ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Local government election in Sri Lanka: Support SEP campaign against austerity and war! Fight for a workers’ and peasants’ government!

இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: சிக்கன நடவடிக்கைக்கும் யுத்தத்துக்கும் எதிரான சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தை ஆதரியுங்கள்! தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்திற்காக போராடுவோம்!

By Socialist Equality Party (Sri Lanka)
9 January 2018

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) பெப்ரவரி 10 அன்று இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. சோ.ச.க. மூன்று உள்ளூராட்சி மன்றங்களுக்கு போட்டியிடுகின்றது. யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட வடக்கில் யாழ்ப்பாண குடாநாட்டில் ஊர்காவற்துறையில் 16 வேட்பாளர்களையும் மத்திய தேயிலைப் பெருந்தோட்ட பிரதேசமான ஹட்டனில் 24 வேட்பாளர்களையும் கொழும்பு புறநகர் பகுதியான கொலன்னாவையில் 21 வேட்பாளர்களையும் சோ.ச.க. நிறுத்தியுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக மேலும் மேலும் போராட்டத்துக்கு வரும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளுக்கு இன்றியமையாத சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராடி வருகின்றனர். மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உட்பட முதலாளித்துவ வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் பல்வேறு போலி-இடது குழுக்களில் இருந்தும் சுயாதீனமாக, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்காக நாங்கள் பிரச்சாரம் செய்கிறோம்.

தீவில் சமூக மற்றும் அரசியல் குமுறல் நிலைமைகளை அடிக்கோடிட்டுக் காட்டும், தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்கள் இடையே நிலவும் பரந்த அரசாங்க-விரோத அமைதியின்மைக்கு மத்தியிலேயே இந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் இன்றி ஒரு நாள் கூட கடந்து போகவில்லை. அரசியல் ஸ்தாபகத்தின் அனைத்து கட்சிகளும், இந்த வளரும் இயக்கத்தை முதலாளித்துவ ஆட்சியை சவால் செய்யவிடாமல் தடுத்து, அதை ஆட்சியில் இருப்பவர்களிடம் பயனற்ற வேண்டுகோளாக்கும் பக்கத்திற்கு திசை திருப்பிவிடுவதற்காக உறுதியுடன் செயற்படுகின்றன.

ஜூலையில் பெட்ரோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களின் வேலைநிறுத்தம் நாடெங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2016 டிசம்பரில் ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களின் உள்ளமர்வுப் போராட்டம், கடந்த நவம்பரில் தொழில் வெட்டுக்களுக்கு எதிராகப் புத்துயிர் பெற்றது. பல்லாயிரக்கணக்கான இரயில் மற்றும் தபால் ஊழியர்களும் சம்பள திருத்தங்களை கோரி வேலைநிறுத்தம் செய்தனர். தோட்டத் தொழிலாளர்கள் வேலைச் சுமை அதிகரிப்புக்கு எதிராகவும், ஊதிய வெட்டுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

பல்கலைக்கழக மாணவர்கள் வைத்தியர்களின் ஆதரவுடன் கல்வி தனியார்மயமாக்கலுக்கு எதிராக ஒன்பது மாதங்களாக விரிவுரைகளை பகிஷ்கரித்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 26 ஆண்டுகால இனவாத யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட வடக்கில், இராணுவம் கைப்பற்றிக்கொண்ட நிலங்களை விடுவிக்கவும் "காணாமற்போன" நூற்றுக்கணக்கானவர்கள் பற்றிய தகவல்களையும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவும் கோரி தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன.

கிராமப்புறங்களில் ஆயிரக்கணக்கான ஏழைகள், மானியங்கள் வெட்டு மற்றும் கடன் சுமை அதிகரிப்பையும் எதிர்த்தும், அத்தியாவசிய சமூக சேவைகளை கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசாங்கம், இந்தப் போராட்டங்களை நசுக்குவதற்கு தொழிற்சங்கங்கள் மற்றும் போலி-இடதுகளின் ஆதரவுடன், கொடூரமான அத்தியாவசிய சேவை சட்டங்களைப் பயன்படுத்தி பதிலிறுத்ததுடன் இராணுவம், பொலிஸ் மற்றும் அதனுடன் இணைந்த குண்டர்களையும் அணிதிரட்டியது. இந்த எதிர்ப்புக்களில் ஈடுபட்வர்கள் முகங்கொடுத்த அடிப்படை பிரச்சினை, சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒடுக்கப்பட்டவர்களை அணிதிரட்டுவதற்கு தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர தலைமை இல்லாமையே ஆகும்.

இலங்கையில் பரந்துபட்ட அமைதியின்மையானது சர்வதேச அளவில் தற்போது விரிவடைந்துவரும் தீவிரமான வர்க்கப் போராட்டங்களின் பாகமாகும். ஈரானில் ஒரு வெகுஜன எழுச்சி தொடங்கியுள்ளது. அமெரிக்காவில், புலம்பெயர்ந்தோர் உட்பட, தொழிலாளர்கள் மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் தாக்குதல்களுக்கு எதிரான போராட்டங்கள் உக்கிரமடைந்துள்ளன. பிரெஞ்சு தொழிலாளர்கள் கடுமையான தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் அதேவேளை, ருமேனியாவில் ஃபோர்ட் தொழிலாளர்கள் ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளில் வெட்டுக்களுக்கு எதிராக எழுச்சி பெற்றுள்ளனர். இந்தியாவில், மருத்துவ செலவு வெட்டுக்களுக்கு எதிரான வைத்தியர்களின் சமீபத்திய நாடு தழுவிய எதிர்ப்பு மற்றும் தமிழ்நாடு பஸ் தொழிலாளர்களின் வேலைநிறுத்தமும் தெற்காசியாவில் பல மில்லியன் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் வளரும் பிரமாண்டமான சமூக அழுத்தங்கள் பற்றிய அறிகுறிகள் ஆகும்.

2008-09 உலகளாவிய நிதிய நெருக்கடியைத் தொடர்ந்து சர்வதேச அளவில் முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் வீழ்ச்சியால் இந்த எழுச்சிகள் ஊக்குவிக்கப்படுகின்றன. இதற்கு ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் வர்க்கங்கள் காட்டும் பிரதிபலிப்பு, இடைவிடாது விரிவடையும் சமூக சமத்துவமின்மைக்கு வழிவகுக்கின்ற சமூக எதிர்ப்புரட்சியை உக்கிரமாக்குவதாகும், இன்றைய உலகின் அதி செல்வந்த 1 சதவிகிதத்தினர், உலக செல்வத்தின் பாதிக்கு சொந்தக்காரர்களாக ஆகியுள்ளனர்.

பெரும் வல்லரசுகள் பொருளாதார வீழச்சியின் சுமைகளை தங்கள் போட்டியாளர்களின் மீது சுமத்த முற்படுகின்ற நிலையில். அது பூகோள-அரசியல் பதட்டங்களைக் கூர்மையாக்குகிறது. கால் நூற்றாண்டு காலமாக நவ-காலனித்துவ யுத்தங்களை முன்னெடுத்த அமெரிக்க ஏகாதிபத்தியம், தனது பூகோள ஆதிக்கத்தை பேணிக்கொள்வதற்கான முயற்சியில், சீனா மற்றும் ரஷ்யாவுடன் ஒரு அணு ஆயுத மோதலுக்குத் தயாரிப்பு செய்து வருகின்றது. ஜேர்மனி மற்றும் ஜப்பான் போன்ற ஏனைய பெரும் வல்லரசுகள், தங்கள் நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள தங்கள் இராணுவங்களை துரிதமாக விரிவுபடுத்துகின்றன.

கொழும்பில் உள்ள அரசாங்கம் இந்த பூகோள-அரசியல் பகைமை மற்றும் போருக்கான முனைப்பில் ஆழமாக மூழ்கியுள்ளது. வாஷிங்டனின் ஆதரவுடன் ஒரு ஆட்சி மாற்ற நடவடிக்கையில், 2015 ஜனவரியில் அதிகாரத்திற்கு வந்த சிறிசேன, உடனடியாக இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை அமெரிக்காவின் சார்பில் இருத்தினார். எனினும், சீனாவிடம் இருந்து தூர விலக்கிக்கொள்ளுமாறு அமெரிக்காவும் இந்தியாவும் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வந்த போதிலும், பணப் பற்றாக்குறையில் இருக்கும் அரசாங்கம் விரைவில் பெய்ஜிங்கிடம் நிதியுதவியை எதிர்பார்க்கத் தள்ளப்பட்டது.

சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தின் நெருக்கடி

விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) மற்றும் சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) ஆகிய தீவின் இரண்டு முதலாளித்துவக் கட்சிகளின் ஐக்கிய அரசாங்கம், மூன்று ஆண்டுகளுக்குள் வீழ்ச்சியின் விளிம்புக்கே வந்துள்ளது. சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம்களுமாக தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளினதும் தீவிரமயமாதலே இந்த நெருக்கடியின் மையத்தில் உள்ளது. அரசாங்கம் அதன் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளாலும் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதாலும் வெகுஜனங்கள் மத்தியில் முற்றிலும் மதிப்பிழந்துள்ளது.

பொருளாதார சீரழிவுக்கு பிரதிபலிப்பாக, சர்வதேச நாணய நிதியமானது சந்தை-சார்பு மறுசீரமைப்புக்கு ஆணையிடுகின்றது. இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதம், கடந்த ஆண்டு 4.5 வீதத்திலிருந்து 4 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. உலகளாவிய பதட்டங்கள் மற்றும் முக்கிய சந்தைகளின் சுருக்கத்தினாலும் ஏற்றுமதி சரிவுற்றது. வெளிநாட்டு கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 79 சதவிகிம் வரை அதிகரித்துள்ளது. பணவீக்கம் 7 சதவீதமாக உள்ளதுடன் ரூபாயின் மதிப்பு குறைக்கப்பட்டதனால் அது இன்னும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றது. இதனால் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் வாழ்க்கை நிலைமைகள் சீரழிக்கப்படுகின்றன.

கூட்டணி பங்காளிகளுக்குள்ளேயே ஒருவருக்கு ஒருவர் தமது அவப்பேறு பெற்ற கொள்கைகள் சம்பந்தமான குற்றச்சாட்டுக்களை சுமத்திக்கொள்கின்ற நிலையில், அரசாங்கத்தினுள் ஆழமான பிளவுகள் வெடிக்கத் தொடங்கியுள்ளன. தனது ஐ.தே.க. பங்காளியிடம் இருந்து தன்னை விலக்கி வைக்கும் முயற்சியில், சிறிசேனவின் ஸ்ரீ.ல.சு.க. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகின்றது. அது "தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதற்கும்" மற்றும் பரந்த அரசாங்க ஊழல்களுக்கும் தாம் பொறுப்பல்ல என்பது போல் காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றது.

தனது அரசாங்கம் பொருளாதார அபிவிருத்தி பாதையில் நாட்டை வைத்துள்ளதாகவும், சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகவும், ஒரு மில்லியன் வேலைகளை உருவாக்குவதாகவும் கூறிக்கொண்டு, விக்கிரமசிங்க தனது பங்கிற்கு சிறிசேனவை எதிர்த்து போராட முயற்சிக்கிறார்.

ஸ்ரீ.ல.சு.க.யின் ஒரு எதிர்க் கன்னைக்கு தலைமை தாங்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவிடமிருந்தும் அரசாங்கம் சவாலை எதிர்கொள்கிறது. சமீப மாதங்களாக, சிறிசேன கட்சியை மீண்டும் ஐக்கியப்படுத்திக்கொள்ள முயன்ற போதும், ஐ.தே.க. அரசாங்கத்திடம் இருந்து ஸ்ரீ.ல.சு.க. விலகிக்கொள்ள வேண்டும் என்று இராஜபக்ஷ குழு கோரியதனால் அதனுடன் நடந்த பேச்சுவார்த்தைகள் முறிந்து போயின.

அதையடுத்து இராஜபக்ஷ, அரசாங்க விரோத உணர்வை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு) என்ற கட்சியை ஸ்தாபித்தார். அவர் பௌத்த துறவிகளை முன்னணியில் வைத்துக்கொண்டு, தமிழ் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிரான பிற்போக்கு இனவாத பிரச்சாரத்தின் அடிப்படையில் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார். அரசாங்கத்துடன் அவருக்கு எந்த அடிப்படை கொள்கை வேறுபாடுகளும் கிடையாது, மற்றும் அவர் அதிகாரத்தில் இருக்கும்போது, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனக் கோரிக்கைகளை திணிப்பதில் இதே போன்று ஈவிரக்கம் அற்றவராக இருந்தார்.

2015ல் சிறிசேனவை அதிகாரத்தில் அமர்த்த ஒத்துழைத்த அனைத்து அரசியல் சக்திகளும், இப்போது தங்களை அரசாங்கத்திலிருந்து தூர விலக்கிக் கொண்டு, மேலும் வலதுபுறம் நகர்வதற்கு முற்படுகின்றன.

முதலாளித்துவ தமிழ் தேசிய கூட்டமைப்பு, உத்தியோகபூர்வமாக பாராளுமன்ற எதிர்க்கட்சியை வழிநடத்தும் அதேவேளை, ஆளும் கூட்டணியின் ஒரு உண்மையான பங்காளியாகவே செயற்படுவதுடன், தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக மதிப்பிழந்து போயுள்ளது. இது இராணுவத்தின் போர்க் குற்றங்கள் பற்றிய ஒரு சர்வதேச விசாரணையை தடுக்க உதவியதுடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியான இராணுவ ஆக்கிரமிப்பை அங்கீகரிக்கின்றது. "கொழும்புடன் பேரம் பேசுவதற்கு" "தமிழர்களின் ஒற்றுமை" வேண்டும் எனக் கூறி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு இனவாத துரும்புச் சீட்டை பயன்படுத்துகிறது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியும் தமிழ் தேசியவாதத்தை தூண்டிவிட்டு தமிழ் கூட்டமைப்பிற்கு எதிரான உணர்வுகளை சுரண்டிக்கொள்ள முயற்சிக்கின்றன. அவை, தமிழர்களுக்கு அடிப்படை உரிமையை –யதார்த்தத்தில் தமிழ் முதலாளித்துவ தட்டுக்களுக்கு சலுகைகளை- வழங்க கொழும்பு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என கூறிக்கொள்கின்றன. இந்த அனைத்து கட்சிகளும் அமெரிக்க ஆதரவுக்கு அழைப்பு விடுப்பதுடன் வாஷிங்டனின் புவியரசியல் நலன்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் அதனுடன் தம்மை ஒருங்கிணைத்துக்கொள்கின்றன.

தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் இயங்கும் தமிழ் கட்சிகள் இதிலிருந்து வேறுபட்டவை அல்ல. அவர்களது கோஷ்டி மோதல்களுக்கு அப்பால், அவர்கள் அனைவரும் கொழும்பில் உள்ள பிரதான முதலாளித்துவக் கட்சிகளில் ஏதாவது ஒன்றுடன் கூட்டுச் சேர்ந்துள்ளனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஜே.வி.பி. சிறிசேனவின் தேர்வை ஆதரித்ததுடன், இன்று அவரை எதிர்ப்பதாக காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றது. அதன் பிரச்சாரம் அரசாங்கத்தின் ஊழலை தாக்குவதையும் "கிராமத்தை அபிவிருத்தி செய்வதாக" வாக்குறுதியளிப்பதையும் மையமாகக் கொண்டுள்ளது. உண்மையில், ஸ்ரீ.ல.சு.க. மற்றும் ஐ.தே.க. அரசாங்கங்கள், கிராமப்புற மக்கள் உட்பட மக்களின் வாழ்க்கைத் தரங்கள் மீதான தாக்குதல்களை உக்கிரமாக்கிய போதெல்லாம் ஜே.வி.பி. ஆட்சியில் இருந்த அந்த அரசாங்கங்களை ஆதரித்து வந்துள்ளது.

ஐ.தே.க.வையும் தற்போதைய அரசாங்கத்தையும் மிக உறுதியாக பாதுகாக்கும் கட்சிகளில் போலி-இடது நவ சம சமாஜக் கட்சியும் (ந.ச.ச.க.) ஒன்று. இது "நல்லாட்சியைப் பாதுகாக்கும் தேசிய முன்னணியை" உருவாக்கி, "பாசிச இராஜபக்ஷ குழுவுக்கு எதிராக அரசாங்கத்தை பாதுகாக்க" பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த கட்சி, அரசாங்கத்தின் பொலிஸ்-அரச நடவடிக்கைகளை நியாயப்படுத்தி, தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் சமீபத்திய வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை "வலதுசாரி சதிகள்" என இழிவாக சாடியது.

ஐக்கிய சோசலிசக் கட்சி (USP), முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) ஆகியவை, 2015ல், "இராஜபக்ஷ சர்வாதிகாரத்தை" அகற்ற வேண்டும் எனக் கூறி சிறிசேனவை ஆதரித்தன. இப்போது இந்த கட்சிகள், தாமே ஆட்சியில் அமர்த்திய அரசாங்கத்தின் "சர்வாதிகார" போக்கை விமர்சித்துக்கொண்டு ஒரு "இடது இயக்கத்தை" ஸ்தாபிக்க அழைப்பு விடுக்கின்றன. அத்தகைய அரசியல் இயக்கத்தின் ஒரே நோக்கம், முதலாளித்துவத்தை தூக்கி வீசுவதற்கான தொழிலாள வர்க்கத்தின் உண்மையான இயக்கம் வளர்வதைத் தடுப்பதே ஆகும்.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களும் அவசியமான அரசியல் படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு எதிர்வரும் வர்க்க மோதல்களுக்கு நனவுபூர்வமாக தயார் செய்துகொள்ள வேண்டும். 1948ல் சுதந்திரம் பெற்றதில் இருந்தே அடுத்தடுத்து நேர்ந்த பேரழிவுகளுக்குப் பொறுப்பான ஸ்ரீ.ல.சு.க., ஐ.தே.க. மற்றும் அனைத்து போலி இடதுகள் மற்றும் வக்காலத்து வாங்குபவர்களிடமும் இருந்து முழுமையாக அரசியல் ,ரீதியில் விலகிக்கொள்வது அவசியமாகும். தொழிலாள வர்க்கத்தின் கூட்டாளிகளை கொழும்பில் உள்ள முதலாளித்துவ வர்க்கத்தின் ஏதாவது ஒரு கன்னையில் இருந்து கண்டு பிடிக்க முடியாது, மாறாக, தமது அடிப்படை உரிமைகள் மீதான இதே போன்ற தாக்குதல்களை எதிர்கொள்ளும் ஆசியாவிலும் உலகெங்கிலும் இருக்கும் சக தொழிலாளர்கள் மத்தியிலேயே காண முடியும்.

கொழும்பு அரசியல் ஸ்தாபகத்தின் அனைத்துக் கட்சிகளுக்கும் எதிராக தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளும் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதுடன் சர்வதேச சோசலிச முன்னோக்கை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தை நடத்த முன்வர வேண்டும் என அது அழைப்பு விடுக்கின்றது.. தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களின் ஐக்கியத்திற்காக நாம் போராடுவதோடு, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தி முதலாளித்துவ ஆட்சிக்கு முண்டு கொடுப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட சகல விதமான தேசியவாதத்தையும் இனவாதத்தையும் எதிர்க்கிறோம்.

சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத் திட்டம் பின்வரும் அடிப்படை கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது:

ஏகாதிபத்திய யுத்தத்துக்கு எதிராக!

உழைக்கும் மக்களின் முதுகின் பின்னால், சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம், நாட்டை அமெரிக்க யுத்த முனைப்புடன் கட்டிப்போட்டுள்ளது. தீவின் துறைமுகங்களுக்கு அமெரிக்க மற்றும் இந்திய போர் கப்பல்கள் அடிக்கடி வந்து போவதுடன், அமெரிக்க பசிபிக் கட்டளைகளையகம் இலங்கை கடற்படையினருக்கும் கடற்படையில் துரிதநடவடிக்கைகளை மேற்கொள்ளும் படையினருக்கும் பயிற்சியளிக்கின்றது. இந்தியா, நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ், சீனாவிற்கு எதிரான அமெரிக்க மூலோபாய நகர்வுகளின் முன்நிலை அரசு என்ற நிலைக்கு மாறிவிட்டது. எந்தவொரு மோதல் சம்பவத்திலும், அமெரிக்க இராணுவத்திற்கு இலங்கை ஒரு ஏவு தளமாக இருக்கும்.

சோ.ச.க. தவிர, வேறு எந்தவொரு கட்சியும் தேர்தலில் போர் அச்சுறுத்தல் பற்றி பேசுவதில்லை. அதற்கு மாறாக, அவர்கள் அனைவரும் அத்தகைய அச்சுறுத்தல் இல்லை என்று நம்பவைத்து உழைக்கும் மக்களை ஏமாற்ற முயல்கின்றனர். சோ.ச.க., நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள அதன் சகோதரக் கட்சிகளுடன் இணைந்து, ஏகாதிபத்திய போருக்கு எதிராக தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் ஒரு சோசலிச சர்வதேச இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு போராடுகிறது.

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்திடு!

சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் உழைக்கும் மக்களுக்கும் இளைஞர்களுக்கும் எதிராக பொலிஸ்-அரச நடவடிக்கைகள் அதிகளவில் பயன்படுத்துகிறது. அது தொழிலாளர்களுக்கு எதிராக இப்போதுள்ள அவசரகால சட்டங்களை பயன்படுத்தி வருவது மட்டுமன்றி, பயங்கரவாத தடைச் சட்டத்தை பதிலீடு செய்யும் வகையில் மேலும் கொடூரமான சட்டங்களை தயாரிப்பதுடன், வலைத் தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களை தணிக்கை செய்வதாகவும் அச்சுறுத்தி வருகின்றது.

இது ஒரு சர்வதேச நிகழ்வுப் போக்கின் பாகமாகும். அமெரிக்காவில், ட்ரம்ப் நிர்வாகம் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான வேட்டையாடலை முன்னெடுத்து வருவதோடு இணைய பிரவேசங்களை குறைக்கவும் முயல்கிறது. ஐரோப்பாவில், ஸ்பெயினின் அரசாங்கமானது கட்டலான் மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கு எதேச்சதிகார அரசியலமைப்பை அமுல்படுத்துகிறது.

இலங்கையில், பாராளுமன்றம் ஒரு போலி அரசியலமைப்புச் சபையை உருவாக்குவதற்கு ஏகமனதாக வாக்களித்தது.. இது, எதேச்சதிகார ஆட்சி வடிவங்களை பலப்படுத்தவும் பௌத்தத்திற்கும் சிங்கள மொழிக்கும் முன்னுரிமை கொடுக்கின்ற இனவாத அரசியலமைப்பை பேணுவதற்குமே அன்றி, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அல்ல.

மதம், மொழி, சாதி, பாலினம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அனைத்து பாகுபாடுகளுக்கும் முடிவு கட்டவும் அனைத்து ஒடுக்குமுறைச் சட்டங்களையும் விதிகளையும் அகற்றுவதற்கும் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதன் பேரில், வெகுஜன வாக்கெடுப்பில் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு உண்மையான அரசியலமைப்பு சபையை உருவாக்குவதற்கு அழைப்பு விடுக்க தொழிலாள வர்க்கம் முன்நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன இயக்கத்தைக் கட்டியெழுப்பு!

குமுறும் வர்க்கப் போராட்டத்தின் ஒரு புதிய காலம் கட்டவிழ்கின்றது. முதலாளித்துவ வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் இலங்கை தொழிலாள வர்க்கம் தூர விலகிக்கொண்டு, சர்வதேச சோசலிசத்தை அடிப்படையாகக் கொண்ட அதன் சொந்த சுயாதீனமான அரசியல் வேலைத்திட்டத்துடன் நெருக்கடிக்குள் தலையீடு செய்யவேண்டும்.

வேலைத் தளங்கள், அதை அண்டிய பிரதேசங்கள் மற்றும் பெருந்தோட்டங்களிலும் நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்புமாறு சோ.ச.க. அழைப்பு விடுக்கிறது. தனது சொந்த சுயாதீன அமைப்புக்களை அபிவிருத்தி செய்வதன் மூலம் மட்டுமே, தொழிலாள வர்க்கத்தால் தொழிற்சங்க விலங்குகளை தகர்த்து, தனது அடிப்படை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்கான அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க முடியும். இந்த நடவடிக்கையின் போது தொழிலாள வர்க்கமானது கிராமப்புற மக்களதும் இளைஞர்களதும் ஆதரவை திரட்டிக்கொள்ள வேண்டும். சோ.ச.க. விடுத்த அழைப்புக்கு பிரதிபலிக்கும் வகையில், ஹட்டன் பகுதியில் உள்ள இரண்டு தோட்டங்களில் நடவடிக்கைக் குழுக்கள் அமைக்கப்பட்டமை, அத்தகைய குழுக்களை உருவாக்குவதற்கான பரந்த வாய்ப்புகள் இருப்பதைக் காட்டுகிறது.

வெகுஜனங்களின் நெருக்கும் சமூகத் தேவைகளை பூர்த்தி செய்ய, பொருளாதாரம் சோசலிச வழியில் மேல் இருந்து கீழ்வரை மறுசீரமைக்கப்பட வேண்டும். இதற்கு தோட்டங்கள், வங்கிகள், பெரும் தொழிற்துறைகள் மற்றும் வர்த்தகங்களும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கப்பட வேண்டும். வெளிநாட்டுக் கடன்கள் திருப்பிச் செலுத்தப்படுவது நிராகரிக்கப்படுவதோடு விவசாயிகளின் கடன்களை இரத்துச் செய்ய வேண்டும்.

லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவம் முன்கணித்தது போல், கடந்த ஏழு தசாப்தங்களாக இலங்கை முதலாளித்துவம் மக்களுடைய ஜனநாயக அபிலாஷைகளையும் சமூகத் தேவைகளையும் பூர்த்தி செய்ய இலாயக்கற்றது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசு மற்றும் தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்திற்கான போராட்டத்தில், அடிப்படை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்காக வரவிருக்கும் போராட்டங்களுக்கு தொழிலாள வர்க்கம் தலைமையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்பு

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த அரசியல் வேலைத்திட்டத்திற்காகப் போராட தொழிலாள வர்க்கத்திற்கு அவசியமான புரட்சிகரத் தலைமையை கட்டியெழுப்பவே சோ.ச.க. இந்த தேர்தலில் போட்டியிடுகின்றது. சோ.ச.க. மற்றும் அதன் இளைஞர் இயக்கமான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பு, மார்க்சிசத்திற்கான போராட்த்தின் தொடர்ச்சியையும், 1917 அக்டோபரில் உலகின் முதலாவது தொழிலாளர் அரசை நிறுவிய ரஷ்யப் புரட்சியின் பாரம்பரியத்தையும் பிரதிநிதித்துவம் செய்கின்றன.

தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள், புத்திஜீவிகள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களையும் எங்களது பிரச்சாரத்தில் பங்கு பெறுமாறும், நிதியுதவி வழங்குமாறும், உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வெளியீடான உலக சோசலிச வலைத் தளத்தை வாசிக்குமாறும் அழைப்பு விடுக்கின்றோம். உலக சோசலிச வலைத் தளமானது அரசியல், பொருளாதாரம், சமூகம், கலை மற்றும் கலாச்சாரம் பற்றிய மார்க்சிச பகுப்பாய்வுகளை வழங்குகிறது. நாம் தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள், புத்திஜீவிகள், இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோரை நமது வேலைத்திட்டத்தை தீவிரமாக படிக்குமாறும் சோசலிச சமத்துவக் கட்சியை இன்றியமையாத வெகுஜன புரட்சிகர கட்சியாக கட்டியெழுப்புமாறும் அழைப்பு விடுக்கின்றோம்..