ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French President Macron unveils decrees to destroy Labour Code

பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் தொழிற்சட்டத்தை அழிக்க உத்தரவாணைகளை வெளியிடுகிறார்

By Anthony Torres
1 September 2017

பிரான்சின் பிரதம மந்திரி எடுவார்ட் பிலிப் உம் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முரியேல் பெனிக்கோவும் நேற்று நாட்டின் தொழிற்சட்டத்தை கிழித்தெறியும் நோக்கில் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் உத்தரவாணைகளை வெளியிட்டனர். பெரும்பான்மையான பிரெஞ்சு மக்களின் எதிர்ப்பை நசுக்கி, சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கம் அதன் தொழிற்சட்டத்தை கொண்டு வந்து ஓராண்டுக்குப் பின்னர், மக்ரோன், பாரிய போராட்டங்களுக்கு முன்னால் சோசலிஸ்ட் கட்சி கைவிட முடிவெடுத்திருந்த மக்கள்விரோத நடவடிக்கைகள் அனைத்தையும் அச்சட்டத்திற்குள் தன்னிச்சையாக மீளமர்த்தி வருகிறார்.

மக்ரோனின் அரசாங்கம், வணிக கூட்டமைப்புகள், மற்றும் தொழிற்சங்கங்களால் பேரம்பேசப்பட்ட, இந்த உத்தரவாணைகள், தொழிலாளர்களிடையே பரந்த எதிர்ப்பைத் தூண்டி வருகின்றன. Way poll கருத்துக்கணிப்பின்படி, பிரெஞ்சு மக்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானவர்கள் அவர்களின் கூலிகள் மற்றும் சலுகைகளைக் குறைக்க தனித்தனி நிறுவனங்கள் மட்டத்தில் ஒப்பந்தங்களை பேரம்பேசுவதற்கான பெரும் சுதந்திரத்தைப் பயன்படுத்தி, அவர்களது முதலாளிமார்கள் இந்த உத்தரவாணைகளைச் சாதகமாக்கி சுரண்டுவார்களென கருதுகின்றனர். ஐந்தில் நான்கு பேர் மக்ரோனின் உத்தரவாணைகளுக்கு எதிராக சமூக போராட்டங்களை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கின்றனர்.

பிரான்ஸ் மற்றும் சர்வதேச அளவில் ஆளும் உயரடுக்கு உத்தரவாணைகளுக்கு எதிரான மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சுகின்றது என்றாலும், அவர்கள் இருபதாம் நூற்றாண்டில் பல தலைமுறை தொழிலாளர்களின் போராட்டத்தில் வென்றெடுத்த சமூக உரிமைகளை அழிப்பதில் இதுவொரு முக்கிய படியாக கருதுகின்றனர். ஜேர்மனியில் சமூக ஜனநாயகவாதிகளின் ஹார்ட்ஸ் சட்டங்கள், அல்லது 2008 பூகோள நெருக்கடிக்குப் பின்னர் கிரீஸில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகள் மூலமாக ஆளும் வர்க்கம் எதை திணித்ததோ அதை திணிக்க முடியுமென அவர்கள் நம்புகின்றனர். பிரெஞ்சு மூலதனத்தின் போட்டித்தன்மை வீழ்ச்சி அடைந்து வருகையிலும் ஐரோப்பிய ஒன்றியம் அதன் வெளியுறவு கொள்கையில் பரந்த இராணுவமயமாக்கலை திட்டமிடுகையிலும், ஆளும் வர்க்கம் தொழிலாள வர்க்கத்துடன் ஒரு மோதலுக்கு முன்னேறி வருகிறது.

Ifop கருத்துக்கணிப்பு பயிலகத்தின் Jérôme Fourquet ஐ ஜேர்மனியின் Die Welt மேற்கோளிட்டது: “நாம் ஒரு மிகப்பெரிய போராட்டத்திற்கு முந்தைய காலகட்டத்தில் இருக்கிறோம் என்ற ஒரு தீர்க்கமான உணர்வு ஏற்படுகிறது.” அந்த ஜேர்மன் நாளிதழ் தொடர்ந்து குறிப்பிடுகையில், “யார் வெல்வார் என்பது யாருக்கும் தெரியாது. ஒரேயொரு விடயம் மட்டும் நிச்சயமானது: வரவிருக்கின்ற செப்டம்பர் வாரங்கள், உண்மைக்கான தருணங்களாக இருக்கும். வாய்ப்பே கிடையாது என்ற நிலையில் ஒரு வேட்பாளராக தொடங்கி, பின்னர் தொடக்கத்திலிருந்து முடிவு வரையில் முற்றிலும் அனுமானிக்க முடியாத ஒரு ஜனாதிபதி பிரச்சாரத்தை சாதகமாக்கி ஜெயித்து வந்த மக்ரோனுக்கு, இப்போது ஒரு வரலாற்று வாய்ப்பு கிடைத்துள்ளது. அவருக்கு இரண்டாவது வாய்ப்பு கிடையாமல் போகலாம்.”

நியூ யோர்க் டெய்லி நியூஸ் பத்திரிகை குறிப்பிடுகையில், மக்ரோனை பொறுத்த வரையில், இந்த உத்தரவாணைகள் "யூரோ மண்டலத்தின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தை சீர்திருத்துவதற்கான அவர் திட்டங்களுக்கு மிகப்பெரிய முதல் பரிசோதனையாகும். தசாப்தங்களாக இடது மற்றும் வலது அரசாங்கங்கள் பிரான்சின் கடுமையான தொழிற்சட்டங்களைச் சீர்திருத்த முயன்றுள்ளன, ஆனால் வீதி போராட்டங்களின் முன்னால் அவை எப்போதும் அவற்றை கைவிட்டுள்ளன,” என்றது.

எடுவார்ட் பிலிப் இந்த நிலைப்பாட்டை எதிரொலித்தார், "இழந்த ஆண்டுகளை, நாம் தவறவிட்ட முந்தைய ஆண்டுகளை ஈடுகட்டுவது தான்,” இந்த உத்தரவாணைகளில் சம்பந்தப்பட்ட முக்கிய பிரச்சினையாக உள்ளது, “ஒருவேளை அவை மோசமாக பேரம்பேசப்பட்டிருக்கலாம் அல்லது மோசமாக விளக்கப்பட்டிருக்கலாம், அல்லது சரியாக புரிந்து கொள்ளப்படாமல் இருந்திருக்கலாம், ஆனால் எப்போதுமே அவை பின்வாங்கப்பட்டன அல்லது கரைத்துவிடப்பட்டன,” என்றார்.

மக்ரோன் அவரது உத்தரவாணைகளை திணிக்க பயன்படுத்தி வரும் அணுகுமுறைகள், நிதியியல் தன்னலக்குழுக்களின் கட்டளையின் கீழ் பிரான்சின் ஆழமடைந்து வரும் ஜனநாயக நெருக்கடிக்குச் சான்று பகர்கின்றன. சிறுபான்மை பிரெஞ்சு மக்கள் பங்கெடுத்த சட்டமன்ற தேர்தல்களில் மேலெழுந்த மக்ரோன் ஆதரவாளர்கள் மேலோங்கிய தேசிய நாடாளுமன்றம், ஒரு சம்பிரதாய நாடாளுமன்ற வாக்கெடுப்பு கூட இல்லாமல், அவரின் உத்தரவாணைகளைத் திணிப்பதற்கு அவரை அனுமதித்து ஒரு வழிவகை சட்டத்திற்கு வாக்களித்தது.

வணிகங்கள் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதன் மூலமாக அந்த உத்தரவாணைகள் பாரிய வேலைநீக்கங்களைச் சுலபமாக்குகின்றன. அவை முறைகேடான வேலைநீக்கங்களுக்காக தொழிலாளர் நீதிமன்றங்கள் விதிக்கும் அபராதங்களுக்கு அதிகபட்ச வரம்புகளை நிர்ணயிக்கின்றன என்பதுடன், தொழிலாளர் நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பதற்கான அதிகபட்ச காலஅளவை 24 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக குறைக்கின்றன. பாரிய வேலைநீக்கங்களை அறிவிக்க உத்தேசிக்கும் நிறுவனங்களின் நிதியியல் கஷ்டங்களை மதிப்பிட, இப்போது அந்நிறுவனத்தின் நிதி நிலைமை பிரான்சிற்குள் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அவ்விதத்தில், பிரெஞ்சு துணை நிறுவனங்களின் இருப்புநிலை கணக்குகளை இருட்டடிப்பு செய்யும் அல்லது திவால்நிலைமைகளை ஒழுங்கமைக்கும் சிக்கலான நிதியியல் பரிவர்த்தனைகள், வேலைநீக்கங்களைச் சுலபமாக்கும்.

இந்த உத்தரவாணைகள், வணிகங்கள் ஆபத்து நிறைந்த வேலையிட நிலைமைகளை பரப்புவதற்கும் மற்றும் தொழிலாளர் நடத்தை விதிகள் மற்றும் தொழிற்துறை-மட்டத்திலான ஒப்பந்தங்களின் விதிமுறைகளை மீறுவதற்கும் அனுமதிக்கின்றன. தனித்தனி முதலாளிமார்களால், தொழில்துறை ஒப்பந்தங்கள் மற்றும் தொழில் விதிமுறைகளை மீறி, நிறுவன-மட்டத்திலான ஒப்பந்தங்களை பேரம்பேச முடியும், அவ்விதத்தில் விதிமுறைகள் ஒன்றுமில்லாமல் போய்விடுகின்றன. ஆனால் தொழில்துறை-மட்டத்திலான ஒப்பந்தங்கள், தற்காலிக ஒப்பந்தங்கள் மேற்கொள்வதை நெறிப்படுத்துகின்றன என்பதோடு, குறிப்பாக மக்ரோன் உருவாக்கிய ஒரு கடுமையான ஒப்பந்தமான, திட்ட ஒப்பந்தம் (project contract) என்றழைக்கபடுவதைப் பயன்படுத்த ஊக்குவிக்கின்றன.

இந்த சீர்திருத்தங்களை அவர் முன்வைக்கின்ற அதேவேளையில், மக்ரோன், தொழிற்சங்க அதிகாரத்துவங்களை முற்றிலும் பெருவணிகத்திற்கு விசுவாசமான பெருநிறுவன எந்திரங்களாக மாற்றுவதையும், இது ஏற்கனவே பெருமளவில் நிறைவடைந்துள்ள நிலையில், இத்துடன் சோசலிஸ்ட் கட்சி மற்றும் குட்டி முதலாளித்துவ "இடது" சக்திகளான ஜோன்-லூக் மெலென்சோன் மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி போன்ற சக்திகளின் ஒரு கூட்டு ஒத்துழைப்பையும் கணக்கிட்டு வருகிறார்.

இந்த உத்தரவாணைகள், ஊழியர் பிரதிநிதித்துவத்தின் வெவ்வேறு வடிவங்களை ஒருங்கிணைத்து, நிர்வாகத்திற்குள் தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பை மீளபலப்படுத்துகிறது. நான்கு அமைப்புகள் இரண்டாக மாற்றப்படும் — ஒருபுறம், தொழிற்சங்க பிரதிநிதிகள் குழு, மறுபுறம் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் குழுக்கள், தொழில் குழு, மற்றும் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் வேலையிட நிலைமைகளுக்கான குழு என்றாகும்.

தொழிற்சங்கத்தில் இணைந்துள்ள அல்லது இணைய விரும்புகின்ற ஒரு தொழிலாளி இந்த விடயத்தில் அதிக பயிற்சி பெற வேண்டியிருக்கும் என்பதோடு, உள்ளூர் தொழிற்சங்க அதிகாரிகளிடமிருந்து மிகவும் விசுவாசத்தைப் பெறும் முயற்சியில், அரசு, ஜேர்மன் மாதிரியிலான கூட்டு பேரம்பேசலைக் கண்காணிக்க ஒரு அமைப்பை உருவாக்கும். இந்த அமைப்புகள் உண்மையில் நிறுவன-மட்டத்திலான ஒப்பந்தங்களைத் திணிப்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகிப்பதற்காக உள்ளன, மேலும் மேலதிகநேர வேலைக்கான கொடுப்பனவை கூலிகளில் 25 இல் இருந்து 10 சதவீதத்திற்குக் குறைக்கவும் உடன்படுகின்றன.

இவ்விதத்தில் தொழிலாளர்கள் மீதான சுரண்டலை அதிகரிப்பதன் மூலமாக பெறப்படும் பாரிய தொகைகள், ஐரோப்பாவில் செல்வாக்கான பில்லியனர்களின் இலாபங்களை கொழிக்க வைக்கவும் மற்றும் ஐரோப்பிய கண்டத்தை இராணுவமயப்படுத்துவதற்கான இராணுவ செலவினங்களுக்கு நிதி வழங்கவும் சேவையாற்றும். மக்ரோன், பிரெஞ்சு தூதர்களின் ஒரு மாநாட்டில் உரையாற்றி வெறும் இரண்டு நாட்களுக்குப் பின்னர் அவர் உத்தரவாணைகளை வெளியிட்டார். அங்கே, பிரெஞ்சு நலன்களை வலியுறுத்த, அதுவும் ஐரோப்பா உட்பட பிரதான சக்திகளுக்கு இடையே மோதல்கள் அதிகரித்து வருவதற்கு மத்தியில், ஒரு ஆக்ரோஷமான மற்றும் இராணுவமயப்பட்ட உலக மூலோபாயத்திற்கான திட்டங்களை முன்வைத்தார்.

அம்மாநாட்டில், மக்ரோன் அறிவித்தார், “ஐரோப்பிய கண்டத்தின் கடந்த 70 ஆண்டுகால அமைதி, நமது கூட்டு வரலாற்றில் ஒரு பிறழ்ச்சி அல்ல என்பதை நாம் மறந்துவிட்டோம். … அச்சுறுத்தல் நமது வாசலில் உள்ளது, போர் எமது கண்டத்தின் மீது உள்ளது,” என்றார். அவர், பிரெஞ்சு இராணுவத்தை "உலகின் சிறந்த இராணுவங்களில் ஒன்றாக" ஆக்குவதற்கு அழைப்புவிடுத்தார்.

மக்ரோன் வெகுஜனங்களின் பரந்த எதிர்ப்புக்கு இடையிலும் பிரான்சின் அவசரகால நிலையின் கீழ் உள்ள கடுமையான பொலிஸ் அதிகாரங்களையும், மற்றும் அவர் உத்தரவாணைகளை திணிக்க தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் உடந்தையாய் இருப்பதையும் வெளிப்படையாக கணக்கிட்டு வருகிறார். இந்த நடவடிக்கைகள் குறித்து மக்ரோன் உடன் நீண்டகாலமாக பேரம்பேசிய தேசிய தொழிற்சங்க கூட்டமைப்புகளுக்கு, அவருக்கு எதிராக ஒரு தீவிர போராட்டம் நடத்த எந்த உத்தேசமும் கிடையாது.

பிரெஞ்சு ஜனநாயக தொழில் கூட்டமைப்பின் (CFDT) லோரன்ட் பேர்ஜே கூறுகையில், அவருக்கு "ஏமாற்றமாக" இருப்பதாகவும், ஆனால் தொழிலாளர்கள் சக்தி (FO) போலவே, அவரது தொழிற்சங்கமும் அடையாள போராட்டங்களைக் கூட ஒழுங்கமைக்காது என்றார். மக்ரோன் உடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட தொழிலாளர்களின் பொது கூட்டமைப்பு (CGT) பாசாங்குத்தனமாக குறிப்பிடுகையில், “எங்களுக்கு இருந்த எல்லா அச்சங்களும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டு உள்ளன, உடனிருந்த அச்சம் காணக்கூடியதாக, எழுத்துபூர்வமாக உள்ளது: இத்துடன் தொழிலாளர் ஒப்பந்தம் முடிவடைகிறது.” ஸ்ராலினிச தொழிற்சங்கம் செப்டம்பர் 12 அன்று போராட்டங்களுக்கு அழைப்புவிடுத்து வருகிறது.

ஒரு குறுகிய தேசியவாத முன்னோக்கில் தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்படும் அடையாள வகைப்பட்ட போராட்டங்களை தொழிலாளர்கள் சார்ந்திருக்க முடியாது என பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste) வலியுறுத்துகிறது. சமூக-விரோத உத்தரவாணைகள், இராணுவவாதம் மற்றும் அவசரகால நிலையின் கீழ் பொலிஸ் ஒடுக்குமுறை ஆகியவற்றிற்கு எதிரான போராட்டத்தில் பிரெஞ்சு தொழிலாளர்களின் இயற்கையான கூட்டாளிகள், ஐரோப்பா மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கமே ஆகும். இதுவே, ஐரோப்பிய ஒன்றியத்தின் இராணுவவாத மற்றும் சிக்கனத் திட்ட கொள்கைகளுக்கு எதிரான ஒரு புரட்சிகரமான மற்றும் உண்மையான சோசலிச போராட்டத்திற்கு அடித்தளமாக ஏற்கக்கூடிய புறநிலையான சமூக சக்தியாகும்.