ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan police arrests dozens of young people in Jaffna

இலங்கை பொலிஸ் யாழ்ப்பாணத்தில் டசின் கணக்கான இளைஞர்களைக் கைது செய்துள்ளது

By Subash Somachandran and S. Ananth
17 August 2017

இலங்கை பொலிஸ் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல்வேறு பிரதேசங்களில் நடத்திய திடீர் சுற்றிவளைப்புக்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளது. அண்மையில் கோப்பாய் பகுதியில் ஒரு ஆயுதக் கும்பலால் இரு பொலிசார் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அரசாங்கமும் பொலிசும் அரச ஒடுக்குமுறையை உக்கிரமாக்க பயன்படுத்திக்கொண்டன.

விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கி விட்டார்கள் என்று அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்தார். “நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டதாக நாங்கள் கூறுகின்ற போதிலும், பயங்கரவாத்தின் விதைகள் முழுமையாக அகற்றப்பட்டுவிட்டதாக யாரும் உறுதியாக கூற முடியாது,” என அவர் கூறிக்கொண்டார். அவரது கருத்துக்கள், தமிழர்-விரோத இனவாத பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவதற்காக ஆளும் கட்சிகள், பொலிஸ், எதிரக் கட்சிகள், மற்றும் முதலாளித்துவ ஊடகங்களும் முன்னெடுக்கும் இத்தகைய பிரச்சாரத்தின் மறுபக்கமாக உள்ளது.

இந்த அடக்குமுறை திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட பிரதேசங்களில் துன்னாலையும் ஒரு இடமாகும். உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் இந்தப் பகுதிக்கு சென்றிருந்தனர். இந்த பொலிஸ் பாய்ச்சலில் துன்னாலை மற்றும் குடாவத்த பிரதேசங்களில் 42 இளைஞர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜூன் 8, மணல் ஏற்றிச்சென்ற லொறி ஒன்றில் அமர்ந்திருந்த தினேஷ் யோகராஜா என்ற ஒரு இளம் தொழிலாளியை பொலிஸ் கொன்றமைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்ததால், இந்தப் பிரதேசம் குறிப்பாக இலக்கு வைக்கப்பட்டிருந்தது. (பார்க்க: வட இலங்கையில் இளம் தொழிலாளியை பொலிஸ் கொன்றது) ஆத்திரமடைந்த மக்கள் பொலிஸ் காவலரன் ஒன்றைத் தாக்கியதோடு இளைஞரின் கொலையுடன் சம்பந்தப்பட்ட உப-பொலிஸ் பரிசோதகரின் வீட்டையும் செதப்படுத்தியிருந்தனர். கடமையில் இருந்த அந்த பொலிஸ் அதிகாரி “மிதமிஞ்சிய பலத்தை” பயன்படுத்தி இளைஞரைக் கொன்றதாக ஏற்றுக்கொண்ட பொலிஸ், மக்கள் மத்தியிலான சீற்றத்தை தணிக்க அவர்களை இடம் மாற்றம் மட்டுமே செய்தது.

ஆகஸ்ட் 4 முதல் 8 வரை, கனரக ஆயுதம் தரித்திருந்த விசேட அதிரடிப் படை மற்றும் இராணுவத்தின் உதவியுடன் துன்னாலை மற்றும் குடாவத்த பிரதேசத்தை சுற்றி வளைக்க நூற்றுக்கணக்கான பொலிசார் நிலைகொண்டனர். இந்த சுற்றி வளைப்பு யுத்த காலத்தில் நடந்தது போன்று நடந்தது.

சுற்றிவளைப்பு நடந்த போது பொலிஸ் மற்றும் இராணுவ றக்குகள், ஜூப் மற்றும் மோட்டார் வண்டிகளும் பிரதேசத்தில் ரோந்து சென்றன. புலனாய்வுத்துறை அதிகாரிகள் தயாராக இருந்தனர். குடியிறுப்பாளர்கள், தனியார் வகுப்புகளுக்கு சென்ற பிள்ளைகள் கூட வெளியேற அனுமதிக்கப்படவில்லை. பான் விற்பனையாளர்கள் உட்பட வெளியார் உள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

படையினர் பஸ்களை நிறுத்தி பயணிகளை சோதனையிட்டனர். துன்னாலை மற்றும் குடாவத்த முகவரியுடன் அடையாள அட்டை வைத்திருந்தவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். தமிழ் பொலிஸ் அதிகாரிகள் பெண்களை அசிங்கமான வார்த்தைகளில் திட்டியதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் விலங்கிடப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 8 அன்று, குடாவத்தையில் சுகயீனமுற்றிருந்த 70 வயதான பெண், தனது மகளை பொலிஸ் கைது செய்வதைக் கண்டு அதிரிச்சியில் மரணமானார். பொலிஸ் அவளது மரணச் சடங்கிற்கு தொந்தரவு செய்ததால், கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் ஒரு சில ஆண்களும் பெண்களும் மட்டுமே பங்குபற்றினர்.

குடும்பத் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாலும் அல்லது அச்சத்தில் தலைமறைவாக இருப்பதனாலும் இந்தக் கிராமங்களில் பல குடும்பங்கள் பட்டனி கிடக்கின்றன. இந்த சுற்றி வளைப்பில் பொலிஸ் 14 லொறிகளையும் 11 மோட்டார் சைக்கிள்களையும் கொண்டு சென்றுள்ளது.

பொலிஸ் கண்காணிப்பு நிலையத்தினை உடைத்தமை, வீதியில் ரயர்கள் எரித்தமை, உதவிப் பொலிஸ் பரிசோதகரின் வீட்டினை உடைத்தமை மற்றும் கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தியமை போன்ற குற்றங்களை கைதுசெய்யப்பட்டவர்கள் மீது பொலிஸ் சுமத்தியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்களை கிராமத்தவர்கள் நிராகரிப்பதோடு தம்மீது போலிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்கள், கிட்டத்தட்ட கடந்த முன்று தசாப்தங்களாக பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத முன்னெடுக்கப்பட்ட யுத்தத்த்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களாவர். கொழும்பு அரசாங்கமும் அதன் பாதுகாப்புப் படைகளும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டமை மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை உட்பட கொடூர யுத்தக் குற்றங்களுக்குப் முழுப் பொறுப்பாளிகள் ஆவர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அமெரிக்க-சார்பு அரசாங்கத்தின் பங்காளியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இந்த அரச ஒடுக்குமுறைகளை ஆதரிக்கின்றது.

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, ஜூலை 2 வெளியான தினக்குரல் பத்திரிகைக்கு கருத்து தெரிவித்தபோது, பொலிஸ் நடவடிக்கைகளை நியாயப்படுத்தினார்: “பொலிஸ் நேர்மையாக செயற்பாட்டால், வாள் வெட்டு சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் இறக்குமதி போன்றவற்றை நிச்சயமாக நிறுத்தலாம். அதேபோல் பொலிஸ் நேர்மையாக செயற்பட்டால் பொதுமக்களும் தமது ஆதரவினை வழங்குவார்கள். அதே நேரம், வாள் வெட்டுப் போன்ற சம்பவங்களுக்கு கூட இராணுவத்தினை பயன்படுத்துமளவுக்கு சூழ்நிலை மாறியுள்ளதை மக்களும் புரிந்துகொள்ள வேண்டும். இதை புரிந்துகொண்டு, வாள் வெட்டுப் போன்ற சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்களை சட்டத்தின் முன் கொண்டுவருவதற்கு மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” என அவர் கூறினார்.

உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய பொதுமக்கள், பொலிஸ் ஒடுக்குமுறைகளுக்கும் மற்றும் தமிழ் கூட்டமைப்புக்கும் எதிரான தமது கோபத்தினை வெளிப்படுத்தினர்.

“கைது செய்யப்பட்ட பொதுமக்கள் மீது பொலிஸ் போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறது” என ஒரு சாரதி கூறினார். “எனது உறவினரான ஒரு மீன் வியாபாரி விற்பனை இடத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார். அவர் ஒரு கைக் குண்டு வைத்திருந்தார் என்று பொலிஸ் கூறியது. இது முற்றிலும் பொய்யானது. நாங்கள் தினேஸ் கொல்லப்பட்டபோது ஆர்ப்பாட்டம் நடத்திய வீடியோப் பதிவுகளை வைத்துக்கொண்டு அதை தற்போது பொலிஸ் எங்களுக்கு எதிராக பயன்படுத்துகின்றது.”

ஒரு 55 வயதான பெண்மணி கூறுகையில், “பொலிஸ் கொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, நான் ஊடகங்களுடன் பேசிய காரணத்தினால் என்னைக் கைது செய்வதற்கு பொலிஸ் முயற்சி செய்கின்து,” என்றார். “எனது மகளின் ஊடாக பொலிஸ் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றது. நான் இப்போது தலைமறைவாக உள்ளேன். எமது குடும்பத் தலைவர்கள் தலைமறைவாகியுள்ளதால் பெண்களும் குழந்தைகளும் உணவுப் பிரச்சினைக்கு முகம்கொடுக்கின்றனர். எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்ற பீதியில் வாழ்கின்றோம். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்களை வந்து பார்ப்பதே இல்லை. நாங்கள் எந்தவிதமான உதவியும் இல்லாமல் வாழ்கின்றோம். இனிமேல் நாங்கள் எந்த அரசியல்வாதியையும் வாக்கு கேட்க எமது கிராமத்துக்குள் அனுமதிக்கமாட்டோம்.”

எஸ். ரஞ்சினி கூறியதாவது: “எனது மகன் சயூதன், 20, வேறொரு வழக்குக்காக ஆகஸ்ட் 1 நீதிமன்றத்துக்கு போயிருந்தபோது, அங்கு வைத்தே பொலிஸ் அவரை கைது செய்தது. ஏன் அவரை கைது செய்துள்ளீர் என பொலிசாரை நான் கேட்டபோது, அவர் கடற்படையினர் மீதான தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளார் என்று கூறினார்கள். அந்த நேரத்தில் எனது மகன் யாழ் நகரத்தில் இருந்தார் என்று நான் கூறிய போதிலும் கூட அவர்கள் அதை ஏற்றுக் கொள்வில்லை. வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எமது வானை பொலிசார் கொண்டுசென்று விட்டனர்.”

தனது கனவரான வதனராஜா, யாழ்ப்பாண நகரில் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு திரும்பும் வழியில் வரணிப் பகுதியில் வைத்து பொலிசாரால் ஆகஸ்ட் 1 கைது செய்யப்பட்டார் என்று இன்னொரு பெண் தெரிவித்தார். “அவர் எந்தவிதமான சம்வத்துடனும் தொடர்புபட்டிருக்கவில்லை. தற்போது நாங்கள் எதுவிதமான உதவிகளுமற்று தனியாக வாழ்கின்றோம். அவர் நோய்வாய்ப்பட்டவர். அவர் ஒவ்வொரு நாளும் மருந்து எடுக்க வேண்டும். எந்தவிதமான சிகிச்சையும் இன்றி அவர் தற்போது சிறையில் இருக்கின்றார். நாங்கள் வடக்கு மாகாண முதலமைச்சரைச் சந்தித்தோம், அத்தோடு யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. எனது வீட்டுக்கு வந்த சில தமிழ் பொலிசார் என்னையும் எனது 15 வயது மகளையும் அசிங்கமான வார்த்தைகளில் திட்டினார்கள். நீங்கள் இப்படி திட்டினால் நான் மண்ணெண்ணை ஊற்றி கொழுத்திக்கொள்வேன் என எனது மகள் மிரட்டியதாலேயே அவர்கள் வெளியேறினார்கள்.”

ஒரு சிறு கடை உரிமையாளர் கூறும்போது, “இந்தச் சம்வங்களுடன் எந்தவிதமான தொடர்புகளும் அற்ற பொதுமக்களே கைது செய்யப்பட்டுள்ளார்கள். நாங்கள் இப்போது யுத்த காலத்தில் போன்று வாழ்கின்றோம். பொலிஸ் பொதுமகனைச் சுட்டுக் கொன்றதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. ஆனால் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்களை அவர்கள் கைது செய்கின்றார்கள். பொலிஸ் அப்பாவிப் பொதுமக்கள் மீது ஆயுதம் வைத்திருந்தார்கள், ஆவா குழுவுடன் தொடர்பு வைத்திருக்கின்றார்கள் என்றும் கைது செய்யப்பட்டவர்கள் புலிகளுடன் தொட்புபட்டவர்கள் என்றும் குற்றம்சாட்டுகின்றது. இது ஒரு பொய்யாகும். 17 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் கூட கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது “நல்லாட்சி அரசாங்கமா?” என நான் கேட்கின்றேன்.”