ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Striking Tamil Nadu bus workers speak out

வேலைநிறுத்தம் செய்யும் தமிழ்நாடு பேருந்து தொழிலாளர்கள் வெளிப்படையாக பேசுகின்றனர்

By Sasi Kumar and Moses Rajkumar
10 January 2018

தமிழ்நாடு மாநில அரசாங்கத்துடன், ஊதிய உயர்வுகளுக்காக கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சென்னையிலுள்ள வேலை நிறுத்தம் செய்யும் பல பேருந்து தொழிலாளர்களுடன் உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் பேசினர். வேலைநிறுத்தக்காரர்கள் தங்களது கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரித்தமை  அதேபோல் தொழிற்சங்கங்களின் பங்கு பற்றியும் கோபமடைந்துள்ளனர்.

வேலைநிறுத்தம் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் மற்றும் பெருநிறுவன ஊடக பிரச்சாரத்தை கடிந்து பேசிய, 48 வயதான ஒரு பேருந்து நடத்துனர் சந்திரசேகர், குறிப்பிடும்போது; "இதற்கு முழுக்க மாநில அரசாங்கம் தான் காரணம்” என்றார். “போக்குவரத்துத்துறை சேவைத்துறை இதில் இலாப நட்ட கணக்கு பார்க்கக் கூடாது.”


சந்திரசேகர்

அரசாங்கம், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை இன்னும் வழங்காமல் மில்லியன் ரூபாய்க்கு தொழிலாளர்களிடம் கடன்பட்டிருப்பதாக அவர் விளக்கினார். "தொழிலாளர்கள் நியாயமான கோரிக்கைக்காகத்தான் போராடுகின்றனர். தொழிலாளர்கள் ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் வறுமையில் வாடுகின்றனர். மருத்துவச் செலவுக்கு கூட பணம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.”

சம்பளம் போதவில்லையென்றால் போக்குவரத்து தொழிலாளர்கள் வேறு வேலையை பார்த்துக்கொள்ளவேண்டியதுதானே என்று நீதிமன்றம் குறிப்பிட்டது தொடர்பாக தொழிலாளர்கள் கோபமடைந்துள்ளனர். பொது போக்குவரத்து கழகங்களை நடத்த முடியவில்லை என்றால் அவற்றை தனியாருக்கு கொடுத்துவிடலாம் என்று அரசுக்கும் நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது.

“நீங்கள் கூறியவாறு அனைத்து பொதுத்துறை மற்றும் மாநில அரசுத்துறை அனைத்துமே தனியார்மயமாக்கல் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன. இந்நிலையில் தொழிலாளர்கள் அவர்களுடைய உரிமையை பாதுகாக்க நீங்கள் கூறியவாறு சர்வதேச தொழிலாளர்களோடு ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியம் உள்ளது. உங்களுடைய வலைத் தளத்தை பார்க்கிறேன். மறுபடியும் உங்களை சந்திக்க விழைகிறேன்.

விவேகானந்தா, தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த ஒரு தொழிலாளி குறிப்பிடும்பொழுது, “மொத்தத்தில் சுமார் 90 சதவீத தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை. ஆனால் மாநில அரசாங்கம், 80 சதவீதமான பஸ்கள் ஓடுகின்றன என்று அறிவித்துள்ளது.

“நான் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவன். போக்குவரத்து துறையை சரிவர நிர்வகிக்காமல் பேருந்துகள் அடிக்கடி வழியில் நின்று போகின்றன. ஒரு பேருந்து, 6 லட்சம் கிலோமீட்டர் தான் ஓடவேண்டும். அதன்பின்னர் அந்த வண்டியை கைவிட வேண்டும். ஆனால் 15 லட்சம் கிலோமீட்டர் வரை அதை இயக்குவதால் போக்குவரத்து ஓட்டுநர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர்.”

அவர் தொடர்ந்து கூறுகையில், நிர்வாகம் தரமான உதிரிப் பாகங்களை பயன்படுத்தாத காரணத்தால் அது வண்டிகளுக்கு அதிக சேதத்தை உண்டாக்கிறது என்றார்.

“வெளியூர் செல்கின்ற பேருந்துகள் அடிக்கடி விபத்திற்கு உள்ளாகின்றன. மழைக்காலங்களில் பேருந்தின் உள்ளேயே தண்ணீர் வடிகிறது.

விவேகானந்தா குறிப்பிடும்போது பேருந்து நிறுத்தம், ஒரு பரந்த போராட்டத்தின் பகுதி என்றார். “எங்களைப் போன்றே அரசு ஊழியர்களும் வேலைநிறுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அவர்கள் சம்பள உயர்வு அதாவது மத்திய அரசாங்கத்திற்கு இணையான சம்பளம் மற்றும் 2003 க்கு பின்னர் அமுல்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் பங்களிப்பு செய்யும் புதிய பென்சன் திட்டத்தை நீக்கும்படியும் கோருகின்றனர். அவர்களும் எங்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

“ஜனவரி 8 அன்று போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு, காவல்துறை கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளது. இது ஜனநாயக விரோதமானது.”

விவேகானந்தா, தொழிற்சங்கங்கள் தொடர்பாக வெறுப்பை வெளிப்படுத்தினார், மேலும் அவை அரசாங்கத்திற்கு செவிசாய்க்குமாயின் தொழிற்சங்கங்களை மீறி போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்தார். “இதுவரை பல போராட்டங்களை போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தி வந்துள்ளனர். ஆனால் அவற்றை தொழிற்சங்கங்கள் கடைசி நேரத்தில் காட்டி கொடுத்திருக்கின்றனர்.”


மோகன் ராஜ்

மோகன் ராஜ், 40 வயதான ஒரு தொழில்நுட்ப தொழிலாளி குறிப்பிடும்பொழுது ”பிரதான தொழிற்சங்கமான சிஜடியு இந்தப் பிரச்சினையில் தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என்று குறிப்பிடுகின்றனர். ஆனால் அதிமுக அரசு குறிப்பிடும்பொழுது, தொழிலாளர் சம்பள உயர்வை ஏற்ற மனம் உள்ளது. ஆனால் தமிழக அரசு நிதி நெருக்கடியில் உள்ளதால் இதனை நிறைவேற்றமுடியாது என்று குறிப்பிடுகிறது. நீங்கள் குறிப்பிடுகின்றவாறு அரசாங்கத்தின் விரோதமான நிலைப்பாடு வெளிப்படுத்துவது என்னவென்றால் உலக நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் கட்டளைப்படி சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லும் பாகமாக அதன் உச்சக்கட்டமாக தனியார்மயமாக்கல் திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கிறது.”

குமார் மற்றொரு போக்குவரத்து தொழிலாளி குறிப்பிடும்பொழுது ”தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் அரசாங்கம் மத்தியிலுள்ள பிஜேபி அரசாங்கத்துடன் கூட்டணி உருவாக்கி தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்படுகிறது. மாநில அரசாங்கம் முன்னைய முதலமைச்சர்களான எம் ஜி இராமச்சந்திரன் மற்றும் ஜெயலலிதாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு பெரும் பணம் செலவிடுகிறது. ஆனால் தொழிலாளர்களுக்கு செலவு செய்யவேண்டும் என்று வரும்போது நிதி நெருக்கடி ஏற்படுகிறது.” என்றார்.

கடுமையாக உழைக்கும் தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்வு வழங்க மறுக்கும் அரசாங்கம் மாநில சட்டசபை உறுப்பினர்களுக்கு மாத சம்பளமாக ஒரு இலட்சத்து ஐயாயிரம் ரூபாயைய் வழங்குகிறது. அது மட்டுமல்லாமல் அமைச்சர்களும் சட்டசபை உறுப்பினர்களும் வேறுவழியிலும் வருவாய் ஈட்டுகின்றனர்.”

ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் அவற்றுடன் இணைந்த சங்கங்கள் பற்றி குறிப்பிடும்போது குமார் கூறினார்; “கம்யூனிஸ்ட் கட்சிகள் மாநில அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கின்றன. போக்குவரத்து தொழிலாளர் போராட்டங்களில் சிஜடியு பலமுறை காட்டி கொடுத்த வரலாறுதான் உள்ளது. தொழிற்சங்கத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. சோசலிச போராட்டத்தின் மூலம் தான் நிரந்தர தீர்வு இருக்கிறது என்று நீங்கள் கூறுவதுடன் நான் உடன்படுகிறேன்.”

ஆளும் அதிமுகவின் தொழிற்சங்க உறுப்பினராக இருக்கும் ஒரு போக்குவரத்து தொழிலாளி, மாநில அரசாங்கத்தின் தொழிலாளர்கள் தொடர்பான அணுகுமுறை பற்றி விமர்சித்தார். “எங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்காமல், முன்பு போல், வேலைநிறுத்தத்தை சங்கங்கள் நிறுத்துவார்களாயின் அதற்கு தொழிலாளர்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள். அது மட்டுமல்லாமல் அவர்கள் சங்கங்களை நிராகரித்து விட்டு சுயாதீனமாக செயல்படுவார்கள்.”