ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

German court issues draconian ruling against Hamburg G20 protester

ஜேர்மன் நீதிமன்றம் ஹம்பேர்க் ஜி20 போராட்டக்காரருக்கு எதிராக கடுமையான தீர்ப்பளிக்கிறது

By Katerina Selin
30 August 2017

ஹம்பேர்க் மாவட்ட நீதிமன்றம், ஜூலை மாத தொடக்கத்தில் ஹம்பேர்க் ஜி20 உச்சிமாநாட்டின் போது நடந்த போராட்டங்கள் மற்றும் வன்முறை சம்பந்தமாக நடந்துவரும் சட்ட வழக்குகளில் அதன் முதல் தீர்ப்பை வழங்கியது.

நெதர்லாந்தைச் சேர்ந்த 21 வயதான ஒருவர் போராட்டத்தின் போது, ஒரு பொலிஸ் அதிகாரி மீது குற்றகரமாக இரண்டு வெற்று கண்ணாடி போத்தில்களை வீசியதுடன், கைது செய்கையில் எதிர்த்தார் என்பதற்காக நீதிபதி அவருக்கு இரண்டு ஆண்டுகள் மற்றும் ஏழு மாதங்களுக்கான சிறை தண்டனை விதித்தார். நீதிமன்றத்தின் பார்வையில், ஆழமாக அமைதிக்கு கேடுவிளைவித்தல், கடுமையான சரீர காயம் ஏற்படுத்துதல், சட்ட ஒழுங்கு அதிகாரிகளைக் கடுமையாக தாக்குதல், மற்றும் சட்ட ஒழுங்கு அதிகாரிகளை எதிர்த்தல் ஆகிய குற்றத்தை நியாயப்படுத்த இதுவே போதுமானதாக இருந்தது.

இந்த கடுமையான தீர்ப்பு போதுமான ஆதாரங்களைக் கொண்டிருக்கவில்லை. நீதிமன்றம், ஜி20 மாநாட்டிற்காக ஹம்பேர்க்கில் நிறுத்தப்பட்டிருந்த, பேர்லினைச் சேர்ந்த ஒரு கலக-தடுப்பு பொலிஸ் பிரிவின் இரண்டு அதிகாரிகளது கருத்துக்கள் மீது தங்கியிருந்தது.

குற்றஞ்சாட்டப்பட்டவர், Peike S., விசாரணையின் போது மவுனமாக இருந்தார். அவரை விடுவிக்க அவர் வழக்கறிஞரே முறையிட்டிருந்தார்.

பொலிஸ் அதிகாரிகளின் குற்றச்சாட்டுக்களை நம்ப முடியாது என்பதற்கு அங்கே நிறைய காரணங்கள் உள்ளன. கடந்த வெள்ளியன்று இடதுசாரி வலைத்தளமான linksunten.indymedia.org க்கு உள்துறை அமைச்சகம் தடைவிதித்த வழக்கில், அந்த வலைத்தள நிர்வாகிகளின் குடியிருப்புகளில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸ் கூறிய கூற்றுக்கள் பொய்யென்று உடனடியாக அம்பலமாயின. வலைத்தளம் netzpolitik.org பிரச்சினை சம்பந்தமாக வினவிய போது, உள்துறை அமைச்சகம், எந்த அபாயகரமான சாதனங்களும் பிடிபடவில்லை என்பதை ஒப்புக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டது.

திங்களன்று தண்டனைக்குள்ளான அந்த இளைஞர் மீது இதற்கு முன்னர் எந்த குற்ற தண்டனைகளும் கிடையாது, மேலும் அவர் ஏற்கனவே பல வாரங்களாக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தார். ஜூலை 6 அன்று மாலை, அவர் Schanzen quarter பகுதியில் "நரகத்திற்கு வரவேற்கிறோம்" எனும் இடது சுயேச்சை போராட்டத்தில் பங்கெடுத்தார், அப்போராட்டம் இடதுசாரி "Rote Flora" மையத்திற்கு அணிவகுத்து செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. தலைகவசங்கள் அணிந்த கலகம் ஒடுக்கும் பொலிஸின் ஒரு பிரிவு, கைத்தடிகள், மிளகுத்தூள் தெளிப்பான் மற்றும் நீர்பீய்ச்சிகளுடன் ஆயுதமேந்திய நிலையில், அவ்வழியை மறித்து, ஆர்ப்பாட்டத்தைக் கலைந்து செல்லுமாறு அறிவித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை கலைக்க மறுத்து, தன்னிச்சையாக போராட்டங்களை ஒழுங்கமைத்ததும், நீர்ப்பீய்ச்சிகளுடன் தலையீடு செய்த பொலிஸ் அதிகாரிகள் கைத்தடிகளைக் கொண்டு அவர்களை அடித்தனர். ஆர்ப்பாட்டத்திலிருந்து பொலிஸை நோக்கி போத்தில்கள் வீசப்பட்டன.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இவர் வீசிய இரண்டு போத்தில்கள் 30 வயதான ஒரு பொலிஸ் அதிகாரியின் தலைகவசம் மற்றும் கால்களைத் தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது, என்றாலும் அவருக்கு எந்த காயமும் ஏற்பட்டிருக்கவில்லை. அவர் வலியை உணர்ந்ததாக தெரிவித்தார், ஆனால் அவர் சிகிச்சையோ அல்லது மருத்துவ விடுப்போ எடுத்திருக்கவில்லை.

அதற்கு மாறாக, மற்றொரு அதிகாரியின் உதவியோடு Peike S. ஐ இடைமறித்த அவர், பீர் போத்தில்களை வீசியவராக அவரை அடையாளப்படுத்தி கைது செய்தார். Peike S. தரையில் புரண்டும், அவர் தசைகளை முறுக்கியும் பொலிஸிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள முனைந்தார்.

நீதிபதி "எதிர்ப்பதாக" கருதிய, இந்த "மைய நிலைப்பாடு", குற்றஞ்சாட்டப்பட்டவரின் வழக்கறிஞரைப் பொறுத்த வரையில், தற்காப்பு நடவடிக்கை ஆகும். அவர் தரப்பு வாதி அச்சத்தினால் தரையில் புரண்டிருந்தார். அக்குற்றப்பதிவின் பிற குற்றங்களையும் அவர் நிராகரித்தார். வழக்கு விசாரணையின் போது அவர் தரப்பு வாதி மீது, சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு உறுதியாக அடையாளம் காட்டப்படவில்லை என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார். இதற்கும் கூடுதலாக, “கடுமையாக அமைதிக்கு கேடுவிளைவித்தல்" என்ற குற்றச்சாட்டு நியாயப்படுத்தப்படவே இல்லை, ஏனென்றால் பிரதிவாதி 15 பேர்களுக்கும் குறைவானவர்கள் இருந்த ஒரு சிறிய குழுவில் ஒருவராக இருந்தார். மத்திய உச்சநீதிமன்ற கருத்துப்படி, குறைந்தபட்சம் 15 இல் இருந்து 20 நபர்களைக் கொண்ட குழு இருந்தால் மட்டுமே, “அமைதிக்கு கேடுவிளைவித்தல்" என்பதை பரிசீலிக்க முடியும்.

நீதிமன்ற அறையில் இருந்த சுமார் 40 பார்வையாளர்கள் அத்தீர்ப்பால் அதிர்ச்சியடைந்தனர். கடுமையானவர் என்று பெயரெடுத்தவரான மாவட்ட நீதிமன்ற நீதிபதி Johann Krieken, அவர் தீர்ப்பில், அரசு வழக்கறிஞர் கோரிய ஓராண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான கடுமையான தண்டனையை விட இன்னும் மேலே சென்றார். Tageszeitung நாளிதழ் செய்தியின்படி, அரசு வழக்கறிஞர் பேசுகையில் பிரதிவாதி முக்கிய குற்ற நோக்கம் கொண்டிருந்ததாக வாதிட்டார். தீர்ப்பில், ஹம்பேர்க்கில் "உள்நாட்டு போர் போன்ற நிலைமைகளை" கணக்கில் எடுப்பது அவசியம் என்றும், அது முக்கியமாக அத்துமீறிய பிறரை அதைரியப்படுத்தும் என்பதையும் அப்பெண்மணி சேர்த்துக் கொண்டார். அவ்விதத்தில் அவர் நீதிபதியின் தீர்ப்புக்கு முன்னரே, அந்த வழக்கு விசாரணையானது உண்மையை வெளிக்கொணர்வதற்காக கிடையாது, மாறாக ஒரு முன்னுதாரணத்தை அமைப்பதற்கானது என்பதை தெளிவுபடுத்தி இருந்தார்.

நீதிபதி உறுதியாக பொலிஸை ஆதரித்தார். அவர் தீர்ப்பில், பொதுச்சேவைகளில் ஈடுபடும் பொதுத்துறை அதிகாரிகளுக்கு ஒரு சட்டத்திருத்தத்தை வரைந்தார், மே 30 இல் நடைமுறைக்கு வந்த அது, எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தண்டிப்பதை இன்னும் எளிதாக்குகிறது. பொலிஸ் அதிகாரிகள், "தன்-விருப்பப்படி திளைக்கின்ற ஒரு சமூகத்திற்கான விளையாட்டு பொருள் இல்லை" என்றவர் அறிவித்தார். இவர்கள் சட்டம் வகுத்தவர்களால் பாதுகாக்கப்பட்டுள்ளார்கள் என்றாலும், நீதிமன்றங்களும் இவர்களை ஆதரிக்க வேண்டும் என்று நீதிபதி தொடர்ந்தார். குற்றஞ்சாட்டப்பட்டவர் அப்பாவியா என்ற அனுமானமெல்லாம் இவ்வழக்கில் ஒரு பாத்திரம் வகித்ததாகவே தெரியவில்லை. பொலிஸ் அதிகாரிகளின் கருத்துக்களுக்கு அப்பாற்பட்டு, நீதிமன்ற ஆவணங்களில் வேறெந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை.

இந்த ஹம்பேர்க் தீர்ப்பு எந்தவொரு கவனமான நீதித்துறை மதிப்பீட்டையும் கேலிக்கூத்தாக்குகிறது. இது, சமீபத்திய வாரங்களில் சகல பிரதான ஜேர்மன் அரசியல் கட்சிகள் மற்றும் ஊடக நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருகின்ற “இடதுசாரி தீவிரத்தன்மைக்கு” எதிரான அரசியல் பிராச்சாரத்தின் பாகமாக உள்ளது. ஜி20 மாநாட்டை சுற்றி நடந்த வன்முறையானது, கூட்டாட்சி தேர்தலுக்குள் விஷமத்தனமான சூழலை உருவாக்குவதற்காக திட்டமிட்டு மிகைப்படுத்தப்பட்டிருந்தது. Schanzen quarter பகுதியில் நடந்த இடதுசாரி கலகங்கள் என்று குற்றஞ்சாட்டப்படும் கதைகளில் பெரும்பாலானவை அடித்தளமற்றவை என்பது விசாரணைகளில் ஊர்ஜிதமாகி உள்ளது என்ற இந்த உண்மை மீது, அரசியல்வாதிகளும், பத்திரிகை அலுவலகங்களில் உள்ள அவர்களது ஊடக ஊதுகுழல்களும் முற்றிலும் அலட்சியமாக உள்ளனர். ஹம்பேர்க்கின் சமூக ஜனநாயக கட்சி நகர தலைவர் Olaf Scholz உட்பட பல அரசியல்வாதிகளும், கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை விதிக்குமாறு மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

திட்டமிட்ட அரசியல் முடிவுகளே நீதிமன்ற தீர்ப்புக்கு வழிகாட்டியுள்ளன. இதை நீதிபதியின் இற்றுபோன வாதத்தைக் கொண்டு, அதாவது அவர் அரசியல்வாதிகளின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ய அக்கறை கொண்டிருக்கவில்லை என்ற கூற்றின் மூலமாக மூடிமறைத்துவிட முடியாது. முற்றிலும் போதுமானளவிற்கு ஆதாரமின்றி, அபத்தமான இந்த நீண்டகால தண்டனையில், எகிப்து போன்ற சர்வாதிகார ஆட்சிகளது அரசியல்ரீதியில் உந்தப்பட்ட தீர்ப்புகளைப் போன்ற அதே குணாம்சங்கள் உள்ளன, அங்கே இதுபோன்ற முடிவுகள் அன்றாடம் எடுக்கப்படுகின்றன. இராணுவவாதம், உள்நாட்டு அரசு எந்திரத்தின் கட்டமைப்பு, மற்றும் சமூக சிக்கன கொள்கைக்கு எந்தவொரு எதிர்ப்பையும் ஒடுக்குவதே குறிக்கோளாக உள்ளது.

ஹம்பேர்க் பொலிஸ் தற்போது ஜி20 எதிர்ப்பாளர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்ட 2,000 குற்றங்கள் குறித்து விசாரித்து வருகிறது. Hamburger Abendblatt செய்தியின்படி, “ஜி20 உச்சிமாநாட்டைச் சுற்றி நடந்த வன்முறையோடு தொடர்புபட்ட நபர்களுக்கு எதிராக 109 விசாரணைகளை ஹம்பேர்க் அரசு வழக்கறிஞர் பதிவு செய்துள்ளார், இவர்களின் பெயர்களும் தெரியும்,” என்று அரசு வழக்கறிஞருக்கான செய்தி தொடர்பாளர் கார்ஸ்டன் ரினியோ தெரிவித்தார்.

ஒரு ஜி20 போராட்டக்காரருக்கு எதிராக இரண்டாவது ஜோடனை வழக்கு நேற்று நடந்தது. பிரதிவாதி Stanislav B., ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் சட்டத்தை, அத்துடன் ஒன்றுகூடுவதற்கான சட்டத்தையும் மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டார். விசாரணையாளர்களின் கருத்துப்படி, எரிச்சலூட்டும் வாயு, நீர்மூழ்கி மூக்குக்கண்ணாடிகள், ஏழு பட்டாசுகள், "கவர்ச்சியான ஆடை”, இவற்றுடன் அவர் கைது செய்யப்பட்ட போது மேலும் இரண்டு ஒளிரும் பந்துகள் அவர் முதுகு பையில் இருந்தன. இதற்காக, அவருக்கு ஆறு மாதகால நன்னடத்தை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் தரப்பு வக்கீல் மேல்முறையீடு செய்வோமென தெரிவித்துள்ளார்.