ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Spain suspends Catalan independence law, escalating conflict with separatists

ஸ்பெயின், கட்டலான் சுதந்திர சட்டங்களை இடைநிறுத்தி, பிரிவினைவாதிகளுடனான மோதலை தீவிரப்படுத்துகிறது

By Alejandro Lopez
15 September 2017

கடந்த வெள்ளியன்று கட்டலோனிய பிராந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றிய சுதந்திரத்திற்கான சட்டத்திற்கு "நிலைமாறுவதன்" மீது ஸ்பெயினின் அரசியலமைப்பு நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இது, கட்டலோனிய தேசிய தினமான கடந்த திங்கட்கிழமை சுமார் 1 மில்லயன் பேர் பார்சிலோனாவில் பேரணி நடத்திய பின்னர், அக்டோபர் 1 இல் திட்டமிடப்பட்டுள்ள கட்டலான் சுதந்திர வாக்கெடுப்பிற்கு மூன்று வாரங்களுக்கும் குறைவான நாட்களே இருக்கையில் வந்துள்ளது.

கட்டலான் ஐரோப்பிய ஜனநாயகக் கட்சி (PdeCAT) ஆல் உருவாக்கப்பட்ட ஆம் வாக்குகளுக்காக இணைவோம் (Together for Yes) கூட்டணி, கட்டலோனிய இடது குடியரசு (ERC) மற்றும் மக்கள் ஒற்றுமையின் வேட்பாளர்கள் (Candidaturas de Unidad Popular - CUP) என இந்த நிலைமாற்றும் சட்டமானது கட்டலான் நாடாளுமன்றத்தில் உள்ள முதலாளித்துவ பிரிவினைவாத கட்சிகளால் நிறைவேற்றப்பட்டது. சர்வஜன வாக்கெடுப்பில் "ஆம்" வாக்குகள் வந்தால், சுதந்திர பிரகடனத்திற்குப் பின்னர் ஓர் அரசியலமைப்பு சட்டத்திற்கான அடித்தளத்தை அது அமைக்கும்.

கட்டலான் சுதந்திரத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பாலும் மற்றும் அதை தடுப்பதற்கான மாட்ரிட்டின் சட்டபூர்வ மற்றும் பொலிஸ் நடவடிக்கைகளாலும், 1978 க்குப் பின்னர் நாடாளுமன்ற ஜனநாயகமாக மாற்றப்பட்டத்திலிருந்து உருவான ஸ்பெயின் அரசு அமைப்புமுறையில் ஓர் ஆழ்ந்த நெருக்கடி வெடித்துள்ளது. இது, கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு வாக்களிக்கப்பட்டதில் எடுத்துக்காட்டப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உடைவுக்கு எண்ணெய் வார்க்கிறது. 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர் ஐரோப்பா எங்கிலும் ஆழ்ந்த சிக்கன நடவடிக்கைகள் மற்றும் பாரிய வேலைவாய்ப்பின்மையின் ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், ஸ்பெயினின் ஆளும் வர்க்கம் மூர்க்கமாக பிளவுபட்டுள்ளது.

1978 க்கு முந்தைய பிரான்சிஸ்கோ பிராங்கோவின் (Francisco Franco) பாசிசவாத ஆட்சி வரையில் அதன் நீண்ட அரசியல் மரபியத்தைக் கொண்டுள்ள, பிரதம மந்திரி மானுவல் ரஹோய் இன் மக்கள் கட்சி (Partido Popular - PP), கட்டலான் தேசியவாதிகளுடன் ஒரு கடுமையான நிலைப்பாட்டை எடுக்க தீர்மானகரமாக உள்ளது. கட்டலோனியாவில் உள்ள சிக்கனத் திட்டத்திற்கு ஆதரவான அரசாங்கங்கள் வழி நடத்தும் அல்லது அரசியலமைப்புரீதியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் ஆதரிக்கும், ஆம் வாக்குகளுக்காக இணைவோம் கூட்டணியின் வர்க்க குணாம்சத்தை பற்றி மக்கள் கட்சிக்கு எந்தவித பிரமையும் கிடையாது.

எவ்வாறிருப்பினும் ஐரோப்பா எங்கிலும் தீவிரமடைந்து வரும் சமூக கோபத்திற்கு மத்தியில், மக்கள் கட்சியோ, 1936-39 ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தின் போது பிராங்கோ எதிர்ப்பின் மையமாக விளங்கிய ஒரு பிராந்தியத்தில், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் எதிர்ப்பை தூண்டிவிடக்கூடிய எந்தவொரு கவனக்குறைவான நடவடிக்கையையும் ஒரு மிகப்பெரும் அச்சுறுத்தலாக பார்க்கிறது. கட்டலான் பிரிவினைவாதிகளுடன் ஒரு தீர்வுக்குப் பேரம்பேச வேண்டுமென்ற சர்வதேச பத்திரிகைகள் மற்றும் ஸ்பானிய ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளிடம் இருந்து வரும் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும், மக்கள் கட்சியானது ஆக்ரோஷமான நடவடிக்கைகளைக் கொண்டு அழுத்தமளிக்கின்ற நிலையில், இது அரசு எந்திரத்திற்குள் ஆயுத மோதல்களைத் தூண்டிவிட அச்சுறுத்துகின்றது.

மக்கள் கட்சியின் பிரிவுகள் இப்போது அரசியலமைப்பின் 155 வது ஷரத்தைக் கையிலெடுக்க முன்மொழிகின்றன, அது கட்டலான் அரசாங்கத்தை இடைநீக்கம் செய்து, மாட்ரிட்டின் நேரடி ஆட்சியை திணிக்கும். செவ்வாயன்று, மக்கள் கட்சி நாடாளுமன்ற குழு செய்தி தொடர்பாளர் Rafael Hernando சுட்டிக்காட்டுகையில், ஷரத்து 155 “எப்போதும் மேசையில் வைக்கப்பட்டுள்ள ஓர் அரசியலமைப்பு வழிவகையாகும்,” என்றார். நீதித்துறை அமைச்சர் Rafael Catalá, “அது பயன்படுத்தத்தக்க ஒரு கருவி தான்,” என்றார்.

அரசு தலைமை வழக்கறிஞர் José Manuel Maza சர்வஜன வாக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ள 712 நகர முதல்வர்களை விசாரிக்குமாறு கட்டலான் மாகாண நான்கு தலைமை வழக்குத்தொடுனர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இது கட்டலோனியாவின் மொத்த நகர முதல்வர்களில் முக்கால்வாசி எண்ணிக்கையாகும். அவர்கள் வழக்குத்தொடுனர்களின் அலுவலகத்திற்கு சுயமாக தாமே வராவிட்டால், அவர்களைக் கைது செய்ய பொலிஸிற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக Maza எச்சரித்தார். மக்கள் ஒற்றுமையின் வேட்பாளர்கள் (CUP) நீதிமன்றத்தை புறக்கணிக்குமாறு அதன் நகர முதல்வர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

"வாக்குப்பெட்டிகள், அச்சடிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் கணினி சாதனங்கள்" என இந்த "சட்டவிரோத சுய-நிர்ணய சர்வஜன வாக்கெடுப்பை" நடத்துவதற்கோ அல்லது அதற்கான தயாரிப்பு செய்வதற்கோ உதவும் எந்த பொருளையும் பறிமுதல் செய்யுமாறு அரசு வழக்கறிஞர்கள் தேசிய பொலிஸ், துணை இராணுவ ஊர்க்காவல் படைகள் மற்றும் கட்டலான் பிராந்திய பொலிஸ் ஆகியவற்றிற்கு உத்தரவிட்டுள்ளனர்.

இந்த சர்வஜன வாக்கெடுப்புக்கு ஆதரவான கூட்டங்களும் இலக்கில் வைக்கப்பட்டுள்ளன, செப்டம்பர் 17 இல் மாட்ரிட்டில் "முடிவெடுக்கும் உரிமையை ஆதரிக்கும் மாட்ரிட் குடிவாசிகள்" (Madrileños por el Derecho a Decidir) அமைப்பால் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு கூட்டமும் அதில் உள்ளடங்கும், அதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு நீதிமன்றத்தின் தீர்மானங்கள் மற்றும் அரசியலமைப்பிற்கு பகிரங்கமாகவே எதிராக உள்ள ஒரு நிகழ்வை நகராட்சிக்குள் நடத்துவது சாத்தியமில்லை, ஏற்கனவே கூறப்பட்டுள்ளதைப் போல, சட்டத்தை பேணுவது கடமையாகும்,” என்று அதற்குரிய நீதிபதி கூறினார்.

மாட்ரிட்டின் அச்சுறுத்தல்களுக்கு இடையிலும், கட்டலான் பிரிவினைவாதிகள் சர்வஜன வாக்கெடுப்புக்கு அழுத்தமளித்து வருகின்றனர், இது விரைவிலேயே கட்டுப்பாட்டை இழந்துவிடக்கூடிய ஒரு மோதலில் ஸ்பானிய மற்றும் கட்டலான் முதலாளித்துவ வர்க்கத்தினது ஒரு மோதல் போக்கிற்கு களம் அமைத்து வருகிறது.

பிரதமர் Carles Puigdemont (PDeCAT) இன் கீழ் கட்டலான் பிராந்திய அரசாங்கம் பின்வாங்க மறுக்கிறது, “நீதிமன்ற வழக்குகள் மற்றும் அச்சுறுத்தல்களை முகங்கொடுத்தாலும்" சர்வஜன வாக்கெடுப்பை நடத்த "முன்பினும் அதிக தீர்மானகரமாக உள்ளதாக” அது குறிப்பிடுகிறது. “ஹலோ புதிய நாடு", “ஹலோ குடியரசு", “ஹலோ ஐரோப்பா", “ஹலோ உலகம்" என்ற கோஷங்களின் கீழ் வியாழனன்று இரவு பிரச்சாரம் தொடங்கப்பட்டது. பிரச்சார நடவடிக்கைகளின் போது பிராந்திய நாடாளுமன்றத்தை இடைநிறுத்துமாறு சபாநாயகர் Carme Forcadell (ERC) க்கு பிரிவினைவாத கட்சிகள் மனு அனுப்பியுள்ளன.

மாட்ரிட்டுக்கும் பார்சிலோனாவிற்கும் இடையிலான மோதல் ஒரு நெருக்கடியை தூண்டிவிட்டு, அது விரைவாக ஸ்பெயின் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சூழுமோ என ஸ்பெனியிலும் சர்வதேச அளவிலும் ஆளும் வர்க்கத்திடையே கவலை அதிகரித்து வருகிறது. ரஹோயின் மக்கள் கட்சி கட்டலான் தேசியவாதிகளுடன் ஒரு உடன்படிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டுமென வாதிட்டு, பலரும் மக்கள் கட்சி பிரதம மந்திரி ரஹோயின் விட்டுக்கொடுப்பற்ற பிடிவாதத்தை குறைகூறி வருகின்றனர்.

ஸ்பானிய முதலாளிகளின் அமைப்பான CEOE எச்சரிக்கையில், சட்டத்தின் ஆட்சி மற்றும் “சகல நடவடிக்கைகளை” அது ஆதரிக்கின்ற அதேவேளையில், அரசாங்கம் அதை அமுல்படுத்த வேண்டியுள்ளது, ஸ்பெயினின் “சமூக நல்லிணக்கம் மற்றும் பொருளாதார செல்வவளம்" ஆகியவையே பணயத்தில் உள்ளன. "சாத்தியமான அளவுக்கு மிக உடனடியாக" இந்நெருக்கடிக்கான ஓர் அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டுமென CEOE அறிவித்தது.

பைனான்சியல் டைம்ஸ், “கட்டலான் சமரசத்திற்கான நேரம் கடந்து கொண்டிருக்கிறது" என்ற தலைப்பின் கீழ், ரஹோய் "வளைந்து கொடுக்கும் தன்மையில்லாமல்" இருப்பதாக குற்றஞ்சாட்டியதுடன், ஸ்பானிய அரசாங்கம் இந்த சர்வஜன வாக்கெடுப்பை, "பிரிவினையை நசுக்குவதை விட தீர்ப்பதற்கான ஓர் அரசியல் பிரச்சினையாக" பார்க்க வேண்டுமென அழைப்புவிடுத்தது. அது "சட்டவிரோத வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுக்களை பறிமுதல் செய்வதற்காக ஸ்பானிய பாதுகாப்பு படைகள் முயலும்" காட்சியை, கட்டலான் தேசியவாதிகளின் "குடியுரிமை போராட்டத்திற்கான அலங்காரமாக" ஒப்பிட்டு, அந்த "அருவருக்கத்தக்க" காட்சி மீதான அதன் விருப்பமின்மையை வெளிப்படுத்தியது.

அந்த சர்வஜன வாக்கெடுப்பு தொழிலாளர்கள் மத்தியில் பரந்தளவில் விரும்பத்தக்கதாக இல்லை. பல கருத்துக்கணிப்புகளும் சர்வஜன வாக்கெடுப்புக்கு எதிரான மாட்ரிட்டின் ஒடுக்குமுறைக்கு எதிர்ப்பைக் காட்டுகின்றன என்றாலும், இதில் 70 சதவீத ஸ்பெயின் மக்கள் அந்த வாக்கெடுப்பு நடக்க வேண்டுமென விரும்புகின்றார்கள் என்றாலும், கட்டலோனிய பிரிவினைக்கான ஆதரவோ 30 இல் இருந்து 40 சதவீதத்திற்குள் மிகக் குறைவாகவே உள்ளது. இருப்பினும், மாட்ரிட்டின் ஒடுக்குமுறை மீதான மக்கள் கோபத்தின் காரணமாக, கட்டாலோனியா பிரிவினைக்கான ஆதரவு அதிகரித்து வருவதாக தெரிகிறது.

மாட்ரிட்டில் உள்ள ஆளும் உயரடுக்கு மற்றும் கட்டலோனியாவில் உள்ள முதலாளித்துவ பிரிவினைவாதிகள் ஆகிய இரண்டுக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் தலையீடு தான் இந்த வெடிப்பார்ந்த நிலைமையில் இருக்கும் முக்கிய பிரச்சினையாகும். கட்டாலோனியாவில் ஒரு புதிய முதலாளித்துவ அரசு உதயமாவதால் ஏற்படும் ஸ்பானிய பிரிவினையோ, அல்லது மாட்ரிட்டை மையமாக கொண்ட ஒடுக்குமுறை பொலிஸ் எந்திரத்தின் வளர்ச்சியோ, தொழிலாளர்களுக்கு எதையும் வழங்கப் போவதில்லை.

குட்டி முதலாளித்துவ "இடது" சக்திகளோ, சிக்கன நடவடிக்கை சார்பான மற்றும் நேட்டோ சார்பான கட்சிகள் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தின் தலைமையிலான ஒரு சர்வஜன வாக்கெடுப்பை ஒரு தீவிர முன்னோக்கிய படியாக ஊக்குவிப்பதற்காக கணிசமான ஆதாரவளங்களை அர்ப்பணித்துள்ளன. பப்லோவாத முதலாளித்துவ-எதிர்ப்புவாதிகள் அந்த சர்வஜன வாக்கெடுப்பை ஒரு "அரசியல் புரட்சியாக" வர்ணித்துள்ளன, அவர்களின் தலைவர் Jaime Pastor கருத்துப்படி, அது "ஸ்பெயின் ஆட்சியின் சர்வாதிகார போக்குகளை நிறுத்துவதற்கு உதவும் வகையில், ஸ்பெயினை ஜனநாயகமயப்படுத்துமாம்.”

இதைவிட உண்மைக்குப் புறம்பானது வேறெதுவும் இருக்காது. சிக்கன நடவடிக்கைகளுக்கு கட்டலான் பிரிவினைவாதிகளின் ஆதரவு, அத்தோடு மத்திய கிழக்கில் கட்டவிழ்ந்து வரும் ஏகாதிபத்திய போர் அல்லது உண்மையில் அவர்களது பிராந்திய எல்லைகளுக்கு வெளியே நடக்கும் எதுவொன்றின் மீதும் அவர்கள் காட்டும் அலட்சியம் ஆகியவை, மாட்ரிட்டின் கொள்கைகள் எந்தளவுக்கு பிற்போக்குத்தனமானதோ அதேமாதிரியானதாகவே கட்டலான் பிரிவினைவாதிகளின் கொள்கைகளும் பிற்போக்குத்தனமாக இருக்கும்.

பிரிவினைவாதிகள், கட்டலான் ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளுக்காக பேசுகிறார்கள், ஸ்பெயின் மக்கள்தொகையில் 16 சதவீதமே கட்டாலோனிய கணக்கில் வருகிறது என்றாலும், அது பொருளாதார உற்பத்தியில் ஐந்தில் ஒரு பாகத்தையும் ஸ்பெயின் ஏற்றுமதிகளில் ஒரு கால்வாசியையும் கணக்கில் கொண்டுள்ளதன் மீது நனவுபூர்வமாக உள்ள பிரிவினைவாதிகள், இலாபங்களில் பெரும் பங்கை கோரி வருகின்றனர். ஸ்பெயினின் ஏனைய வறிய பிரதேசங்களுக்கான சமூக செலவுகளுக்கு அவர்களின் வரியிலிருந்து நிதி வழங்குவதற்காக கோபமுற்றுள்ள பிரிவினைவாதிகள், அவர்களது பிராந்தியம் சுயஅதிகாரமோ அல்லது சுதந்திரமோ அடைந்தால், கட்டாலோனியாவின் செல்வவளத்தைப் பயன்படுத்தி, உலக சந்தையில் அவர்களுக்கான பேரங்களை இன்னும் சிறப்பாக பெற முடியுமென நம்புகின்றனர். பிரிவினைவாதிகள் தொழிலாள வர்க்கத்திற்கு மிகவும் விரோதமானர்கள் என்பதை அவர்களே நிரூபித்துள்ளனர்.