ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lanka: War victims continuously fighting to release military occupied land

இலங்கை: யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளை விடுவிக்குமாறு தொடர்ந்து போராடுகின்றனர்

By Subash Somachandran and K. Easwaran
14 August 2017

வட இலங்கையில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாப்புலவு கிராமத்தினைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான மக்கள், இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தங்களின் நிலங்களை விடுவிக்குமாறு கோரி, தொடர்ச்சியாக போராடி வருகின்றார்கள். கேப்பாப்புலவு மக்கள் ஐந்து மாதங்களுக்கு மேலாக, தங்களின் நிலங்களை ஆக்கிரமித்திருக்கும் விமானப்படைத்தளத்தின் முன்னால் அமர்ந்திருந்து போராடி வருகின்றனர். அவர்கள் ஏற்கனவே முல்லைத்தீவு மற்றும் கொழும்பிலும் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

இந்த மக்களின் பிரச்சினைகள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு-கிழக்கில் பொதுவானதாகும். இந்த அறிக்கை, அண்மையில் முல்லைத்தீவுக்கு விஜயம் செய்த உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்களால் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது.

****

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (LTTE) எதிரான இனவாத யுத்தத்தின் போது, வடக்கு மற்றும் கிழக்கில் அரசாங்கத்தின் பாதுகாப்புப் படைகளால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அவை உயர்பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டன. புலிகள் தோற்கடிக்கப்பட்டு, யுத்தம் முடிவடைந்து 8 வருடங்கள் கடந்த நிலையிலும், கைப்பற்றிய நிலங்களை தொடர்ந்தும் இராணுவம் ஆக்கிரமித்துள்ளதுடன், கட்டிட தொகுதிகள் மற்றும் பௌத்த கோயில்களையும் கட்டியெழுப்புவதோடு, பண்ணைகளையும் நடத்திவருகின்றது. இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்னமும் இழிவான அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றன.

இராணுவம், கேப்பாப்புலவு மற்றும் அருகில் உள்ள பிலக்குடியிருப்பு கிராமங்களை ஆக்கிரமித்துள்ளது. மாற்று நிலங்களை நிராகரித்த மக்கள், மூன்று மாதங்களாக நடாத்திய போராட்டத்தை அடுத்து அரசாங்கம் பிலக்குடியிருப்பு கிராமத்தினை விடுவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குளாய், வட்டுவாகல், செம்மலை மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களிலும் இராணுவம் நிலங்களை ஆக்கிரமித்துள்ளது. கேப்பாப்புலவில் இராணுவம் பாரிய விமானப்படைத்தளத்தை அமைத்துள்ளதுடன் அது முல்லைதீவு மாவட்டத்துக்கான இராணுவத் தலமையகமாகவும் இயங்குகிறது.

முல்லைத்தீவு நகரத்தில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கேப்பாப்புலவு கிராமத்தில் கிட்டத்தட்ட 140 குடும்பங்கள் வாழ்ந்தன. பெரும்பாலான மக்கள் விவசாயிகளாகவும் மற்றும் மீனவர்களாகவும் இருந்தனர். விவசாயிகள் ஒவ்வொரு போகத்திலும் பயிர்ச் செய்கையின் ஈடுபட்டார்கள். மக்கள் பாரிய விவசாய நிலங்களையும் மற்றும் தொகையான கால்நடைகளையும் வைத்திருந்தார்கள். அவற்றினை தற்போது இராணுவம் உபயோகப்படுத்திவருகின்றது.

போராட்டத்தின் காரணமாக 482 ஏக்கரில் 111 ஏக்கர் நிலத்தினை இராணுவம் விடுவித்தது. அதற்குப் பதிலாக புனர்வாழ்வு அமைச்சு 148 மில்லியன் ரூபாவினை இராணுவத்திற்கு வழங்கியுள்ளது. மேலும் நிலங்களை விடுவிப்பதற்காக இராணுவம் இன்னும் மேலதிகமான மில்லியன் ரூபாய்களைக் கோருகின்றது. ஜூலை 19 அன்று, 180 ஏக்கர் காணியை விடுவிக்கப்போவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. அந்த காணிகள் வெளியார் 6 பேருக்கும் அரசாங்கத்துக்கும் உரிய நிலங்களே என்பதை அறிந்த போராட்டக்காரர்கள் கோபமடைந்து புனர்வாழ்வு அமைச்சர் டி.எம். சுவாமிநாதனை சுற்றி வளைத்தனர்.

புகைப்படம் எடுப்பதன் மூலமும் மற்றும் யாராவது அனுமதியின்றி காணிக்குள் நுழைந்தால் சுடப்படுவீர்கள் என்ற விளம்பரப் பலகையை நாட்டியதன் மூலமும் இராணுவம் போராட்டக்காரர்களை அச்சுறுத்தியது.

கேப்பாப்புலவில் போராட்டத்தில் ஈடுபட்டிருப்போர்

தற்பொழுது, பெண்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் உட்பட கேப்பாப்புலவு மக்கள் சுட்டெரிக்கும் வெய்யில், இரவில் குளிர் மற்றும் பாம்புகள் போன்ற விச ஜந்துக்கள் மத்தியிலும் ஒரு தற்காலிக கூடாரத்தின் கீழ் அமர்ந்து போராட்டத்தினை தொடர்கின்றனர். அரசியல்வாதிகள் தங்களை வந்து பார்த்து போலி வாக்குறுதிகளை மட்டும் வழங்குகின்றார்கள் வேறு ஒன்றும் நடக்கவில்லை என போராட்டக்காரர்கள் உலக சோசலிச வலைத் தளத்துக்கு தெரிவித்தார்கள். எவ்வாறாயினும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு (TNA) தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சில அரசசார்பற்ற நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களிடம் சென்று, அவர்களுடைய போராட்டத்துக்கு ஆதரவளிப்பவர்களாக பாவனை செய்கின்றார்கள். போலி இடதுசாரிகளான முன்னிலை சோசலிசக் கட்சியின் சமவுரிமை இயக்கம் மற்றும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி என்பன கேப்பாப்புலவு மக்களை கொழும்புக்கு கொண்டு வந்து, ஜூன் 27 அன்று ஜனாதிபதி அலுவலகத்துக்கு பேரணி நடத்தினார்கள். இந்த போலி இடது அமைப்புக்கள் முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்ற மாயையைப் பரப்புவதற்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை தடம்புரளச் செய்வதற்கும் இத்தகைய போராட்டங்களை சுரண்டிக் கொள்கின்றன.

அமெரிக்கசார்பு அரசாங்கமும் அதன் பங்காளிகளான தமிழ் கூட்டமைப்பும் ஆறு மாதத்தில் கேப்பாப்புலவு காணிகள் விடுவிக்கப்படும் என போலி வாக்குறுதிகளை வழங்கின. எதிர்ப்புக்களைச் சந்திக்கும் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் இன்னும் 10 நாட்களில் நல்ல முடிவு ஒன்றினை தருவதாக ஜூலை 26 வாக்குறுதியளித்தார். பின்னர் ஓகஸ்ட் 2, கேப்பாப்புலவு மக்களுக்கு அனுப்பிய ஒரு கடிதத்தில், மேலும் ஒரு வாரம் அவகாசம் வழங்குமாறு மீண்டும் கேட்டுக் கொண்டார். சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் விடுவிப்பார்கள் என அவர்கள் வாக்குறுதியளித்தனர். எவ்வாறாயினும், தமிழ் கூட்டமைப்பு எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு, அரசாங்கத்தின் சகல ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளையும் ஆதரித்து வருகின்றது.

நெருக்கடிகள் நிறைந்த அரசாங்கத்தின் மீது அழுத்தங்கள் அதிகரித்துவருவதை தடுக்கும் கூட்டமைப்பின் முயற்சியின் ஒரு பாகமாக, கேப்பாப்புலவு மக்களை அமைதிப்படுத்துவதே சம்பந்தனின் முயற்சியாகும். கேப்பாப்புலவு போராட்டத்துக்கு அப்பால், காணாமல் போனோரின் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் தங்களின் அன்புக்குரியவர்களை விடுதலை செய்யுமாறு கோரிக்கை வைத்து தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

தாங்கள் அமர்ந்திருக்கும் தற்காலிக கூடாரத்துக்கான வாடகையாக நாளாந்தம் 2,000 ரூபா வழங்க வேண்டுமெனவும் அப்பணத்தினை வழங்குவதற்கு தம்மால் முடியாமல் கஸ்டப்படுகின்றோம் என்று ஒரு போராட்டக்காரர் தெரிவித்தார். “கூடாரத்தின் உரிமையாளருக்கு இதுவரையும் 50,000 செலுத்தியுள்ளோம். மீதிப்பணத்தினையும் தருமாறு அதன் உரிமையாளர் கேட்கின்றார். நாங்கள் உதவியற்று இருக்கின்றோம்.

“இங்கு உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. ‘போராட்டக்காரர்களுக்கு தண்ணீர் வழங்க முடியாது’ எனக் கூறி பிரதேச சபை நிராகரித்துவிட்டது. தற்பொழுது உள்ளூராட்டசி நிறுவனங்கள் வட மாகாண சபையின் கட்டுப்பாட்டிலேயே செயற்படுகின்றன. மாகாணசபையானது தமிழ் தேசிய கூட்டமைப்பினால் ஆளப்படுகின்றது. வட மாகாணசபை எங்களுடையது என்றே கூட்டமைப்பு சொல்கின்றது. அவ்வாறாயின் ஏன் எங்களுக்கு உதவ முடியாது? எங்களுடைய நிலத்தினை விடுவிப்பதற்கு இராணுவம் காசு கேட்கின்றது. இராணுவத்துக்கு ஏன் காசு கொடுக்க வேண்டும்?” என அவர் கேட்டார்.

2009 மேயில், முல்லைத்தீவில் உள்ள முள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவம் புலிகளை நசுக்கியது. அங்கே பத்தாயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டதுடன், 10,000க்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் புலி சந்தேக நபர்களாக இராணுவத்தினால் கைது செய்யப்பட்டார்கள். கேப்பாப்புலவில் மட்டும் இறுதி யுத்தத்தின் போது, 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 30 பேர் ஊனமுற்றவர்களாக உள்ளார்கள். 36 யுத்த விதவைகள் உள்ளார்கள்.

கேப்பாப்புலவு மக்கள், எதுவிதமான அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் தங்களுடைய சொந்தக் கிராமங்களில் அல்லது ஏனைய இடங்களில் கொண்டு வந்து இருத்தப்படுவதற்கு முன்னர், ஏனைய இலட்சக் கணக்கான மக்களுடன் வவுனியாவில் இராணுவத்தினால் நடத்தப்பட்ட அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள். 2010ம் ஆண்டு, கேப்பாப்புலவினைச் சேர்ந்த குடும்பங்கள் சூரியபுரம் என்ற இடத்தில் உடனடியாக துப்பரவு செய்யப்பட்ட காட்டில் அமைக்கப்பட்ட தற்காலிக கொட்டில்களில் மீளக் குடியேற்றப்பட்டார்கள்.

சூரியபுரத்தில் 350க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன. இந்தக் கிராமத்துக்கான தண்ணீர் வசதிகள் பற்றாக்குறையாக உள்ளன. மொத்த குடும்பங்களும் 10 பொதுக் கிணறுகளிலேயே தங்கியுள்ளன. நிரந்தரமான வேலைகளுக்கான வாய்ப்பு இல்லை. மக்கள் அன்றாடம் கிடைக்கும் கூலி வேலைகளையே நம்பி வாழ்கின்றார்கள். அவர்கள் தற்காலிக இடத்தில் வாழ்வாதாக கூறி அரசாங்க அதிகாரிகள் “சமுர்த்தி” நிவாரணத் திட்டத்தினை நிராகரித்துள்ளார்கள். தங்களுடைய பிள்ளைகளின் கல்வி மிகவும் பாதிக்கப்படுவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இந்தக் குடும்பங்களுக்காக இராணுவத்தினால் அமைக்கப்பட்ட தற்காலிக வீடுகள், இப்போது நிரந்தமானவையாகியுள்ளன. ஆனால் அந்த வீடுகளின் சுவர்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன, கூரைகள் இத்துப்போகின்றன.

மக்கள் வேலைகள் அற்ற நிலையில் கொடூர வறுமையில் வாழ்கின்றனர். அவர்களுடைய பிள்ளைகளுக்காக பால்மாவுக்கு மக்கள் அலைகின்றனர். ஆனால் இராணுவம் அவர்களுடைய காணியில் பயிரிடுவதுடன், மக்களின் கால்நடைகளில் பால் கறக்கின்றது. இராணுவம் மக்களின் சொத்துக்களை உபயோகப்படுத்துகின்றது.

நாங்கள் ஒரு தேங்காய் 70 ரூபாவுக்கு கடைகளில் வாங்கும் அதேவேளை, இராணுவம் எமது காணிகளில் தேங்காய் பறிக்கின்றது என ஒரு போராட்டக்காரர் கூறுகின்றார். “நாங்கள் பட்டினி கிடக்கும்போது, இராணுவம் எமது சொத்துக்களை வைத்து வியாபாரம் செய்கின்றது. அவர்கள் எமது நிலத்தின் மண்களை அள்ளி வெளியில் அனுப்புகின்றார்கள். இதனால் எமது நிலம் பாரிய குழிகளாக மாறி தரிசாக மாறுகின்றது.” என அவர் சொன்னார்.

அ. வேலாயுதபிள்ளை சிங்கள மக்களை தங்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். “நாங்கள் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் இல்லை. எங்களுடைய வாழ்க்கை ஆபத்துக்குள் தள்ளப்பட்டுள்ளதால், நாங்கள் அரசாங்கத்துக்கும், இராணுவத்துக்கும் எதிராகவே போராடுகின்றோம். சிங்கள மக்கள் எங்களுக்கு உதவ வேண்டும். நாங்கள் விவசாயிகள் ஆனால் நாங்கள் இங்கு பயிர் செய்ய முடியாமல் இருக்கின்றோம். நாங்கள் விவசாயம் செய்வதற்கு எமது நிலங்கள் எமக்கு தேவை. தற்பொழு எங்களுக்கு நிரந்தரமான வேலைகள் இல்லை.” என்றார்

அ. சரசாதேவி கூறும்போது, “எமது ஊரில் இருக்கும்போது, எமக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை. எங்களுக்கு தென்னந்தோட்டம் இருந்தது. ஒவ்வொரு குடும்பமும் 30 வரையான பசுக்களை வைத்திருந்தன. இராணுவம் எமது வளங்களை ஆக்கிரமித்து வைத்துள்ளது. தென்னை, மாமரங்கள், பலாமரங்கள் மற்றும் பனை மரங்கள் போன்ற பெறுமதியான மரங்களை இராணுவம் வெட்டித்தள்ளுகின்றது. எமது வளங்களை அது அழிக்கின்றது. நாங்கள் இங்கு மீளக்குடியமரும்போது, அரசாங்கம் 4 தகரங்களை மட்டுமே வழங்கியது. நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் எமது பிள்ளைகளின் கல்வி நிலமை பாதிக்கப்படுகின்றது. எந்த அரசியல்வாதியும் எமக்கு உதவவில்லை. சிறிசேன பதவிக்கு வந்தால், நாங்கள் எல்லா வசதிகளையும் பெற்றுக் கொள்ள முடியும் என அவர்கள் கூறினார்கள். ஆனால் தற்போது எதுவும் நடக்கவில்லை.” என்றார்.