந்து நகர்ந்து கொண்டிருக்கிறது. அவரும் மற்றும் அவர் நண்பர் ஸ்டீவ் பானனும், யாரை தங்களின் ஒரு முக்கிய அரசியல் செல்வாக்கு வட்டாரமாக பார்க்கிறார்களோ அவர்களது நடவடிக்கைகளை ட்ரம்ப் ஏன் கண்டிப்பார்?

இந்த நாஜி வன்செயல், அமெரிக்க அரசியலில் ஒரு சித்தப்பிறழ்ச்சி சம்பவமல்ல. இது, இரு கட்சி அமைப்புகளுக்கு வெளியே அரசியலமைப்பை-மீறி பாசிசவாத இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான டொனால்டு ட்ரம்ப் மூலோபாயத்தின் விளைவாகும், மலைப்பூட்டும் சமூக சமத்துவமின்மை மட்டங்களின் சுமையின் கீழ், அக்கட்சிகளுமே கூட அமெரிக்க ஜனநாயகத்தின் துர்நாற்றம் மற்றும் பொறிவின் வெளிப்பாடாக உள்ளன.

கடந்த மூன்று வாரங்களாக, ட்ரம்ப் மற்றும் அவர் ஆலோசகர்களும்—ஸ்டீபன் பானன், ஸ்டீபன் மில்லர் மற்றும் செபஸ்தியன் கோர்க்காவும்—அவரது அரசியல் அடித்தளத்தின் மையமான பாசிசவாத கூறுபாடுகளிடையே ஆதரவை அதிகரிக்கும் அந்நிர்வாகத்தின் முயற்சிகளைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

ட்ரம்ப் அவரது கட்சியின் மிகவும் சக்தி வாய்ந்த சட்டமன்ற பிரமுகர்களில் ஒருவரான குடியரசு கட்சியின் செனட் பெரும்பான்மை தலைவர் மிட்ச் மெக்கொன்னல் க்கு சவால்விடுத்து, அவரை தாக்கினார். அமெரிக்கா வட கொரியாவுக்கு எதிராக போரை "தேர்ந்தெடுத்து, தீர்மானித்துள்ளது" என்று போர்வெறி அச்சுறுத்தல்களை விடுத்த அவர், அவரது புலம்பெயர்வோர்-விரோத கொள்கைகளை மற்றும் "குற்றங்கள் மீதான கடுமைத்தன்மையை" ஆதரிக்குமாறு, அவரது பில்லியனிய அதிகார வட்டாரங்களிடமும் அத்துடன் பொலிஸ், புலம்பெயர்வு மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இராணுவத்திடமும் முறையிட்டார்.

இந்த நிகழ்முறையில், 22,000 மாணவர்களைக் கொண்ட வேர்ஜினிய பல்கலைக்கழகத்தின் மீது கட்டுப்பாட்டை எடுத்த சக்திகளுக்கு வெள்ளியன்று அவர் துணிவளித்துள்ளார். சுதந்திர பிரகடனத்தை எழுதிய தோமஸ் ஜெஃபர்சனால் வடிவமைக்கப்பட்டு ஸ்தாபிக்கப்பட்ட அந்த பல்கலைக்கழக வளாகத்தில் நாஜிக்கள் ஒரு தீபச்சுடர் அணிவகுப்பை நடத்தியதோடு, “இரத்தமும் மண்ணும்,” [நாஜிக்களின் வீரவணக்கம்] “சீக் ஹீல்,” "ஒரே மக்கள், ஒரே தேசம், புலம்பெயர்வை நிறுத்து,” என்று கோஷமிட்டனர்.

சனியன்று அதிகாலை, தாக்கும் கைத்துப்பாக்கிகள் மற்றும் குழல்துப்பாக்கிகளும் ஏந்திய சீருடை அணிந்த டஜன் கணக்கான போராளிகள் குழுவின் ஆட்கள் நகரெங்கிலும் நிலைநிறுத்தப்பட்டு, 50,000 பேர் கொண்ட அந்நகரின் மையத்தில் இராணுவ கட்டுப்பாடு நிறுவப்பட்டது. பொலிஸின் இடையூர் இன்றி போராளிகள் குழுக்களின் ஆட்கள் அப்பகுதியைக் கட்டுப்பாட்டில் எடுத்த பின்னர், துப்பாக்கிகள், கத்தி, சங்கிலி, இரும்பு குழாய் தடிகள், பேஸ்பால் மட்டை மற்றும் மிளகுத்தூள் தெளிப்பான்களுடன் ஆயுதமேந்திய நூற்றுக் கணக்கான நாஜிக்களை அந்நாடெங்கிலும் இருந்து ஏற்றி வந்த வேன்களில் இருந்து நகர மையத்திற்குள் வெள்ளமென இறக்கி விடப்பட்டனர்.

அடுத்து என்ன நடந்ததோ அதையொரு பாசிச கலகம் என்று மட்டுமே விவரிக்க முடியும். சம்பவ இடத்திலிருந்து பொலிஸ் திரும்ப பெறப்பட்டனர், “ட்ரம்புக்கு வீரவணக்கம்" என்று கூச்சலிட்டவாறு, நாஜிக்கள், இனவாத மற்றும் ஒருபால் விருப்பமுள்ளவர்களை அவமதிக்கும் கோஷங்களுடன், வீதிகளில் இருந்த எதிர்-ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்க தொடங்கினர். தனியாக விடப்பட்ட எதிர்-ஆர்ப்பாட்டக்காரர்கள் நாஜி கைகலப்பிற்குள் இழுக்கப்பட்டு ஈவிரக்கமின்றி தாக்கப்பட்ட போது, பொலிஸ் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தது.

ஓர் எதிர்-ஆர்ப்பாட்டக்காரராக சார்லட்வில்லுக்கு பயணித்திருந்த ஒரு மதபோதகர், பிரையன் மெக்லரென் (Brian McLaren), பத்திரிகைகளுக்கு கூறுகையில், நாஜிக்கள் தாக்குதலை தொடங்கியதும் “பொலிஸ் குறிப்பிட்ட தொலைவில் நின்றுவிட்டது" என்றார். பின்னர், நண்பகலுக்கு முன்னதாக, ஓஹியோவின் Maumee ஐ சேர்ந்த ஜேம்ஸ் ஃபீல்டு ஜூனியர் என்பவர் அவர் காரை அக்கூட்டத்திற்குள் செலுத்தியதில், பவுலிங் விளையாட்டு கில்லிகள் போல உடல்கள் மேலே தூக்கிவீசப்பட்டன.

வேர்ஜினியாவின் ஜனநாயக கட்சி ஆளுநர் Terry McAuliffe ஞாயிறன்று கூறுகையில், இந்த வாரயிறுதியில் பொலிஸ் "சிறந்த வேலையை" செய்திருப்பதாக தெரிவித்து, விமர்சனங்களுக்கு விடையிறுத்தார். ஜனநாயக கட்சி தேசிய குழுவின் முன்னாள் தலைவரும் பில் மற்றும் ஹிலாரி கிளிண்டனுக்கு நிதி திரட்டியவர்களில் முக்கியமானவருமான McAuliffe கூறுகையில், எதிர்-போராட்டக்காரர் Heather Heyer படுகொலை தடுக்க முடியாதது என்றார். “ஓஹியோவில் இருந்து இங்கே வந்து, தனது காரை ஓர் ஆயுதமாக பயன்படுத்திய ஒருவித பைத்தியக்காரரை தடுக்க முடியாது,” என்றவர் அறிவித்தார்.

ட்ரம்ப் முறையீடு செய்யக்கூடிய ஒரு மாற்று அடித்தளம் அவருக்கு இருப்பதைக் குறித்து, குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சியில் உள்ள ட்ரம்பின் எதிர்ப்பாளர்களுக்கு ஒரு சேதி அனுப்புவதே இந்த வாரயிறுதி வன்முறையில் நோக்கமாக இருந்தது. அதற்கேற்ப, வெறும் இரண்டு மணி நேர தொலைவில் நாஜிக்கள் வாஷிங்டன் டிசி இல் அவர்களது பேரணியை நடத்தினர்.

அந்நாட்டின் மிகவும் பிற்போக்கான மற்றும் பின்தங்கிய சமூக சக்திகளை அணிதிரட்டுவதற்கான ட்ரம்ப் வெள்ளை மாளிகையின் திட்டமிட்ட மற்றும் கணக்கிட்ட நடவடிக்கைகளை, இந்த வாரயிறுதி வன்முறைக்கு மூன்று வாரத்திற்கு முந்தைய காலப்பகுதி தெளிவுபடுத்துகிறது.

ஜூலை 22 அன்று, 13 பில்லியன் டாலர் மதிப்பிலான விமானந்தாங்கி போர்க்கப்பலைப் படையில் சேர்க்கும் தினத்தன்று மாலுமிகள் மத்தியில் ட்ரம்ப போர்வெறியூட்டும் உரை ஒன்றை வழங்கினார்.

ஜூலை 25 அன்று, அவர் கிறிஸ்துவ மத தீவிரவாதத்தைப் பெருமைப்படுத்தி ஓஹியோவின் யங்ஸ்டவுனில் ஓர் உரை வழங்கினார்.

தனியார் பெருநிறுவனங்கள் அவற்றின் பணியாளர்களது பாலியல் நோக்குநிலை அடிப்படையில் அவர்களை வேலைநீக்கம் செய்ய தடுக்கப்படக்கூடாது என்று குறிப்பிட்டு, ஜூலை 26 அன்று, நீதித்துறை ஒரு "பொதுநல வழக்கு" தொடுத்தது. ட்ரம்ப், அதேநாளில், இராணுவ சேவைகளில் இருந்து மூன்றாம் பாலினத்தவர்களுக்கு (transgender) அவர் நிர்வாகம் தடைவிதிக்குமென ட்வீட் செய்ததுடன், ஓரினசேர்க்கையாளர்களுக்கு எதிரானவரான கன்சாஸ் ஆளுநர் Sam Brownback ஐ தன்னிச்சையாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான வெளியுறவுத்துறை தூதராக நியமித்தார்.

ஜூலை 28 அன்று, ட்ரம்ப் நியூ யோர்க்கின் லாங் ஐலாண்டில், பொலிஸ் மற்றும் புலம்பெயர்வுத்துறை முகவர்களுக்குக் கூறுகையில், குற்றத்திற்காக சந்தேகிக்கப்படுபவர்களை "சரக்கு வண்டியின் பின்னால் வீசப்படுவதை" அவர் பார்க்க விரும்புவதாக தெரிவித்தார். “தயவுசெய்து மிகவும் மென்மையாக இருக்காதீர்கள்,” என்று கூறி, கைது செய்யப்படுபவர்களிடம் கடுமையாக இருக்குமாறு அவர்களிடம் அவர் வலியுறுத்தினார்.

ஆகஸ்ட் 2 அன்று, ட்ரம்பும் குடியரசு கட்சி செனட்டர்களான டோம் காட்டன் மற்றும் டேவிட் பெர்டியூவும், பலமான வேலைவாய்ப்பு சட்டத்திற்கான அமெரிக்க புலம்பெயர்வைச் சீர்திருத்தம் [RAISE] என்பதை அறிவித்தனர், இது சட்டப்பூர்வ புலம்பெயர்வை பாதியாக குறைக்கும். ட்ரம்பின் ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் இத்திட்டத்தை அறிவித்த பத்திரிகையாளர் கூட்டத்தில், CNN இன் Jim Acosta ஐ ஒரு "பல்நோக்கு தரப்பு" (cosmopolitan bias) கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டிய போது, ஜேர்மன் நாஜி கட்சியின் யூத-எதிர்ப்புவாத மொழியை எதிரொலித்தார். "வெள்ளை இனத்தவர்களுக்கு எதிரான பாரபட்சதன்மைக்காக" கல்லூரிகள் மீது வழக்கு தொடுக்க, நீதித்துறை திட்டமிட்டு வருவதாக அதே நாளில் ஊடகங்கள் அறிவித்தன.

ஆகஸ்ட் 6 அன்று, பிரதான ஊடகங்களின் கட்டமைப்புக்கு வெளியே தனிநபர்களைப் பின்தொடர செய்வதற்கான ஒரு முயற்சியாக அவர் பேஸ்புக் பக்கத்தில் "நிஜமான செய்தி" (Real News) திட்டம் ஒன்றை தொடங்கினார்.

ஆகஸ்ட் 8 அன்று, ஹங்கேரிய பாசிசவாத அமைப்பான Order of the Vitez இன் ஒரு அங்கத்தவரும், வெள்ளை மாளிகை உதவியாளருமான செபஸ்தியன் கோர்க்கா கூறுகையில், மின்னிசொடாவின் மினெயாபொலிஸ் க்கு அருகிலுள்ள ஒரு மசூதி மீதான பாசிசவாத குண்டுவீச்சு, “இடதால் பிரச்சாரம் செய்யப்பட்ட" ஒரு "போலி வெறுப்பு குற்றமாக" இருக்கலாம் என்றார். அதற்கடுத்த நாள், கோர்க்கா ப்ரைய்ட்பார்ட் நியூஸ் பத்திரிகைக்கு கூறுகையில், “வெள்ளையின பேரினவாதிகள்" “பிரச்சினையில்லை,” அந்த பயங்கரவாதம் இஸ்லாமின் விளைவு என்றார்.

அதற்கடுத்த அடுத்த நாட்களில், வட கொரியா மற்றும் வெனிசூலாவுக்கு எதிரான அவர் அச்சுறுத்தல்களைத் தொடங்கிய ட்ரம்ப், குடியரசு கட்சியின் உயர்மட்ட செனட் உறுப்பினர் மிட்ச் மெக்கொன்னல் மீது புதிய தாக்குதல்களைத் தொடுத்தார்.

இந்த வாரயிறுதி நாஜி வன்முறையானது, பானன், மில்லர் மற்றும் கோர்க்காவின் அரசியல் முத்திரையைப் பெற்றிருந்தது. நாஜி ஆர்ப்பாட்டத்தின் தலைவர் ஜேசன் கெஸ்லர் அந்த சம்பவத்திற்குப் பின்னர் கூறுகையில், இந்த "வலதை ஐக்கியப்படுத்துவோம்" ஆத்திரமூட்டலுக்கு முன்னர் பல மாதங்களாக, அதன் ஒருங்கமைப்பாளர்கள் "சட்டம் ஒழுங்கு துறையுடன் வலையமைப்பில்" இருந்தனர் என்பதை ஒப்புக் கொண்டார்.

இந்த நாஜி அணித்திரட்டலுக்கான தயாரிப்பில் கெஸ்லர் பல குடியரசு கட்சி அதிகாரிகளையும் சந்தித்திருந்தார். ட்ரம்ப் பதவியேற்றதற்கு பின்னர் வெகு விரைவிலேயே, கெஸ்லர், உள்நாட்டு போரின் கூட்டுப்படை தளபதி Robert E. Lee இன் உருவச்சிலையை நீக்குவதற்கான சார்லட்வில்லின் திட்டங்களைக் கண்டிப்பதற்காக, குடியரசு கட்சியின் வேர்ஜினிய ஆளுநருக்கான வேட்பாளர் Corey Stewart உடன் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார்.

மார்ச்சில், சார்லட்வில் பகுதியைப் பிரதிநிதித்துவம் செய்யும் வேர்ஜினிய காங்கிரஸ் சபை உறுப்பினர் டோம் காரெட்டைச் சந்திக்க கெஸ்லர் வாஷிங்டன் டி.சி. க்கு பயணித்தார். "காங்கிரஸ் உறுப்பினர் டோம் காரெட் உடன் இன்று மிகவும் ஆக்கப்பூர்வ சந்திப்பு" நடத்தியதாக கெஸ்லர் பேஸ்புக்கில் பதிவிட்டார் மற்றும் ட்ரம்பின் புலம்பெயர்வோர்-விரோத நடவடிக்கைகளை கெஸ்லரின் நாஜி குழுக்கள் எவ்வாறு ஆதரிக்கலாம் என்பதை குறித்து அவர் காரெட் உடன் விவாதித்ததையும் ஒப்புக் கொண்டார்: “நாங்கள் ஆதரிக்கும் 2 முக்கிய சட்டமசோதாக்களான, RAISE சட்டம் குறித்தும் மற்றும் பயங்கரவாதிகளை ஆயுதமேந்த செய்வதை நிறுத்துவது குறித்தும் பேசினோம்,” என்றார்.

சார்லட்வில் சம்பவங்களும் மற்றும் அரசியலமைப்பு வெளியே ஒரு பாசிசவாத இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கான ட்ரம்பின் உந்துதலும், அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவிலான தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும். வெள்ளை மாளிகையிலும் மற்றும் சார்லட்வில்லின் வீதிகளிலும் உள்ள பாசிசவாதிகளின் வேலைத்திட்டம், வெளிநாடுகளில் இனப்படுகொலை போருக்கும், உள்நாட்டில் பெருந்திரளான புலம்பெயர்ந்தவர்கள், LGBT நபர்கள், யூதர்கள் மற்றும் சோசலிஸ்டுகளைத் தடுப்புகாவலில் வைப்பதற்கும் மற்றும் படுகொலை செய்வதற்கும் உரியதாகும்.

டொனால்ட் ட்ரம்பின் உருவடிவில் அதற்குரிய வெளிப்பாட்டை காட்டியுள்ள, சீரழிந்து வரும் அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவ சமூக ஒழுங்கமைப்பின் பிரத்யேக வளர்ச்சியே பாசிசவாதம். அரசியல் ஸ்தாபகத்திற்கு தார்மீக முறையீடுகள் செய்வது மூலமாக இதை தடுக்க முடியாது, மாறாக அமெரிக்க மற்றும் உலக பொருளாதாரத்தின் சோசலிச மறுஒழுங்கமைப்புக்கான ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்துடன், எல்லாவிதமான இனம், தேசம் மற்றும் பாரம்பரிய போக்குகளிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தி, அணிதிரட்டி, அரசியல்ரீதியில் ஆயுதபாணியாக்குவதன் மூலமாக மட்டுமே அதை தடுக்க முடியும்.