ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump provokes North Korean counter-threats and heightens war danger

ட்ரம்ப் வட கொரிய எதிர்ப்பு அச்சுறுத்தல்களை தூண்டுவதோடு போர் அபாயத்தையும் அதிகரிக்கிறார்

By Peter Symonds
23 September 2017

இந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையில் ஜனாதிபதி ட்ரம்பின் வெறித்தனமான மற்றும் அச்சுறுத்தலான உரையை அடுத்து, அமெரிக்காவிற்கும் வட கொரியாவிற்கும் இடையேயான சொற்போர்கள் தீவிரமடைந்து, பேரழிவுகர இராணுவ மோதலுக்கான அபாயம் அதிகரித்து வருகின்றது.

வட கொரியா “முற்றிலுமாக அழிக்கப்படும்” என்ற ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு பதிலடியாக வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் நேற்று தொலைக்காட்சி செய்தி ஒன்றில், அமெரிக்கா அதற்கு “துயரமிக்க விலைகொடுக்க நேரிடும்” என எச்சரித்தார். அவர், ட்ரம்பை "உலகின் கண்களுக்கு முன்பாக என்னையும் எனது நாட்டையும் அவமானப்படுத்திய" ஒரு “மனசிதைவுற்ற அமெரிக்க முதியவர்” என்று முத்திரை குத்தினார்.

குரூரமான முறையில் ட்ரம்ப், கிம் ஐ “ராக்கெட் மனிதர்” என்றும் அவர் “தற்கொலை பணியில்” ஈடுபட்டிருப்பதாகவும் பேசியுள்ளார். மேலும், வட கொரியாவின் உயர்மட்ட தலைவர்களை கொல்வதற்கு “சிரச்சேதம் செய்யும் குழுக்களை” அமெரிக்காவும் தென் கொரியாவும் தயார்படுத்தி வருகின்றன என்ற நேரடியான தனிப்பட்ட அச்சுறுத்தலையும் விடுத்துள்ளார்.

“வரலாற்றிலேயே மிகக் கொடூரமான போர் அறிவிப்பு ஒன்றை” ட்ரம்ப் விடுத்துள்ளார் என்று கிம் அறிவித்ததோடு, “வரலாற்றிலேயே மிகக் கடுமையான எதிர்நடவடிக்கை” மூலமாக அதற்கு பதிலடியும் கொடுக்கப்படும் என்றும் அச்சுறுத்தினார்.

கிம் இன் அறிக்கை வெளியிடப்பட்ட சிறிது நேரத்துக்குள், வட கொரிய வெளியுறவு அமைச்சர் ரி யோங்-ஹோ பியோங்யாங்கின் பதிலடி “பசிபிக்கில் H ரக குண்டின் மிகுந்த சக்திவாய்ந்த பெரும் வெடிப்பாக இருக்கக்கூடும்” என கருத்துரைத்தார். எனினும், அவர் உடனடியாக இதையும் சேர்த்துக்கூறினார்: “தலைவர் கிம் ஜோங்-உன் ஆல் உத்தரவிடப்படும்போது, அது எந்த மாதிரியான நடவடிக்கையாக இருக்கும் என்பது பற்றி எங்களுக்கு கருத்துரைக்க முடியாது.”

வட கொரியாவால் பசிபிக் பெருங்கடல் பகுதியில் மேற்கொள்ளப்படும் நீண்ட தூர ஏவுகணை பிரயோகம் மற்றும் அணுஆயுத வெடிப்பு போன்ற பொறுப்பற்ற நடவடிக்கைகளை, தென் கொரியா அல்லது ஜப்பானுக்கு எதிரான அச்சுறுத்தலின் சாத்தியமாக கொண்டு, வட கொரியா மீதான அமெரிக்க இராணுவ தாக்குதலுக்கான போலிக்காரணமாக மிகஎளிதாக பற்றிக்கொள்ள முடியும்.

வட கொரியாவை சுற்றிவளைத்து அதனை ஒரு மூலையில் முடக்குவதற்கான இந்த அபாயகர இராஜதந்திர நெருக்கடி கொடுக்கும் முக்கிய பொறுப்பு ட்ரம்ப் நிர்வாகத்தையே சாரும். நிலக்கரி, கடல் உணவு, ஜவுளி, இரும்பு மற்றும் பிற கனிமங்கள் உள்ளிட்ட அதன் ஏற்றுமதிகளுக்கு தடை விதித்தும், அதன் முக்கிய எண்ணெய் பொருட்கள் இறுக்குமதியை குறைத்தும் வந்த அடுத்தடுத்த ஐ.நா. தீர்மானங்கள் அந்நாட்டின் வர்த்தகத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

கடுமையான நடவடிக்கைகள் குறித்து சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதரவை கூட பெற முடியாத நிலையில், அமெரிக்கா, வட கொரியாவுடன் வர்த்தக தொடர்புள்ள நிதி ரீதியான உறவுகளை கொண்டிருக்கும் எந்தவொரு நாடு அல்லது நிறுவனத்தின் மீது அதன் சொந்த ஒருதலைப்பட்சமான தடையை வியாழனன்று அறிவித்துள்ளது. வட கொரியாவுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு வங்கியையும் அமெரிக்க வங்கியியல் மற்றும் நிதிநிலை அமைப்பில் இருந்து ஒதுக்கிவிட வகைசெய்யும் அதிரடியான நிர்வாக உத்தரவு ஒன்றை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.

“மனிதயினத்திற்கு பேரழிவைத்தரும் ஆயுதங்கள் எனத் தெரிந்தே அவற்றை அபிவிருத்தி செய்யும் வட கொரியாவின் முயற்சிகளுக்கு நிதியளிப்பு செய்யும் வருவாய் ஆதாரங்களில், எங்களது இந்த நிர்வாக உத்தரவு வெட்டுக்களை ஏற்படுத்தும்” என்று ட்ரம்ப் தெரிவித்தார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அமெரிக்கா, அதன் போர் நடவடிக்கைக்கான ஒரு படியாக, வட கொரியா மீது ஒரு முழுமையான வர்த்தக மற்றும் நிதி ரீதியான தடையாணையை ஒருதலைப்பட்சமாக சுமத்த முயன்று வருகிறது.

அமெரிக்க வெளியுறவு செயலர் றெக்ஸ் ரில்லர்சன், வட கொரியாவுடனான அபாயகரமான நிலைப்பாட்டிற்கு இராஜதந்திர தீர்வை காண்பதற்கே அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது என அறிவித்தார். எனினும், ட்ரம்ப், வட கொரிய தலைவர் “ஒரு பைத்தியக்காரர்” எனவும், அவர் “முன்னொருபோதும் இல்லாத வகையில் சோதிக்கப்படுவார்!” எனவும் போர்வெறி கொண்ட மற்றொரு ட்வீட் செய்து மீண்டும் கிம் ஐ கடுமையாக தாக்கினார்.

ரில்லர்சனின் கருத்துக்கள் ஒருபுறமிருந்தாலும், ட்ரம்ப், வட கொரியாவுடனான பேச்சுவார்த்தைகளை அவர் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டதாக பலமுறை அறிவித்தார். கடந்த வார இறுதியில், ஐ.நா.வின் அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி, ஐ.நா. பாதுகாப்புச் சபை மூலமான அனைத்து இராஜதந்திர தெரிவுகளையும் அமெரிக்கா பயன்படுத்தி தீர்த்துவிட்டதென அறிவித்ததோடு, மேலும் அவர், “(அமெரிக்க பாதுகாப்பு செயலர்) மாட்டிஸ் குறித்து எனக்கு எந்தவித சிக்கலும் கிடையாது, ஏனென்றால் அவர் ஏராளமான (இராணுவ) தெரிவுகளை கைவசம் வைத்துள்ளார் என்றே நான் நினைக்கிறேன்” என்று சேர்த்துக் கூறினார்.

பியோங்யாங்கில் ஒரு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைத் தூண்டுவதன் மூலமாகவோ அல்லது போரின் மூலமாகவோ அதன் அரசாங்கத்தை அழிக்கவே அமெரிக்கா விரும்புகிறது என்பதாக வட கொரியா தெளிவாக முடிவுக்கு வந்துள்ளதோடு, அமெரிக்க அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு வெறிபிடித்ததொரு முயற்சியாக அதன் அணுஆயுத படைகலத்தை அபிவிருத்தி செய்து வருகின்றது.

வட கொரிய தலைவர் கிம் நேற்று தனது அறிக்கையில், ஐ.நா.வில் ட்ரம்பின் அச்சுறுத்தல்கள் “என்னை திகிலுறச்செய்வதற்கு அல்லது நிறுத்துவதற்கு மாறாக, நான் தேர்ந்தெடுத்த பாதை சரியானது, மேலும் இறுதிவரை நான் பின்பற்ற வேண்டிய பாதையும் அது தான் என்று என்னை நம்பவைத்தன” என்று அறிவித்தார்.

ஐ.நா.வில் தெஹ்ரானுக்கு எதிரான ட்ரம்பின் போர்வெறி கொண்ட கருத்துக்கள், மற்றும் ஈரானுடனான 2015 அணுசக்தி ஒப்பந்தத்தை கீழறுக்க அல்லது இரத்து செய்ய ஏதுவாக அதில் அமெரிக்கா திருத்தங்களைக் கோருவது போன்ற நகர்வுகள், பியோங்யாங்கின் அணுசக்தி திட்டத்தை முடுக்கிவிடும் உறுதிப்பாட்டை மட்டுமே வலுப்படுத்தச் செய்யும். வாஷிங்டனுடனான எந்தவொரு ஒப்பந்தமும் பயனற்றது என்ற முடிவுக்கு மட்டுமே வட கொரியா வர முடியும்.

1994 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் வட கொரியா அமெரிக்காவுடன் மேற்கொண்ட இரண்டு அணுவாயுதங்களை அகற்றும் உடன்படிக்கைகள் வாஷிங்டனாலேயே நாசப்படுத்தப்பட்டது. அமெரிக்காவும், சர்வதேச ஊடகங்களும் பியோங்யாங் ஏமாற்றும் எண்ணத்தோடு செயற்படுவதாக தொடர்ச்சியாக அதனை குற்றம்சாட்டி வந்த போதிலும், 2001 இல் புஷ் நிர்வாகம் ஆட்சிக்கு வந்தவுடன் 1994 இல் ஒப்புக்கொள்ளப்பட்ட கட்டமைப்பை சீர்குலைத்ததோடு, “தீய அச்சின்” ஒரு பாகமாக 2002 இல் வட கொரியாவை கண்டனம் செய்தது. பியோங்யாங்குடன் ஒருதலைப்பட்சமாக அது அடைந்த 2007 ஒப்பந்தத்தை மூழ்கடித்து, மிகவும் கடுமையான சோதனை நடவடிக்கைகளை கொண்டிருக்கும் ஒரு உடன்படிக்கையை 2008 இல் வலியுறுத்தியது.

தங்கள் ஆயுத திட்டங்களை கைவிட்டு, இன்னும் கூடுதலான ஊடுருவும் கண்காணிப்புக்களை ஏற்றுக்கொள்ளும் அமெரிக்க கோரிக்கைகளுக்கு சரணடைந்த அரசாங்கங்களின் தலைவிதியை பியோங்யாங் ஆட்சி நன்கு அறிந்திருக்கிறது. ஈராக் மற்றும் லிபியா ஆகிய இரு நாடுகளிலும் ஆட்சிகளை கவிழ்க்கவும், அவர்களது தலைவர்களை கொல்லவும் அமெரிக்கா இராணுவ ரீதியாக தலையிட்டுள்ளது.

ஐ.நா.வில் ட்ரம்பின் பேச்சு ஈரானிலும் இதேபோன்ற எதிர்வினையை தூண்டியுள்ளது. இராணுவ அணிவகுப்பு ஒன்றில் நேற்று பேசுகையில், ஈரான் ஜனாதிபதி ஹாசன் ருஹானி, “உலக அரசியலுக்குள் வந்திருக்கும் ‘அயோக்கியத்தனமான’ புதுமுகங்களால் இந்த உடன்படிக்கை அழிக்கப்படக்கூடியதாக இருக்குமானால் அது மிகுந்த பரிதாபத்திற்குரிய விடயமாக இருக்கும்” என்று கூறி 2015 அணுசக்தி ஒப்பந்தத்தின் மீதான ட்ரம்பின் தாக்குதலுக்கு விடையிறுத்தார்.

ஈரான் தனது இராணுவ வலிமையை பலப்படுத்தும் தடுக்கப்படமுடியாத உரிமையை ருஹானி உறுதியாக பாதுகாத்தார். மேலும், “நாங்கள் எங்களது ஏவுகணை திறன்களை பலப்படுத்துவோம். எங்கள் நாட்டை பாதுகாக்க நாங்கள் யாருடைய அனுமதியையும் பெறப்போவதில்லை. நாங்கள் எங்களது ஏவுகணைகளை வலுப்படுத்துவது மட்டுமல்ல, எங்கள் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப் படை அனைத்தும் எப்பொழுதும் மக்களால் ஆதரவளிக்கப்பட்டே வந்திருக்கின்றன” என்றும் கூறினார்.

இராணுவ அணிவகுப்பில், 2,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைதூர மட்டத்திலானதும், மற்றும் இஸ்ரேல் உட்பட மத்திய கிழக்கின் பெரும்பாலான பகுதிகளை தாக்கும் திறன் கொண்டதுமான புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை (Islamic Revolutionary Guards Corps) வெளிப்படுதிக் காட்டியது.

வடகொரியாவிற்கு எதிரான அவரது போர் வெறித்தனமான அச்சுறுத்தல்களை செய்கையில், பியோங்யாங்கிற்கு எதிரான முடக்குகின்ற பொருளாதார தடைகளை தடுக்க முயற்சித்துள்ள சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளையும் சேர்த்து எதிர்கொள்வதற்கும் ட்ரம்ப் தயாரிப்பு செய்து வருகிறார். அமெரிக்க பொருளாதாரத் தடைகளுடன் வட கொரியாவுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாட்டையும் இலக்கு வைக்கும் விதமாக, பெய்ஜிங் மற்றும் மாஸ்கோவுடனான ஒரு தீவிர மோதல் போக்கில் வாஷிங்டனை நிலைநிறுத்துகிறார்.

அதே நேரத்தில், ஈரானுடனான 2015 அணுசக்தி ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம், ட்ரம்ப் நிர்வாகம், ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதன் பின்னர் தெஹ்ரானுடன் வர்த்தகத்தையும், மூதலீட்டையும் விரிவுபடுத்தியுள்ள பெரும் ஐரோப்பிய சக்திகளுடன் ஏற்கனவே நிலவும் கூர்மையான பதட்டங்களை மேலும் அதிகரிக்க செய்கிறது. வாஷிங்டனின் ஒருதலைப்பட்சவாதத்தை எதிர்கொள்கையில், அமெரிக்காவின் நீண்டகால நட்பு நாடுகள் உள்ளிட பெரும் சக்திகள் கூட தங்களது சொந்த பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை பாதுகாக்க இராணுவ வழிவகைகள் மூலமே முடியும் என்ற முடிவுக்கு வருவர்.

திருகுச் சுருளான புவி-அரசியல் பதட்டங்களும், போர் அபாயமும் வெறுமனே தனிநபரான ட்ரம்ப் மற்றும் அவரது பொறுப்பற்ற அரசியலின் விளைபொருளல்ல. மாறாக முதலாளித்துவத்தின் மோசமடைந்துவரும் நெருக்கடி மற்றும் அதன் தீர்க்கமுடியாத முரண்பாடுகளில் இருந்து மிக அடிப்படையாக எழுகின்றது. அமெரிக்க ஏகாதிபத்தியம், அதன் உலக மேலாதிக்கத்திற்கு தடையாக இருக்கும் வட கொரியா, ஈரான் அல்லது எந்தவொரு நாட்டின் மீதும் போர் தொடுப்பதாக அச்சுறுத்துவதன் மூலம், விரைவில் உலகளாவிய மோதலுக்குள் இறக்கிவிடும் ஒரு வெடிகிடங்கை உருவாக்கியுள்ளது.