ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French chemical industry unions back contract violating minimum wage laws

பிரெஞ்சு இரசாயன தொழில்துறை சங்கங்கள் குறைந்தபட்ச கூலி சட்டங்களை மீறும் ஒப்பந்தத்தை ஆதரிக்கின்றன

By Alex Lantier
8 January 2018

முதலாளிமார்கள் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலியைக் காட்டிலும் குறைவாக சம்பளம் வழங்கக்கூடிய ஓர் அடிப்படை ஒப்பந்தத்திற்கு பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் தொழிற்சங்க சம்மேளனம் (CFDT) ஒப்புதல் அளித்திருப்பது வெள்ளியன்று தெரிய வந்தது. இது, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன், சோசலிஸ்ட் கட்சியின் (PS) தொழிற்சட்டம் மற்றும் முன்னாள் பொருளாதார அமைச்சரும் தற்போதைய பிரெஞ்சு ஜனாதிபதியுமான இமானுவல் மக்ரோனின் தொழில் உத்தரவாணைகள் ஆகியவற்றின் மற்றொரு பயன்பாடாக உள்ளது. அவர்களது கொள்கைகள், 20 ஆம் நூற்றாண்டில் தலைமுறை தலைமுறைகளது போராட்டங்களினூடாக தொழிலாள வர்க்கம் போராடி வென்ற அடிப்படை சமூக உரிமைகளை நசுக்குவதற்கானது என்பதை இது தெளிவுபடுத்துகின்றது.

ஸ்ராலினிச தொழிற்சங்கமான தொழிலாளர்களின் பொதுக் கூட்டமைப்பு (CGT), பிரெஞ்சு நிர்வாகிகளின் கூட்டமைப்பு (CFE), மற்றும் தொழிலாளர் சக்தி (FO) ஆகியவை, ஒரு தொழில்துறை முழுவதும் 1.1 சதவீத கூலி உயர்வை இரண்டு தவணைகளில் வழங்குவதற்கான டிசம்பர் 21 ஒப்பந்தம் ஒன்றில் CFDT கையெழுத்திட்டுள்ளதாக அறிவிக்கும் அறிக்கை ஒன்றை வெள்ளியன்று வெளியிட்டன. இது மிகக் குறைந்தளவாக மணிக்கு 9.82 யூரோ சம்பளத்தை ஜனவரி 1 இல் இருந்தும், பின்னர் 9.86 யூரோவை ஏப்ரல் 1 முதலும் நடைமுறைப்படுத்தும். இவ்விரண்டுமே, இரசாயனத்துறை ஒப்பந்தத்தில் CFDT கையெழுத்திடுவதற்கு முன்னதாக, டிசம்பர் 15 இல் 2018 குறைந்தபட்ச கூலியாக (SMIC) ஒப்புக்கொள்ளப்பட்ட 1.24 சதவீத உயர்வான 9.88 யூரோவைக் காட்டிலும் குறைவாகும்.

சோசலிஸ்ட் கட்சியின் தொழிற்சட்டம் மற்றும் மக்ரோனின் உத்தரவாணைகளைப் பயன்படுத்தி, அரசும், எண்ணெய்துறை முதலாளிமார்களும் மற்றும் CFDT உம் தொழிலாளர்களின் கூலிகள் மற்றும் நிலைமைகளில் கடுமையான வெட்டுக்களைச் செய்ய ஒரு போலியான சட்ட கட்டமைப்பை ஏற்படுத்த சதி செய்து வருகின்றன. 2009 இல் இருந்து, கிரீஸில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கூலி மற்றும் ஓய்வூதிய வெட்டுக்களின் ஒட்டுமொத்த தாக்கம், 40 சதவீத அளவிலான வருவாயைக் குறைப்பதாக இருந்துள்ளது. இப்போதோ, தொழிலாளர்களுக்கு எதிராக ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் அத்தகைய தாக்குதல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

CGT-CFE-FO அறிக்கையின்படி, CFDT இன் ஒப்பந்தம் "பணி அனுபவ மூப்பு மற்றும் வேலையிட நிலைமைகளுக்காக (இரவு வேலை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் வேலை, இதர பிறவற்றுக்கும்) வழங்கப்படும் குறைந்தபட்ச கூலி கொடுப்பனவுகளையும் கணக்கில் சேர்த்திருக்கும்.” இதுவரையில், மொத்த சம்பளத்தில் 35 சதவீதம் வரையில் கொண்டிருந்த இதுபோன்ற கொடுப்பனவுகள், குறைந்தபட்சம் SMIC குறைந்தபட்ச கூலிக்கு இணையாக அடிப்படை சம்பளத்திற்கு கூடுதலாக வழங்கப்பட்டன. ஆனால் புதிய ஒப்பந்தத்தின்படி, 35 சதவீதம் அல்லது அதற்கு அதிகமான கூலி வெட்டுக்களுக்கு வழி வகுக்கும் வகையில், முதலாளிமார்கள் அந்த கொடுப்பனவுகளையும் CFDT ஆல் ஒப்புக் கொள்ளப்பட்ட துணை-SMIC கூலியின் பாகமாக கணக்கிட முடியும்.

வாகன உற்பத்தி நிறுவனமான PSA Peugeot-Citroën ஜேர்மனி மற்றும் பிரிட்டனில் உள்ள அதன் Opel-Vauxhall துணை நிறுவனங்களில் ஆயிரக் கணக்கான வேலைகளை வெட்டுகின்ற அதேவேளையில், பிரான்சில் மக்ரோனின் தொழில் உத்தரவாணைகளில் உள்ள வழிவகைப் பயன்படுத்தி, தொழிற்சங்க ஒப்புதலுடன் அதன் பிரெஞ்சு ஆலைகளில் பாரிய வேலை வெட்டுக்களைச் செய்ய திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளுக்கு ஒரு சில நாட்களுக்குப் பின்னரே இந்த அறிவிப்பு வந்தது. குறைந்தபட்ச கூலியில் அல்லது அதற்கும் குறைவான சம்பளத்தில் அமர்த்தப்பட்ட பெரிதும் தற்காலிக தொழிலாளர் சக்திக்குள் PSA ஐ நகர்த்துவதே இதன் இலக்காக உள்ளது.

இத்தகைய நடவடிக்கைகள் ஐரோப்பா எங்கிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்திற்கு ஒர் எச்சரிக்கையாகும். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆளும் வர்க்கத்தாலும், மற்றும் விலை-போன பல்வேறு தொழிற்சங்க அதிகாரத்துவங்களாலும் எழுப்பப்படும் போலி-சட்ட கட்டமைப்பை நிராகரிப்பதே கூலிகள் மற்றும் வேலைகளைப் பாதுகாப்பதற்கான ஒரே வழியாகும். “பணக்காரர்களின் ஜனாதிபதிக்கு" எதிராக பிரான்சில் கோபம் அதிகரித்து வருகின்ற நிலையில், நிறுவனங்கள் மற்றும் தேசிய அரசுகளால் திணக்கப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் அரசியல் போராட்டத்தை ஒழுங்கமைக்கும் பணியை தொழிலாளர்கள் முகங்கொடுக்கிறார்கள்.

இதுபோன்ற போராட்டங்கள் புரட்சிகர தாக்கங்களுடன் தொழிலாள வர்க்கத்தை அரசுடன் ஒரு சமரசமற்ற மோதலுக்குள் கொண்டு வரும் என்பதை பிரெஞ்சு தொழிற்சட்டத்திற்கு எதிரான அனுபவம் காட்டுகிறது. மக்கள்தொகையில் 70 சதவீதத்தினருக்கு அதிகமானவர்களின் எதிர்ப்புக்கு முன்னால், தொழிற்சட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் மீது மூர்க்கமான பொலிஸ் ஒடுக்குமுறையைப் பிரயோகிக்க அவசரகால நிலையைப் பயன்படுத்தி, சோசலிஸ்ட் கட்சி 2016 இல் அந்த தொழிற்சட்டத்தைத் திணித்தது. புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA) மற்றும் அடிபணியா பிரான்ஸ் (France insoumise – LFI) போன்ற குட்டி-முதலாளித்துவ கட்சிகளின் ஆதரவுடன், CGT அதன் போராட்டங்களுக்குத் தடை விதிக்கப்படும் என்ற சோசலிஸ்ட் கட்சியின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து, அச்சட்டத்திற்கு எதிராக மேல் நடவடிக்கை எடுப்பதைக் கைவிட்டது.

பின்னர், இரண்டாவது சுற்று ஜனாதிபதி தேர்தலில் நவ-பாசிசவாத வேட்பாளர் மரீன் லு பென்னுக்கு எதிராக தன்னை காட்டிக் கொண்டு வேறு வழியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவரும், பிரெஞ்சு வாக்காளர்களில் பாதிக்கும் குறைவானர்களே பங்கெடுத்த தேர்தல்களில் நாடாளுமன்ற பெரும்பான்மை பெற்றவருமான மக்ரோன், தொழிலாள வர்க்கதின் மீது ஒரு வரலாற்று தாக்குதலுக்குத் தயாரிப்பு செய்ய உத்தரவாணைகளுக்குத் தயாரிப்பு செய்தார். 2008 பொறிவுக்குப் பின்னர் வங்கிகள் மற்றும் நிதிய பிரபுத்துவத்திற்கு ட்ரில்லியன் கணக்கான யூரோக்களைக் கையளித்துள்ள பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள், இப்போது, தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளை முடமாக்க நோக்கம் கொண்டுள்ளனர்.

இதுபோன்ற கொள்கைகளில் ஒரு துளியும் ஜனநாயக சட்டப்பூர்வத்தன்மை கிடையாது. செப்டம்பர் ஜேர்மன் தேர்தல்கள் ஒரு தொங்கு நாடாளுமன்றத்தை உருவாக்கிய பின்னரும், ஐரோப்பிய அதிகாரிகள் பாரீஸ்-பேர்லின் அச்சு ஐரோப்பாவிற்கான ஒரு புதிய விடியலை மேற்பார்வையிடும் என்று வாக்குறுதி அளித்து வருகின்றனர். பிரெஞ்சு தொழிற்சட்டத்தை நெறிப்படுத்துவதில் சோசலிஸ்ட் கட்சி, இத்தாலிய ஜனநாயகக் கட்சி மற்றும் ஏனையவற்றுடன் சேர்ந்து இயங்கிய சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) தோல்வி அடைந்த வேட்பாளர் மார்டின் சூல்ஸ், “குறைந்தபட்ச கூலிக்கான ஐரோப்பிய கட்டமைப்புக்காக" அவர் போராடி வருவதாக கடந்த மாதம் குறிப்பிட்டார்.

உண்மையில் சோசலிஸ்ட் கட்சியும் மக்ரோனும், ஐரோப்பா எங்கிலும் உள்ள சமூக ஜனநாயகக் கட்சிகளுடன் சேர்ந்து, குறைந்தபட்ச கூலியை ஒரு பேனா முனையில் நீக்க எவ்வாறு மக்களின் முதுகுக்குப் பின்னால் சதி செய்கின்றனர் என்பதையே CFDT இரசாயன தொழில்துறை ஒப்பந்தம் எடுத்துக்காட்டுகிறது.

பிரெஞ்சு இரசாயன ஒப்பந்தம் சோசலிஸ்ட் கட்சியின் தொழிற்சட்டம் மற்றும் மக்ரோன் உத்தரவாணைகளின் இரண்டு முக்கிய வழிவகைகளைப் பயன்படுத்துகிறது: முதலாவதாக, தேசிய தொழில் விதிமுறைகளில் இருந்து தொழில்துறைகளும் நிறுவனங்களும் விதிவிலக்குகளைப் பெறமுடியும்; இரண்டாவது, 30 சதவீத தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் தொழிற்சங்கங்களின் ஒப்புதலைப் பெற்றால் போதும் முதலாளிமார்களால் ஓர் ஒப்பந்தத்தைத் திணிக்க முடியும். ஆகவே, இரசாயன தொழில்துறை தொழிலாளர் பலத்தில் 33 சதவீதத்திற்கு சற்று அதிகமாக கொண்டுள்ள CFDT, தொழில் விதிமுறையின் ஷரத்து 141 க்கு விதிவிலக்கு வழங்கும் ஓர் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கிவிட்டது. இந்த ஷரத்து தான் பிரான்சில் SMIC குறைந்தபட்ச கூலியைக் கட்டாயமாக்குகிறது.

குறைந்தபட்ச கூலி சட்டங்களைச் சுற்றி உள்ள இதுபோன்றவை பிரான்ஸ் எங்கிலும் மற்றும் அதைக் கடந்தும் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையில் தயாரிக்கப்பட்டு வருகின்றனவா என்று ஐயமாக உள்ளது.

இரசாயன தொழில்துறை ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பை தொழிலாளர்கள் ஒழுங்கமைக்கையில், CFDT க்கு விமர்சனபூர்வமாக உள்ள CGT, FO, அல்லது பிற தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் மீது நம்பிக்கை வைக்க முடியாது. பொதுவாக இவை அரசின் அங்கங்களாக பரிணமிப்பதற்கும், முதலாளிமார்களிடம் இருந்து நிதியுதவி பெறுவதற்கும் சோசலிஸ்ட் கட்சியின் தொழிற்சட்டமும் மக்ரோனின் உத்தரவாணைகளும் நீதி பரிபாலன சுதந்திரத்தை வழங்குகின்றன, தங்களின் தொழிலாள வர்க்க அடித்தளத்தை இழந்துள்ள இவை, தங்களின் சொந்த அங்கத்தவர்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்காக போலியான சட்டக் கட்டுப்பாடுகளை வழங்குவதற்கும் மற்றும் திட்டமிடுவதற்கும் சேவையாற்றுகின்றன.

CFDT மீதான இவற்றின் விமர்சனங்கள் பிரதானமாக தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்து வரும் சமூக கோபத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக கன்னைகளுக்கு இடையே வடிவமைக்கப்பட்ட சதிகளாகும், அதேவேளையில் இவை தொழிலாளர்களை விலையாக கொடுத்து உலக சந்தையில் பிரெஞ்சு போட்டித்தன்மையை அதிகரிக்க முயற்சிக்கும் ஒரு தேசியவாத கொள்கையைப் பின்தொடர்கின்றன.

இவை அனைத்துமே மக்ரோன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வரலாற்றுரீதியில் பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியில் அணிதிரட்டுவதற்கு விரோதமாக உள்ளன. CFDT இன் இரசாயன ஒப்பந்தத்தை விமர்சிப்பதில் FO உடன் CGT இணைகின்ற அதேவேளையில், தெற்கு பிரான்சில் FO அழைப்பு விடுத்த வேலை வெட்டுக்களுக்கு எதிரான இரயில்வே வேலைநிறுத்தத்தை, “அது இரயில்வே தொழிலாளர்களுக்கு எதிரான விரோதத்தை வளர்க்கும் நோக்கில் இருப்பதால், ஆக்கபூர்வமற்ற” "வெகுஜனவாத" கண்துடைப்பு என்றும் ஆத்திரமூட்டும் வகையில் கண்டித்து வருகிறது. FO ஐ பொறுத்த வரையில், FO இன் தலைவர் ஜோன்-குளோட் மைய்யி (Jean-Claude Mailly) உள்ளடங்கலாக அதன் தலைமையில் உள்ள பெரும்பாலானவர்கள், கடந்த இலையுதிர் காலத்தில் மக்ரோனின் உத்தரவாணைகளைப் பகிரங்கமாகவே ஆமோதித்திருந்தனர்.

தொழிற்சங்கங்களின் ஒப்புதலோடு மக்ரோனின் உத்தரவாணைகளில் இருந்து எழும் பல்வேறு தாக்குதல்களை எதிர்த்து விவாதிக்கவும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கும், வேலையிடங்களிலும் தொழிலாள வர்க்க அண்டைப்பகுதிகளிலும் சுயாதீனமான தொழிலாளர் அமைப்புகள் மற்றும் கமிட்டிகளைக் கட்டமைப்பது மட்டுமே முன்னே உள்ள ஒரே வழியாகும். ஐரோப்பா எங்கிலும் இதேபோன்ற வேலை மற்றும் கூலி வெட்டுக்களை முகங்கொடுத்து வரும் தொழிலாளர்களுடன் தங்களின் போராட்டங்களைச் சர்வதேசரீதியில் ஒருங்கிணைப்பதே தொழிலாளர்களது பணியில் உள்ள ஒரு முக்கிய கூறுபாடாகும்.

இது தொழிலாள வர்க்கத்தில் ஒரு புதிய தலைமையை, அதாவது சமூக செலவின குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடுவதில் ஒவ்வொரு நாட்டிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளைக் கட்டமைப்பதற்கான அவசர தேவையை எழுப்புகிறது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) சுயாதீனமான தொழிலாளர் அமைப்புகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், அதிகாரத்தைக் கையிலெடுத்து இந்த திவாலான ஐரோப்பிய ஒன்றியத்தை ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளைக் கொண்டு பிரதியீடு செய்யும் ஒரு சர்வதேச சோசலிச இயக்கத்துடன் அவற்றை இணைக்கவும் போராடும்.

மேலதிக வாசிப்புக்கு

பிரான்சின் தொழிற்சட்ட உத்தரவாணைகளை வாகன உற்பத்தித் தொழிலாளர்களை நோக்கி மக்ரோன் திருப்புகிறார் [PDF]