ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump announces aggressive sanctions against trade with North Korea

வட கொரியாவுடனான வர்த்தகத்திற்கு எதிராக ஆக்கிரோஷமான பொருளாதாரத் தடைகளை ட்ரம்ப் அறிவிக்கிறார்

By Mike Head
22 September 2017

ஐ.நா. பொதுச் சபையை பாசிசவாத வெறிப் பேச்சுக்கான தளமாக பயன்படுத்தி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வட கொரியாவை “முற்றிலுமாக அழிக்கப்போவதாக” அச்சுறுத்தியதற்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர் நேற்று, பியோங்யாங்குடன் வர்த்தக தொடர்புடைய நிதி உறவுகளை வைத்திருப்பதாக குற்றம்சாட்டிய நாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீதான தண்டனைக்குரிய அபராதங்களுக்கு அச்சுறுத்துகின்ற புதிய பொருளாதாரத் தடைகளை வெளியிட்டார்.

வட கொரியாவுடனான வர்த்தகம் குறித்த சர்வதேச நிதியளிப்பை நிறுத்துவதற்கு ட்ரம்ப் அதிரடியான நிர்வாக உத்தரவு ஒன்றை வெளியிட்டார். வெளிநாட்டு வங்கிகளையும், நிதி நிறுவனங்களையும் இலக்கு வைப்பதன் மூலமாக, இந்த தடையை மீறும் நிறுவனங்களைக் கொண்டிருக்கும் எந்தவொரு நாட்டிற்கும் எதிராக பதிலடி கொடுக்கும் அச்சுறுத்தலின் பின்னணியில், இந்த உத்தரவு வட கொரியாவுடன் வர்த்தகம் செய்வதற்கு அமெரிக்க வற்புறுத்தலிலான நிஜமானதொரு தடையாணையை விதிக்கின்றது.

இந்த சமீபத்திய ஒருதலைப்பட்சமான அமெரிக்க பொருளாதாரத் தடைகளின் அதிகரிப்பு, இந்த மாதம் ஐ.நா. பாதுகாப்புச் சபை மூலமாக அமெரிக்கா ஏற்கனவே அழுத்தம் கொடுத்திருந்த தண்டனைக்குரிய தடைகளை விடவும் வாஷிங்டன் தனது சொந்த சூறையாடும் காரணங்களை முன்னிட்டு கொரிய தீபகற்பத்தின் மீது அதிகரித்துள்ள பதட்டங்களை மேலும் அதிகரிக்கவும், விரிவுபடுத்தவும் செய்கின்றது.

வட கொரிய வர்த்தகத்தில் 90 சதவிகிதத்தைக் கொண்டிருப்பதாக கூறப்படும் சீனா மீது தான் முக்கியமாக தெளிவான இலக்கு வைப்பதாக ட்ரம்ப் நிர்வாகத்தின் நகர்வு இருக்கின்றபோதும், ரஷ்யா மற்றும் ஐரோப்பிய சக்திகள் உள்ளிட்ட பிற நாடுகளையும் அது அச்சுறுத்தும்.

“வட கொரியாவின் ஆணுஆயுத திட்டம் நமது உலகின் சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் கடுமையானதொரு அச்சுறுத்தலாக உள்ளது, அதிலும் மற்றவர்கள் இந்த குற்றவியல்தனமான, போக்கிரித்தனமான ஆட்சிக்கு நிதிரீதியாக ஆதரவளிப்பது என்பது ஒத்துக்கொள்ள முடியாதது,” என்றும் “வெளிநாட்டு வங்கிகள் தெளிவானதொரு தெரிவை எதிர்கொள்ளும்: அமெரிக்காவுடன் வணிகம் செய்யுங்கள் அல்லது சட்ட விரோத வட கொரிய ஆட்சியுடனான வர்த்தகத்தை எளிதாக்கிக் கொள்ளுங்கள்” என ட்ரம்ப் அச்சுறுத்திக் கூறினார்.

இந்த கருத்துக்கள் மீண்டும் அதன் மீதுதான் யதார்த்தத்தை திருப்புகிறது. இது தான் அமெரிக்க அரசாங்கம், வேறு எந்த நாட்டையும் மீறுகின்ற அளவில் பாரிய இராணுவ செலவினங்களையும், அணுஆயுத படைக்கலங்களையும் கொண்டிருப்பதோடு, கடந்த கால் நூற்றாண்டு காலமாக ஒன்றை அடுத்து மற்றொன்று என்பதாக அதன் ஆக்கிரோஷமான போர்களை தொடுத்துள்ள நிலையில், தற்போது, பழமையான ஆயுத திறன் கூட இல்லாத வட கொரியா போன்ற வளங்குன்றிய சிறிய நாட்டிற்கு எதிராக மிகப்பெரிய போர் அச்சுறுத்தலை முன்வைக்கின்றது.

இரண்டு நாட்களுக்கு முன்னர், வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் க்கும், பியோங்யாங் ஆட்சிக்கும் மரண அச்சுறுத்தல் ஒன்றை ட்ரம்ப் விடுத்தார். “ராக்கெட் மனிதன் தனக்கும், தனது ஆட்சிக்குமான ஒரு தற்கொலை பணியில் ஈடுபட்டுள்ளார்,” என்றும் “அமெரிக்கா அதற்கு தயாராகவும், விருப்பமுடையதாகவும், வல்லமை கொண்டதாகவும் உள்ளது” என்றும் ட்ரம்ப் அறிவித்தார். மேலும், வட கொரியாவுடன் “வர்த்தகத்தை எளிதாக்கும்” எந்தவொரு நாட்டை நோக்கியும் இந்த போர் வெடிப்பு அச்சுறுத்தல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்பது உட்குறிப்பாக தெரிகிறது.

வட கொரியாவிற்கு பொருட்கள், சேவைகள் அல்லது தொழில்நுட்பங்களை வழங்குவதாக குற்றம்சாட்டப்பட்ட எந்தவொரு நிறுவனத்தையும் இலக்கு வைப்பதாக உள்ள ட்ரம்பின் நிர்வாக உத்தரவு அமெரிக்க கருவூலத்தின் அதிகாரத்தை வலுப்படுத்துகிறது. “வட கொரிய வர்த்தகத்துடன் இணைந்த குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு தெரிந்தே உதவுகின்ற எந்தவொரு வெளிநாட்டு வங்கியையும் இலக்கு வைக்கும் அதிகாரத்தை” கருவூலத்திற்கு இது வழங்கும் என ட்ரம்ப் தெரிவித்தார்.

பரந்த பல்வேறுபட்ட வட கொரிய தொழில்கள், துறைமுகங்கள், வர்த்தகம் மற்றும் வங்கி சேவைகள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள எந்தவொரு அரசு அல்லது அமைப்பிற்கு அனுமதி வழங்கும் அதிகாரம் அமெரிக்க கருவூல செயலாளர் Steven Mnuchin இன் கைகளில் உள்ளது. “இந்த ஆட்சிக்கு ஆதரவளிக்கும் எவரும்…. அவர்கள் எங்கு இருப்பினும் அவர்களை இலக்கு வைக்கும் வகையில் கருவூல அதிகாரத்தை இது கணிசமாக விரிவுபடுத்தும்” எனவும் Mnuchin தெரிவித்தார்.

கடந்த 180 நாட்களுக்குள் எந்தவொரு கப்பலோ அல்லது விமானமோ வட கொரியாவிற்கு சென்றிருந்தால் அவை அமெரிக்காவிற்கு வருகை தருவதை இந்த புதிய நடவடிக்கைகள் தடை செய்யும் என்று வெள்ளை மாளிகை தகவல் அறிக்கை தெரிவித்தது. வட கொரிய கப்பல்களுடன் கப்பலுக்கு-கப்பல் பொருள் பரிமாற்றங்களில் ஈடுபடும் எந்தவொரு கப்பலுக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தும்.

அமெரிக்க பொருளாதாரத் தடைகள், வட கொரியாவிற்கு எதிரான அமெரிக்க அச்சுறுத்தல்களின் தீவிரப்பாடு குறித்த சீனா மற்றும் ரஷ்யாவின் ஆட்சேபனைகளையும், ஜேர்மன் மற்றும் பிரான்ஸின் கவலைகளையும் ஆத்திரமூட்டும் வகையில் மீறுகின்றன. ஐ.நா. வீட்டோ அதிகாரத்தை கொண்டிருக்கும் சீனா மற்றும் ரஷ்யா இரு நாடுகளுமே இந்த மாத தொடக்கத்தில் விதிக்கப்பட்ட ஐ.நா.வின் சமீபத்திய பொருளாதாரத் தடைகளை ஒப்புக் கொண்டன, என்றாலும் வட கொரியாவை முடக்கி, ஸ்திரமற்ற நிலைமையை உருவாக்கும் பொருளாதார மற்றும் அரசியல் முறிவைத் தூண்டும் ஒட்டுமொத்த வங்கியியல் கட்டுப்பாடுகளை எதிர்த்தன.

வட கொரியாவின் அணுஆயுத மற்றும் ஏவுவணைத் திட்டங்களை நிறுத்தவோ அல்லது தடை செய்யவோ புதிய பொருளாதாரத் தடைகள் வடிவமைக்கப்படவில்லை என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் வெளிப்படையாக தெரிவித்தனர். வாஷிங்டனின் ஐ.நா.தூதர் நிக்கி ஹேலி பின்வருமாறு அறிவித்தார்: “கிம் இன் நடத்தையை இது அவசியம் மாற்றும் என்றும் அர்த்தமல்ல.”

பதிலாக, வட கொரிய ஆட்சியை எப்பொழுதும் இயங்கவிடாது கட்டுக்குள் வைப்பதற்கும், அணுசக்தி தாக்குதலுக்கான போலிக்காரணமாக வாஷிங்டன் அதைப் பற்றிக்கொண்டு இராணுவ விடையிறுப்பை தூண்டுவதற்கும் இந்த பொருளாதாரத் தடைகள் நோக்கம் கொண்டிருக்கின்றன. “நாங்கள் போரை விரும்பவில்லை” என்று ஹேலி செய்தியாளர்களிடம் கூறினார். ஆயினும்கூட அமெரிக்கா எப்பொழுதும், பதிலடி கொடுப்பதாகவும், அல்லது ஒரு இராணுவ அச்சுறுத்தலையிட்டு முன்கூட்டியே தாக்கி தடுப்பதாகவும் பொய் கூறியே போர்களைத் தொடுத்துள்ளது.

அதே நேரத்தில், தனது பிராந்திய மற்றும் உலகளாவிய மேலாதிக்கத்திற்கு முக்கிய தடையாக அமெரிக்கா கருதும் சீனாவை கீழறுப்பதான பரந்ததொரு மூலோபாய நோக்கத்தின் ஒரு அங்கமாகவே வட கொரியாவுடனான மோதல் குறித்த ட்ரம்ப் நிர்வாகத்தின் பொறுப்பற்ற விஸ்தரிப்பு உள்ளது என்ற யதார்த்தத்தை இந்த பொருளாதாரத் தடைகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

“இந்த நடவடிக்கை குறிப்பாக சீனாவை நோக்கி இயக்கப்படவில்லை” என்று Mnuchin கூறினார். ட்ரம்ப் அறிவிப்புக்கு முன்னதாகவே அவர்களுக்கு தெரிவிக்க சீன அதிகாரிகளை அவர் அழைத்ததாக தெரிவித்தார். இந்த மறுப்பும், பெய்ஜிங் உடனான தகவல் பரிமாற்றத்தை சுட்டிக்காட்டிமையும், சீனாதான் முக்கிய இலக்கு என்பதை மட்டுமே உறுதிப்படுத்துகிறது.

ஏற்கனவே பெய்ஜிங், அமெரிக்க பொருளாதாரத் தடைகள் குறித்த நகர்வுக்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் மத்திய வங்கி, ஐ.நா. பொருளாதாரத் தடைகளை கடுமையாக செயல்படுத்த நிதி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக முந்தைய நாளில் ராய்ட்டர்ஸ் பத்திரிகை அறிவித்தது. அவரது வழமையான குண்டர் பாணியில், ட்ரம்ப் இதை ஒரு வெற்றியாக கூறினார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு அவர் நன்றி தெரிவித்ததோடு, இந்த நடவடிக்கை “மிகவும் தைரியமானது” என்றும் “ஓரளவு எதிர்பாராதது” என்றும் தெரிவித்தார்.

அதே நாளில், அமெரிக்க அழுத்தத்திற்கு வெளிப்படையாக எதிர்வினையாற்றுவது போல, ஐரோப்பிய ஒன்றியம் வட கொரியாவில் முதலீடு மீதான தடை உட்பட ஐரோப்பிய ஒன்றிய எண்ணெய் ஏற்றுமதிகள் மீதான அதன் சொந்த பொருளாதாரத் தடைகளையும் அறிவித்தது.

இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, சீனாவும் ரஷ்யாவும், வட கொரியாவுக்கு எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்தும், வட கொரிய தொழிலாளர்களுக்கு வெளிநாடுகளில் தடை விதிக்கும் மற்றும் வெளிநாட்டு வருமானத்திற்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் அந்நாட்டின் ஜவுளி ஏற்றுமதிகளை தடை செய்யும் ஐ.நா. பாதுகாப்பு குழுவின் பொருளாதாரத் தடைகளுக்கு வாக்களித்தன. ஆகஸ்டில் பியோங்யாங்கிற்கு எதிராக விதிக்கப்பட்ட மற்றொரு சுற்று ஐ.நா. பொருளாதாரத் தடைகளை இது தொடர்ந்தது.

பல மாதங்களாக, வட கொரியா அதன் ஏவுகணை மற்றும் அணுஆயுத சோதனைகளை தற்காலிக நிறுத்தம் செய்வதற்கு பதிலீடாக, அமெரிக்கா கொரிய தீபகற்பம் மீதான தனது இராணுவ பயிற்சிகளை நிறுத்துவதற்கு ஒப்புக்கொள்ள  செய்யும் சீனா மற்றும் ரஷ்யாவின் “முடக்கத்திற்கான-முடக்கம்” முன்மொழிவுகளை அமெரிக்கா நிராகரித்துவிட்டது.

இரண்டு தசாப்தங்களாக அடுத்தடுத்து வந்த அமெரிக்க நிர்வாகங்கள், வட கொரிய ஆட்சியுடன் மேற்கொள்ளப்பட்ட முந்தைய உடன்படிக்கைகளை கிழித்தெறிந்துவிட்ட நிலையில், எந்தவொரு சமாதான உடன்படிக்கை மீதும் இந்த நிராகரிப்பு தொடர்கிறது.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தெஹ்ரானுடன் கையொப்பமிட்ட 2015 உள்நாட்டு அணுஆயுத ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள ட்ரம்ப் நிர்வாகம் புதனன்று அச்சுறுத்தியபோது, அமெரிக்க போர்வெறி மேலும் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. ஈரான் ஒப்பந்தம் குறித்த மறுதலிப்பும், வட கொரியா உடனான எந்தவொரு ஒப்பந்தத்தையும் தடுக்கும் வாஷிங்டனின் உறுதிப்பாடு தொடர்பான இன்னுமொரு தெளிவான சமிக்ஞையையும் அனுப்புகிறது.

சமீபத்திய அமெரிக்க நடவடிக்கைகளுக்கு பெய்ஜிங் இன்னும் பகிரங்கமாக விடையிறுக்கவில்லை என்றாலும், ட்ரம்பின் ஐ.நா. உரைக்கு எச்சரிக்கையுடன் எதிர்வினையாற்றியது. செப்டம்பர் 20 அன்று People’s Daily தலையங்க எதிர்ப்புறக் கட்டுரை பின்வருமாறு தெரிவித்தது: “கொரிய தீபகற்பம் விளிம்பில் உள்ளது, இந்த மோசமான பதட்டங்கள், அதிகரித்த வார்த்தைகளாலும் செயல்களாலும் உருவாகின…. நெஞ்சை அதிரவைக்கும் ட்ரம்பின் அரசியல் உதவப்போவதில்லை, வட கொரிய ஆட்சியின் நிலைமை ஆபத்தில் உள்ளதால், மேலும் அபாயகரமான கொள்கைகளைக் கூட தொடருமாறு DPRK (வட கொரியா) ஐ மட்டும் கட்டாயப்படுத்தும்.”   

தலையங்கம் ஒரு வேண்டுகோளை வெளியிட்டது: “சீனா, DPRK ஐ தனது சொந்த நலன்களுக்காக தக்கவைத்துகொள்ள அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக, வட கொரிய விரிவாக்கத்தின் சுழற்சியை உடைக்கவும், அதனுடனான பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் அமெரிக்கா அதன் பெரும் வல்லமையையும் செல்வாக்கையும் கூடுதலாக பயன்படுத்த வேண்டும்.”

அந்த வேண்டுகோள், மில்லியன் கணக்கில் உயிர்களை கொன்றொழிக்கும் கொரிய தீபகற்பம் மீதான பேரழிவுகரமான மோதல்களின் அபாயத்தை அதிகரிக்கச் செய்யும் போர் மற்றும் அணுஆயுத நிர்மூலமாக்கல் குறித்த போர்வெறி கொண்ட அச்சுறுத்தல்களை விடுக்கும் அமெரிக்க நிர்வாகத்தின் காதுகளில் செவிடன் காதில் ஊதிய சங்காயின.