ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sixteen years after 9/11: lies, hypocrisy and militarism

9/11 சம்பவத்திற்கு பதினாறு ஆண்டுகளுக்குப் பின்னர்: பொய்கள், பாசாங்குத்தனம் மற்றும் இராணுவவாதம்

Bill Van Auken
12 September 2017

அமெரிக்காவில் 2,900 பேருக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்ட செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களின் பதினாறாம் நினைவாண்டு தினம், மீண்டுமொருமுறை திங்களன்று நினைவுகூரப்பட்டது. உலக வர்த்தக மையத்தின் அழிக்கப்பட்ட இரட்டை கோபுரங்கள் இருந்த இடத்திலும், கடத்தப்பட்ட நான்கு விமானங்களில் ஒன்றில் பயணியர் அந்த விமானத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் பெற சண்டையிட்டதன் காரணமாக பென்சில்வேனியாவின் வயல்வெளியில் விழுந்த இடத்திலும் மற்றும் பென்டகனிலும் நினைவுதின நிகழ்வுகள் நடந்தன.

ஒரு குற்றகரமான மற்றும் பிற்போக்குத்தனமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் பெயர்களை வாசித்து அஞ்சலி செலுத்துவதற்காக ஆயிரக் கணக்கானவர்கள் நியூ யோர்க் நகரில் ஒன்றுகூடினர். அந்த பயங்கரவாத தாக்குதல் அமெரிக்காவினதும் உலக ஏகாதிபத்தியத்தினதும் நலன்களுக்கு மட்டுமே சேவையாற்றின, அப்போதிருந்து அவை தங்களின் ஆக்கிரமிப்பு போரை நியாயப்படுத்தவும், உலகெங்கிலும் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் நடத்தவும் அச்சம்பவங்களை சுரண்டியுள்ளன.

9/11 சம்பவத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் பகிர்ந்து கொண்ட உண்மையான துயரமும் நினைவுகூர்ந்த உணர்வுகளும், மீண்டுமொருமுறை அமெரிக்க அதிகாரிகள் நடத்திய அற்பத்தனமான உத்தியோகபூர்வ நினைவுகூரல் நிகழ்வுகளின் பாசாங்குத்தனத்துடன் கூர்மையாக முரண்பட்டிருந்தன.

இரண்டு தரப்புக்கும் இடையிலான இந்த நீண்டகால பிளவு, திங்களன்று பாசிசவாத சூத்திரதாரி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்நாளில் பென்டகனில் ஆற்றிய பிரதான உரையில் ஒரு புதிய மட்டத்தை எட்டியது. இரட்டை கோபுரங்களை இடித்ததால் 40 வோல் ஸ்ட்ரீட் இல் உள்ள அவரின் சொந்த கட்டிடம் மன்ஹட்டனின் கீழ்பகுதியில் மிக உயர்ந்த கட்டிடமாக மாறிவிட்டதாக —இதுவும் பொய்— அத்தாக்குதல் நடந்த அன்றைய நாள் தனது முதல் விடையிறுப்பில் பெருமைபீற்றிய டொனால்ட் ட்ரம்ப், அவரது முந்தைய உரைகளில் இருந்து மெருகூட்டிய வெற்றுரைகளை வழங்கியதுடன், மீண்டும் அமெரிக்க தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தி, “தீமைகள் மற்றும் அழிவுகளுக்கான காட்டுமிராண்டித்தனமான சக்திகளுக்கு எதிராக நமது நாட்டை காப்பாற்ற" சூளுரைத்தார்.

செப்டம்பர் 11 “நமது ஒட்டுமொத்த உலகையும் மாற்றிவிட்டது" என்ற பழகி போன மற்றும் ஓய்ந்து போன வார்த்தைகளையே மீண்டும் ஒலித்தார். கடந்த 16 ஆண்டுகளாக அமெரிக்க அரசியல் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், முடிவில்லா போர்கள், பொலிஸ் அரசு நடவடிக்கைகள் அனைத்தும், முன்அனுமானிக்காத அந்த முன்எதிர்பார்த்திராத செப்டம்பர் 11 சம்பவங்கள் என்று கூறப்படுவதற்கு விடையிறுப்பாக கொண்டு வரப்பட்டவையே தவிர, அதற்கு முன்னர் என்ன நடந்ததோ அதனோடு இவற்றிற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதாக அந்த வார்த்தைகள் அர்த்தப்படுத்துகின்றன.

அதாவது எரிச்சலூட்டும் சுய-சேவைக்கு உதவும் இந்த பொய், கடந்து சென்ற ஒவ்வொரு ஆண்டும் தெளிவாகி உள்ளது.

இந்த நினைவுதினத்திற்கும் முன்னதாக, அரபு உலகில் வாஷிங்டனின் நெருக்கமான கூட்டாளியான சவூதி அரேபியாவை செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கான தயாரிப்புடன் சம்பந்தப்படுத்தி புதிய தகவல்கள் வெளிவந்தன, அந்த விமானங்களைக் கடத்திய 19 பேரில் 15 பேர் சவூதி பிரஜைகளாவர். நினைவுதினத்தின் மீது எந்த முக்கியத்துவத்தையும் பிரசுரிக்காத பெருநிறுவன ஊடகங்கள், இந்த புதிய ஆதாரங்களையும் பெருமளவிற்கு இருட்டடிப்பு செய்தன. எஞ்சிய மனித உடல்பாகங்களை அடையாளம் காண உதவிய நியூ யோர்க் நகர மருத்துவ ஆய்வாளரின் முயற்சிகளை விரிவாக விவரித்த ஒரு தலையங்கத்தைக் கொண்டு, நியூ யோர்க் டைம்ஸ் இந்த நினைவுதினத்தைக் குறித்தது.

9/11 சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 1,400 பேரின் குடும்பங்களின் சார்பாக பெடரல் வழக்கு மனு ஒன்று, 9/11 தாக்குதல்களுக்கு வெளிப்படையாக ஒரு "வெள்ளோட்டமாக" இருந்த ஒன்றுக்கு வாஷிங்டனில் உள்ள சவூதி தூதரகம் 1999 இல் நிதி வழங்கியதற்கான ஆதாரங்களை முன்வைத்துள்ளது. இரண்டு சவூதி முகவர்கள் தங்களை மாணவர்களாக காட்டிக் கொண்டு பியோனிக்ஸ் இல் இருந்து வாஷிங்டன் டி.சி. க்கு அமெரிக்கா வெஸ்ட் விமானத்தில் பயணித்திருந்தனர், இவர்களது பயணச்சீட்டுக்கு சவூதி அரேபியா பணம் செலுத்தியது. அவ்விருவருக்கும் வேறு சில 9/11 விமானக் கடத்தல்காரர்களோடு ஆப்கானிஸ்தானின் அல் கொய்தா முகாம்களில் பயிற்சி அளிக்கப்பட்டிருந்ததாக அந்த வழக்கு மனு குறிப்பிடுகிறது. விமானத்தில் அவ்விருவரும், விமான உதவியாளர்களிடம் அவ்விமானம் குறித்து சில தொழில்நுட்ப கேள்விகள் கேட்டமை சந்தேகங்களை எழுப்பியதும், இரண்டு முறை விமான ஓட்டிகள் அறைக்குள் நுழையவும் அவர்கள் முயன்ற நிலையில், இது விமானிகளை அவசரமாக ஓஹியோவில் தரையிறக்க இட்டு சென்றது. அவ்விருவரும் FBI ஆல் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டனர் என்றாலும், அது எந்தவித வழக்கும் தொடுக்க முடிவெடுக்கவில்லை.

பல நீண்ட தொடர்ச்சியான வெளியீடுகளில் வெறுமனே சமீபத்தியதான இது, பெரிதும் தெளிவுபடுத்துவது என்னவென்றால் 9/11 சம்பவங்கள் ஒருபோதும் உயரிடங்களில் இருந்து கணிசமான போக்குவரத்தில் உதவிகளின்றி நடந்திருக்காது. இத்தாக்குதல்கள் "அனைத்தையும் மாற்றிவிட்டது" என்று மீண்டும் மீண்டும் கூறப்பட்டாலும், அவை எவ்வாறு நடந்தன என்பதை குறித்து ஒரு சுதந்திரமான மற்றும் புறநிலையான புலனாய்வுகள் எதுவும் கிடையாது. மேலும் அமெரிக்க வரலாற்றில் இது மிகவும் படுமோசமான உளவுத்துறை தோல்வி என்பது கண்கூடாக இருந்தாலும், எவரொருவரும் பணிநீக்கம் அல்லது பதவி குறைப்பு போன்றளவுக்கு கூட கணக்கில் கொண்டு வரப்படவில்லை.

கிடைத்திருக்கும் ஆதாரம் என்ன தெளிவுபடுத்துகிறது என்றால், 9/11 சம்பவத்தின் விமான கடத்தல்காரர்களில் பலர் அத்தாக்குதல்களுக்கு முன்னதாக இரண்டாண்டுகளாவது CIA மற்றும் FBI இன் கண்காணிப்பிற்குரிய நபர்களாக இருந்துள்ளனர் என்கின்ற போதினும், அவர்களால் நாட்டில் சுதந்திரமாக நுழைந்து, விமான ஓட்டிகளுக்கான பயிற்சி பள்ளிகளில் சேர முடிந்திருந்தது. சொல்லப்போனால், அவர்களில் இருவர் FBI உளவாளி ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தார்.

பொதுமக்களிடம் இருந்து 13 ஆண்டுகள் மூடிமறைக்கப்பட்டு வந்த பின்னர், 2016 இல் பெரிதும் திருத்தப்பட்ட ஆவணங்களில் இருபத்தி எட்டு பக்கங்கள், அந்த 9/11 சம்பவத்திற்கு முன்னதாக சவூதி உளவுத்துறை அதிகாரிகள் விமானங்களைக் கடத்தியவர்களுக்கு கணிசமானளவுக்கு பணம் பாய்ச்சி இருந்தனர் என்பதையும், அதேவேளையில் அவர்கள் குடியிருக்க வீடு பிடிப்பதிலும், விமானிகள் பயிற்சி பள்ளிகளில் சேர்வதற்கும் உதவியிருந்தனர் என்பதையும் நிறுவிக் காட்டின.

செப்டம்பர் 11 தாக்குதல்களை நடத்துவதில் சவூதி அரேபியா மிகவும் செயலூக்கத்துடன் இருந்தது என்ற போதிலும், சவூதி உளவுத்துறை சம்பந்தப்பட்டிருந்தது என்பது உண்மையில் அமெரிக்க அரசு எந்திரத்தின் ஒரு பிரிவும் அதில் சம்பந்தப்பட்டிருந்தது என்பதையே அர்த்தப்படுத்துகிறது. இது சூழ்ச்சி தத்துவங்களின் விடயமல்ல, மாறாக நிறுவப்பட்ட உண்மையாகும். இது, பின்னோக்கி பார்த்தால், 1980 களில் சோவியத் ஆதரவிலான ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிரான வாஷிங்டனின் அருவருக்கத்தக்க போரின் ஒரு அங்கமாக விளங்கிய இஸ்லாமிய குழுக்களால் ஆதரிக்கப்பட்டிருந்த அல் கொய்தா, ஆப்கானிஸ்தான் மற்றும் சிஐஏ சம்பந்தப்பட்ட மிக நிஜமான சூழ்ச்சிகளுடன் பிணைந்துள்ளது.

இத்தாக்குதல்கள் "அனைத்தையும் மாற்றிவிட்டது" என்பதற்கு பதிலாக, அவை நீண்டகாலமாக தயாரிப்பில் இருந்து வந்துள்ள இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு போலிக்காரணங்களை வழங்கின. அத்தாக்குதலுக்கு ஒரு தசாப்தத்திற்கு முன்னர் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை அடுத்து, ஆளும் வர்க்கம் உலக அரங்கில் அமெரிக்க முதலாளித்துவத்தின் வீழ்ச்சியைச் சரிகட்ட அமெரிக்க இராணுவ பலத்தைப் பிரயோகிப்பதற்காக ஒரு கொள்கையைத் தொடங்கியது. இப்புவியில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்திக்கான இரண்டு பிரதான பிரதேசங்கள், காஸ்பியன் பகுதி மற்றும் மத்திய கிழக்கின் மீது இராணுவ மேலாதிக்கத்தை பாதுகாப்பதற்காக ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் இலக்கில் வைக்கப்பட்டன.

9/11 இல் பாதிக்கப்பட்டவர்களின் பெயரில் நியாயப்படுத்தப்பட்ட இந்த முற்றிலும் குற்றகரமான முயற்சி, 1 மில்லியனுக்கும் அதிகமான ஈராக்கியர்கள் மற்றும் நூறாயிரக் கணக்கான ஆப்கானியர்களின் உயிரை எடுத்துள்ளதுடன், இரண்டாம் உலக போருக்குப் பின்னர் மிகப்பெரிய அகதிகள் நெருக்கடியை கட்டவிழ்த்துவிட்டது.

இந்த குற்றங்களை நியாயப்படுத்துவதற்காக —புஷ்ஷிடம் இருந்து ஒபாமாவிற்கும், ஒபாமாவிடம் இருந்து இப்போது ட்ரம்பிற்கும் கைமாற்றப்பட்ட— "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்பதை துணைக்கு இழுப்பது, இற்றுபோனதாக மாறியுள்ளது என்பது மட்டுமல்ல, மாறாக அடிப்படையிலேயே அபத்தமானதுமாகும். லிபியா மற்றும் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான போர்களில் அல் கொய்தா மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட இஸ்லாமியவாத போராளிகள் குழுக்களை அமெரிக்க ஏகாதிபத்தியம் பெரிதும் பினாமி தரைப்படைகளாக பயன்படுத்தியதன் விளைவாக, இதே கூறுபாடுகளின் முன்னொருபோதும் இல்லாத வளர்ச்சியும், இடைவிடாத இந்த 16 ஆண்டுகால அமெரிக்க ஆக்கிரமிப்பு போர்களின் விளைவுகளில் உள்ளடங்கும்.

அனைத்திற்கும் மேலாக, வாஷிங்டன் ஒரே நேரத்தில் வட கொரியாவுக்கு எதிராக அணுஆயுத போரைக் கொண்டு அச்சுறுத்தி வருவதுடன் அதன் பிரதான புவிமூலோபாய போட்டியாளர்களான ரஷ்யா மற்றும் சீனாவுன் அதிகரித்தளவில் அபாயகரமான மோதல்களைப் பின்தொடர்ந்து வருகின்ற நிலையில், வட ஆபிரிக்காவில் இருந்து மத்திய ஆசியா வரையில், பென்டகன் மற்றும் சிஐஏ ஆல் நடத்தப்பட்ட பல்வேறு போர்களும் தலையீடுகளும், விரைவாக ஓர் உலகளாவிய பெரும் மோதலாக உருவெடுத்து வருகிறது.

செப்டம்பர் 11 “அனைத்தையும் மாற்றிவிட" வில்லை, மாறாக அது ஜோர்ஜ் டபிள்யு. புஷ் எதை "இருபத்தோராம் நூற்றாண்டு போர்கள்" என்றழைத்தாரோ அவற்றினது தீவிரப்பாட்டின் ஒரு தொடக்கத்தைக் குறித்தது, அதாவது மனிதயினத்தை ஒரு மூன்றாம் உலக போருக்கு இட்டுச் செல்லும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதைக் குறித்தது.