ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

සසප කොලොන්නාවේ සාලමුල්ල සහ දහම්පුර වැසියන් සමග සමාජවාදී වැඩපිලිවෙල සාකච්ඡා කරයි

இலங்கை சோ...யின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரச்சாரம்

சோ... கொலன்னாவை சாலமுல்ல மற்றும் தஹம்புற குடியிருப்பாளர்களுடன் சோசலிச வேலைத் திட்டத்தை கலந்துரையாடியது

By our reporters
12 January 2018

சோசலிச சமத்துவக் கட்சி பெப்பிரவரி 10 நடக்கவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 21 வேட்பாளர்களை நிறுத்தி கொலன்னாவை நகர சபைக்கு போட்டியிடுகின்றது. கடந்த வார முடிவில் சோ.ச.க. உறுப்பினர்கள், கொலன்னாவை சாலமுல்ல மாடிக் குடியிருப்புகளிலும் தஹம்புற பிரதேசத்திலும் செய்த பிரச்சாரத்தில், சோ.ச.க.யின் சர்வதேச சோசலிச வேலைத் திட்டம் சம்பந்தமாக ஆரோக்கியமான கலந்துரையாடல்களை நடத்தினர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.), ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உட்பட ஸ்தாபகத்தின் அனைத்து முதலாளித்துவ கட்சிகள், அதேபோல் முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற போலி இடது கட்சிகள் சம்பந்தமாக, அவர்கள் மத்தியில் வளர்ச்சியடைந்துள்ள பெரும் எதிர்ப்பு இந்த கலந்துரையாடல்களில் வெளிப்படையாகின.

ஒன்பது தேர்தல் தொகுதிகளைக் கொண்ட கொலன்னாவை நகர சபை பகுதி, கொழும்பு தலைநகருக்கு மிக அருகில் அமைந்துள்ள அதிகம் வறுமை நிறைந்த பகுதியாகும். கடந்த நூற்றாண்டில் வேலை தேடி கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு நகர்ந்த வறியவர்களுக்கு மேலாக, முப்பது ஆண்டுகால இனவாத யுத்தத்தாலும் 2004 சுனாமி பேரழிவினாலும் அகதிகளாக்கப்பட்டு கொழும்புக்கு இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் கொழும்பு மாநகர ஆட்சிப் பகுதிக்குள் இருந்த வறியவர்களின் குடிசைகள் இடித்து அகற்றப்பட்டதனால் இடம்பெயர்ந்தவர்களுமாக ஆயிரக்கணக்கான வறியவர்கள் கொலன்னாவை நகர எல்லைப் பகுதிக்குள் மோசமான வாழ்க்கை நிலைமைகளின் கீழ் குடியிருக்கின்றனர். சில காலங்கள் துறைமுகத்துக்கு அருகில் இருந்த தொழிற்சாலைகளில் வேலை செய்த தொழிலாளர்கள் அதிகம் வாழும் பிரதேசமான கொலன்னாவையில், கடந்த இரண்டு தசாப்தங்களுக்குள் அரச சேவைகளும் உற்பத்தி பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்ததால் ஏற்பட்ட இளைஞர் வேலையின்மை, வறுமை, வீடின்மை, போசாக்கின்மை போன்ற ஒரு தொகை சமூகப் பிரச்சினைகள் காணப்படுகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மாத்திரம் 2010 மற்றும் 2016ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, 2017 வெள்ளப் பெருக்க மற்றும் 2017 ஏப்பிரலில் மீதொடமுல்ல குப்பை மலை சரிந்து போனமை உட்பட பேரழிவுகள் காரணமாக கொலன்னாவை பிரதேசத்தில் குறைந்தபட்சம் 50 பேராவது கொல்லப்பட்டுள்ளதோடு நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. இதற்கு மேலாக டெங்கு, வாந்திபேதி மற்றும் சுவாச நோய்கள் காரணமாக சிறு பிள்ளைகள் உட்பட கனிசமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சகல அழிவுகளினதும் காரணமாக, மக்களின் சுகாதாரம், சமூக வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்துக்கும் ஏற்பட்டுள்ள தாக்கம் பெரியதாகும்.

கடந்த இராஜபக்ஷ அரசாங்கம் மற்றும் தற்போதைய சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம், பொது மக்களின் எதிர்ப்பை அலட்சியம் செய்து மீதொடமுல்லவில் குவித்த குப்பை மலை சரிந்து போனதில் குறைந்தபட்சம் 32 பேர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். 8 பேர் இன்னமும் காணாமல் போயுள்ளனர். 198 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் இதனால் துன்பப்படுவதோடு, 146 வீடுகள் முழுமையாக அல்லது பாதி சேதமாகியுள்ளன. பெயரளவிலான நட்ட ஈட்டை மட்டும் கொடுத்து, அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களை அலட்சியம் செய்துள்ளதோடு ஒரு சில குடும்பங்களுக்கு சிறிய வீடுகளை வழங்கியிருந்தாலும் அவற்றில் போதுமான வசதி கிடையாது.

இந்த நிலைமையின் கீழ், பிரதேச மக்கள் அரசியல் ஸ்தாபனத்தின் சகல அரசியல் கட்சிகள் சம்பந்தமான கடும் கோபம் மற்றும் அதிருப்தியுடன் இருக்கின்றனர். “மீதொடமுல்ல குப்பை மலைக்கு எதிரான மக்கள் இயக்கம்” என்பதன் மூலம் பிரதேச மக்களை மோசமாக ஏமாற்றிய முன்னிலை சோசலிசக் கட்சி சம்பந்தாமகவும் மக்கள் மத்தியில் அதே போன்ற அதிருப்தி இருக்கின்றது. உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தாம் வாக்குகளை இரத்துச் செய்வதாக அநேகமான குடியிருப்பாளர்கள் சோ.ச.க. பிரச்சாரகர்களிடம் கூறினர்.

கொலன்னாவை பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான ஆபத்தான வாழ்க்கை நிலைமையானது முதலாளித்துவ அமைப்பு முறை எதிர்கொண்டுள்ள சர்வதேச அளவிலான நெருக்கடியின் வெளிப்பாடு என தெளிவுபடுத்தி சோ.ச.க. உறுப்பினர்கள் மேற்கொண்ட கலந்துரையாடல்களுக்கு பிரதேசத்தில் உள்ள தொழிலாளர்கள், குடும்ப பெண்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஆர்வமான பிரதிபலிப்பு இருந்தது.


பிரியன்த

மீதொடமுல்ல அழிவின் பின்னர், ஆபத்துப் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள தனது வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட முச்சக்கர வண்டி சாரதியான பிரியன்த, வீடு இன்றி பல மாதங்கள் காத்திருந்த பின்னர் தனது குடும்பமும் சாலமுல்லவில் அமைந்துள்ள குறைந்த வறுமானம் பெறுவோருக்கான மாடி குடியிருப்பில் குடியேறியதாகவும், இல்லாமல் போன வீட்டுக்காக இதுவரை எந்த நட்ட ஈடும் கிடைக்கவில்லை எனவும் கூறினார். பொதுவில் மக்கள் மீது முன்னெடுக்கப்படும் தாக்குதல்களுக்கு மேலாக, அழிவுகரமான ஆபத்துக்களைப் பற்றி நன்கு அறிந்தும் குப்பை மலையை பராமரித்ததன் மூலம் செய்த குற்றத்தின் காரணமாக மக்களின் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ள அரசாங்கம், ஏமாற்று வேலைத் திட்டமாக மீதொடமுல்லவில் இடம்பெயர்ந்தவர்களில் இன்னொரு பகுதியினரை கடந்த மாதத்தில், வீட்டிற்கு எந்தவித உரிமையும் வழங்காமலேயே வாழ்வதற்குப் பொருத்தமற்ற இந்த வீடுகளில் குடியேற்றியுள்ளது.

அவர்களது பழைய வீடுகளில் உரித்து மற்றும் ஆவணங்கள் அனைத்தையும் அரசாங்கம் எடுத்துக்கொண்டுள்ளது. “இந்த சின்ன வீட்டைக் கொடுத்து எங்களுக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடுசெய்ய முடியாது, நாங்கள் இருந்த காணியின் மதிப்பீட்டு தொகையை உடனடியாக கொடுக்க வேண்டும் என நாங்கள் கடுமையாக கூறினோம். பிரதேச செயலகத்தின் முன்னிலையில் மறியல் போராட்டம் ஒன்றையும் நடத்தினோம். இந்த மாத கடைசியில் வாக்குறுதி கொடுப்பதாக அப்போது கூறினர். நாங்கள் இன்னமும் அதை எதிர்பார்த்திருக்கின்றோம்.”

இங்கு கருத்து தெரிவித்த பிரியன்தவின் நண்பரும் முச்சக்கர வண்டி சாரதியுமான ஒருவர், தான் சகல அரசியல் கட்சிகள் மீதும் நம்பிக்கை இழந்துள்ளதாக கூறினார். “நீங்கள் மட்டுமே இந்த பிரச்சினைகள் சம்பந்தமாக வெளிப்படையாகப் பேசுகின்றீர்கள். ஏனையவர்களுக்கு அப்படி பேச முடியாது. உரிமையும் கிடையாது. அவர்கள் சொல்வது ஒன்று செய்வது வேறொன்று.”

பிரதான முதலாளித்துவக் கட்சிகள் சிறிய கட்சிகள் ஊடாகவே ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளன என பிரியன்த மேலும் கூறினார். “சோசலிசஸ்டுகள் எனக் கூறிக்கொண்டு வரும் சிறிய கட்சிகள்தான் இந்த பெரிய கட்சிகளை அதிகாரத்தில் வைத்துக்கொண்டு இந்த ஏமாற்றை தொடர்வதற்கு வாய்ப்பளித்துள்ளன. அதனால் நாம் யாரை நம்புவது?”

திரைச்சீலை தொழிற்சாலையின் ஊழியரான பிரசாத் காஹந்தவல, தனது பிள்ளைகள் மற்றும் குடும்பத்துடன் சிறிய வீட்டில் வாழ்கின்றார். இந்தப் பிரதேசம் வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட பின்னர் இடம்பெயர்ந்து இருந்த பின்னர், மீண்டும் அந்த வீட்டுக்கு வந்துள்ள அவர், சோ.ச.க. பிரதிநிதிகளிடம் கூறியதாவது: “நாங்கள் வாழ்கின்ற நிலைமை சம்பந்தமாக எந்த வகையிலும் மகிழ்ச்சியடைய முடியாது. நாங்கள் எதிர்கொண்ட பேரழிவுகளின் பின்னர், எங்களுக்கு ஆரம்பத்தில் இருந்து வளர வேண்டியிருந்தது. முறையான நட்ட ஈடு கிடைக்கவில்லை. இப்போது இன்னொரு தேர்தல் வந்துள்ளது. இந்த தேர்தலின் பின்னர் முதலில் அதிகாரத்தில் இருந்தவர்களும் மீண்டும் பதவிக்கு வருவர். புதியவர்களும் வருவர். எனினும் எனது அனுபவங்களின் படி, எமது வாழ்கை நிலைமையில் மாற்றம் எதுவும் ஏற்படப் போவதில்லை என என்னால் கூற முடியும்.”

அவ்வாறு நடப்பது ஏன் என்பதை அவருடன் கலந்துரையாடிய பின்னர், அவர் கூறியதாவது: “அரசாங்கம் முதலாளிகளின் தேவைகளையே இட்டு நிரப்புகின்றது என்பது எனக்குத் தெளிவு. ரதுபஸ்வல சம்பவத்தில் துப்புரவான தண்ணீர் கேட்டுப் போராடிய மக்கள் மீதே பொலிசை ஏவி சுட்டுத் தள்ளினர். தண்ணீரை மாசுபடுத்திய தொழிற்சாலை உரிமையாளருக்கு அந்த கம்பனிக்கு எந்த தண்டனையும் கிடையாது. அரசாங்கம் யாருடைய தேவையை இட்டு நிரப்புகின்றது என்பது அங்கேயே தெளிவாகின்றது.

“தொழிலாளர்களுக்குத்தான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்க வேண்டியிருக்கின்றது. நாங்கள் கடன்களில் சிக்கிக்கொண்டுள்ளோம். வீட்டு வாடகை மற்றும் ஏனைய கட்டணங்களை செலுத்துவது கடினமாக இருக்கின்றது. மக்களின் இந்தப் பிரச்சினைகளுக்கு பதில் தேட வேண்டுமெனில், முதலாளித்துவ வர்க்கம் எம்மை ஆட்சி செய்வதை நிறுத்த வேண்டும் என நீங்கள் கூறும் கருத்துடன் நான் உடன்படுகின்றேன். முதலாளித்துவ வர்க்கத்தின் கையில் ஆட்சி இருந்தாலும், தொழிலாளர்கள் ஒன்றிணைந்தால் அதை விட பெரும் பலத்தை உருவாக்க முடியும். தொழிலாள வர்க்கம் தலைமை வகிப்பதற்கான புதிய அரசியல் இயக்கம் ஒன்றைக் கட்டியெழுப்ப ஒத்துழைக்க விரும்புகின்றேன்.”

சூலனி ஜயவர்தன என்ற 62 வயதான தாய், வாழ்வது கடினமாக இருப்பதனால் தேயிலை பொதிசெய்யும் நிறுவனத்தில் வேலை செய்து பெறும் சிறிய சம்பளத்தில் வாழ்க்கையை ஓட்டுவதாக கூறினார். குப்பை மலை சரிந்து போனதால் ஏற்பட்ட அழிவை நினைவுபடுத்திய அவர், 35 வயதான அவரது மகள், மகளது 11 வயது பிள்ளை, சூலனயின் தங்கையின் மகள் மற்றும் தனது மாமனாரும் உயிரிழந்ததாக கூறினார். “சடலங்கள் கிடைக்கவில்லை என அப்படியே மூடிவிடுவதற்குத்தான் அரசாங்கம் முயற்சித்தது. ஆனாலும் எங்களது முயற்சியில் நாங்கள் சடலங்களை தேடிப் பிடித்தோம். உயிரழந்த ஒருவருக்கு ஒரு இலட்சம்தான் கொடுத்தார்கள்” என அவர் கோபத்துடன் கூறினார்.

வெள்ளப் பெருக்கில் 2016 ஜூன் மாதத்தில் தனது வீடு மூழ்கிப் போனதையும் அவர் விளக்கினார். “மீதொடமுல்ல குப்பை மலையில் இருந்து வடிந்த தண்ணீரில் எட்டு அடி உயரத்துக்கு வீடு தண்ணீரில் மூழ்கியது. சகல பொருட்களும் அழிந்து போயின. வீடுகள் உடைந்து சேதமாகின. முதலில் மக்களின் எதிர்ப்பை தணிப்பதற்கு நட்ட ஈடு கொடுப்பதாக கூறினாலும், 20 ஆயிரம் ரூபாய்தான் இரண்டு கட்ட நட்ட ஈடாக கிடைத்தது. இந்த தொகை வீட்டை திருத்துவது ஒரு புறம் இருக்க, அதற்கு சக்கை அடிப்பதற்கு கூட போதாது.

“ஒன்றரை வருடங்களின் பின்னர், இப்போது தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அண்மையில் 150,000 ரூபாய் கொடுத்துள்ளனர். இவை தேர்தல் குண்டு என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இந்த தேர்தலில் எங்களது எந்தப் பிரச்சினையும் தீர்க்கப்படப் போவதில்லை என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும். இராஜபக்ஷ காலத்தில் அவரது தரப்பினரே முன்னேறினர், ஆனால் வறியவர்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை என்பதும் எமக்குத் தெரியும். முதலீட்டாளர்களுக்கு தேவையான வீதிகள், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை மட்டுமே கட்டியெழுப்பினர். இந்த அரசாங்கத்திலும் எந்த பிரயோசனமும் கிடையாது.” 14ம் திகதி சோ.ச.க. நடத்தும் கூட்டத்துக்கு வருவதாக அவர் கடைசியாக கூறினார்.


முகமட் பரீட்

முகமட் பரீட், தொழில் அமைச்சில் அலுவலக உதவியாளராக வேலை செய்தவர். அவர் கூறியதாவது: “வெள்ளப் பெருக்கில் எல்லா உபகரணங்களும் நாசமடைந்திருந்தாலும், கிடைத்தது 50,000 ரூபா நட்ட ஈடு. அற்ப திருத்த வேலைக்கு கூட அது போதாது. ஆட்சியாளர்கள் இந்த இடங்களில் வாழ்வதில்லை. அதனால் இவற்றை தீர்ப்பதற்கு அவர்களுக்கு அவசியம் இல்லை. எங்களது தேவைகளைப் பற்றி அவர்கள் யோசிப்பதில்லை. அவர்கள் தமது பதவிகளைப் பாதுகாப்பதிலேயே இருக்கின்றனர். குப்பை மலை சரிந்தமை, வெள்ளப் பெருக்கு, டெங்கு காய்ச்சல் போன்ற பாதிப்புகள், ஆட்சியாளர்கள் பொறுப்புச்சொல்ல வேண்டிய விடயங்களாகும்.

“இப்போது மீண்டும் அழகான நகரத்தை அமைப்போம் எனக் கூறிக்கொண்டு போஸ்டர் ஒட்டி வாக்கு கேட்கின்றார்கள். அவர்கள் இதைப்பற்றி தெரியாதவர்கள் அல்ல. பேசி அர்த்தமில்லை. தொழிலாளர்கள், நாடு, இனம், சேவை நிறுவனங்கள், தொழில் என்ற வகையில் பிளவுபட்டிருந்து சரிவராது. தொழிற்சங்க தலைவர்கள் ஆட்சியாளர்களுடன் சேர்ந்து போராட்டங்களைக் காட்டிக்கொடுப்பதனால் எதுவுமே செய்ய முடியாது. தொழிலாளர் அமைச்சில் வேலை செய்வதனால், நான் இந்த நிலைமையை நன்கு அறிந்துள்ளேன்.”