ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Half a million metalworkers participate in strikes in Germany

ஜேர்மன் வேலைநிறுத்தங்களில் அரை மில்லியன் உலோகத்துறை தொழிலாளர்கள் பங்கெடுக்கின்றனர்

By our reporters
3 February 2018

வெள்ளியன்று, உலோகத்துறை மற்றும் மின்துறைசார் தொழிற்சாலைகளில் முழு நாள் அடையாள வேலைநிறுத்தங்கள் நடந்தன. IG Metall தொழிற்சங்க தகவலின்படி, சுமார் 304,000 பணியாளர்களுடன், 97 நிறுவனங்களின் உற்பத்தி முடங்கின. ஒட்டுமொத்தமாக, புதனன்று தொடங்கி 24 மணி நேர வேலைநிறுத்தத்தில் 500,000 க்கும் அதிகமான தொழிலாளர்கள் பங்கெடுத்திருந்தனர்.

பவேரியா மற்றும் பாடன்-வூட்டெம்பேர்க் ஆகிய இரண்டு இடங்களிலும், வெள்ளியன்று ஒட்டுமொத்த வாகனத்துறையும் அடைக்கப்பட்டது. எண்ணற்ற துறைமுகங்களிலும், ஹம்பேர்க், பிரேமன் மற்றும் கீழ் சாக்சோனியின் விமான ஆலைகளிலும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். இதற்கும் கூடுதலாக, Wolfsburg, Salzgitter, Braunschweig, Kassel, Emden மற்றும் Hanover இன் வோல்ஸ்வாகன் ஆலைகளில் 56,000 க்கும் அதிகமான பணியாளர்கள் தற்காலிகமாக வேலையை நிறுத்தினர்.

நிறுவனங்களுக்கு எதிராக போராடுவதில் தொழிலாளர்களின் உறுதிப்பாடு பிரமாண்டமாக உள்ளது. IG Metall தொழிற்சங்கம் வேலைநிறுத்த வாக்கெடுப்புகளை தேர்ந்தெடுக்கப்பட்ட 280 க்கும் குறைவாக நிறுவனங்களோடு மட்டுப்படுத்தி இருந்தபோதும், வேலைநிறுத்த அழைப்பு ஒவ்வொரு இடத்திலும் 95 இல் இருந்து 100 சதவீத ஆதரவைப் பெற்றது. அதிகாரிகளுக்கும் பங்குதாரர்களுக்கும் பில்லியன்களைக் குவித்துள்ள கூலி-வெட்டுக்களையும், அதிகரிக்கப்பட்ட வேலைச்சுமைகளையும், தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக எதிர்த்து வந்துள்ளனர். சான்றாக, டைம்லெர் குழுமம் பெப்ரவரி 1 அன்று சாதனையளவிலான விற்பனைகள் மற்றும் நிகர வருவாயை அறிவித்தது. பங்குதாரர்களுக்கு மட்டுமே 4 பில்லியன் யூரோ வரையிலான பங்காதாயங்களுக்கு உறுதியளிக்கப்பட்டது.


லைப்சிக்கில் வேலைநிறுத்தம் பதிவு செய்தல்

இவ்வாறிருக்கையிலும், நிறுவனங்களுடன் விற்றுத் தள்ளப்பட்ட ஒரு உடன்படிக்கையை எட்டுவதற்கு IG Metall தொழிற்சங்கம் சம அளவில் தீர்மானகரமாக இருந்துள்ளது. வெள்ளியன்று, அத்தொழிற்சங்க தலைவர் ஜோர்ஜ் ஹோஃப்மான் அறிவித்தார்: “இந்த அறிகுறியைப் புரிந்து கொண்டு, ஒரு தெளிவான பாதையில் அடியெடுத்து வைப்பது இனி முதலாளிமார்களின் வசம் உள்ளது. முதலாளிமார்கள் விருப்பம் காட்டினால், திங்களன்று பேச்சுவார்த்தைகளைத் தொடரலாம்,” என்றார். Stuttgarter Nachrichten இன் ஒரு செய்தியின்படி, தொழிற்சங்கங்களும் முதலாளிமார்களும் பாடன்-வூட்டம்பேர்க் முன்னோடி ஒப்பந்தத்தை விரைவாக முடிவு செய்ய தொடர்ந்து திங்களன்றும் பேரம்பேச ஏற்கனவே உடன்பட்டிருப்பதாக குறிப்பிட்டது. “திரைக்குப் பின்னால், கலந்துரையாடலின் நூலிழை ஒருபோதும் எவ்விதத்திலும் முறிந்ததில்லை,” என்று அப்பத்திரிகை எழுதுகிறது.

IG Metall தொழிற்சங்கம் தொழிலாளர்களின் கோபத்தைக் கட்டுப்படுத்தவே வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. முக்கியமாக, வரவிருக்கும் ஜேர்மன் அரசாங்கத்தின் சமூக தாக்குதல்கள் மற்றும் மீள்ஆயுதமயமாக்கும் திட்டங்களைப் பொறுத்த வரையில், தொழிற்சங்கங்கள் கடுமையான எதிர்ப்பு இருக்குமென அனுமானிக்கின்றன.

சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மற்றும் பழமைவாத கட்சிகளுக்கு இடையிலான மற்றொரு மகா கூட்டணி அரசாங்கத்தின் வலதுசாரி திட்டநிரலை தொழிற்சங்கங்கள் முழுமையாக ஆதரிக்கின்றன என்ற உண்மை, சமீபத்திய தொழிற்சங்க குழுக் கூட்டத்தில் வெளிப்பட்டது. Der Spiegel இன் ஒரு செய்தியின்படி, பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகளும் சிக்மார் காப்ரியேலையே வெளியுறவுத்துறை அமைச்சராக வைத்திருக்க SPD தலைவர் மார்டீன் சூல்ஸ் க்கு அழுத்தமளித்துள்ளனர். சமீபத்திய மாதங்களில், ஜேர்மனி ஓர் ஆக்ரோஷமான வெளியுறவு மற்றும் வல்லரசு கொள்கைக்குத் திரும்புவதை காப்ரியேல் முன்னெடுத்து வருவதுடன், ஏனைய விடயங்களோடு சேர்ந்து, உலக அரங்கில் ஜேர்மனி ஒரு "வேட்டையாளராக" மீண்டும் செயல்பட வேண்டுமென கோரி வருகிறார்.

இந்த மகா கூட்டணியின் இராணுவவாத மற்றும் தொழிலாள வர்க்க விரோத கொள்கையை IG Metalls ஆதரிப்பதுடன், தொழிலாளர்கள் அணிதிரள்வதைத் தடுக்க அதனால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றை செய்து வருகிறது. அது திட்டமிட்டு வேலைநிறுத்தங்களைப் பிளவுபடுத்தி இருப்பதுடன், எந்தவொரு மிகப் பெரியளவிலான கூட்டு நடவடிக்கையையும் அல்லது ஆர்ப்பாட்டத்தையும் தடுக்கிறது. ஆலைக் கதவுகளுக்கு முன்னால் நடக்கும் மறியல் போராட்டங்களிலும் மற்றும் எண்ணற்ற சிறிய சிறிய பேரணிகளிலும், ஒருவர் ஏறத்தாழ முழுமையாக தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் நிறுவன தொழிலாளர் கவுன்சில் அதிகாரிகளை எதிர்கொள்கிறார்.

Leipzig இல், வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் பதிவு செய்து கொள்வதை IG Metall மறியல் இடத்திலிருந்து ஒதுக்குப்புறமான இடத்திற்கு நகர்த்தியது. அங்கே, போர்ஷே ஆலை பணியாளர்கள் வியாழனன்று அழைக்கப்பட்டிருந்தார்கள், அதற்கடுத்த நாள் அங்கே வந்த BMW ஆலை தொழிலாளர்களிடம் இருந்து அவ்விதத்தில் அவர்கள் முற்றிலுமாக பிரித்து வைக்கப்பட்டார்கள். அங்கிருந்த காட்சி ஒரு வேலைநிறுத்தம் என்பதைக் காட்டிலும் அதிகளவில் ஒரு தபால் நிலையத்திற்கு ஒத்திருந்தது.

Daimler Axis Mettingen நிறுவனத்தில் வேலை பார்க்கும் திலக்ஷன் கூறுகையில், மறியல்களில் வெறுக்கத்தக்க தொழிற்சங்க அதிகாரிகளும் நிறுவன தொழிலாளர் கவுன்சில் அதிகாரிகளும் நிறைந்திருப்பது தொழிலாளர்களுக்குத் தெரியும் என்பதால் தான், அவர்கள் மறியல்களில் பங்கெடுக்கவில்லை என்றார். வேலைநிறுத்த பணம் வேண்டுமானால் மறியலில் இருக்கக் கூடாதென தொழிலாளர்களுக்கு கூறப்பட்டதாக திலக்ஷன் தெரிவித்தார்.


Sindelfingen இல் உள்ள Mercedes ஆலையில் மறியல்

Sindelfingen இல் உள்ள மெர்சிடெஸ் ஆலை தொழிலாளர் Luigi கூறுகையில், தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்களில் இறங்க விரும்புகின்றனர் ஆனால் தொழிற்சங்கங்களின் வெற்று போராட்டங்களில் அவர்களுக்கு ஆர்வமில்லை என்றார். “ஆறு சதவீத கூலிகள் மற்றும் 28 மணி நேர வேலைக்காக IG Metall தொழிற்சங்கம் வேலைநிறுத்தம் செய்யவில்லை என்பது தொழிலாளர்களுக்குத் தெரியும். ஓர் அருவருக்கத்தக்க சமரசம் ஏற்கனவே எட்டப்பட்டுவிட்டது. இது ஒரு மோசடி,” என்றார்.

மறியல்கள் மற்றும் பேரணிகளில் பங்குபற்றிய சாதாரண தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை நோக்கி ஐயுறவையும், மகா கூட்டணிக்கு வெறுப்பையும் வெளிப்படுத்தினர்.

Stuttgart-Feuerbach இல் Bosch தலைமையகத்தில் நடந்த பேரணியில், நாற்பதாண்டுகளுக்கு முன்னர் அந்த ஆலையில் ஒரு தொழிற்பயிற்சி வல்லுனராக வேலைகளை ஆரம்பித்த பீட்டர் கூறுகையில், “இதுபோன்ற பேரம்பேசல்கள் பலவற்றை நான் பார்த்துவிட்டேன்,” என்றார். IG Metall தொழிற்சங்கம் மிகவும் ஆக்ரோஷமாக இருக்க வேண்டும், ஆனால் கடந்த கால அனுபவங்களின் வெளிச்சத்தில் பார்க்கையில் அவ்வாறு நடக்காதென நம்புவதாக அவர் தெரிவித்தார். “தொழிற்சங்கங்கள் வகிக்கும் பாத்திரம் இறுதியாக ஆலைகளுக்குள் அமைதி நிலவச் செய்வதும், உற்பத்தியைப் பாதுகாப்பதும் தான்,” என்றார்.

புதுப்பிக்கப்பட்ட ஒரு மகா கூட்டணிக்கான திட்டங்களை வெட்கக்கேடானது என்று குறிப்பிட்ட பீட்டர், கடந்த அரசாங்கமே கூட அகதிகள் நுழைவதைத் தடுத்தது என்று தெரிவித்தார். இப்போது அவர்கள் எல்லைகளை முழுமையாக மூட விரும்புகிறார்கள், இருப்பினும் அதேவேளையில் தங்களின் வீடுகளை விட்டு தப்பியோடி வரும் மில்லியன் கணக்கானவர்களுக்காக புதிய காரணங்களை வழங்குகிறார்கள். “குண்டுவீசப்பட்ட நகரங்களின் காட்சிகளை நீங்கள் தொலைக்காட்சியில் காணலாம். ஜேர்மனி உலகெங்கிலும் தொடர்ந்து ஆயுதங்கள் வழங்கி, மேற்கொண்டும் பேரழிவுகளை உருவாக்கி கொண்டிருக்கிறது,” என்றார்.

பேர்லின் BMW ஆலையில் மறியல்

பேர்லின் BMW ஆலையின் மறியல் களத்தில் இருந்த ஓர் இளம் நிரந்தர தொழிலாளர், பல தற்காலிக தொழிலாளர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்தார், மிக குறைந்த கூலிகள் பெறும் இவர்களுக்கு, தற்போதைய கூலி கோரிக்கைகளால் ஒன்றும் ஆகப் போவதில்லை, இதற்கு தொழிற்சங்கங்களுக்குத் தான் நன்றி கூற வேண்டியிருக்கும். “தற்காலிக தொழிலாளர்கள் சம்பந்தமான தொழிற்சங்க கோரிக்கைகள் போதுமானளவிற்கு கவனத்தில் கொள்ளப்படவில்லையென நினைக்கிறேன். இங்கே BMW இல் பல ஒப்பந்த தொழிலாளர்கள் இருக்கிறார்கள், இவர்களது வேலைகள் உத்தரவாதமற்று உள்ளன. இவர்கள் இந்த பேரணியில் பிரதிநிதித்துவம் செய்யப்படவே இல்லை,” என்றார்.

கூட்டணி அரசாங்கம் குறித்து கேட்கப்பட்ட போது, அவர் தெரிவித்தார்: “SPD இப்போது தொழிலாளர்களின் கட்சி கிடையாது. இனிமேல் அதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஏனென்றால் IG Metall தலைமை SPD இல் அதன் பெரும்பான்மையை ஒழுங்கமைத்துள்ளது, அது வேலைநிறுத்தத்தை விரிவாக்குமென ஒருவர் எதிர்பார்க்க முடியாது.” சோசலிச சமத்துவக் கட்சியின் (Sozialistische Gleichheitspartei – SGP) சர்வதேச முன்னோக்கு அவரை ஈர்த்திருந்தது. “நாம் சர்வதேச பெருநிறுவனங்களை, ஒரே சர்வதேச தொழிலாளர் சக்தியாக இருந்து எதிர்க்க வேண்டும் என்பதே அர்த்தப்பூர்வமாக உள்ளது,” என்றார்.

Leipzig இன் BMW ஆலையில் பணியாற்றும் Axel, அதிகரித்து வரும் வேலைச்சுமை குறித்து நீளமாக பேசினார். “அவர்கள் நிறைய நிறைய கோருகிறார்கள், மிக குறைந்தளவிலான மக்களே அளவுக்கதிகமாக நிறைய வேலை செய்ய முடியும்.” அதேநேரத்தில், அவர் குடும்பத்திற்கு உதவுமளவுக்கு அவர் சம்பளம் அந்தளவுக்கு போதுமானதாக இருப்பதில்லை, அதனால் அவர் மனைவியும் வேலைக்குச் செல்ல வேண்டியதாகி விடுகிறது என்றார்.

அவர் மகா கூட்டணியின் பிற்போக்குத்தனமான கொள்கைகளையும் தாக்கினார். “ஒரு சிலருக்கு அது மிகவும் கடுமையாக மாறி உள்ளதை நாம் சமீபத்திய ஆண்டுகளில் பார்த்துள்ளோம். ஜேர்மனியில் ஐந்து குழந்தைகளில் ஒன்று வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளது. ஜேர்மன் பணியாளர்களில் இருபது அல்லது 25 சதவீதத்தினர் குறைவூதிய துறையில் உள்ளனர்.”

தொழிலாளர்களின் நிலைமைக்கும் போர் முனைவுக்கும் இடையே ஒரு நேரடி தொடர்பை அவர் காண்பதாக தெரிவித்தார். “பெரும் தொகைகளை ஈட்டும் ஜேர்மன் ஆயுத தொழில்துறை, அவ்விதத்தில் சர்வதேச போர் அபிவிருத்தியை உந்துகிறது.” அமேசான் நிறுவன ஜெஃப் பெஜோஸ் போன்றவர்களின் செல்வ வளத்தை (நிகர மதிப்பு 84 பில்லியன் யூரோ) பறிமுதல் செய்வதன் மூலமாகவே இந்த உலகின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமென Axel தெரிவித்தார். “அடுத்தது, நாம் போரில் செலவிடுகிறோம்.”

கொலோனின் மிகப்பெரும் ஃபோர்ட் ஆலை தொழிலாளர்களும், போர் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிராக பேசினார்கள். “சிரியாவின் போர்களைப் போன்றது தான், ஜேர்மனியின் இராணுவவாதமும் மற்றும் ஜேர்மன் ஆயுத தொழில்துறையின் ஆயுத ஏற்றுமதிகளும். இதை நான் பெருங்கவலையுடன் பார்க்கிறேன்,” என்று யூசுப் தெரிவித்தார்.

சமூக ஜனநாயகக் கட்சியுடன் தொழிற்சங்கங்கள் நெருக்கமான தொடர்பு வைத்துள்ளதால் அவற்றை சந்தேகத்துடன் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். “தொழிலாளர்களை ஆதரிக்கும் கட்சிகளை அது ஆதரிப்பதாக IG Metall தெரிவிக்கிறது. எனக்கு அவ்வாறு தோன்றவில்லை,” என்றார். அவர் தெரிவித்தார், IG Metall ஒரு புதிய மகா கூட்டணியை ஆதரிக்கிறது, ஆனால் இந்த கட்சிகள் தொழிலாளர்களை ஆதரிப்பவை கிடையாது. “கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU) கிடையவே கிடையாது, SPD பல ஆண்டுகளாக கிடையாது. அதனால் தான் கடந்த பொது தேர்தலில் அவர்களின் வேஷம் கலைக்கப்பட்டது, மேலும் அதுவே கடைசி முறையாக இருக்காது,” என்றார்.

தொழிற்சங்கங்கள் மீது தனது அவநம்பிக்கையை வெளிப்படுத்திய ஒரு பழைய தொழிலாளர், முதலாளிமார்களுடன் அவை பேரம்பேசுவதைக் குறை கூறினார். “இதெல்லாம் வெறுமனே கண்துடைப்பு. முடிவு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது,” என்றார்.

“நம்முடைய தந்தையர்களும் பாட்டனார்களும் என்ன கட்டமைத்தார்களோ, அவற்றையெல்லாம் இழந்துள்ளோம். செல்வ வளத்தின் பகிர்வும் வருவாய் பகிர்வும் முற்றிலும் அநியாயமாக உள்ளது,” என்றார். “தற்காலிக தொழிலாளர்கள் சம்பாதிக்கும் 1200 யூரோ சம்பளத்தில், உங்களால் ஒரு எதிர்காலத்தைத் திட்டமிடவே முடியாது,” என்றவர் சாடினார். அவர் அவரின் முழு நம்பிக்கையையும் இளம் தொழிலாளர்கள் மீது நிறுத்தினார். “இந்த சிக்கன நடவடிக்கைகள் அனைத்திற்கும் எதிராக இளைஞர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.