ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French workers support growing mass strikes in Germany

ஜேர்மனியில் பெருகிவரும் பரந்த வேலைநிறுத்தங்களை பிரெஞ்சு தொழிலாளர்கள் ஆதரிக்கின்றனர்

By V. Gnana and Alex Lantier 
3 February 2018

நேற்று, உலக சோசலிச வலைத் தள நிருபர்கள், ஜேர்மனியில் பெருகிவரும் உலோகத்துறை மற்றும் வாகனத்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் பற்றி பாரிஸில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் கலந்துரையாடினர். அப்போது ஜேர்மன் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் குறித்த அவர்களது ஐக்கியத்தை வெளிப்படுத்தினர். இவ்வேலை நிறுத்தங்கள் கணிசமான ஊதிய உயர்வுக்கு கோரிக்கை விடுப்பதுடன், சமூக ஜனநாயக மற்றும் பழமைவாதக் கட்சிகளுக்கு இடையில் ஒரு செல்வாக்கற்ற, இராணுவவாத பெரும் கூட்டணி அரசாங்கத்தை உருவாக்குவதற்கான ஜேர்மன் ஆளும் உயரடுக்கின் முயற்சிகளையும் நெருக்கடிக்குள்ளாக்கி உள்ளது.

கடைத் தொழிலாளியான ராஜா என்பவர் பின்வருமாறு கூறினார்: “ஜேர்மன் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு நான் ஆதரவளிப்பதை அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன், நாங்கள் அனைவருமே இதுபோன்ற ஒரே பிரச்சினைகளைத்தான் எதிர்கொள்கிறோம். ஜேர்மனியில் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள், அவர்கள், பத்து வருடங்களுக்கு முன்பு இருந்ததுபோல் ஜேர்மனியில் தற்போது அவர்களது வாழ்க்கை இல்லையென கூறுகின்றனர். எங்களைப் போன்ற புலம்பெயர்ந்தோரின் வாழ்க்கையோ இங்கு மிகவும் கடினமானதாகவும் ஆபத்தானதாகவும் உள்ளது. நாங்கள் எங்களது சம்பளத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் போராட வேண்டியுள்ளது. உண்மையில், நான் அவர்களை ஆதரிக்கிறேன்.”

அபிவிருத்தியடைந்துவரும் நிலைமைகள் தொடர்பாக தொழிலாளர்கள் ஒரு போர்க்குணமிக்க மனநிலையில் இருந்ததுடன், ஜேர்மன் உலோகத் தொழிலாளர்கள் முன்னோக்கி எடுத்த நடவடிக்கை பற்றியும், மற்றும் உயர் செல்வந்தர்களின் செல்வம் உயர்ந்தும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டல் அதிகரித்தும் வருகின்ற நிலைமையை எதிர்கொள்வதில் ஊதிய உயர்வுகளுக்கான ஐரோப்பிய மட்டத்திலான போராட்டத்திற்கு பொதுவாக சாத்தியம் இருப்பது பற்றியும் அவர்கள் ஆர்வமாக இருந்தனர்.

தினேஷ் என்பவர், “நான் ஜேர்மன் தொழிலாளர்களை ஆதரிக்கிறேன். நாங்களும் சரி அவர்களும் சரி, உழைத்தால் மட்டுமே அனைவரும் வாழ முடியும். உதாரணமாக, நான் ஒரு உணவகத்தில் வேலை செய்கிறேன். ஒரு தொழிலாளி வேலைக்கு வரவில்லை என்றால், அவரது வேலையையும் சேர்த்து நாங்கள்தான் செய்ய வேண்டும். அதற்கே அதிக நேரம் தேவைப்படும், அதற்கு பின்னரே நாங்கள் செய்ய வேண்டிய வேலையை செய்துமுடிக்க நேரிடும். இருப்பினும், அதற்காக எங்களது ஊதியத்தில் எந்தவித அதிகரிப்பையும் நாங்கள் பெற முடிவதில்லை” என்று கூறினார்.

ஐரோப்பிய பொருளாதாரத்தின் மையத்தில் பெரும்திரளான தொழிலாளர்களின் போராட்டங்களின் எழுச்சியை பிரெஞ்சு ஊடகம் இருட்டடிப்பு செய்துள்ள போதிலும், அவை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். “நீங்கள் கூறிய விளக்கத்தின்படி பார்த்தால் என்னைப் பொறுத்தவரை இதுவொரு மிகப்பெரிய நிகழ்வாகும். நான் ஊடகங்களில் இதைப் பார்க்கவில்லை” என்றார்.

“ஜேர்மன் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நீங்கள் ஏதேனும் ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கமைப்பீர்களானால் எனக்கு தெரிவியுங்கள்,” “நானும் அதில் பங்கேற்பேன். மேலும், எனது சக தொழிலாளர்களுக்கும் அதைத் தெரிவிப்பேன்” எனக் கூறினார்.

குறிப்பாக தொழிலாளர்கள், பேர்லினில் ஒரு பெரும் கூட்டணியுடன் அவரது இராணுவ மற்றும் சிக்கனக் கொள்கைகளை நெருக்கமாக ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்ட பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோனுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு பொதுவான அரசியல் போராட்டமாக கருத்தில் வைத்து ஆதரவளித்தனர், இந்நிலையில் அது வெளிப்பட வேண்டும்.

மக்ரோனின் சமூக தாக்குதல்கள் குறித்து உள்நாட்டில் பிரெஞ்சு தொழிலாளர்கள் மத்தியில் கோபம் அதிகரிப்பது போல, ஜேர்மன் உலோகத்துறை மற்றும் வாகனத்துறை தொழிலாளர்களும் போராட்டத்திற்குள் நுழைகின்றனர். மக்ரோன், வாகனத்துறை மற்றும் பொது சேவைகளில் பெரும் வேலை வெட்டுக்களை அறிவித்துள்ளதுடன், எண்ணெய் தொழிற்துறையில் குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறைவான ஊதியம் வழங்கும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிலைமைகளை உருவாக்கியுள்ளார், மேலும், அவரது பதவிக் கால முடிவில் ஓய்வூதியங்கள் மற்றும் சுகாதார பராமரிப்பு செலவினங்கள் மீதான தீவிர வெட்டுக்களுக்கும் அழைப்பு விடுத்தார். மக்ரோன் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் நெருக்கமாக வேலை செய்து வருகிறார், ஆனால் அரசியல் ஸ்தாபகத்திற்கு வெளியே, தொழிலாள வர்க்கத்திற்கு மத்தியில் அவருக்கு எதிர்ப்புத்தான் அதிகரித்து வருகிறது.

வேலையற்ற தொழிலாளியான சந்திரன் WSWS இடம் இவ்வாறு தெரிவித்தார்: “இப்போது நீங்கள் எனக்கு இதை விளக்கமாக கூறியுள்ளீர்கள், ஜேர்மனியில் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு எப்போதும் எனது அனுதாபம் உண்டு. நாங்களும் மிகவும் கடினமானதொரு சூழ்நிலையில் தான் வாழ்கிறோம். நான் என் வேலையை இழந்ததிலிருந்து, ஒவ்வொரு நாளும் நான் தினக்கூலி வேலைதான் செய்யவேண்டியுள்ளது, பல்வேறுபட்ட வேலைகளையும் செய்துவருகிறேன். இல்லையெனில், என் குழந்தைகள் குளிர்காலத்தில் குடியிருப்பில் சாப்பிடவோ தூங்கவோ முடியாது. ஜேர்மன் தொழிலாளர்களுக்கும் குடும்பங்கள் உள்ளன, அவர்களது போராட்டங்களும் நியாயபூர்வமானவையே”.

பிரான்சில் உள்ள தொழிலாளர்கள் ஜேர்மன் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டுமென்றும், அப்போதுதான் ஜேர்மன் தொழிலாளர்கள் மக்ரோனுக்கு எதிராக தங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்றும் அவர் சேர்த்துக் கூறினார். மேலும் அவர், “எல்லா இடங்களிலும், நாங்கள் ஒரே பிரச்சினைகளையே எதிர்கொள்கிறோம். மக்ரோன் அரசாங்கத்தின் கீழ், உண்மையில் எங்களது வாழ்க்கை நிலைமைகள் மிகவும் மோசமாகியுள்ளது. இன்று ஜேர்மனிய தொழிலாளர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரித்தால், நாளை அவர்கள் எங்களது போராட்டத்திற்கு ஆதரவளிப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன்” எனக் கூறினார்.

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள், உயர்நிலை பள்ளி மாணவரான ஃப்ளோரியான் உடனும் பேசினர். அவரது தந்தை பாரிசில் ஒரு அடுக்குமாடி கட்டிட வளாகத்திற்கு காவலாளியாக பணிபுரிகிறார்.

“ஜேர்மன் தொழிலாளர்களின் நடவடிக்கைக்கு நான் ஆதரவாக இருக்கிறேன்” என்று ஃப்ளோரியான் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றிய கொள்கைகளின் முக்கிய பயனாளிகளாக இருக்கும் செல்வந்தர்களை அவர் விமர்சித்ததுடன், அவர்களுக்கு எதிரான தொழிலாளர்கள் போராட்டங்களின் ஒரு பரந்த இயக்கம் அங்கு இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும், “அவர்கள் இரத்தம் உறிஞ்சுபவர்கள், அவர்கள் செய்வது எதுவும் நியாயமானது அல்ல. நாங்கள் கூட்டங்களை ஒழுங்கமைக்க வேண்டும், நாங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி விவாதிக்க நாங்கள் ஒன்றுகூட வேண்டும், நாங்கள் வேலைநிறுத்தம் செய்தாக வேண்டும்” என்றும் கூறினார்.

இரு நாடுகளிலும் உள்ள தொழிலாளர்கள் இடையே ஒற்றுமை இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியதோடு இவ்வாறு கூறினார்: “ஜேர்மனியோ, பிரான்ஸோ இரு நாடுகளும் ஒன்றுதான், நாம் அனைவரும் ஐரோப்பாவில் தானே இருக்கிறோம்.” மேலும், அவர் மக்ரோனை இவ்வாறு கடுமையாக விமர்சித்தார்: “ஜனாதிபதியானதில் இருந்து மக்ரோன், எங்களுக்காக எதையும் செய்யவில்லை. பிரான்ஸும் மாறவில்லை, ஜனாதிபதியாக வருவதற்கு முன்பு உறுதியளித்திருந்தபடி முன்னேற்றங்கள் எதையும் அவர் செய்துகாட்டவில்லை.”

பிரான்சில், அரசாங்க அதிகாரிகள் மற்றும் வணிக கூட்டமைப்புக்கள் உடனான பேச்சுவார்த்தைகளில் வேலைநிறுத்தங்களையும் எதிர்ப்புகளையும் மீண்டும் மீண்டும் விற்றுவந்துள்ள தொழிற்சங்கங்களின் மீது தொழிலாளர்கள் நம்பிக்கை வைக்கக்கூடாது என்று ஃப்ளோரியன் எச்சரிக்கவும் செய்தார். மேலும், “அவர்கள் எங்களுக்கு எல்லாவற்றையும் தருவோம் என்று கூறினார்கள், ஆனால் இறுதியில் அவர்கள் எதையும் செய்யவில்லை. எங்களை பின்னணியாகக் கொண்டு, தொழிற்சங்கங்களும் மற்றும் எஞ்சியவர்களும், தங்களுக்குள்ளேயே ஒன்றுகூடுவது போல் இருக்கிறது. மேலும், நாளின் முடிவில், நாங்கள் எதுவுமின்றி விடப்பட்டிருக்கிறோம்” என்று அவர் கூறினார்.

மக்ரோனின் திட்டங்களையும் பேர்லினில் பெரும் கூட்டணி கட்சிகளின் இராணுவவாத திட்டங்களையும் அவர் கடுமையாக எதிர்த்தார். மக்ரோன் கட்டாய இராணுவ சேவைக்கு திரும்புவதற்கு அழைப்பு விடுத்து, அணுவாயுதங்கள் மற்றும் விமானந்தாங்கிக் கப்பல்கள் மீதான செலவினங்களை உயர்த்துவதாக உறுதிபூண்டுள்ள அதே வேளையில், இரண்டாம் உலகப் போரில் நாஜி ஆட்சி தோல்வியுற்றதில் இருந்து முதல்முறையாக அதன் வெளியுறவுக் கொள்கையை மீள்இராணுவமயமாக்குவதற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் பேர்லின் ஒரு பரந்த வேலைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பேர்லினும் பாரிஸும், தொழிலாளர்கள் குறைப்பு மற்றும் சமூகநல வெட்டுக்களை அதிகரிப்பதன் மூலமாக தங்கள் இராணுவவாத கொள்கைகளுக்கு நிதியளிப்பதற்கு தேவைப்படும் பத்து பில்லியன் கணக்கான யூரோக்களை எடுப்பதற்கு உத்தேசித்துள்ளன.

ஐரோப்பிய இளைஞர்கள் ஆபிரிக்கா அல்லது ஆசியாவில் நேட்டோ போர்களில் சண்டையிட செல்வதற்கு இழுக்கப்படக் கூடாது என்று ஃப்ளோரியன் கூறினார். மேலும், “மாலியில், வறுமையின் காரணமாக தற்போது உண்மையில் போராடிக் கொண்டிருக்கும் மக்களைக் கொல்லப் போகிறார்கள், மக்களைக் கொல்வது நமக்குத் தேவை இல்லை…… இவை பணத்திற்கான யுத்தங்கள்” என்று கூறினார்.