ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump’s defense of Nazi violence: The mask comes off

நாஜி வன்முறையை ட்ரம்ப் பாதுகாத்தல்: முகமூடி நீக்கப்படுகிறது

Joseph Kishore
17 August 2017

நாஜி மற்றும் வெள்ளையின மேலாதிக்காத ஆர்ப்பாட்டக்காரர்களை பாதுகாத்து செவ்வாயன்று டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட கருத்துக்கள், அமெரிக்க முதலாளித்துவத்தின் முகத்திலிருந்த ஏற்கனவே இற்றுபோன முகமூடியைக் கிழித்தெறிந்துள்ளது. சார்லட்வில்லில் கடந்த வாரயிறுதி பேரணியில் சம்பந்தப்பட்ட "மிக அருமையானவர்களுக்கு" அமெரிக்க ஜனாதிபதி அவரது ஆதரவை வழங்க ஊடகங்களின் முன்னேவந்த அதேவேளையில், "வன்முறை" இடதுசாரி போராட்டக்காரர்கள் என்று கூறப்படுபவர்களை தாக்கினார்.

சார்லட்வில் வன்முறைக்கு ஜனாதிபதியின் விடையிறுப்பானது, அமெரிக்காவிற்குள்ளும் சர்வதேச அளவிலும் மிக நீண்டகால விளைவுகளைக் கொண்டிருக்கும். உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் மீது அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவிய, இரண்டாம் உலக போர், பாசிசத்திற்கு எதிரான ஒரு போராக முன்வைக்கப்பட்டது. “ஜனநாயகம்" மற்றும் "மனித உரிமைகள்" என்ற வாய்சவடால் கொண்டு நியாயப்படுத்தப்பட்ட கடந்த கால் நூற்றாண்டின் ஒவ்வொரு போரும், ஹிட்லரின் நவீன அவதாரமாக வர்ணிக்கப்பட்ட ஏதோவொரு அரசு தலைவரை பதவியிலிருந்து வெளியேற்றுவதற்காக தொடுக்கப்பட்டது. இப்போது, “சுதந்திர உலகின்" தலைவர் என்று கூறப்படுபவர் அவரது பாசிசவாத அனுதாபங்களை வெளிப்படுத்தி உள்ளார்.

ட்ரம்பின் கருத்துக்கள் அமெரிக்காவிற்குள் அதிகரித்து வரும் சமூக மற்றும் அரசியல் கோபத்திற்கு எரியூட்டும். ஏற்கனவே மில்லியன் கணக்கானவர்கள் அரசையும் மற்றும் அதன் அமைப்புகளையும் கோபத்துடன் மற்றும் அவமதிப்புடன் பார்க்கின்றனர். ட்ரம்பும் ஸ்டீபன் பானன் போன்ற அவரது நாஜி-சார்பு ஆலோசகர்களும் நாடாளுமன்றத்திற்கு-வெளியே அதிவலது இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்காக அரசியல் குழப்பத்தை மற்றும் அன்னியப்படலைச் சுரண்ட முயன்றாலும், இன்னும் அங்கே பாசிசவாதத்திற்கு மிகப் பெரிய செல்வாக்கு ஒன்றும் இல்லை. ட்ரம்ப் பதவியேற்புக்கு எதிரான போராட்டத்திற்கு வந்திருந்த நூறாயிரக் கணக்கானவர்களோடு ஒப்பிடுகையில், நாடெங்கிலும் இருந்து சார்லட்வில்லுக்கு நவ-நாஜிக்களின் அணிதிரட்டல் வெறும் ஒருசில நூறு பேரையே ஈர்த்திருந்தது.

இருந்தபோதினும், சார்லட்வில் சம்பவங்களும் அதற்கு வெள்ளை மாளிகையின் விடையிறுப்பும், அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தால் ஒரு கூர்மையான எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். இரு கட்சிகளுக்கும் மற்றும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்திற்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய சுயாதீனமான இயக்கம் இல்லாமல் இருப்பது தான், அமெரிக்காவில் பாசிசவாதம் வளர்வதற்கான ஒரு நிஜமான அபாயமாக உள்ளது.

ட்ரம்பின் ஏதேச்சதிகார கண்ணோட்டம் மட்டுமல்ல, மாறாக அவர் ஆளுருவாக விளங்கும் நிதியியல் தன்னலக் குழுக்களும் ஆதரிக்கும் கண்ணோட்டமும் வெளிப்படுவது, ஆளும் வர்க்கத்தின் மையத்தில் நிலவும் அரசியல் நெருக்கடியிலிருந்து வருகிறது. ட்ரம்பின் மூலோபாய மற்றும் கொள்கை கலந்தாய்வு குழுவிலிருந்தும் (Strategic and Policy Forum) மற்றும் அவரது Manufacturing Council இல் இருந்தும் இராஜினாமா செய்யும் தலைமை செயலதிகாரிகளின் பட்டியல் அதிகரித்து வந்தமை, அவ்விரு குழுக்களையும் ஜனாதிபதி நேற்று மதியம் கலைக்க இட்டுச் சென்றது. ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னணி காங்கிரஸ் உறுப்பினர்கள், ஜனாதிபதியை மற்றும் அவர் கருத்துக்களைக் கண்டித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதிகள் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் மற்றும் ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ், அத்துடன் இராணுவ தலைமை தளபதி அலுவலகத்தின் நான்கு உறுப்பினர்களும் இனவாதத்தை எதிர்த்து அறிக்கைகள் வெளியிட்டனர்.

சித்திரவதை திட்டங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைப்பின் உளவுவேலைகளை நடைமுறைப்படுத்த உதவிய முன்னாள் சிஐஏ இயக்குனர் ஜோன் பிரென்னென், ட்ரம்பின் கருத்துக்களை ஒரு "தேசிய அவமதிப்பாகவும்", அது "நமது தேசிய பாதுகாப்பையும் நமது கூட்டு முன்பேர உடன்படிக்கைகளையும் படுமோசமான ஆபத்திற்கு" உட்படுத்தும் என்றும் குறிப்பிட்டார். 

ஆளும் வர்க்கத்தின் இந்த பிரதிநிதிகளது நடவடிக்கைகளும் அறிக்கைகளும், ட்ரம்பின் பாசிசவாத சிந்தனை போக்கு ஏதோ தெளிவாக ஸ்தாபிக்கப்படாததைப் போல! பாசாங்குத்தனம் மற்றும் மூடிமறைப்பின் ஒரு நடைமுறையை உள்ளடக்கி உள்ளன. பல செய்திகளின்படி, ட்ரம்ப் அவரது பாசிசவாத-சார்பு கண்ணோட்டங்களைப் பல சந்தர்ப்பங்களில் அவரின் உயர்மட்ட ஆலோசகர்களிடம் வெளிப்படுத்தி இருந்தார். இதன் அர்த்தம், வாஷிங்டன் முழுவதிலும் மற்றும் ஊடகங்களிலும் அவை குறித்து நன்கு தெரியும், ஆனால் அவர்கள் பொதுமக்களிடம் இருந்து அவற்றை மறைக்க முயன்றனர்.

புதனன்று நியூ யோர்க் டைம்ஸ் வலைத் தளத்தில், ("ட்ரம்ப் பாரம்பரியத்தை கைவிட்டு, ஒரு தார்மீக தரமுறைகளை அமைக்க மறுக்கிறார்” என்று தலைப்பிட்டு) பிரசுரிக்கப்பட்ட மார்க் லான்டரின் ஒரு கட்டுரை, ஆளும் வர்க்கத்தை உந்திக் கொண்டிருக்கும் நிஜமான கவலைகளை வரையறுக்கிறது. “ரூஸ்வெல்ட் இல் இருந்து ரீகன் வரையில் ஜனாதிபதிகள் எதை அவர்கள் வேலையின் ஒரு முக்கிய கடமையாக கருதினார்களோ, அதாவது தேசத்திற்கான ஒரு தார்மீக போக்கை அமைப்பதை" ட்ரம்ப் "அதை கைவிட்டுள்ளதாக" லான்டர் குறைகூறுகிறார்.

1989 இல் ரீகனின் விடைபெறும் உரை மற்றும் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களை தொடர்ந்து ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் காங்கிரஸிற்கு வழங்கிய உரை, மற்றும் "இதயத்தை உருக்கும் பொலிஸ் துப்பாக்கிச் சூடுகள் மற்றும் இனரீதியில் உந்தப்பட்ட படுகொலைகளின் பின்னர் அமெரிக்கர்கள் சிறப்பானதைச் செய்ய" பராக் ஒபாமாவின் அழைப்பு ஆகியவற்றை, லான்டர், முந்தைய ஜனாதிபதிகளால் அமைக்கப்பட்ட "தார்மீக தரமுறைகளுக்கு" எடுத்துக்காட்டுகளாக மேற்கோளிடுகிறார். மற்ற ஜனாதிபதிகளுக்கு "தார்மீக குறைபாடுகள்" இருந்த போதும், “இதுவரையில் எந்தவொரு ஜனாதிபதியும் தார்மீக தலைமையின் கருத்துருவை நிராகரித்ததில்லை,” என்று கூறி லான்டர் நிறைவு செய்கிறார்.

இக்கருத்தின்படி, அமெரிக்க சமூகத்தின் மற்றும் அரசியலின் அனைத்து பிரச்சினைகளும் ட்ரம்பினது தனிப்பட்ட தோல்விகளில் இருந்து வந்துள்ளன என்றாகிறது. இதை நியூ யோர்க் டைம்ஸ் அதன் புதன்கிழமை தலையங்கத்தில் சுருக்கமாக மற்றும் அருவருக்கத்தக்க வகையில் முன்வைக்கிறது: “பிரச்சினையின் மூலவேர், படையினர் கிடையாது; அது உயர்மட்டத்தில் இருக்கும் ஒரு நபராவார்.”

ஆனால், அவரது ஏமாற்றும் தனிப்பட்ட சகல தனிமனித பண்புகளைப் பொறுத்த வரையில், ட்ரம்ப், ஒரு நீண்ட அரசியல் பரிணாமத்தின் விளைவாக உள்ளார். கடந்த அரை-நூற்றாண்டு ஒரு மலைப்பூட்டும் அரசியல் வீழ்ச்சியினதும் சிதைவினதும் நிகழ்வுபோக்கைக் கண்டுள்ளது, இவை டைம்ஸ் மேற்கோளிடும் அந்த "தார்மீக வழிகாட்டிகளின்" மேற்பார்வையில் தான் நடந்தன.

உலகெங்கிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றகரமான நடவடிக்கைகள் அம்பலமானதற்கு இடையே, வாட்டர்கேட் மோசடிக்காக நிக்சன் பதவியில் இருந்து கீழிறக்கப்பட்டார். கார்டர் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க பினாமி போரைத் தொடங்கினார், அது அல் கொய்தா உருவாவதற்கு இட்டுச் சென்றது. வெள்ளை மாளிகையின் அடித்தளத்திலிருந்து செயல்படுத்தப்பட்ட ஒரு குளறுபடியான சட்டவிரோத மற்றும் இரகசிய போருக்கு நிக்கரகுவாவில் ரீகன் தலைமை தாங்கிய அதேவேளையில், அவர் ஒரு சமூக எதிர்புரட்சியையும் தொடங்கினார். ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ் பனாமா மீது படையெடுத்ததுடன், ஈராக் மீதான முதல் படையெடுப்பையும் நடத்தினார். கிளிண்டன் மீண்டும் மீண்டும் ஈராக் மீது குண்டுவீசியதுடன், ஆயிரக் கணக்கான ஈராக்கியர்கள் உயிரிழக்கும் வகையில் கடுமையான தடையாணைகளை திணித்தார். சேர்பியாவுக்கு எதிரான வான்வழி போருடன் இதை அவர் பின்தொடர்ந்தார். தேர்தலைக் களவாடி அதிகாரத்திற்கு வந்த ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்ட போர்களை தொடங்கியதுடன், கொள்கையின் ஒரு கருவியாக சித்திரவதையை அனுமதித்தார். “நம்பிக்கை" மற்றும் "மாற்றத்தின்" ஒரு வேட்பாளரான ஒபாமா, டிரோன் படுகொலைகள் மற்றும் உள்நாட்டு உளவுபார்ப்புக்களை அமைப்புமயப்படுத்திய அதேவேளையில், நூற்றுக் கணக்கான பில்லியன்களை வோல் ஸ்ட்ரீட் க்கு கைமாற்றினார்.

டைம்ஸூம் சரி அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகமும் சரி, மனித உரிமைகள் மற்றும் சகோதரத்துவ அன்பு குறித்த ஜனநாயக வாய்வீச்சுக்களைக் கொண்டு ஆளும் உயரடுக்கின் குற்றகரமான கொள்கைகளை மூடிமறைக்க விரும்புகின்றன.

ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு திருப்புமுனையாகும். பரந்த மக்கள் பிரிவுகளிடையே அதிகரித்து வரும் விரக்தி மற்றும் அன்னியப்படலுக்கு முறையிடும் ஒரு பாசிசவாத இயக்கத்தின் அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்கும் சட்டபூர்வமாக்குவதற்கும் அவர் முயன்று வருகிறார். ஆனால் நாஜி வன்முறையை அவர் பாதுகாப்பது வெறுமனே தனியொருவரின் பிற்போக்கான மற்றும் பின்தங்கிய கண்ணோட்டத்தை பிரதிபலிக்கவில்லை. ட்ரம்புடன் சேர்ந்து, அமெரிக்காவை நடத்துகின்ற நிதியியல் செல்வந்த தன்னலக் குழுவின் குற்றங்கள் அனைத்தும் உலகம் காணும் வகையில் அரசியல் வாழ்வின் மேற்புறத்திற்கு வந்துள்ளன.

தலைமை செயலதிகாரிகளும் மற்றும் பானன் போன்ற இராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகளும், ட்ரம்ப் எனும் கிருமிக்கு அரசியல் மாற்று மருந்து என்பதை போல, ஊடகங்கள் அவர்களின் கருத்துக்களை முன்வைக்கின்றன. உண்மையில், இராணுவம் மற்றும் உளவுத்துறை முகமைகள் முன்பினும் அதிகமாக அரசியலில் செல்வாக்கு செலுத்துகின்ற நிலையில், ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரில் இருந்து இதை நோக்கித்தான் ஜனநாயகக் கட்சியினர் அவர்களின் ஒட்டுமொத்த முறையீட்டையும் திருப்பி உள்ளனர் என்கின்ற நிலையில், இது அமெரிக்க ஜனநாயக முறிவின் மற்றொரு வடிவமாகும். இது அதே நோயின் இன்னொரு அறிகுறியாக உள்ளது.

ட்ரம்புக்கு எதிரான போராட்டம், மாளிகை ஆட்சிக்கவிழ்ப்பு சதி திட்டங்கள் மூலமாக அல்ல, தொழிலாள வர்க்கத்தின் ஒரு இயக்கத்தின் மூலமாக, அடியிலிருந்து அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

தொழிலாள வர்க்கம் அதன் சொந்த சோசலிச மற்றும் புரட்சிகர வேலைத்திட்டத்துடன் தலையீடு செய்ய வேண்டும். ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான போராட்டத்தை, ஆளும் வர்க்கத்தின் வேறெந்தவொரு கன்னைக்கும் அடிபணிய செய்ய அது அனுமதிக்க கூடாது. ஏதேச்சதிகாரம் மற்றும் பாசிசவாதத்திற்கு எதிரான எதிர்ப்பானது, போர், சமூக சமத்துவமின்மை, வேலைவாய்ப்பின்மை, வறுமை மற்றும், மருத்துவ கவனிப்பு பொதுக் கல்வி மீதான தாக்குதலுக்கு எதிரான எதிர்ப்புடன் இணைக்க வேண்டும். நிதியியல் தன்னலக் குழுவின் பாரிய செல்வம் கைப்பற்றப்பட வேண்டும் என்பதுடன், சமூக மற்றும் பொருளாதார வாழ்வின் மீது சர்வாதிகாரம் செலுத்தும் மிகப்பெரும் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களும் பொது பயன்பாட்டிற்கென திருப்பிவிடப்பட வேண்டும்.

போர் தொடுக்க மற்றும் சர்வாதிகாரத்தை திணிக்க திட்டமிடலை செய்யும், செல்வந்த உயரடுக்குகள் மற்றும் தளபதிகளின் இந்த நோய்பீடித்த அரசாங்கத்தை, தொழிலாளர்களின் ஒரு உண்மையான ஜனநாயக அரசாங்கத்தைக் கொண்டு பிரதியீடு செய்யப்பட வேண்டும்.