ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

World Socialist Web Site calls for international coalition of socialist and anti-war websites to counter Internet censorship

உலக சோசலிச வலைத் தளம், இணைய தணிக்கையை எதிர்க்க சோசலிச மற்றும் போர்-எதிர்ப்பு வலைத் தளங்களின் ஒரு சர்வதேச கூட்டணிக்கு அழைப்புவிடுக்கிறது

By Niles Niemuth
18 January 2018

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த், ஜனவரி 16 அன்று, இணைய தணிக்கையை எதிர்க்க சோசலிச மற்றும் போர்-எதிர்ப்பு வலைத்தளங்களின் ஒரு சர்வதேச கூட்டணியை உருவாக்குவதற்கு அழைப்பு விடுத்தார்.

பத்திரிகையாளர் கிறிஸ் ஹெட்ஜஸ் உடன் இணைய தணிக்கைக்கு எதிர்ப்பை ஒழுங்கமைத்தல் எனும் நேரடி இணையவழி கலந்துரையாடலில் நோர்த் இந்த அழைப்பை விடுத்தார். அந்த இணையவழி உரையாடல் உலகெங்கிலும் இருந்து கணிசமான பார்வையாளர்களை ஈர்த்திருந்ததுடன், ஒளிபரப்பாகி 24 மணி நேரத்திற்குள் பேஸ்புக்கிலும் யூ-டியூப்பிலும் அது 15,000 க்கும் அதிக முறை பார்க்கப்பட்டது. அந்நிகழ்வை ஆதரித்து விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் அனுப்பி இருந்த ஓர் அறிக்கை அந்நிகழ்ச்சி ஒளிபரப்பின் போது வாசிக்கப்பட்டது.

“தாக்குதலுக்குள்ளாகி இருக்கும் வலைத் தளங்கள் மற்றும் தனிநபர்களின் பாதுகாப்பை ஒழுங்கமைக்கவும், இணைய சுதந்திரம், இணைய நடுநிலைமையை உறுதியாக பாதுகாக்கவும் ஒரு கூட்டணியை உருவாக்குவது அவசியமாகும்,” என்று நோர்த் தெரிவித்தார். “சோசலிசம் மற்றும் போர் எதிர்ப்புக்கு போராட பொறுப்பேற்பவர்கள்" அனைவரும் அக்கூட்டணியில் பங்குபற்றுமாறு அவர் வலியுறுத்தினார்,” அவர் தொடர்ந்து கூறுகையில், “உலக சோசலிச வலைத் தளமும் (WSWS) அனைத்துலகக் குழுவும் (IC), இந்த கோட்பாட்டுரீதியிலான அடித்தளத்தில், இதில் சம்பந்தப்பட்டுள்ள முக்கிய பிரச்சினைகளைப் புரிந்து கொள்பவர்களுடன் இணைந்து செயல்பட விரும்புகிறது,” என்றார்.

இணைய தணிக்கைக்கு எதிர்ப்பை ஒழுங்கமைத்தல்" இணைய நிகழ்வின் முழுமையான காணொளி

நோர்த் மற்றும் ஹெட்ஜஸ் க்கு இடையிலான விவாதம், வரலாற்று மட்டங்களிலான சமூக சமத்துவமின்மை உட்பட, இணையத்தைத் தணிக்கை செய்யவும் மற்றும் இணைய நடுநிலைமையை கைவிடுவதற்கு நடக்கும் முயற்சிகளின் அரசியல் உள்ளடக்கத்தை அம்பலப்படுத்தியது. நோர்த் மற்றும் ஹெட்ஜஸ் இருவருமே பேச்சு சுதந்திரம் உட்பட ஜனநாயக உரிமைகள் அழிக்கப்படுவதற்கும் மற்றும் போருக்கும் இடையிலான பிரிக்கவியலாத தொடர்பை வலியுறுத்தினர்.

ஹெட்ஜஸ் பின்வருமாறு குறிப்பிட்டார், “பெருநிறுவன முதலாளித்துவம், பூகோளமயமாக்கல், நவ-தாராளவாதம், இதை என்னவென்று அழைத்தாலும் சரி, அது நெருக்கடியில் உள்ளது. அனைத்தினும் முதலில், இந்த சித்தாந்தமே நம்பகத்தன்மை இழந்துவிட்டது. எந்தவொரு அரசியல் பிரிவினரிடமும் இப்போது இதற்கு எந்தவிதமான ஈர்ப்புசக்தியும் இல்லை. இதுவொரு பொய்யென்பது அம்பலமாகி உள்ளது… ஆளும் உயரடுக்கு, அவர்கள் நடத்தி வந்த அரசியல் நாடகத்தை அவர்களே பார்த்து அச்சமடைந்து போயுள்ளனர், குடியரசுக் கட்சியும் சரி ஜனநாயகக் கட்சியும் சரி, அங்கே தலைமை, அது புஷ் பரம்பரையாக இருக்கட்டும் அல்லது கிளிண்டன் பரம்பரையாக இருக்கட்டும், அல்லது பராக் ஒபாமாவாக இருக்கட்டும், அனைவருமே பெருநிறுவன அரசின் சேவகர்களாகி விட்டனர்.”

நோர்த்தும் ஹெட்ஜஸ் உம் பேச்சு சுதந்திரத்தை ஒடுக்குவதற்கு பயன்படுத்தப்படும் பொய்க் காரணங்களை விளங்கப்படுத்தியதுடன், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான எந்தவொரு இயக்கமும் ஜனநாயகக் கட்சியிடமிருந்து சுயாதீனமாக இருக்க வேண்டியதன் அவசியம் உட்பட, அதற்கான அரசியல் மூலோபாயங்கள் குறித்தும் விவாதித்தனர்.

“எதிர்ப்பினை திரும்பவும் ஓர் உயிரற்ற அமைப்புமுறைக்குள், அதாவது ஜனநாயகக் கட்சிக்குள், திருப்பி விட உயரடுக்குகள் முயல்கின்றன, அதில் அவை பெரிதும் வெற்றியும் பெற்றுள்ளன என்பது உண்மை தான்,” என்று ஹெட்ஜஸ் குறிப்பிட்டார். “இதனால் தான், நான் பேர்ணி சாண்டர்ஸை ஆதரிக்கப்போவதில்லை. அனைத்திலும் முக்கியமானது என்னவெனில், அவர் அக்கறை கொள்ளவில்லை அல்லது அது அவருக்கு ஒரு பொருட்டாக இல்லை என்பதால் அல்ல, ஏனென்றால்-  நாடெங்கிலும் இருந்து அவருக்கு கிடைத்த ஆற்றல் மற்றும் பணம் அனைத்தையும் அவர் ஹிலாரி கிளிண்டனுக்கு வாக்களியுங்கள் என்று ஒவ்வொருக்கும் கூறி வீணடித்தார். அவர் "புரட்சி" என்ற வார்த்தையைக் கூட பயன்படுத்தினார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.”

டேவிட் நோர்த்தும் கிறிஸ் ஹெட்ஜஸ் உம்

தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச புரட்சிகர இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒரு சுதந்திரமான மற்றும் வெளிப்படையான இணைய வலையமைப்பு அவசியம் என்பதை நோர்த் வலியுறுத்தினார். “அனைத்திற்கும் மேலாக, முதலாளித்துவ நெருக்கடியைக் குறித்த புரிதலை அபிவிருத்தி செய்வது அவசியம் என்பதையும், ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்திற்காக போராடுவது மிக முக்கிய பிரச்சினை என்றும் நாங்கள் நம்புவதால், இணைய சுதந்திரத்தை நாங்கள் பாதுகாக்க விரும்புகிறோம்.”

நிகழ்வின் போக்கில், இடதுசாரி மற்றும் போர்-எதிர்ப்பு வலைத் தளங்கள் மீதான தணிக்கைக்கு எதிராக WSWS இன் பிரச்சாரத்தை நோர்த் மீளாய்வு செய்தார், கூகுள் தேடல் முடிவுகளில் WSWS ஐ சுட்டும் சுட்டிகள் பெரிதும் குறைந்ததை எடுத்துக்காட்டிய WSWS, கடந்த ஆண்டு இப்பிரச்சாரத்தைத் தொடங்கியது.

இந்த சரிவு ஓர் மென்பொருள் வழிமுறை மேம்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட தற்செயலான விளைவல்ல, மாறாக போர்-எதிர்ப்பு மற்றும் முதலாளித்துவ-எதிர்ப்பு கருத்துக்களைப் பிரசுரித்த வலைத் தளங்கள் அணுகப்படுவதைத் தடுப்பதற்கான ஒரு திட்டமிட்ட முயற்சி என்பதை நோர்த் விவரித்தார். "சோசலிசம்,” “ட்ரொட்ஸ்கிசம்,” மற்றும் "ரஷ்ய புரட்சி,” என்ற சொற்கள் உட்பட, முன்னதாக ஜூன் மாத வாக்கில் கூகுள் பயனர்களை WSWS க்கு இட்டு வந்த 150 முதன்மை தேடல் சொற்களில், 145 சொற்கள் இப்போது அவ்வாறு செய்வதில்லை.

“முதலாளித்துவத்தின் [வி]மர்சகர்கள், ஏகாதிபத்தியத்தின் விமர்சகர்கள், மற்றும் என்னைப் போன்ற இக்கட்டமைப்பை விமர்சிப்பவர்கள்,” ஹெட்ஜஸ் கூறினார், “விளிம்போரங்களுக்கு, நியூ யோர்க் டைம்ஸ் போன்ற பிரதான பத்திரிகைகளுக்கு வெளியே தள்ளப்பட்டுள்ளனர், அதில் நான் 15 ஆண்டுகள் வேலை செய்தேன். இப்போது சாரத்தில் நாம் என்ன பார்க்கிறோம் என்றால் எவருக்கும் கூறுவதற்கு அவர்களிடம் எந்த எதிர்வாதமும் இல்லை. ஆகவே இந்த விளிம்போரத்திற்கு தள்ளப்பட்ட விமர்சகர்கள் இலக்கில் வைக்கப்படுகின்றனர், ஏனென்றால் ஆளும் உயரடுக்குகள் இந்த விமர்சகர்களை ஆபத்தாகவும் பலமானவர்களாகவும் காண்கின்றன. உலக சோசலிச வலைத் தளம் முதலாளித்துவத்திற்கு எதிரான விமர்சனங்களைப் பிரசுரிப்பதுடன், தொழிலாள வர்க்கம் ஒடுக்கப்படுவதற்கு எதிராக நிற்கின்றது. அதே போல (நாம் பேசி வரும் இன்னும் பல) விரல் விட்டு எண்ணக்கூடிய வலைத் தளங்கள்; Counterpunch, Alternet தளம் மிகவும் நன்றாக உள்ளன. இவை இலக்கில் வைக்கப்படுகின்றன ஏனென்றால் ஆளும் உயரடுக்குகள் இந்த விமர்சகர்களை ஆபத்தாகவும் பலமானவர்களாகவும் காண்கின்றன.”

அந்த விவாதத்திற்கு அசான்ஜ் மற்றும் ஆவணப்பட இயக்குனர் ஜோன் பில்ஜெர் மற்றும் போர்-எதிர்ப்பு நடவடிக்கையாளர் சிண்டி ஷீஹன் ஆகியோர் சேதிகள் அனுப்பி இருந்தனர், அவை ஒளிபரப்பின் போது வாசிக்கப்பட்டன.

ஐந்தரை ஆண்டுகளாக இலண்டனின் ஈக்வடார் தூதரகத்தில் சிக்கி உள்ள அசான்ஜ், இந்நிகழ்வுக்காக அவர் "WSWS ஐ பாராட்டுவதாக" தெரிவித்தார். ஆளும் உயரடுக்கிற்கு இணையம் முன்னிறுத்தும் அபாயத்தைச் சுட்டிக்காட்டிய அதேவேளையில், அவர் இணைய கருத்து சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அவர்களின் முயற்சிகளை எச்சரித்தார்.

“மக்கள் தங்களையும் மற்றவர்களையும் கல்வியூட்டுவதற்கான ஆற்றலில் இணையம் ஒரு புரட்சியைக் கொண்டு வந்துள்ளது, அதேவேளையில் இதன் விளைவாக ஏற்பட்டுள்ள ஜனநாயக சூழல் நடப்பு ஸ்தாபகங்களின் மையத்தையே உலுக்கியுள்ளது,” என்று அசான்ஜ் தெரிவித்தார். “சமூகரீதியிலும், மற்றும் நிதியியல்ரீதியிலும் தற்போதைய உயரடுக்குகளுடன் இணைந்துள்ள கூகுள், பேஸ்புக் மற்றும் சீனாவில் உள்ள இவற்றிற்கு இணையானவை, விவாதங்கள் மீதான கட்டுப்பாட்டை மறு-ஸ்தாபிதம் செய்ய நகர்ந்துள்ளன. வெறுமனே இதுவொரு சீர்படுத்தும் நடவடிக்கை அல்ல. கண்டறியவியலாத செயற்கையான அறிவின் பலமான பாரிய சமூக தாக்கம், மனிதயினம் உயிர் வாழ்வதற்கான அச்சுறுத்தலாக உள்ளது.” (அசான்ஜின் முழு அறிக்கையை இங்கே வாசிக்கலாம்)

இணைய தணிக்கையை நியாயப்படுத்துவதில் பிரதான ஊடகங்கள் வகிக்கும் பாத்திரத்தை பில்ஜெர் சுட்டிக்காட்டினார்: “தாராளவாத முதலாளித்துவம் பெருநிறுவன சர்வாதிகார வடிவத்தை நோக்கி நகர்கையில், மாற்றுக் கருத்துக்களைச் சகித்துக் கொண்டிருந்த பிரதான ஊடகங்களோ உவமையாக கூறுவதானால் அடிமட்டத்திற்கு கீழே சென்றுவிட்டன. பத்திரிகையாளர்கள் புதிய ஒழுங்கமைப்பின் சுற்றுவட்டத்திலேயே சுற்றி கொண்டிருக்கையில், இதுவொரு வரலாற்று திருப்பமாகும். ரஷ்ய-விரோத விஷமப் பிரச்சாரம் மற்றும் #MeToo வேட்டையாடல்களைப் பாருங்கள், அதுவும் முக்கியமாக கார்டியன் மற்றும் நியூ யோர்க் டைம்ஸ் போன்ற தாராளவாத பத்திரிகைகளில். சுதந்திரமான பத்திரிகையார்கள் பிரதான ஊடகங்களில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்ற நிலையில், உலக இணைய வலையமே ஆழமான விவாதத்திற்குரிய மற்றும் ஆதாரத்தை அடித்தளமாக கொண்ட பகுப்பாய்வின் ஆதாரமாக, உண்மையான பத்திரிகையியலாக, விளங்குகிறது.”

அமெரிக்க மக்களைப் போருக்கு ஆதரவாக கொண்டு செல்வதற்காக, ஆளும் வர்க்கம் இணையத்தில் வரும் எதிர்ப்பு குரல்களை மவுனமாக்க முயன்று வருகிறதென ஷீஹனின் அறிக்கை விவரித்தது.

“தேசிய பாதுகாப்பு என்பதன்கீழ் [இ]ந்த அரசு அதிருப்தியை ஒடுக்குவதற்காக மட்டுமின்றி, மாறாக நாம் எவ்விதத்தில் சிந்திக்க வேண்டுமென சாம்ராஜ்ஜியம் விரும்புகிறதோ அவ்விதத்தில் இணைய பயனர்களை வழி நடத்த இன்னும் நிறைய விதத்தில் சிந்தித்து கொண்டிருக்கிறது: மிகப்பெரிய சமூக ஊடக தளத்தின் உரிமையாளர் ஆணவத்தோடு, அதற்கு எதிரான சீற்றம் ஏதேனும் இருந்தாலும், ஆச்சரியப்படத்தக்க வகையில் அது மிகச் சிறியளவிலேயே இருப்பதாக ஒப்புக் கொண்டார் (நிறுவன பெயர் தவிர்க்கப்பட்டது). அடுத்து, போர் எந்திரத்துடன் நம்மைக் கட்டிப் போடுவதற்கு பிரச்சாரம் போதுமான வேகத்தில் செயற்படவில்லை என்றால், மிகவும் வசதியாக, ஆனால் பொய்யாக, ஹவாய் மக்களுக்கு அளிக்கப்பட்ட தொலைதூர ஏவுகணை எச்சரிக்கை போன்ற அந்த வேலையை இந்த ஊடகம் செய்துவிடாதா?”

Go to https://www.wsws.org/endcensorship/ to view the full discussion and join the fight against Internet censorship.