ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Mass protests against austerity and social inequality shake Iranian regime

சமூக செலவினக் குறைப்புக்கும் சமூக சமத்துவமின்மைக்கும் எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் ஈரானிய ஆட்சியை உலுக்குகிறது

By Keith Jones
3 January 2018

உணவு விலை உயர்வுகள், பாரிய வேலையின்மை, முன்பினும் அதிகரித்துவரும் சமூக சமத்துவமின்மை, மற்றும் இஸ்லாமிக் குடியரசின் கடுமையான சமூக செலவினக் குறைப்பு திட்டம் மற்றும் அரசியல் ஒடுக்குமுறை ஆகியவற்றிற்கு எதிராக கடந்த ஆறு நாட்களாக நடந்து வரும் போராட்டங்களால் ஈரான் அதிர்ந்து போயுள்ளது.

ஈரானின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான மஷ்ஹாத்திலும் மற்றும் அண்டை பகுதிகளான நெய்ஷாபர் மற்றும் கஷ்மாரின் மையப்பகுதியிலும் கடந்த வியாழனன்று தொடங்கிய போராட்டங்கள், பின்னர் தலைநகர் தெஹ்ரானுக்கும் மற்றும் மூன்று டஜனுக்கும் அதிகமான நகரங்களுக்கும் பரவி, பின்னர் நாடெங்கிலுமுள்ள சிறுநகரங்களுக்கும் பரவின.

அரசாங்க தகவல்களின்படி, போராட்டக்காரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான மோதலில் பாதுகாப்புப் படையின் பல உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் குறித்த தேசிய கணக்கு விபரம் கிடைக்கவில்லை என்றாலும், சனிக்கிழமையில் இருந்து தெஹ்ரானில் 450 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்நகர அதிகாரி ஒருவர் தெரிவித்தார், அத்தலைநகரின் தென்மேற்கில் சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு தொழில்துறை நகரமான அராக்கில் ஞாயிறன்று இரவு மட்டுமே 70 பேர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

அடுத்தடுத்த போராட்டங்கள் மற்றும் இயக்கத்தின் அளவைக் குறித்த தகவல்களை நசுக்குவதற்காக, சமூக ஊடக மென்பயனிகளான டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை, அரசு, முற்றுமுழுதாக இல்லையென்றாலும், முடக்கி உள்ளது.

ஈரானிய முதலாளித்துவ-மதகுருமார் ஆட்சியை உலுக்கி உள்ள போராட்டங்களின் அளவும் தீவிரமும், அடிமட்டத்திலிருந்து எழும் சவாலை ஒடுக்குவதற்காக இப்போது அந்த ஆட்சியின் எதிர்விரோத கன்னைகளை ஒருங்கிணைய தூண்டியுள்ளது. வாரயிறுதி வாக்கில், ஈரானிய ஜனாதிபதி ஹாசன் ருஹானி அறிவிக்கையில் ஈரானியர்களுக்கு அமைதியாக போராடுவதற்குரிய உரிமை உள்ளது என்று அறிவித்தவர், “வேலைவாய்ப்பின்மையை விட மிகப்பெரிய சவால் நமக்கு வேறொன்றுமில்லை,” என்பதையும் சேர்த்துக் கொண்டு, போராட்டக்காரர்களின் சமூக-பொருளாதார குறைகளைத் தீர்க்க அவர் அரசாங்கம் விரைவில் நடவடிக்கைகள் எடுக்குமென தெரிவித்தார்.

ஆனால் அவர் அமைச்சர்களும் பாதுகாப்பு முகமைகளுக்கான செய்தி தொடர்பாளர்களும், ஈரானிய புரட்சிப் படைகள் (IRGC) “இரும்புக் கரம்" பிரயோகிக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளதுடன், இப்போது போராட்ட இயக்கத்தை முறியடிக்கவும் சூளுரைத்து வருகின்றனர்.

இஸ்லாமிய குடியரசின் தலையாய தலைவர் அயெத்துல்லா அலி கமேனி மற்றும் IRGC துணை தளபதி ஜெனரல் ரசௌல் சனாயி முதற்கொண்டு முன்னாள் "சீர்திருத்தவாத" ஜனாதிபதி மற்றும் பசுமைக் கட்சியின் கூட்டாளி மொஹம்மத் கத்தாமி வரையில் எண்ணற்ற ஈரானிய தலைவர்கள், அரசு ஒடுக்குமுறையை நியாயப்படுத்துவதற்காக, ஈரானின் மூலோபாய போட்டியாளர்களே குண்டர்களின் வன்முறையைத் தூண்டிவிட்டு, அவர்களுக்கு ஆதரவாக தளவாட உதவிகள் வழங்கி வருவதாக குற்றஞ்சாட்டி உள்ளனர். இவ்வாறு செய்கையில், பலரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் ஜனாதிபதி பென்ஜமின் நெத்தெனியாகு ஆல் போராட்டங்களுக்கு ஆதரவாக கூறிய வாய்வீச்சுக்களையும், “ஈரானுக்குள் போர் நடத்த" சவூதி இளவரசர் மொஹம்மத் பின் சல்மானின் அச்சுறுத்தல்களையும் உயர்த்திக் காட்டுகின்றனர். இவர்கள் மூவரும் தெஹ்ரனில் ஆட்சி மாற்றத்திற்கு பகிரங்கமாக ஆதரவளிப்பவர்கள் என்பதோடு, ஈரான் மீது போர் தொடுக்க மீண்டும் மீண்டும் அச்சுறுத்தி உள்ளனர்.

ஆனால் தற்போதைய போராட்டங்களின் அலை, 2009 இல் பசுமைப் புரட்சி என்ற பதாகையின் கீழ் கட்டவிழ்ந்த போராட்டங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமான ஒரு வர்க்க குணாம்சத்தைக் கொண்டுள்ளது. அப்போது, வாஷிங்டன், நியூ யோர்க் டைம்ஸ், பிரெஞ்சு ஜனாதிபதி சார்க்கோசி மற்றும் ஏனைய ஐரோப்பிய தலைவர்களால் தூண்டிவிடப்பட்டு, ஈரானிய சமூகத்தின் மிகவும் தனிச்சலுகை கொண்ட பிரிவுகளிடமிருந்து தங்களின் ஆதரவைப் பெற்று, பசுமை கட்சி, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் விரைவாக சமரசம் செய்து கொள்ள தீர்மானமாக இருக்கும் ஓர் ஆட்சியை நிறுவும் நோக்கில், நிரூபிக்கப்படாத மற்றும் திட்டமிட்ட தேர்தல் மோசடி குற்றச்சாட்டுக்களை  சுமத்துவதன் அடிப்படையில் வெகுஜனவாத ஜனாதிபதி மஹ்மொத் அஹ்மதினிஜத் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதை மாற்றுவதற்கு முயன்றது.

ஈரானிய ஆட்சியின் தணிக்கையால் வடிகட்டப்பட்டு கிடைக்கும் செய்திகளிலேயே சிறந்தவை அல்லது மேற்கத்திய ஊடகங்களில் காணக் கிடைக்கின்றவற்றின் அடிப்படையில், இப்போதைய போராட்டங்களின் அலை, அதன் மையத்தில், தொழிலாள வர்க்கத்தின் ஓர் ஆரம்ப கிளர்ச்சியாக உள்ளது.

உறுதியாக, அப்போராட்டங்கள் சமூகரீதியில் பன்முகத்தன்மை கொண்டுள்ளன என்பதோடு, அதில் பங்கெடுத்திருப்பவர்கள் மத்தியில் நிறைய அரசியல் குழப்பமும் நிலவுகிறது. அனைத்திற்கும் மேலாக, எதிர்பார்க்கக்கூடியவாறு, முடியாட்சி கோட்பாட்டாளர்களும், ஏகாதிபத்தியத்துடன் கூட்டு வைத்துள்ள ஏனைய வலதுசாரி கூறுபாடுகளும் அவர்களைத் தவறாக வழிநடத்தி தாழிட முயன்று வருகின்றனர். ஆனால் போராட்டங்கள், ஒரு பாரிய பெருந்திரளான இயக்கமாக இல்லை என்றாலும், பிரதானமாக தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களை உள்ளடக்கி உள்ளது. அவர்கள் 3.2 மில்லியன் பேருக்கு அல்லது உழைப்புசக்தியில் 12.7 சதவீதத்தினருக்கு உத்தியோகபூர்வமாக வேலைவாய்ப்பின்மை கொண்டுள்ள ஒரு நாட்டில் ஆழமாக வேரூன்றிய கோபத்தால் எரியூட்டப்பட்டுள்ளனர், இளைஞர்களிடையே நிஜமான வேலைவாய்ப்பின்மை 40 சதவீத அளவுக்கு உள்ளது, சமீபத்திய IRCG தகவல்களின் அடிப்படையில், 50 சதவீதத்தினர் வறுமையில் வாழ்கின்றனர். இதற்கிடையே, உலக செல்வவள மற்றும் வருவாய் தரவுகளஞ்சியம் (2013 தரவுகளின் அடிப்படையில்) ஒட்டுமொத்த அடிமட்ட 50 சதவீதத்தினரில் வெறும் 0.5 சதவீத புள்ளி குறைந்தளவிலான மக்களின் செல்வவளத்தை விட, ஈரானியர்களில் உயர்மட்ட 1 சதவீதத்தினர் அந்நாட்டின் மொத்த வருவாயில் 16.3 சதவீதத்தை ஏகபோகமாக்கி இருப்பதாகவும், அதேவேளையில் உயர்மட்ட 10 சதவீதத்தினர் 45.5 சதவீதத்தைக் குவித்துள்ளதாகவும் கணக்கிடுகிறது.

அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பு

தற்போதைய இந்த போராட்டங்களின் அலையானது, வேலை வெட்டுக்கள் மீதும், கூலிகள் வழங்க தவறியமை, நெறிமுறைகளுக்கு உட்படாத எண்ணற்ற நிதிய அமைப்புகள் பொறிந்து போனதால் மில்லியன் கணக்கானவர்களின் சேமிப்புகள் அழிக்கப்பட்டதன் மீது அதிகாரிகளின் அலட்சியம் ஆகியவை உள்ளடகங்கலாக, பல மாதங்களாக அதிகரித்து வந்த தொழிலாளர் அமைதியின்மை மற்றும் மக்கள் ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னர் வெடித்ததாகும்.

சான்றாக, கடந்த செப்டம்பரில், முன்குறிப்பிட்ட அராக் நகரில், 2000 களில் தனியார்மயப்படுத்தப்பட்ட இரண்டு தொழில்துறை ஆலை தொழிலாளர்கள் அவர்களின் முதலாளிமார்கள் கூலிகள் வழங்க தவறியதை எதிர்த்தும் மற்றும் மருத்துவக் காப்பீட்டு தவணைகளைச் செலுத்த தவறியதை எதிர்த்தும் போராடிய போராட்டங்களை உடைக்க பாதுகாப்பு படைகள் தலையிட்டதும், அவர்கள் இரண்டு நாட்களுக்கு பொலிஸூடன் மோதலில் ஈடுபட்டனர். பிரான்ஸ் பத்திரிகை ஸ்தாபன (AFP) செய்தியின்படி, “தற்போதைய அமைதியின்மைக்கு முந்தைய வாரங்களில் சிறிய போராட்டங்கள் கொப்பளங்களாக வெடித்து வந்துள்ளன,” "நூற்றுக் கணக்கான எண்ணெய் துறை தொழிலாளர்கள் மற்றும் லாரி ஓட்டுனர்கள் கால தாமதமான கூலிகளை எதிர்த்து போராடி வந்துள்ளனர்; தாப்ரிஜ் இல் உள்ள டிராக்டர் உற்பத்தி தொழிலாளர்கள் அவர்களின் ஆலைமூடப்படுவதற்கு எதிராக போராடி வந்துள்ளனர்; மற்றும் தெஹ்ரான் டயர் நிறுவன தொழிலாளர்கள் அவர்களுக்கான கொடுப்பனவுகள் தாமதப்படுத்தப்பட்டு வருவதற்கு எதிராக போராடி வந்துள்ளனர்.”

இந்த போராட்டங்களை மேற்கத்திய ஊடகங்கள் அலட்சியமாக விட்டுவிட்ட அதேவேளையில், ஈரானிய அதிகாரிகளும் இவற்றை எல்லாம் இருட்டடிப்பு செய்ய அவர்களால் ஆனமட்டும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

தற்போதைய இந்த போராட்டங்களின் அலைக்கு உடனடியாக முந்தைய நாட்களில், அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மை குறித்து சமூக ஊடகங்களில் பரந்த மற்றும் ஆழ்ந்த விவாதம் நடைபெற்றிருந்தது. அரசாங்கத்தின் சமீபத்திய சமூக செலவினக் குறைப்பு வரவு-செலவு திட்டக்கணக்கை மேசையில் கொண்டு வந்தமைதான் இந்த கோபம் வெளிப்படுவதற்கு தூண்டுதலாக இருந்தது. அது எரிபொருள் விலைகளை ஆகமட்டும் 50 சதவீதம் உயர்த்தும், அதேவேளையில் ஈரானியர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த எரிபொருள், அடிப்படை உணவுப்பண்டங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான விலை மானிய உதவிகள், இவை 2010 மற்றும் 2014 க்கு இடையே படிப்படையாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மேற்கொண்டும் அவற்றில் சிறிய மானியத்தொகைகளை அது குறைக்கும்.

பசுமை கட்சி இயக்கம் ஏறத்தாழ பிரத்தியேகமாக தெஹ்ரானில், குறிப்பாக அதன் செல்வச்செழிப்பான வடக்கு மாவட்டங்களில், மையமிட்டிருந்தது. அதிலிருந்து வேறுபட்ட விதத்தில் இந்த தற்போதைய போராட்டங்களின் அலையானது, அஹ்மதினிஜத் இன் அரசியல் அடித்தளத்தை உள்ளடக்கிய மற்றும் ஈரானிய சமூகத்தின் சாதாரண கூறுபாடுகளுக்கு வெகுஜன முறையீடுகள் செய்யும் ஷியா பாரம்பரியத்துடன் இணைப்பு கொண்டு இஸ்லாமிய குடியரசின் அரசியல் உயரடுக்கில் உள்ள "கடுமையான" கன்னை என்றழைக்கப்படுவதையும் கொண்டுள்ள, சிறிய மற்றும் வறிய நகரங்கள் மற்றும் சிறுநகரங்கள் உட்பட, புவியியல்ரீதியில் மிகவும் பரந்தளவில் உள்ளது.

இன்னும் அதிகமாக குறிப்பிடத்தக்கது என்னவென்றால், பசுமை  இயக்கம், ஏகாதிபத்திய சக்திகளுடன் ஓர் ஏற்பாடு செய்து கொள்ள மிகவும் ஆர்வமுற்றிருந்த ஈரானிய முதலாளித்துவ பிரிவுக்காக பேசியதுடன், ஏழைகளுக்காக அஹ்மதினிஜத் பணத்தை "வாரியிறைக்கிறார்" என்று குற்றஞ்சாட்டி சுயநலமான உயர்மட்ட நடுத்தர வர்க்க ஆதரவாளர்களை அணிதிரட்டிய நிலையில், தற்போதைய இந்த அரசாங்க-எதிர்ப்பு இயக்கமோ சமூக சமத்துவமின்மைக்கான எதிர்ப்பால் உந்தப்பட்டுள்ளது.

2013 இல் ருஹானி தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் மற்றும் கடந்த மே இல் அவர் மீண்டும் தேர்வாவதையும் அதிகரித்தளவில் ஆதரித்த பசுமை இயக்கம், தற்போதைய போராட்டங்களில் இருந்து ஒதுங்கி உள்ளது, பசுமை இயக்கத்தின் முக்கிய பிரதிநிதிகள் அப்போராட்டங்களின் "தலைமையற்ற" தன்மை குறித்து பெரும் கவலை வெளியிடுகின்றனர்.

தங்களின் பங்கிற்கு, ஆர்ப்பாட்டக்காரர்கள் 2009 ஜனாதிபதி வேட்பாளர்களாக இருந்த பிரதான பசுமை இயக்க தலைவர்கள் மிர் ஹோசைன் மௌசாவி மற்றும் மெஹ்தி கர்ரௌபி ஆகியோரை வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்க வேண்டுமென எந்த குறிப்பிட்ட அழைப்பையும் வெளியிடவில்லையென செய்திகள் குறிப்பிடுகின்றன. அதற்கு பதிலாக அவர்கள் ஒட்டுமொத்தமாக முதலாளித்துவ மதகுருமார் ஆட்சியைச் சவாலுக்கு உட்படுத்தும் கோஷங்களையே முன்னெடுத்துள்ளனர்.

ருஹானியின் சமூக செலவின குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் வாஷிங்டன் உடனான சமரச வேலைத்திட்டம்

கடுமையான பொருளாதார தடையாணைகள்; உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் முக்கியமாக உலகளவில் எண்ணெய் விலைகளில் பொறிவு; சுதந்திர ஈரானிய முதலாளித்துவ தேசியவாத திட்டத்தின் தோல்வி; கடைசியாக ஆனால் முடிவாக அல்ல, மேற்கத்திய முதலீட்டை வரவேற்கும் நோக்கில் ருஹானி நடைமுறைப்படுத்தி உள்ள கடுமையான சமூக செலவினக் குறைப்பு நடவடிக்கைகள் என இவை உள்ளடங்கலாக இடைவிடாமல் அமெரிக்க பொருளாதார மற்றும் இராணுவ-மூலோபாய அழுத்தத்தின் விளைவே ஈரானின் கூர்மையான இந்த சமூக நெருக்கடி.

ஈரான் மீதான கடுமையான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பொருளாதார தடையாணைகளின் சமூகரீதியில் வெடிப்பார்ந்த விளைவுகளைச் சுட்டிக்காட்டி, ருஹானியும் மற்றும் அவரது அரசியல் ஆலோசகரும், மறைந்த ஜனாதிபதியும் மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளுடன் ஒரு மூலோபாய நோக்குநிலைக்கு நீண்டகாலமாக அறிவுறுத்தி வந்தவருமான ஹஷெமி ரஃப்சன்ஜனியும், 2014 இல் போக்கை மாற்றுவதற்கு —அதாவது வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஓர் ஏற்பாடு செய்து கொள்வதற்கு முயலும் ஒரு புதிய முயற்சிக்காக— அயெத்துல்லா அலி கமேனி மற்றும் இஸ்லாமிய ஆட்சியின் ஏனைய முக்கிய உட்கூறுகளை வென்றெடுத்திருந்தனர்.

நான்காண்டுகளுக்கு முன்னர் பசுமை இயக்கத்தினர் விடயத்தைப் பொறுத்த வரையில், இக்கொள்கையானது 1979 புரட்சியை அடுத்து தொழிலாள வர்க்கத்திற்கு வழங்கப்பட்ட சமூக விட்டுக்கொடுப்புகளில் என்ன எஞ்சியிருந்ததோ அவற்றையும் நீக்குவதற்காக புதுப்பிக்கப்பட்ட நகர்வுடன் பிணைந்திருந்தது. கடந்த நான்கரை ஆண்டுகளின் போது, ருஹானி ஆட்சி தனியார்மயமாக்கல் மற்றும் நெறிமுறை தளர்த்துவதை முன்னோக்கி அழுத்தியதோடு, சர்வதேச நாணய நிதியத்தின் சந்தை-சார்பு மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளைத் தொடர்ந்து, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க எண்ணெய் பெருநிறுவனங்களுக்கு விட்டுக்கொடுக்கும் பொருட்டு, எண்ணெய்த் துறை விட்டுக்கொடுப்புகளுக்கு ஏற்ற விதிகளை மீளவரைமுறைப்படுத்தியது.

இறுதியில், ஜனவரி 2016 இல் தெஹ்ரான் அதன் ஆயுதமல்லாத அணுசக்தி திட்டங்களின் பெரும் பகுதிகளை கைத்துறப்பதற்கு கைமாறாக, மிகவும் தண்டிக்கும் வகையிலான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தடையாணைகள் நீக்கப்பட்டன அல்லது தற்காலிகமாக கைவிடப்பட்டன. ஆனால் அந்த தடையாணைகள் நீக்கப்பட்டு அது இதுவரையில் வழங்கியுள்ள பொருளாதார வளர்ச்சியின் பலன்கள், ஏறத்தாழ முற்றிலுமாக மக்களில் மிகவும் தனிச்சலுகை கொண்ட பிரிவுகளுக்கே அதிகளவில் சென்றுள்ளன. 

சமீபத்திய வரவு-செலவு திட்டத்தில் எடுத்துக்காட்டப்பட்டதைப் போல, ருஹானியின் விடையிறுப்பானது பெருந்திரளான மக்கள் மீது சிக்கன நடவடிக்கைகளை இரட்டிப்பாக்குவதற்கும், அதேவேளையில் மதரீதியிலான மற்றும் மதகுருமார் தலைமையிலான அமைப்புகளுக்கான வரவு-செலவுத் திட்டத்திலிருந்து உதவிகளை அதிகரிப்பதற்குமாகவும் உள்ளது.

பெரும்பாலும் நடப்பதைப் போலவே, திடீரென சமூக எதிர்ப்பின் எழுச்சி ஆளும் உயரடுக்கினுள் நிலவும் பிளவுகளால் உந்துதலளிக்கப்பட்டுள்ளது. “விலை உயர்வுகள் வேண்டாம்" என்ற பதாகையின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த ஆரம்ப அரசாங்க-எதிர்ப்பு போராட்டங்கள், குறைந்தபட்சம் மறைமுகமாகவேனும் ருஹானியின் மதவாத பழமைவாத எதிர்ப்பாளர்களின் ஆதரவைப் பெற்றிருந்தன.  

இது நிச்சயமாக முற்றிலும் பாசாங்குத்தனமானது. கோட்பாட்டாளர்களும் மற்றும் ஆளும் உயரடுக்கின் ஏனைய பழமைவாத கன்னைகளும் இதேபோன்ற சந்தை-சார்பு மற்றும் பெருவணிக-சார்பு கொள்கைகளை ஆதரிக்கின்றன என்பதோடு, 2005 இல் ரஃப்சன்ஜனிக்கு (Rafsanjani) எதிராக அஹ்மதினிஜத்தைப் பதவிக்கு கொண்டு வர உந்துதலாக இருந்த வெகுஜனவாத கொள்கைகளை, அவர் பதவிகாலத்தின் இறுதி ஆண்டுகளில், கலைப்பதற்காக அஹ்மதினிஜத் மீது மேலாளுமை செலுத்துவதில் இவர்கள் அவர்களது "சீர்திருத்தவாத போட்டியாளர்களுடன்" இணைந்திருந்தனர்.

வர்க்க போராட்டத்தின் ஒரு புதிய கட்டம்

கடந்த வாரத்தின் போராட்டங்கள் ஈரானிலும் சர்வதேச அளவிலும் வர்க்க போராட்டத்தின் ஒரு புதிய கட்டத்தை முன்னறிவிக்கிறது. இஸ்ரேல் உட்பட மத்திய கிழக்கு எங்கிலும், தொழிலாள வர்க்க எதிர்ப்பு அதிகரித்து வருவதற்கான அறிகுறிகள் உள்ளன. இது ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கும் பொருந்தும், இங்கே ஆளும் உயரடுக்குகள் 2008 உலகளாவிய நிதி நெருக்கடிக்குப் பிந்தைய தசாப்தத்தில் தொழிலாள வர்க்கம் மீதான தாக்குதலை விரைவாக தீவிரப்படுத்தி உள்ளன.

ஒரு சர்வதேச சோசலிச மூலோபாயத்ததைக் கொண்டு மேலெழும் உலகளாவிய தொழிலாள வர்க்க எதிர்ப்பை ஆயுதபாணி ஆக்குவதே இப்போராட்டத்தில் உள்ள முக்கிய கேள்வியாகும்.

ஈரானிய தொழிலாளர்களும் இளைஞர்களும் ஏகாதிபத்தியத்தையும் மற்றும் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்து கன்னைகளையும் எதிர்க்கும் எதிர்ப்பில் ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவதற்காக போராட வேண்டும்.

அரசாங்க-எதிர்ப்பு இயக்கத்திற்குள் வாஷிங்டன் உடன்/அல்லது மற்ற ஏகாதிபத்திய சக்திகளுடன் நோக்குநிலை கொள்ள அறிவுறுத்தும் எந்தவொரு வலதுசாரி சக்திகளும் அம்பலப்படுத்தப்பட வேண்டும் மற்றும் அரசியல்ரீதியில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். கடந்த நூற்றாண்டு முழுவதும் ஏகாதிபத்தியம் தான், மத்திய கிழக்கு மக்களின் ஜனநாயக மற்றும் சமூக அபிலாஷைகளை மூச்சுத் திணறடித்து, ஒரு கால்-நூற்றாண்டு சூறையாண்டும் போர்கள் மூலமாக அப்பிராந்தியத்தை வீணடித்தது, இன்றோ ஈரானிய மக்களை மற்றும் ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் முன்பினும் இரத்தந்தோய்ந்த மோதலில் சிக்க வைக்க அச்சுறுத்துகிறது.

1906 அரசியலமைப்பு புரட்சியில் இருந்து பின்னோக்கி ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமாக எடுத்துக் காட்டப்பட்டதைப் போல, உண்மையான ஜனநாயகத்தை ஸ்தாபிப்பதற்கோ மற்றும் ஏகாதிபத்தியத்திடம் இருந்து சுதந்திரத்தைப் பெறுவதற்கோ ஈரானிய முதலாளித்துவம் முற்றிலும் தகைமையற்றது, ஏனென்றால் அதை செய்வதற்கு அதன் சொந்த சுயநலமான வர்க்க நலன்கள் மற்றும் அபிலாஷைகளை ஆபத்திற்குட்படுத்தும் அளவுக்கு பெருந்திரளான மக்களை புரட்சிகரமாக அணித்திரட்ட வேண்டியிருக்கும்.

பெருந்திரளான மக்களின் மேலெழுச்சியே அனைத்தையும் தீர்த்துவிடும் என்று கூறி புரட்சிகர வேலைத்திட்டம் மற்றும் தலைமைக்கான போராட்டத்தைச் சிறுமைப்படுத்துபவர்களையும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் நிராகரிக்க வேண்டும். எகிப்தின் 2011 “வசந்தம்" மற்றும் 1979 ஈரானிய புரட்சி உட்பட வரலாற்றிலிருந்து படிப்பினைகளைக் கற்றாக வேண்டும்.

முப்பத்தி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர், தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் ஒரு சக்தி வாய்ந்த பாரிய இயக்கம் இரத்தத்தில் ஊறிய ஷாவின் அமெரிக்க-ஆதரவிலான ஆட்சியை வரலாற்றின் குப்பையில் வீசியது. ஆனால் ஸ்ராலினிச ரூடேஹ் கட்சி (Tudeh Party) மற்றும் பல்வேறு குட்டி முதலாளித்துவ இடது சக்திகள் ஆகியவற்றால் தொழிலாள வர்க்கம் அரசியல்ரீதியில் அயெத்துல்லா அலி கமேனி மற்றும் ஷியா மதகுருமார்கள் தலைமையிலான தேசிய முதலாளித்துவத்தின் முற்போக்கான பிரிவு என்றழைக்கப்படும் ஒன்றுக்கு அடிபணிய செய்யப்பட்டது, அது அரசு எந்திரம் மீதான கட்டுப்பாட்டை எடுத்த உடனே, விரைவாக சுயாதீன தொழிலாள வர்க்க அமைப்புகளின் அனைத்து வெளிப்பாடுகளையும் மூர்க்கமாக ஒடுக்கி, முதலாளித்துவ ஆட்சியை மீள ஸ்திரப்படுத்த அதைப் பயன்படுத்தியது.      

தொழிலாள வர்க்கத்தின் இன்றைய புதிய மேலெழுச்சி, ஒரு சர்வதேச சோசலிச புரட்சியின் பாகமாக இஸ்லாமிய அரசியல் ஸ்தாபகத்துடனும், ஈரானிய முதலாளித்துவத்துடனும் மற்றும் ஒட்டுமொத்தமாக ஏகாதிபத்தியத்துடனும் கணக்குகளைத் தீர்க்க வேண்டும்.