ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Google blocked every one of the WSWS’s 45 top search terms

உலக சோசலிச வலைத்தளத்தின் முதன்மை 45 தேடு சொற்களில் ஒவ்வொன்றையும் கூகுள் தடுத்தது

By Andre Damon
4 August 2017

முன்னதாக உலக சோசலிச வலைத் தளத்திற்கு வாசகர்களை இட்டு வந்த 45 மிக பிரபலமான தேடு சொற்களுக்கும் உலக சோசலிச வலைத் தளத்திற்கும் இடையிலான தொடர்புகளை கூகுள் துண்டித்திருப்பதை, இணைய தரவு மீதான ஓர் ஆழ்ந்த மீளாய்வு நிறுவிக்காட்டுகிறது. ஏப்ரல் 2017 இறுதி வாக்கில், WSWS ஐ அதன் வாசகர்களுடன் இணைத்த 150 முதன்மை தேடு சொற்களில் 145 சொற்கள் இப்போது அவ்வாறு செய்வதில்லை எனும் அளவிற்கு, கூகுள் நடைமுறைப்படுத்தி உள்ள ஸ்தூலமான தணிக்கை மிகவும் பரந்தளவில் உள்ளது.

கூகுள் தேடல்களினூடாக WSWS ஐ வந்தடைந்த வாசகர்களின் எண்ணிக்கை சரிந்திருப்பது ஏதோ தொழில்நுட்ப பிரச்சினையின் காரணமாக இல்லை, மாறாக ஒரு திட்டமிட்ட தணிக்கை கொள்கையினால் ஆகும் என்பதை இந்த கண்டுபிடிப்புகள் தெளிவுபடுத்துகின்றன. “அத்துமீறிய" செய்திகள் மற்றும் "சூழ்ச்சி தத்துவங்களை" உள்ளடக்கிய வலைத் தளங்களை விட்டு "அதிகாரபூர்வ வலைத் தளங்களை" ஊக்குவிப்பதற்கான திட்டங்களை கூகுள் ஏப்ரல் 25 இல் அறிவித்த பின்னர், மூன்று மாதங்களில் தான் இந்த வீழ்ச்சி நிகழ்ந்துள்ளது.

இந்நடவடிக்கைகளின் காரணமாக, கூகுள் தேடல்களினூடாக WSWS ஐ வந்தடைந்த வாசகர்களின் எண்ணிக்கை ஏப்ரலுக்கு பின்னர் மூன்றில் இரண்டு மடங்கு சரிந்துள்ளது.

பத்தாயிரக் கணக்கான தேடு சொற்களை WSWS பகுத்தாராய்ந்து, தேடல் முடிவுகளில் WSWS ஐ முதல் அல்லது இரண்டாவது பக்கத்தில் கொண்டு வரக்கூடிய முக்கிய தொடர் சொற்கள் மற்றும் சொற்களை அது கண்டறிந்துள்ளது. இவற்றின் முதன்மை 45 தேடு சொற்களில், “சோசலிசம்,” “ரஷ்ய புரட்சி,” “ஃப்ளிண்ட் மிச்சிகன்,” “பாட்டாளி வர்க்கம்,” மற்றும் "ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் [UAW]” ஆகியவை முன்னர் உள்ளடங்கி இருந்தன. முதல் 150 தேடல் முடிவுகளில் WSWS ஐ கொண்டு வந்த சொற்களில் “UAW ஒப்பந்தம்,” “சரணடைதல்,” மற்றும் "போல்ஷிவிக் புரட்சி,” ஆகிய சொற்கள் உள்ளடங்கும். இந்த சொற்கள் அனைத்தும் இப்போது முடக்கப்பட்டுள்ளன.

மார்ச்சில் வெளியிடப்பட்ட கூகுள் மதிப்பீட்டாளர்களுக்கான வழிகாட்டி நெறிமுறைகளின் தொகுப்பிலும், ஏப்ரலில் கூகுள் பொறியியல் பிரிவின் துணை தலைவர் பென் கோம்ஸ் விவரித்த விளக்கத்திலும், “பயனர் ஒரு மாற்றீட்டு கண்ணோட்டத்தை தேடுகிறார் என்பதை தேடல் தெளிவாக எடுத்துக்காட்டினால்" ஒழிய, “சூழ்ச்சி தத்துவங்கள்" அல்லது "நிலைகுலைக்கும்" செய்திகளைக் கொண்ட பக்கங்களுக்கு திருப்பிவிடுவதை தடுக்குமாறு, கூகுள் தேடல் மதிப்பீட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தேடுபொறி தரவரிசைப் பட்டியல் மாற்றங்களுக்கான இதுபோன்ற இயங்குமுறையுடன் WSWS இன் தரவு உள்ளடக்கம் ஒத்திருக்கின்றன.

கூகுள் பயனர்கள், அவர்களின் தேடல் விசாரணையில் "WSWS" என்பதை குறிப்பிட்டு உள்ளடக்கினால் தான் அவர்களால் WSWS ஐ காண முடியும். ஆனால் "ட்ரொட்ஸ்கி,” “ட்ரொட்ஸ்கிசம்,” “மார்க்சிசம்,” “சோசலிசம்,” அல்லது "சமத்துவமின்மை,” போன்ற சொற்களை மட்டும் அவர்கள் தேடல் விசாரணைகளில் உள்ளடக்கினால், அவர்களால் WSWS ஐ காண முடியாது.

கூகுள் தேடல் பயனர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் தேடல் முடிவுகளில் முதல் பக்கத்திற்கு அடுத்துள்ள பக்கங்களுக்குச் சென்று சொடுக்குவதில்லை, மேலும் 99 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் 10 ஆம் பக்கத்தைக் கடந்து சென்று லிங்க்குகளை சொடுக்குவதில்லை. இதன் அர்த்தம், தேடலின் போது ஒரு பக்கம் முதல் 100 தேடல் முடிவுகளுக்கு அப்பால் பின்னுக்குத் தள்ளப்பட்டால், அது நடைமுறையளவில் எட்டமுடியாத இடத்தில் இருக்கும்.    

இந்த புதிய புள்ளிவிபரங்கள், SEMRush தேடல் சீரமைப்பு மென்பொருளால் தொகுக்கப்பட்டு, WSWS இன் முதன்மை 30,000 தேடு சொற்கள் மீதான ஒரு விரிவான பகுப்பாய்வின் அடிப்படையில், கூகுளின் சொந்த தரவுகள் மற்றும் கூகுள் தேடல்களுக்கு எதிராக பரிசோதிக்கப்பட்டதாகும்.

கூகுளின் பத்திரிகை தொடர்பு அலுவலத்தை தொடர்பு கொள்வதற்கு மீண்டும் மீண்டும் முயற்சி செய்த போதினும், அந்நிறுவனம் WSWS விசாரணையில் வெளியிடப்பட்ட உண்மைகள் குறித்து கருத்துரைக்க தொடர்ந்து மறுத்து வருகிறது.

ஆனால் ஏனைய சுதந்திர செய்தி நிறுவனங்களால் பரந்தளவில் பகிர்ந்து கொள்ளப்படும் மற்றும் மேற்கோளிட்டுக் காட்டப்படும் WSWS இன் செய்திகள், கூகுளின் மதிப்பீட்டாளர்கள் என்றழைக்கப்படுபவர்களின் பாத்திரம் மீது கணிசமான கவனத்தைக் கொண்டு வந்துள்ளது.

புதனன்று ஒரு நேரடி இணையவழி ஒளிபரப்பில், கூகுளின் வெப்மாஸ்டர் புள்ளிவிபரங்களுக்கான பகுப்பாய்வாளர் ஜோன் முய்லெரிடம், இந்த மதிப்பீட்டாளர்களால் "வலைத் தளத்தின் நன்மதிப்பு" பாதிக்கப்படுமா என்று கேட்கப்பட்டது. "பொதுவாக ஒரு வலைத் தளத்தின் நன்மதிப்பு போன்ற சில விடயங்களை" மதிப்பீட்டாளர்களின் நடவடிக்கைகள் "தத்துவார்த்த ரீதியில் உள்ளடக்கி இருக்கும்" என்று அறிவித்து, முய்லெர், மறுக்காமல் மறுக்கும் ஒரு பதில் என்று கூறத்தக்க ஒன்றை வழங்கினார்.

கூகுளின் தணிக்கையாளர் குழு, வலைத் தளங்களின் "நன்மதிப்பை" பின்னுக்கு தள்ளுவதன் மூலமாக வலைத் தளங்கள் ஒன்வொன்றையும் முடக்குவதற்கான தகைமை கொண்டுள்ளது என்பதற்கு இது நடைமுறையளவில் ஓர் ஒப்புதலாகும்.

கூகுள் முடக்கிய தேடு சொற்களின் பட்டியல், அரசாங்கமும் பெருநிறுவன செல்வந்த குழுக்களும் மக்கள் எதை தெரிந்து கொள்ளக்கூடாது என்று விரும்புகிறார்கள் என்பதை எடுத்துரைக்கின்றன.

நேரடியாக சோசலிசத்துடன் சம்பந்தப்பட்ட சொற்கள் மீதுதான் மிகவும் அதிகமாக மோசடி செய்யப்பட்டுள்ளது. “முதலாளித்துவத்திற்கு எதிராக சோசலிசம்,” “சோசலிச மருத்துவ கவனிப்பு,” “சமூக வர்க்க போராட்டம்,” மற்றும் "சோசலிச கட்சி அறிக்கை,” ஆகிய சொற்கள், இவையெல்லாம் முன்னர் முதல் பக்கத்திலேயே WSWS கட்டுரைகளைக் கொண்டு வந்த நிலையில், இப்போது முதன்மை 100 தேடல் முடிவுகளில் கூட WSWS பக்கங்களைக் கொண்டு வரவில்லை. “சோசலிசம்,” “சோசலிஸ்ட்,” “சோசலிச இயக்கம்,” மற்றும் "வர்க்க முரண்பாடு,” ஆகிய சொற்கள், முன்னதாக முதல் நான்கு பக்கங்களுக்குள் WSWS கட்டுரைகளைக் கொண்டு வந்திருந்த நிலையில், இப்போது இவை அனைத்தும் WSWS கட்டுரைகளைக் கொண்டு வரவே இல்லை.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), 2014 இல், தொழிலாள வர்க்கத்தின் அடிப்படையில் ஒரு போர்-எதிர்ப்பு இயக்கத்தை மீளக்கட்டமைக்க உறுதிபூண்டு, அதன் அரசியல் வேலைத்திட்டத்தின் மையத்தில் போருக்கு எதிரான போராட்டத்தை வைத்து அறைகூவல் விடுத்தது. இதேபோலவே குறிப்பிடத்தக்க வகையில், தேடல் முடிவுகளில் WSWS கட்டுரைகளை முதல் பக்கத்திற்குள் கொண்டு வந்த, “போர்-எதிர்ப்பு இலக்கியம்,” “போருக்கு எதிரான கட்டுரைகள்,” மற்றும் "போர் சோசலிசம்,” ஆகிய சொற்கள், WSWS கட்டுரைகளில் ஒன்றை கூட கொண்டு வரவில்லை. 

வரலாறு சம்பந்தமான தேடல்களில், குறிப்பாக 20 ஆம் நூற்றாண்டு புரட்சிகர போராட்டங்கள் சம்பந்தமான வரலாற்று தலைப்புகளில் WSWS இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில், “ரஷ்ய புரட்சி,” “போல்ஷிவிக் புரட்சி,” மற்றும் "அக்டோபர் புரட்சி,” போன்ற சொற்கள் உள்ளடங்கும், இவை அனைத்தும் ஏப்ரலில் முதல் 50 தேடல் முடிவுகளில் WSWS ஐ கொண்டு வந்திருந்தன.

தொழிலாள வர்க்கத்திற்கு விரோதமான தொழிற்சங்கங்களை WSWS அம்பலப்படுத்துவதன் மீதான செய்திகளை உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் பின்தொடர்கிறார்கள். ஒருவேளை இந்த காரணத்தினால் தானோ என்னவோ, ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் என்பதன் சுருக்கமான "UAW” என்ற சொலின் முதல் 100 தேடல் முடிவுகளில் இருந்து WSWS நீக்கப்பட்டுள்ளது. “வேலைநிறுத்தம்" என்ற சொல் உட்பட 125 க்கும் அதிகமான தேடு சொற்களில் கிடைக்கும் முதல் 100 தேடல் முடிவுகளில் இருந்தும் WSWS நீக்கப்பட்டுள்ளது.

1998 இன் தொடக்கத்திலிருந்து அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் ஒரு பிரதான போக்காக WSWS அடையாளம் கண்டுள்ள சமூக பிரச்சினைகள், குறிப்பாக சமூக சமத்துவமின்மை, WSWS செய்திகளின் ஒரு முக்கிய கூறுபாடாகும். குறிப்பிடத்தக்க வகையில், WSWS ஐ முதல் ஐந்து தேடல் முடிவுகளில் கொண்டு வந்திருந்த “உலகின் சமூக சமத்துவமின்மை,” “வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மை,” மற்றும் "உலகளாவிய சமத்துவமின்மை கட்டுரைகள்,” ஆகிய சொற்கள், இப்போது முதல் 100 தேடல் முடிவுகளில் கூட கொண்டு வரவில்லை. இதைப் போலவே, வேறெந்த தேடு சொற்களையும் விட WSWS க்கு இரண்டாவது-அதிகபட்ச வாசகர்களைக் கொண்டு வந்திருந்த "ஃப்ளிண்ட் மிச்சிகன்,” என்ற சொல், முதல் 100 முடிவுகளில் இருந்தே WSWS கட்டுரைகளை நீக்கி இருந்தது.

இறுதியாக, அங்கே போர் விரிவாக்கம் உள்ளது. ஏப்ரலில் WSWS ஐ முதல் 100 தேடல் முடிவுகளில் கொண்டு வந்திருந்த 30,000 தேடு சொற்களில், 1,100 க்கும் அதிகமானவை "போர்" என்ற பதத்தைக் கொண்டிருந்தன. அவற்றில் பாதிக்கும் மேலானவற்றின், அல்லது 761 தேடுசொற்களின், தேடல் முடிவுகளது முதல் 10 பக்களில் இருந்தே WSWS நீக்கப்பட்டது.

ஏப்ரலில், பின்வரும் தேடுசொற்கள் (search terms) முதல் ஐந்து இடங்களில் WSWS இன் ஒரு கட்டுரையைக் கொண்டு வந்திருந்தன: “சீனா உடனான அணுஆயுத போர் (1),” “அமெரிக்கா ஈரானுடன் போருக்கு செல்கிறதா (1),” “சீனா அமெரிக்கா போர் சூழல், (3)” “சீனாவுடன் அணுஆயுத போர் (4)” மற்றும் "ஓர் அணுஆயுத போர் ஏற்பட்டால் என்ன நடக்கும் (5).” இந்த சொற்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.

முதல் 10 இடங்களில் இருந்த குறிப்பிடத்தக்க ஏனைய சொற்களில், “ரஷ்யா ஓர் அணுஆயுத போரைத் தொடங்குமா (6),” “ரஷ்யாவிற்கு எதிரான போர் (8),” மற்றும் "அணுஆயுத போர் அச்சுறுத்தல் (9),” ஆகியவை உள்ளடங்கும், இப்போது இவையனைத்து சொற்களின் தேடல் முடிவுகளும் முதல் 100 இடங்களில் இருந்தே WSWS ஐ நீக்கியுள்ளன.

பயனர் அனுபவத்தை "மேம்படுத்துவதற்காக" அது அதன் தேடுபொறியில் மாற்றங்களை நடைமுறைப்படுத்த முயன்று வருவதாக கூகுள் வாதிடுகிறது.

ஆனால் "சோசலிசம்" அல்லது "சோசலிஸ்ட்,” மற்றும் "ரஷ்ய புரட்சி" என்ற வார்த்தைகளை தேடும் பயனர்கள், சோசலிச வலைத் தளங்களையும் ஒரு சோசலிச முன்னோக்கையும் தேடி வருகிறார்கள் என்பது வெளிப்படையானது!

“மக்கள் தேடாத" உள்ளடக்கங்களையே அது ஒதுக்கி வருவதாக கூகுள் வாதிடுவது ஒரு அபத்தமான எரிச்சலூட்டும் மோசடியாகும். இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு தேடு சொற்களும் WSWS கட்டுரைகளுடன் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளன.

“மக்கள் என்ன தேடுகிறார்களோ" அதுவும், அரசு உளவுத்துறை எந்திரத்தின் உயர்மட்டங்களுடன் சேர்ந்து இயங்கி, மக்கள் எதை கண்டு விடக்கூடாது என்று கூகுள் விரும்புகிறதோ அதுவும், இந்த தரவுகளே என்பதால் தான் கூகுள் WSWS இன் தகவல்களை முடக்கி வருகிறது.

கூகுளின் தணிக்கைக்கு எதிராக போராட WSWS க்கு உங்கள் உதவி அவசியப்படுகிறது. இக்கட்டுரையில் முன்வைக்கப்பட்டுள்ள புள்ளிவிபரங்களை மட்டுமே தொகுத்தளிக்க கூட டஜன் கணக்கான மணி தியாலங்கள் அவசியப்பட்டுள்ளன, மற்றும் கணிசமான நிதி ஆதாரவளங்களுக்கான கடமைப்பாடுகளும் உள்ளன. எவ்வாறாயினும் நாம் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. ஆகவே தயவுசெய்து இன்றே நிதியுதவி வழங்குங்கள்!