ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Report details psychological and health impact of deportation on children

சொந்த நாட்டிற்குத் திருப்பியனுப்புதல் குழந்தைகள் மீது ஏற்படுத்துகின்ற உளவியல் மற்றும் உடல்நலத் தாக்கத்தினை அறிக்கை விவரிக்கிறது

By Meenakshi Jagadeesan
17 February 2018

சென்ற ஆகஸ்டில், மருத்துவ இதழான Frontiers in Pediatrics ”அமெரிக்காவில் பாரிய அளவில் திருப்பியனுப்பப்படுவதன் மீதான அச்சம்: ஏக்கமிக்க குழந்தை சமுதாயங்களின் மீதான சமூக தாக்கங்கள் (“Fear of Massive Deportations in the United States: Social Implications on Deprived Pediatric Communities”) என்ற தலைப்பிலான ஒரு கல்விச்சாலை அறிக்கையை வெளியிட்டது, சொந்த நாட்டிற்குத் திருப்பியனுப்பப்படுகின்ற அபாயத்தைக் கொண்ட பெற்றோர்களது குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகிற மன அழுத்தத்தின் நீண்ட-கால ஆரோக்கியப் பின்விளைவுகளை இது விவரிக்கிறது. Marie Leiner, Izul De la Vega மற்றும் Bert Johansson ஆகியோரால் எழுதப்பட்ட இந்த அறிக்கை, பாரிய எண்ணிக்கையிலான சொந்த நாட்டிற்குத் திருப்பியனுப்பல்கள் மில்லியன் கணக்கான மக்களின் மீது ஏற்படுத்துகின்ற சமூக-உளவியல் தாக்கத்தின் மீதான ஒரு முறையான மற்றும் மனதை உறைய வைக்கின்ற சுருக்கத்தை வழங்குகின்றது. புலம்பெயர்வு மற்றும் குடியேற்ற அமலாக்கப் பிரிவு (ICE) 2016 முதலாக கைதுகளில் மலைக்க வைக்கும் 30 சதவீத அதிகரிப்பு உண்டாகியிருப்பதாகவும், 2017 நிதியாண்டில் குறைந்தபட்சமாக மொத்தம் 143,470 கைதுகள் நடந்திருப்பதாகவும் பெருமையடிக்கின்ற விதத்தில் புலம்பெயர்ந்தவர்கள் மீது ஒடுக்குமுறை தீவிரப்பட்டிருப்பதன் மத்தியில் இந்த அறிக்கை வந்துசேர்ந்திருக்கிறது.

அந்தக் குழந்தைகள் நாட்டில் சட்டபூர்வமாக வாழ்ந்தாலும் அல்லது சட்டவிரோதமாக வாழ்ந்தாலும், அவர்களின் பெற்றோர்கள் -பொதுவாக புலம்பெயர்ந்தவர்களைக் குறிவைத்த சோதனைகளது இலக்காக இருப்பது இவர்கள் தான்- அவர்களது சூழ்நிலையால் உண்டாகும் இடைவிடாத மனஅழுத்தத்தையும் மனச்சோர்வையும் சமாளிப்பதற்கு பொதுவாக “எதிர்மறையான சமாளிப்பு பொறிமுறை”களையே பயன்படுத்த முனைகிறார்கள் என்பதை Leinerம் அவரது சகாக்களும் சுட்டிக்காட்டுகின்றனர். தொடர்ச்சியான அச்சம் மற்றும் பாதுகாப்பின்மை ஆகிய காரணங்களால், பெற்றோர்கள் -நீட்சியாக குழந்தைகளுக்கும்- “கல்விக்கான அணுகல், சட்டப் பாதுகாப்பு, அடிப்படைத் தேவைகள் (உதாரணமாக. உணவு, வீட்டுவசதி, ஆரோக்கியப் பராமரிப்பு) மற்றும் எதிர்காலத் திட்டமிடலுக்கான வாய்ப்புகள் உள்ளிட சமூகத்தை பராமரிக்கின்ற தூண்களுக்கு வரம்புபட்ட அணுகலையே அனுபவிக்கின்றனர்.”

யதார்த்த விவரிப்பில் இதன் அர்த்தமாக இருப்பது, திருப்பியனுப்பப்படும் அச்சத்தில் இருக்கும் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதை நிறுத்துகிறார்கள், குழந்தைகள் குடும்பத்தால் மோசமாக நடத்தப்படுவதை தெரிவிக்கத் தவறுகிறார்கள், பெற்றோர்கள் உணவு, உறைவிடம் அல்லது ஆரோக்கியப் பராமரிப்பு -அவர்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்குமான தடுப்பு மருத்துவம் மற்றும் அவசர மருத்துவம் இரண்டும்- ஆகியவற்றைப் பெறுவதில் உதவி எதிர்பார்ப்பதை நிறுத்துகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேல், அச்சம் மற்றும் ஸ்திரமின்மையின் சூழலானது பெற்றோர்களை மட்டுமல்லாது, குழந்தைகளையும் எந்த வருங்காலத் திட்டமிடல்களையும் செய்வதில் இருந்து தடுத்து விடுகிறது.

இந்த அறிக்கை விளக்குவதைப் போல, மேலே கூறப்பட்ட நடத்தைகள் ஒவ்வொன்றுமே குழந்தை வளர்ப்பில் இன்னும் அபாயகரமான பின்விளைவினைக் கொண்டதாய் இருக்கிறது. வகுப்புகளைத் தவறவிடும் குழந்தைகள் தவிர்க்கவியலாமல் சக குழந்தைகளுக்கு பின்தங்க நேரிடுகிறது; மோசமான வளர்ப்பு தொடரும்போது அது வாழ்நாள் வடுக்களை உருவாக்கக் கூடிய உடல்ரீதியான மற்றும் உளவியல் விளைவுகளுக்குக் கொண்டுசெல்கிறது.

இதுதவிர, அடிப்படைத் தேவைகளுக்கும் தடுப்பு மருத்துவத்திற்கும் அணுகல் இன்மையானது உடல் வளர்ச்சியையும் மூளை வளர்ச்சியையும் பாதிக்கும், அத்துடன் ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தைக் கனவுகாணவியலாமல் இருப்பதானது குழந்தைகளுக்கு “பல உடல்ரீதியான, மனரீதியான மற்றும் உணர்வுரீதியான பிரச்சினைகளுக்கு” இலக்காக சாத்தியம் கொண்டவர்களாய் ஆக்குகிறது.

குறிவைக்கப்படும் சமுதாயங்கள் பொதுவாக பொருளாதாரரீதியாக மிகவும் பலவீனமான நிலையில் இருப்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்ற உண்மை தான் இந்த அபாயத்தை மேலும் அதிகரிப்பதாய் இருக்கிறது. இந்த அறிக்கையில் மேற்கோளிடப்படுகின்ற, இந்த விடயத்திலான முந்தைய ஆய்வுகளில் சில, ஏழ்மையில் வாழ்வது எவ்வாறு குழந்தைகளின் மூளை அபிவிருத்தியை பாதிக்கிறது, “வாசிப்பு/மொழித் திறன் மற்றும் செயல்படுத்தும் திறன்கள் குறைவது”, அத்துடன் “நடத்தைரீதியான, விழிப்புரீதியான மற்றும் உணர்வுரீதியான பிரச்சினைகள்” ஆகியவற்றுக்கு இட்டுச் செல்கிறது என்பதை விவரிக்கின்றன. இவ்வாறாக திருப்பியனுப்பப்படுதல் என்னும் விஸ்வரூபமெடுக்கும் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்கும் புலம்பெயர்ந்தவர்களின் குழந்தைகள் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு கட்டமைப்புத் தடைகளுக்கு இரட்டிப்பாய் முகம்கொடுக்கின்றன.

பாரிய திருப்பியனுப்பப்படுதல் குழந்தைகள் மீது ஏற்படுத்துகின்ற நீண்ட-கால விளைவுகள் இனிமேல் தான் ஆராயப்பட வேண்டியிருக்கிறது என்கிறபோதும், இக்குழந்தைகள் முகம்கொடுக்கிற சூழ்நிலை படிப்படியான “பொது அச்ச”த்தின் நிலைமையில் வாழ்கின்ற குழந்தைகள் முகம்கொடுக்கிற சூழ்நிலையில் இருந்து அடிப்படையில் வேறுபட்டதல்ல என்பதை Leinerம் அவரது சகாக்களும் சுட்டிக்காட்டுகின்றனர். புலம்பெயர்ந்தவர்கள் மீதான சோதனைகள் அல்லது பயங்கரவாதம், போர் அல்லது ஒழுங்கமைந்த குற்றத்தின் விளைவாக இருக்கின்ற வன்முறை ஆகியவற்றால் உருவாகின்ற இத்தகைய நிலைமைகளைக் குறித்து ஆராய்ந்திருக்கிற ஆய்வுகள் அனைத்துமே, எதிர்மறையான விளைவுகளுக்கு இது பிரதானமான தூண்டுதலாக இருக்கிறது என்கிற முடிவுக்கே வந்திருக்கின்றன.

இப்போது நடைபெறுகின்ற பாரிய திருப்பியனுப்பல்களின் நீண்ட-கால விளைவுகள் ஒரு பயங்கரமான சமூகப் பின்விளைவுகளையே கொடுக்கிறது என்பதையே, இந்த ஆய்வுகளின் அடிப்படையிலான முடிவு எடுத்துக்காட்டுகிறது. “சமூகம் தனிமனிதர்களைத் தோற்கடித்திருக்கிறது என்பதான உணர்வே குற்றம், சமூகவிரோதச் செயல்கள், அல்லது சமூகத்தில் இருந்து வெறுமனே துண்டித்துக் கொள்கின்ற அத்துடன் ஒரு ஒத்திசைவான மற்றும் சமநிலையான சமூகத்திற்கு நேர்மறையாக பங்களிப்பு செய்கின்ற எந்த எண்ணமும் இல்லாத தனிமனிதர்களை உருவாக்குகின்ற விதையாக இருக்கிறது.”

பாரிய திருப்பியனுப்பல்களின் மோசமான பின்விளைவுகள் குறிவைக்கப்பட்ட சமூகங்களுடன் மட்டும் நின்றுவிடாது. Leiner மற்றும் அவரது சகாக்கள் கூறுவதைப் போல, அவை “அதிகரித்த நிற/இன பேதம், தாழ்வு மனப்பான்மை எண்ணங்கள், மற்றும் நிற/இன வேற்றுமை மீதான சகிப்புத்தன்மை குறைவதற்கான சாத்தியம்” ஆகியவற்றைத் தூண்டக் கூடும். ஆரம்பத்தில் புலம்பெயர்ந்த சமூகங்களில் மட்டுமே காணப்படக் கூடிய இந்த எதிர்மறையான பின்விளைவுகள் வெகுவிரைவில் பரவி நாட்டின் “ஒவ்வொருவரையும்” பாதிக்கக் கூடும்.

ஆலோசிக்கப்படுகின்ற புலம்பெயர் கொள்கைகளின் “அத்தனை சமூக, பொருளாதார மற்றும் கலாச்சாரத் தாக்கங்கள் குறித்தும் திட்டமிடுகின்ற, புரிந்துகொள்கின்ற மற்றும் பரிசீலனை செய்கின்ற ஒரு பலபரிமாண அணுகுமுறை” உருவாக்கப்படுவது மட்டுமே முன்நோக்கிய ஒரே வழியாக இருக்கும் என்ற ஆலோசனையுடன் இந்த அறிக்கை நிறைவடைகிறது. இதுதவிர, “ஒரு பிரிக்கமுடியாத அணுமையங்களாக குடும்பங்களின் மீது கவனம்குவிக்கின்ற குழந்தையின் ஆரம்பப்பருவத் திட்டங்களில்” முதலீடு செய்வதே தேவையாக இருக்கிறது.

குழந்தை உரிமைகள் சர்வதேச உடன்பாட்டை (1989) உறுதி செய்திராத இரண்டே இரண்டு ஐநா உறுப்பு நாடுகளில் ஒன்று என்ற பெருமையற்ற தனித்துவம் அமெரிக்காவுக்கு உண்டு, இன்னொரு நாடு சோமாலியா ஆகும். குழந்தைகளைப் பாதிக்கின்ற நடவடிக்கைகள் அத்தனையிலும் ஒரு அரசு “குழந்தையின் சிறந்த நலனைக்” கருத்தில் கொள்ள வேண்டும், அதுவே அதன் பிரதான பரிசீலனையாக  இருக்க வேண்டும் என்பதே இந்த உடன்பாட்டின் கீழான அடிப்படை ஆலோசனைமொழிவாகும். குழந்தைகள் உள்ளிட தனது மக்களின் மிகவும் பலவீனமான பகுதிகளை எப்படி நடத்துகிறது என்பதே ஒரு நாகரிகமடைந்த சமூகத்தின் அடையாளம் ஆகும். இந்த அர்த்தத்தில், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டின் ஆதரவுடனும், புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கையால் உருவாக்கப்பட்ட மனஅதிர்ச்சியானது அமெரிக்க முதலாளித்துவத்தின் மிருகத்தனத்தை பிரதிபலிக்கிறது.