ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Mass protests against unemployment shake Tunisian regime

வேலைவாய்ப்பின்மைக்கு எதிரான பாரிய போராட்டங்கள் துனிசிய ஆட்சியை உலுக்குகின்றன

By Alex Lantier
12 January 2018

வேலைவாய்ப்பின்மை மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக இவ்வாரம் தென்-துனிசியாவின் வறிய தொழில்துறை பகுதிகளில் தொடங்கிய போராட்டங்கள் நாடெங்கிலும் பரவி வருகின்றன. தேக்கமடைந்த சம்பளங்கள் மற்றும் 15 சதவீத (பல்கலைக்கழக பட்டதாரிகள் மத்தியில் 30 சதவீதத்திற்கும் அதிகமான) வேலைவாய்ப்பின்மைக்கு இடையே, சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) உடன்பட்டு, மானியங்களை வெட்டும் மற்றும் எரிபொருள், உணவு பொருட்களின் விலைகளை அதிகரிக்கும் 2018 சிக்கன வரவுசெலவு கணக்கைப் போராட்டக்காரர்கள் எதிர்க்கின்றனர்.

2011 இல் இதுபோன்ற போராட்டங்கள் தீவிரமடைந்து, இறுதியில் துனிசிய ஜனாதிபதி ஜைன் எல் அபிடைன் பென் அலி ஐ தூக்கிவீசி, எகிப்தில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்களை எவ்வாறு தூண்டின என்பதை பெருந்திரளான மக்கள் நினைவூட்டுகின்றனர். இன்று தலைநகர் துனீசில் போராட்டங்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

புதன் மற்றும் வியாழனன்று, தென்-துனிசியாவில் தொடர்ந்த போராட்டங்கள் தலைநகர் துனீசின் தொழிலாள வர்க்க புறநகர் பகுதிகளை எட்டியது. இளைஞர்கள் சிலியானாவில் நகர நீதிமன்ற வளாகத்தை முற்றுகையிட்டதுடன், பொலிஸூடன் வன்முறையாக மோதலில் இறங்கி, காசெரைனில் (Kasserine) சாலை தடுப்புகள் அமைத்தனர். தாலாவில், போராட்டக்காரர்கள் அந்நகரின் தேசிய பாதுகாப்புத்துறை கட்டிடத்திற்கு தீமூட்டியதுடன், அப்பகுதியிலிருந்து பொலிஸைப் பின்வாங்க நிர்பந்தித்தனர். துனீசில் இருந்து 30 கி.மீ. மேற்கில் உள்ள Tebourba நகரில், திங்களன்று இரவு போராட்டங்களை பொலிஸ் ஒடுக்கிய போது கொல்லப்பட்ட ஒருவர் அடக்கம் செய்யப்பட்ட பின்னர், போராட்டங்கள் வெடித்தன.

துனீசின் அண்டைபகுதியான Ibn Khaldun இல் அங்கேயும் பொலிஸூடன் மோதல்கள் வெடித்தன. துனீசில் புதனன்று இரவு போராட்டத்தில் ஈடுபட்ட ஓர் இளைஞர் அஹ்மத் RFI க்கு கூறுகையில், “துனிசியாவில் வாழ்க்கை செலவுகள் மிகவும் அதிகம். அது அழிவுகரமாக உள்ளது. பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் என்று இங்கே இரண்டு விதமான மக்கள் வாழ்கிறார்கள்,” என்றார்.

துனிசியாவின் மோதல்கள் சர்வதேச நிதிய மூலதனம் கட்டளையிடும் மற்றும் அப்பிராந்தியம் எங்கிலுமான அரசாங்கங்களால் திணிக்கப்படும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களின் ஒரு சர்வதேச அலைக்கு முகப்பு புள்ளியாக உள்ளது. கடந்த ஆண்டு, எகிப்திய ஆட்சி IMF இன் அழைப்புகளை ஏற்று உணவு மானியங்களைக் குறைக்க உடன்பட்ட போது மற்றும் ரொட்டிகளின் விலைகளை சற்று உயர்த்த முயன்ற போது பெருந்திரளான மக்களின் போராட்டங்கள் வெடித்தன. இப்போது அல்ஜீரியாவில், அந்நாட்டின் மருத்துவமனைகளுக்கு நிதிகள் மற்றும் வினியோகங்கள் மீதான வெட்டுக்களை எதிர்த்து, ஆயிரக் கணக்கான மருத்துவ மாணவர்கள் தேர்வுகளைப் புறக்கணித்து ஆர்பாட்டம் செய்து வருகின்றனர்.

டாலருக்கு எதிராக சூடான் செலாவணியின் மதிப்பை நெகிழ்வானதாக மாற்றுமாறு IMF இன் கோரிக்கைகளுக்கு அந்த ஆட்சி உடன்பட்ட பின்னர், நேற்று சூடானில் ரொட்டி விலை உயர்வுகள் மீது போராட்டங்கள் தொடர்ந்தன. உணவு விலை உயர்வுகளுக்கு எதிராக போராடிய மாணவிகளை அஹ்ஃபத் பல்கலைக்கழக தலைவர் அடிக்கும் ஒரு காணொளி வெளியானதும் எழுந்த அதிகரித்த கோபத்திற்கு இடையே, “வேண்டாம், வேண்டாம், விலை உயர்வுகள் வேண்டாம்!” என்று கோஷமிட்ட Khartoum பல்கலைக்கழக மாணவர்களைப் பொலிஸ் தாக்கியது.

அனைத்திற்கும் மேலாக வங்கிகள் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் மீது வெடிப்பார்ந்த தாக்குதல்களுக்குத் தயாரிப்பு செய்து கொண்டிருக்கையில், இஸ்ரேலில் மருந்துத்துறை மற்றும் நகரசபை தொழிலாளர்கள், ரோமானியாவில் வாகனத்துறை தொழிலாளர்கள், பிரிட்டனில் இரயில் தொழிலாளர்கள் மற்றும் ஜேர்மனியில் உலோகத்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்துடன், வர்க்க மோதல் உலகளவில் தீவிரமடைந்து வருவதற்கு இடையே இது வருகிறது.

துனிசிய அரசியல் அமைப்பு மதிப்பிழந்துபோயுள்ளது, ஆளும் வர்க்கம் பெரும்பிரயத்தனத்துடன் புதிய புரட்சிகர வெடிப்பைத் தடுக்க முயன்று வருகிறது. பென் அலியின் பழைய ஆளும் கட்சியின் புதிய அமைப்பான Nidaa Tounes மற்றும் இஸ்லாமிய நாஹ்டா கட்சி ஆகியவற்றின் கூட்டணி அரசாங்கம், போராட்டக்காரர்களைச் சதிகாரர்கள் என்று அவதூறு செய்து, ஒடுக்குமுறைக்கு சூளுரைத்துள்ளது.

மக்களுக்கு எதிராக அரசு கட்டிடங்களை பாதுகாப்பதற்காக தாலா, கெபிலி மற்றும் பிஸேர்ட் மற்றும் Sousse சுற்றுலா நகரம் உட்பட பல நகரங்களில் துனிசிய இராணுவப் பிரிவுகள் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாள் இரவும் நூற்றுக் கணக்கான மக்களை இராணுவம் சுற்றி வளைத்து வருகிறது; நேற்று வரையில் அண்மித்து 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருந்தும் ஆளும் வர்க்கம் இன்னமும் பீதியுற்றுள்ளது. நேற்று துனிசியாவின் Le Temps எழுதியது: “திகிலும் குழப்பமும் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன, அடுத்து பேச்சுக்கள், உத்தியோகபூர்வமானதோ அல்லது கட்சி சார்பானதோ, நடைமுறையளவில் புதிதாக எதையும் கொண்டு வந்துவிடவில்லை... பரந்தளவிலான அச்சம், முக்கியமாக, எந்த அதிசயம் நமக்கு அமைதியைக் கொண்டு வரும் என்பது உள்ளடங்கலாக பல கேள்விகளை எழுப்புகிறது.”

புதனன்று ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில், துனிசிய பிரதம மந்திரி Youssef Chahed முதலாளித்துவ வர்க்கத்திற்கு மறு உத்தரவாதம் வழங்க முயன்றார். “அரசு இன்னமும் நீடிக்கிறது. நமது அமைப்புகள் மற்றும் பெருநிறுவனங்கள் அனைத்திற்கும் நாங்கள் உத்தரவாதமாக பாதுகாப்பு வழங்குவோம், துல்லியமாக நமது இராணுவம் மற்றும் பொலிஸ் பிரிவுகளின் அணிதிரள்வு மற்றும் கண்காணிப்புக்குத் தான் நன்றி கூற வேண்டும், இவர்கள், வழக்கம் போல, பெரும் தேசப்பற்றை காட்டி, தேசத்தின் உயர்ந்த நலன்களது பாதுகாப்பிற்கு உறுதியாக அர்ப்பணித்துள்ளனர்.”

“ஊழல், கையாடல் மற்றும் கடத்தல் ஆகிய வலையமைப்பிடம் இருந்து பணம் பெறும் நாசக்காரர்களாக" போராட்டக்காரர்களை Chahed கண்டித்தார், “இவற்றிற்கு எதிராக அரசாங்கம் ஒரு ஈவிரக்கமற்ற போர் தொடுக்க முடிவெடுத்ததுள்ளது. துரதிருஷ்டவசமாக இந்த குண்டர்கள் சில பொறுப்பற்ற அரசியல்வாதிகளால் தூண்டிவிடப்பட்டு வருகிறார்கள்,” என்றார்.

நேற்று El Guettar இல், பென்-அலிக்கு சார்பான தொழிற்சங்கமான துனிசிய பொது தொழிற்சங்கத்தின் (UGTT) அங்கத்தவர்களையும், தொழிற் கட்சி அங்கத்தவர் Habib Tebas, UGTT நிர்வாகி Jemal Cheaïcha மற்றும் மக்கள் முன்னணி அங்கத்தவர் Talal Tabassi ஆகியோர் உள்ளடங்கலாக குட்டி-முதலாளித்துவக் கட்சியான மக்கள் முன்னணி கூட்டணியின் அங்கத்தவர்களையும் பொலிஸ் கைது செய்தது. இந்த ஒடுக்குமுறை பிற்போக்குத்தனமானது; கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

ஆனால் துனிசியாவிலும் சர்வதேச அளவிலும் ஒரு புதிய புரட்சிகரத் தலைமையை தொழிலாள வர்க்கம் கட்டமைக்க வேண்டும் என்பதே அடிப்படை பிரச்சினையாகும். 2011 க்குப் பின்னர் இருந்து, UGTT மற்றும் மக்கள் முன்னணியின் தேசியவாத மூலோபாயம் எதிர்புரட்சிகரமானது மற்றும் திவாலானது என்பது அம்பலமாகி உள்ளது. பின்புலத்தில் Nidaa Tounes உடன் வங்கிகள் ஓர் உடன்படிக்கை ஏற்படுத்த முயன்று வருகையில், அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச, புரட்சிகர போராட்டத்திற்கு விரோதமானவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டதாகும். அவர்கள், பென் அலி ஆட்சியின் மறுபெயரிடப்பட்ட வடிவத்துடனும், லிபியா மற்றும் மாலியில் போர் தொடுத்த ஏகாதிபத்தியத்துடன் மற்றும் வறுமையுடனும் தொழிலாளர்களைப் பிணைத்து வைப்பதில் மட்டுமே வெற்றி அடைந்தனர்.

பென் ஆலி ஆட்சியின் ஒரு தூணாக இருந்த UGTT, போராடி வரும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விரோதமானது. UGTT தலைவர் Noureddine Taboubi அந்த போராட்டங்களை "போலித்தனமானது" என்று கண்டனம் செய்துள்ளார், அவர் அறிவிக்கையில், “இரவின் திரையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசு சொத்துக்களைச் சூறையாடுபவர்களாக மாறுவதற்கான எந்தவொரு சாக்குபோக்கையும் நாங்கள் ஏற்க மாட்டோம்,” என்றார். போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கும் எந்தவொரு அரசியல் கட்சியும் "ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்துங்கள்" என்றவர் கோரினார்.

இருப்பினும் UGTT இன்றைய துனீஸ் போராட்டங்களுக்கான அழைப்பில் இப்போது இணைந்துள்ளது.

இளைஞர்கள் பொலிஸ் மற்றும் இராணுவத்துடன் சண்டையிட்டு வருகின்ற வேளையில், மக்கள் முன்னணி தலைவர் ஹமா ஹமாமி (Hamma Hammami) போராட்டங்களுக்கான அழைப்புகளை திரும்ப பெறவில்லை. ஆனால் தொழிலாள வர்க்கத்தால் Nidaa Tounes ஆட்சி புரட்சிகரமாக தூக்கி வீசப்படுவதை அவர் எதிர்க்கிறார் என்பதை அவர் தெளிவுபடுத்தி வருகிறார். Tunisie Numérique இன் கருத்துப்படி, வேலைவாய்ப்பின்மைக்கு "தீர்வு காணுமாறும்", மற்றும் "போராட்டங்களைக் குறித்து விசாரிக்க, தங்களின் நேர்மை மற்றும் நன்னடத்தைக்காக பிரபலமாக அறியப்பட்ட தேசிய பிரமுகர்களைக் கொண்ட ஒரு சுதந்திரமான ஆணைக்குழுவை" தேர்ந்தெடுக்குமாறும் அவர் நேற்று ஷாஹெட் (Chahed) க்கு முறையிட்டார்.

துனிசிய முதலாளித்துவ வர்க்கத்தின் பரந்த பிரிவுகளும், அவர்களுக்கு பின்னால் ஏகாதிபத்திய தலைநகரங்களில் உள்ள அவர்களின் கூட்டாளிகளும், இந்த படைகளே, 2011 இல் அவை செய்ததைப் போல, நிலைமையைக் கட்டுப்படுத்தும், தொழிலாள வர்க்கத்தின் அரசு அதிகாரத்திற்கான போராட்டத்தை தடுத்துவிடும், மற்றும் இயக்கத்தின் குரல்வளையை நெரித்துவிடும் என்று நம்புகின்றனர். “UGTT, நியாயத்தின் குரல்" என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையில் Le Temps எழுதியது: “நமது நாடு சமூக காய்ச்சலின் ஒரு புதிய முறைக்கு சென்று கொண்டிருக்கையில், போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கான தகைமை இந்த சக்தி வாய்ந்த தொழிற்சங்கத்தால் நன்கு ஸ்தாபித்துக் காட்டப்பட்டுள்ள நிலையில், இது தலையாய தேசப்பற்றைத் தொடர்ந்து எடுத்துக்காட்டி வருகிறது.”

இந்த புதிய மேலெழுச்சி அவசரமாக முந்தைய போராட்டத்தின் அரசியல் படிப்பினைகளை முன்னுக்குக் கொண்டு வருகின்றது. 2011 இல் துனிசிய தொழிலாளர்கள் புரட்சிக்குள் தள்ளிய எந்த பிரச்சினைகளும் முதலாளித்துவத்தின் கீழ் தீர்க்க முடியாது. வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மை அதிகரித்தது, அதேவேளையில் ஏகாதிபத்திய போர்கள் அப்பிராந்தியத்தை நாசமாக்கின. தேசிய அடித்தளம் கொண்ட பழைய அமைப்புகளிடம் இருந்து முறித்துக் கொண்டு, சர்வதேச அளவில் எழும் புரட்சிகர போராட்டங்களை நோக்கி திரும்புவதே இப்போதைய பணியாகும். துனிசியாவின் ஆரம்ப புரட்சிகர போராட்டங்களின் போது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) வகுத்தளித்த முன்னோக்கு ஊர்ஜிதப்படுத்தப்பட்டு உள்ளது.

அது எழுதியது, “துனிசியாவிலும் ஒட்டுமொத்த மாஹ்ரெப் மற்றும் மத்திய கிழக்கிலும் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்படும் மக்களுக்கு ஒரே நம்பகமான வேலைத்திட்டம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் முன்னெடுக்கப்படும் சோசலிசப் புரட்சிக்கான வேலைத்திட்டமாகும். … இந்த போராட்டத்தை வெறுமனே தேசியளவில் நடத்த முடியாது. மத்திய கிழக்கு மற்றும் மாஹ்ரெப்பின் ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டம் என்ற பதாகையின் கீழ் உழைக்கும் மக்களை ஐக்கியப்படுத்துவதற்காக, வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு எங்கிலும், உலக சோசலிசப் புரட்சியின் பாகமாக ட்ரொட்ஸ்கிச கட்சிகளைக் கட்டியெழுப்ப வேண்டும்.”

அது தொடர்ந்து குறிப்பிட்டது, “துனிசியா மற்றும் மத்திய கிழக்கு எங்கிலும் உள்ள WSWS வாசகர்கள் எமது வலைத் தளத்தை தொடர்பு கொள்ளுமாறு நாம் அழைப்பு விடுக்கிறோம். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரிவுகளைக் கட்டமைக்கும் போராட்டத்தை முன்னெடுத்து, துனிசியா மற்றும் ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் சர்வாதிகாரம் மற்றும் சுரண்டலை முடிவுக்குக் கொண்டு வர விரும்புவோருக்கு நாம் அழைப்புவிடுக்கிறோம்.”

மேலதிக வாசிப்புகளுக்கு:

துனிசிய மக்கள் எழுச்சியும் நிரந்தரப் புரட்சி முன்னோக்கும்

[19 January 2011]

மத்திய தர வர்க்க “இடதும்” துனிசிய புரட்சியும்

[24 January 2011]

அமெரிக்காவும், எகிப்தும், சோசலிச புரட்சிக்கான போராட்டமும்

[31 January 2011]