ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Macron announces stepped-up attacks on immigrants in France

பிரான்சில் புலம்பெயர்ந்தோர் மீது மக்ரோன் அதிகப்படியான தாக்குதல்களை அறிவிக்கிறார்

By Athiyan Silva
25 July 2017

சமீபத்தில், ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் அரசாங்கத்தின் பிரதமர் எட்வாட் பிலிப் ஜுலை 12 அன்று அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான புதிய செயல் திட்டத்தை முன்வைத்துள்ளார்.

இந்த திட்டம் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவிற்கு குடிபெயர்பவர்களின் வருகைகளை கடுமையாக கட்டுப்படுத்தும். இதற்கான விசேட செயல்பாட்டு படைகளை அரசாங்கம் உருவாக்குவதோடு, ஐரோப்பிய எல்லைப் பாதுகாப்பு படையான Frontex ஐ மேலும் பலப்படுத்தி, மத்திய தரைக்கடலில் கட்டுப்பாடுகளை அதிகரிப்பதோடு, “முக்கிய இடங்களில்” உள்ள தடுப்பு முகாம்களை கட்டுப்படுத்தும் திறனை மேலும் அதிகரிக்கின்றது. அத்தோடு, புகலிடம் தேடி வருபவர்களின் வழக்குகளை, அகதிகள் மற்றும் குடியுரிமைப் பாதுகாப்பிற்கான பிரெஞ்சு அலுவலகம் (OFPRA) மற்றும் அகதிகளுக்கான தேசிய நீதிமன்றம் (CNDA) ஆகியவை பரிசீலிப்பதற்கு விதிக்கப்பட்ட காலக்கெடுவை 14 மாதத்திலிருந்து 6 மாதமாக குறைத்துள்ளது.

இவை, மக்ரோனின் கொள்கைகளை தெளிவாக்குகின்றது. முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலன்ட்டின் சோசலிஸ்ட் கட்சியின் (PS) அரசாங்கத்தில் பொருளாதார அமைச்சராக இருந்த மக்ரோனின் கொள்கை, சோசலிஸ்ட் கட்சியின் புலம்பெயர்ந்தோர்க்கு விரோதமான குரூரமான கொள்கையின் நேரடியான தொடர்ச்சியே. மில்லியன் கணக்கான அகதிகளும், புலம்பெயர்ந்தவர்களும், ஈராக், லிபியா, சிரியா, யேமன், சோமாலியா போன்ற நாடுகளில், கால் நூற்றாண்டு காலமாக, ஐரோப்பிய சக்திகள் அமெரிக்க அரசாங்கத்துடன் இணைந்து பங்கேற்கும் பேரழிவுகரமான ஏகாதிபத்திய போரில் இருந்து உயிர் தப்பிக்க முயற்சிக்கின்றனர்.

ஐ.நா இடம்பெயர்வு நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்த ஆண்டு 1530 அகதிகள் மத்திய தரைக்கடலை கடக்க முயலும் போது இறந்துள்ளனர். ஐரோப்பா மண்ணுக்கு வந்து சேர முடிந்த அகதிகள் பிற்போக்கு ஐரோப்பிய அரசாங்கங்களின் மேலும் அதிகமான ஒடுக்கு முறையையும் மற்றும் கொடுமையான வாழ்க்கை நிலைமைகளையும் சந்திக்கின்றனர்.

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது மக்ரோன் தன்னை மிகவும் அறிவொளி கொண்ட வேட்பாளராக காட்டிக்கொண்டார். குறிப்பாக அல்ஜிரியா மீது பிரான்ஸ் மேற்கொண்ட காலனி ஆதிக்க ஆட்சியை “மனித நேயத்துக்கு எதிரான குற்றம்” என்று அறிவித்தார். ஊடகங்களும், அரசியல் ஸ்தாபகமும் இப்படியான அறிக்கைகள், அவரது வெளிப்படையான நவ பாசிச தேசிய முன்னனி (FN) இன் காலனித்துவ சார்பு கொள்கையுடன் வேறுபட்டு இருப்பதை காண்பித்தன.

ஆனால் உண்மையில் மக்ரோன், PS யின் கொடூரமான புலம்பெயர்ந்தோர் விரோத கொள்கையை மேலும் அதிகப்படுத்துகிறார். அது வடக்கு பிரான்ஸில் உள்ள கலேயில், 3,000 பேருக்கும் அதிகமானோரை கொண்ட “காட்டு” அகதிகள் முகாம் (Jungle refugee camp) என்று அழைக்கப்பட்டதை மூர்க்கமாக தாக்கவும் மற்றும் அழிக்கவும் கலவர கட்டுப்பாட்டு போலிஸை அனுப்பியதோடு PS, பாரிசில் ஸ்ராலின்கிராட் பகுதியில் உள்ள அகதிகள் முகாமையும் மூடியது. PS, எந்த சமயத்திலும் தெருவில் தூக்கி எறியப்பட்ட அகதிகளுக்கு, முறையான இடவசதியோ அல்லது முறையான குடியிருப்பு விசாக்களையோ வழங்கவில்லை.

பெண்கள் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் எல்லோரும் மோசமான நிலைமையில் பாரிஸின் நடைபாதையில், போக்குவரத்து நிறைந்த சாலை அருகில் மற்றும் இரயில் மேம்பாலத்தின் அடியிலும், நெடுஞ்சாலை பாலத்துக்கு கீழேயும் பாரிஸின் போர்த் து லாசப்பல் என்ற இடத்தில் வசிக்கின்றனர். இந்த முகாம்களிலுள்ள மக்கள் மக்ரோனின் அதிகாரத்தின் கீழ் இந்த மாத தொடக்கத்தில் பாதுகாப்பு படைகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.

சட்ட சிக்கலுக்குள் சிக்கிக்கொண்ட பிரான்சில் உள்ள பல அகதிகள், பத்திரிகைளுக்கு தாங்கள் சந்திக்கும் கொடூரமான நிலை பற்றி பேசி உள்ளனர். ஒரு முன்னாள் சோமாலிய கால்நடை மருத்துவ மாணவர் இவ்வாறு கூறினார், ”நான் தெருக்களில் வாழ்ந்து சலித்துவிட்டேன், நான் சோர்வாகவும், பசியோடும் இருக்கிறேன், ஆனால் நீங்கள் கொஞ்சம் பொறுமையோடு தான் இருக்க வேண்டும்”

ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒரு இளைஞர் பின்வருமாறு கூறினார், ”நாங்கள் நெடுஞ்சாலை பாலத்துக்கு கீழே கொஞ்ச குடி தண்ணீருடன், போதுமான உணவு இல்லாமல் இரண்டு மாதமாக உறங்கி வருகிறோம். வெவ்வேறு கும்பலுக்குள் அடிக்கடி இங்கே சண்டை ஏற்படும். நீங்கள் உண்மையாக உறங்க முடியாது. நான் தினமும் வரிசையில் நிற்பேன். ஆனால் உதவி மையத்துக்குள் செல்வேன் என்ற எந்த நம்பிக்கையும் இல்லை. நாங்கள் மனிதர்கள், மிருகங்கள் இல்லை.”

அலெப்போவில் ஆசிரியராக இருந்த அலி என்ற 29 வயதுடைய ஒருவர் சொன்னார் “நான் மனிதனாக வாழ விரும்புகிறேன். நான் சிரியாவில் போர் நடந்த சமயத்தில் நான்கு ஆண்டுகள் மிக மோசமான நிலைமையின் கீழ் வாழ்ந்தேன்.”

போர் மற்றும் அரசின் ஒடுக்குமுறையில் இருந்து தப்பிக்கும் பெரும்பாலான அகதிகள் OFPRA வால் நிராகரிக்கப்படுகின்றனர். அதனால், அவர்கள் CNDA விற்கு மீண்டும் மேல்முறையீடு செய்ய வேண்டி உள்ளது. இந்த செயல்முறைக்கு அவர்கள் ஒரு வழக்கறிஞரை ஏற்பாடு செய்யவேண்டியிருப்பதோடு, தங்களின் ஆவணங்களை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்க வேண்டியும் உள்ளது. எந்த வருவாயும் இல்லாமல் தெருவில் வாழும் பாதிக்கப்பட்ட அகதிகள், இவ்வாறான செயல்முறையை செய்ய தேவையான ஆயிரக்கணக்கான யூரோக்கள் அவர்களிடம் இல்லை.

OFPRA அறிக்கையின்படி, 85,244 க்கும் மேற்பட்டவர்கள் தஞ்சம் தேடுவதற்கு 2016 இல் விண்ணப்பித்திருந்தனர். அதில், 58,635 பேர்கள் நிராகரிக்கப்பட்டதோடு, வெறும் 27,000 பேர்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.

மனித உரிமைகள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான அக்கறையின் அடிப்படையில் நாட்டிற்குள் வரும் அகதிகளின் ஒரு சிறு பகுதியினருக்கு பிரான்ஸ் அகதி அந்தஸ்தை வழங்கவில்லை. மாறாக, அவை முதலாளித்துவ சுரண்டலுக்கு மிகவும் உயர்ந்த அளவில் இலாபகரமானவையா என்பதை அடிப்படையாகக் கொண்டு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பெரும்பாலான அகதிகள் உணவகங்கள், சிறிய கடைகள், கட்டுமானம், சுத்தம் செய்தல் ஆகிய ஊதியம் குறைந்த சில்லறை வேலைகளில் அதிக நேரங்கள் பணிபுரிகின்றனர்.

அங்கீகரிக்கப்படாத அகதிகளின் நிலை இன்னும் மோசமானது. அவர்கள் சட்டத்துக்கு புறம்பான குறைவான ஊதியம் கிடைக்கும் வேலைகளை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் நீண்ட நேரம் வேலை செய்து, தினசரி சம்பளமாக 30 இல் இருந்து 50 யூரோக்களை மட்டுமே பெறுகின்றனர். உத்யோகபூர்வமான சம்பள சீட்டுக்கள் (pay sheets) இவர்களிடம் இல்லை. போலீஸில் புகார் தெரிவிக்க முடியாது என்பதால், சம்பளம் கொடுக்கப்படாமல் பல சமயங்களில் முதலாளிகளால் இவர்கள் இலகுவாக ஏமாற்றப்படுகின்றனர். சிலர் தெருக்களிலும், இரயில் நிலையங்களிலும் பிச்சை எடுக்கின்றனர். ஆனால், அதே சமயம் அவர்கள் தாங்கள் போரால் அழிக்கப்பட்ட தங்கள் தாயகத்திற்கு அதிகாரிகளால் நாடு கடத்தப்படுவோமோ என்ற  அச்சத்திலும் உயிர் வாழ்கின்றனர்.

முன்னேறிய நாடுகளில், அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல் என்பது ஒரு சர்வதேச நிகழ்வுப்போக்காகும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில், அரசியல் ஸ்தாபகம் தொழிலாளர் வர்க்கத்தை பிரிக்க, புலம்பெயர்ந்தோருக்கு எதிரான உணர்வை தூண்டிவிட்டு மிகவும் வறிய மற்றும் பாதிப்புக்களுக்கு ஆளாகக்கூடிய அகதிகள் மீது குறிவைக்கின்றனர். அவர்கள், சமூக நலத்திட்டங்களை அழிக்கவும், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக சிக்கன நடவடிக்கைகளை திணிக்கவும் புலம்பெயர்ந்தோரை பலிக்கடாவாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

மக்ரோனின் புலம்பெயர்ந்தோருக்கான செயல் திட்டம் இந்த பிற்போக்கான மூலோபாயத்தை பயன்படுத்துகிறது. அதாவது, பிரான்சில் உள்ள சமூக அவலநிலையின் மீதான கோபத்தை திசைதிருப்பவே புலம்பெயர்ந்தோருக்கு எதிரான உணர்வை அவர் துண்டிவிடுகிறார். அவர், மேலும் தொழிலாளர் உரிமைகள் மீதான தாக்குதல்களை மோசமாக்கவும், ஒரு அவசரகால சட்டத்தை நிரந்தரமாக திணிப்பதற்கான ஒரு சட்டத்தை கொண்டு வரவும் முயற்சிக்கிறார். சமீபத்தில், மக்ரோன் பிரான்சின் குடிபெயர்வு முறையானது ”முற்றிலும் மூழ்கி இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

இது, அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான தெளிவான எச்சரிக்கை மட்டும் அன்று, மாறாக பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவில் உள்ள ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்துக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகும். பேர்லின் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தோடு நெருக்கமாக இணைந்து வேலை செய்யும் மக்ரோன், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குல்களை தொடர்வதோடு மட்டும் அல்லாமல் மேலும் அதிகப்படுத்துவார். மற்றும் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரை நசுக்குவதையும் அதிகரிப்பார்.