ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ග‍්‍රෑන්ඩ්පාස්හි ගොඩනැගිල්ලක් කඩා වැටීමෙන් කම්කරුවන් හත්දෙනෙකු මියයයි

இலங்கை; தலைநகரில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஏழு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்

By Naveen Devage and A. Shanthakumar
17 February 2018

இலங்கைத் தலைநகர் கொழும்பில், கிராண்பாஸில் பாபாபுள்ள வீதியில் அமைந்துள்ள, அடம்ஸ் குரூப் கம்பெனிக்கு சொந்தமான, ஆடம் எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் கட்டிடம், பெப்ரவரி 13 அன்று இடிந்து விழுந்ததில் ஏழுபேர் கொல்லப்பட்டதுடன் மேலும் இரண்டு பேர் கடும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர். ஆடம் எக்ஸ்போர்ட் என்பது தேயிலை, மசாலாப் பொருள் மற்றும் வெட்டிய தேங்காய்களை பொதி செய்து ஏற்றுமதி செய்யும் ஒரு நிறுவனமாகும்.

இறந்தவர்கள் மத்தியில் அதன் உரிமையாளர் உட்பட மூன்று ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் இருந்தனர். பொலிஸ் அறிக்கையின் படி, உரிமையாளர் தாஹிர் அப்பாஸ் குலாம் ஹுசைன் (51), மேற்பார்வையாளர் கசுன் தனஞ்சய (19), ஆண் தொழிலாளி ஜயராம் சுஜீவ ஆனந்த (42) மற்றும் பெண் தொழிலாளர்களான நூர் கலீமா (63), துரைராஜா லலிதா (41), எல்லப்பன் ராஜேஸ்வரி (46), செல்யா (55) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

புதன்கிழமை 3 மணியளவில் கட்டிடம் சரிந்துள்ளது. அந்த நேரத்தில் அங்கு சுமார் 20 பேர் இருந்ததாக சொல்லப்படுகின்றது. ஏனையவர்களைத் தேடும் பணிகளும் இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கைகளும் நேற்று மாலைவரை இடம்பெற்று வந்த நிலையில், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

சரிந்த கட்டிடம் 150 ஆண்டுகள் பழையது. கட்டிடம் சரிந்தமை தொடர்பாக ஆரம்ப விசாரணைகளை நடத்திய தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு, அருகில் பாதுகாப்பற்ற முறையில் உடைத்து அகற்றப்பட்டுக்கொண்டிருந்த ஒரு கட்டிடத்தின் ஒரு பகுதி கூரையின் மீது விழுந்ததால், ஆடம் எக்ஸ்போர்ட் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளதாக, கூறுகின்றது. இது பற்றிய முழு அறிக்கை எதிர்வரும் திங்களன்று கிராண்பாஸ் பொலிசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. அது வரை இடிந்து விழுந்ததற்கான நிச்சமான காரணத்தை கூற முடியாது என்று பொலிசார் கூறுகின்றனர்.

அழிவில் இருந்து தப்பிய நிறுவனத்தின் பாதுகாவலர், டெயிலி மிரர் பத்திரிகைக்கு கூறியதாவது: "எமது களஞ்சியத்தின் முகாமையாளருக்கு கூரை உடையும் சத்தம் கேட்டதால், அவர் முதலாளியையும் என்னையும் அழைத்தார். நாங்கள் களஞ்சியத்திற்குள் நுழையும் போதே கூரை உடைந்து விழுவதைக் கண்டோம். முழு களஞ்சியமும் தூசியால் மூடப்பட்டது. நான் வெளியே ஓடி உயிரைக் காப்பாற்றிக் கொண்டேன். விபத்துக்குப் பின்னர் என்ன நடந்தது என்பதைக் பார்க்க நான் இன்னும் சிலருடன் சென்றேன். மேற்பார்வையாளர் இறந்து கிடந்தார். முதலாளி கடுமையாக காயமுற்றிருந்தார். அதனால் அவரும் பின்னர் இறந்துவிட்டார்."

அவரின்படி, விபத்து ஏற்பட்டபோது, அந்த கட்டிடத்தில் சுமார் ஒன்பது தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர்.

இந்த மிகவும் பழைய கட்டிம் புனரமைக்க வேண்டியது அவசியமாக இருந்த போதிலும் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட தற்காலிக திருத்தங்கள் தவிர, அங்கு நிலவிய ஆபத்து நிலைமையை அகற்றுவதற்கு எந்தவொரு உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அங்கு முன்னர் வேலை செய்த தொழிலாளி கூறியதாக அந்த அறிக்கையில் கூறப்படுகின்றது.

இத்தகைய விபத்து ஏற்படக்கூடும் என தெரிந்தோ அல்லது தெரியாமலோ, வாழ்க்கையை ஓட்டுவதற்கு வேறு வழியின்றி, கடும் உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாகி இத்தகைய இடங்களில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஏற்படக்கூடிய தலைவிதி பற்றிய சமீபத்திய உதாரணம் கிராண்ட்பாஸ் விபத்து ஆகும்.

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களையும் ஆதரவாளர்களையும் சந்தித்த போது, அவர்கள் 550 அல்லது 600 ரூபா என்ற மிக குறைந்த தினசரி அன்றாட ஊதியத்திற்காக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது.

விபத்தில் இறந்த செல்லையா வெள்ளம்மாவுக்கு, இரண்டு பிள்ளைகள் இருப்பதுடன், அவரது கணவர் நீண்ட காலத்திற்கு முன்பே அவர்களை கைவிட்டுச் சென்றுவிட்டார். கொழும்பில் புறக்கோட்டையில் நாட்டாமை தொழில் செய்து பிழைப்பு நடத்தும் வெள்ளம்மாவின் இளைய சகோதரர் இவ்வாறு கூறினார்: "10 வருடங்களாக நான் வேலை செய்தேன், ஆனால் ஊழியர் சேமலாப நிதி கிடையாது. கடந்த மாதம் தொடக்கம்தான் அதை கொடுக்கத் தொடங்கினர். காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை வேலை செய்கிறோம். ஒரு நாள் சம்பளம் ரூ .550. வாரத்துக்கு 6 நாட்களுக்கு வேலை செய்ய வேண்டும். வாராந்திர ஊதியம் வாரத்திற்கு ஒரு முறை வழங்கப்படும்."

இரண்டு பேரின் தாயாரான உயிரிழந்த லலிதாவின் கணவர் சாந்த குமாரர், 1000 ரூபா நாள் சம்பளத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் துறைமுகத் தொழிலாளி ஆவார். அவர் கூறியதாவது: "லலிதா அங்கு நாளுக்கு 600 ரூபாய் சம்பளத்துக்கு 4 வருடங்கள் பணியாற்றினார். இழப்பீடு பற்றி இன்னும் பேச்சு இல்லை. உரிமையாளரும் இறந்துவிட்டார். புதிய உரிமையாளருடன்தான் நட்ட ஈடு பற்றிய உடன்பாட்டுக்கு வர வேண்டுமாம். மார்ச் 7 அன்று, இதைப் பற்றி பேசுவதற்கு நீதிமன்றத்திற்கு வர சொல்லி இருக்கின்றார்கள். "

சாந்த குமாரின் சகோதரியான தீபா, ஆடம் எக்ஸ்போர்ட் நிறுவனம் இறுதிக் கிரியைகளுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறினார். "உரிமையாளர் இறந்து போனதை காரணமாகக் காட்டிக்கொண்டு நிறுவனம் தலைதப்புவதற்கு முயற்சிப்பதாகவே கருத வேண்டியுள்ளது," என்று அவர் கூறினார்.

தொழிலாளர்களுக்கு மரணத்தை தரும் இத்தகைய ஆபத்தான பெருந்தொகை பாழடைந்த கட்டிடங்கள் கொழும்பில் போலவே ஏனைய நகரங்களிலும் உள்ளன. தங்கள் இலாபங்களை அதிகரித்துக்கொள்வதற்காக பல வர்த்தகர்கள் இத்தகைய பாழடைந்த கட்டிடங்களில் தங்கள் வர்த்தகத்தை நடத்தி வருகின்றனர்.

அவற்றின் நிலைமைகளை ஆராய்ந்து மாற்றீட்டை வழக்கும் நடவடிக்கையை அரசாங்கம் அல்லது சம்பந்தப்பட்ட உள்ளூர் ஆட்சி மன்றங்கள் செய்வதில்லை. இந்த தொழிலாளர்களதும் அயலில் வாழும் ஆயிரக்கணக்கான வறியவர்களினதும் உயிர் சம்பந்தமான முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் இழிவான அலட்சியம் இதில் அம்பலத்துக்கு வந்துள்ளது. சர்வதேச மூலதனத்தின் தேவைகளுக்காக, அந்தந்த அரசாங்கங்களால் மேற்கொள்ளப்படும் நகர மேம்பாட்டு திட்டங்களுக்கு, வறிய மக்கள் எதிர்கொள்ளும் இத்தகைய சிக்கல்கள் எவையும் அவசியமற்றவை ஆகும்.

புதிய கட்டடங்களை உருவாக்குவதிலும் இத்தகைய அபாயம் உள்ளது. தமது இலாபங்களை அதிகரித்துக்கொள்வதற்காக, பல கட்டுமான நிறுவனங்களால் தரமற்ற மூலப் பொருட்கள் மற்றும் தவறான நுட்பங்களைப் பயன்படுத்துவது உட்பட, கட்டுமானத்திற்குப் பிறகு முறையான பராமரிப்பு இல்லாமை காரணமாக கட்டி முடிக்கப்பட்ட பின்னர் பல கட்டிடங்கள் ஆபத்தானவையாக உள்ளன.

மறுபுறம், இலாப இலக்கு காரணமாகவே, கட்டிடங்களை அமைக்கும் போதும் உடைத்து அகற்றும் போதும், இந்த நிறுவனங்கள் தமக்கு கீழ் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் அயலவர்களின் பாதுகாப்புக்கான செலவுகளை வெட்டிக் குறைத்துவிடுகின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் முறையான பாதுகாப்பு மற்றும் குறிப்பிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தாமல் இருப்பதன் பின்னால், இந்த இலாப நோக்கமே உள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் திட்டங்கள் மேலாண்மை இயக்குநர் குமுதினி ஜயவர்த்தன, டெய்லி மிரர் பத்திரிகைக்கு, கிராண்ட்பாஸ் விபத்தின் போது ஆடம் ஏற்றுமதி நிறுவனத்தின் கூரையின் மீது உடைந்து விழுந்த சுவர் துண்டுக்கு உரிய அயலில் இருந்த கட்டிடம், உடைத்து அகற்றும் போது பின்பற்ற வேண்டிய "குறித்த விதிமுறைகள்" பின்பற்றப்டவில்லை எனத் தெரிவித்துள்ளார். அது மட்டுமன்றி அதற்கு அவசியமான நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் இயந்திரங்கள் பயன்படுத்தவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

சாதாரண மக்களுடைய வாழ்வை முழுமையாக அலட்சியம் செய்து மேற்கொள்ளப்படும் இத்தகைய குற்றவியல் நடவடிக்கைகள் காரணமாக, இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் இடம்பெறும் அழிவுகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. கடந்த மே மாதம் 18 அன்று வெள்ளவத்தையில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த ஐந்து மாடி கட்டிடம் உடைந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 23 பேர் கடும் காயமடைந்தனர். சரியான தரநிலைகளின்படி கட்டுமான வேலைகள் முன்னெடுக்கப்படாமையால் விபத்து நடந்ததாக பிந்திய ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு, 2014ல் வெளியிட்ட அறிக்கை, இலங்கையில் ஆண்டுக்கு சராசரி தொழில்துறை விபத்துக்களின் எண்ணிக்கை, 4,000 ஆக இருப்பதுடன் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 80 ஆகும். அவர்களில் பெரும்பாலானோர் கட்டுமானத் துறையில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஆவர். சரியான பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக்குறை ஆபத்துக்களுக்கு முக்கிய காரணமாகும்.

கொழும்பு தேசிய மருத்துவமனையின் 2016ம் ஆண்டு புள்ளிவிபரங்களின் படி, வேலைத் தளங்களில் விபத்துக்கள் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுபவர்களின் சாதாரண எண்ணிக்கை 30 ஆகும். அந்த ஆண்டில் வேலைத் தள விபத்துக்களால் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அத்தகைய நோயாளிகளின் எண்ணிக்கை 12,000 ஆகும்.

இந்தியாவில் புது தில்லியில் ஜனவரி 21 அன்று பவான தொழில்துறை மண்டலத்தில், பிளாஸ்டிக் தொழிற்சாலை தீ பற்றி விழுந்ததில் 17 பேர் கொல்லப்பட்டதுடன், 2016 மே மாதம் பங்களாதேஷின் ரணா பிளாசா தொழிற்சாலை தீபற்றி உடைந்து விழுந்ததில் ஆண்களும் பெண்களுமாக 1.138 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். 2015 நவம்பரில் பாக்கிஸ்தானில் லாகூரில் ராஜபுத் பொலியஸ்டர் தொழிற்சாலை உடைந்து விழுந்ததில் 29 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். தொழிலாளர்களின் உயிர் மற்றும் பாதுகாப்பை அலட்சியம் செய்து இடம்பெறும் இத்தகைய அழிவுகள், நெருக்கடி மிக்க முதலாளித்துவ அமைப்பு முறைக்குள் உழைப்புச் சுரண்டல் தீவிரமாக்கப்பட்டு பெரிய வணிகர்களின் இலாப நலன்களை பாதுகாக்க முதலாளித்துவ அரசாங்கங்கள் அமுல்படுத்தும் கொள்கைகளின் ஒரு நேரடி விளைவாகும்.

பெரும் தொழிற்துறை பாதுகாப்பு, சிறந்த வேலை நிலைமைகள், தகுந்த வாழ்க்கைக்கு போதுமான ஊதியத்துடன் கூடிய தொழில் ஆகியவற்றை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமெனில், தொழிற்சாலைகள், பெருந்தோட்டங்கள் மற்றும் வங்கிகளையும் தொழிலாளர்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து, இலாபத்துக்கான உற்பத்திமுறையை தூக்கி வீசி, மனித தேவைகளை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி பொருளாதாரத்தை ஸ்தாபிப்பதற்காக சர்வதேச சோசலிசத்துக்காக போராடவேண்டியதன் அவசரத் தேவையையே கிராண்ட்பாஸ் பேரழிவு மீண்டும் உறுதி செய்துள்ளது.