ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

SGP condemns German government’s ban of linksunten.indymedia.org

linksunten.indymedia.org வலைத் தளம் மீதான ஜேர்மன் அரசு தடையை சோசலிச சமத்துவக் கட்சி கண்டிக்கிறது

By the Sozialistische Gleichheitspartei
31 August 2017

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei – SGP), இடதுசாரி வலைத் தளமான linksunten.indymedia.org மீதான ஜேர்மன் அரசு தடையைப் பலமாக கண்டிப்பதுடன், அத்தடையை உடனடியாக நீக்க வேண்டுமென்று கோருகிறது. இந்த ஆணவமான அரசியல் தணிக்கை நடவடிக்கை, பேச்சு சுதந்திரம் மீதான அடிப்படை தாக்குதல் என்பதோடு, சகல சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பை ஒடுக்குவதற்கு ஒரு முன்னுதாரணத்தை அமைக்கிறது.

உள்துறை அமைச்சர் தோமஸ் டு மஸியர் இத்தடை குறித்து நியாயப்படுத்துகையில், அவர் அரசாங்க கொள்கை மற்றும் ஸ்தாபக கட்சிகள் மீதான விமர்சனத்தை ஒடுக்க முயன்று வருகிறார் என்ற உண்மையின் மீது எந்த சந்தேகத்திற்கும் இடம் வைக்கவில்லை. “அவர்கள், பல ஆண்டுகளாக, கருத்து வேறுபாட்டிற்கு எதிரான வெறுப்பை விதைக்க இத்தளத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர்,” என்றார். “இடதோ, வலதோ —இணையத்தில் இருந்தாலும் சரி அல்லது அதை கடந்து இருந்தாலும் சரி— தீவிரவாதிகள் அடைக்கலம் கொள்ள இங்கே இடமில்லை,” என்றார்.

டு மஸியர் “நாட்டின் பிரதிநிதிகளுக்கு எதிரான வெறுப்பு" குறித்து குறிப்பிடுவதன் மூலம், பரந்த பெரும்பான்மை மக்களுக்கு சிக்கன திட்டங்களையும், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் இராணுவவாதத்தையும் தவிர வழங்குவதற்கு வேறெதும் இல்லாதிருக்கும் அரசியல் உயரடுக்கை நோக்கி அதிகரித்துவரும் கோபத்தைக் குறிப்பிடுகிறார்.

linksunten.indymedia.org வலைத் தளம், “ஜேர்மனியில் வன்முறை நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு தயாராக இருக்கும், இடதுசாரி தீவிரவாதிகளிடையே மிகவும் செல்வாக்கான இணைய களமாக" உள்ளது என்று வலியுறுத்தியதன் மூலம், டு மஸியர் அத்தடையை நியாயப்படுத்தினார். ஆனால் இதுவொரு ஆணவமான பொய் கூற்றாகும்.

உண்மையில் இத்தடையானது சட்டவிரோத கருத்துக்களைக் கொண்ட பதிவுகளுக்கு எதிராக திரும்பி இருக்கவில்லை. வலைத் தளத்திற்கு தடைவிதிக்காமல், அதன் நிர்வாகிகளை அழைத்து இப்போதைய சட்டங்களை மீறும் எந்தவொரு பதிவையும் நீக்குமாறு கேட்டுக் கொண்டு, அதிகாரிகள் அப்பதிவுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்கலாம். அதற்கு பதிலாக, உள்துறை அமைச்சர், ஒரு நீதிமன்ற தீர்ப்பு இல்லாமல், வலதுசாரி தீவிரவாதம், அகதிகள்-விரோத வெறுப்பு மற்றும் போருக்கு எதிராக போராடுவதில் பிரதானமாக ஒருங்குவிந்துள்ள ஒரு இணைய களத்திற்கு தடைவிதித்தார்.

உலக வர்த்தக அமைப்பின் சியாட்டில் (Seattle) கூட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுடனான தொடர்பில், Linksunten.indymedia.org வலைத் தளம் 1991 இல் உலகளாவிய indymedia வலையமைப்பின் பாகமாக ஸ்தாபிக்கப்பட்டது. இந்த பொதுக்களம் ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) மற்றும் வலதுசாரி தீவிரவாத ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு அழைப்புவிடுத்ததும், மற்றும் அகதிகளைத் தடுக்கும் வகையிலான கூட்டாட்சி அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சித்ததும், மற்றும் வலதுசாரி தீவிர பயங்கரவாத குழுவான தேசிய சோசலிச நிழலுலக குழுவை அம்பலப்படுத்தியதுமான பதிவுகளை பிரசுரித்தது. போர் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிரான போராட்டம் என பிற விடயங்களும் உள்ளடங்கி இருந்தன.

linksunten.indymedia.org வலைத் தளம் மீதான தடையானது, ஜேர்மனியின் அடிப்படை சட்ட ஷரத்து 5 இன் கீழ் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ள பத்திரிகை சுதந்திரம் மீதான மிகப்பெரிய மீறலாகும். இந்த மீறலை சட்டபூர்வமாக்க, டு மஸியர், ஒரு வெளிப்படையான சட்டபூர்வ வழிவகையை பயன்படுத்தினார். அவர் அத்தளத்தை ஒரு அமைப்பாக அறிவித்தார், அவ்விதத்தில் அமைப்புகள் சட்டத்தின் (Associations Law) கீழ் அதற்கு முற்றுமுதலாக தடை விதிக்க முடியும்.

ஜேர்மன் பேரரசின் எச்சசொச்சமாக இருந்த இந்த அமைப்புகள் சட்டமானது, 1964 இல் புதுப்பிக்கப்பட்டது. இது சட்டத்தின் ஆட்சி மற்றும் அதிகாரப் பகிர்வை கேலிக்கூத்தாக்குகிறது. இது, பிடிபட்டவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களை விளக்கமளிக்க அனுமதிப்பதற்கான நீதிமன்ற விசாரணையின்றி ஒரு அமைப்புக்குத் தடைவிதிக்கும் மற்றும் அதன் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் அதிகாரத்தை, கூட்டாட்சி மட்டத்தில் மற்றும் மாநில அளவில் உள்துறை அமைச்சர்களுக்கு வழங்குகிறது. தடை விதிப்பதற்கான முன்நிபந்தனை என்னவென்றால், அந்த அமைப்பின் நடவடிக்கை "குற்றவியல் சட்டத்திற்கு எதிரானதாக இருக்க வேண்டும்" அல்லது "அரசியலமைப்பு ஒழுங்குமுறை மற்றும் சர்வதேச புரிதல் சிந்தனைகளுக்கு எதிரானதாக" திரும்பி இருக்க வேண்டும், இந்த தெளிவற்ற பத்தி, மோசடி செய்வதற்கு கதவை திறந்துவிடுகிறது.

இதுநாள் வரையில், நவ-நாஜி அமைப்புகள் போன்ற சிறிய வன்முறை குழுக்கள் மட்டுமே அமைப்பு சட்டத்தின் கீழ் தடைவிதிக்கப்பட்டுள்ளன. ஒரு இணைய பதிப்பை, அல்லது, அவ்விதத்தில் ஏதேனுமொரு இடதுசாரி அமைப்புக்கு எதிராக அச்சட்டம் பயன்படுத்தப்பட்டு இருப்பது இதுவே முதல்முறையாகும். இவ்விதமாக, நடைமுறையில் இருப்பதை விமர்சிக்கும் எந்தவொரு வலைத் தளத்தையோ அல்லது களத்தையோ தணிக்கை செய்வதற்கான அல்லது தடை விதிப்பதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. ட்வீட்டர் வழியாக சமர்பிக்கப்பட்ட ஒரு விசாரணைக்கு விடையிறுத்து உள்துறை அமைச்சகம் உறுதிபடுத்தியவாறு, “குறைந்தபட்சம் இரண்டு நபர்களைக் கொண்ட நிர்வாக குழுவுடன்" உள்ள எந்தவொரு வலைத் தளமும் "ஓர் அமைப்பு என்ற பரந்த கருத்துருவின் அர்த்தத்தில் அமைப்புகள் சட்டத்தில் சம்பந்தப்படிருப்பதாக" அரசாங்கம் கருதுகிறது, அது "உரிய முன்நிபந்தனைகள் பூர்த்தியானால், தடுக்கப்படலாம்.”

linksunten.indymedia.org வலைத் தளம் மீதான தடையானது, இடதுசாரி மற்றும் முற்போக்கு இணைய பிரசுரங்களைத் தணிக்கை செய்வதற்கான மற்றும் ஒடுக்குவதற்கான திட்டமிட்ட முயற்சிகளில் இதுநாள் வரையில் இல்லாத உச்சக்கட்டமாகும். அரசுக்கு சொந்தமான மற்றும் பெருநிறுவன கட்டுப்பாட்டிலான ஊடகங்கள் அவற்றின் கருத்துக்கள் மீதான ஏகபோகத்தை இழந்து வருகின்றன என்பதோடு, அதிகரித்த எண்ணிக்கையிலானவர்கள் அவர்களின் சொந்த கருத்துக்களை உருவாக்கி வருகிறார்கள் என்பதைக் குறித்து ஆளும் வர்க்கம் எச்சரிக்கை அடைந்துள்ளது. “போலி செய்திகள்" அல்லது "வெறுப்பு உரைகளை" தடுப்பதற்காக என்ற இற்றுப்போன சாக்குபோக்கின் கீழ், அவர்கள் அரசியல் எதிர்ப்பு வளர்வதைத் தடுக்க முயன்று வருகின்றனர்.

ஏப்ரலில், தேடுபொறி பெருநிறுவனம் கூகுள் அறிமுகப்படுத்திய புதிய நெறிமுறைகள், சோசலிச, முற்போக்கு மற்றும் போர்-எதிர்ப்பு வலைத் தளங்களின் உள்ளடக்கத்தை அதன் தேடல் முடிவுகளில் மிகத்தீவிரமாக பின்னுக்குத் தள்ளியது. இந்த தணிக்கை நடவடிக்கைகள் ஜேர்மன் அரசாங்க அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டன. கூகுளின் பொறியியல் துறைகான துணை தலைவர் பென் கோம்ஸ் அந்த அறிவிப்பு வெளியிடுவதற்கு சற்று முன்னதாக ஜேர்மனிக்கு விஜயம் செய்து, ஒளி/ஒலிபரப்பு ஆணைக்குழுவின் கூட்டம் ஒன்றில் பங்கெடுத்திருந்தார். உலக சோசலிச வலைத் தளமே இந்நடவடிக்கைகளால் மிகவும் பாதிக்கப்பட்ட தளமாகும், கூகுள் வழியாக வரும் அதன் பயனர் எண்ணிக்கை கடுமையாக சரிந்தது.

ஜூன் மாத முடிவில், ஜேர்மன் நாடாளுமன்றம் (Bundestag) வலையமைப்பு ஒழுங்கு சட்டம் (Network Enforcement Law) என்றழைக்கப்படுவதை நிறைவேற்றியது, அது பேஸ்புக், ட்வீட்டர், யூடியூப் மற்றும் கூகுள் போன்ற சேவை வழங்குனர்களை தணிக்கை அதிகாரியாக பாத்திரம் வகிக்க பணித்தது. நீதித்துறையின் எந்தவொரு தீர்ப்பும் இல்லாமல், இந்நிறுவனங்கள் 24 மணிநேரங்களுக்குள் "வெளிப்படையான சட்டவிரோத தகவல்களை" அழித்துவிட வேண்டுமாம். இல்லையென்றால், அவை 50 மில்லியன் யூரோ வரையில் அபராதங்கள் குறித்த அச்சுறுத்தலை முகங்கொடுக்கின்றன. “வெளிப்படையாக சட்டவிரோதமானது" எது என்பது, துல்லியமாக, நீதிமன்றத்திற்கு வெளியே, பிரதான பெருநிறுவனங்கள் மற்றும் அரசு அதிகாரிகளால் தீர்மானிக்கப்படும்.

இந்த சகல அபிவிருத்திகளை கணக்கில் எடுத்து பார்த்தால், நாஜி சர்வாதிகாரத்திற்குப் பின்னர் பார்த்திராததை போன்ற சர்வாதிகார கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன என்ற உணர்வை ஒருவர் பெறுகிறார். இணைய தணிக்கை மேற்கொள்வதற்கான ஜேர்மன் அரசாங்கத்தின் முயற்சிகள், ஜேர்மன் ஊடகங்கள் வழமையாக விமர்சிக்கின்ற, சீனா மற்றும் துருக்கிய சர்வாதிகார ஆட்சிகளது நடவடிக்கைகளோடு அதிகரித்தளவில் ஒப்பிடக்கூடியதாக உள்ளன.

ஜேர்மன் அரசாங்கத்தின் தணிக்கையை கண்டித்த வெகுசில அமைப்புகளில் ஒன்றான, எல்லைகளில்லா செய்தியாளர்கள் அமைப்பு, “இது சர்வதேச அளவில் தொந்தரவுபடுத்தும் சமிக்ஞையாகும், மேலும் ஜேர்மன் அதிகாரிகளைப் போல நடந்து கொள்ள உலகெங்கிலுமான ஒடுக்குமுறை ஆட்சிகளுக்கு ஒரு சாக்குபோக்கை வழங்குகிறது,” என்று குறிப்பிடுமளவிற்கு சென்றது. பத்திரிகை சுதந்திரம் என்பது "அசௌகரியப்படுத்தும் பதிப்பகங்களது நடவடிக்கைகள் தாங்கிக் கொள்ள முடியாதளவிற்கு இருந்தாலும் கூட, அவற்றிற்கும்" பொருந்தும் என்று அந்த அமைப்பின் செயற்பாடுகளுக்கான இயக்குனர் Christian Mihr தெரிவித்தார்.

ஜேர்மனியில் உள்ள Indymedia இன் இரண்டாவது துணை அமைப்பான de.indymedia.org, இது இத்தடையால் பாதிக்கப்படவில்லை, "இடதுசாரி இயக்கம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் மீதான கடுமையான தாக்குதலாக" இந்நகர்வை வர்ணித்தார்.

இதற்கு எதிர்முரணாக, பிரதான ஊடகங்களோ இத்தடைக்கு பெரிதும் ஆதரவாக இருந்தன. குறிப்பாக பத்திரிகை சுதந்திர பாதுகாப்பு அவர்களின் சொந்த நாட்டைத் தொந்தரவுக்கு உள்ளாக்குகின்றது என்றால், அதில் சம்பந்தப்படுவதென்பது ஜேர்மன் பத்திரிகை அலுவலங்களில் பெரிதும் இல்லாமல் போயுள்ளது.

“Indymedia மீதான தடை சரியானதே, ஆனால் போதுமானளவிற்கு தொலைதூரம் போகவில்லை,” என்று பேர்லினை மையமாக கொண்ட Tagesspiegel ஒரு தலையங்கத்திற்கு தலைப்பிட்டது, Frankfurter Allgemeine Zeitung இதழோ அத்தடையை பேச்சு சுதந்திரத்திற்கான ஒரு வெற்றியாக கொண்டாடும் அளவுக்குச் சென்றது! “துல்லியமாக கூறுவதானால், சக்திவாய்ந்தவர்களின் ஆட்சிக்கு எதிராக வீதிகளில் இறங்குபவர்கள் இத்தடையை வரவேற்க வேண்டும்,” என்று பிராங்க்பேர்ட் பங்குச்சந்தையின் அந்த ஊதுகுழல் எழுதியது. “அது பேச்சு சுதந்திரத்தையும் மற்றும் அமைதியாக பாதிப்பின்றி ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்தையும் பாதுகாக்கிறது,” என்றது.

அரசியல் கட்சிகளும் இத்தடையை ஆமோதித்தன. பசுமை கட்சி மற்றும் இடது கட்சி பதவிகளில் இருப்பவர்களிடம் இருந்து தனித்தனி விமர்சனங்கள் மட்டுமே வந்தன. நீதித்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் (சமூக ஜனநாயக கட்சி, SPD) ட்வீட்டரில், “தீவிரவாதம் எத்தரப்பில் இருந்து வந்தாலும், அதற்கு நம்மிடையே இடமில்லை—இணையத்திலும் கூட கிடையாது,” என்று குறிப்பிட்டார். பேர்லின் உள்துறை செனட்டர், Andreas Geisel (SPD), வெளிப்படையாக அத்தடையை வரவேற்றதுடன், சரியான திசையில் எடுக்கப்பட்ட ஒரு படியாக குறிப்பிட்டார்.

பத்திரிகை சுதந்திரம் மீதான தணிக்கை மற்றும் ஒடுக்குமுறை என்பது ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வரவிலிருந்து பிரிக்கவியலாததாகும். மக்களின் முதுகுக்குப் பின்னால், அரசியல் மற்றும் இராணுவத்தின் செல்வாக்கான வட்டாரங்கள் தேர்தலுக்குப் பின்னர் ஒரு பாரிய இராணுவ கட்டமைப்புக்கு தயாரிப்பு செய்து வருகின்றன.

Handelsblatt கடந்த வாரயிறுதியில் எழுதுகையில், ஜேர்மனி "கடுமையான புவிஅரசியல் நெருக்கடிகளது,” “சூறாவளியின் மையத்தில்" நிற்கிறது, ஏனென்றால் "எல்லைக்கடந்த வர்த்தகத்தை இந்தளவிற்கு வேறெந்த நாடும் சார்ந்தில்லை,” என்றது. “பொருளாதார தேசியவாதி ட்ரம்ப் தேர்வானதை தொடர்ந்து, தாராளவாத உலக ஒழுங்கிற்கு ஒரு உத்தரவாளராக" அமெரிக்க இப்போது இல்லை. “அந்த தலைமை வெற்றிடத்தை" இப்போது ஜேர்மனி பூர்த்தி செய்து, உலகளாவிய பொலிஸ்காரராக அது பாத்திரம் ஏற்றாக வேண்டும் என்று எழுதியது. வரவிருக்கும் நான்காண்டுகளில் ஜேர்மனி கையாள வேண்டியுள்ள “அரசியல் நெருக்கடிகளில்", கொரியா, வெனிசூலா, தென் சீனக் கடல், துருக்கி, சிரியா, வட ஆபிரிக்கா மற்றும் அரபு தீபகற்ப நெருக்கடிகளையும், அத்துடன் "பிரிட்டன் வெளியேற்றத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்" ஏற்படும் நெருக்கடிகளையும் அப்பத்திரிகை உள்ளடக்கியது.

“உள்நாட்டின் முகப்பில்" எழும் எதிர்ப்பை ஒடுக்குவதன் மூலமாக மட்டுமே அதன் இராணுவவாத திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும் என்பது ஜேர்மன் ஆளும் உயரடுக்கிற்கு முழுமையாக நன்கு தெரியும். ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் கொடூரமான கடந்த நூற்றாண்டு குற்றங்களைத் தொடர்ந்து, பெரும்பான்மை மக்கள் இராணுவவாதம் மற்றும் போருக்குத் திரும்புவதை எதிர்க்கின்றனர். உலகிலேயே மிகவும் சமநிலையற்ற நாடுகளில் ஒன்றான ஜேர்மனி, வர்க்க போக்கில் ஆழமாக துருவமுனைப்பட்டுள்ளது. இதை Handelsblatt குறிப்பிடுகையில், வரவிருக்கும் நாட்களில் "மக்கள் பாதுகாப்பிற்கும் மற்றும் நம் தேசத்தின் தற்காப்பிற்கும்" தேவைப்படும் "மிகப்பெரும் தொகைகள்" “வேறெங்காவது இருந்து வரவேண்டும்" —அதாவது பெயரிட்டு கூறுவதானால் கூலிகள் மற்றும் சமூக செலவினங்கள்— என்று குறிப்பிட்டது.

முதலாம் உலக போரின் போது, ஆளும் வர்க்கம் ரோசா லூக்சம்பேர்க் போன்ற போர் எதிர்ப்பாளர்களை சிறையில் அடைத்தது, அவர் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் ஒப்புக்கொண்ட "போருக்கான நிதி ஒதுக்கீட்டை" (Burgfrieden Politik) எதிர்த்தார். வைமார் குடியரசில், மீள்ஆயுதமயப்படுத்தலை கண்டித்த Carl von Ossieztky போன்ற இதழாளர்கள், சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் நாஜிக்கள் தொழிலாளர்களின் இயக்கத்தையும் சகல அரசியல் எதிர்ப்பையும் வன்முறையாக நசுக்கி, இரண்டாம் உலக போருக்கு பாதையைத் தயார் செய்தனர்.

ஜேர்மனியின் ஆளும் உயரடுக்கு, உலக போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் தற்காலிகமாக மட்டுமே ஒதுக்கி வைத்திருந்த, அதன் சர்வாதிகார பாரம்பரியங்களுக்கு மீண்டுமொருமுறை திரும்பிக் கொண்டிருக்கிறது. இப்போது ஒவ்வொன்றும், தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்கள் சுயாதீனமாக அரசியல் விவகாரங்களுக்குள் தலையிடுவதில் தங்கியுள்ளது. இதுவே ஜேர்மன் சோலிச சமத்துவக் கட்சியின் (Sozialistische Gleichheitspartei) இலட்சியமாகும். ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) மட்டுமே, போருக்கும் முதலாளித்துவத்திற்கும் எதிரான நோக்கம் கொண்ட ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் கூட்டாட்சி தேர்தலில் போட்டியிடுகிறது, மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் ஒரு சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்ப போராடி வருகிறது.