ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Behind the political warfare in the US: Rising fears of financial collapse, social unrest

அமெரிக்க அரசியல் போர்முறைகளுக்குப் பின்னால்: நிதியியல் பொறிவு, சமூக கிளர்ச்சி மீது அதிகரித்துவரும் அச்சங்கள்

Nick Beams
22 August 2017

டொனால்ட் ட்ரம்ப் தேர்வானதுடன் முடுக்கிவிடப்பட்ட அமெரிக்க பங்குச்சந்தையின் உயர்வு ஒரு மிகப்பெரும் வீழ்ச்சியை நோக்கி செல்கிறதென அமெரிக்க மற்றும் உலகளாவிய நிதியியல் வட்டாரங்களில் கவலைகள் அதிகரித்து வருகின்றன. இந்த கவலைகள், அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தில் நடைமுறையளவிலான உள்நாட்டு போரை உந்திக் கொண்டிருப்பதில் அடியிலிருக்கும் சில சக்திகளை வெளிச்சமிட்டு காட்டுகிறது.

டோவ் ஜோன்ஸ் மற்றும் பிற சந்தை குறியீடுகளைச் சாதனையளவிற்கு உயர்த்திய "ட்ரம்ப் வர்த்தகம்" முடிந்துவிட்டது, அதிகரித்தளவில் ஜனாதிபதியே ஒரு பொருளாதார சுமையாக மாறியுள்ளார் என்ற கண்ணோட்டம் வோல் ஸ்ட்ரீட் ஊகவணிகர்கள் மற்றும் பெருநிறுவன செயலதிகாரிகளிடையே அதிகரித்து வருகிறது. சார்லட்வில் நாஜி அட்டூழியம் மீதான மோதலை அடுத்து வணிக மனோபாவம் உச்சநிலைக்கு வந்தது. நவ-நாஜிக்களைப் பாதுகாக்கும் ட்ரம்ப் கருத்துக்கள் சர்வதேச அளவில் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு குழிபறிப்பதாக மற்றும் உள்நாட்டில் சமூக, அரசியல் ஸ்திரமின்மையை கட்டவிழ்த்து விட அச்சுறுத்துவதாக பார்க்கப்பட்டன.

ஆனால் ட்ரம்ப் உருவாக்கிய ஸ்திரமின்மை மீதான கவலைகள் ஆழ்ந்த அச்சங்களைப் பிரதிபலிக்கின்றன. அமெரிக்க ஆளும் வர்க்கம், தற்போது வெள்ளை மாளிகையை ஆக்கிரமித்திருப்பவருக்கும் அப்பாற்பட்டு வெகுதூரம் நீண்டுள்ள பிரச்சினைகளை எதிர்கொள்கிறது.

நேற்று பிரசுரிக்கப்பட்ட ஒரு கருத்துரையில், உலகின் மிகப்பெரிய தனியார் முதலீட்டு நிறுவனமான பிரிட்ஜ்வாட்டர் நிறுவனத்தின் தலைவர் Ray Dalio குறிப்பிடுகையில், அரசியல் “இதற்கு முன்னர் நாம் பரந்தளவில் 1937 க்கு ஒத்த விதத்தில் கண்டு வந்ததை விட அனேகமாக இன்னும் பிரமாண்டமான பாத்திரம்" இப்போது வகிக்க உள்ளது என்றார். அரசியல் மோதல்களை அமெரிக்காவினால் கடந்து வர முடிந்தாலும் சரி, அது “முந்தைய செலாவணி கொள்கைகள் மற்றும் நிதிக் கொள்கைகளை" விட அதிக பாதிப்புகளைக் கொண்டிருக்கும் என்றார்.

1937 குறித்த மேற்கோள் குறிப்பிடத்தக்கதாகும். அந்த ஆண்டின் முதல் பாதியில் அமெரிக்க பொருளாதாரத்தில் ஒரு மிகப்பெரும் வீழ்ச்சி இருந்தது—அந்த வீழ்ச்சி பெருமந்த நிலைமைக்கு இடையே 1932 இல் நடந்ததை விடவும் மிக வேகமாக இருந்தது. அதே ஆண்டுதான் வாகனத்துறை மற்றும் எஃகுத் தொழில்துறையில் வர்க்க போராட்டம் வெடித்தது.

அமெரிக்காவில் பொருளாதார மற்றும் சமூக பிளவுகள் இந்த முந்தைய புரட்சிகர மேலெழுச்சி காலகட்டத்தை ஒத்திருப்பதாக Dalio எழுதினார். “அதுபோன்ற காலங்களில் (உள்ளேயும் வெளியேயும்) மோதல்கள் அதிகரிக்கின்றன, ஜனரஞ்சகவாதம் மேலெழுகிறது, ஜனநாயகங்கள் அச்சுறுத்தப்பட்டு, போர்கள் ஏற்படக்கூடும்.” அது எந்தளவுக்கு மோசமடையும் என்பதை அவரால் கூற முடியாது என்றும், அதில் அவருக்கு விருப்பமும் இல்லை என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார். “நல்லிணக்கத்தை விட அனேகமாக மரணம் வரை போராட்டமே இருக்கக்கூடும் என்ற புள்ளிக்கு மோதல்கள் இப்போது தீவிரமடைந்துள்ளன.”

ஏறத்தாழ 170 ஆண்டுகளுக்கு முன்னர், பிரான்சில் வர்க்க போராட்டங்கள் என்ற படைப்பில், மார்க்ஸ் குறிப்பிடுகையில், வர்க்க போராட்டத்தின் வெடிப்பானது நிதி அமைப்புமுறை மீது கடுமையான பாதிப்பைக் கொண்டுள்ளது ஏனெனில் ஆளும் வர்க்கம் எதற்கு தலைமை தாங்குகிறதோ அந்த பொருளாதார அமைப்புமுறையின் நிலைக்கும் தன்மை மீதான நம்பிக்கையையே அது கேள்விக்குட்படுத்துகிறது என்றார்.

Dalio அவர் கருத்துரையில் எழுதினார், ஒருவர் சராசரி புள்ளிவிபரங்களை பார்க்கையில், “அமெரிக்க பொருளாதாரம் அருமையாக இருப்பதாக தீர்மானிக்கக்கூடும், ஆனால் அந்த சராசரிகளில் உள்ளடங்கி உள்ள எண்களை அவர் நோக்கினால், செல்வவளத்திற்கும் வருவாய்க்கும் இடையிலான இடைவெளி 1930 களுக்குப் பின்னர் மிகப்பெரியளவில் இருப்பதையும், அத்துடன் சிலவை அசாதாரணமாக இருப்பதும் ஏனைய சில படுமோசமாக இருப்பதும் தெளிவாக தெரியும்.”

Dalio மற்றும் ஏனையவர்கள் அதிகரித்துவரும் சமூக, அரசியல் பிளவை "ஜனரஞ்சகவாத" வார்த்தைகளில் மிருதுவாக மேற்கோளிடுகின்றனர், ஆனால் பகிரங்கமான வர்க்க மோதலின் எழுச்சியே அவர்களது நிஜமான பயமாக உள்ளது. அவர் எழுதினார், “அமெரிக்கர்களில் பெரும்பான்மையினர்,” “நமது தலைமை குறித்தும் மற்றும் நம் நாடு செல்லும் திசை குறித்தும் பலமாக மற்றும் சமரசத்திற்கு இடமின்றி கருத்து வேறுபட்டிருப்பதாக தெரிகிறது, மேலும் "தங்களின் கருத்து வேறுபாடுகளை கடந்து எவ்வாறு கொள்கை பகிர்வுகளின் அடிப்படையில் ஆக்கபூர்வமாக இணைந்து இயங்குவதென கண்டறிய முயற்சிப்பதை விட, அவர்கள் நம்புவதை நோக்கி போராட அதிக நாட்டம்" கொண்டிருப்பதாக தெரிகிறது.”

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், “அமெரிக்க கனவின்" உதிரிதிட்டங்களும் மற்றும் "பொருளாதார வாய்ப்புக்கான தேசமாக" வரலாற்றுரீதியில் ஒருவித அரசியல் பசையாக செயல்பட்டுள்ள அமெரிக்காவும் உருக்குலைந்துள்ளன. எல்லா அறிகுறிகளும், 2008 நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் உலகின் மத்திய வங்கிகளால் உருவாக்கப்பட்ட நிதியியல் குமிழியின் ஒரு பொறிவைச் சுட்டிக்காட்டுகின்ற நிலைமைகளின் கீழ், தொழிலாள வர்க்கம் தலையிடும் என்பதே ஆளும் வர்க்கத்தை பீதியூட்டிக் கொண்டிருக்கிறது.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் நிதியியல் சந்தைகளின் முழுமையான உருக்குலைவானது, உலகளாவிய நிதியியல் அமைப்புக்குள் ட்ரில்லியன் கணக்கான டாலர்களைச் செலுத்தியதன் மூலமாக மட்டுமே தடுக்கப்பட்டது —அமெரிக்க பெடரல் மட்டுமே 4 ட்ரில்லியனுக்கும் அதிகமான டாலர்களைப் பாய்ச்சியது. ஆனால் இந்த நடவடிக்கைகளின் தலையாய விளைவு— அமெரிக்காவில் மற்றும் ஏனைய பிரதான பொருளாதாரங்களிலும் முதலீட்டு வட்டிவிகிதங்கள் வரலாற்றுரீதியில் மிகக் குறைந்த மட்டங்களில் உள்ள நிலையில்—“நிஜ" பொருளாதாரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மீட்சியை கொண்டு வரவில்லை, மாறாக நிதியியல் சந்தைகளது உயர்வுக்கே உதவின.

இரகசிய குறியீட்டு நாணயம் பிட்காயனின் (crypto currency Bitcoin) வளர்ச்சியே ஊகவணிக வெறித்தனத்தின் சமீபத்திய வெளிப்பாடாக உள்ளது. 3,000 க்கும் அதிக நாட்களில் 2,000 டாலர் மட்டங்களை எட்டிய இணைய வர்த்தகத்திற்குப் பயன்படுத்தப்படுகின்ற இந்த செலாவணி, பின்னர் வெறும் 85 நாட்களில் 2,000 டாலரில் இருந்து 4,000 டாலரை அடைந்தது. கோல்ட்மன் சாச்ஸ் உட்பட பெரும் முதலீட்டாளர்கள் இதில் இறங்கிய நிலையில், பிட்காயன்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 140 பில்லியன் டாலராக விரிவடைந்தது.

நடைமுறையளவில் ஒவ்வொரு நிதியியல் சொத்துக்களிலும் அபிவிருத்தி அடைந்துள்ள குமிழிகளில் இது ஒரேயொரு வெளிப்பாடு மட்டுமேயாகும்.

பெடரல் மற்றும் ஏனைய மத்திய வங்கிகள் அதிமலிவு பணத்தைப் பாய்ச்சிய நிலையில், நிறுவனங்கள் எதைக் கொண்டு பங்கு மதிப்புகளை பேணியதோ அத்தகைய முக்கிய இயங்குமுறைகளில் ஒன்றுதான், பங்குகளை வாங்கிவிற்பதை ஒழுங்கமைப்பதற்கு கடன் வாங்கிய நிதிகளையே பயன்படுத்திய இயங்குமுறையாகும். ஆனால் ஏற்கனவே இதை அதிகமாக பயன்படுத்திக் கொண்ட நிறுவனங்கள் தங்களின் பங்கு மதிப்புகளை பேணுவதற்காக இன்னும் வாங்க முடியாத நிலையில் இருப்பதால், இந்த நிகழ்வுபோக்கும் அதன் எல்லையை எட்டிவருகிறது.

நீண்டகால வரலாற்று மதிப்பீடுகளின் அடிப்படையில், பைனான்சியல் டைம்ஸ் நேற்று ஒரு கருத்துரையில் குறிப்பிட்டவாறு, அமெரிக்க பங்குகள் "1929 பெரும் முறிவு மற்றும் 2000 இல் டாட்காம் குமிழி வெடிப்புக்கு முந்தைய மாதங்களைப் போல, வேறெந்த காலத்தையும் விட அதிக விலையுயர்ந்து காணப்படுகிறது.”

ஒருசமயம் “வழமையானதாக" கருதப்பட்ட சூழலில், அதிக வட்டிவிகித இலாபங்களின் ஆதாயத்தைப் பெற பணம் பத்திரச் சந்தைகளுக்குள் நகரும். ஆனால் சமீபத்திய சந்தைகளும் சாதனையளவிற்குக் குறைந்த வட்டிவிகிதங்களுடன், வரலாற்றுரீதியிலான உயர்வில் வியாபாரமாகி, (இது விலையுடன் எதிர்விதமான உறவில் நகரும்) ஒரு குமிழியில் உள்ளன.

2008 இல், அமெரிக்க ஆளும் வர்க்கம் நிதியியல் பொறிவுக்கு அரசியல் மற்றும் பொருளாதார இயங்குமுறைகளைக் கொண்டு விடையிறுத்தது. ஒருபுறம் அவை, ஒபாமா தேர்வாவது ஒரு "மாற்றத்திற்கான" தருணம் என்று புகழ்ந்து கொண்டிருந்த தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் தனிச்சலுகை கொண்ட பல்வேறு நடுத்தர வர்க்க அமைப்புகளின் ஆதரவுடன், “துணிந்து நம்பலாம்" என்றும், "மாற்றத்தை நீங்கள் நம்பலாம்" என்றும் பிரகடனப்படுத்தி, அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு ஒபாமாவை நியமித்தன.

மறுபுறம், அவை ஊகவணிகத்திற்கு நிதி விரயம் செய்ய பொருளாதார வரலாற்றிலேயே பார்த்திராத அளவில் நிதியியல் அமைப்புமுறைக்குள் மிகப்பெரியளவில் பணத்தை பாய்ச்சி, செல்வவளத்தை தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பெரும் பணக்காரர்களுக்கு பாரியளவில் கைமாற்றுவதை ஒழுங்கமைத்தனர். முரண்பாடுகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, இந்த நடவடிக்கைகள் அவற்றை இன்னும் உயர்ந்த மட்டங்களுக்கு மறுஉற்பத்தி செய்தன.

ஆளும் வர்க்கத்தின் பிரிவுகள் வர்க்க மோதலின் வளர்ச்சி குறித்து பீதியூற்று இருந்தாலும், தவிர்க்க முடியாமல் சமூக வெடிப்புகளை நோக்கி இட்டுச் சென்று கொண்டிருக்கும் நிலைமைகளைச் சரி செய்ய அவர்களால் எந்த நடவடிக்கைகளையும் முன்மொழிய முடியவில்லை. நாடாளுமன்றத்திற்கு வெளியே அதீத வலது இயக்கத்தை அபிவிருத்தி செய்யும் ஒரு கொள்கையை ட்ரம்ப் பின்தொடர்கின்ற அதேவேளையில், ஆளும் வர்க்கத்திற்குள் உள்ள அவரது விமர்சகர்கள் இராணுவ மற்றும் நிதியியல் உயரடுக்கின் வழிகாட்டலின் கீழ் அவர் நிர்வாகத்தை முன்பினும் அதிக உறுதியாக நிலைநிறுத்த அதை மறுஒழுங்கமைப்பதற்காக செயற்பட்டு செய்து வருகின்றனர்.

பொருளாதார மற்றும் அரசியல் கொந்தளிப்பின் ஒரு புதிய காலகட்டம் உருவெடுத்து வருகிறது, தொழிலாள வர்க்கம் அதன் நலன்களுக்கு ஏற்ப முதலாளித்துவ இலாபநோக்கு அமைப்புமுறையின் வரலாற்று நெருக்கடியைத் தீர்க்க, ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், ஒரு புரட்சிகர தலைமையைக் கட்டமைப்பதன் மூலமாக அத்தகைய காலகட்டத்திற்கு அது தயாரிப்பு செய்து கொள்ள வேண்டும்.