ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan power workers on strike

இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்

By W.A. Sunil
19 September 2017

இலங்கையில் அரசாங்கத்தின் அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல் பிரச்சாரங்களின் மத்தியிலும், 22,000 இலங்கை மின்சார சபை (இ.மி.ச.) தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தினை தொடர்கின்றனர். வேலை நிறுத்தங்கள் கடந்த புதன்கிழமை ஆரம்பமானது. இது தீவின் பல பிரதேசங்களில் மின் விநியோகத்தில் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது.

அரசாங்கம் 10 முதல் 13 வீதம் வரை சம்பள உயர்வு தருவதாக கொடுத்த வாக்குறுதியை மீறியதை அடுத்து தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களும் வேலை நிறுத்தத்தில் இறங்கப்போவதாக அச்சுறுத்தினர். இன்று ஆரம்பிக்கும் எதிர்ப்பு வேலைநிறுத்தம் இரண்டு நாட்களுக்கு தொடரும் என அந்த தொழிற்சங்கங்கள் அறிவித்தன, பின்னர், நடவடிக்கையை தொடர்வதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என கூறின.

இ.மி.ச. இணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு (JTUA) என்ற ஒரு தொழிற்சங்க கூட்டே மின்சார சபை ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. எதிர்கட்சியாக உள்ள மக்கள் விடுதலை முன்னணி (JVP) இனால் கட்டுப்படுத்தப்படும் இலங்கை மின்சார ஊழியர் சங்கம் (CEEU), அதேபோல், ஆளும் கூட்டணியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) சார்ந்த ஸ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்கம் (SLNSS), தேசிய ஊழியர் சங்கம் (JSS) என்பன இந்தக் கூட்டமைப்பில் உள்ளடங்குகின்றன.

ஊதிய வேறுபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் வேலைநிறுத்த போராட்டத்தினை மட்டுப்படுத்தவே தொழிற்சங்கங்கள் முயற்சித்தன. எவ்வாறாயினும், இந்த வேலைநிறுத்தங்கள், சமூக நிலமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் வளர்ந்து வரும் கோபத்தின் ஒரு வெளிப்பாடாகும்.

தேசிய தொழிற்பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களை சுரண்டுதல் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எதிரான ஒடுக்குமுறைச் சட்டங்களை நிறுத்துதல், அத்தோடு, தொழில்நுட்ப ஊழியர்களுக்கான ஆபத்துக் கொடுப்பனவுகளை வழங்குதல் ஆகியவை மற்றைய கோரிக்கைகளாகும்.

இ.மி.ச. தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியில் 5 மில்லியன் ரூபா “காணாமல் ஆக்கப்பட்டு” அது திறைசேரி நிதியில் முதலீடு செய்யப்பட்டதாக கூறப்படுவது பற்றி விசாரணை நடத்துமாறும் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.

இ.மி.ச. உயர் அதிகாரிகள் மற்றும் பொறியியலாளர்கள் பாரிய அளவில் சம்பளத்தை அதிகரித்துக்கொண்டிருப்பதற்காக தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்குள் தொழிலாளர்கள் மத்தியிலான சீற்றத்தை திசை திருப்புவதற்கு தொழிற்சங்கங்கள் முயற்சி செய்கின்றன.

JTUA கூறுவதன் படி, நிர்வாகப் பதவி வகிப்போருக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்ட காரணத்தால், கீழ்மட்ட தரத்தில் உள்ளவர்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான சம்பள ஏற்றத்தாழ்வுகள் 1:9 என்னும் விகித அடிப்படையில் விரிவடைந்துள்ளது. முன்னைய 1:6 என்ற விகிதத்துக்கு அதை குறைக்குமாறு தொழிற்சங்கள் கோரிக்கை விடுக்கின்றன.

செலவுகளைப் குறைப்பதற்காக, இ.மி.ச. நூற்றுக்கணக்கான தேசிய தொழிற்பயிற்சி அதிகாரசபை பயிற்சியாளர்களையும் ஒப்பந்த தொழிலாளர்களையும் வேலைக்கு அமர்த்தியுள்ளது. நாளொன்றுக்கு 750 மற்றும் 1,000 ரூபாய் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது. JTUA இந்தச் சுரண்டலுக்கு எதிரானதாக காட்டிக் கொண்டாலும், அவர்களை நிரந்தரமாக்கி சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கவில்லை.

இந்த வேலைநிறுத்தம் பரந்த தொழிலாள வர்க்க இயக்கமொன்றின் மைய புள்ளியாக ஆகிவிடும் என்று அரசாங்கம் பீதியடைந்த நிலையில், இராணுவம் தலையிடுவதற்கு தயார்நிலையை வெளிப்படுத்தியிருந்தது.

ஞாயிறன்று, இராணுவப் பேச்சாளர் ரொஷான் செனவிரட்ன ஊடகங்களிடம் பேசும்போது, வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, பாதுகாப்புப் படைகள் இ.மி.ச.வை இயக்குவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன, என்றார். ஜூலையில் அரசாங்கம் அத்தியாவசிய சேவைகள் சட்டத்தினை அமுல்படுத்தியது. இது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன (CPC) தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தினை தகர்ப்பதற்கு இராணுவத்தை பயன்படுத்துவதற்கான சாக்குப் போக்காக பயன்படுத்தப்பட்டது.

வேலைநிறுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவரும் நோக்குடன் தொழிற்சங்க தலைவர்கள் அரசாங்கத்துடன் பின்கதவு வழியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இ.மி.ச. அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை “தோல்வியில்” முடிந்த பின்னர், CEEU பொதுச் செயலாளரும் ஜே.வி.பி. தலைவர்களில் ஒருவருமான ரஞ்சன் ஜெயலால் தலமையில், JTUA கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தொழில் அமைச்சர் W.D.J செனவிரட்ணவுடன் ஒரு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. சட்ட மற்றும் அமுலாக்கல் அமைச்சர் சாகல ரத்நாயக்கவை சந்தித்த JSS தொழிற்சங்கத்தின் தலைவர்கள், இந்த விடயத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தலையீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.

இந்த தொழிற்சங்கங்களின் கேவலமான நடவடிக்கைகள், தொழிலாளர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் மிரட்டல்களுக்கு மத்தியிலேயே இடம்பெறுகின்றன. வேலைநிறுத்தத்திற்கு முன்னர், இ.மி.ச. அதிகாரிகள் முழுத் தொழிலாளர்களதும் விடுமுறைகளை இரத்துச் செய்திருந்தனர். கடந்த வியாழன், தற்காலிக மற்றும் தகுதிகாண் தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்குத் திரும்ப வேண்டும் என கோரிய அரசாங்கம், இல்லாவிட்டால் அனைவரும் “தாங்களாகவே பதவி விலகியவர்களாக கருதப்படுவார்கள்,” என அச்சுறுத்தியது.

சமூக நிலமைகளின் மீது அரசாங்கத்தின் தாக்குதலுக்கு எதிராக, தங்களின் அங்கத்தவர்கள் மத்தியில் எதிர்ப்பு வளர்ந்துவந்த நிலையிலேயே JTUA வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கத் தள்ளப்பட்டது. எவ்வாறாயினும், தொழிலாளர்களை பாதுகாப்பதற்காக ஒரு நேர்மையான வேலைநிறுத்தத்தினை ஏற்பாடு செய்வது தொழிற்சங்கங்களின் இலக்கு அல்ல, மாறாக சீற்றத்தினை தணிப்பதும் குவிந்துவரும் எதிப்பினைத் திசைதிருப்புவதுமே இதன் இலக்காகும்.

2015ல் இருந்தே, இதே கோரிக்கைகளை வைத்து JTUA தொடச்சியான பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. ஒவ்வொரு போராட்ட நேரத்திலும், எதுவித மேலதிகமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் நிறுத்திவைப்பதற்கு, அரசாங்கத்தின் போலி வாக்குறுதிகளைப் பயன்படுத்திக் கொண்டது.

உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய இ.மி.ச. தொழிலாளர்கள், தமது வேலை நிலமைகள் சரிவடைந்து செல்வதை வெளிப்படுத்தினார்கள்.

சிலாபத்தினைச் சேர்ந்த ஒரு தொழில்நுட்ப ஊழியர்: “எனது மாதாந்த சம்பளம் 50,000 ரூபாய் [$US326]. எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள். அவர்கள் இன்னமும் பாடசாலைக்கு போய்க்கொண்டிருக்கின்றார்கள். வாழ்க்கைச் செலவுகள் உயர்ந்து சென்று கொண்டிருக்கும் நிலையில், எனது குடும்பத்தினை கொண்டு நடத்த முடியாமல் உள்ளது.

“நான் ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கத்தவராக உள்ளேன். இறுதி தேர்தலின் போது இந்த அரசாங்கத்துக்கே வாக்களித்தேன். ஆனால் முன்னைய இராஜபக்ஷ அரசாங்கத்தினைவிட எந்தவிதமான வேறுபாடும் கிடையாது. இ.மி.ச.வின் இன்றைய பிரச்சினைக்கு அவர்களில் எல்லோருமே பொறுப்பாகும். மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தினை தனியார்துறைக்கு கைமாற்றுவதற்கு அவர்கள் எல்லோரும் உடந்தையாக இருந்தார்கள்.”

மாத்தறை, வெலிகம பிரதேசத்தினைச் சேர்ந்த ஒரு பராமரிப்புத் தொழிலாளி, “நாங்கள், வெவ்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்துக்காக ஐக்கியப்பட்டு தொடர்ச்சியாகப் போராடிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் எங்களுடைய கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்கும் என்ற நம்பிக்கை எனக்கு கிடையாது,” என்றார்.

இ.மி.ச கொழும்பு அலுவலகத்திற்கு வெளியே தொழிற்சங்கத் தலைவர்கள் அழைப்பு விடுத்த மத வழிபாட்டு நிகழ்வு

தொழிலாள வர்க்கத்தின் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் தோன்றுவதைத் தடுப்பதற்காக, தொழிற்சங்கங்கள் மத ரீதியான அதிஸ்ட்டங்களை ஊக்குவிக்கின்றன. இது ஒரு திசைதிருப்பலாகும். செப்டம்பர் 13, இ.மி.ச. கொழும்பு தலைமை அலுவலகத்துக்கு வெளியில், தொழிற்சங்கங்கள் தேங்காய் உடைக்கும் நிகழ்வு ஒன்றினை ஒழுங்கு செய்ததுடன், தொழிலாளர்கள் கடவுளை வழிபட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

தொழிற்சங்க தலைவர்கள், சிரேஷ்ட பௌத்த தலைவர்களைச் சந்திக்க வேண்டும் என ரஞ்சன் ஜெயலால் கூறினார். தொழிலாளர் தங்களின் கிராமங்களில் உள்ள பௌத்த பிக்குகளை சந்தித்து அங்குள்ள இ.மி.ச. அலுவலக்கங்களுக்கு அருகில் எதிர்ப்பினை ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர் தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஆர்ப்பாட்டங்கள் மூலம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்ற மோசடியுடன் சேர்த்து, சமய வழிபாடுகளை ஊக்குவித்தல் மற்றும் இனவாத பிரிவுகளை ஏற்படுத்துதல் போன்ற இந்த நடவடிக்கைகள் யாவும் தொழிற்சங்கங்களின் முழு வங்குரோத்தினை வெளிக்காட்டுகின்றன.

உண்மையில், தனியார் மயப்படுத்துதல் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்வது உட்பட இ,மி.ச. தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் அனைத்தும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உத்தரவுக்கு அமைவாக மேற்கொள்ளப்படும், பரந்த சிக்கன நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பாகமாகும். இ.மி.ச., சி.பி.சி., நீர்ப்பாசன வடிகாலமைப்புச் சபை மற்றும் துறைமுகத்தின் மீதான கடன்கள் பொருளாதாரத்தில் ஒரு சுமை என கூறிக்கொண்டு, அவை முழுவதையும் வனிகமயப்படுத்த வேண்டும் என IMF கூறிவருகின்றது.

அண்மையில் வெளியான ஒரு அறிக்கையின்படி, 2017 முதல் நான்கு மாதங்களில், இ.மி.ச. 16.6 பில்லியன் ரூபாய் நட்டத்துடன் இயங்கியுள்ளது. கடந்த வருடம் இதே தவணையில், இது 197 வீதம் அதிகரித்திருந்தது. இந்த நட்டங்களைக் குறைப்பதற்காக, வாடிக்கையாளர்களின் விலை மற்றும் சேவைக் கட்டணங்களை அதிகரிக்குமாறு நாணய நிதியம் கோரிக்கை விடுத்தது. இது தொழிலாள வர்க்கம் முகம் கொடுக்கும் சமூக நெருக்கடிகளை இன்னும் ஆழப்படுத்தும்.

இ.மி.ச.வை பகுதியாக தனியார் மயப்படுத்தும் திட்டம் 1990ல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2009ல், மின்சக்தி உற்பத்தி மற்றும் விநியோகத்தை வெளியாருக்கு ஒப்படைக்கும் மசோதா ஒன்றை இராஜபக்ஷ அரசாங்கம் நிறைவேற்றியது. இது தொழிலாளர்களின் பரந்த எதிர்புக்களை உருவாக்கிவிட்டிருந்தது. மட்டுப்படுத்தப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் திவாலாகிப்போன எதிர்ப்பு நடவடிக்கைக்குள் எதிர்ப்புக்களை திசைதிருப்பி விடுவதற்கு தொழிற்சங்கங்கள் வேலை செய்கின்றன. அவர்கள் ஒருபோதும், தனியார் மயப்படுத்தலுக்கு எதிரான போராட்டத்துக்கு அழைப்பு விடப்போவதில்லை.

இ.மி.ச. உட்பட “அரசுடமை நிறுவனங்களை மறுசீரமைப்பதை தாமதிப்பதானது” நாடு முகம் கொடுக்கும் பெரிய “ஆபத்தாக” இருந்தது என, யூலை 27 சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட இலங்கை சம்பந்தமான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் தனியார்மயப்படுத்தல் தொழில்கள், வேலை நிலைமைகள் மற்றும் சம்பளத்தை குறைப்பதன் மூலம், அரசாங்கம் இந்த “ஆபத்தில்” இருந்து வெளியேற தவிர்க்க முடியாமல் முயற்சிக்கும்.