ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The rise of the AfD and the rightward lurch of official politics in Germany

ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சியின் வளர்ச்சியும், ஜேர்மனியில் உத்தியோகபூர்வ அரசியலின் வலது நோக்கிய திருப்பமும்

Peter Schwarz
25 September 2017

நாஜிக்களின் வீழ்ச்சிக்கு பின்னர் முதல்முறையாக, வலதுசாரி தீவிரவாத கட்சி ஒன்று ஜேர்மனியின் தேசிய நாடாளுமன்றத்தில் நுழைகிறது. ஞாயிறன்று நடந்த கூட்டாட்சி தேர்தலில் 13 சதவீத வாக்குகள் பெற்று, ஆட்சியில் உள்ள கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்/கிறிஸ்துவ சமூக ஒன்றியம்(CDU/CSU) மற்றும் வாக்காளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி கண்டுள்ள சமூக ஜனநாயகக் கட்சி (SPD) ஆகியவற்றுக்கு அடுத்து நாடாளுமன்றத்தில் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) உருவெடுத்துள்ளது. 60 ஆண்டுகளில் CDU/CSU அதன் மிகக் குறைந்த வாக்குகளாக 33 சதவீதம் பெற்றன.

ஜேர்மனிக்கான மாற்றீடு அதன் உண்மையான பலத்திற்கு அப்பாற்றபட்ட அரசியல் செல்வாக்கைப் பெற்றுள்ளது. அது அகதிகளை ஒடுக்கவும், அரசின் ஒடுக்குமுறை எந்திரத்தை பலப்படுத்தவும் கிளர்ச்சிகள் நடத்தியதன் மூலமாக, தேர்தல் பிரச்சாரத்தில் அதன் தொனியை அமைத்திருந்தது. அனைத்து ஸ்தாபக கட்சிகளும் கூடுதல் பொலிஸை பதவிக்கு நியமிக்கவும் மற்றும் அகதிகளைக் கூடுதலாக வெளியேற்றவும் சூளுரைத்து AfD ஐ விஞ்சி நிற்க முயன்று, அவ்விதத்தில் அந்த அதிவலது கட்சியை பலப்படுத்தின. AfD இன் உண்மையான பேரினவாத மற்றும் எதேச்சதிகார அரசியலுக்கு வாக்களிக்ககூடியதாக இருக்கையில் ஏன் அதன் பிரதிப்பதிப்பாக இருக்கும் ஸ்தாபக கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும்? CDU/CSU, ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்களை AfD யிடம் இழந்தது, அதேவேளையில் சமூக ஜனநாயக கட்சி (SPD) 470,000 வாக்குகளும், இடது கட்சி 400,000 வாக்குகளும் அதனிடம் இழந்தன.

இதேவேளை, AfD இன் வலதுசாரி தீவிரவாத வேலைத்திட்டத்திற்கு பாரிய ஆதரவு கிடையாது. AfD இன் வாக்காளர்களிடையே கூட, 60 சதவீதத்தினர் அதன் கொள்கைகளை அவர்கள் ஆதரிக்கவில்லை என்றும், ஏனைய கட்சிகள் மீதான எதிர்ப்பை காட்டுவதற்காகவே அதை ஆதரிப்பதாக தெரிவித்தனர். அனைத்திற்கும் மேலாக AfD இன் வளர்ச்சியானது, அனைத்து ஸ்தாபக கட்சிகளும் வலது நோக்கி திரும்பியதன் விளைவாகும். அக்கட்சிகள், ஊடகங்களின் ஆதரவுடன், அதிகரித்து வந்த சமூக அதிருப்தியை வலதுசாரி திசையில் திருப்ப அவற்றால் ஆனமட்டும் அனைத்தும் செய்தன.

குறைவூதிய வேலைகளின் அதீத அதிகரிப்பு, வறுமை மற்றும் வீடற்ற நிலைமையின் அதிகரிப்பு, கட்டுபடியாகின்ற செலவில் வீட்டுவசதி கிடைக்காமை, பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகளில் நிலவும் படுமோசமான நிலைமைகள், மற்றும் அதிகரித்து வரும் போர் அபாயம் ஆகியவை உட்பட, ஜேர்மனியை பீடித்து வருகின்ற, இதுபோன்ற ஒரு சமூக நெருக்கடியிலிருந்து, பெயரளவிற்கான இடது கட்சிகளே ஆதாயமடையுமென கடந்த காலத்தில் எதிர்பார்க்கப்படும். ஆனால் சமூக ஜனநாயகக் கட்சியும் சரி அல்லது இடது கட்சியும் சரி, வாக்காளர்களுக்கு ஒரு சமூக முறையீடு செய்ய இலாயக்கற்றதாக உள்ளன.

சமூக ஜனநாயகக் கட்சி அரசியல்ரீதியில் திவாலாகி மதிப்பிழந்துள்ளது. ஹார்ட்ஸ் சட்டங்கள், பெருவணிகங்களுக்கும் செல்வந்தர்களுக்கும் வரி வெட்டுக்கள், ஓய்வுபெறும் வயதை 67 ஆக உயர்த்தியமை என இவற்றை திணித்த சமூக ஜனநாயகக் கட்சியே, மிகப்பெரிய அளவிலான சமூக சமத்துவமின்மைக்கு தலையாய பொறுப்பாகின்றது.

இடது கட்சியோ, இதனினும் அதிக கேடுகெட்ட பாத்திரம் வகித்தது. தொழிலாளர்கள் நீண்டகாலத்திற்கு முன்னரே அதன் வலதுசாரி கொள்கைகள் கலந்த இடது வாய்சவடால்களின் கலவையை கவனத்திற்கு எடுப்பதை நிறுத்தி விட்டனர். தொழிலாளர்களின் ஓர் இயக்கம் இடதிற்கு நகர்வதை தடுப்பதே இடது கட்சியின் பிரதான பணியாகும். இடது கட்சி நீண்டகாலமாக செல்வாக்கு செலுத்தி வந்த கிழக்கு ஜேர்மனியில், ஜேர்மனிக்கான மாற்றீடு, CDU ஐ அடுத்து இரண்டாம் இடத்தைப் பிடித்தது. அங்கே, இந்த அதிவலது கட்சி 22 சதவீத வாக்குகளை வென்றது. ஆண்களின் 27 சதவீத வாக்குகளுடன் AfD ஆல் ஆண்களிடையே முதலிடத்தையே கூட பெற முடிந்திருந்தது.

வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்னரே, ஆளும் உயரடுக்கு, AfD உடன் தம்மை உடன்பாடு செய்துகொள்ள செய்ய சென்றது. இந்த வலதுசாரி தீவிரவாதக் கட்சியை அது அரசாங்கத்திற்குள் இணைப்பதென்பது எப்போது என்பதே தற்போதுள்ள விடயமாகும்.

கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CSU) தலைவர் ஹோர்ஸ்ட் சீகோவர் கூறுகையில், CDU மற்றும் CSU “அவற்றின் வலதுசாரி பக்கத்திற்கு கவனத்தை செலுத்தாமல் வைத்திருந்ததால்" தான் AfD க்கு வாக்குகள் கிடைத்தன என்றார். அவர்கள் இதை எதிர்காலத்தில் மாற்றுவதற்கு ஒரு "தெளிவான நிலைப்பாட்டை" எடுக்க இருப்பதாக அவர் சூளுரைத்தார்.

வரலாற்றாளர் Michael Wolffsohn, ஜேர்மனிக்கான மாற்றீட்டை (AfD) “நாஜிக்கள்" என்று கூற மறுத்தார். அவர் கூறினார், வெள்ளமென அகதிகள் வந்தமை போன்ற "பிரதான சமூக பிரச்சினைகளுக்கு" மற்ற கட்சிகளிடம் எந்த பதிலும் இல்லாததால் அக்கட்சி அதற்கான ஒரு எதிர்வினையாகும் என்றார். அரசியல் விஞ்ஞானி Jürgen Falter, நாடாளுமன்றத்தினுள் AfD நுழைவது பெரியளவில் மிகைமதிப்படப்படுவதாக எச்சரித்தார். “இது பற்றி கவலை கொள்வதற்குரிய காரணம்" என்பதற்கு பதிலாக, "நமது வரலாற்றின்படி ஜேர்மன் அரசியலின் வழமையான ஒன்றை" அது பிரதிநிதித்துவம் செய்கிறது என்றார்.

AfD இன் வலதுசாரி தீவிரவாத கொள்கைகளை ஸ்தாபக கட்சிகள் பயங்கரமாக சித்தரிப்பதானது, ஆரம்பத்திலிருந்தே பாசாங்குத்தனமாக உள்ளது. இது ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி விடயத்திலேயே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அகதிகளுக்கு எதிரான அவரது எதிர்ப்பு மற்றும் நாஜி ஆட்சியின் குற்றங்களை அவர் குறைத்துக் காட்டியமை ஆகியவற்றுடன் AfD க்கான வழியை சீர்படுத்திய பேர்லின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் அந்த பேராசிரியர், ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei – SGP) அவரை பகிரங்கமாக விமர்சித்த போது, ஸ்தாபக கட்சிகள் மற்றும் ஊடகங்களிடம் இருந்து கருத்தொருமித்த ஆதரவைப் பெற்றார். SPD இன் முன்னணி அங்கத்தவர் Sabine Kunst ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் தலைவராக உள்ள நிலையில், அக்கட்சியும் இடது கட்சியும் பார்பெரோவ்ஸ்கியை பாதுகாப்பத்தில் முக்கிய பாத்திரம் வகித்தன. பார்பெரோவ்ஸ்கியை ஒரு வலதுசாரி தீவிரவாதியாக குறிப்பிடலாம் என்று ஒரு நீதிமன்றமே உறுதிப்படுத்திய போதும் கூட, அவை தொடர்ந்து அவரை ஆதரித்தன.

உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடிக்கும் அதிகரித்து வரும் உள்நாட்டு மற்றும் வெளியுறவு பதட்டங்களுக்கும் அதன் மிகவும் இழிவார்ந்த பாரம்பரியங்களுக்கு திரும்புவதன் மூலமாக விடையிறுத்து வரும் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்தின் வலதுசாரி திருப்பத்தின் விளைவே, AfD இன் வளர்ச்சியாகும். 1930 களில், வணிக கூட்டமைப்புகளும், இராணுவமும், முதலாளித்துவ அரசியல்வாதிகள் மற்றும் கல்வித்துறையாளர்களும் ஹிட்லரை ஆதரித்ததன் மூலமாகவும் சான்சிலராக அவரது நியமனத்தை ஆதரித்ததன் மூலமாகவும் வர்க்க போராட்டத்தின்  தீவிரப்படலுக்கு விடையிறுத்தனர்.

இதை தொழிலாள வர்க்கம் ஒரு தீவிர எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஸ்தாபக கட்சிகளில் எதுவுமே இந்த வலதுசாரி தீவிரவாதிகளுக்கு எதிராக எதிர்த்தெழ விரும்பவில்லை அல்லது திராணியற்று உள்ளன. சமூக ஜனநாயகக் கட்சியும் மற்றும் இடது கட்சியும் அனைத்தையும் விட இத்தகைய விருப்பை காட்டுவதில் ஆக இறுதியாக உள்ளன.

இதேபோன்ற அபிவிருத்திகள் பிற ஐரோப்பிய நாடுகளிலும் நடந்து வருகின்றன. பிரான்சில், தேசிய முன்னணியின் வலதுசாரி தீவிரவாத வேட்பாளர் மரீன் லு பென், ஜனாதிபதி தேர்தலின் இரண்டாவது சுற்றை எட்டினார். ஆஸ்திரேலியாவில், அக்டோபர் தேர்தல்களைத் தொடர்ந்து அதிவலது சுதந்திர கட்சி (FPÖ) அரசாங்கத்தில் பங்கெடுக்குமென ஏறத்தாழ நிச்சயமாக பார்க்கப்படுகிறது. சமூக ஜனநாயகவாதிகளும் பழமைவாதிகளும் அதனுடன் ஒரு கூட்டணி அமைக்க தயாராக உள்ளனர்.

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei) மட்டுமே ஒரு இடதுசாரி சோசலிச தளத்தில் இந்த கூட்டாட்சி தேர்தலில் போட்டியிட்ட ஒரே கட்சியாகும். “சமூக ஜனநாயக் கட்சி, இடது கட்சி மற்றும் பசுமை கட்சி, இவை அவற்றின் வலதுசாரி கொள்கைகளைக் கொண்டு, அதிவலது ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சியின் வளர்ச்சிக்கு உதவுகின்றன,” என்பதை SGP இன் தேர்தல் அறிக்கை அறிவித்தது. “இந்த வலதுசாரி தீவிரவாத கட்சியால் ஒரு எதிர் சக்தியாக காட்டிக் கொள்ள முடிகிறது என்றால், அதற்கு காரணம், ஒரு சோசலிச முன்னோக்குடன் ஆளும் வர்க்கத்தை எதிர்க்க எந்த ஸ்தாபக 'இடது' கட்சிகளும் இல்லை என்பதனாலேயே ஆகும்,” என்றது குறிப்பிட்டது.

தேசியவாதம், சமூக சமத்துவமின்மை மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தில் உலகெங்கிலுமான தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் ஒரு சோசலிச கட்சியைக் கட்டமைப்பதன் மூலமாக மட்டுமே அதிவலது தீவிரவாதிகளின் வளர்ச்சியைத் தடுக்க முடியும். அந்த கட்சியே, ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியும் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுமாகும்.