ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

සසප උද්ඝෝෂනයට කයිට්ස් ජනතාවගෙන් උනුසුම් ප‍්‍රතිචාර

உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2018

இலங்கை சோ.ச.க. பிரச்சாரத்திற்கு ஊர்காவற்துறை மக்களின் ஆர்வமான பிரதிபலிப்பு

By our reporters
25 January 2018

பெப்பிரவரி 10 இடம்பெறவுள்ள இலங்கை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட வடக்கின் யாழ்ப்பாண குடாநாட்டில் ஊர்காவற்துறை பிரதேச சபைக்கு போட்டியிடுகின்றது. சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் பி. திருஞானசம்பந்தர் தலைமையில் இளம் தொழிலாளர்கள், கடற் தொழிலாளர்கள் மற்றும் குடும்பப் பெண்கள் உட்பட 16 வேட்பாளர்களை சோ.ச.க. ஊர்காவற்துறையில் நிறுத்தியுள்ளது.


யுத்தத்தால் அழிக்கப்பட்ட வீடுகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம், யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட வடக்கில் மக்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்துவதாகவும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதாகவும் வாக்குறுதியளித்தே, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் ஆட்சிக்கு வந்தது. அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையிலும், தெற்கில் போலவே வடக்கு மற்றும் கிழக்கிலும் இலங்கை ஆளும் தட்டின் சகல தரப்பினர் மீதும் பெரும் அதிருப்தி வளர்ச்சியடைந்துள்ள நிலைமையிலேயே இந்த தேர்தல் இடம்பெறுகின்றது.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் முன்னெடுத்த இனவாத யுத்தம் முடிவடைந்து ஒன்பது ஆண்டுகள் ஆகியிருந்தும், வடக்கு இன்னமும் ஏறத்தாழ இராணுவ ஆட்சியின் கீழ் இருக்கின்ற நிலையில், படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது நிலங்களை விடுவிக்குமாறு கோரி வடக்கு மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை, இராணுவம் பொது மக்க்களின் காணிகளை மேலும் மேலும் சுவீகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.

மேலும், போரின் போது காணமல் ஆக்கப்பட்டவர்களை கண்டு பிடித்து தருமாறும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறும் கோரி தொடர்ச்சியான போராட்டங்களில் தமிழ் மக்கள் ஈடுபட்டு வருகின்றார்கள். கடந்த ஜூலை மாதம் யாழ்ப்பாணத்தில் துன்னாலை பிரதேசத்தில் பொலிசாரால் ஒரு இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டதை எதிர்த்துப் போராடிய துன்னாலை பொதுமக்கள் மீது தொடர்ச்சியான பொலிஸ் ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டு வருகின்றன. கடந்த ஆறு மாதங்களுக்குள் இரு இளைஞர்கள் யாழ்ப்பாணத்தில் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இவற்றுக்கு மேலாக, கடந்த வருடத்தில் வடக்கில் உள்ள 3000க்கு மேற்பட்ட பட்டதாரிகள் தங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, மாதக் கணக்கில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சம்பளமற்ற நிலையில் அரசாங்க நியமனத்தினை எதிர்பார்த்து 10 வருடங்களுக்கு மேலாக பாடசாலைகளில் கற்பித்து வருகின்ற 1500க்கும் மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் கோரி பிரச்சாரம் செய்துவருகின்றனர்.

சோ.ச.க. வேட்பாளர்கள் இந்தப் பிரச்சினைகள் சம்பந்தமாக பல கட்டுரைகளை உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிட்டு, சர்வதேச தொழிலாள வர்க்கத்துக்கு மத்தியில் கொண்டு சென்றுள்ளனர். வடக்கில் உள்ள சோ.ச.க. உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் இராணுவத்தினது ஒடுக்குமுறைக்கும் புலிகளின் பிரிவினைவாதத்துக்கும் எதிராக, உயிரைப் பணயம் வைத்து சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்துக்காக போராடி வந்துள்ளனர்.

1998ல் தோழர் திருஞான சம்பந்தர் உட்பட நான்கு சோ.ச.க. உறுப்பினர்கள் புலிகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் பகுதிகளான சோசலிச சமத்துவக் கட்சிகளும் சர்வதேச ரீதியில் முன்னெடுத்த பிரச்சாரத்தின் பெறுபேறாக அவர்கள் விடுவிக்கப்பட்டனர். 2002ல் பருத்தியடைப்பு கிராமத்தில் சோ.ச.க. உறுப்பினர் நாகாராஜா கோடீஸ்வரன் மீது ஒரு புலி உறுப்பினர் நடத்திய கொலைத் தாக்குதலில் அவர் உயிர் தப்பினார்.

2007ல் முன்னாள் ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ யுத்தத்தை உக்கிரமாக்கியிருந்த போது, சோ.ச.க. உறுப்பினர் நடராசா விமலேஸ்வரன் மற்றும் அவரது நண்பரும் ஊர்காவற்துறை வேலணை பகுதியில் வைத்து கடற்படையினராலும் ஈ.பி.டி.பி.யினராலும் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணத் தீவுகள் அனைத்துமே நீண்டகாலமாக கடற்படையினரதும் மற்றும் இராணுவத்துடன் சேர்ந்து செயற்படும் துணைப்படைக் குழுவான ஈழமக்கள் ஜனநாயக கட்சியினதும் கடுப்பாட்டில் இருந்து வருகின்றன. யுத்த காலம் பூராவும் தீவுப் பகுதியில் பல படுகொலைகள், ஆட் கடத்தல்கள், பாலியல் பலாத்காரம் போன்ற பல கொடூரங்களை அந்த மக்கள் சந்தித்துள்ளனர்.

சோ.ச.க. தனது தேர்தல் பிரச்சாரத்தின் ஆரம்ப கூட்டத்தை ஊர்காவற்துறை பருத்தியடைப்பு கிராமத்தில் ஜனவரி 11 அன்று நடத்தியிருந்தது. கூட்டத்துக்கு முன்னதாக சோ.ச.க. வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் ஊர்காவற்றுறை நகரப்பகுதி மற்றும் மெலிஞ்சி முனை, பருத்தியடைப்பு ஆகிய கிரமங்களிலும் பிரச்சாரம் செய்திருந்தனர். சோ.ச.க. உறுப்பினர்களுடன் உரையாடியவர்கள் அரசாங்கம் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகள் பற்றிய தமது அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு தங்களின் பொருளாதார பிரச்சினைகள் பற்றியும் பேசினர். அவர்களில் பலர் யுத்த வேளையில் இடம்பெயர்ந்து மீண்டும் அரை குறை வீடுகளில் குடியேறியவர்களாவர்.

ஊர்காவற்துறை சுகாதார ஊழியர் ராசா, மக்களுடைய எதிர்பார்ப்புக்கள் வேறு, கட்சிகளின் வேலைத்திட்டம் வேறு, என்றார். “கட்சிகள் தங்களின் சொந்த நலனின் அடிப்படையிலேயே செயற்படுகின்றன. அதிகாரமும் வசதிவாய்ப்புகளும்தான் அவர்களின் இலக்கு. தேர்தல் காலங்களில் மாத்திரம் கொள்கையைப் பற்றிக் கதைப்பார்கள், வெற்றிக்குப் பின்னர் தங்களின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே செயற்படுவார்கள். நாங்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுகின்றோம்” என்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்குறுதிகளை கைவிட்டுவிட்டதாக குற்றம்சாட்டிய ராசா மேலும் கூறியதாவது: “கூட்டமைப்பு முன்னர் பேசிய விடயங்களை தற்போது கைவிட்டுள்ளது. அது ஆட்சியின் ஆதவாளனாகவே செயற்படுகின்றது. (இராணுவத்தின் போர்க் குற்றங்கள் பற்றிய) சர்வதேச விசாரணையைக் கைவிட்டுள்ளது. பௌத்த (மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கும்) அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்குகின்றது.”

மெலிஞ்சி முனையை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான ஞானசேகரன் அனித்தா, வடக்கின் பிரதான பிரச்சினையான தண்ணீர் பிரச்சினையைப் பற்றிப் பேசினார். “மெலிஞ்சி முனை கிராமத்துக்கு முக்கியமான பிரச்சினை தண்ணீர் பிரச்சினை. தேவலாய பௌசர் மூலம் கொடுக்கப்படும் தண்ணீருக்கு நாங்கள் மாதாந்தம் 1,500 ரூபா கொடுக்க வேண்டும். வீடுகளில் ஏதாவது விழா நடத்த வேண்டுமானால், 5,000 ரூபா தண்ணீருக்கு செலவழிக்க வேண்டும். முன்னர் பிரதேச சபை குழாய்வழி தண்ணீர் வழங்கி வந்தது. 2006ல் மீண்டும் யுத்த்தினைத் தொடங்கியபோது, மக்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இடம்பெயர்ந்தனர். அப்போதிருந்து நிறுத்துவதற்கு ஆளின்றி தண்ணீர் ஓடியுள்ளது. அதனால் இந்த கிராம மக்கள் பல ஆயிரம் ரூபாய்களை பிரதேச சபைக்கு தண்ணீர் கட்டணமாக செலுத்த வேண்டும். அதனால் எங்களுக்கு குழாய் நீர் நிறுத்தப்பட்டுள்ளது. ஈ.பி.டி.பி. தான் பிரதேச சபையை ஆட்சி செய்தது. அவர்களுக்கு இந்த மக்கள் வாக்களித்தார்கள். அவர்கள் அரசாங்கத்துடன் கதைத்து இந்த கட்டணத்தினை தள்ளுபடி செய்யலாம் தானே?

“நாங்கள் மீளக் குடியமர்ந்தபோது, எங்களுக்கு உதவிகள் கிடைக்கவில்லை. எனது தாயார் கட்டித் தந்த வீட்டிலேயே நாங்கள் இருக்கின்றோம். வீட்டுத் திட்டம் கிடைக்கவில்லை. எனது கணவர் மீன்பிடித் தொழில் செய்கிறார். மீளக் குடியமர்ந்தபோது தொழிலை ஆரம்பிக்க முடியாமல் திண்டாடினோம். இலங்கை வங்கியில் 150,000 ரூபா கடன்பெற்றே தொழிலை ஆரம்பித்தோம். மாதாந்தம் 4,400 ரூபா கட்ட வேண்டும். தனியார் நிறுவனம் ஒன்றில் 130,000 ரூபா கடன் பட்டுள்ளோம். அதற்கு மாதாந்தம் 2,600 ரூபா கட்ட வேண்டும். யுத்த காலத்தில் எனது கணவருக்கு புலிகளால் உயிர் அச்சுறுத்தல் இருந்ததனால் உள்ள நகைகளை எல்லாம் விற்றுவிட்டு கப்பலில் வவுனியாவுக்கு சென்று வாழ்ந்தோம்.”

உலகப் போர் அச்சுறுத்தல் பற்றியும் சோசலிச வேலைத்திட்டம் பற்றியும் பேசிய போது, அதற்கு பதிலத்த அனித்தா தெரிவித்ததாவது: “எங்களுக்கு உள்ள அறிவின்படி உலக யுத்தம் பற்றி நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் அமெரிக்காவுக்கும் கொரியாவுக்கும் இடையில் பிரச்சினை இருப்பதாக கேள்விப்பட்டிருக்கின்றேன். சோசலிசம் பற்றி நாங்கள் இப்போதுதான் கேள்விப்படுகின்றோம். எல்லோரும் சமத்துவமாக, வசதியாக வாழும் நிலமை வந்தால் எங்களுக்கு அது விருப்பம் தானே.”


கோகுலேஸ்வரன் நிர்தயானி

பருத்தியடைப்பைச் சேர்ந்த கோகுலேஸ்வரன் நிர்தயானி ஒரு இளம் தாய். அவரது கனவர் மேசன் வேலை செய்கின்றார். நிர்தயானி கூறியதாவது: “யுத்த காலத்தில் நாங்கள் வன்னி மற்றும் இரணமடு போன்ற இடங்களில் இடம்பெயர்ந்து, பின்னர் இங்கு வந்து குடியேறியுள்ளோம். எனது அண்ணன் இறுதிப் போரின் போது கொல்லப்பட்டார். இந்த நான்கு பரப்பு காணியை ஒருவர் எங்களுக்கு வாங்கிக் கொடுத்தார். தம்பி ஒருவர் செய்த உதவியிலும் இன்னும் கடன்பட்டும் இந்த சிறிய அறையை கட்டி வாழ்கின்றோம். இன்னமும் இரண்டு மூன்று இலட்சம் கடன் கொடுக்க வேண்டி இருக்கின்றது. இதற்கு முன்னர் ஏனையோரின் வீட்டில் திட்டு வாங்கிக்கொண்டு இருந்தோம். இந்தப் பகுதிக்கு வீட்டுத் திட்டம் வந்துள்ளது. ஆனால் எமக்கு இன்னமும் கிடைக்கவில்லை. வாழ்க்கையில் எந்தக் காலமும் மகிழ்ச்சியாக இருந்தோம் என்று சொல்லவே முடியாது. அன்பாக குடும்பம் நடத்தினாலும், பொருளாதார ரீதியில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றோம்.”

அதே இடத்தைச் சேர்ந்த 45 வயது தேவிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். உயர்தரம் படித்த இரண்டு பிள்ளைகளுக்கும் தொழில் இல்லை என தேவி தெரிவித்தார். “கணவர் மேசன் வேலை செய்கின்றார். யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து 20 வருடத்திற்குப் பின்னர் இங்கு வந்து இந்தக் காணியை வாங்கி குடியேறினோம். வீட்டுத் திட்டத்தில் மூன்றரை இலட்சம்தான் கொடுத்தார்கள். மிச்சம் சுமார் 15 இலட்சம் நாங்கள் கடன்பட்டு இந்த வீட்டைக் கட்டினோம். தமிழ் கூட்டமைப்பு மற்றும் ஈ.பி.டி.பி.யால் எங்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. தேங்காய் 100 ரூபாய் விற்கின்றது. அரிசி அதையும் விட அதிகம், எப்படி இதை நல்லாட்சி என்று சொல்ல முடியும்? நீங்கள் சொல்லும் சோசலிச முறையின் கீழ் எல்லோரும் சமமாக வாழ முடியும் என்றால் அது வரவேற்கத் தக்கது. அது நிம்மதியான வாழ்க்கை என்னும் போது அதை வரவேற்க வேண்டும்” என அவர் மேலும் கூறினார்.

மேசன் தொழில் செய்யும் வரதராசா குடும்பத்துடன் இரவல் வீடு ஒன்றில் வாழ்கின்றார். “முன்னர் நான் கட்டாரில் வேலை செய்தேன், அந்த வேலை மிகவும் கடினமானதாகும். வேலைக்கேற்ற சம்பளம் வழங்கப்படுவதில்லை அதனால் வந்துவிட்டேன். மிகவும் கொடூரமான சூழ்நிலைகளின் மத்தியில் தான் நாங்கள் அங்கு வேலை செய்தோம்,” என வரதராசா கூறினார். தனது அண்ணன் கட்டாரில் வேலை செய்யும் போது வேலைத் தளத்தில் மரணமானதாகவும், ஆனால் இழப்பீடுகள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் வரதராசாவின் மனைவி தெரிவித்தார்.

வரதராசா மேலும் கூறியதாவது: “நான் திருமணம் முடித்து 12 வருடங்களாகின்றது. இந்த அரசாங்கம் எனக்கு எந்தவிதமான உதவியும் செய்யவில்லை. நாங்கள் வவுனியாவில் இருக்கும்போது புளொட் மற்றும் ரெலோ போன்ற இயக்கங்கள் பல வாக்குறுதிகளை கொடுத்தன. ஆனால் எந்த உதவியும் மக்களுக்கு செய்வதில்லை. நாங்கள் 1990ல் ஊர்காவற்றுறையில் இருந்து இடம்பெயர்ந்து வன்னிப் பகுதிக்கு சென்று வாழந்தோம். இறுதியாக வவுனியாவில் வாழ்ந்தோம். தற்போது மீளக் குடியமர்ந்துள்ள போதிலும், நாங்கள் அகதிகள் போலத்தான் வாழ்கின்றோம். தமிழர் என்று தான் நாங்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்தோம். ஆனால் அவர்கள் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிடுவார்கள்.”


திருமதி சூரியகுமார்

ஊர்காவற்துறையைச் சேர்ந்த திருமதி சூரியகுமார்: “எனது குடும்பத்தில் 6 பேர் உள்ளனர். எங்களுக்கு வீடு இல்லை. நாங்கள் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து, மீளக்குடியமர்ந்தும் தற்போதும் அகதிகளாக வாழ்கின்றோம். எங்களுக்கு சொந்தக் காணி இல்லாததால் அரசாங்கம் வீடு தரவில்லை. இந்த சிறிய கொட்டிலில் எப்படி ஆறு பேர் வாழ முடியும்? எனது கணவர் மேசன் வேலை செய்கின்றார். அவரின் வருமானம் எமது ஜீவனோபாயத்துக்கு போதாமல் உள்ளது. எனது மூத்த மகள் உயர்தரம் படிக்கின்றார். ஆனால் மேலதிக வகுப்புகளுக்கு அனுப்புவதற்கு காசு இல்லை. இங்குள்ள உப்புத் தண்ணீரை குளிக்கத்தான் பாவிக்கின்றோம். குடிப்பதற்கு பிரதேச சபை கொடுக்கும் தண்ணீரை பாவிக்கின்றோம். நல்லாட்சி என்று இந்த அரசாங்கம் எந்த உதவியும் எமக்கு வழங்கவில்லை. கட்சிகள் தேர்தல் காலங்களில் மட்டுமே எங்களைத் தேடி வருகின்றன.”

ஊர்காவற்துறை விவசாயியான கனகராசா: “எந்த அரசாங்கம் வந்தாலும் எங்களுக்குப் பிரச்சினைதான். அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. இராஜபக்ஷ அரசாங்கம் என்ன செய்ததோ அதே வேலையைத்தான் மைத்திரி அரசாங்கமும் செய்கின்றது. நாங்கள் வாழ்க்கைச் செலவு குறைவதையே எதிர்பார்க்கின்றோம். 1980 காலத்தில் 100 அல்லது 200 ரூபாவுடன் சீவிக்க முடியும். இப்போது 1,500 அல்லது 2,000 ரூபா ஒரு நாளைக்கு தேவையாக உள்ளது. இதை எந்த அரசாங்கத்தினாலும் தீர்க்க முடியவில்லை. யுத்தம் முடிவடைந்து 8 வருடங்களாகியும் ஒரு நல்ல சூழ்நிலையை அனுபவிக்க முடியவில்லை. நாங்கள் விவசாயத்துக்கு செய்யும் முதலீட்டினை மீளவும் எடுக்க முடியவில்லை.”